அத்தியாயம் 26
அர்ஜூன் அறைக்கு வந்த நர்ஸ் இருவரையும் பார்த்து கத்த, இருவரும் விழித்தனர். அர்ஜூன் கால் மீது காலை போட்டுக் கொண்டு அவனது கையணைப்பில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ பயந்து விழித்தாள்.
அர்ஜூன் சாதாரணமாக கையை உயர்த்தி சோம்பலை முறித்துக் கொண்டு எழுந்தான். எழவிருந்த ஸ்ரீயை இறுக்கமாக பிடித்து,
என்ன பண்றீங்க சிஸ்டர்? என்னோட ஏஞ்சல் எழுந்துட்டா பாருங்க. அவளை விழிக்க வைச்சுட்டீங்களே? என்று அவளை அணைத்தவாறு பேசிக் கொண்டிருக்க சத்தம் கேட்டு நண்பர் கூட்டம் அங்கே வந்தது.
அகில் இருவரையும் பார்த்து, ஏன்டா மானத்தை வாங்குறீங்க? என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியே சென்றான். தாரிகாவும் நிவாஸூம் அமைதியாக உள்ளே வந்து அமர்ந்தனர்.
இன்பா, அபி, இதயா, தருண் கையை கட்டிக் கொண்டு முறைத்தனர்.
நான் ஏதும் பண்ணவில்லை என்று ஸ்ரீ அர்ஜூனிடமிருந்து விலக, என்ன ஏஞ்சல் இப்படி வெட்கப்படுற? ஸ்ரீயை அவன் பக்கம் அவன் இழுக்க,
டேய்..ராஸ்கல் என்னடா பேசுற? என்று ஸ்ரீ அர்ஜூனை செல்லமாக அடித்தாள். இன்பா ஸ்ரீயை உற்று கவனித்தாள்.
என்ன மேம். அப்படி அவளை பாக்குறீங்க? அர்ஜூன் கேட்க, நீ என்ன செஞ்சுக்கிட்டு இருக்க. கொஞ்சமாவது சீரியசா இரேன்.
மேம்..எனக்கு என்னோட ஏஞ்சல சீரியசா பாக்கவே முடியல. நாங்க சத்தியமா தூக்கிக்கிட்டு தான் இருந்தோம் என்று அவன் இரு பொருள் பட கூற, அர்ஜூன் போதும் பேசாத ஸ்ரீ கூறினாள்.
ஸ்ரீ நாம தூங்க மட்டும் தான செய்தோம் என்று அர்ஜூன் மீண்டும் கூற ஸ்ரீ கோபத்தில் அறையிலிருந்ததை தூக்கி எறிய ஆரம்பித்தாள்.
நிவாஸும் தாரிகாவும் அவளை தடுக்க, அவள் எறிந்த பொருட்களிலிருந்து அனைவரும் தப்ப அங்கங்கு நகர்ந்து கொண்டிருந்தனர். அங்கு வந்த தேவ் மீது பொருட்கள் பட, அர்ஜூன் பயங்கரமாக சிரித்தான்.
சார்,..உங்கள யாரை உள்ள வரச் சொன்னது?
நான் மருத்துவர். நான் வராமல் என்று திரும்பி பார்த்தான். எல்லா செவிலியரும் அவன் பின் மறைந்து நின்றனர்.
முன் வந்த ஒரு பொண்ணு டாக்டர், உங்க நெற்றியில் பிளட் என்று அவன் அருகே வந்தாள்.
ஏம்மா..அந்த பொண்ணு தூக்கி எறிஞ்சப்ப எங்கம்மா போன? அவன் பாவமாக கேட்டான். சார் எனக்கு பட வேண்டிய அடி தான் சார் இது என்றார் அந்த செவிலியர்.
ரொம்ப நல்லதும்மா..நானே பார்த்துக்கிறேன் என்று ஸ்ரீ,அர்ஜூனை பார்த்தான் தேவ்.
சாரி சார் என்று ஸ்ரீ தேவ் அருகே வந்து, நான் மருந்து போட்டு விடுறேன் சார் என்றார். அவனும் வேகமாக நெற்றியை காட்டினான்.
அர்ஜூன் ஸ்ரீயிடம் வந்து, சார் டாக்டர் மா..அவருக்கு அவரால போட்டுக்க முடியும். என்ன சார் அப்படித்தானே? என்று இருவருக்கும் இடையே வந்து நின்றான்.
தாரிகாவுக்கும் நிவாஸிற்கும் அர்ஜூனின் நடவடிக்கை வித்தியாசமாக பட்டது. ஸ்ரீ அவன் காதலை ஏற்றுக் கொண்டது போல் நடந்து கொள்கிறானே? என்று எண்ணினர்.
கொஞ்சம் உன் காலை கவனிக்கலாமா? தேவ் கேட்க செவிலியர் தேவிற்கு முதலில் மருந்து போட்டு விட்டு பின் ஸ்ரீயின் காயத்தை கவனித்து, நீங்க இன்றே கிளம்பலாம் என்று அபி தருண் நிவாஸிடம் நீங்களும் தான். தினமும் ஒரு முறை வந்து சென்றால் போதும் என்றான்.
ஏன்டா, ஏதோ காரணம் கூறி அந்த பையனை அறைக்குள்ளே இன்னும் சரியாகவில்லைன்னு சொல்ல சொன்னீங்க? ஆனா அவன் இப்படி சாவகாசமாக சுற்றி திரிகிறான் என்று தருணை பார்த்து தேவ் கேட்டான். ஆம் தருண் சீரியசாக தான் இருந்தான். ஆனால் ஒரு வாரம் முடிந்து நடக்க ஆரம்பித்தான் அறையினுள்ளே. அர்ஜூன் தான் அவனை வெளியே வர வேண்டாம்னு சொல்லி இருந்தான்.
தேங்க்ஸ் சார். நான் நினைத்த வேலை முடிந்தது. அதான் அவன் வெளியே வந்து விட்டான் என்று அர்ஜூன் கூற, அனைவரும் புரியாமல் விழித்தனர்.
எல்லாரும் உங்க மூட்டை முடிச்சை கட்டிட்டி கிளம்பிடுங்க..எங்க ஹாஸ்பிட்டல உங்களால எவ்வளவு சத்தம்..கிளம்புங்கடா என்று தேவ் அனைவரையும் விரட்டினான்.
சார்..இப்படி பேசினீங்க மேலிடத்தில் கம்பிளைண்ட் பைல் பண்ணிடுவோம் அர்ஜூன் கூற,
போடா பண்ணு.
ஓ.கே உங்க அம்மா நம்பர் கொடுங்க பண்ணிடுவோம்.
அடப்பாவி..எனக்கு சாப்பாட்டையே கட் பண்ணீடுவீங்க போல..டேஞ்ஜரஸ் பெல்லோ என்று தேவ்..நிவாஸை பார்த்து,
மாப்பிள்ள இந்த பசங்களோட சேராதீங்க என்று கூறி விட்டு வெளியே செல்ல, தேவ்வை பார்த்து அனைவரும் நகைத்தனர்.
அர்ஜூன், நீ என்ன பிளான் வைச்சிருக்க? ஸ்ரீ கேட்டாள்.
பிளானா? என்று அவளருகே வந்தவன், நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?
அகில் கோபமாக உள்ளே நுழைந்தான்.
அர்ஜூன் போதும் உன்னோட விளையாட்டு. தருண் உனக்கும் அர்ஜூன் பிளான் தெரியும் தானே?
ம்ம்..அஃப் கோர்ஸ் என்று தோளை குலுக்கினான். சினத்துடன் இன்பாவும் இதயாவும் வந்தனர். உன்னை நினைச்சு எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? எங்கள பைத்தியமாக்கீட்டீங்களடா.. என்று இன்பா தருண் சட்டையை பிடித்தான்.
மேம்..பொறுமை..பொறுமை..என்று அர்ஜூன் கூற,
டேய்..எல்லாத்துக்கும் காரணமே நீ தானே? அம்மா வீட்ல சரியா கூட ஓய்வெடுக்கல. இவனுக்காக இங்கேயே இருந்து கஷ்டப்பட்டாங்க என்று திட்டினாள்.
மேம் அவன விடாதீங்க அகில் எடுத்து கொடுக்க, அடப்பாவி என்னை இப்படி மாட்டி விடுறியேடா? பாவி என்று அகிலிடம் அர்ஜூன் கூறினான்.
மேம்..நான் கண்டுபிடிச்சிட்டேன். எல்லா பிரச்சனைக்கும் காரணமானவனை எனக்கு தெரியும் என்றான் அர்ஜூன்.
இன்பா அவனை விட்டு, யாருடா அது? கேட்டாள்.
நோ..மேம். நம்ம எல்லாருக்கும் அவங்க பத்தி தெரியிறது நல்லதில்லை. நானே சொல்கிறேன். அதுவரை அனைவரும் காத்திருங்கள் என்று ஸ்ரீ நிவாஸ் இருவரையும் பார்த்தான்.
அர்ஜூன், சொல்லிடு..அகில் கோபமாக கையை ஓங்க, இதயா அவனை தடுத்து அர்ஜூன் சொன்னா காரணம் இருக்கும்.
எஸ்..காரணம் இருக்கு. அந்த காரணம் நாம் அவனை கண்டுபிடித்தது யாருக்குமே தெரியக் கூடாது. அவங்க ஆள் ஒருவனுக்கு தெரிந்தாலும் முதல்ல அவங்க பிடிப்பது நிவாஸை தான். பின் ஸ்ரீ..அடுத்து நாமும் நம் குடும்பமும் தான்.
அவனை வெளியே வர வைக்கும் நேரம் வந்துவிட்டது. ஆனால் அதுவும் ஒரு வாரம் கழித்து தான். நான் நேரடியாக மோத தான் நினைத்தேன். ஆனால் அவனுக்கு எதிராகநம்மிடமுள்ள ஆதாரம் போதாது. நாம் முதலில் நினைத்தது போல் கயலை வைத்து தான் பிடிக்கப்போகிறோம். அதற்காக நம் ஊருக்கு தான் செல்லணும்.
நாம் தொலைத்ததை தொலைத்த இடத்தில் தானே தேடணும் அர்ஜூன் கூற,
என்ன சொல்ற அர்ஜூன்? நம் ஊரில் தொலைந்ததா? அபி கேட்டான்.
அகில் உனக்கு நினைவிருக்கா? அன்று உன்னையும் ஸ்ரீயும் கடத்தியது. அதுவும் இவன் கூறி நடந்தது.
கடத்தியவன் தானா? அகில் கேட்க,
அகில் நம் ஊரிலோ..இல்ல பக்கத்து ஊர் ஆட்களை வைத்து தான் உங்களை கடத்தினார்கள். ஆனால் கடத்த திட்டம் போட்டது. அவர்களை சென்னை வர வைக்க தான். அதுவும் நாம் தேடும் இவன் தான். முக்கியமான விசயம் ஸ்ரீ நிவாஸை பார்த்து, உண்மையாகவே உங்களுடன் இருந்தது உங்க ஆன்ட்டி தானான்னு சந்தேகமா இருக்கு என்றான் அர்ஜூன்.
எப்படி அர்ஜூன் சொல்ற? நிவாஸ் கேட்க,
அவங்க நடந்து கொள்ளும் விதம் தான் நிவாஸ். ஒரு நேரம் ரொம்ப சாதுவா பேசுற மாதிரியும் மறு நேரம் கொலைகாரி பேசுவது போலும் உள்ளது.
ம்ம்..எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. ஒரு முறை கோபமாக ஒரு காரணத்தால் கழுத்தை நெறித்தவர், அதே காரணத்தால் மறுமுறை கோபமாக மட்டும் பேசினார் என்று ஸ்ரீ கூறினாள்.
சரி..அதை நாங்க பார்த்துக்கிறோம் என்று ஸ்ரீயிடம் கூறிய அர்ஜூன், எங்களிடம் சொல்லாமல் ஏதும் செய்து விடாதே ஸ்ரீ என்று எச்சரித்தான். தருண், அபி, இன்பா ஸ்ரீயை பார்த்தனர். அர்ஜூனை பார்த்து புன்னகையுடன் நின்றாள்.
ஸ்ரீயின் அந்த புன்னகையில் இன்பாவிற்கு சந்தேகம் ஊர்ஜிதமானது. அவள் ஏதோ செய்ய போகிறாள் என்று உணர்ந்தாள்.
அகில் புதன்கிழமை உங்க நிகழ்ச்சி முடியும். மறுநாள் காலையே நாம எல்லாரும் ஊருக்கு கிளம்புகிறோம். எல்லாருமே கண்டிப்பாக வரணும். யார் தனியே இருந்தாலும் ஆபத்து தான்.
அர்ஜூன் சைலேஷ் வருவானா? இன்பா கேட்க, வருவாங்க மேம். நீங்களும் உங்க குடும்பத்தோட வரணும். நாளைக்கு கண்டிப்பா வாரீங்க. அண்ணா மட்டும் தான் அங்க பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஆதேஷ் அங்கே இருப்பதால் அண்ணனுடன் போய் பார்த்துட்டு வர சொல்ல போறேன்.
அப்புறம்..நாம திட்டப்படி ஆன்லைன்ல பண்ணல. நேரடியா பண்ணப்போறோம். நம்மள பார்த்து தான் அவன் வெளியே வருவான். பிடிக்கணும் என்றான் அர்ஜூன்.
அர்ஜூன் இது கொஞ்சம் ரிஸ்கா தெரியுதே? ஸ்ரீ கேட்டாள்.
கஷ்டமில்லாமல் எதுவும் கிடைக்காது ஸ்ரீ.
இல்ல அர்ஜூன். தேவையில்லாமல் எதுக்கு எல்லாரும்?
என்ன ஸ்ரீ பேசுற? தேவையில்லாமலா? உனக்காகன்னு நினைக்கிறியா? இதில் நீ மட்டுமல்ல எல்லாரும் இருக்காங்க. இப்ப ஒருவர் தனியா அவங்க கையில சிக்கினா எல்லாரும் மாட்டுவாங்க என்று இன்பா கொந்தளித்தாள். இது தான் அடுத்து நடக்கவிருக்கிறது என்று தெரியாமலே பேசினாள் இன்பா.
ஸ்ரீ நீ அமைதியா இருந்தாலே போதும். ரொம்ப யோசிச்சு ஏதாவது செய்றேன்னு பிரச்சனைய இழுத்த நான் பொல்லாதவனாகி விடுவேன் என்று அர்ஜூன் மீண்டும் எச்சரித்தான். அவள் அமைதியாக தலையாட்டினாள்.
எல்லாத்தையும் எடுங்க..கிளம்பலாம். தாரி நீ அம்மாவிடம் சொல்லிடு. நான் வாரேன் என்று மோகனிடம் பேசினான்.
அனைவரும் மருத்துவமனையிலிருந்து கிளம்பினார்கள். இதயா தருணை முறைத்துக் கொண்டு எடுத்து வைத்தாள். தருண் இன்பாவிடம் கண்ணை காட்ட, அம்மா அவ எடுத்துட்டு வரட்டும் என்று இருவரும் வெளியே வந்தனர்.
தருண் இதயா முன் வந்தான். அவள் அவனை சினத்துடன் நோக்கினாள். அவர்கள் அம்மாவும் அவனை முறைத்துக் கொண்டு தான் சென்றிருப்பார்.
ப்ளீஸ் கோபப்படாதே..ஸ்வீட் ஹார்ட்.
அவள் எடுத்து வைத்துக் கொண்டே இருக்க, அவளது கையை பிடித்து அவன் புறம் இழுத்தான். அவள் அவனருகே வர, ஏதாவது திட்டவாது செய்யேன்.
திட்டவா? ஏன்டா, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? அழுதாள். அவளை அணைத்துக் கொண்டு, நான் உடனே சரியானால் அவங்க அபி யாசு போல் மற்றவர்களையும் தாக்கி இருப்பார்கள். அதுமட்டுமல்ல..நான் இப்படி இருந்ததால் தான் அர்ஜூனால் அனைத்தையும் கண்டறிய முடிந்தது.
கொலை செய்பவன் ஸ்ரீ நிவாசிற்கு நெருக்கமானவர். விபத்து நடக்கும் முன்பே எனக்கு புரிந்து விட்டது. இவர்களுக்கு தெரிந்தவராக இருப்பார்கள் என்று தான். அதனால் தான் அவங்க கம்பெனி விசயத்தை தேட ஆரம்பித்தேன். அதனால் தான் என்னை கொல்ல முயன்றிருக்கிறார்கள். எனக்கு இன்னும் முழுவதும் சரியாகவில்லை. என்னால் யாருடனும் சண்டை போட முடியாது. அதனால் தான் அர்ஜூன் இப்பொழுது கூட சொல்ல வேண்டாம். புதனன்று சொல்லலாம்ன்னு சொன்னான். ஆனால் இத்தனை நாள் மறைத்ததே கஷ்டமா இருந்தது. அதான் நானே வெளியே வந்துட்டேன்.
அப்ப..உனக்கு முழுசா சரியாகலையா?
ம்ம்..என்றான்.
நானும் அர்ஜூன் வீட்டிற்கு வரவா? இதயா கேட்டாள்.
அதெல்லாம் வேண்டாம். நீங்க யாரும் தனியே வெளியே செல்லாமல் இருந்தாலே போதும். எனக்கு ஏதாவது வேண்டுமே? நான் சன்டே ஊருக்கு போகலாம்ன்னு இருக்கேன்.
இப்ப தான் சரியாகலைன்னு சொன்ன? அப்புறம் என்ன ஊருக்கு?
புவி தனியா இருப்பாளே?
அவ தனியா இல்லை. அவள பார்த்துக்க ஒரு குடும்பமே இருக்கு. நீ கவலைப்படாதே?
அவங்கள் பத்தி தெரியாம பேசாத?
எனக்கு எல்லாமே தெரியும். அபி சொன்னான். தப்பு பண்றவங்க எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அவருக்கு புவியை பிடிச்சதால தான் அவ்வளவு பெரிய பள்ளமென்று பாராமல் குதித்திருக்கிறார்.
“கரணம் தப்பினால் மரணம்” என்று தெரிந்து யாராவது குதிப்பாங்களா?
இல்ல இதயா.
பேசியது போதும். எடுத்து வைக்கணும். நீ வெளிய போ.
நீ கொடு போறேன் என்றான்.
கொடுக்கணுமா? போடா டேய்..என்னை ஏமாத்துனேல. அதுக்கு தண்டனையா உனக்கு ஏதும் கிடையாது.
கிடையாதா? என்று அவனாகவே அவளது இதழ்களை இம்சித்தான். அவனை விலக்கிய இதயா, அம்மா வெளிய இருக்காங்கடா..ஒழுங்கா ஓடிடி..அவங்களும் உன் மீது கோபத்தில் தான் இருக்காங்க என்றாள்.
அவனுக்கு அவன் அம்மா நினைவு வர, ஏதும் பேசாமல் கண்ணீருடன் வெளியேறினான். அம்மாவும் இன்பாவும் அவனை பார்த்து விட்டு உள்ளே பார்த்தனர்.
ஏய்..என்னடி பண்ண? அவன் அழுதுகிட்டே போறான்?
அழுறானா? நான் ஒன்றும் செய்யவில்லை என்று அவளுக்கு கடைசியாக அம்மா..என்று கூறியது நினைவுக்கு வந்தது.
அவனுக்கு அவன் அம்மா நினைவு வந்துருச்சு போல என்று அக்கா இத எடுத்து வை..நான் அவனை பார்த்துட்டு வாரேன்.
நீ இரு. நான் போறேன் என்று இதயாவின் அம்மா தருணை தேடி சென்றார். அவன் ஓரிடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.
தம்பி..என்று அவனை அழைத்தான். சட்டென எழுந்தான். உட்கார் என்று அவரும் அமர்ந்தார்.
அம்மா இல்லைன்னு கஷ்டப்படாதப்பா. நாங்க எல்லாரும் இருக்கோம். நீயே அழுதால் உன்னோட பாப்பாவை எப்படி அழாமல் பார்த்துப்ப. ரொம்ப கஷ்டம் தான். கடவுள் ஒன்றை பறிச்சா இன்னொன்று கொடுப்பார். நாங்க இருக்கோம். இதயா கடைசி வரை உங்களுடன் இருப்பா அவர் கூற, கண்களை துடைத்து விட்டு நாம கிளம்புவோமா ஆன்ட்டி?
நீ அழாம இருந்தா கிளம்பலாம். இதயா பார்த்தா கேலி செய்தே சாவடிச்சிடுவா?
நான் உங்களிடமும் மறைச்சிட்டேன். சாரி ஆன்ட்டி என்று கூற, அர்ஜூன் அங்கு வந்து, இங்க என்ன செய்றீங்க? வாங்க கிளம்பலாம் என்று அழைத்தான். அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.