அத்தியாயம் 4
“தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?” அறை வாசலில் நின்று கேட்ட ஜானகியிடம், “இப்ப வேண்டாம், அப்புறம் சாப்பிட்டுக்கறேன் மா…” என்றான் ராம்சரண்.
“நேத்தும் சரியா சாப்பிடவே இல்ல, இப்பவும் வேண்டாம்னு சொன்னா எப்படி தம்பி? பிரஷர் மாத்திரை வேற போடணும்ல”
“ம்ம்… பசிக்கல ஜானும்மா” என்றவனின் வாடிய முகமே அவன் மனதைச் சொல்ல ஜானகிக்கும் வேதனையாய் இருந்தது.
“எனக்குப் புரியுது தம்பி. ஆனா, சாப்பிடாம இருந்தால் மட்டும் எல்லாம் மாறிடவா போகுது”
“எதுவும் மாறாது, மாறவும் கூடாது… ஆனா, மனசு அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் ஏத்துகிட்டு மாற மாட்டேங்குதே” என்றவனின் குரல் தொண்டையை அடைக்க, பதில் சொல்ல முடியாமல் அவனை வேதனையுடன் பார்த்தவர்,
“எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல தம்பி, நடக்கிறது எல்லாம் நீங்க தீர்மானிச்சது தானே, ஏத்துக்க தானே வேணும்”
“ம்ம்… ஆனா முடியல ஜானும்மா. எப்படி கலகலன்னு இருந்த வீடு. அ..அவங்க சிரிப்பும், குரலும் தான் இந்த வீட்டையே உயிர்ப்பா வச்சிருக்கும். இப்ப எனக்காக யாரும் இல்லன்னு நினைக்கும்போது…” என நிறுத்தியவன்,
“நீங்க போங்க, நான் அப்புறம் சாப்பிடறேன்” எனக் கலங்கிய கண்களை அவரிடம் காட்ட விரும்பாமல் திரும்பிக் கொண்டான். அது புரிந்த ஜானகியும் அமைதியாய் அடுக்களைக்குச் சென்றார்.
அவர் மனமும் அவன் சொன்ன ‘அவங்க’ளான நித்யஸ்ரீயை தான் நினைத்துக் கொண்டிருந்தது.
ராம் இத்தனை வருடமாகியும் மனைவியை வாங்க, போங்க என்று தான் அழைப்பான். அது என்னவோ அவளை ஆரம்பத்திலிருந்தே உயரத்தில் கண்டு பழகியவனுக்கு வா, போ என்று ஒருமையில் அழைக்க வாய் வரவே இல்லை.
நித்யா எத்தனையோ முறை அந்தப் பழக்கத்தை மாற்றச் சொல்லி அவனிடம் கேட்டிருக்கிறாள். ஆனால், ராமால் முடியவில்லை.
“நீங்க என் தேவதை, உங்களை மரியாதை இல்லாம என்னால கூப்பிட முடியலை, ப்ளீஸ் விட்டுடுங்க ஸ்ரீ…” என்பான் சிரிப்புடன்.
“ஹூக்கும், இப்படிச் சொல்லியே என் வாயை மூடிடுங்க. இப்பல்லாம் சொந்த அம்மா, அப்பாவையே பேர் சொல்லிக் கூப்பிடறது தான் பிரண்ட்லின்னு சொல்லிட்டு இருக்காங்க…”
“நாம அப்படி இருக்க வேணாமே. நம்ம பிள்ளைகளையும் அப்படிப் பழக்க வேண்டாம். எப்பவும் மனசுல இருந்து சக மனுஷங்களை மதிச்சுப் பழகணும். அப்பதான் வார்த்தையா இருந்தாலும், பழக்க வழக்கமா இருந்தாலும் மத்தவங்களை மதிக்கத் தோணும்” என்பான்.
“ஹூக்கும், டைரக்டருக்குப் பேச வசனம் எல்லாம் சொல்லியா கொடுக்கணும்” எனக் கேட்டபடி கண்கள் சுருங்க, மூக்கைச் சுருக்கிச் சிரிப்பாள் நித்யா. அவளை ஆசையுடன் பார்த்திருப்பான் ராம்.
மேஜை மீது இருவரும் ஜோடியாய் சிரித்துக் கொண்டிருந்த போட்டோவைக் கண்கள் பனிக்கப் பார்த்திருந்தவனின் விழிகள் பழைய நினைவுகளைக் கசிய விட்டன.
இயக்குநர் மணிபாரதியிடம் உதவி இயக்குநராய் வேலைக்குச் சேர்ந்து விட்டான் ராம்சரண். இது அவனுடைய பல வருட உழைப்புக்குக் கிடைத்த பலன் என்றே சொல்ல வேண்டும். எத்தனயோ இயக்குநர்களிடம் வேலை செய்ய வாய்ப்புக் கேட்டு நடையாய் நடக்க, இறுதியில் அவனது உறவினர் ஒருவரின் உதவியால் மணிபாரதியை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
கை இரண்டையும் பவ்யமாய் கட்டிக் கொண்டு, கண்களில் தேங்கி நின்ற கனவுகளும், கிராமத்துக் களையுமாகத் துருதுருவென்று இருந்த மெலிந்த இளைஞனைத் தனது எக்ஸ்ரே விழிகளால் ஊடுருவிப் பார்த்தார் மணிபாரதி.
“எந்த ஊரு”
“மதுரை சார்”
“என்ன வேலை பார்த்திட்டு இருக்க?”
சினிமா தியேட்டர்ல டிக்கட் கவுண்டர்ல வேலை செய்யறேன் சார்”
“ஓ! எதுக்கு இந்த ஃபீல்டுக்கு வரணும்னு ஆசைப்படற?”
“சாதிக்கணும் சார், நம்ம தமிழ் சினிமாவும் நல்ல கதைகளால உலக அளவுல பேசப்படணும். புரட்சித் தலைவர், கலைஞர் மாதிரி திரைப்படம் மூலமா நல்ல கருத்துகளை மக்கள்கிட்டக் கொண்டு போய் சேர்க்கணும் சார். தயவுசெய்து ஒரு வாய்ப்புக் கொடுங்க சார்.” கண்கள் மின்ன அழுத்தமான குரலில் நிதானமாகச் சொன்னவனை மேலிருந்து கீழே பார்த்தவர் புன்னகைத்தார்.
“ம்ம்… நீ சொன்ன மாற்றத்தை எல்லாம் கொடுக்க முடியுமோ இல்லியோ, உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க என்னால முடியும். இன்னைக்கே நாள் நல்லாருக்கு, வேலைக்குச் சேர்ந்திடு” என்றார்.
அடுத்த நொடி அவரது காலில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து கிடந்தான் ராம்சரண்.
“அடடே, என்னப்பா இது? கால்ல எல்லாம் விழுந்திட்டு. எழுந்திரு”
“நீங்க என் குரு சார், இந்த சிஷ்யனை வாழ்த்துங்க” என்றவனின் வெகுளித்தனமான வெளிப்படைப் பேச்சும் செயல்களும் அவருக்குப் பிடித்துப் போக, “சரி, சரி. நல்லாரு, எழுந்திரு” என்றார்.
எழுந்தவன் அதே பவ்யத்துடன் நிற்க, “ஆபீஸ்ல உன்னைப் பத்தின டீடைல்ஸ் எல்லாம் கொடுத்திரு. சம்பளம் பெருசா எதிர்பார்க்காத. உன்னோட பர்மாமென்ஸ் எப்படின்னு பார்த்திட்டு தான் ஃபிக்ஸ் பண்ணுவேன். நாளைக்கு ஷூட்டிங்க்கு கரக்ட் டைம்க்கு ஸ்பாட்டுக்கு வந்துடணும். மத்த டீடைல்ஸ் எல்லாம் ஆபீஸ்ல கேட்டுக்க” என்றுவிட்டு அவர் சென்றுவிட ராமுக்கு மனம் துள்ளியது.
மணிபாரதியின் அலுவலகத்திற்குச் சென்று தகவல்களைக் கொடுத்தவன், அடுத்தநாள் வருவதாகச் சொல்லிக் கிளம்பினான். வீட்டுக்கு வரும் வழியில் அம்மாவுக்குப் பிடித்த இருட்டுக்கடை அல்வாவை பேக்கரியில் வாங்கிக் கொண்டான்.
“அம்மா…” வீட்டுக்குள் நுழையும்போதே ஓங்கி ஒலித்த மகனின் குரலில் அடுக்களையிலிருந்த ராசாத்தி வெளியில் வந்தார். ஈரக் கையை முந்தானையில் துடைத்துக் கொண்டே வந்தவரைச் சட்டென்று தூக்கி ராம் தட்டாமாலை சுற்ற அவர் அலறினார்.
“ஐயோ! என்னய்யா, என்ன பண்ணற? என்னைக் கீழ விடுய்யா” என அலறிய அன்னையை மெல்லக் கீழே விட்டவன்,
“அம்மா, ஒரு சந்தோஷமான விஷயம். என் பிரார்த்தனையைக் கடவுள் காதுல வாங்கிட்டார்” எனக் கூறிக் கொண்டே கையில் இருந்த கவரைப் பிரிக்க,
“என்னய்யா, என்ன விஷயம்?” என அவர் புரியாமல் கேட்க,
“சொல்லறேன், முதல்ல வாயத் திறங்க” எனவும், “இவனுக்கு என்னாச்சு?” எனப் புலம்பிக் கொண்டே வாயைத் திறக்க, அல்வாவை எடுத்து அவர் வாயில் திணித்தான்.
“ஏய்யா, முதல்ல என்ன விஷயம்னு சொல்லுய்யா”
“உங்க புள்ளை வருங்காலத்துல பெரிய இயக்குநராகப் போறான். அதுக்கு அச்சாரமா இயக்குநர் மணிபாரதிகிட்ட இப்ப உதவி இயக்குநரா வேலைக்குச் சேர்ந்துட்டான்ல…” எனச் சொல்ல,
அவர் முகமும் மலர்ந்தது.
“ரொம்ப சந்தோஷம்யா, உன் மனசு போல நம்ம கருப்பண்ண சாமி எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக் கொடுப்பான்” என வாழ்த்த,
“அவர் நடத்திக் கொடுக்கறது இருக்கட்டும், மொதல்ல நீங்க உங்க பிள்ளை இந்தத் துறைல நிறையச் சாதிச்சு பெரிய ஆளா வரணும்னு என்னை வாழ்த்துங்க” என்றவன் கையிலிருந்த அல்வாவை அன்னை கையில் கொடுத்துவிட்டு அவர் காலில் விழுந்தான்.
“நிறையச் சாதிச்சு பெரிய ஆளா வருவய்யா, நம்ம கருப்பண்ணசாமி உனக்கு எப்பவும் துணையிருப்பார்” என மனதார வாழ்த்தினார். அவன் எழுந்ததும் அவன் நெற்றியில் முத்தமிட்டவர்,
“நம்ம ஜோசியரு சொன்ன போலவே எல்லாம் நடக்குது பார்த்தியா? நீ சாதிக்கப் பொறந்தவன்யா, நீ பெரிய ஆளா வருவ பாரு” என்றார்.
“ஆமாம் மா, அவரு கணிச்சு சொன்ன போலவே எல்லாம் நடந்திட்டு வருது. ஊருக்குப் போகும்போது அவரைப் பார்த்து நன்றி சொல்லணும் மா”
“ம்ம் சொல்லுவம் யா, நீ பசியோட வந்திருப்ப. கை கால் அலம்பிட்டு சாப்பிட வா, அம்மா எடுத்து வைக்கிறேன்” என்றவர் அடுக்களைக்குச் செல்ல சிறிது நேரத்தில் லுங்கியும், பனியனுமாய் சாப்பிட வந்து ஹாலில் தரையில் அமர்ந்தான் ராம்சரண்.
ராசாத்தி, மகனுக்குத் தட்டு வைத்துச் சாதமும், சாம்பாரும் தொட்டுக் கொள்ள ஊறுகாயும் வைத்தார்.
சாம்பாரிலிருந்த காய்களை எடுத்துத் தட்டின் ஓரமாய் வைத்தவன் சாதத்துடன், அந்தக் காயையும் ஊறுகாயும் தொட்டுக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான். அவன் அருகே அமர்ந்து பரிமாறியவர், “இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைக்கவா?” எனக் கேட்கப், “போதும்மா, மனசு சந்தோஷத்துல நிறையவும் பசிக்கல” என்றவன் சாப்பிட்டு முடித்து எழுந்தான்.
ராம்சரணின் உடன் பிறந்த தமக்கையர் இருவரும் திருமணமாகி மதுரையிலிருக்க, இவன் மட்டும் சினிமா வாய்ப்புத் தேடி அன்னையுடன் சென்னைக்கு வந்திருந்தான். தந்தை இறந்த பிறகு தங்களுக்காகவே வாழ்ந்த அன்னையே அவனுக்கு வாழும் தெய்வம்.
“அம்மா, நான் அக்காங்க ரெண்டு பேருக்கும் போன் பண்ணிச் சொல்லிட்டு வர்றேன்” என ராம் சொல்ல அவர் சிரித்தார்.
“சரி சரி, விஷயத்தைச் சொல்லாம இருந்தாதான் உனக்குத் தலையே வெடிச்சிருமே, சொல்லிட்டு வா” என்றவர் உள்ளே செல்ல, டெலிபோன் பூத்துக்குச் சென்றவன் அக்காள்கள் இருவருக்கும் தனக்கு உதவி இயக்குநராய் வேலை கிடைத்த விஷயத்தை போனில் சொல்ல அவர்களும் சந்தோஷித்தனர்.
“தம்பி, சினிமா உலகம் ரொம்பப் பொல்லாததுப்பா. பார்த்துச் சூதானமா இருந்துக்க. எடுத்ததுமே எல்லாரையும் நம்பிடாத. அப்புறம் தலைல மிளகா அரைச்சுட்டுப் போயிருவாக. கவனமா இருந்து பொழச்சுக்க” என அவன் அக்கா ராஜலட்சுமியும், சின்ன அக்கா தனலட்சியும் ஒரே போலச் சொல்ல,
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் கா… நல்லது, கெட்டது எல்லா இடத்துலயும் தான இருக்குது. நம்மதான் கவனமா இருக்கணும்” எனப் பதில் சொல்ல, “ஹூம், என் தம்பியா இப்படில்லாம் அறிவாப் பேசுறது? சரிய்யா, நல்லா இருந்தாச் சந்தோஷம் தான்… அம்மாவைக் கேட்டோம்னு சொல்லு…” எனக் கூறி வைத்தனர்.
அடுத்தநாள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் சென்றான் ராம். முதலில் சின்னச் சின்ன வேலைகளை மணிபாரதி அவனுக்குச் சொல்ல, எதையும் முகம் சுளிக்காமல் ஆர்வத்துடன் செய்தவனை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு வாரத்திலேயே அவரது ஆஸ்தான அஸிஸ்டன்டுகளில் ஒருவராய் மாறிப் போயிருந்தான் ராம்சரண். அடுத்து அவனிடம் சின்னச் சின்னப் பொறுப்புகளைக் கொடுக்கத் தொடங்க அதையும் சிறப்பாகச் செய்தான் ராம்.
எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்தாலும், அவன் மனம் மட்டும் ஒருத்தருக்காய் ரகசியமாய் ஏங்கிக் கொண்டிருந்தது.
அவன் வேலைக்குச் சேர்ந்து இரு வாரங்கள் ஆகியிருக்க, இன்னும் அந்தப் படத்தின் ஹீரோயின் நித்யஸ்ரீயைக் காணும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவே இல்லை. ஏதோ மலையாளப் பட ஷூட்டிங்கிற்குக் கேரளா சென்றிருப்பதாகக் கூறினர்.
அன்றாவது தன் கனவு தேவதையைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்குமா? என நினைத்தபடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவனுக்குக் காதில் விழுந்த செய்தியால் முகம் பளிச்சானது.
“ராம், அடுத்த ஷாட்டுக்கு வேண்டிய டயலாக் பேப்பர்ஸை எடுத்துக்க… இன்னும் கொஞ்ச நேரத்துல ஹீரோயின் நித்யஸ்ரீ வந்திடுவாங்க. அதுக்குள்ள மத்த கோ ஆர்டிஸ்ட்க்கு டயலாக் சொல்லிக் கொடுத்திடு. நித்யா வந்ததும் அவங்க சீனை சீக்கிரம் எடுக்கணும், வேற ஷூட்டுக்குப் போகனும்னு சொல்லிருக்காங்க பார்த்துக்க…” எனப் பரபரப்புடன் சொல்லிவிட்டுக் காமெரா மேனிடம் நகர்ந்தார் இயக்குநர் மணிபாரதி.
அவன் மனம் நித்யாவைக் காணப் போகும் ஆவலில் தவிக்க, டயலாக் பேப்பரை எடுத்துக் கொண்டு சக நடிகர்களிடம் சென்றான். அவர்கள் பேச வேண்டிய வசனைத்தைச் சொல்லிக் கொடுத்தான். யார், யார் எந்தப் பொசிஷனில் நிற்க வேண்டும் என டைரக்டர் சொன்னதைச் சொன்னான்.
அது ஒரு கலகலப்பான காட்சி. கல்லூரி மாணவிகள் ஒவ்வொருத்தியும் தனக்குக் கணவனாக வரப்போகிறவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை ஆசையுடன் சொல்வது போல் ஒரு காட்சி. அதில் நித்யாவும் தனது ஆசையைப் பற்றிச் சொல்வது போல் காட்சி இருந்தது. நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்க நித்யஸ்ரீயின் கார் வந்து நிற்க, நித்யா புன்னகையுடன் இறங்கி டைரக்டரை நோக்கி வந்தாள்.
“சாரி சார், லேட் பண்ணிட்டேனா?”
“இல்லமா, உன்னோட பிஸி ஷெட்யூல் பத்தி எனக்குத் தெரியாதா? சீக்கிரம் டச்சப் முடிச்சிட்டு காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடு. இங்க எல்லாம் ரெடியா இருக்கும்” எனவும் அவள் வேகமாய் அங்கிருந்த மறைவான அறையை நோக்கி நகர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அவள் தயாராகி வர, முன்னில் வந்து நின்ற இளைஞனைக் கண்டவளின் விழிகள் யோசனையில் விரிந்தது.
“வணக்கம் மேடம், நல்லாருக்கீங்களா? நான் ராம்சரண், தியேட்டர்ல பார்த்தமே, நினைவில்லையா?” எனக் கேட்கவும், கண்கள் விரிய பளிச்சென்று சிரித்தவள், “ஹாங், நல்லா நினைவிருக்கு. ஐஸ்கிரீம், சிப்ஸ், சமோசா? எப்படி மறக்க முடியும்?” எனச் சிரித்தாள்.
“நன்றி மேடம், நான் இப்ப சாருகிட்ட அஸிஸ்டன்ட் டைரக்டரா சேர்ந்திருக்கேன்.”
“ஓ! ரொம்ப சந்தோஷம்…” என்றவள் அவனுடன் பேசிக் கொண்டே ஸ்பாட்டுக்கு நடந்தாள்.
“நீங்க சாப்பிட்டீங்களா? ஃபேஸ் கொஞ்சம் டல்லாருக்கு?” அவன் கேட்கவும் தான் அவள் காலையிலிருந்து சாப்பிடவே இல்லை என்பது நினைவில் வர, “ப்ச்… ஷூட்டிங் சரியா இருக்கு, சாப்பிடவே இல்லங்க, டைம் கிடைக்கல” எனச் சலித்தபடி சொன்னவளை யோசனையுடன் பார்த்தவன்,
“ஒரு நிமிஷம் மேடம்…” என்றவன் சில நிமிடங்களில் கையில் பெரிய கண்ணாடி கிளாஸ் நிறைய பிரஷ் ஆரஞ்சு ஜூஸுடன் திரும்பி வந்தான்.
“இந்தாங்க மேடம், முதல்ல ஜூஸ் குடிங்க…” என நீட்டியவனிடம் வாங்கிக் கொண்டே அவனை நன்றியுடன் பார்த்தவள், “நீங்க மட்டும் தான் என்னைச் சாப்பிட்டியான்னு கேட்டிங்க? தேங்க்ஸ்” எனச் சொல்ல, அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.
“ராம், மேடம்க்கு சீன் டீடைல் சொல்லிடு” மணிபாரதி சொல்ல, அவன் சந்தோஷமாய் தலையாட்டினான்.
“இன்னைக்கு என்ன சீன்?” நித்யஸ்ரீ கேட்க விவரித்தான்.
“உங்க வருங்காலக் கணவன் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க மேடம்”
“சீன்ல கேக்கறிங்களா? என்னோட ஒப்பீனியன் கேக்கறிங்களா?” அவள் தலை சாய்த்துக் கேட்க காமிரா இன்றியே அவன் மனம் அந்த அழகியைப் படம் பிடித்துக் கொண்டது.
“உங்க ஒப்பீனியன் முதல்ல சொல்லுங்க மேடம்”
“ம்ம்ம். என் புருஷன் எப்படி இருக்கணும்னா, கேரிங்கா இருக்கணும். நான் சாப்பிட்டேனா? தூங்கினேனா? எனக்கு ஒரு விஷயம் கம்ஃபர்டபிளா இருக்கான்னு அக்கறையா என்னைக் கவனிச்சுப் பார்த்துக்கணும்” என்றாள் கண்களும், இதழும் சிரிக்க.
“ஓ! வரப் போறவன் பெரிய பணக்காரனா இருக்கணும். டாக்டர், எஞ்சினியரா இருக்கணும்… சொந்தமா கார், பங்களா வச்சிருக்கணும், இப்படில்லாம் உங்களுக்கு ஆசை இல்லையா?” என அவன் கேட்க,
“ப்ச் தெரியல, நான் அதெல்லாம் யோசிச்சதில்ல, எனக்கு இதுல எல்லாம் பெருசா விருப்பமும் இல்ல, பட் என்மேல அக்கறையா இருக்கணும்னு ஆசை இருக்கு…” என்றாள் குழந்தைத் தனமாய். அதைக் கேட்டவனுக்கு உள்ளத்தில் மத்தாப்புச் சிதறியது.
“சரி மேடம், நீங்க பேச வேண்டிய வசனத்தைச் சொல்லிடறேன்” என்றவன் அவளிடம் ஒரு பேப்பரைக் கொடுக்க, அவளும் அதைப் படித்துப் பார்த்துக் கொண்டாள். அன்றைய ஷூட்டிங் நல்லபடியாய் முடிந்தது. அன்று வெளியூரிலிருந்து வந்ததால் அவளது அன்னை ரோகிணி, நித்யாவுடன் வராமல் ரெஸ்ட் எடுக்க வீட்டுக்குச் சென்று விட்டார். அதனால், ராமுக்குப் பேச முடிந்தது. இல்லா விட்டால் கண் கொத்திப் பாம்பாய் பார்த்துக் கொண்டே இருப்பார். நாள்கள் அழகாய் நகர அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் நிறையக் கிடைத்தன. எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லாருடனும் இயல்பாய் பழகினாள் நித்யஸ்ரீ.
நித்யாவின் அண்ணன்கள் இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் நிச்சயமாகி இருந்தது. டைரக்டருக்கு வீட்டில் சென்று பத்திரிகை வைத்திருக்க, மற்றவர்களையும் அழைக்க நினைத்த நித்யா பொதுவாய் அனைவருக்கும் பத்திரிகை வைத்து திருமணத்திற்கு அழைத்தாள். மகன்களின் கல்யாண வேலைகளில் ரோகிணியும், கிருஷ்ணனும் பிஸியாகி விட லோக்கலில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு மகளை மட்டும் காரில் அனுப்பி வைத்தார்.
அன்றைய படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்க காமெரா மேன் பொசிஷன் சரி பார்த்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் அடுத்துப் பேச வேண்டியவர்களுக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
“நித்யா ரெடியாகியாச்சா?” இயக்குநர் மணிபாரதி ராம் சரணிடம் பரபரப்பாய் கேட்டார்.
“ரெடியாகிட்டாங்க சார்…”
“ஓகே! ஸ்பாட்டுக்கு வரச்சொல்லு…” எனவும் மேக்கப் பெண்மணி கலைச்செல்வியின் கலை நயத்தால், முன்னமே அழகாய் இருந்த நித்யஸ்ரீ இப்போது இன்னும் அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னிலிருந்த பெண்ணிடம் வலது கையை நீட்டிக் கொண்டிருக்க, இடது கையில் இட்டிருந்த மெகந்தியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை அந்தக் குரல் திரும்ப வைத்தது.
“மேடம்…” ராமின் அழைப்பில் நிமிர்ந்தவள் அழகாய்ச் சிரித்து, “சொல்லுங்க ராம்” என்றாள். எப்போதும் போல் அவளது கள்ளத் தனமில்லா அழகிய சிரிப்பில் உருகிய ராம்சரண், “ச..சார் ஷாட்டுக்கு ரெடியாகச் சொன்னார் மேடம்…” என்றான் வார்த்தை திணற.
“அதுக்கு எதுக்கு இப்படி டென்ஷனாப் பேசறீங்க? இதோ நான் ரெடி” என்றவள் மெகந்தி இட்ட கையைத் தூக்கிக் காட்டி, “அழகாருக்கா?” எனக் கேட்க, “நல்லாருக்கு மேடம்” என்றவன் ஏதோ சொல்லத் தயங்கி நிற்பது போல் அவளுக்குத் தோன்றியது.
“என்ன ராம்? ஏதாச்சும் சொல்லனுமா?”
“அது..வந்து… மேடம், பன்னாரி அம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். உங்க பேருல அர்ச்சனை பண்ணேன். பிரசாதம் தரலாமா?” தயங்கிக் கொண்டே கேட்டவனைக் கண்டு கண்களை உருட்டிக் குழந்தை போல் தலை சாய்த்துக் கன்னத்தில் குழி விழச் சிரித்தாள் வெள்ளித் திரையின் மின்னல் தாரகை நித்யாஸ்ரீ.
எத்தனையோ படங்கள் சதமடித்திருந்தாலும், நம்பர் ஒன் வரிசையில் இருந்தாலும் அவளிடம் கர்வம் துளியும் இல்லாமல் நேற்றுதான் இந்த ஃபீல்டுக்கு வந்தவள் போல, அன்று கண்ட அதே கள்ளம் கபடமில்லா மலர்ச்சியுடன் சிரித்தவளை வழக்கம் போல் கண்ணெடுக்காமல் பார்த்தான் உதவி இயக்குநரான ராம்சரண்.
“பிரசாதம் கொடுக்கதான் இவ்ளோ தயக்கமா? கொடுங்க…” என்றாள்.
பேண்ட் பாக்கெட்டில் இருந்த சின்னப் பொட்டலத்தை எடுத்து குங்குமத்தை எடுத்து நீட்ட, “அடடா, என் ரெண்டு கைலயும் மெகந்தி இருக்கே, நீங்களே சின்னதா வச்சு விடுங்க…” எனச் சொல்ல இனிதாய் அதிர்ந்தவன், பட்டென்று குங்குமத்தை எடுத்து அவளது சந்தன நிற அழகிய நெற்றியில் சின்னக் கீற்றாய் வைத்துவிட கண்ணைச் சிமிட்டிச் சிரித்தவள், “இப்ப ஹாப்பியா? ஓகேவா?” எனக் கேட்க, அவனது களையான மாநிற முகத்தில் சந்தோஷத்துடன் சின்ன நாணமும் எட்டிப் பார்க்க, அங்கிருந்து மலர்ச்சியுடன் சென்றான் ராம். கண் முன்னே நடந்த சம்பவத்தைத் திகைப்புடன் பார்த்தனர் கலைச் செல்வியும், மெஹந்திப் பெண்ணும்.
“மேடம், என்ன இது? எதுக்கு ஒரு உதவி இயக்குநர்க்கு இத்தனை சலுகை கொடுக்கறிங்க… உங்க ரேஞ்ச் என்ன? தராதரம் என்ன? பெரிய மேடம் பார்த்தா அவ்ளோ தான். அதுவும் குங்குமம் எல்லாம் வைக்கச் சொல்லலாமா?” எனக் கலைச்செல்வி படபடக்கச் சிரித்த நித்யா,
“அடடா, இதுல என்ன இருக்கு? அவங்களும் மனுஷங்க தானே. எனக்கு எத்தனையோ முறை நீங்க இல்லாதப்ப அவங்களப் போல ஆண் தான முகத்துல டச்சப் பண்ணி விடுறாங்க…” என்ற நித்யா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.
‘டச்சப் பண்ணறதும், உங்களை டச் பண்ணி நெத்தில குங்குமம் வைக்கிறதும் ஒண்ணா?’ என வாய்க்குள் முணுமுணுத்த கலைச்செல்வி பிறகு எதுவும் பேசவில்லை.
நித்யாவைக் கண்டதும் மலர்ந்த இயக்குநர் மணிபாரதி, “ஆஹா! வாம்மா, கல்யாணக் களை முகத்துல சொட்டுது. லட்சுமிகரமா இருக்க. நான் நெத்தில குங்குமம் வைக்கச் சொல்லனும்னு நினைச்சேன். ஆல்ரெடி வச்சிருக்கியே! நல்லாருக்கு… சரி, சீனுக்குப் போகலாமா?” எனவும், படப்பிடிப்புத் தொடங்கியது.
கல்யாண வீட்டில் அன்று மெஹந்தி போடுவது போல ஒரு பாடலுடன், துணை நடிகைகள் ஆடிய நடனத்தைப் பதிவு செய்யத் தொடங்கினர். அன்று நான்கைந்து காட்சி மட்டுமே.
அதே பாடலில் அடுத்த நாள் கல்யாணக் காட்சியும் படமாக்கப்பட இருந்ததால் வேண்டிய காட்சிகளை காமிராவில் சுருட்டிக் கொள்ள ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குக் கிளம்பினாள் நித்யஸ்ரீ.
ஒரு காதல் இடைவேளை…
– லதா பைஜூ