கார்த்திக்காக வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டாலும் அந்த ஒருநாளை கடத்துவது பெரும் போராட்டமாக இருந்தது குமரனுக்கு. இத்தனைக்கும் நேரம் பதினொன்று தான் அப்போது. கார்த்தி நேரத்திற்கு உணவு கொடுத்திருக்க, அதனுடனே மாத்திரைகளையும் உண்டு முடித்திருந்தான்.
கார்த்தி காலை உணவை முடித்து பாத்திரங்களை கையோடு சுத்தப்படுத்தி வைத்தவள் இப்போது துணிகளை ஊறவைத்துக் கொண்டிருந்தாள். குமரன் வீட்டில் இருப்பதால் நேரத்தோடு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதால் ஓரளவுக்கு வேகமாகவே வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் சமையல் தடுப்புக்கும், குளியலறைக்கும் நடந்து கொண்டேயிருந்த நேரம் மொத்தமும் குமரனின் கவனமெல்லாம் அவள்மீது தான். ஆனால், அவனை வீட்டில் இருக்க சொன்னவளோ, அதைப்பற்றிய கவலையே இல்லாமல் அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதில் கடுப்பானதென்னவோ குமரன் தான். அவனுக்கு இப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது எல்லாம் பழக்கமே இல்லை. எப்போதும் ஏதாவது வேலை செய்தே பழகிப் போனவன். இங்கு அமைதியாக அமர்ந்திருந்தவன் முதல் சில நிமிடங்கள் மனைவியை நோட்டம் விட்டபடி தான் இருந்தான். அவன் பார்வைக்கு அவள் பதில் கொடுத்திருந்தால் எப்படியோ? ஆனால், கார்த்தி அவனைக் கண்டுகொள்ளாமல் இருக்க, அதற்குமேல் அங்கிருக்க முடியவில்லை அவனால்.
எங்கேயாவது வெளியில் சென்று விடுவோமா என்று யோசித்தாலும், அப்படி எழலாம் சென்றும் பழக்கமே இல்லை. பூச்சியுடன் மட்டும் தான் நெருங்கிய நட்பு. அவனும் இப்போது ஸ்டாண்டில் தான் இருப்பான். அவனோடு பேசிக் கொண்டிருக்கலாம் என்றாலும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று பலவிதங்களில் சிந்தித்து ஓய்ந்து போனவன் இறுதியில் தலையணையை எடுத்துப் போட்டு படுத்துவிட்டான்.
உறக்கம் எல்லாம் வந்துவிடவில்லை. என்னசெய்வதென புரியாமல் கண்மூடி படுத்திருந்தவன் கார்த்தி துணிகளை துவைத்து முடித்து வந்து பார்க்கையில் உறங்கியிருந்தான்.
கார்த்தி வீட்டிற்கு வெளியில் இருந்த பால்கனியில் துணிகளை காயவைத்து மீண்டும் வீட்டுக்குள் வர, தாயின் கருவில் இருக்கும் பிள்ளையைப் போல் உடலைக் குறுக்கி கொண்டு கையை தலைக்கு கீழ் வைத்து உறங்கி கொண்டிருந்தான் குமரன்.
அவன் உறங்கி கொண்டிருந்த நிலை கார்த்தியை என்னவோ செய்தது. தூக்கத்தில் இருந்த அவன் முகம் அப்பாவியாக தோற்றம் கொடுக்க, தான் எண்ணியதை நினைத்து தானே சிரித்துக் கொண்டாள் அவள். ‘இவரா அப்பாவி.’ என்று செல்லமாக அவனை திட்டிக் கொண்டவள் நேரம் பார்க்க, பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்தது கடிகாரம்.
அவன் உறக்கம் கலைவதற்குள் சமைத்து விடுவோம் என்று அவள் சமையல் தடுப்பில் இருந்த காய்கறிகளை எடுத்து வைத்துக் கொண்டு அமர, சரியாக அதே நேரம் திறந்திருந்த வீட்டின் கதவைத் தட்டினான் அந்த சிறுவன். கார்த்தி யாரென்று பார்க்க, அன்று ஒருநாள் இரவில் குமரனிடம் ராணி பணம் கேட்பதாக கேட்டுக்கொண்டு வந்து நின்றவன்.
அவனைப் பார்த்ததுமே ராணி அனுப்பி வைத்திருப்பாரோ என்றுதான் நினைத்தாள் கார்த்திகா. அவள் எண்ணம் சரியென்பதைப் போல, தயக்கமின்றி வீட்டிற்குள் வந்து நின்றவன் “குமார் அண்ணா…” என்று கத்த முற்பட, “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று வாயின் மீது விரல் வைத்து, அவனை வாய்மூடச் செய்தாள் கார்த்திகா.
குமரன் எப்போதும் எழுந்து விடுபவன் எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் பயனால் அன்று பார்த்து அசந்து உறங்கியிருக்க, சிறுவனின் சத்தம் எல்லாம் எட்டவே இல்லை அவனுக்கு. கார்த்திகா கணவன் உறக்கத்தை தொடர்வதை உறுதி செய்து கொண்டவள் “என்ன வேண்டும்” என்று சிறுவனிடம் கேட்க,
கார்த்திகா ஒருநிமிடம் யோசித்தவள், “எவ்ளோ தெரியுமாடா?” என்று அவனிடமே கேட்க,
“அதெல்லாம் தெரியாது. ஆயா கேட்டுது அவ்ளோதான்.” என்றவனிடம் ஒரு ஐந்து ரூபாயைக் கொடுத்தவள், “நீ நல்லபையன் தானே. எவ்ளோன்னு கேட்டுட்டு வாடா ப்ளீஸ்.” என்று கெஞ்சலாக கேட்க,
பெரிய மனது வைத்தவனாக, “சரி கேட்டுட்டு வரேன்.” என்று மீண்டும் ஓடினான் அவன்.
அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் வந்து நின்றவன் “2800 ரூபா கட்டணுமாம். வாங்கிட்டு வர சொன்னாங்க.” என்று கார்த்திகாவின் காதருகில் வந்து மெதுவாக சொல்ல, அவன் செயலில் சிரித்தவள் அவன் கேட்ட பணத்தை அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டாள்.
அது நேற்று அவள் குமரனிடம் கொடுத்த பணம்தான். எப்போதும் போல, அவன் சாமிப்படத்தின் முன்பு வைத்திருக்க அதிலிருந்து தான் கார்த்திகா எடுத்துக் கொடுத்தது. அவள் அவனை எழுப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் கொடுத்திருக்க, ஐந்தே நிமிடத்தில் ராணி ஆடிக்கொண்டு வந்து நிற்பார் என்று எதிர்பார்க்கவில்லை அவள்.
அவள் வெங்காயத்தை அரிந்து கொண்டிருக்க, மூடியிருந்த கதவை சத்தமாக தட்டி திறந்துகொண்டு அவர் வீட்டிற்குள் நுழைய, அவர் தட்டிய வேகத்திற்கு கையை கத்தியால் கீறிக் கொண்டிருந்தாள் கார்த்தி. “ஸ்ஸ்ஸ்…” என்றவள் கிண்ணத்தில் இருந்த நீரில் கையை வைக்க, கதவின் சத்தத்தில் குமரனும் எழுந்துவிட்டான்.
ஆனால், ராணிக்கு அவள் விரலை வெட்டிக் கொண்டதோ, குமரன் உறக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்ததோ எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை. ஆங்காரத்தின் மொத்த உருவமாக நின்றிருந்தவரின் பார்வையில் இருந்த உக்கிரத்தால் கையின் எரிச்சலையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்றுவிட்டாள் அவள்.
குமரனும் அன்னையைக் கண்டு எழுந்து நிற்க, குமரனைக் கண்டுகொள்ளாமல் தன் கையில் இருந்த பணத்தை கார்த்திகாவின் முகத்தில் வீசினார் ராணி. சுருட்டி வைக்கப்பட்டிருந்த ருபாய் நோட்டுகள் அவள் முகத்தில் மோதி கீழே விழ, அவரது செயலில் வார்த்தையில்லாமல் அதிர்ந்து நின்றாள் அவள்.
ஆனால், குமரன் அப்படி நிற்பவனில்லையே. “மோவ்… இன்னா பண்ற நீ. தகராறு பண்ணவே வந்தியா?” என்று அவன் முன்னே வர,
“இவ யாருடா எனக்கு காசு கொடுக்க? இன்னா படி அளக்கிறாளா? என் புள்ள காசை எனக்கு கொடுக்க, இவ கணக்கு பார்ப்பாளா? அரிப்பெடுத்து ஓடி வந்த நாயி, இதுக்கு வந்த பவுசை பார்த்தியா?” என்று அவர் இஷ்டத்திற்கு பேச, அவரின் கடைசி வார்த்தைகளில் மிகவும் கேவலமாக உணர்ந்தாள் கார்த்திகா.
அதுவரை இருந்த இனிய மனநிலை மாறிவிட, மொத்தமாக மனம் கனத்தது. வாழ்நாள் முழுவதும் இந்தப் பேச்சு கேட்க வேண்டி வருமோ என்று அஞ்சி நின்றாள் அவள்.
ஆனால், தாயின் வார்த்தையைக் கேட்ட குமரன் அப்படியே நிற்பவனா?
“அளவுக்கு மீறி பேசறம்மா நீ.” என்று அன்னையை அவன் விரல் நீட்டி மிரட்ட,
“ஏன்? நான் ஏன் பேசக்கூடாது.? எனக்கு பணம் கொடுக்க இவ யாருடா? என்ன என் புள்ளையை என்கிட்டே இருந்து பிரிச்சு முந்தானில முடிஞ்சுக்கலாம்னு பார்த்தியா.?” என்றவர் குமரனை மீறி கார்த்திகாவை நெருங்கப் பார்க்க,
“போம்மா அந்தாண்ட…” என்று அவரை லேசாக பின்னால் தள்ளினான் குமரன்.
“என்னையாடா தள்ளி விடற. இவ என்ன செஞ்சா தெரியுமா? குழுவுக்கு கட்ட காசு வேணும்னு கேட்டா, எவ்ளோன்னு அந்த சின்னபையன்கிட்ட கேட்டுனு வரச்சொல்லி, 2800 ரூபா எண்ணி எடுத்து குடுத்து இருக்கா. இவ யாருடா எனக்கு கணக்கு பார்க்க?” என்று அவர் மீண்டும் சத்தமிட,
“அவ என் பொண்டாட்டி.” என்று அவர் வாயை அடைத்தான் குமரன்.
“சும்மா அவ யாரு? அவ யாருன்னு கேட்காத. என் பொண்டாட்டி அவ. நீ சொல்றாமாறி கணக்கு பார்க்க எல்லாம் தெரியாது அவளுக்கு. உன்னைப்பத்தி தெரியாம நல்லது பண்றதா நினைச்சு தான் காசு குடுத்து இருப்பா.” என்றவன் “அதோட அவ காசு கொடுத்தா என்ன தப்பு? உனக்கு வேண்டியது காசு. அதை யார் கொடுத்தா என்ன? என்கிட்டே காசு கேட்டு இருப்பிங்க… நான் தூங்கவும் அவ கொடுத்து இருக்கா. இதுல என்ன குறைஞ்சுட்ட நீ?” என்று முகத்திற்கு நேராகவே கேட்டுவிட்டான் அவன்.
“இன்னாடா பேசற நீ. இவ குடுத்து நான் வாங்கணுமா… அந்த அளவுக்கு மயக்கத்துல இருக்கியா.?” என்று நாராசமாக அவர் பேச,
“கவுச்சியா பேசாதம்மா.”
“நான் அப்படித்தான்டா பேசுவேன். என் மகாராணியை நான் பேசக்கூடாதா?கிரீடம் இறங்கிடுமா?” என்று மீண்டும் அவர் தொடங்க,
“ஆமா.. கிரீடம் இறங்கிடும் தான். என் பொண்டாட்டி அவ. இது அவ வூடு. அவ வீட்ல நின்னுகிட்டு அவளையே பேசுவியா நீ. அவகிட்ட ஒழுங்கா பேசு. முடியாதுன்னா வெளியே போ.” என்றான் மகன்.
“ஓஓ… அவ வூடா இது. இந்த ஒழுக்கம்கெட்டவ உனக்கு இந்த அளவுக்கு பாடம் சொல்லி குடுத்துட்டாளா? நான் பேசுவேன். இன்னும்கூட பேசுவேன். பாவி பாவி… பேசவே தெரியாத என் புள்ளைக்கு என்னென்ன எல்லாம் கத்து கொடுத்துட்டா. நீ நல்லா இருப்பியா?” என்றவரை “நீ வெளியே போ.” என்று கையைப் பிடித்து இழுத்து சென்ற குமரனிடம் “பெத்த தாயை வீட்டை விட்டு வெளியே துரத்துவியாடா? உங்க ரெண்டு பேரையும் நடுரோட்டுக்கு இழுக்கல நான் ராணி இல்ல. நான் பேசுற பேச்சுல தூக்குல தொங்கணும் நீங்க.” என்றவர் ஆவேசமாக முடியை அள்ளிக் கொண்டையிட, அதற்கெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை குமரன்.
“போய் பேசு. பேசிட்டு உனக்கு ஒரு புள்ள இருக்கேன்னு மறந்துடு. இதுக்குமேல ஒரு வார்த்தை பேசுன. உன் குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு ஏரியாவை காலி பண்ணிட்டு எங்கேயாவது கண் காணாம போய்டுவேன். நான் போயிட்டா நினச்ச நேரத்துக்கு காசு கொடுக்க எந்த இளிச்சவாயனும் கிடைக்கமாட்டான் உனக்கு. அதை மனசுல வச்சுட்டு பேசு. போ கிளம்பு.” என்றவன் அவரை வாசலில் விட்டு உள்ளே வந்துவிட்டான்.
அவன் பேச்சில் பயம் வந்தாலும், “இன்னாடா ராணியை மிரட்டி பார்க்கிறியா… உனக்கு அம்மா நான்.” என்று விடாமல் ராணி பேச,
“அதுக்குதான் இதுவரைக்கும் மரியாத கொடுத்துட்டு இருக்கேன். நீயே அதை கெடுத்துகிட்டா, நான் என்ன பண்ண முடியும்?” என்றவன் “நீ உன்னால முடிஞ்சதை செய். நான் என்ன செய்யணுமோ, அதை நான் பார்த்துக்கறேன்.” என்றான் சவாலாக.
ராணிக்கு அவன் பேச்சின் அழுத்தம் புரிய, அத்தனைக்கும் காரணம் கார்த்திகாதான் என்று அவரது மொத்த கோபமும் அவள்மீது திரும்பியது. ஆனால், மகனை மீறி எதுவும் செய்ய முடியாதே. அவனும் சொன்னதை செய்பவன் தான் என்பதால் அந்த நேரம் அமைதியாக அங்கிருந்து அகன்றார் அவர்.
அவர் படிகளில் இறங்கவும் குமரன் தன் வீட்டு கதவை தாழிட்டவன் மனைவியிடம் திரும்ப, கண்களில் கண்ணீர் வழிந்ததற்கு இணையாக அவள் விரலில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.
“ஏய். கையைப் பிடி.” என்று அதட்டியவனுக்கு அதுவரை நடந்தது மொத்தமும் மறந்துபோக, வேகமாக மனைவியை நெருங்கி அவள் கையைப் பிடித்தான் குமரன்.
கீழே கிடந்த துணியால் அவள் விரலை அழுத்திப் பிடித்தவன் அவள் கையைப் பிடித்தபடியே சமையல் தடுப்புக்குள் நுழைந்தான். அங்கிருந்த மஞ்சள் டப்பாவில் இருந்து சிறிது மஞ்சளை அள்ளி காயத்தின் மீது அவன் அழுத்த, “ஆஆ…” என்று கத்தினாள் கார்த்திகா.
“ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்ல.” என்றவன் ஒருகையால் அவள் விரலைப் பிடித்திருக்க, மறு கையால் அவளைத் தோளோடு அணைத்து அசையாதபடி பிடித்துக் கொண்டான்.
“வலிக்குதுங்க.” என்று வலி தாங்காமல் அவள் அலற,
“சரி ஆகிடும். இல்லன்னா, ஹாஸ்பிடல் போலாமா?”
“இல்ல வேண்டாம். இந்த மஞ்சள் எரியுது. துணி வச்சு கட்டிட்டா, சரியாகிடும் விடுங்க.” என்று அவனிடம் இருந்து அவள் கையை விலக்கப் பார்க்க,
“சும்மா இரு கார்த்தி. மஞ்சள் வச்சா ரத்தம் நின்னுடும். ஒரு அஞ்சு நிமிஷம் பொறு.” என்று விடாமல் பிடித்திருந்தான் அவன்.
“இல்ல. நீங்க விடுங்க.” என்றவள் தனது ஒற்றைத் திமிறலில் அவன் பிடியிலிருந்து வெளியே வந்திருந்தாள். குமரன் தவறாக எடுத்துக் கொண்டாளோ என்று அவள் முகம் பார்க்க, “நான்… நான் அப்படியெல்லாம் இல்ல. உங்களை மயக்க எல்லாம் எதுவும் பண்ணல… சத்தியமா இல்ல. நான் கெட்டப்பொண்ணு இல்ல.” என்று பாவமாக கூறிக்கொண்டே தேம்பியழுதாள் கார்த்திகா.
‘இந்த அம்மாவை’ என்று மனதிற்குள் பல்லைக் கடித்தவன் “அவங்க சொல்றதை எல்லாம் காதுல வாங்குவியா கார்த்தி நீ. அவங்க சொன்னா நீ கெட்டவளா?” என்று கேட்டுக்கொண்டே அவன் கார்த்திகாவை நெருங்க,
“ப்ளீஸ் என்கிட்ட வராதீங்க. அதுக்கும் என்னை தான் பேசுவாங்க.” என்று அவள் பின்னடைய,
“ஒரு அறை விட்டா பல்லு பேந்துடும் கார்த்தி. பைத்தியமா நீ.” என்று கத்தியவன் ஒரு கையை நீட்டி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
‘விடவே மாட்டேன்.’ என்று உரைப்பவன் போல் இடது கையால் அவள் கழுத்தைப் வளைத்து கட்டிக் கொண்டிருந்தான் அவன். ‘அருகில் வராதே’ என்று அணையிட்டவளுக்கும் விலகும் எண்ணம் வராமல் போனது தான் அங்கே பேரதிசயம்.
ஆம். கார்த்தி அவன் அணைப்பை வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. மாறாக அவன் அணைப்பில் ஆறுதலைத் தேடினாள் அவள். குமரன் அணிந்திருந்த சட்டையின் காலரை ஒரு கையால் இறுகப் பற்றியிருந்தவள் அவன் நெஞ்சில் புதைந்து கதறிக் கொண்டிருந்தாள்.
அவளின் மற்றொரு கை குமரனை அணைத்திருந்தது. உணர்ந்து செய்தாளா என்று தெரியாதபோதும் அவளது முதல் அணைப்பு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத தேவ கணங்கள் அந்த நிமிடங்கள். ஆனால், குமரனால் அந்த நொடிகளை முழுதாக அனுபவிக்க முடியாமல் போனது தான் வேதனை.
அவனை அத்தனை இறுக்கமாக கட்டிக்கொண்டு இருந்தாலும், காதலில் கசிந்து விடவில்லையே அவள். ராணியின் வார்த்தைகளின் கனம் தாங்காமல் ஒரு பற்றுக்கோலாக மட்டுமே அவனைப் பற்றியிருக்கிறாளே… அதுவும் அவள் இப்படி கண்ணீர் வடிக்கையில் எங்கே அணைப்பை அனுபவிப்பது.
குமரனுக்கு வேறெதையும் விட, அவள் கண்ணீர் தான் முதன்மையாகப் பட்டது. அவன் நெஞ்சம் “ஆம்பளையாடா நீ.” என்று அசிங்கமாக அவனை குற்றம்சாட்ட, தாயின் செயலுக்காக தன்னை தண்டித்துக் கொண்டிருந்தான் அவன்.
“ப்ளீஸ் கார்த்தி அழாத… நீ அழறது எனக்கு அசிங்கமா இருக்கு. பொண்டாட்டியை அழ விட்டு வேடிக்கைப் பார்க்கிறவன் எல்லாம் ஆம்பளையே இல்லன்னு நினைச்சிருக்கேன். ஆனா, என்னைக் கட்டிக்கிட்டு நீ எப்பவும் அழ மட்டும் தான் செய்யுற. ரொம்ப கேவலமா இருக்கு கார்த்தி.” என்றவன் வார்த்தைகளில் வலி மிகுந்திருக்க, கண்ணீருடன் அவன் முகம் பார்த்தாள் கார்த்தி.
அவன் முகத்தில் இருந்த வருத்தமும், அவன் கண்களில் கரை தட்டி நின்ற கண்ணீரும் அவன் தனக்காக துடிப்பதை, தனக்காக வேதனை கொள்வதை உணர்த்த, அவன் முகம் பார்க்கவும் இன்னும் தேம்பியது அவளுக்கு. அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்த அதே நிமிடம் குமரனின் கண்ணில் இருந்த கண்ணீர் துளி அவள் கன்னத்தில் விழ, அதுவரை அழுது கொண்டிருந்ததை மறந்து போனாள் கார்த்தி.
தன் கண்ணில் வழிந்த கண்ணீரைக் குறித்து கவலை கொள்ளாமல், “அழாதீங்க…” என்று தன் கையால் குமரனின் கண்ணீரை அவள் துடைத்துவிட, அவள் கையைப் பிடித்துக் கொண்டவன் “உன் வாழ்க்கையை மொத்தமா நாசமாக்கிட்டேன் இல்ல.” என்று கலங்கி நிற்க,
“உளறாதீங்க…” என்று அவனை அதட்டினாள் மனைவி.
“சாரி கார்த்தி.” என்று அவன் இதழ்கள் மன்னிப்பை வேண்டி நிற்க,
“நீங்களும் ஏன் இப்படி பண்றிங்க. எனக்கு கஷ்டமா இருக்குங்க. அழாதீங்க.” என்று மீண்டும் அவன் குழந்தை கலங்க முற்பட, சட்டென தன்னை தேற்றிக் கொண்டான் குமரன்.
அவள் அழுகை அதிகரிக்கவும், “இல்ல… நான் அழல… நீயும் அழாத.” என்றவன் அவள் கண்ணீரை அழுத்தமாக துடைத்து அவள் முகத்தையும் துடைத்துவிட, அதுவரையிலும் அவன் அணைப்பில் தான் நின்றிருந்தாள் அவள்.
இருவருக்குமே அந்த நேரம் மற்றவரின் அருகாமை மிகத் தேவையாக இருந்தது. ஆனால், இருவருமே ஆறுதலைத் தாண்டி ஆராதிக்கும் நிலையை தொட முயற்சிக்கவில்லை.