அத்தியாயம் 8
மறுநாள் நித்யா அன்னையுடன் கேரளா கிளம்புவதாக இருந்தது. இன்று காலையில் தன் நெருங்கிய தோழியும், அமைச்சரின் மகளுமான கீதாவைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்றிருந்தாள் நித்யா. கீதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்க, தோழியர் அனைவரையும் சந்திக்கth தன் வீட்டுக்கே வரச் சொல்லியிருந்தாள்.
ரோகிணி மகளிரணித் தலைவியாய் இருந்த கட்சிதான் இப்போது ஆட்சியில் இருந்தது. நித்யாவை சினிமாவில் நடிக்கச் சொன்ன அதே அரசியல் தலைவர் சக்ரபாணி தான் இப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராய் இருந்தார். அடுத்த சிஎம் போஸ்ட்டுக்கு கூட அவரைதான் தேர்ந்தெடுப்பதாய் கட்சியில் ஒரு மனதாய் முடிவாகியிருக்க எலக்ஷன் முடிந்து ரிசல்ட்டுக்காய் காத்திருந்தனர்.
நித்யா வீட்டுக்குள் நுழையும்போது மினிஸ்டர் சக்ரபாணி ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவளைக் கண்டதும் மலர்ந்தார்.
“அடடே நித்யா, வாடா… எப்படியிருக்க?”
“நல்லாருக்கேன் அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே மரியாதையுடன் அவரது காலைத் தொட்டு வணங்கிய நித்யா புன்னகையுடன் கூறினாள்.
“கீதாவைப் பார்க்க முன்னப் போல நீ வர்றதே இல்லியே. ரொம்ப பிஸியாகிட்ட போலருக்கு”
“ஆமா அங்கிள், எல்லாம் நீங்க கை காட்டின வழிதான். கெட்டியாப் பிடிச்சுட்டே மேல வந்திட்டு இருக்கேன்.” எனச் சொல்ல அவர் சிரிக்கும்போதே அவரது மனைவி விஜயா அங்கே வந்தார்.
“நித்யா, வாம்மா… கீதா சொன்னா, இன்னிக்கு பிரண்ட்ஸ் எல்லாம் வராங்கன்னு, எவ்ளோ நாளாச்சு உன்னைப் பார்த்து”
அன்புடன் அவள் கையைப் பற்றி விசாரித்தார் விஜயா.
”ஆமாம் மா, கொஞ்சம் பிஸியாகிட்டேன். நீங்க எப்படி இருக்கீங்க? பிரஷர் அதிகமாகி டாக்டரைப் பார்த்தீங்கன்னு கீத்ஸ் சொன்னா”
“எல்லாம் வயசானா வர்ற பிரச்சனைதான். இப்ப எல்லாருக்கும், சுகர் இருக்கு, பிரஷர் இருக்குன்னு சொல்லுறது கூட ஒரு ஃபாஷன் போலாகிருச்சு. வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா?”
“எல்லாரும் சுகம் மா… அப்புறம், கீதா நிச்சயத்துக்கான வேலை எல்லாம் தொடங்கியாச்சா?”
“ஆமாடா, அது பாட்டுக்கு நடக்குது.”
“என்னமா நித்யா, உன் பிரண்டுக்கு கல்யாணம் முடிவாகிருச்சு. அடுத்து உனக்கு எப்ப?”
“அதெல்லாம் இன்னும் யோசிக்கல அங்கிள்.”
“காலாகாலத்துல எல்லாம் யோசிக்கத் தொடங்கிடணும் மா. எந்த மாதிரி மாப்பிள்ள வேணும்னு சொல்லு. உன் அம்மாட்டப் பேசிட்டுப் பார்க்கத் தொடங்கிருவோம்.”
சக்ரபாணி எந்த அலட்டலும் இல்லாமல் அவளிடம் சாதாரணமாய் பேசினார். அவருக்கு எப்போதுமே நித்யாவை ரொம்பப் பிடிக்கும். தன் மகளின் சின்ன வயது முதல் காணத் தொடங்கியதாலோ என்னவோ, அவளையும் தன் மகளைப் போலவே நேசித்தார்.
“சொல்றேன் அங்கிள். பார்த்துடலாம்” எனக் கண்ணைச் சுருக்கிச் சிரித்தவளைக் கண்டவர், “இப்படி சிரிச்சு சிரிச்சே பெரிய நடிகை ஆகிட்ட. கேள்விப்பட்டேன், நீதான் இப்ப ஃபீல்டுல நம்பர் ஒன் நடிகையாமே. நீ சந்தோஷமா இருக்க தான?” அவள் முகத்தில் என்ன தோன்றியதோ” அவர் அவளை ஆழ்ந்து பார்த்தபடி கேட்க, அதற்குள் கீதா அங்கே வந்துவிட்டாள்.
“அப்பா, அவ என்னைப் பார்க்க வந்தாளா? உங்களைப் பார்க்க வந்தாளா? இப்படி இங்கயே பிடிச்சு வச்சுப் பேசிட்டு இருக்கீங்க. நீ வா நித்தி” எனத் தோழியின் கையைப் பிடித்து அவளது அறைக்கு அழைத்துச் செல்லச் சிரித்தார் சக்ரபாணி.
“விஜயா, கீதா பிரண்ட்ஸ் எல்லாரையும் மதியத்துக்கு நல்லா சாப்பிட வச்சு கவனிச்சு அனுப்பு… நான் கட்சி ஆபீஸ்க்குப் போயிட்டு வரேன்”
“சரிங்க, அதெல்லாம் நீங்க சொல்லணுமா? நான் பார்த்துக்கறேன்” என்றார் விஜயா புன்னகையுடன்.
அடுத்து யமுனா, பத்மா என வேறு இரண்டு நண்பிகளும் வந்துவிட நால்வருமாய் பழைய, புதிய கதைகள் பேசி அரட்டையில் மூழ்கினர்.
ஒருவரை ஒருவர் கலாய்த்தும், கிண்டல் கேலி பேசியும், சீண்டி விளையாடியபடி இருக்க நேரம் நகர்ந்ததே தெரியவில்லை.
“ஏண்டி நித்தி, நீ ஸ்கூல்ல படிக்கிறப்ப காட்டரிங் படிச்சு, பெருசா ஒரு ஹோட்டல் தொடங்கி, விதவிதமா சமைச்சு நிறையப் பேருக்கு நிறைவாச் சாப்பாடு போடுவேன்னு சொல்லிட்டு இருப்ப. இப்ப விதவிதமா மேக்கப் போட்டு ஸ்க்ரீன்ல மின்னிட்டு இருக்க?” யமுனா நித்யாவிடம் கேட்டாள்.
“ப்ச்… காட்டரிங் படிச்சு ஹோட்டல் வைக்கணும்கிறது என்னோட ஆசை. ஆனா விதி எனக்கு இப்படி தான எழுதி வச்சிருக்கு. அதோட போக்குல போக வேண்டியதாய் போயிருச்சு”
“அதுக்கென்னடி, இப்பவும் நீ நினைச்சா ஒரு ஹோட்டல் தொடங்கலாமே” என்றாள் பத்மா.
“ஹோட்டல் தொடங்கலாம். ஆனா நான் ஆசைப்பட்ட போல சமைக்க முடியாதே. இப்ப எனக்குன்னு ஒரு அடையாளத்தைக் குத்திட்டாங்களே” என முகத்தைச் சுளித்தாள் நித்யா.
“ப்ச், அதெல்லாம் விடுங்கடி. எந்தத் தொழிலா இருந்தா என்ன? நம்ம திறமையைக் காட்ட கடவுள் கொடுத்த சந்தர்பமா நினைச்சு அதுல முன்னேறிக் காட்டுறது தான் பெஸ்ட். இப்ப நித்தி தான சவுத் இண்டியால நம்பர் ஒன் ஹீரோயின்” என்றாள் கீதா.
“ப்ச், இந்தப் பேச்சை விடுங்கடி, போரடிக்குது. நாம கீதாவோட கல்யாண விஷயத்துக்கு வருவோம்” என நித்யா சொல்ல,
யமுனா, “ம்ம்… கல்யாணப் பொண்ணே, மேரேஜ் முடிஞ்சதும் புருஷனோட அமெரிக்கா பறந்திடுவ. அப்புறம் எங்களை எல்லாம் நினைவிருக்குமோ என்னவோ?” என கீதாவைக் கலாய்க்க, அவள் முகத்தில் வெட்கச் சிரிப்பு.
“ஹூக்கும். எனக்கு மேரேஜ் முடிஞ்சதும் மெமரி லாஸ் ஆகிடுமா என்ன? உங்களைலாம் மறக்கறதுக்கு. போங்கடி கிண்டல் பண்ணாம” எனச் சிணுங்கினாள்.
“அட புள்ளைக்கு வெட்கத்தைப் பாரு” என பத்மா கலாய்க்க,
“ஏண்டி, நீ உன் மாமா பையனைக் கட்டிக்கப் போறேன்னு சொன்னியே, என்னாச்சு? வீட்டுல ஒத்துக்கிட்டாங்களா?” எனக் கேள்வியை யமுனாவிடம் திருப்பினாள் பத்மா.
“ப்ச்… இல்லடி என் மாமா பையன் ஆல்ரெடி யாரையோ லவ் பண்ணறார் போல, அதுனால வீட்டுல எனக்கு சின்சியரா வெளில மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க” என்றாள் யமுனா.
“நித்தி, உன் விஷயம் என்ன? இப்போ ஃபீல்டுல பீக்குல இருக்கும்போது கண்டிப்பா உனக்கு மேரேஜ்க்குப் பார்க்க மாட்டாங்க. அதுக்காக ரொம்ப டைம் எடுத்துக்காத. எதுவுமே காலா காலத்துல நடந்தா தான் அதுக்கு மவுசு.” எனக் கீதா சொல்ல நித்யாவுக்கு அவர்களிடம் ராமைப் பற்றிச் சொல்லலாமா, வேண்டாமா என மனதில் ஒரு தயக்கமாகவே இருக்க, ‘சரி இப்போதைக்கு எதும் சொல்ல வேண்டாம்’ எனத் தள்ளிப் போட்டாள்.
கலகலவெனத் தொடர்ந்த பேச்சு மதிய உணவுக்கு விஜயா வந்து அழைக்கும் வரையில் நீண்டது. மதிய உணவை முடித்து விட்டு, மறுநாள் கேரளா செல்ல இருப்பதால் கொஞ்சம் பர்ச்சேஸிங் இருப்பதாய் சொல்லிவிட்டு நித்யா கிளம்பினாள்.
அவளது தங்கை சத்யாவின் யூனிபார்ம் உடைகள் சிலதைத் தைக்கக் கொடுத்திருக்க, அதைத் திரும்ப வீட்டுக்கு வரும்போது அக்காவிடம் வாங்கச் சொல்லி இருந்தாள் சத்யா. கடையும் வீட்டுக்கு வரும் வழியில் இருக்கவே அதை வாங்கச் சென்றவளின் காதில் மெல்லக் கிசுகிசுத்தார் அந்த டெய்லர் பெண்மணி.
அவருக்கு அரசல்புரசலாய் நித்யா, ராமின் பழக்கம் முன்னமே தெரிந்திருந்தது. அவரது வீடும் ராம் இருக்கும் வீட்டு ஏரியாவில் இருக்கவே மெல்ல நித்யாவின் காதில் விஷயத்தைப் போட்டவர், ராம் இப்போது அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாகச் சொன்னார்.
அதைக் கேட்ட நித்யாவின் இதயம் சில நொடிகள் நின்று துடித்தது.
“என்னக்கா சொல்லறிங்க?”
“ஆமா மேடம், ராம் சார் பாவம். நல்லா அடிபட்டதால இப்ப ஹாஸ்பிட்டலில் இருக்கார்.” என்றார் வருத்தத்துடன்.
“யாரு இப்படிப் பண்ணாங்கன்னு தெரியுமா?”
“அ..அது வந்து… யாருன்னு சரியாத் தெரியல மேடம். ஆனா உங்க அரசியல்வாதி அண்ணனுங்க அனுப்பின ரவுடிங்க தான்னு அங்க இருக்கற சிலரு பேசிக்கிட்டாங்க.” என்றதும் நித்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
“எந்த ஹாஸ்பிடல்னு விவரம் எதுவும் தெரியுமா?” எனக் கேட்க, அந்த மருத்துவமனையின் பெயரைச் சொன்னார்.
“சரிக்கா, நான் பார்த்துக்கறேன்” என்றவள் அவர் கொடுத்த தைத்த துணிகள் அடங்கிய கவரைக் காரில் வைத்துவிட்டு அமர்ந்தாள்.
டிரைவரிடம், “அண்ணே *** ஹாஸ்பிடல் போங்க” எனச் சொல்ல, முன்னமே இந்த விஷயத்தை அறிந்திருந்த டிரைவர் தயங்கினார்.
“மேடம், ஹாஸ்பிடலுக்கு எதுக்கு?”
“போங்கன்னு சொன்னா போங்கண்ணா, ப்ளீஸ்” என்றவளின் கண்கள் லேசாய் கலங்கியிருக்க அவர் தயங்கினார்.
“மேடம், எதுக்கும் அம்மாட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு…” எனத் தயங்கியபடி கூற அவள் முறைத்தாள்.
“அப்ப உங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கு?” எனக் கேட்க பதில் சொல்லாமல் அவர் தலை குனிந்து கொண்டார்.
“ஏண்ணே, தெரிஞ்சும் இவ்ளோ நேரம் எங்கிட்ட எதுவுமே சொல்லாம இருக்கீங்க?” எனத் தவிப்புடன் கேட்டவளைக் கண்டு அவரால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது.
‘உங்க அம்மாவை மீறி இதெல்லாம் நான் எப்படிச் சொல்ல முடியும்’ என மனதில் நினைத்துக் கொண்டவர்,
“மேடம், நீங்க அங்க போனா விஷயம் வெளிய தெரிஞ்சா பத்திரிகைல எல்லாம் வந்திரும்.”
“வரட்டும், எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியட்டும். எத்தனை நாள் தான் பூட்டிப் பூட்டி என்னை வீட்டுக்குள்ளயே வச்சுப்பாங்க, எனக்கும் நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழணும்னு ஆசை இருக்காதா? என்ன வந்தாலும் பார்த்துக்கலாம். நீங்க முதல்ல ஹாஸ்பிடலுக்குப் போங்கண்ணா” என்றாள் உறுதியாக.
அதற்கு மேல் மறுக்க முடியாத டிரைவர், அவள் சொன்ன ஹாஸ்பிடலுக்கு காரை விட்டார்.
அங்கே ஐசியூவில் கிழிந்த நாராகத் தலையிலும், கையிலும் பெரிய கட்டுடன் கிடந்தவனைக் கண்டு அவள் மனம் கதறியது.
காலையிலிருந்து தோழியருடன் கழித்த சந்தோஷம் எல்லாம் காணாமல் போக, பெரும் வேதனை வந்து அவளை அழுத்தியது.
‘என்னால தான? எனக்காகத் தான இந்த மனுஷன் இப்படி கிடக்கறார்? இவரை அடிக்கும் உரிமையை யாரு என் வீட்டு ஆளுங்களுக்குக் கொடுத்தது? எதுவா இருந்தாலும் எங்கிட்ட தான கேக்கணும்? இப்படியா ஒருத்தனை அடிச்சுப் படுக்கைல போடுவாங்க?’ அவள் மனம் கதற கண்களில் கிளிசரின் இன்றிக் கண்ணீர் வழிந்தது. மயக்கத்தில் கிடந்த ராமின் கையைப் பிடித்தபடி அவனைப் பார்த்து நின்றவள் கண்ணீருடன் வெளியே வர, அங்கே சோர்ந்து போய் அமர்ந்திருந்தார் ராமின் அன்னை.
அவருக்கும் நித்யாவின் மீதுள்ள ராமின் விருப்பம் தெரிந்து தான் இருந்தது. ஆனாலும், தங்கள் பொருளாதார நிலைக்கு நித்யாவை ஆசைப்படுவது சரியல்ல என்று மகனிடம் ஒரு முறை சொல்லிப் பார்த்தவர், “மேடம்க்கு பணம், தகுதி எல்லாம் பெரிய விஷயம் இல்லை மா. அவங்களுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும்” என்ற ராமின் வார்த்தையில் பிறகு எதையும் கண்டு கொள்ளவில்லை.
இப்போது நித்யாவின் வருகையும், அவளது கண்ணீரும் மகனின் வார்த்தைகள் நிஜம் தான் என்பதை உணர்த்த, வெளியே வந்த நித்யாவைக் கண்டவர் கண்ணீருடன் எழுந்து நின்றார்.
“அம்மாடி, எம்புள்ள எப்படிக் கிடக்கறான் பாரு தாயி” என்றவர் கேவலுடன் முந்தானையை வாயில் வைத்து அழுகையை அடக்க முயல அவரது கரத்தை ஆறுதலாய் பற்றிக் கொண்டாள் நித்யா.
“ராம்க்கு ஒண்ணும் ஆகாதுமா, பயப்படாம தைரியமா இருங்க. அவர் கண்ணு முழிச்சதும் நான் வந்திட்டுப் போனேன். என்ன நடந்தாலும் அவர்கூட நான் இருப்பேன்னு சொன்னன்னு சொல்லுங்க” என்றவள் டிரைவரிடம் கண்ணைக் காட்டிவிட்டுக் காருக்குச் சென்றாள். அவர் ஆசுபத்திரியில் அட்வான்ஸாய் ஒரு தொகையைக் கட்டி ராமுக்கான சிகிச்சை செலவை அதிலேயே பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.
வீட்டுக்குள் கோபமாய் நுழைந்தாள் நித்யா.
“அக்கா, என் யூனிபார்ம் டிரஸ் வாங்கிட்டியா?” எனக் கேட்டபடி வந்த தங்கையைப் பொருட்படுத்தாமல், கையிலிருந்த பர்ஸையும், தைத்த துணி உள்ள பையையும் சோபாவில் எறிந்தவள், “அம்மா…” எனக் கத்த அவர் அடுக்களையில் இருந்து வெளியே வந்தார்.
“என்னடி, எதுக்குக் கத்தற?”
“என்னமா பண்ணி வச்சிருக்கிங்க? எல்லாம் உங்க வேலை தானா?”
“நீ எதைக் கேக்கற?” என ஆழமாய் மகளைப் பார்த்தார் ரோகிணி.
“ராம் என்ன தப்புப் பண்ணார்? எதுவா இருந்தாலும் எங்கிட்டக் கேக்காம எதுக்கு அவரை இப்படி அடிச்சுப் போட்டிருக்கீங்க?”
“ஓ! அதுவா? அன்னைக்கே உங்கிட்டச் சொன்னேன். அவன் இனி உங்கிட்ட காதல், கீதல்னு பேசினா மோதல்ல தான் முடியும்னு. நீங்க கண்டுக்கல, அதான் உன் அண்ணங்ககிட்டச் சொல்லி, லைட்டா தட்டி வைக்கச் சொன்னேன். அவங்க ரொம்பத் தட்டிட்டாங்களோ? இங்க வந்து எகிறிட்டு இருக்க?” என நக்கலாய் கேட்டபடி சோபாவில் அமர்ந்தார் ரோகிணி. அதற்குள் மூத்த அண்ணன்கள் இருவரும் சத்தம் கேட்டு அங்கே வந்தனர்.
“மா…” எனப் பல்லைக் கடித்தவள், “எதுக்குமா இப்படி பண்றீங்க?”
“எதுக்கு? எதுக்குன்னா? எதுக்குன்னு உனக்கு இன்னும் புரியலியா? இல்ல, எங்கிட்டயே உன் நடிப்புத் திறமையைக் காட்டறியா?”
”ச்சீ, என்னமா பேசறீங்க? ராம் பாவம் மா. அவர் ஒரு அப்பாவி” என்றவளின் முகத்திலேயே ஒன்று விழுந்தது.
அவள் அதிர்ந்து போய் கன்னத்தைப் பிடித்துக் கொள்ள, அடுத்த அடி விழாமல் மூத்த அண்ணன்தான் ஓடிவந்து அன்னையின் கையைப் பிடித்து தடுத்து வைத்தான்.
“அவன் அப்பாவியா? அடப்பாவியான்னு உங்கிட்ட நான் சர்டிபிகேட் கேக்கல, இனி இப்படி ஒரு பேச்சு வரக்கூடாதுன்னு எச்சரிச்சும், நீ நேத்து அவனைப் பார்த்துக் கையைப் பிடிச்சுப் பேசிட்டு இருக்கன்னா, நான் சொன்னதைக் காரியமா எடுத்துக்கலன்னு தான அர்த்தம்?” எனச் சீறிய அன்னையைக் கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
“அம்மா விடுங்க. அவ சின்னப் பொண்ணு. ஏதோ தெரியாமப் பண்ணிட்டா. இனி இப்படிப் பண்ண மாட்டா, நீங்க டென்ஷன் ஆகாம கொஞ்சம் அமைதியா இருங்க…” என்றவன்,
தங்கையை நோக்கித் திரும்பி, “பண்ண மாட்டில்ல நித்திமா. அந்தச் சில்லறப் பயலுக்கு இனி நீ சப்போர்ட் பண்ணிப் பேச மாட்ட தான…” என்றவன்,
“பேச மாட்டா மா… இனி அவனுக்காகப் பேசவோ, யோசிக்கவோ செய்தா அப்புறம் அவன் ஹாஸ்பிடலுக்குப் போக மாட்டான். நேரா மார்ச்சுவரில தான் இருப்பான்னு அவளுக்குத் தெரியும்” என்றவன்,
“என்ன தெரியும் தான?” என அழுத்தமாய் நித்யாவை நோக்கிக் கேட்க விக்கித்துப் போய் தன் அன்னை மற்றும் அண்ணனின் பேச்சில் அதிர்ந்து நின்றிருந்தாள் நித்யா.
அண்ணன்கள் இருவரும் வெளியே கிளம்பிவிட, ரோகிணி எழுந்து அடுக்களைக்குச் செல்ல சத்யா தான் அக்காவின் கலங்கிய முகத்தைப் பாவமாய் பார்த்து நின்றாள்.
“அக்கா… வாக்கா, உன் ரூமுக்குப் போகலாம்” என அவளது கையைப் பற்றி அழைத்துச் சென்றவள் தண்ணி பாட்டிலை எடுத்து நித்யாவிடம் கொடுக்க, அதை வாங்கி மடமடவென்று வாயில் கவிழ்த்துக் கொண்டாள் நித்யா.
தன்னை ஒரு அடிமை போல் நடத்தும் வீட்டினரை நினைத்துக் கோபமாய், அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாத தன் நிலையை நினைத்து ஆதங்கமாய் வந்தது.
கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைத் தேற்றும் வழியறியாது சிறிது நேரம் பார்த்திருந்த சத்யா, அக்காவின் அருகில் வந்தாள்.
“அக்கா, நீ இவங்க சொன்னதை எல்லாம் நினைச்சு வருத்தப்படாத. அவங்க எல்லாரும் சுயநலமா யோசிக்கறாங்களே ஒழிய, யாரும் உன்னைப் பத்தி நினைக்கவே இல்லை. அதனால…” என நிறுத்திய தங்கையைக் கேள்வியுடன் பார்த்தாள் நித்யா.
“அதனால நீயும் அவங்களைப் பத்தி யோசிக்காம, உனக்காக யோசிச்சு சொந்தமா ஒரு முடிவெடு…” என்றவள் நித்யாவின் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்து வெளியே செல்ல நித்யா செல்லும் அவளையே பார்த்திருந்தாள்.
அடுத்த நாள் காலையிலேயே நித்யாவை எழுப்பி விட்டுக் கேரளா செல்லத் தயாராகச் சொன்னார் ரோகிணி. நித்யாவும் இரவில் யோசித்து தான் எடுத்த முடிவின்படி அமைதியாய் இருந்தாள்.
‘ராமுக்குத் தன்னை நிரூபிக்க இப்போது சிறிது டைம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நாளை ஒரு குற்றவுணர்ச்சியாய், அவருக்கு ஒரு தாழ்வுணர்ச்சியைக் கொடுப்பதாய் மாறிவிடக் கூடும். எனவே, முன்னரே திட்டமிட்டபடி மலையாளப் படங்களை முடித்துக் கொடுத்து விட்டுச் சென்னை வரலாம். அதற்குள் ராமும் இங்கே கொஞ்சம் ரெடியாகி விடுவார்’ எனத் தீர்மானித்தவள் அன்னையிடம் எந்த மறுப்பும் காட்டாமல் கிளம்பினாள்.
கார் ஏர்போர்ட்டுக்குக் கிளம்ப அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நித்யா.
மகள் எதுவும் எதிர்ப்புக் காட்டுவாளோ என நினைத்த ரோகிணிக்குக் கூட நித்யாவின் மௌனம் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
‘சரி, எல்லாரும் சேர்ந்து மிரட்டின மிரட்டலில் புள்ள ரொம்ப பயந்துட்டா போலருக்கு, இப்படியே ஒழுங்கா இருந்தால் சரிதான்’ என விட்டுவிட்டார்.
வழியில் பெட்டிக்கடை ஒன்றின் முன்னில் தொங்கிய நாளிதழில் ராம், நித்யா இருவரின் புகைப்படத்துடன், இருவரையும் இணைத்துக் கிசுகிசு வெளியாகி இருக்க, அதைக் கண்டுவிட்ட நித்யாவுக்கு இதயம் படபடவெனத் துடிக்க, ‘அன்னை அதைக் கண்டு விடக் கூடாதே’ என நினைத்து முடிப்பதற்குள் ரோகிணியின் கண்ணில் அந்தச் செய்தி விழுந்திருந்தது.
“டிரைவர், வண்டியை நிறுத்து” என்றவர், கண்ணால் அந்தக் கடையைச் சுட்டிக் காட்டி, “அந்தப் பேப்பரை வாங்கிட்டு வா” என டிரைவர் இறங்கிச் சென்று நாளிதழுடன் வந்தான்.
அன்னை தன்னையே தீக்கண்ணால் முறைப்பதை உணர்ந்த நித்யாவின் தலை நிமிரவே இல்லை.
அந்த நாளிதழில் கண்ணைப் பதித்த ரோகிணி அதை வாசித்துவிட்டு, “ச்சே” எனச் சொன்னபடி சுருட்டிக் காலடியில் எறிந்தார்.
மகளை மீண்டும் ஒரு முறை முறைத்துவிட்டு, “வண்டிய எடு” எனக் கோபமாய் சொல்ல, டிரைவர் வண்டியைக் கிளப்பினார்.
விமானத்தில் இருவரும் திருவனந்தபுரம் வந்து சேர ஏர்போர்ட்டில் அவர்களை வரவேற்கக் காருடன் ஒருவர் காத்திருந்தார். அங்கே தங்குவதற்கும், போக்குவரத்துக்கும் எல்லாம் மலையாளப் படத்தின் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
பெரிய அபார்ட்மெண்டில் பாதுகாப்பான பிளாட்டை ஏற்பாடு செய்திருக்க அங்கே வண்டி நின்றது. கேரளத்தின் பசுமையான இயற்கை அழகையும், அங்கே உள்ள பெண்களின் தேங்காய் எண்ணெயில் பளபளத்த கருகருவென்ற நீண்ட முடியையும் எப்போதும் போல ஆர்வத்துடன் பார்த்தாள் நித்யா. அவளுக்குச் சுருண்ட முடி. என்னதான் சினிமாவுக்குப் பல ஹேர் ஸ்டைல் உபயோகித்தாலும் இந்த ஒரிஜினல் முடியைக் காணுகையில் மனம் ஏங்கியது. அது கேரள நாட்டின் சீதோஷ்ணத்தின் சிறப்பும் கூட.
மருத்துவமனையில் கண் விழித்த ராமுக்கு அவனைக் காண நித்யா வந்ததையும், கண்ணீர் விட்டுக் கலங்கியதையும் அறிந்த போது மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தான். அவன் உடம்பில் பட்ட காயங்களுக்கு அவளது வருகை மனதில் மருந்திட்டுச் சென்றது.
இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினாலும் ஒருவாரம், வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கும்படி கூறியிருந்தார் டாக்டர். அந்த நேரம் முழுதும், புதிதாய் இயக்கப் போகும் திரைப்படத்தின் நினைவும், நித்யாவின் நினைவுமே அவனை வேகமாய் அந்த ஓய்விலிருந்து மீட்டெடுத்து வந்தது.
படத்தின் பூஜைக்கு ஏற்பாடு செய்தவன் சீக்கிரமே தனது முதல் படத்துக்குப் பூஜையிட்டு பெண்களை மையமாகக் கொண்ட அந்த கிராமத்துக் கதையை இயக்கவும் ஆரம்பித்தான்.
அங்கே நித்யா மலையாளப் படத்தில் பிஸியாய் இருந்தாள்.
அவள் நடித்த கீதாஞ்சலி நல்ல கலக்ஷனைக் கொடுத்துச் சக்கை போடு போட, அடுத்தடுத்து சின்ன பட்ஜட் படங்கள் நிறைய புக்காகத் தொடங்க அவளுக்கு மனதில் சலிப்பாக இருந்தது.
‘கடவுளே! இந்தப் படம் பத்து நாள்ல தியேட்டர் விட்டே ஓடிடணும். மறுபடி யாரும் என்னைப் படத்துக்கு புக் பண்ண வரக் கூடாது’ என மனதில் கடவுளிடம் வேண்டுதல் வைத்தும் பயனில்லை.
அவள் நடித்த படங்கள் எல்லாமே 100 நாள் குறைந்தது 50 நாள் என்று நன்றாக ஓட, ஆறு மாதத்தில் திரும்ப நினைத்தவள் ஒரு வருடம் அங்கேயே இருந்து 10 படங்களுக்கு மேல் நடித்து முடித்த பிறகே சென்னை திரும்ப முடிந்தது.
அதுவும் நேஷனல் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காய். அவளுடைய பெயரும் விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றிருக்க, ராம்சரணின் முதல் படமும் சிறந்த தமிழ்ப்படம் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
ஒரு காதல் இடைவேளை…
-லதா பைஜூ