மௌனங்கள் இசைக்கட்டுமே 05

சேஷன் அந்த மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறி அரைமணி நேரம் கடந்தபின்னும் கூட, அவன் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சேனா. இப்படி இத்தனை இலகுவாக இதற்குமுன் அவனை பார்த்ததே இல்லை அவள். அப்படியிருக்க, அவனது இந்த மாற்றத்தை அவனைப்போல் இலகுவாக ஏற்க முடியவில்லை அவளால்.

பிடித்து வைக்க நினைத்த போதெல்லாம் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டியவன் இன்று அவள் விட்டுவிட நினைக்கையில், சிக்கிக்கொள்ள சித்தமாக இருப்பதாக அடிமைசாசனம் எழுதிக் கொண்டிருக்கிறான். ஆனால், யார் என்ன சொன்னாலும், சேனா இன்னுமொரு முறை அவனை ஏற்பதாக இல்லை.

அவன் மாற்றம் ஒன்றும் மாற்றமில்லாதது இல்லையே. இன்று இந்த வேடம்இனி நாளை என்னவோஎன்பதுதான் சேனாவின் மனநிலையாக இருந்தது. மற்றபடி அவனது வார்த்தைகள் எல்லாம் பெரிதாக எந்த சலனத்தையும் அவளிடம் விதைக்கவில்லை.

இந்த காய்ச்சல் கூட இப்போது நிதானமாக யோசிக்கையில் முட்டாள்தனமாக தோன்றியது. தன் உடல்நிலையை தானே கெடுத்துக்கொண்டு, அவனுக்கு தன் பாதிப்பை சொல்லி கொண்டிருக்கிறோமோ என்று சரியான திசையில் தன் சிந்தனையை செலுத்த தொடங்கிவிட்டாள் அவள்.

தானாகவே அவள் தெளிந்து கொள்ளும் நேரம் தேனமுதன் அவள்முன் பிரசன்னமாக, சோர்வாக அவனைக் கண்டு புன்னகைத்து வைத்தாள். ஆனால், அந்த அவசரக்காரன் எப்போதும் போல், “அறிவிருக்கா உனக்குஎன்று அவளைப்பற்றி அறியாமல் வார்த்தையை விட,

இல்லன்னா என்ன செய்ய போற?” என்றாள் தேவசேனா.

நீ செய்யுறது எல்லாமே சரியாகாது தேவா. இப்படி நடுராத்திரில ஷவர்ல நின்னு காய்ச்சலை இழுத்து விடணுமா? பைத்தியம் எதுவும் பிடிச்சிருக்கா?” என்று தேனமுதன் அதட்ட,

ஏற்கனவே சொல்லியிருக்கேன் தேனமுதன். என்னை சின்னப்பிள்ளையா நினைச்சு அதட்டி மிரட்டுற வேலையெல்லாம் எப்போதும் என்கிட்டே வேண்டாம். என்ன இப்போ காய்ச்சல்நீ நைட் முழுக்க இங்கே இருந்து இருக்கஅவ்ளோதானே. தேங்க்ஸ்…” என்றாள் பட்டென.

அடுத்தவங்களோட உணர்வுகளை ரொம்ப சுலபமா காயப்படுத்தற தேவா. வெல்டன்…”

தெரிஞ்சே தான் செய்றேன். பெட்டர்நீ என் பக்கம் வராம இரு.”

ஏன் வரக்கூடாது?”

உன்கிட்ட தேவ் என்ன சொல்லி இருக்கான் எனக்கு தெரியாது. ஆனா, உன்னோட மோட்டிவ் என்னன்னு எனக்கு புரியுது. அது தேவையில்லன்னு சொல்றேன். புரியுதா?”

புரியல எனக்குஎன்னஎன்ன மோட்டிவ்.” என்று தேனமுதன் பதட்டம் கொள்ள,

நீ வாழ்க்கை கொடுத்து வாங்கிக்கிற நிலையில் நான் இல்ல. அதைத்தான் சொல்றேன்என்றாள் சேனா.

தேனமுதன் அதிர்ந்து நிற்க, அதை எதிர்பார்த்தவளாக மௌனமாக கண்களை மூடிக்கொண்டாள் சேனா. தேனமுதனுக்கு என்ன எதிர்வினையாற்றுவது என்று யோசிக்கவே சில நொடிகள் அவகாசம் பிடித்தது. ஆனால், அந்த சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டவன் நிதானமாக சேனாவின் கட்டிலுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர, அவனது இருப்பை உணர்ந்து கண்களைத் திறந்தாள் சேனா.

அருகில் இருந்தவனை கேள்வியுடன் அவள் பார்க்க, “சோ மேடம் கண்டுபிடிச்சுட்டீங்க. இதுக்காகத்தான் என்னை அவாய்ட் பண்றிங்களா?” என்றான் தேனமுதன்.

எஸ்…” என்று ஒரே வார்த்தையில் சேனா முடித்துக்கொள்ள,

உன்னை காதலிக்கிறது அத்தனை பெரிய குத்தமா?”

இன்னொருத்தனோட மனைவியை காதலிக்கிறது குற்றம் தான்.”

தப்பு. நீ அவனை புருஷனே இல்லன்னு சொல்லி இருக்க. அவன் கட்டின தாலியும் இல்ல உன்கிட்ட.”

சோ வாட்தாலி இல்லாம இருந்தா யார் வேணா யாரை வேணா காதலிக்கலாமா? அபத்தமா இல்ல.”

இதுல அபத்தம் எங்கிருந்து வருது சேனா. எனக்கு உன்னை பிடிக்கும். நீ சேஷனோட மனைவியாகறதுக்கு முன்னாடி இருந்தே பிடிக்கும். நீ சொல்லாம கொள்ளாம சேஷனை கட்டிக்கிட்டதுல என் தப்பு என்ன இருக்கு?”

என் அப்பாவுக்காக உன்னோட பேச்சை ரொம்ப பொறுமையா கேட்டுட்டு இருக்கேன் தேனமுதன். உன்னோட எல்லை எதுன்னு புரிஞ்சு நடந்துக்கோ

எனக்கு என்னோட லிமிட்ஸ் தெரியும் சேனா. இதுவரைக்கும் எல்லைமீறி எதுமே செஞ்சதில்ல நான். ஆனா, எப்பவும் இப்படியே இருக்கமாட்டேன். உன் வாழ்க்கையில் சேஷன் இல்லன்னு முடிவான பிறகு, நீ மூவ் ஆன் பண்றதுல என்ன தப்பு.”

மூவ் ஆன் பண்றதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். ஆனா, என்னோட முடிவில் எங்கேயும் நீ இல்ல. அதை மறக்க வேண்டாம்.”

அதுதான் ஏன்?”

அதெல்லாம் உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்ல. வெளியே போடா

அநியாயம் பண்ற தேவா நீ. எப்படி உன்னால இப்படி எடுத்தெறிஞ்சு பேச முடியுது?

இன்னும்கூட நிறைய பேசுவேன். உன்னோட காதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. சோ, நியாயம் கேட்கிற வேலையெல்லாம் வேண்டாம்.”

அப்படியெல்லாம் உன்னை விட்டுட முடியாது தேவா

ஏன் பூனைக்குட்டி போல கையில பிடிச்சு வச்சுட்டே இருக்க போறியா?”

நல்லா இருக்கே..”

வேண்டாம் தேனமுதன். என் பொறுமையை எல்லைமீற வைக்கிற நீ. நல்லதில்ல.”

எல்லைமீறினா என்ன செய்வ தேவா.”

என்ன வேணாலும் செய்வேன்…”

அப்போ சேஷனை ஏன் எதுவும் செய்யல தேவா.” என்ற தேனுவின் வார்த்தைகளில் பதிலில்லாமல் மௌனித்துப் போனாள் சேனா.

சொல்லு. இத்தனைக்கு பிறகும் இந்த அன்டைம்ல உன்னை வந்து பார்த்துட்டு போறானே. அவனை ஏன் எதுவும் செய்யல. கொலை பண்ண வேண்டாம். அட்லீஸ்ட் அவன் செய்த தப்புக்கு செருப்பால அடிக்கலாம் இல்லையா?”

அவனை எதுவும் செய்யலன்னு உனக்கு தெரியுமா? இது நாங்க ரெண்டுபேர் சம்பந்தபட்ட விஷயம். ப்யுர்லி பர்சனல். சோ…” என்று வாயின் மீது விரல் வைத்து காட்டினாள் சேஷா.

தேனமுதன் அப்போதும் எதுவோ பேச வர, “பேசாதன்னு சொன்னேன்என்று மிரட்டலாக வெளிவந்தது சேனாவின் குரல்.

தேனமுதன் வாயை மூடிக்கொள்ள, “சேஷாவை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் தேனமுதன். அடுத்தவன் பொண்டாட்டி மேல காதல்ன்னு நிற்கிற உன்னை என்ன செய்யலாம்? எதைக்கொண்டு அடிக்கலாம்? நிதானமா யோசிச்சு பாருஎன்றவள் அவன் முகம் காணவும் விரும்பாமல் கண்களை மூடிக்கொள்ள, கோபத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறினான் தேனமுதன்.

அந்த மருத்துவமனையின் வெளிவாயிலுக்கு அருகில் வந்துவிட்ட பின்னும்கூட அவன் கோபம் குறையவே இல்லை. அதுவும் தன் வார்த்தைகளை தனக்கே திருப்பிவிட்ட சேனாவின் செயலில் இன்னும் சினந்து நின்றான் அவன்.

ஏனோ தன் காதல் தவறென்று அத்தனை எளிதில் ஒப்புக் கொள்ள முடியவில்லை அவனால். இன்னொருவன் மனைவி என்பதெல்லாம் மாறிப்போக, இவனைவிட எந்த விதத்தில் நான் குறைந்து போனேன் என்பதாக அவனை குழப்பிவிட தொடங்கியது அவன் மனது.

அதுவும் அவன் வருகையை அமைதியாக ஏற்றுக்கொண்டு, தன்னை தள்ளி நிறுத்தும் தேவாவின் செயலில் மொத்தமாக உடைந்து போயிருந்தான் அவன். மனம் ஒருநிலையில் இல்லாமல் அவனை காய்ச்சியெடுக்க, அதற்குமேல் மருத்துவமனையில் இருக்க முடியாமல், காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் தேனமுதன்.

அந்த மருத்துவமனையின் வளாகத்தின் மற்றொரு பக்கம் நின்றிருந்தவனோ, அவன் செயலில் அழகாக புன்னகைத்துக் கொண்டான். அவனும் தனது காரில் தான் அமர்ந்திருந்தான்.

அவன் சேனாவை பார்த்துவிட்டு கிளம்பிய நேரம் தான் சரியாக தேனமுதன் காத்திருப்போர் அறையில் இருந்து வெளியே வந்தது. சேஷன் அவனை கவனித்து விட்டாலும் கண்டுகொள்ளாமல் கடந்துவிட, தேனமுதனின் முகத்தில் அப்பட்டமாக ஒரு அதிர்ச்சியும், ஏமாற்றமும் வெளிப்பட்டதை சேஷனின் மனம் குறித்துக் கொண்டது.

இவன் வேற வேஸ்ட் மெட்டீரியல்என்று மனதிற்குள் அவனை அர்ச்சித்தபடி கீழே இறங்கிவிட்டாலும், அவனை அங்கிருந்து நகரவிடாமல் அவன் மனம் சண்டித்தனம் செய்ததில், அப்படியே காரில் அமர்ந்துவிட்டான் சேஷன். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குபின் தேனமுதன் அந்த இடத்திற்கு வந்து சேர, அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகள் சற்று திருப்தியாக இருந்தது சேஷனுக்கு.

அவன் முகம் பார்ப்பதற்கு அமைதியாக காட்சியளித்தாலும், உள்ளுக்குள் அவனும் கனன்று கொண்டு தான் இருந்தான். சேனாவைப் பற்றிய விவரங்கள் அவன் அறியாமலா…? சேனா அமெரிக்கா வந்தடைந்த மறுதினமே அவளைக்குறித்த அத்தனை தகவல்களும் கைக்கு வந்துவிட, அடுத்த ஐந்து நாட்களில் தானும் அமெரிக்கா வந்து இறங்கியிருந்தான் சேஷன்.

பார்த்த கணமே தேனமுதனின் பார்வையில் இருந்த வித்யாசம் அவன் கண்களுக்கு பிடிபட்டுவிட, “இவனை எப்படி விட்டு வச்சிருக்கா?” என்றுதான் தோன்றியது அவனுக்கு.

மற்றபடி பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை சேஷன். அவனுக்கு தெரியாத அவன் சண்டைக்காரியை என்ற எண்ணம்தான். கிட்டத்தட்ட அவன் எதிர்பார்த்தது தான் நடந்ததும் கூட.

அவன் நினைத்தது போலவே ஒரே வாரத்தில் அவன் மண்டையில் அடித்து விரட்டி விட்டாள் அவன் மனைவி. மனம் சற்றே செல்லமாக மனைவியை சீராட்டிக்கொள்ள, முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் மனைவியைக் காணச் சென்றான் சேஷன்.