இப்போதே மணி காலை எட்டரை ஆகிவிட்டது. ரகுராம் நேரம் பார்த்து பதட்டம் கொண்டான். இன்னும் அரை மணி நேரம் போக வேண்டும். டிராபிக் வேறு. வண்டிகள் நகர்வேனா என்றது.
ஹெல்மெட்டை சரியாக இழுத்துவிட்டவன், கிடைத்த கேப்பில் எல்லாம் நுழைய ஆரம்பித்தான். எந்த சந்தில் யார் வருவார் என்று தெரியாமல், பாதுகாப்பான வேகத்திலே சென்றவன், சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தடைந்தான்.
பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தியவன், “ஹாய் ராம்” என்ற குரலில் திரும்பி பார்க்க, அவனின் நண்பன் மனோகர்.
“ஹாய்டா” என்றவன், அவனுடன் லிப்டில் ஏறினான். HR துறை பக்கம் சென்றவர்கள், அவரவர் வேலையை ஆரம்பித்தனர். MBA முடித்த உடன் வந்து சேர்ந்த கம்பெனி இது. இதோ நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. மாறவில்லை. மாற காரணமும் இல்லை.
சரியான நேரத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைப்பதுடன், அலுவலக சூழ்நிலையும் நன்றாகவே இருக்கும். உடன் இவனின் கடனும் ஒரு முக்கிய காரணம்.
மனோகர்.. அவனால் தான் அன்று அக்காவின் திருமணம் நடந்தது. அவனுக்கு பட்ட கடனை அடைக்க இன்னும் ஓடி கொண்டிருக்கிறான்.
அருணகிரி மூன்று வருடங்களுக்கு முன்பு, “லோன் கிடைக்கலன்னா பரவாயில்லை தம்பி. நாம தறியை அடமானம் போட்டுக்கலாம்” என்று சொல்ல, இவனுக்கு அதில் இஷ்டமில்லை.
அவர்கள் சொல்லும் வட்டியில் அடமானம் போட்டால், தறி மொத்தமும் காலியாகிடும் என்று கணக்கு போட்டான் கணக்காளன்.
இதில் மாதாமாதம் அந்த வட்டியை முதல் மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். தவறினால் அது வேறு பிரச்சனை. வீட்டிற்கே ஆள் வரும். வேணவே வேணாம் என்று தான் மனோகரின் ஆலோசனையை ஏற்று கொண்டான்.
பிரேக் நேரம் ரகுராம் போன் ஒலிக்க, அருணகிரி தான். “சொல்லுங்கப்பா” என்று எடுக்க,
“தம்பி இன்னைக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன். பட்டுத்தறி இப்போது கொஞ்சம் லாபம் பார்க்க ஆரம்பித்தது.
“நல்லதுப்பா.. பணம் இருக்கா?” என்று கேட்க, அருணகிரி நொடி பொறுத்து, “இருக்கு தம்பி சமாளிச்சுக்கலாம்” என்றார்.
“ப்பா.. நான் அனுப்புறேன். நீங்க அதை வைச்சு ஆர்டர் முடிச்சு கொடுங்க” என்றவன், “அக்கா கிளம்பிட்டாளா” என்று கேட்டான்.
அனுஷாவிற்கு இரண்டு வயதில் மகன் இருக்க, முதல் குழந்தை என்பதால் எல்லோருக்கும் அவன் செல்லம். “இதோ உன் அம்மா பேசுறளாம்பா” என்று போன் கொடுத்தார்.’
பத்மா மகனின் நலம் விசாரித்தவர், “நைட் நேரம் கிடைக்கும் போது கூப்பிடு தம்பி. முக்கியமான விஷயம் பேசணும்” என்றார்.
ரகுராம்க்கு இப்போது எல்லாம் பழகிவிட்டதால் என்ன ஏதென்று கேட்காமல், “சரிம்மா” என்று வைத்துவிட்டான்.
எதுவாக இருந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என்ற திடம் அவனுக்கு அதிகமாகவே ஊறிவிட்டது. மாலை நேரம் வேலை முடியவும் கிளம்ப, “எதுக்குடா இந்த ஓட்டம். வா காபி குடிச்சிட்டு போலாம்” என்று மனோகர் அழைத்தான்.
“இல்லை மனோ. இன்னைக்கு வேளச்சேரி ஷாப். நேரம் ஆகிடும்” என்று பைக் எடுத்துவிட்டான்.
புதிதாக திறந்திருந்த காபி ஷாப். அங்கு மேற்கத்திய உணவு வகைகளும் கிடைக்கும். மெலிதான இருளை பரப்ப கூடிய அலங்காரம். ஆட்கள் அங்கு குவிய வேண்டும் என்றில்லை.
நாளுக்கு நான்கைந்து பேர் வந்தாலே போதும். கல்லா கட்டிவிடுவர். ஒரு காபியே சில பல நூறு. மற்றது எல்லாம் ஆயிரத்தையே தொடும்.
“எங்க டார்கெட் சாதாரண மக்கள் இல்லை ரகுராம். இவங்க தான்” என்று பணம் படைத்தவர்களை காட்டினார் மேனேஜர். அவர்களுக்கு இது ஒரு பணமாக தெரியவில்லை. சில பல ஆயிரங்களை சாதாரணமாக கட்டிவிட்டு சென்றனர்.
மூன்று வருடங்களுக்கு முன் இவன் பகுதி நேர வேலைக்காக சேர்ந்த போது நான்கு ஷாப் தான் இருந்தது. இப்போது எட்டாகிவிட்டது.
இவன் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் செகரட்டரி தான் இந்த மொத்த கடைக்கும் மேனேஜர். அவர் மூலம் தான் இந்த வேலை கிடைத்தது. தினமும் ஒவ்வொரு கடைக்கு சென்று, அக்கவுண்ட்ஸ், ஸ்டாக், பில் எல்லாம் பார்த்து டேட்டா பதிவு செய்து வைக்க வேண்டும்.
“இதுக்குன்னு நாம தனி தனியா ஆள் எடுத்தா முப்பதாயிரம் வரைக்கும் கொடுக்கணும் சார். இவருக்கு நாம பதினைஞ்சுக்குள்ள கொடுத்தா போதும்” என்று முதலாளியிடம் பேசி வாங்கி கொடுத்திருந்தார்.
அப்போதைய சூழ்நிலையில் ரகுராம்க்கு இந்த பணம் தான் பெரிதும் உதவியது. ஏன் இப்போதும் தான்!
மூன்று வருடம் ஆகிவிட்டதுடன், கடை எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதால், இப்போது தான் முப்பாதாயிரத்தை தொட போகிறான்.
ரகுராம் கடைக்குள் நுழைய, ஒரு டேபிள் அங்கு நிறைந்திருந்தது. அது தவிர மற்ற டேபிளிலும் ஓரிரு ஆட்கள் இருந்தனர். ரகுராம் முதலில் ஸ்டாக் பார்க்க சென்றுவிட்டான். அது முடித்து அக்கவுண்ட்ஸ் பார்க்க அமர்ந்தான்.
சில நொடி தான். தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க, நிமிர்ந்து கண்ணாடி தடுப்பின் அந்த புறம் பார்த்தான். அப்படி யார் முகமும் தன்னை பார்த்து இல்லை என்பதால் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
நிமிடம் சென்று திரும்ப அதே உணர்வு. என்னடா இது புதுசா? என்று பார்க்க, அப்போதும் யாரும் இல்லை.
“என்ன ராம்?” என்று வந்தார் மேனேஜர் பரமசிவம்.
அவரும் தினமும் ஒவ்வொரு பிராஞ்சிற்கும் விசிட்டிங் வருவது வழக்கம் என்பதால், அவரை பார்த்து மெலிதாக சிரித்தவன், “நீங்க தான் சொல்லணும் சார்” என்றான்.
“காபி குடிக்கலையா இன்னும்?” அவர் கேட்டு உள்ளே ஆர்டர் கொடுக்க,
“சார்..ப்ளீஸ். எனக்கு நார்மல் காபி தான் வேணும்” என்றான் இவன் வேகமாக.
“பயப்படாதய்யா பில் எல்லாம் போட்டுட மாட்டேன்” என்று அவர் சிரிப்புடன் சொல்ல,
“படவா எங்க கடையையவே கிண்டல் பண்றியா?” என்று அவன் தோளில் அடிக்க,
ரகுராம் நன்றாக சிரித்தவன், “வாய்ல அடிங்க சார். இது நம்ம கடை” என்றான்.
மேனேஜரும் சிரித்துவிட்டவர், இவர்களுக்காக வந்த இன்ஸ்டன்ட் காபியையும், பிரென்ச் ப்ரையும் அவனுடன் உண்டார். “என்னை சொல்லிட்டு இங்க மட்டும் என்னவாம்” என்றான் ரகுராம் கேலியாக.
“நமக்கு எல்லாம் இன்ஸ்டன்ட் காபி தான் சரிப்படும் ராம்” என்றவர், “ஸ்டாக் என்ன இருக்கு?” என்று கேட்டு கொண்டார். தொடர்ந்து வேலை பற்றிய பேச்சுக்கள் ஓட, ரகுராம்க்கு அந்த உணர்வு குறையவே இல்லை.
“யாரோ கண்டிப்பா என்னை பார்க்கிறாங்க”
“ஓகே ராம். நீ அக்கவுண்ட்ஸ் முடிச்சுட்டு கிளம்பு. நான் டிநகர் போகணும்” என்று கிளம்பிவிட்டார்.
ரகுராம் அதன்பிறகு முழு கவனத்துடன் அக்கவுண்ட்ஸ் பார்த்தான். அந்த உணர்வு அவனை தொல்லை செய்த போதும், வேலைக்கான அவன் அர்ப்பணிப்பை கொடுத்தான்.
கழுத்து வலி கொடுக்க, நிமிர்ந்து சொடக்கெடுத்தவன் கண்களில் யாரோ டக்கென தலை திருப்புவது பட்டது. அந்த நிரம்பி வழிந்த டேபிளில் தான். ஆண், பெண் என பத்து பேர் இருந்தார்கள்.
சில நொடி அங்கேயே பார்த்தவனுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை. “ம்ஹூம் இது பார்த்தா நமக்கு வேலை முடிய லேட் ஆகிடும்” என்று தன்னை தானே வேலையில் திருப்பி கொண்டான்.
ஒரு வழியாக பத்து மணிக்கு வேலை முடிய சிஸ்டமை ஷட் டவுன் செய்தான். விரல்களை சொடக்கெடுத்து, அவன் பேக்கை எடுத்து எழுந்து கொண்டான். “கிளம்பிட்டீங்களா ராம்” என்று சூப்பர்வைசர் வந்தார்.
“ஆமா சார்” என்றவன், “அந்த பில் இன்னும் கைக்கு வரல சார்” என்று கேட்டான்.
“நான் செக் பண்றேன் ராம். அடுத்த முறை நீங்க இந்த ஷாப் வரும் போது இருக்கும்” என,
“மன்த்லி ரிப்போர்ட் கொடுக்கணும் சார். பார்த்துக்கோங்க” என்றவன் கிளம்ப, அப்போது தான் அந்த நிரம்பிய டேபிள் ஆட்களும் கிளம்புவது கண்ணில் பட்டது.
‘இப்போ தான் கிளம்புறாங்களா? ம்ஹ்ம். இங்க இது சகஜம் தானே?’ அவர்கள் செல்ல, ரகுராம் அவர்கள் பின்னால் வந்தவன், ஏதோ முதுகை உறுத்த நடையின் வேகத்தை குறைத்தவன் பட்டென நின்று திரும்பி பார்த்தான்.
அவன் திடீரென நின்றதில் இவனின் முதுகில் மோதுவது போல் வந்து ஒரு பெண் அதிர்ந்து, ஓரடி தள்ளி நின்றாள்.
ஜனக்நந்தினிக்கு அவன் திடீரென நின்றதில் திகைத்து, கண்கள் விரிந்து போனது. இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் கவ்வி கொண்டது. நிச்சயத்தன்று பார்த்தது. மூன்று வருடங்கள் கழித்து திரும்ப இன்று தான் பார்க்கின்றனர்.
ஆராய்ச்சி, ஆச்சரியம் மட்டுமே!
ஆர்வம், பரபரப்பு இல்லை!
பெண்ணிடம் அதிகளவு மாற்றம் இல்லை. முகம் குழந்தை தனத்தில் இருந்து கொஞ்சம் முதிர்ச்சி கண்டிருந்தது.
ஆண் மகனிடம் தான் அதிகளவு மாற்றம். மீசையில் இருந்து ஹைட், வெய்ட், நிறம் எல்லாம் கூடி இருபத்தாறு வயது ஆணாக நின்றான்.
“மேடம்.. உங்க பில் ரிசிப்ட்..” என்று வெய்ட்டர் வந்து இவள் கையில் கொடுத்தார்.
அவள் தலையசைத்து வாங்கி கொள்ள, “ஜானு.. நந்தினி.. நந்து..” என்று நண்பர்கள் குரல் கொடுத்தனர். ரகுராம் அவளை பார்த்து கொண்டே போக வழிவிட்டான். இருவரின் வாசமும் மற்றவர் உணர, கடந்து சென்றாள் பெண்.
அதே பளபளப்பு, அதை விட அழகு!
ஆனால் ஒரே மாற்றம்? இன்று இவன் கண்ணில் அவள் அழகு படவில்லை.
மாறாக அவளின் பளபளப்பு. பணத்தின் செழுமை தான் பட்டது. ராயல் லுக்!
நிமிடம் நின்று வெளியே வந்தவன் கண்களில் அவள் நண்பர்களிடம் விடைபெறுவது தென்பட்டது. அவர்களை கடந்து, பைக் இருக்கும் இடம் செல்ல,
“ஆஸம் ட்ரீட் ஜானு. தேங்க்ஸ் பேபி. வீக்கெண்ட் கண்டிப்பா மீட் பண்ணனும். யாரு நம்ம ஜானுவா? ஹேய் வருவா. நீ சொல்லு ஜானு.. ஜான் வந்தா தான் நான் வருவேன்..” என்ற ஆண் குரலும், அதை தொடர்ந்து “அதான் தெரியுமேமேமே..” என்று ராகமும் இழுக்கபட்டது. “எஸ் நோ மோர் எக்ஸ்கியூஸஸ். பிளேஸ் டெக்ஸ்ட் பண்ணிக்கலாம். பை.. பை.. ” போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தது.
ரகுராம் பைக்கில் அமர்ந்தவன், பேக்கை இருபக்கமும் மாட்டி கொண்டு, ஹெல்மெட் அணிந்தான். அவள் தனியாக காரில் ஏறுவது தெரிந்தது.
ரகுராம் பைக்கை ஸ்டார்ட் செய்தவன், “இவ வீடு எங்க இருக்குன்னு தெரியலையே?” என்று நினைத்தபடி அவள் காரை கடந்து சென்றான்.
யூ டர்ன் எடுத்து திரும்பியவன், காபி ஷாப் பக்கம் பார்க்க, அவள் கார் மட்டும் இன்னும் கிளம்பியிருக்கவில்லை.
என்னாச்சு? ரகுராம் பைக் வேகத்தை குறைத்தான். நண்பர்கள் எல்லாம் கிளம்பிவிட்டிருக்க, ஓபன் பார்க்கிங்கில் இவள் கார் மட்டும் தனியே இருக்க, இவனால் அப்படியே கடந்து செல்ல முடியவில்லை.
திரும்ப பைக்கை திருப்பி கொண்டு காபி ஷாப் சென்றவன், பைக்கை நிறுத்திவிட்டு, அவள் கார் கண்ணாடியை தட்டினான்.
ஒன்று.. இரண்டு.. மூன்று. அதன் பின்னே கண்ணாடி மெல்ல இறங்கியது. ஜனக்நந்தினி இவனை புருவம் உயர்த்தி கேள்வியாக பார்த்தாள்.
“என்னாச்சு? கிளம்பலையா?” என்றான்.
அன்று காதோரம் ஒலித்த குரலுக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்?
“ஏதாவது ப்ராப்ளமா?” இவள் முகத்திற்கு அருகே குனிந்து கேட்டான்.
இல்லை என்பதாய் பெண் தலையாட்ட, “அப்பறமென்ன கிளம்ப வேண்டியது தானே?” என்றான்.
“சரிங்க ண்ணா.. நான் வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடுறேன்” என்றாள் பெண்.
‘இவ என்னை கட்டிக்கட்டும், கட்டிக்காமா போகட்டும், அதுக்காக முறை எல்லாம் மாத்துவாளா?’
பெண் அவன் சிவந்த முகத்தை பார்த்து கொண்டே, நிதானமாக காரில் இருந்த புளூடூத் பக்கம் விரல் நீட்ட, “ரகுராம்.. நான் ப்ரவீன்” என்ற குரல் கார் முழுதும் ஒலித்தது.
ரகுராம் மூச்சை இழுத்துவிட்டபடி, இடையில் கை வைத்து சாலையை பார்த்தான்.
“ரகுராம்” ப்ரவீன் திரும்ப அழைக்க,
“சொல்லுங்க” என்றான் இவள் பக்கம் வளைந்தபடி.
“எப்படி இருக்கீங்க?” என்று ப்ரவீன் கேட்க, ரகுராமிடம் ஒரு கசந்த புன்னகை.
என் நம்பர் இவரிடம் இல்லாமல் இருக்குமா? இதுவரை பேசவில்லை. இப்போது வேறு வழி இல்லாமல் நலம் விசாரிக்கிறார்.