அத்தியாயம் 76

ரதி உள்ளே வந்து அவனிடம் பேச, அம்மா…துளசி வந்தாளா? என்று கேட்டான்.

அவ வந்தா என்ன? வராட்டி என்ன? உனக்கு மருந்து போடும் போது வலி இருந்ததா? என்று அவர் பேச்சை மாற்ற, அவனுக்கு உறுதியானது. அவளை யாரோ ஏதோ சொல்லி இருக்காங்க என்று.

சரிம்மா. போனை கொடுங்க என்றான்.

உனக்கு இப்ப எதுக்கு போன்? முதல்ல ஓய்வெடு. உன் கையில பட்ட கத்தியில விசம் தடவி இருந்திருக்காங்க அவர் கூற,

அதுனால போன் பயன்படுத்தக் கூடாதா? இல்ல நான் யாரிடமாவது பேசி விடக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

உன்னை யாரிடமும் பேசக் கூடாதுன்னு நான் சொன்னதேயில்லை.

என்னிடம் சொன்னதில்லை. ஆனால் வேற யாரிடமும் சொன்னீங்களா?

நான் யாரிடமும் பேசவேயில்லை என்று ரதி கூற, துளசி வந்ததை மட்டும் ஏன் மறைக்க பாக்குறீங்க?

அவ வந்தா. இப்ப என்ன உனக்கு?

அவளிடம் ஏதாவது பேசுனீங்களா?

நான் தான் சொன்னேன்ல. யாரிடமும் ஏதும் பேசவில்லை.

இல்லையே..ஏதோ தப்பா இருக்கே. அம்மா..அவளிடம் பேசியதை சொல்லுங்க கேட்டான்.

இந்தா போன் அவளிடமே கேட்டுக்கோ. நான் அவளிடம் பேசவேயில்லை என்று போனை அவனிடம் ரதி கொடுத்தார். அவன் பிரதீப்பிற்கு போன் செய்து கேட்டான்.

துருவா…நீங்க சின்ன பசங்க. அதுவும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறீங்க? படிப்புல மட்டும் கவனத்தை செலுத்துறது தான் நல்லது. உன்னோட அப்பா இல்லாம அம்மா எவ்வளவு சிரமப்படுறாங்கன்னு தெரியும். நான் சொல்ல தேவையில்லை. உன்னோட உடம்பு சரியாகவும் ஸ்கூலுக்கு போ. நல்லா படி. அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம்.

அண்ணா..நான் துளசிகிட்ட பேசணும்.

இல்ல. முதல்ல ஸ்கூல முடிங்க பார்க்கலாம். அதுவரை நீங்க பேச வேண்டாம். இப்ப நல்லா ஓய்வெடு. எதுவும் கெல்ப் வேணும்னா தயங்காம கேளு. அம்மாகிட்ட தேவையில்லாம பேசி கஷ்டப்படுத்தாத. அம்மாவை பார்த்துக்கோ என்று போனை வைத்து விட்டான்.

வீட்டிற்கு வந்த பிரதீப் துளசியை அழைத்து விட்டு, எல்லாரும் வாங்க என்று சத்தமிட்டான்.

என்ன ஆச்சுப்பா? மீனாட்சி கேட்க, அவன் அவரை பார்த்து விட்டு நேராக வெற்றியிடம் வந்து, துளசிய வேற ஸ்கூலுக்கு மாத்திடலாம். அவ ஹாஸ்டல்ல தங்கிக்கட்டும் என்றான்.

முடியாது என்று தீனா கத்தினான்.

எதுக்குப்பா? இப்ப தான் எல்லாமே சரியான மாதிரி இருக்கு. அவ இங்கேயே இருக்கட்டும் வெற்றி கூறினார்.

எதுக்குண்ணா திடீர்ன்னு? புவனா கேட்டாள்.

பிரதீப் தயங்க, துளசி பிரதீப் அருகே வந்து, நான் போறேன் அண்ணா என்றாள்.

எதுக்கு இப்ப புள்ளைய அனுப்ப நினைக்கிற? அப்பத்தா கேட்க,

சில விசயத்தை ஆறப்போடுறது தான் நல்லது.

அதுக்கு அவ தனியா கஷ்டப்படுணுமா? இப்ப அவ தனியா போறது எனக்கு சரியா படலை. நீ போக வேண்டாம் துளசி என்று தீனா கூற, அவள் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அண்ணா..என்று துளசி தீனாவை அணைத்துக் கொண்டு அழுதாள்.

புரிஞ்சுக்கோடா. இப்ப இருவருக்குமே பிரச்சனை அதிகமாகும். வருடங்கள் பிரிந்த பின் பார்க்கலாமே?

என்ன வருடங்களா? துகிரா கேட்க,

ஆமாம்..ஸ்கூல் முடிச்சு துளசியை சுஜி கூட அனுப்பிடலாம். அவ பார்த்துப்பா.

ஏய்..என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க? தீனா கோபமுடன் பிரதீப் அருகே வந்தான். மீனாட்சி இருவருக்கும் இடையே வந்து, தயவு செஞ்சு நீங்களாவது ஒத்துமையா இருக்கப் பாருங்க. நீ நினைக்கிறத முழுசா தான் சொல்லேன் அவர் கேட்டார்.

ரதி ஆன்ட்டி, அங்கிள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. துருவன் நம்ம துளசிய காதலிக்கிறானான்னு தெரியாது. ஆனால் துளசி இங்க இருந்தா ரொம்ப கஷ்டப்படுவா. நம்ம துளசி வளர்ந்த சூழல் வேற..இப்ப துருவன் இருக்குற நிலைமை வேற.

அண்ணா..பணத்தை சொல்றீங்களா? புவனா கேட்டாள்.

இல்லம்மா. அவன் நிலை இப்ப அவனோட துணை அவனோட அம்மாவுக்கு அவசியம். அங்கிள் காணாமல் போன பின் அவங்களுக்கு பைத்தியம் பிடிக்காத ஒன்று தான். ஆனால் அகில் நல்லா பார்த்துக்கிட்டாலும் அவனும் கல்லூரி சேர்ந்துட்டான். அதற்கு பின் அவங்களுக்கு எல்லாமே துருவன் மட்டும் தான். இப்ப நம்ம துளசி காதல் அவன் அம்மாவை பாதிக்கும். இதனால அவங்க மட்டுமல்ல துருவன் துளசியும் வேதனைப்படணும். அதுக்கு இது பரவாயில்லையே? பிரதீப் கேட்க, துளசி அழுதாள்.

மீனாட்சி அவளை அணைத்து, நீங்க சின்னப்புள்ளைங்கடா. உன்னோட நல்லதுக்கு தான் சொல்றான். இதுக்கு மேல நீ இங்க இருக்கணும்னா சொல்லு. உன்னை அனுப்பாமல் நான் பார்த்துக்குறேன்.

தீனா இப்ப என்ன சொல்ற? நம்ம துளசி நம்ம பக்கத்துல இருந்து கஷ்டப்படணும்ன்னு நினைக்கிறியா?

அவன் அமைதியாக இருக்க, துளசிம்மா..அப்பா உன்னை பார்க்க வாரவாரம் தவறாமல் வந்துடுவேன்.

அப்பா..ஸ்ரீயோட பிரச்சனை முடியும் வரை துளசி இருக்குற இடம் யாருக்கும் தெரிய வேண்டாம். நானும் தீனாவும் மட்டும் விட்டு வாரோம்.

துளசி நாளைக்கு ஒரு நாள் தான் என்று பிரதீப் அவளை பார்த்தான்.

டேய்..இவ்வளவு சீக்கிரம் தேவையாடா? வெற்றி கேட்டார்.

தேவை தான் என்று அவன் துளசியை பார்க்க, ஓ.கே அண்ணா. நான் நாளை மறு நாள் கிளம்பணுமா?

ஆமாம் நாளை மறுநாள் இரவு கிளம்பணும். நீ தயாராகிக்கோ..என்றான்.

சரி..ஆனால் நாளை முழுவதும் யாரும் வெளியே எங்கேயும் போகக்கூடாது. என்னுடன் தான் நேரம் செலவழிக்கணும் என்றாள்.

அதற்குள் ஸ்கூல், ஹாஸ்ட்டல் தேடணுமே? தீனா கேட்டான்.

எனக்கு தெரிஞ்சவங்க மூலமா எல்லாத்தையும் தயார் செய்திடுவேன். நாளைக்கு டீ.சியை வாங்கிக்கலாம். துளசி பாதுகாப்புக்கும் அங்க ஆள் இருக்காங்க. நான் இப்பொழுதே பேசிடுறேன்னு பிரதீப் போனுடன் நகர்ந்தான்.

துகிரா அவளிடம் வந்து, உனக்கு கஷ்டமா இருக்கும்ன்னா சொல்லு. அவர்கிட்ட பேசிக்கலாம்.

இல்ல அண்ணி. அண்ணா..சொல்றது சரி தான். துருவனுக்கு என்னை பிடிக்குமான்னு கூட தெரியல. பிடிச்சிருந்தாலும் அவன் வழியில் குறுக்க நான் நிற்பது சரியா இருக்காது. நான் கிளம்புறேன்.

என்னோட குடும்பமே இப்ப தான் சரியான மாதிரி இருக்கு. இப்ப உங்க எல்லாரையும் விட்டு போறது தான் சிரமமா இருக்கு என்று அவள் கண்ணில் கண்ணீர் வந்தது.

என் ராசாத்தி அழாதடி. என்னால தான எல்லாமே மாறிப் போச்சு. உன்னோட அப்பனால உன்னுடன் சரியா கூட பேச முடியாம போச்சு. நாளைக்கு மட்டுமல்ல..நீ ஊருக்கும் கிளம்புற கடைசி நிமிசம் வரை எல்லாருமே உன் பக்கத்துலயே இருப்போம்டா.

அய்யா..நம்ம வீட்டுக்கு பெரிய ஆளுங்க எல்லாரும் வந்திருக்காங்க என்று வேலையாள் ஒருவர் கூற, பிரதீப் பேசி விட்டு வெளியே வந்தான். அனைவரும் பஞ்சாயத்து செய்யும் ஆட்கள். அனைவருக்கும் புரிந்தது. ஊரார் ஓரிடத்தில் திரண்டிருக்க அங்கே இவர்களது குடும்பம் வந்து நின்றது. இதை அறிந்து அங்கே வந்தார் வெற்றியின் இரண்டாவது தங்கை.

அவர் வந்து முதலில் எனக்கான நியாயத்தை வாங்கித் தாங்க? என்று கேட்க, அங்கிருந்தவர்களில் ஒருவர்..

ஏம்மா..நீ பேசியது எல்லாருக்கும் தெரியும் அந்த சின்னப்புள்ளைகளை இப்படி அசிங்கமா பேசுற? ஒரு புள்ள நம்ம பிரதீப் தம்பிய கட்டிக்கப் போற புள்ள. இன்னொன்று நம்ம ஊர்க்காரனோட புள்ள. அந்த புள்ளைய பத்தி நீ பேச தேவையேயில்லை. நம்ம ஊரு ஸ்கூல் ஹெட்மாஸ்டரே போதும். உனக்கு தான் சொத்தை பிரிச்சு தந்துட்டாங்களே? நீ கிளம்பு. உங்க குடும்பத்துக்கு வெற்றி முடிவெடுத்ததே சரியானது. உனக்கு இந்த குடும்பத்துக்கும் சம்பந்தமேயில்லை..போயிடு..இல்ல உன்னை பற்றிய தாறுமாறான விசயம் வெளியே வரும் என்று சொல்ல..வெற்றி குடும்பத்தாரை முறைத்து விட்டு, துகிராவிடம் வந்தவுடனே வீட்டை விட்டு போக வச்சுட்டீங்களடி பார்த்துக்கிறேன் என்று அவர் சத்தமிட..

மற்றொருவர், நீ போயிடும்மா. நீ எங்க ஊருக்குள்ள வராம இருக்கிறது தான் நல்லது. உன் முகத்துல எங்க வீட்டு பொம்பளைங்க முழிச்சா. எங்க வாழ்க்கையே காலிதான் என்றார். பொறுமிக் கொண்டே அங்கிருந்து சென்றாள் அவள்.

வாங்கப்பா..வந்த வேலைய பார்ப்போம் என்று அன்று வெற்றி நண்பன் கூறியதை அவரை வைத்தே பேச வைத்தனர். அவரும் கண்ணீருடன் அனைத்தையும் முடிக்க, தீனா, துகிரா, புவனா, அப்பத்தா…கண்ணீருடன் இருவரையும் பார்த்தனர்.

உங்களுக்கு எல்லாமே தெரியுமா வீறு? நீங்க என்னை பார்க்க அடிக்கடி வருவீங்களா? எனக்கு தெரியாதே? என்று மீனாட்சி அழுதார்.

அம்மா..தாயி..நீ ஏன் தாயி சொல்லல? முன்னமே சொல்லி இருந்தா உங்க ரெண்டு பேருக்குமே முடிச்சு வைச்சுருப்பேன். என் புள்ளை தான் அந்த பொய்க்காரி..ஏமாற்றுகாரியிடம் மாட்டி வேதனைப்பட்டான்னு நினைச்சேன். ஆனால் நீ என் மூத்த புள்ளையால..என்று பேச முடியாமல் சிக்கி தவித்து..எப்படிம்மா உள்ள அழுதுட்டு வெளிய சிரிச்சிட்டு இருந்த? என்று அப்பத்தா மீனாட்சியை அணைத்தார்.

உன்னோட அப்பனும், ஆத்தாவும் என்று அவர் கேட்க, மீனாட்சி பெருங்குரலெடுத்து அழுதார். அனைவரும் கண்கலங்க அவரை பார்க்க, அப்பத்தா அவரை அணைத்துக் கொண்டார். வெற்றியின் கண்ணிலிருந்து உவர் நீர் வர, அவரால் தேக்க முடியாமல் அழுதார். தீனா அவரை அணைத்துக் கொண்டார்.

நீங்க என்ன சொல்றீங்க? என்று ஊரார் ஒருவர் பெரியவர்களிடம் கேட்க, கண்ணீரை துடைத்துக் கொண்டு..நீங்க எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று வெற்றி முன் வர, மீனாட்சியும் அவர் அருகே வந்து நானும் கட்டுப்படுகிறேன் என்றார்.

நம்ம ஊர்ல காதலுக்கு எதிர்ப்பில்லை தான். ஆனால் உங்களது கதை சற்று குழப்பமாகவும்..எங்களுக்கு முடிவெடுக்க கடினமானதாகவும் அமைந்தது. ஆனால் எங்கள் முடிவு சரியா இருக்கும்ன்னு நம்புறீங்களா? என்று அவர்கள் கேட்க, எல்லாரும் உங்கள் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் கூறினார்கள்.

ஏம்மா..மீனாட்சி உன்னோட புள்ளைங்க ரெண்டு பேரு. ஒரு வேலை உன்னை பிரதீப்புடன் போகச் சொன்னா என்ன செய்வ? நம்ம வெற்றி பசங்க அவங்க அப்பா கூட இருக்க உனக்கு சம்மதமா? உங்க அத்தைய நீ வச்சு பார்த்துப்பியா? கேட்டனர்.

வெற்றி குடும்பத்தில் அனைவரும் பயத்துடன் மீனாட்சியை பார்த்தனர்.

நான்..நான்..என்று தயங்கிய மீனாட்சி..என் மகன் வீட்டிற்கு செல்லும் போது என் மற்ற பசங்களும் என்னுடன் வந்து தானே ஆக வேண்டும். அத்தையை நான் என்றும் தனியே விட மாட்டேன். எல்லாரையும் அழைத்து தான்  செல்வேன்.

எல்லாரையுமா? வெற்றிய தனியா விட்றலாமா? கேட்டார் ஒருவர்.

இல்ல..அவர் பசங்க இருக்கிற இடத்துல தான அவரும் இருக்கணும். நீங்க எல்லாரும் ஒத்துக்கிட்டா..அவரையும் அழைத்து செல்லலாமே? அவர் மட்டும் எப்படி தனியாக இருப்பார்?

ஒருவர் சிரித்துக் கொண்டு..மீனாட்சி முன் வந்து இதுல கையெழுத்து போடும்மா என்றார்.

அதை பார்த்த மீனாட்சி முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அதை வாங்கி பார்த்த தீனா..அப்பா..என்று அவரை அணைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கு ஏதும் புரியவில்லை.

பசங்களா? இப்ப உங்களுக்கான கேள்வி? பிரதீப் நீ உன்னோட அப்பாவா வெற்றிய ஏத்துக்கிட்ட. அதே மாதிரி..தீனா, துளசி..நீங்க மீனாட்சியை அம்மாவா ஏத்துப்பீங்களா? அப்புறம் ஜானுவிடம் பேசலாமா? என்றும் அவர் கேட்டார்.

பிரதீப்பிற்கு தூக்கி வாரி போட்டது. தீனா உடனே ஏத்துக்கிட்டான். துளசி சிந்தனையோடு..அம்மாவா ஏத்துக்கிட்டா காவேரி அம்மா கோபிச்சுக்க மாட்டாங்களா? கேட்க, அனைவரும் அதிர்ந்தனர்.

ஏன்மா..அவரால் தான் எல்லா பிரச்சனையும் நடந்தது. இப்ப அவள பத்தி பேசுற?

இல்ல..ஊர்க்காரவங்க தான் நிறைய வதந்திய கிளப்புவாங்க. இன்று தான் அவங்க இறந்தாங்க. இப்ப நாங்க மீனு அம்மாவ அம்மான்னு கூப்பிட்டா.. என்ன பேசுவீங்க?

யாரும் எதுவும் பேச மாட்டாங்க. எல்லாருக்கும் எல்லாமே தெரிஞ்சு போச்சு. அதுமட்டுமல்ல..இன்று வெற்றி- மீனாட்சிக்கான புது இரவாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். தீமை அழிந்து நன்மை பிறந்தால் கொண்டாடுவார்களே..அதே போல இன்று இங்கிருப்பவர்கள் அனைவரும் ஒத்துக்கிட்டா..இப்ப நல்ல நேரம் தான். நம்ம வெற்றி மீனாட்சி கழுத்துல தாலியை கட்டட்டும் என்றனர் பெரியவர்கள்.

திருமணமா? இந்த வயதிலா? என்று ஒருவர் கேட்க, மீனாட்சி கண்கள் கலங்கியது. இது இருவரின் ஆரம்ப கால கனவாக இருந்தது. வெற்றியும் மீனாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சில பேச்சுகளுக்கு பின் யாருக்கும் விருப்பமில்லாமல் இருக்கீங்களா? என்று கேட்டனர். முதல்ல அவங்க குடும்பம் என்ன சொல்றீங்க? கேட்டனர். எல்லாரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொள்ள, ஜானுவும் பதில் சொல்லணும் என்றனர்.

பிரதீப் லலிதாவிடம் பேசி விட்டு போனை அனைவர் முன்னும் ஸ்பீக்கரில் போட்டான். ஆன்ட்டி..என்னிடம் எதுக்கு கேட்குறாங்க? அவர் தான் அப்பான்னு..ஒரு நாளாவது சொல்லி இருக்காரா? ஏதாவது ஆசையா பேசி இருக்காரா? நான் அம்மாவை பார்த்த நினைவு கூட இல்லை. இப்ப ரெண்டு பேரும் வந்து அம்மா, அப்பான்னா..நான் என்ன சொல்வது?

என்னோட அம்மா, அப்பா, சொந்தம் அனைத்தும் என்னோட பிரதீப் அண்ணா தான். அவனையே முடிவெடுத்துக்க சொல்லுங்க. அண்ணா..நீ சொல்லு..ஜானு கேட்க,

ஜானும்மா..உனக்கு முழுவிவரமும் தெரியல. புரிஞ்சுக்கோடா? பிரதீப் கூற, போடா..எத்தனை நாள் யாருமில்லாம தனியா இருந்திருக்கேன். நீ உடல் நோகும் வரை உழைத்தாய்? நாம கஷ்டப்பட்டப்ப இல்லாத அவங்க இப்ப வந்து என்ன செய்யப் போறாங்க? அவள் பேச பேச வெற்றிக்கும் மீனாட்சிக்கும் மனம் உடைந்தது. இருவரும் அழுதனர்.

என்னை மன்னிச்சிரு தாயி. எல்லாமே இந்த பாவியால தான். வீட்லயே பாம்புக்கு பால் வார்த்திருக்கேன். ஒன்று அல்ல..ரெண்டு பாம்புக்கு. வீட்ல யாரையும் கவனிக்காம விட்டது தான் உன்னோட அம்மா, அப்பா, நீ, பிரதீப், தீனா, துளசி, சுஜி..எல்லார் கஷ்டத்துக்கும் காரணம் என்று அப்பத்தா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.

மீனாட்சி பதறி, அத்தை அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்ப கல்யாணமெல்லாம் தேவையில்லை. இனியாவது எல்லாரும் சந்தோசமா இருக்கணும் என்றார்.

இனியாவது என்னம்மா? என் புள்ளையவே தப்பா புரிஞ்சுக்கிட்டு நானே உங்கள் பிரிச்சுட்டேனேடி..என்று அவர் மீண்டும் அழுதார்.

ஜானு சத்தமிட்டாள். ஏய்…கிழவி செய்றதயெல்லாம் செஞ்சுட்டு இப்ப அழுதா எல்லாமே சரியா போயிடுமா? பாரு அவங்க வாழ்க்கையே முடியும் நிலைக்கு தள்ளிட்ட. இரு உன்னை வந்து கவனிச்சுகிறேன். இனியாவது வீட்ல என்ன நடக்குதுன்னு பாரு..

ஏய்.. இப்பவாது அவங்கள சேர்த்து வைப்பாயா? என்ன பண்ணப் போற? ஜானு கேட்டாள்.

ஜானு..நீ ஒத்துக்கிட்ட..பிரதீப் மகிழ்ச்சியுடன் கூற, எனக்கு அண்ணி நடந்ததை சொன்னாங்க. இப்ப கூட நீங்க பேசுறதை கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் என்று ஜானு கூற, அனைவரும் துகிராவை பார்த்தனர். பல்லை காட்டிக் கொண்டு, அவளுக்கு தெரியணுமே? அவள் எங்களுள் ஒருத்தி ஆயிற்றே?

நல்லது தான் புள்ள புரிஞ்சுக்கிச்சே..

யெம்மா..நீ போனும் கையுமா தான் சுத்துவியா? இனி வீட்டை விட்டு வெளியே வரும் போது போனை எடுத்து வராத. வந்தா போனை பார்ப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பறிக்கலாம் என்று அவர் கூற,

ஏய்யா? வெற்றி கேட்டார்.

உங்க குடும்பத்துக்குள்ள சரியா போச்சு. எங்க குடும்பத்து விசயத்தை வீடியோ எடுத்து போட்டாங்க. அவ்வளவு தான். எங்க சோலி முடிஞ்சிரும் என்றனர்.

அண்ணி..வீடியோ கால் வாங்க ஜானு கூற, வெற்றி மீனாட்சி கழுத்தில் அவ்விடத்திலே அந்நேரத்திலே தாலியை கட்டி திலகமிட்டார். அனைவரும் கரவொலி எழுப்பினர்.

மீனாட்சி வெற்றி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இல்லம்மா..நீ என்னிடம் சொல்லி இருந்தால் நாம் இருவரும் உயிரோடு இருந்திருப்போமா? என்று தெரியவில்லை. உன் கை பிடித்து வாழும் காலம் போதும்மா என்றார். அனைவரும் வெற்றியை பெருமிதத்தோடு பார்த்தனர்.

இருவரும் சேர்ந்து நின்றனர். ஜானுவும் இதை பார்த்து, எத்தனை கஷ்டங்கள் தாண்டி வருடம் பல கழிந்து கை பிடிச்சிருக்காங்கள மாமா..என்று ஆதேஷை பார்த்தாள். அவனுக்கு என்ன ஊர்டா இது? என்று தான் இருந்தது.

எல்லாரிடமும் ஒன்று சொல்லணும். நம் ஊர் பொண்ணு ஸ்ரீ. அதான் மகேஷ் அங்கிள்- சங்கரி ஆன்ட்டி பொண்ணு. நம்ம ஊருக்கு வருவா. அவளுக்கு நம்ம எல்லாரும் நினைவிலே இல்லை. தொலைக்காட்சி பார்த்தீர்களா? நம்ம விசாலாட்சி பாட்டி பெயரன் அர்ஜூன் தான் அழைத்து வரப் போறான். அவள தெரிஞ்சது மாதிரி காட்டிக்காதீங்க. அந்த கொலைகாரன் கண்டிப்பா நம்ம ஊருக்கு வருவான். அவனை இங்க வைச்சு நம்ம எல்லாரும் சேர்ந்து தான் பிடிக்கணும். எல்லாரும் தயாரா இருப்பீங்களா? பிரதீப் கேட்டான்.

யாருப்பா? அந்த காளி அவதாரமெடுக்கும்ன்னு ஜோசியர் சொன்னாரே அந்த பொண்ணா? என்று ஒருவர் கேட்க, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பிரதீப் அந்த கதையை சொல்லி முடித்தான். இப்ப இருக்கும்  இளைஞர்களுக்கு தெரியாதே? தெரிஞ்சுக்கோங்க. அத விட அந்த பொண்ணை கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும் பிரதீப் கூற,

வயதான ஒருவர் முன் வந்து, அந்த புள்ளைக்கு ஏதாவது ஆனா அவளும் அவளை கட்டிக்கப் போறவன் மட்டுமல்ல நாம ஊரே அழிஞ்சிரும் என்றார்.

தாத்தா..என்ன சொல்ற? வேலு கேட்டான்.

ஆமா..இத அந்த ஜோசியர் சொல்லல. இப்பவே எல்லாரும் பயந்து ஊரை விட்டு போயிருவாங்கன்னு. நம்ம ஊர்க்காரனுக்க..கோழையில்லன்னு நிரூபிச்சு காட்டணும்ன்னு வீரவசம் பேசினார் அவர். அனைவரும் திகைத்தாலும்..கண்டிப்பா எல்லாரும் சேர்ந்து போராடுவோம் என்றனர்.

வேலு கல்யாணத்தை தள்ளி வைக்க முடிவெடுத்ததை கூறி, அதற்கான காரணத்தையும் அனைவர் முன்னும் கூறினான். அனைவரும் அவனை மதிப்புடன் பார்த்தனர்.

சைலேஷை கொல்ல வந்தவன் ஜெயிலில் அவனே தற்கொலை செய்து கொண்டான். போலீஸ் அனைவரையும் மேலதிகாரிகள் திட்டிக் கொண்டிருந்தனர். தீனாவை அவர் கேட்க, அவன் அம்மா இறந்ததை பற்றி கூறினார்கள்.

ஏன்டா, அவன் இல்லைன்னா? யாருமே இல்லையா? கைதிய கூட பத்திரமா பார்த்துக்க முடியாதா? என்று கத்தினார். ஆனால் யாரும் தீனாவிடம் கூறவில்லை.

மாலை ஐந்து மணியளவில் சைலேஷ் நித்தி சென்னை கிளம்ப, கவின் வேலுவிடம் அகல்யாவை பார்த்துக்க சொல்லி விட்டு அவர்களிடம் வந்தான். நந்து காரை செலுத்த தயாரானான். தாரிகா, தாரிகா அம்மா ஒரு காரில் இருந்தனர். கவின் அவர்களிடம் சென்று ஆன்ட்டி,..நானும் வரவா? கேட்டான் தாரிகாவை பார்த்துக் கொண்டு. அவள் அமைதியாக இருந்தாள்.

இங்க வேறவங்க வாராங்களாம்? என்றார் தாரிகா அம்மா.

யாரு ஆன்ட்டி?

யாசுவின் அம்மா, அப்பா வந்து காரில் ஏறினார்கள்.

கவின் சைலேஷ் காரில் ஏதும் பேசாமல் அமர்ந்து கொண்டான். கேசவன் சைலேஷ் கார் அருகே வந்து, நானும் ஊருக்கு வாரேன். ஒரு வேலை உள்ளது என்றார்.

வாங்க மாமா.. என்று சைலேஷ் கவின் ஒருவாறு அழைத்தனர். சைலேஷ் கவினை திரும்பி பார்த்தான்.

பழகிடுச்சு சார் என்று கேசவனை பார்த்தான். அவர் நித்தியை பார்த்துக் கொண்டே காரில் ஏறினார். கவின் சைலேஷிடம் கண்ணில் சைகை செய்து காட்டினான். நித்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அப்பா அவளை பாவமுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரையும் பார்த்துக் கொண்டே காரை எடுத்தான் சைலேஷ்.

தருணை கிளப்பிய அர்ஜூன் அபி, இன்பாவை பார்த்து நீங்க தயாராகுங்க. நாம நம்ம கம்பெனிய பார்க்க போகலாம் என்றான்.

அர்ஜூன், நானும் கண்டிப்பா வரணுமா? அபி கேட்டான்.

வரணும். மேம் உங்களுக்கான ஆடை இங்க இருக்கு என்று வினிதா ஆபிஸ் ஆடையை காட்டினான்.

அர்ஜூன்..நான் புடவையிலே இருந்துருக்கிறேனே?

மேம்..நாம ஓர் கம்பெனிக்கு மட்டும் போகல. நான்கு கம்பெனிக்கும் போகணும். ஆட்களை சந்திக்கணும். பேசணும்..அங்கே புடவை சரியா இருக்காது.

இன்பா ஏதும் பேசாமல் உள்ளே சென்று மாற்றி விட்டு வந்தாள். கோர்ட் சர்டுடன் ஸ்கர்ட் ஆடையில் போனிடைல்லை உச்சியில் போட்டு..சிறிய கருப்பு பொட்டு வைத்து அழகாக வந்தாள் இன்பா.

வாவ்..மேம்..சூப்பரா இருக்கு ஸ்ரீ கூற, அபியும் அர்ஜூனும் இன்பாவை பார்த்து அசந்து நின்றனர்.

வாங்க போகலாம் என்று அர்ஜூன் அழைக்க, இருங்க வாரேன் என்று அந்த பாட்டி சமையலறைக்கு சென்று ஸ்வீட் எடுத்து வந்து மூவருக்கும் ஊட்டி விட்டு, நீங்க போற வேலை நல்லபடியா நடக்கணும் என்று வாழ்த்தினார்.

அர்ஜூன் அவர் காலில் விழுந்து ஆசி வாங்க, மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரே நேரத்தில் விழுந்தனர்.

இன்பா அபியை முறைக்க, மேம் வாயை திறந்து சொன்னா தான் புரியும். எனக்கு இந்த கண் ஜாடையெல்லாம் ஒத்து வராது.

கத்துக்கோ..என்று நிமிர்ந்து வினிதாவின் அம்மா, அப்பாவிடம் வந்தனர்.

பெரியவங்கட்ட ஆசி வாங்கிட்டீங்கள போதும். கிளம்புங்க..பார்த்து அவங்களும் சொத்துக்காக ஏதும் செய்பவர்கள் தான். அர்ஜூன், அபி கவனமா இருங்க. இந்த பொண்ணை தனியா விட்றாதீங்க. பலதரப்பட்ட ஆண்கள் இருப்பாங்க. பார்த்து..என்று வினிதா அம்மா அக்கறையுடன் சொல்ல, இன்பா அவரை அணைத்து..இந்த வாய்ப்புக்காக தான் காத்திருந்தேன்ம்மா. எனக்கு ஏதும் ஆகாது என்று அவருக்கு தைரியம் கூறினாள் இன்பா.

பவி அம்மா அவளிடம், நீ அனைவரையும் கூர்ந்து கவனி. ஆனால் நீ கவனிப்பது யாருக்கும் தெரியக்கூடாது. யார் உன்னருகே உதவிக்கு இருக்க வேண்டும் என்று அப்பொழுது தான் உன்னால் அறிய முடியும். பசங்களா..நீங்க பைல்ல பாக்குறேன். “பிராஜெக்ட் டிஸ்கர்சன்” என்று போனால் நம்பிக்கையானவங்கள பார்த்து பேசுங்க.

போதும்மா..பசங்க பார்த்துப்பாங்க என்று பவி அப்பா “ஆல் தி பெஸ்ட்” என்றார். வினிதா அப்பா அர்ஜூனை தட்டிக் கொடுத்தார். அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான். அவள் புன்னகையுடன் அவனை பார்த்தான். அர்ஜூன் புன்னகையுடன் அவளிடம் வந்து அனுவை தூக்கி முத்தமிட்டு நாங்க வாரோம் என்றான். அவன் அருகே வரவும் ஸ்ரீ இதயம் அடித்துக் கொண்டது. அவளை பார்த்து புன்னகையுடன் அவன் திரும்பிய பின், “பெஸ்ட் ஆஃப் லக் ஆல் ஆஃப் யூ” என்று கத்தினாள். மூவரும் அவளை பார்த்து சிரித்து விட்டு அர்ஜூன் காரில் கிளம்பினார்கள்.

அர்ஜூன்..நாம கம்பெனிக்கு தான கிளம்புகிறோம். என்ன ஒரு உபச்சாரம்? அபி கேட்டான்.

அபி..இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இதெல்லாம் இருந்தா தான் ஏதோ வெற்றியை தொட்டது போல் இருக்கு. யாருமில்லாமல் காட்டிற்க்குள் செல்லும் போது பயமிருக்காது. ஆனால் வேதனையுடன் தான் செல்வேன்.

காட்டிற்கா? இன்பா கேட்க,

எஸ் மேம்..”ஒயில்டு லைஃப் போட்டோகிராபி” தான் படிச்சிட்டுக்கிட்டு இருந்தேன். நந்து, மேகா “மாடலிங் போட்டோகிராபி”ல்ல இருந்தாங்க. இப்ப அவளும் காதலிக்காக பிசினஸை கையில் எடுக்கப் போறாளாம்..

உன்னை மாதிரின்னு சொல்லு..

அர்ஜூன் மிருகங்கள பார்த்த பயமா இருக்காதா? சிங்கம், புலிய பார்த்திருக்கியா? கேட்டாள் இன்பா.

ம்ம்..போட்டோஸ் எடுத்துருக்கேன் மேம். இங்க கூட என்று காரிலும் தேடி ஒன்று அவன் கையில் அகப்பட்டது. அதை காட்ட, அபியும் இன்பாவும் ஆர்வமுடன் அதை பார்த்தனர். அதில் ஓநாய் கூட்டம் விளையாடுவது போல் இருந்தது.

பக்கத்துல எடுத்த மாதிரி இருக்கு அர்ஜூன்?

இல்ல மேம்..கொஞ்சம் தூரமா தான் இருந்தேன். இப்பொழுது தான் நவீன கேமிராக்கள் உள்ளதே? அதை வைத்து தான் எடுத்தேன். என்னுடைய கேமிரா..ஐந்து இலட்சம் என்றான்.

கேமிரா ஐந்து இலட்சமா?

ஆமாடா..

அர்ஜூன்..நீ பிசினஸ் அட்வைசரா இருக்கிறதா சொன்னேல? அது நைட் பண்றது தானா? நானும் சேர்ந்துக்கவா? இன்பா கேட்டார்.

மேம்..கொஞ்சநாள் பொறுமையா இருங்க. முதல்ல கல்லூரியில உங்க வேலைய ரிசைன் பண்ணுங்க.

அத விடுட்டு..நான் என்ன செய்ய?

மேம்..நாங்க ஊரிலிருந்து வந்த பின் கல்லூரிக்கு போவோம். நீங்க தான் புல் டைம்மா..இங்க வேலை பார்க்க போறீங்க. இனி உங்க வேலையே இங்க தான். இப்ப சேர்ந்து பார்ப்போம். உங்கள் பாதுகாப்புக்கு நம்ம ஆட்களும் வருவாங்க. ஒரு வேலை இப்ப இருக்கிறத விட லாபத்துல கம்பெனி போனா. நீங்களே கம்பெனிய டேக் ஓவர் பண்ணலாம்.

அர்ஜூன், நீ பேசுறத பார்த்தா..நீ இந்த கம்பெனியோட நிறுத்த மாட்டியோ? இன்பா கேட்டாள்.

ஆமா மேம்..என்ன தான் என் பெயரில் இருந்தாலும்..அனுவின் பதினெட்டு வயதுக்கு பின் நாம் வளர்த்து வைத்தாலும் இது அனைத்தும் அவளுடையது. என்னால என்னோட டிரீம்மை தொடர முடியுமான்னு தெரியல. ஆனால் நம்ம ரெசார்ட், என்னோட அட்வெய்சர் வேலை மற்றும் சிறியதாக ஒரு கம்பெனியும் நடத்தணும். பின் தான் என் கனவை பார்க்கணும் என்றான்.

சரி..அதை விடுங்க. அபி உனக்கு அனுப்பிய அனைத்து விவரத்தையும் பாருங்க என்று காரை நிறுத்திய அர்ஜூன் பின்னே ஏறு. இப்பொழுதே பாருங்க நாம போய் சேர அரைமணி நேரமாகும். நம்ம போக போற முதல் கம்பெனியில் செய்யும் ஆட்கள்..கம்பெனி பற்றிய விவரம்.. தயாரிக்கும் பொருட்கள் விவரம்.. கம்பெனி இன்வெஸ்டர்ஸ்..ஷேர் கோல்டர்ஸ் என்று அனைத்தும் உள்ளது. அபி பின்னே ஏறி அமர்ந்தான். அர்ஜூன் காரை கிளப்பினான்.

அர்ஜூன் கயல் ஹோட்டலை சரிக்க வேண்டும்ன்னு திட்டமெல்லாம் நடக்குற மாதிரி இல்லை இன்பா கேட்க,

ம்ம். அது தான் அவங்களுக்கு தெரிஞ்சுருச்சே..அது தானே நடக்கும். அவங்க தவறான போதை மருந்து பற்றி தெரிந்தால் கவர்ன்மென்ட்டே சீல் வச்சிரும்.

அப்ப..அந்த ரெசார்ட்?

அது என்னோட பாட்டி நம்பிக்கைக்காக நான் எங்கிருந்தாலும் அவங்களிடம் வந்து விடுவேன்னு நிம்மதியாக இருப்பாங்களே?

சரி தான்டா. கஷ்டப்படாம இருப்பாங்க.

மூவரும் சற்று நேரத்தில் கம்பெனிக்கு வந்தனர். அர்ஜூன் முன் செல்ல இருவரும் அவன் பின் சென்றனர். அனைவரும் அர்ஜூனை பார்த்து, மார்னிங் சார்..என்று மரியாதை செலுத்தினர்.

வினிதா ஏற்கனவே அர்ஜூனை பற்றி அங்கு வேலை செய்பவர்களிடம் கூறி இருப்பார். அவனை பார்த்து அவர்கள் அவனிடம் வந்தனர்.

அவர்கள் பேசுவதற்கு முன்னே, இன்வெஸ்டர்ஸ்..ஷேர் கோல்டர்ஸ் மற்றும் உயர் பதவியில் உள்ள அனைவரும் அரைமணி நேரத்திற்குள் மீட்டிங் ஹாலுக்கு வரணும். அதற்கு முன் நாங்க..ஸ்டாஃப்ஸை பார்க்கணும். இன்பாவை கை காட்டி இவங்க தான் நம்ம கம்பெனியல எல்லாவற்றையும் கவனிக்கப் போறாங்க. நம்ம கம்பெனி பற்றிய அனைத்து ”பைல்”சும் “சீ இ ஓ” அறைக்கு வரணும்.

பர்ஸ்ட் மீட்டிங்..குயிக்..ஐந்தே நிமிடம் தான் என்று இன்பாவிற்கு அவள் அறையை காட்டினார்கள். மூவரும் உள்ளே நுழைந்தனர்.