கார்த்திகாவின் கல்லூரி நேரம் முடிந்து அதற்குமேலும் அரைமணி நேரம் கடந்திருக்க, இன்னமும் அவளை அழைத்துச் செல்ல குமரன் வரவில்லை. எப்போதும் கல்லூரி விடும் நேரத்திற்கு முன்பே வந்து வாசலில் நிற்பவன் இன்று இன்னமும் வராததில் கவலையாக அமர்ந்திருந்தாள் கார்த்தி. அவளுக்கு துணையாக அவளின் தோழிகள் பூர்ணியும், தர்ஷனாவும் இருந்தாலும், மனம் குமரனைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி கிடந்தது.
இவர்கள் காத்திருப்பு மேலும் அரைமணி நேரம் நீண்டபோதும், குமரன் வராமல் போனதில் கார்த்திகா கண்ணைக் கசக்க தொடங்கிட, மேலும் பத்து நிமிடங்கள் கழித்து பூச்சி வந்து நின்றான்.
கார்த்திகா அவன் ஆட்டோவை கண்டதும் வேகமாக அவனை நெருங்க,”வா கார்த்தி போலாம்… குமரன் ஒரு முக்கியமான வேலையா வெளியே மாட்டிட்டு இருக்கான். நீ வா நான் வீட்ல விடறேன்.” என்றான் பூச்சி.
“என்கிட்டே சொல்லவே இல்லையேண்ணா.” என்று கார்த்தி கவலை கொள்ள,
“என்கிட்ட சொல்லிட்டு தான் போனான்மா. நான் வேற சவாரில இருக்கவும் லேட்டாயிடுச்சு.” என்றான் அவன்.
கார்த்தி அதற்குமேல் ஒன்றும் கேட்காமல் ஆட்டோவில் ஏற முயல, “இவனை நம்பி போவியா நீ.” என்று அவளை பிடித்து இழுத்து நிறுத்திக் கொண்டாள் பூர்ணி.
அதில் கோபம் கொண்டவனாக பூச்சி அவளை முறைக்க, “இப்போ பயமில்லை பூர்ணி. பூச்சியண்ணா அவரோட ப்ரெண்ட், அது ஒன்னு போதும். அவரை முழுசா நம்பலாம். நான் வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பண்றேன்.” என்றவள் பூச்சியின் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
பூச்சி பூர்ணியை நக்கலாக பார்த்துவிட்டு ஆட்டோவில் ஏற, அவனை கண்டுகொள்ளாமல் “வீட்டுக்கு போனதும் கூப்பிடு.” என்று மீண்டும் நினைவூட்டி அனுப்பினாள் பூர்ணி.
கார்த்திகா ஆட்டோவில் ஏறிய இரண்டு நிமிடத்திற்கெல்லாம் “அவர் எங்கண்ணா போயிருக்காரு?” என்றாள் பூச்சியிடம்.
பூச்சி சட்டென முழித்து தன்னை காட்டிக் கொடுக்க, “லேட் ஆச்சுன்னா, எனக்கு போன் பண்ணி சொல்வாங்க. இப்படி வராம இருக்கமாட்டாங்க. உண்மையை சொல்லுங்க. எங்கே அவங்க?” என்று கொஞ்சம் சத்தமாக கேட்டவளை பூச்சி அதிசயமாக பார்க்க,
“ப்ளீஸ்ண்ணா… உண்மையை சொல்லுங்க. திரும்பவும் ஏதாவது பிரச்சனையா?” என்றாள் பூச்சியிடம்.
பூச்சிக்கும் அவளிடம் மறைக்கும் எண்ணம் இல்லாததால், “குமரனுக்கு உடம்பு சரியில்லம்மா. ஹாஸ்பிடல்ல இருக்கான்.” என்று உண்மையை கூறிவிட்டான்.
“காலையில நல்லாதானே இருந்தாங்க. என்ன ஆச்சு உடம்புக்கு? இதை முன்னாடியே ஏன் என்கிட்டே சொல்லல?” என்று அவள் பதட்டமடைய,
“அவன்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னான். நீ கஷ்டப்படுவியாம்.” என்ற பூச்சியிடம் “என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்கண்ணா.” என்றாள் கார்த்தி.
“திட்டுவான்மா.”
“அப்போ என்னை இறக்கி விடுங்க. நான் வேற ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிடல் போறேன்.” என்றாள் கார்த்தி.
பூச்சி அதற்குமேல் மறுக்காமல் அவளை குமரன் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கே ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது அவனுக்கு.
எப்போதும் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பவன் ஓய்ந்து படுத்திருக்க, அவனைக் கண்டதும் அழுகையே வந்துவிட்டது கார்த்திகாவுக்கு. காலையில் சிரித்துக்கொண்டே தன்னிடம் விடைபெற்றதை நினைத்து அழுதவள் மெதுவாக சென்று அவன் அருகில் அமர, பக்கத்து பெட்டில் இருந்த பெண்மணி “உன் வீட்டுக்காரனாம்மா.” என்றார்.
குமரன் அப்போதும் கண்திறக்காமல் படுத்திருக்க, “என்ன பிரச்சனை?” என்றார் அந்த பெண்மணி.
“தெரியாது.” என்று தேம்பிக்கொண்டே கார்த்திகா கூற, அவளது குரல் கேட்கவும், வேகமாக கண்களைத் திறந்து பார்த்தான் குமரன்.
அங்கே அழுகையுடன் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து அவன் திகைக்க, அவன் திகைப்பை கவனிக்காமல் கண்களைத் துடைத்துக்கொண்டே இருந்தாள் மனைவி.
‘எனக்காகவா அழறா.” என்று அந்த நேரத்திலும் மனம் குதூகலிக்க, “எனக்கு அழுகை வருது. சும்மா முறைக்காதீங்க.” என்று அதற்கும் அழுதாள் மனைவி.
அவள் கூறியது தாமதமாகவே அவனுக்குப் புரிய, புரிந்ததில் சிரித்துவிட்டான். சிரிக்கும்போதே வயிற்றில் ஊசியாக குத்தியது வலி. அதை அவளிடம் காண்பிக்காமல், “சரி முறைக்கல. அழாத.” என்றான் சமாதானமாக.
“என்கிட்ட சொல்லவேண்டாம் சொன்னிங்களா?”
“ம்ம்ம்.”
“ஏன்?”
“இந்த அழுமூஞ்சியை பார்க்க சகிக்காமத்தான்.”
“நீங்கதானே தூக்கிட்டு வந்திங்க?”
“ம்ம்ம்ம்.”
“போறேன்னு சொல்லியும், விடாம பிடிச்சு வச்சீங்க.”
“ம்ம்ம்ம்.”
“என்ன ம்ம்ம்ம்?”
“உன்னை ரொம்ப படுத்துறேனா.”
“ம்ம்ம்ம் “
“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீ நிம்மதியா இருக்கலாம். யோசிச்சுக்கோ.” என்று குமரன் கூறிவிட,
“ஏன் இப்படி பேசறீங்க?” என்று தேம்பியழுதாள் கார்த்திகா.
அவளது அழுகை சத்தம் அதிகரிக்கவும், “ஏய். அழுது ஊரைக் கூட்டாத. வெளியே துரத்திடுவாங்க. இங்கே பார், ட்ரிப்ஸ் வேற ஏறுது.” என்று தன் கையை அவள் முன்பாக தூக்கி காண்பித்தான் அவன்.
ஊசி குத்திய இடம் லேசாக வலிக்கவும், அவன் லேசாக முகம் சுருக்க “பார்த்து பார்த்து..” என்று பதறினாள் மனைவி.
குமரன் மீண்டும் சரியாக படுத்துக்கொள்ள, “என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றாள் மனைவி.
“இப்போவாச்சும் கேட்டியே.” என்று அப்போதும் நக்கலடித்தவன் “வயித்துவலின்னு வந்தா ஊசியைக் குதி படுக்க வச்சுட்டானுங்க. இது இல்லாம ஸ்கேன் வேற. காசு பிடுங்க முடிவு பண்ணிட்டானுங்க போல.” என்றான் சாதாரணமாக.
“அப்படி எல்லாம் பேசாதீங்க.” என்றவள் “எவ்ளோ நேரமா வயிறு வலிக்குது?” என,
“அப்பப்போ லேசா வலிக்கும். கடையில கலர் வாங்கி குடிச்சா சரியாவும். காலையில கலர் குடிச்சும் சரியாகல. வாந்தி எடுத்துட்டேன். தலைவேற சுத்துச்சு.” என்று வரிசையாக அவன் கூறியதில் இவள்தான் பயந்து போனாள்.
அவள் முகத்திலேயே அவள் பயத்தை உணர்ந்து கொண்டவன் “ஒன்னும் இருக்காது. நல்லாதானே இருக்கேன். சும்மா அழுதுட்டு இருக்காத.” என, அவனை மறுத்துப் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டாள் அவள்.
ஆனாலும், உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்க, அது சரிதான் என்றார் அவனை சோதித்த மருத்துவர். உடலின் உஷ்ணம் ஏகத்திற்கும் அதிகரித்திருக்க, நீர்ச்சத்தே இல்லாமல் தான் துவண்டு போயிருந்தது அவன் உடல்.
இதில் சிறுநீரகத்திலும் சிறிய அளவில் ஒரு கல் இருப்பதாக அவர் கூறிவிட, குமரன் பயந்தானோ இல்லையோ, கார்த்திகா பயந்து போனாள். ஆனால், ‘ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டதால் பெரிதாக எதுவும் பாதிப்பு இல்லை, மருந்துகளின் வழியே வெளியேற்றிவிடலாம்’ என்றார் மருத்துவர்.
அந்த வார்த்தைக்கு பின்தான் கார்த்திகா நிம்மதியானாள். குமரன் வேறு வாய்க்கு வந்தபடி பேசி வைத்திருக்க, பயந்துகொண்டே தான் இருந்தாள் இப்போதுவரை.
குமரனை அன்றே வீட்டிற்கு அனுப்பி விட்டாலும், ஏகப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள். இன்னும் ஒரு மாதத்திற்கு மாத்திரைகளும், வாரத்திற்கு மூன்று நாட்கள் ஊசியும் போட வேண்டும். அது இல்லாமல் உணவிலும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி இருந்தனர்.
மருத்துவர் கூறிய அத்தனையும் குமரனைவிட சிரத்தையாக கார்த்திகா கவனித்துக் கொண்டிருக்க, “பில்லு எவ்ளோ வரப்போகுதோ?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் குமரன்.
ஒருவழியாக இருவரும் அன்று மாலை வேளையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப, ஒரு மாதத்திற்கான மாத்திரைகள், மருத்துவமனை செலவு என்று ஐந்தாயிரம் செலவாகி இருந்தது. இதில் வாரத்தில் மூன்று முறை மருத்துவமனைக்கு வேறு வர சொல்லியிருக்க, ஒன்றுமே புரியாத நிலையில் தான் இருந்தான் குமரன்.
கார்த்திகாவுக்கு அவனது பணப்பிரச்சனைகள் குறித்து ஓரளவு யூகம் இருந்தது. ராணி யாரையாவது தூது விடும் நேரமெல்லாம் சட்டைப்பையில் பணத்தை திணித்துக்கொண்டு அவன் ஓடுவதை அவளும் பார்த்துக்கொண்டே தானே இருக்கிறாள். பிறகு தெரியாமல் எப்படி போகும்?
இப்போதும் அமைதியாக சாய்ந்து அமர்ந்து இருந்தாலும், அவன் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை அவனது நெற்றிச்சுருக்கம் உறுதிப்படுத்த, அருகில் நெருங்கி அவன் தலையை நீவிவிடும் அளவு நெருக்கமில்லாததால் தள்ளித்தான் நின்றாள் அவள்.