அத்தியாயம் 7
“இனி அந்த ராம் காதல், கீதல்னு உங்கிட்ட ஏதாவது பேசினான்னு என் காதுக்கு வந்துச்சு, அவனை ஆளே அட்ரஸ் இல்லாமல் பண்ணிடுவேன், பார்த்துக்க” என அன்னை மிரட்டலாகச் சொன்ன இறுதி வார்த்தைகள் நித்யாவின் மனதை அலட்டத் தன்னால் பாவம், ராமுக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாதென்று சிறிது நாட்கள் ஒதுங்கி இருக்க நினைத்தாள்.
சில நாட்கள் அமைதியாகவே செல்ல வேறு படங்களுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டாள் நித்யா. ராமிடம் பேச வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று மனம் தவித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மௌனமாகவே இருந்தாள்.
அடுத்த ஒரு வாரத்துக்கு ஊட்டியில் நடக்கும் மணிபாரதியின் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளச் செல்ல வேண்டியிருந்தது. ஊட்டிக் குளிர் அன்னைக்குச் சேராது என்பதால் அவர் தன்னுடன் வர மாட்டார். எனவே, எப்படியாவது ராமிடம் நடந்த விஷயத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட வேண்டுமென்று நித்யா நினைத்தாள்.
ஆனால், அவள் எண்ணத்துக்கு மாறாக அவள் அன்னை ரோகிணி தனக்குப் பதிலாய் தனது மருமகள்களை, மகளுக்கு பாடிகார்டாய் அனுப்பி வைத்தார்.
“அம்மா, அண்ணிங்களை எதுக்கு ஊட்டிக்கெல்லாம் அனுப்பறீங்க? அவங்களுக்குச் சிரமம் தானே…”
“அதெல்லாம் அவங்களுக்கு ஒரு சிரமமும் இல்லையாம், நான் கேட்டுட்டேன். அவங்களும் ஊட்டியைச் சுத்திப் பார்த்த போல இருக்கும்ல” என ரோகிணி சொல்ல நித்யாவுக்குக் கடுப்பாய் இருந்தது. இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கிளம்பினாள். அண்ணிகளும் ஷூட்டிங் காணப் போகும் சந்தோஷத்தில் ஜம்பமாய் கிளம்பினர்.
ஊட்டியில் ஹீரோ சுரேஷுடன் டூயட் பாடலுக்கு டான்ஸ் ஆடிவிட்டு வந்து அமர்ந்தாள் நித்யா. ராம் அன்று ஷூட்டிங் வந்திருக்கவில்லை.
“என்ன நித்தி, சில விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன், நீ AD ராமை லவ் பண்றியா?” என முகத்தை டவலால் ஒற்றிக் கொண்டே அவள் அருகே அமர்ந்தான் சுரேஷ்.
உடன் வந்திருந்த அண்ணிகள் சற்றுத் தள்ளி அமர்ந்திருக்க அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுரேஷிடம் திரும்பினாள்.
“அது..வந்து… லவ்வான்னு எல்லாம் தெரியல, எனக்கு அவரைப் பிடிக்கும் சுருண்ணா. ரொம்ப அக்கறையா அன்பா இருப்பார். அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டா நல்லாப் பார்த்துப்பார். ஆனா, எங்க வீட்டுல சம்மதிக்கற போலத் தெரியல”
“ம்ம்… காதலுக்குச் சினிமால தான் பிரச்சனைன்னா நிஜ வாழ்க்கைலயும் பிரச்சனை தான்னு சொல்லு…” என்ற சுரேஷ். அடுத்து அவன் மட்டும் தனியே நடிக்க வேண்டிய சீனுக்குத் தயாராக, அந்தப் படத்தின் வில்லனான சத்தியராஜ் ஒரு பெருமூச்சுடன் நித்யா அருகே வந்து அமர்ந்தான்.
“ஏதோ யோசனையுடன் சற்று வருத்தமாய் அமர்ந்திருந்த சத்யராஜைக் கண்டவள், “என்ன சத்யாண்ணா, கப்பல் ஏதாச்சும் கவிழ்ந்திருச்சா? ரொம்ப சோகமா இருக்கிங்க?” எனச் சிரிப்புடன் கேட்க அவளை முறைத்துவிட்டு விரக்தியுடன் சிரித்தான்.
“ப்ச். அது ஒண்ணுமில்ல தங்கச்சிமா. என்னை எல்லாரும் வில்லனாவே பார்த்துப் பழகிட்டாங்களா? இப்ப எனக்கு ரெணு மூணு படத்துல ஹீரோவா நடிக்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு. ஆனா, எந்த ஹீரோயினும் எனக்கு ஜோடியா நடிக்க சம்மதிக்க மாட்டேங்கறாங்க, அதான் என் பொழப்பு இப்படி வில்லனாவே முடிஞ்சு போயிருமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு” எனப் பெருமூச்சுடன் சொல்ல நித்யா சிரித்தாள்.
“என்னண்ணா நீங்க? இதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்குப் போயி இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கிங்க, எத்தனயோ புது ஹீரோக்குலாம் நான் ஜோடியா நடிக்கறேன். என் அண்ணனுக்கு ஜோடியா நடிக்க மாட்டேனா?” எனக் கண்ணைச் சுருக்கிச் சிரிக்க,
“அதுக்கில்ல நித்யாம்மா, நீ ஃபீல்டுல டாப்புல இருக்கற நம்பர் ஒன் ஹீரோயின். நான் இவ்ளோ நாளா வில்லனா நடிச்சவன். இப்ப ஹீரோவா நடிக்கற எனக்கு நீ ஜோடியா நடிச்சா, அது உன் காரியரை பாதிக்காதா?” எனக் கேட்க,
“அடப் போங்கண்ணா, பொல்லாத கேரியரு. எனக்குத் தெரிஞ்சதெல்லம் டிபன் காரியர் மட்டும் தான். சூப்பரா ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க, நான் உங்களுக்கு ஜோடியா நடிக்கத் தயார். என்ன படம், யாரு டைரக்டர்னு சொல்லுங்க. வீட்டுல வந்து அம்மாவைக் கால்ஷீட்டுக்குப் பார்க்கச் சொல்லுங்க” எனச் சொல்ல சத்யராஜின் முகம் மலர்ந்தது.
அவள் கையைப் பற்றிக் கொண்டவன், “ரொம்ப தேங்க்ஸ் நித்யா மா” எனச் சொல்ல அங்கே வந்த சுரேஷ், “என்ன, இங்க ஒரு பாசமலர் சீன் ஓடிட்டு இருக்கு. என்ன விஷயம்?” எனக் கேட்க,
“சுரு, எனக்கு ஹீரோயினா நடிக்க யாரும் ஒத்துக்கலன்னு புலம்பிட்டு இருந்தேன்ல, நம்ம நித்தி நடிக்கறேன்னு சொல்லிருச்சு” எனச் சந்தோஷமாய் சொல்ல,
“இதுக்குதான் நான் பர்ஸ்டே ஒரு ஃஃபைவ் ஸ்டார் வாங்கிக் கொடுத்து நித்யாகிட்டப் பேசச் சொன்னேன். நீதான், அவ பெரிய நடிகை, சம்மதிக்க மாட்டான்னு சொன்ன. இப்ப என்ன டீல் போட்டுச்சு உன் தங்கச்சி, ஃபைவ் ஸ்டாரா? பிரியாணியா?” எனக் கலாய்க்க நித்யா சுரேஷின் முதுகில் செல்லமாய் அடித்தாள்.
“என்னைக் கிண்டல் பண்ணறீங்களா சுருண்ணா. இருங்க, அடுத்த சீன்ல ஹீரோயின் ஹீரோவை அறையற போல ஒரு சீன் வரும்ல, நிஜமாவே உங்களை நல்லா அறைஞ்சு வைக்கறேன்.” என முறைக்க சுரேஷும், சத்யராஜூம் அவள் பாவனையைக் கண்டு சிரித்தனர். அன்றைய நாள் கலகலப்பாய் செல்ல அடுத்த நாள் ஷூட்டிங்கில் ராமைக் கண்ட நித்யாவுக்கு அவனிடம் பேசத் தோன்ற அண்ணிகளின் கழுகுப் பார்வையைக் கண்டவள் பேசாமல் சென்றுவிட ராமுக்குக் கஷ்டமாய் இருந்தது.
அவன் பேசுவதற்காய் அவளை நெருங்கினாலும் அவள் தவிர்த்து, விலகிச் செல்ல அவன் மனம் துடித்தது.
அவர்களை நித்யாவின் இரு அண்ணிகளும் வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டவன், உடனே மனதிலுள்ளதை எல்லாம் வார்த்தையில் தொடுத்து நித்யாவுக்கு, ஒரு கடிதத்தை எழுதியவன் யாரிடம் கொடுப்பதென்று யோசித்தான். நித்யாவின் அஸிஸ்டண்டும் அந்த அண்ணிகள் அருகிலேயே இருக்க யோசித்தவன் தயக்கத்துடன் ஹீரோ சுரேஷிடம் சென்றான்.
“சார்…”
அடுத்த காட்சியில் தான் பேச வேண்டிய வசனத்தை மடியிலிருந்த பேப்பரில் கவனமாய் படித்துக் கொண்டிருந்த சுரேஷ் நிமிர்ந்தான். அவன் அருகில் தான் நித்யாவும் அமர்ந்திருந்தாள். ராம் சுரேஷ் அருகில் வந்து நிற்பதை உணர்ந்தாலும் தலை நிமிராமல் அவளுக்குக் கொடுத்திருந்த டயலாக் பேப்பரில் கண்ணைப் பதித்து காதை அருகில் கொடுத்திருந்தாள்.
“சொல்லுங்க ராம்” என சுரேஷ் நிமிர, அண்ணிகள் ராம் இவர்கள் அருகே வந்ததிலிருந்து அவனையே கவனித்தனர்.
“சார், உங்க டயலாக்ல இந்தப் பேப்பர் விட்டுப் போயிருச்சு. டைரக்டர் கொடுக்கச் சொன்னாரு…” என ஒரு மடக்கப்பட்ட பேப்பரைக் கொடுக்க, புருவங்கள் முடிச்சிடக் குழம்பினாலும் சுரேஷ அதை வாங்கிக் கொள்ள ராம் அங்கிருந்து நகர்ந்தான்.
மடக்கப்பட்ட பேப்பரைப் பிரித்ததுமே, “சார், தயவுசெய்து இதை நித்யஸ்ரீ மேடமிடம் கொடுக்கவும்” என எழுதியிருக்க, சுரேஷ் புரிந்து கொண்டு சற்றுத் தள்ளி நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்த ராமை நோக்க, அவன் கெஞ்சலாய் பார்த்தான்.
அவனை நோக்கிச் சின்னத் தலையசைப்பைக் கொடுத்த சுரேஷ், இயல்பாய் நித்யாவிடம் பேசிக் கொண்டே அவளது டயலாக் பேப்பரை வாங்கிப் பார்த்தவன், அதற்குள் இந்தக் கடிதத்தை வைத்துத் திருப்பிக் கொடுத்து விட்டான். நித்யாவின் கைக்கு வந்த கடிதத்தை அவள் அந்த டயலாக் பேப்பருக்குள் வைத்தே சுற்றிலும் பார்த்துக் கொண்டு பிரித்துப் படித்தாள்.
குண்டு குண்டுக் கையெழுத்தில் அழகாய் ஓடியது வரிகள்.
“ஆருயிர் மேடத்துக்கு,
“உங்களை ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று சந்தித்ததில் சந்தோஷம். எப்படி இருக்கீங்க? நேரத்துக்குச் சாப்பிடறீங்களா? உடம்புக்கு ஓய்வு கொடுக்காமல் ரொம்ப அலைச்சல் கொடுக்காதீங்க.
நடந்த விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதற்காக வருந்த வேண்டாம். உங்கள் வீட்டில் நமது கல்யாணத்துக்குச் சம்மதிப்பார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு என்னை மாப்பிள்ளையாய் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இதில் அவர்கள் தவறு எதுவுமில்லை.
நான்தான் எனது தகுதியை வளர்த்துக் கொள்ளாமல், நான் இபோது சாதாரண ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டர் என்பதை மறந்து, உச்சத்தில் இருக்கும் உங்கள் மீது காதலை வளர்த்துக் கொண்டேன். அதோடு, அவசரப்பட்டு நமது டைரக்டர் சாரை அழைத்துச் சென்று உங்கள் வீட்டில் பெண் கேட்கவும் செய்து விட்டேன்.
எனை தயவுசெய்து மன்னித்து விடுங்கள். ஆனால், பேசாமல் இருந்து தண்டித்து விடாதீர்கள்.
அடுத்த வாரத்திலிருந்து நான் இயக்குநராக அறிமுகமாகும் புதுப் படத்தின் வேலை தொடங்க இருக்கிறது. அதற்கான பூஜையில் நீங்கள் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெற்று சந்தோஷத்துடன் உங்கள் கரம் பிடிக்க எனது தெய்வம் கருப்பண்ண சாமியின் ஆசியும், எனக்கான உங்கள் பிரார்த்தனையும் என்றும் துணையிருக்கும் என நம்புகிறேன். படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காய் வெளியூர் செல்வதால் என்னால் இங்கே சரியாக வர முடியாது. என்னை உங்கள் மனம் தேடுமோ இல்லையோ, நிச்சயம் என் மனம் உங்களைக் காண ஏங்கிக் கொண்டிருக்கும்.
உங்களிடம் மனம் விட்டுப் பேச ஆசையாக இருக்கிறது. ஆனால், சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் இக்கடிதத்தை எழுதுகிறேன்
என்றும் உங்கள்
ஆருயிர் ரசிகன்.
எனக் கடிதத்தை முடித்திருந்தான் ராம். இப்போதும் மற்றவர்களைக் குற்றம் சொல்லவில்லை. தன் மீதும், தன் சூழல் மீதுமே பழியைப் போட்டுக் கொண்டிருந்தான். தன் வீட்டார் அவனை அடித்ததற்கு கூடக் கோபப்படவோ, திட்டவோ இல்லை. அந்தப் பண்பும், தீர்க்கமாய் சிந்திக்கும் நிதானமும் எல்லாருக்கும் வந்து விடாது.
‘ராம் நல்லவன். நம்பிக்கையானவன். தன் மீது அன்பும், அக்கறையும் கொண்டவன். நிச்சயம் தனது உழைப்பால் நல்ல இடத்துக்கு வருவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவன் நிச்சயம் என்னை நன்றாய் பார்த்துக் கொள்வான். நான் வாழ்நாள் முழுக்க இப்படி காமெரா முன்பு நடித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? எனக்கென்று ஒரு குடும்பம், வாழ்க்கை என எல்லாப் பெண்களையும் போல ஒரு இயல்பான வாழ்க்கை வாழ முடியாதா? என் அம்மா எனக்கு ராமை மட்டுமல்ல, யாரையுமே கல்யாணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இல்லை. அப்படியிருக்க நாமே ஏன் ராமைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது.’ எனும் எண்ணம் அவளுள் வலுக்கத் தொடங்கியது.
அவள் தீவிர யோசனையில் இருப்பதைக் கண்ட சுரேஷ், “என்ன நித்யா? எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு யோசனை? ராம் அப்படி என்ன அந்தப் பேப்பர்ல எழுதிக் கொடுத்தார்?” என மெல்லிய குரலில் கேட்க அவனை நோக்கிச் சிரித்தாள் நித்யா.
“என் காதல் கோட்டையைப் பிடிக்க தான் தீவிர யோசனையில் இருக்கேன் சுருண்ணா. உங்களைதான் என் படைக்குத் தளபதியா நியமிக்கலாம்னு இருக்கேன்.” எனச் சிரிக்க,
“ஆஹா, உங்க காதலுக்கு நான் தூது போன விஷயம் மட்டும் ஆன்ட்டிக்குத் தெரிஞ்சுது. அப்புறம் வந்து என் கழுத்தைப் பிடிச்சிருவாங்க” என பயப்படுவது போல் சொல்லிச் சிரிக்க,
“கவலைப் படாதீங்கண்ணா. உங்களை மாட்டி விடாம நாங்க எங்காச்சும் ஓடிப் போயிடறோம்.” என அவள் சிரிக்க,
“ஆஹா, வேற வில்லங்கமே வேண்டாம். உன்னை நம்பி தான் ஊட்டிக்கு அனுப்பறேன்னு இப்பவே எங்கிட்டச் சொல்லி தான் அனுப்பி இருக்காங்க. எதுவா இருந்தாலும் அண்ணன் உசுருக்கு எந்த ஆபத்தும் வராம யோசிச்சுப் பண்ணு மா…” என்றவன் அடுத்த ஷாட்டுக்கு எழுந்து கொள்ள நித்யாவின் பார்வை காமெரா மேன் அருகே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ராமிடம் சென்றது. அவனை நோக்கி மென்னகை ஒன்றைத் தவழ விட, ராமுக்கு அதுவே பெரிய எனர்ஜி பூஸ்டராக இருந்தது.
அதற்குப் பிறகு சிறிதுநாள் அமைதியாய் செல்ல, ரோகிணி நித்யாவின் கால்ஷீட்டை எல்லாம் மாற்றிச் சரி செய்து இரண்டு நாளில் மலையாளப் பட ஷூட்டிங்கிற்குக் கேரளா கிளம்ப வேண்டுமென்றும், சில மாதங்கள் அங்கேயே தங்க வேண்டி இருக்குமென்றும் சொல்லத் திகைத்தாள் நித்யா.
தன்னை இங்கிருந்து சிறிது நாள்கள் மாற்றி நிறுத்த அன்னை செய்த சாணக்கியத்தனமே இந்தக் கேரளா டிரிப் எனப் புரிந்து கொள்ள அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
மறுநாள் ஒரு இசை வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்த நித்யா அங்கே ராமைக் கண்டதும் புன்னகைத்தாள்.
நெற்றியில் சிறு கீற்றாய் மின்னும் குங்குமக் கோடும், சந்தன நிறச் சட்டையும், கறுப்புப் பேண்டுமாய் வந்திருந்தவனின் தோற்றம் நித்யாவின் கண்ணைக் கவர, எப்போதும் அவனை சாதாரணமாய் பார்ப்பவள் இன்று ரசனையுடன் அவனைப் பார்க்க, ராம் அந்தப் பார்வையைக் கண்டு கொண்டவன், கூச்சத்தில் நெளிந்தான். விழா நடந்து கொண்டிருக்க, கேரளா சென்று விட்டால் இனி எப்போதாவது தான் அவனிடம் பேச முடியுமென்று நினைத்த நித்யாவுக்கும் அவனிடம் பேச ஆசையாய் இருந்தது.
கண்ணால் ஜாடை செய்து வெளியே வருமாறு கூறிவிட்டு மெல்ல முன்னில் நடக்க, அவளுடன் அவளது கடைக்குட்டி தம்பிதான் துணைக்கு வந்திருந்தான். நித்யாவின் மூன்றாவது அண்ணனும், நான்காவது அண்ணனும் ரோகிணி இருக்கும் கட்சியிலேயே நல்ல பொறுப்பில் இருந்தனர். விரைவிலேயே தேர்தல் வர இருப்பதால் முன்தினம், கட்சி மீட்டிங் முடிந்து, இரவு பைக்கில் வீட்டுக்குத் திரும்புகையில் யாரோ கும்பலாய் வந்து அவர்களைத் தாக்கி விட்டுச் சென்றிருந்தனர். பெரிய அடியில்லை என்றாலும் அரசியல் ஆதாரத்திற்காய் அதைப் பெரிய சம்பவமாக்கிக் கொண்டிருந்தனர்.
எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட சதியாக இருக்குமென்று அரசியல் வட்டாரங்கள் பேசிக் கொண்டிருந்தனர். ரோகிணியின் முதல் மருமகள் மாசமாய் இருக்க, இரண்டாவது மருமகள் பிறந்த வீட்டுக்குச் சென்றிருக்கவே ரோகிணி, மகன்களுடன் ஆசுபத்திரியில் இருக்கும் பொருட்டு மகளுடன் வரவில்லை. மூத்த இருவரும் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருந்தனர். எல்லாம் நித்யாவின் சம்பாத்தியம் தான். நித்யாவுக்கு மூத்தவனான ரோகிணியின் 5வது பிள்ளை சின்ன வயதில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இறந்து போயிருந்தான். நித்யாவுக்கு அடுத்த சத்யா இப்போது தான் 12 ம் வகுப்பு படிக்க, கடைக்குட்டி சதீஷ் 10 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
தனது தம்பியைத் துணைக்கு அழைத்து வந்த நித்யா அவனிடம் பாத்ரூம் செல்வதாய் சொல்லிவிட்டு ராமைக் காண வெளியே வந்தாள். ராம் சிறிது தயங்கிக் கொண்டே வெளியே வர சற்று ஒதுக்குப் புறமாய் சென்று நின்று கொண்டனர்.
“என்ன இன்னிக்கு டைரக்டர், ஹீரோ போல ஜொலிக்கிற மாதிரி இருக்கு?” நித்யா கிண்டலாய் கேட்க சிரித்த ராம்,
“முன்ன எல்லாம் ஏடி தானன்னு அஸால்ட்டாப் பார்ப்பாங்க. இப்ப இயக்குநர்னும் போது கொஞ்சம் கெட்டப் நல்லா இல்லன்னா, நம்ம படத்துல நடிக்க நடிகர்களும் யோசிப்பாங்கல்ல. அதான், ஆள் பாதி, ஆடை பாதின்னு கொஞ்சம் டிப்டாப்பா மாறிட்டேன்.”
“ம்ம்… சரிதான், இது நல்லாருக்கு” என்றவளின் பார்வை அவனைக் குறுகுறுவெனப் பார்க்க அவன் கூச்சத்தில் நெளிந்தான்.
“ப்ச்… என்ன நீங்க? பொண்ணு நான் வெட்கப்படாம நிக்கறேன். நீங்க இப்படி கூச்சப்படறீங்க? எல்லார் கிட்டயும் இப்படித்தானா?”
“எல்லார் கிட்டயும் இப்படி இல்ல, உங்க பக்கத்துல வந்தா மட்டும் கொஞ்சம் படபடன்னு வந்திருது மேடம்…” என்றவனை நோக்கி அவள் கண்ணைச் சுருக்கிக் கன்னத்தில் குழி விழச் சிரிக்க, அவன் ஆசையுடன் அவளையே பார்த்திருந்தான்.
“நீங்க எப்பவுமே அழகுதான். இப்படிச் சிரிச்சா இன்னும் ரொம்ப அழகா இருக்கிங்க மேடம், எப்பவும் சிரிச்சுட்டே இருங்க”
“அப்படியா?” என அதற்கும் சிரித்தவள், “நான் ரெண்டு நாள்ல கேரளா கிளம்பிருவேன். அஞ்சாறு மாசம் அங்கதான் ஷூட்டிங் நினைக்கறேன். திரும்பி வர்ற வரை உங்களைப் பார்க்க முடியாது” எனச் சொல்லி நிறுத்த அவன் கண்களில் ஒரு தவிப்புத் தெரிந்தது.
“எ..என்னை மறந்திட மாட்டிங்க தானே, மேடம்”
“ப்ச்… விளையாட்டுத் தனமா நாம பழகத் தொடங்கினாலும் உங்க மேல எனக்கும் அன்பும், மரியாதையும் ரொம்ப இருக்கு. அதைவிட நீங்க சாதிப்பீங்கன்ற நம்பிக்கை ரொம்பவே இருக்கு. நான் திரும்பி வரும்போது நீங்க ஒரு சிறந்த இயக்குநர்னு இங்கே பேரு வாங்கி இருக்கணும்” என்றவளைக் கண்கள் மின்னப் பார்த்தவன்,
“நீங்க என்னை நம்பறீங்களா மேடம்? அப்ப நான் நிச்சயம் சாதிப்பேன். நீங்க நல்லபடியா அங்க ஷூட்டிங் முடிச்சிட்டு வாங்க. நேரத்துக்குச் சாப்பிடுங்க, நல்லாத் தூங்குங்க. உடம்பும், மனசும் சரியா இருந்தா தான் எல்லாமே சரியாருக்கும். காத்திருப்போம், நமக்கான நாளுக்காக. சந்தோஷமாப் போயிட்டு வாங்க” என்றவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்பிக்கையுடன் வந்தது.
அவனைக் கண்கள் சிரிக்கப் பார்த்தவள் கையை நீட்டி, “ஆல் தி பெஸ்ட்” எனச் சொல்ல, அவளது சந்தன நிற மெலிந்த விரல்களில் கிரீடம் வைத்தது போல் அழகாய் இருந்த நகப்பூச்சை ரசித்துக் கொண்டே, சற்றுத் தயக்கத்துடன் தனது பிரவுன் நிறக் கையை நீட்டினான் ராம். இருவரின் கைகளும் இணையப் பாலும், டிக்காஷனும் இணைந்தது போலிருந்தாலும் இருவருக்குமே காஃபி மிகவும் பிடித்தமான பானமாய் இருந்தது.
‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ மனதிலுருந்த வார்த்தை அவள் இதழ்கள் வரை வந்துவிட, கேட்காமல் தன்னை அடக்கினாள்.
அவனுக்கும் தன்னை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். கொஞ்ச காலம் போகட்டும். எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். மனம் எப்போதோ அவனிடம் சாயத் தொடங்கி இருந்தது. வீட்டினரை எதிர்த்து தான் தனது கல்யாணம் நடக்க வேண்டுமென்றால் அதற்கும் மனது தயாராகத் தொடங்கியிருந்தது.
அன்னை ரோகிணிக்கு மட்டுமல்ல, தந்தை, அண்ணன்கள் யாருக்குமே அவளது எதிர்காலத்தைப் பற்றி எந்த யோசனையும் இதுவரை வரவில்லை. அவள் சம்பாத்தியத்தில் தான் பெரிய பங்களா, மூன்று கார், பெரிய பிள்ளைகள் இருவருக்கும் ஃபைனான்ஸ் கம்பெனி, தந்தை பார்த்துக் கொள்ளச் சின்னதாய் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர், நித்யாவின் பேரில் நான்கடுக்கில் 12 வீடுகள் கொண்ட பெரிய அபார்ட்மென்ட் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். அந்த வருமானம் மட்டுமே அவள் அக்கவுண்டுக்கு வந்து கொண்டிருந்தது.
அதிலும், அவள் ஏழைக் குழந்தைகள் 100 பேரின் படிப்புக்கான செலவை ஏற்றுக் கொண்டு ஒரு டிரஸ்ட்டுக்கு மாதமாதம் ஒரு தொகையைக் கொடுத்து வந்தாள். அது இல்லாமல் ஒரு டிராவல்ஸும் நித்யாவின் பேரில் இருந்தது. அதை அரசியலில் இருக்கும் அண்ணன்கள் இருவரும் பார்த்துக் கொள்ள அதிலிருந்து ஒரு பங்கு மாதாமாதம் நித்யாவுக்கு வந்து கொண்டிருந்தது.
அவளை வைத்து, அவளால் மட்டுமே அந்தக் குடும்பம் இந்த உயர்வைக் கண்டிருந்தது. அவளும் எல்லா ஆசாபாசங்களும் கொண்ட இளம்பெண் என்பதை ரோகிணி உட்பட அக்குடும்பத்தில் அனைவரும் மறந்து போயிருக்க, ராமின் நேசமும், அக்கறையும் இயல்பாய் அவளை, அவனை நோக்கி ஈர்க்கத் தொடங்கியிருந்தது.
இருவரும் சிறிது நேரம் மேலும் சில பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க நித்யாவின் டிராவல்ஸில் டிரைவராய் வேலை செய்யும் ஒருவன், யாரையோ அங்கே இறக்கி விட வந்தவன் இவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, நித்யாவின் அண்ணனின் காதில் பத்த வைக்க, மீண்டும் இப்பிரச்சனை பெரிதாய் புகையத் தொடங்கியது.
புகைக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கலாம் தானே.
தீப்பிடித்தது.
அன்று இரவே ராம் வீட்டுக்குள் யாரோ ரவுடிகள் சிலர் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க, வாசலில் நின்றிருந்த அவனது பைக்கில் பெட்ரோல் ஒயரைக் கழற்றி விட்டுத் தீயை வைக்க, அது திகுதிகுவெனப் பற்றி எரிந்தது.
அப்போதுதான் வெளியில் வேலை முடிந்து வீட்டுக்கு டாக்ஸியில் வந்திறங்கிய ராம் வீட்டு முன்னில் நிறுத்தி வைத்திருந்த தனது பைக் கண் முன்னிலேயே எரிந்து சாம்பலாவதைக் கண்டு அலறினான். அன்னையின் கூக்குரலும், அவனது சத்தமும் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் சிலர் ஓடி வந்தாலும் ரவுடிகளின் கையிலிருந்த உருட்டுக்கட்டை, வெட்டரிவாளையும், கத்தியையும் கண்டு மிரண்டு பயந்து ஒதுங்கி நின்றனர்.
அடுத்து அவர்களைத் தடுக்க முயன்ற ராமை ரவுடிகள் உருட்டுக் கட்டையால் அடித்துச் சரமாரியாகத் தாக்கினர்.
ராமின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவனது உடம்பெங்கும் அடித்துக் காயப்படுத்தி அவன் மயங்கத் தொடங்கவும் தான் விட்டுச் சென்றனர்.
வாயிலிருந்தும், மண்டையிலிருந்தும் ரத்தம் ஒழுக மயங்கிச் சரிந்தான் ராம். அதுவரை வேடிக்கை பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் வேகமாய் அவனை ஆசுபத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதைக் கேள்விப்பட்ட நித்யாவுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. இது நிச்சயம் தனது வீட்டாளுகளின் வேலை தான் எனப் புரிய அவளது கோபம் எகிறியது.
ஒரு காதல் இடைவேளை…
-லதா பைஜூ