நதியின் ஜதி ஒன்றே! 7

கல்யாண் தங்கள் வீட்டிற்கு திடுமென வந்து நிற்க, கல்பனா அவனை வரவேற்று அமர வைத்தார்.

கணவன், மனைவி இருவரிடமும் பேச வேண்டும் என்று சொல்ல, கல்பனா போன் செய்து கணவரை வர சொன்னார்.

கல்யாண்க்கு குடிக்க கொடுத்தவர், பொதுவாக பேசி கொண்டிருக்க பலராம் வந்துவிட்டார்.

“சொல்லுங்க தம்பி” பலராம் கேட்க,

“இது பெரியவங்க வந்து தான் முறையா கேட்கணும். ஆனா எனக்கு உங்களோட பேச வேண்டியிருந்தது, அதான் நான் முதல்ல வந்துட்டேன்” என்று நொடி அமைதியாகி, நன்றாக நிமிர்ந்தமர்ந்தான்.

“நான் உங்க பெரிய பொண்ணு தாரணியை எனக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கேன்” என்றான் பட்டென.

பலராம் தம்பதிக்கு திகைப்பே. ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“நான் உங்ககிட்ட ஒரு உண்மையையும் சொல்லிடுறேன். நான் உங்க பொண்ணை மூணு வருஷமா காதலிக்கிறேன்”

பலராம் முகம் மாற ஆரம்பித்தது. கல்யாண் நிறுத்தவில்லை.

“உங்க பொண்ணு எனக்கு லவ் பண்ண வழியே விடலை. இப்போவரை எனக்கான பதில் அவகிட்ட நோ தான்” என்றான்.

பெற்றவர்களின் இருளடைந்த முகம் கொஞ்சம் தெளிந்தது.  காதல் எல்லோருக்கும் இனிப்பதில்லை, முக்கியமாக நிறைய பெற்றோர்களுக்கு. காதல் பற்றிய புரிதல் ஆரம்பம் தொட்டு தவறாகவே இருந்ததால் இருக்கலாம்!

“நீங்க என்மேல கோவப்படலாம். அது நியாயமும் கூட. ஆனா இது இன்டென்க்ஷனா வந்த காதல் கிடையாது. பார்த்தேன் பிடிச்சது. மனசு மாறும்ன்னு  நினைச்சேன். வாய்ப்பே இல்லைன்னு அடிச்சு சொல்லிடுச்சு. ஸ்டோர்ஸ் பார்த்திட்டிருந்தவன், அதை விட்டு தாரணிக்காக ME சேர்ந்தேன். தொடர்ந்து அவ வேலை பார்க்கிற கம்பெனியும். பலன் தான் இல்லை. அதான் நேரா உங்ககிட்ட பொண்ணு கேட்டு வந்துட்டேன்”

“சாரி தம்பி. எனக்கு பொண்ணு கொடுக்க விருப்பமில்லை” பலராம் சொல்லிவிட்டார்.

கல்யாண் இதை எதிர்பார்த்து வந்திருந்ததால்,  ஏமாற்றம் கொள்ளவில்லை. “நீங்க மறுக்க காதல்ன்னு நான் சொன்னதே போதும்ன்னு எனக்கு தெரியும் அங்கிள். அதை சொல்லாம மறைச்சு பொண்ணு கேட்டு கட்டிக்க எனக்கு விருப்பமில்லை” என்றான்.

பலராம் பேச வர, “ப்ளீஸ் அங்கிள் நான் முடிச்சிடுறேனே” பதட்டம் அவனிடம் சிறிதளவு வெளிப்பட்டது.

கல்பனா கணவனை அமைதியாக இருக்கும் படி கண்களால் வேண்டுகோள்  விடுத்தார்.

“தேங்க்ஸ் அத்தை” என்றான் உடனே கல்யாண் கவனித்து.

‘அத்தையா’ கல்பனா அதிர்ந்து கணவனை பார்க்க, அவரோ அனல் தெறிக்க  முறைத்து கொண்டிருந்தார்.

‘நல்லவனா தெரியுறானேன்னு பார்த்தா பர்ஸ்ட் பூஜை எனக்கு போட்டுருவான் போல’

“இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா, அப்பா வருவாங்க. அவங்க பேசட்டும். நீங்க உங்க பதிலை உடனே அவங்ககிட்ட சொல்லாம கொஞ்ச நாள் கழிச்சு சொல்லுங்க ப்ளீஸ்” என்றான்.

“அவங்ககிட்ட கொஞ்ச நாள் கழிச்சு நோ சொல்லிக்கிறேன். உங்ககிட்ட இப்போ சொன்ன நோ.. நோ தான்” என்றார் பலராம்.

‘அங்கிள் ரொம்ப கறாரா இருக்கார்’ கல்யாண் அம்மாவை நினைத்து கொண்டான். அவர் அங்கு என்ன குட்டிக்கரணம் அடித்து  கொண்டிருக்கிராறோ?

கல்யாண் அப்பா சேனாதிபதியும் பலராம் போலத்தான்.  மகன் காதல் என்றதும் மறுத்துவிட்டார். “என் தங்கச்சி பொண்ணு தான் உனக்குன்னு முதல்லே சொல்லிட்டேன் இல்லை. இப்போ என்ன திடீர்ன்னு காதல்ன்னு வந்து நிக்கிற தம்பி. இதெல்லாம் சரியில்லை. பார்த்துக்கோ” என்றார்.

“திடீர்னு காதல் எல்லாம் இல்லைப்பா. மூணு வருஷமா காதல் தான்” என்றான் மகன்.

“என்ன தம்பி பேச்செல்லாம் அதிகமா இருக்கு. ஏதோ பசங்க என்னை போல இல்லாமல் நல்லா படிச்சு, கௌரவமான தொழில்ல இருக்காங்கன்னு பெருமைப்பட்டா,  நீங்க எல்லாம் சேர்ந்து எனக்கே மொட்டை அடிக்க பார்க்கிறீங்க இல்லை”

“ப்பா. ப்ளீஸ். பொண்ணை முதல்ல பாருங்க. அவ குடும்பத்தை விசாரிங்க. குறை இருந்தா சொல்லுங்க. நிறுத்திக்கலாம். ஆனா உங்க தங்கச்சி பொண்ணு, காதல்ன்னு எல்லாம் காரணம் சொல்லாதீங்க ப்ளீஸ்ப்பா”

“இதென்ன தம்பி அநியாயமா இருக்கு. எனக்கு எது காரணமோ அதை தானே  நான் சொல்ல முடியும்? நீ என்ன கண்ணு உன் மகனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிற?” என்று மனைவி காமாட்சியிடம் கேட்டார்.

“காதல்ன்னு நம்ம பிள்ளை நம்மகிட்ட தானே வந்து நிக்கிறான். நீங்க அதை நினைச்சு பெருமைப்படாம ஏதேதோ உதவாத காரணம் சொல்லிட்டிருக்கீங்க” என்றார் அவரின் கண்ணு.

“இதை நினைச்சு நான் பெருமை வேற பட்டுக்கணுமா? சரிதான். வெளியே பண்ற அலப்பறையை வீட்லயும் நான் பண்ணியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன். சரி விடு இப்போவும் ஒன்னு கெட்டுபோகலை. ஆரம்பிச்சிடுறேன்” என்றார் கட்ட பஞ்சாயத்துக்காரர்.

“கல்யாண்மா நீ மருமக வீட்டுக்கு கிளம்பு. நாங்க பின்னாடியே வந்துடுறோம்” என்றார் காமாட்சி மகனிடம்.

கல்யாண் அம்மா சொன்னதும் கிளம்பிவிட்டான். “கண்ணு சரியில்லை. என் கோவத்தை காட்ட வைச்சிடாத” என்றார் கணவர் கோவமாக.

“கண்ணு கண்ணுன்னு நீங்க என்னை கசாப் போட்டதை மறந்துட்டீங்களா?” காமாட்சி இடையில் கை வைத்து கேட்டார்.

“இப்போ எதுக்கு நம்மளை பத்தி பேசுற. உன் மகன் காதலுக்கு வா”

“முதல்ல நாம தான். நமக்கு அடுத்து தானே மகன் வந்தான். அதனால நம்ம பஞ்சாயத்தை முடிச்சுக்கலாம்”

“நமக்கென்ன பஞ்சாயத்து கண்ணு. நீ உன் மகன் விஷயத்தை மறைக்க என்னை இழுக்கிற”

“நீங்க தான் என்னை இழுத்தீங்க மறந்துடாதீங்க. நான் பேசாம நல்ல பிள்ளையா என் அப்பா சொன்ன மாப்பிள்ளையை கட்டிக்க போனேன். நீங்க தான் மூஞ்சை பாவமா வைச்சுக்கிட்டு என்கிட்ட வந்து,  ‘நீ தான் கண்ணு உன் மாமனுக்கு வாழ்க்கை கொடுக்கணும். உன்னை தவிர எனக்கு வேற யாரும் இல்லை. நீயும் என்னை கை விட்டுடாதன்னு’ ஏதேதோ பேசி என்னை ஏமாத்தி உங்களை கல்யாணம் பண்ண வைச்சுக்கிட்டிங்க”

“இப்போ அதுல உனக்கு என்ன குறைஞ்சு போச்சாம்?”

“என் மகன் காதலுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறீங்களே?”

“எதுக்கு எதை பேசுற நீ?”

“பேச்சுன்னு வந்தா எல்லாம் பேச்சு தான். உங்களுக்கு என்னை பிடிக்கும். பேசி மயக்கி என்னை கட்டிக்கிட்டீங்க. இதே என் மகன் பண்ணா தப்பா?”

“கண்ணு”

“இங்க பாருங்க, என் மகன் நம்மளை நம்பி சம்மந்தி வீட்டுக்கு போயிட்டான்”

“நீ பிளான் பண்ணி போக வைச்சன்னு சொல்லு”

“இப்போ நாம நல்ல பேரண்ட்ஸா போய் நம்ம மகன் மானத்தை காப்பாத்தணும்”

“ஓஹோ”

“அறிமுகம் மட்டும் பண்ணிட்டு வந்திடலாம் மாமா. மத்ததை அப்பறம்  நமக்குள்ள பேசி முடிவு பண்ணிக்கலாம்” காமாட்சி கணவன் கை பிடித்து கேட்டார்.

“அங்க போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் நமக்குள்ள பேச என்ன இருக்கு கண்ணு? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?”

“மாமா”

“மாமான்னு கூப்பிட்டு கொக்கி வைக்க பார்க்காத”

“மாமா. பொண்ணை நான் பார்த்திருக்கேன். நம்ம மகனுக்கு நல்ல பொருத்தம். குடும்பமும் ரொம்ப  நல்ல மாதிரி” என்று முழு தகவலும் சொன்னார்.

சேனாதிபதி  மனைவியை தீர்க்கமாக பார்த்தார். “சாரிங்க மாமா. உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை. சொன்னா இப்போ குதிக்கிற மாதிரி குதிப்பீங்கன்னு தான்” என, அவர் வாயே திறக்கவில்லை.

“மாமா.. மாமா ப்ளீஸ். இந்த ஒரு முறை எனக்காக வாங்க. ப்ளீஸ் ப்ளீஸ்” என்று தாஜா செய்ய,

“அங்க வந்தாலும் முடிவு என்னோடது தான். ஞாபகம் வைச்சுக்கோ” என்ற நிபந்தனையுடன் சேனாதிபதி  முகத்தை தூக்கி வைத்து கொண்டு கிளம்பினார்.

பலராம் வீட்டில் இவர்களை நல்ல முறையிலே வரவேற்று அமர வைத்தனர். ஜீவிதா கல்லூரியில் இருந்து வந்துவிட்டிருந்தாள்.

கல்பனா மகளிடம் குடிக்க கொடுத்தனுப்பினார். “ஹாய் அங்கிள். ஹாய் அத்தை” என்று சொல்லி காபி கொடுத்தாள்.

“அவர் உனக்கு மாமா ஜீவிதா” என்ற காமாட்சியை கணவர் முறைத்து வைத்தார்.

“சின்ன பொண்ணுங்க” மனைவி முணுமுணுத்தவர், காபியை கடமையாக குடித்தார். சேனாதிபதி ஒரு சிப்புடன் வைத்துவிட்டார்.

ஜீவிதா கையில் இருந்த மொபைல் ஆனில் இருந்தது. அஜய், தாரணி இருவரும் லைனில் இருந்தனர்.

கல்யாண் அம்மாவை பார்த்து  உதடு பிதுக்கினான். பலராம் நீங்களே பேசுங்க என்பது போல் அமர்ந்திருந்தார்.

காமாட்சி கணவனை பார்த்து ஆகாது என்றுணர்ந்து கொண்டவர், தானே ஆரம்பித்தார். “கல்யாண்க்கு உங்க பெரிய பொண்ணு தாரணியை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்” என்றார்.

சேனாதிபதி மனைவியை பார்க்க, அவர் அவரை பார்க்க வேண்டுமே? நான் ஒத்துக்கிட்டா தானே? பேசுங்க பேசுங்க..

“இல்லைங்க. நாங்க வேற இடத்துல பொண்ணு கொடுக்க நினைச்சிருக்கோம்” என்றார் பலராம்.

சேனாதிபதி அசால்ட்டாக அமர்ந்திருந்தவர், இப்போது பலராமை பார்த்தார்.

பலராமும் அவரை கவனித்தார். சேனாதிபதியை பார்த்த பின் இந்த பேச்சை இங்கேயே முடிக்க நினைத்தார். அவருடன்  அவருக்கு முன் அனுபவம் இருந்ததே.

“நீங்க பொறுமையா யோசிச்சு, எங்களை பத்தி விசாரிச்சுட்டு அப்புறம் சொல்லுங்க”

“விசாரிக்க எல்லாம் ஒன்னுமில்லைங்க. எனக்கு உங்களை தெரியும். என் பொண்ணை சொந்தத்துக்குள்ள கொடுக்க நினைக்கிறேன்” என்றார் பலராம்.

தாரணிக்கு என்னமோ கண்கள் கலங்கி போனது, சில நாள் மாற்றமே மனதுக்குள். ஆழமும் இல்லை. ஆனாலும் வலித்தது.