ஒரு காதல் இடைவேளை

அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்க காமெரா மேன் பொசிஷன் சரி பார்த்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் அடுத்துப் பேச வேண்டியவர்களுக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

“நித்யா எங்க ரெடியாயாச்சா?” இயக்குநர் மணிபாரதி உதவி இயக்குனரிடம் பரபரப்பாய் கேட்டார்.

“ரெடியாகிட்டாங்க சார்…”

“ஓகே! வரச்சொல்லு…” எனவும் தனது காரவனில் மேக்கப் பெண்மணி கலைச்செல்வியும் கலை நயத்தால் முன்னமே அழகாய் இருந்த நித்யஸ்ரீ இப்போது மேக்கப்பில் இன்னும் அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னிலிருந்த பெண்ணிடம் வலது கையைக் கொடுத்திருக்க இடது கையிலில் இட்டிருந்த மெகந்தியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை அந்தக் குரல் திரும்ப வைத்தது.

“மேடம்…” உதவி இயக்குநரின் அழைப்பில் நிமிர்ந்தவள் குழந்தைபோல் தெத்துப்பல் தெரிய அழகாய்ச் சிரித்து, “சொல்லுங்க ராம்” என்றாள். எப்போதும் போல் அவளது கள்ளத்தனமில்லா அழகிய சிரிப்பில் உருகிய ராம்சரண், “ச..சார் ஷாட்டுக்கு ரெடியாகச் சொன்னார் மேடம்…” என்றான் வார்த்தை திணற.

“அதுக்கு எதுக்கு இப்படி டென்ஷனாப் பேசறீங்க? இதோ நான் ரெடி” என்றவள் மெகந்தி இட்ட கையைத் தூக்கிக் காட்டி, “அழகாருக்கா?” எனக் கேட்க, “நல்லாருக்கு மேடம்” என்றவன் ஏதோ சொல்லத் தயங்கி நிற்பது போல் அவளுக்குத் தோன்றியது.

“என்ன ராம்? ஏதாச்சும் சொல்லனுமா?”

“அதுவந்து மேடம், இன்னிக்கு வடபழனி கோவிலுக்குப் போயிருந்தேன். உங்க பேருலயும் அர்ச்சனை பண்ணேன். பிரசாதம் தரலாமா?” தயங்கிக் கொண்டே கேட்டவனைக் கண்டு கண்களை உருட்டி குழந்தை போல் தலை சாய்த்துக் கன்னத்தில் குழி விழச் சிரித்தாள் வெள்ளித் திரையின் மின்னல் தாரகை நித்யாஸ்ரீ.

அவள் நடிக்க வந்த பத்து வருடங்களில் 50 க்கு மேற்பட்ட படங்களில் நடித்து 40 படங்கள் சதமடித்திருந்தாலும், நம்பர் ஒன் வரிசையில் இருந்தாலும் அவளிடம் கர்வம் துளியும் இல்லாமல் நேற்றுதான் இந்த ஃபீல்டுக்கு வந்தவள் போல அன்று கண்ட அதே கள்ளம் கபடமில்லா மலர்ச்சியுடன் சிரித்தவளை வழக்கம் போல் கண்ணெடுக்காமல் பார்த்தான் உதவி இயக்குநரான ராம்சரண்.

“பிரசாதம் கொடுக்கதான் இவ்ளோ தயக்கமா? கொடுங்க..” என்றாள்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்த சின்னப் பொட்டலத்தை எடுத்து குங்குமத்தை எடுத்து நீட்ட, “அடடா, என் ரெண்டு கைலயும் மெகந்தி இருக்கே, நீங்களே சின்னதா வச்சு விடுங்க…” எனச் சொல்ல இனிதாய் அதிர்ந்தவன், பட்டென்று குங்குமத்தை எடுத்து அவளது சந்தன நிற அழகிய நெற்றியில் சின்னக் கீற்றாய் வைத்துவிட கண்ணைச் சிமிட்டி சிரித்தவள், “இப்ப ஹாப்பியா? ஓகேவா?” எனக் கேட்க அவனது களையான மாநிற முகத்தில் சந்தோஷத்துடன் சின்ன நாணமும் எட்டிப் பார்க்க அங்கிருந்து மலர்ச்சியுடன் சென்றான் ராம். கண் முன்னே நடந்த இந்தச் சம்பவத்தை திகைப்புடன் பார்த்தனர், மேக்கப் வுமன் கலைச்செல்வியும், மெஹந்திப் பெண்ணும்.

“மேடம், என்ன இது? எதுக்கு ஒரு உதவி இயக்குநர்க்கு இத்தனை சலுகை கொடுக்கறிங்க… உங்க ரேஞ்ச் என்ன? தராதரம் என்ன? பெரிய மேடம் பார்த்தா அவ்ளோ தான். அதுவும் குங்குமம் எல்லாம் வைக்கச் சொல்லலாமா?” எனக் கலைச்செல்வி படபடக்க சிரித்த நித்யா, “அடடா, இதுல என்ன இருக்கு? அவங்களும் மனுஷங்க தானே. எனக்கு எத்தனையோ முறை நீங்க இல்லாதப்ப அவங்களைப் போல ஆண் தான முகத்துல டச்சப் பண்ணி விடுறாங்க…” என்ற நித்யா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.

‘டச்சப் பண்ணறதும், உங்களை டச் பண்ணி நெத்தில குங்குமம் வைக்கிறதும் ஒண்ணா?’ என வாய்க்குள் முணுமுணுத்த கலைச்செல்வி பிறகு எதுவும் பேசவில்லை.

நித்யாவைக் கண்டதும் மலர்ந்த இயகுநர் மணிபாரதி, “ஆஹா! வாம்மா, கல்யாணக் களை முகத்துல சொட்டுது. லட்சுமிகரமா இருக்க. நான் நெத்தில குங்குமம் வைக்கச் சொல்லனும்னு நினைச்சேன். ஆல்ரெடி வச்சிருக்கியே! நல்லாருக்கு… சரி, சீனுக்குப் போகலாமா?” எனவும், படப்பிடிப்புத் தொடங்கியது.

கல்யாண வீட்டில் அன்று மெஹந்தி போடுவது போல ஒரு பாடலுடன், துணை நடிகைகள் ஆடிய நடனத்தைப் பதிவு செய்யத் தொடங்கினர். அன்று நான்கைந்து காட்சி மட்டுமே. அதே பாடலில் அடுத்த நாள் கல்யாணக் காட்சியும் படமாக்கப்பட இருந்ததால் வேண்டிய காட்சிகளை காமிராவில் சுருட்டிக் கொள்ள ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குக் கிளம்பினாள் நித்யஸ்ரீ.

– லதா பைஜூ