கவிதா, அவளுடைய தோழி, சுந்தர் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அவனை பார்த்து விட்டு அவர்கள் வெளியே வந்து உட்கார்ந்தனர். மஞ்சுவும் ராஜாவும் சூர்யாவுடன் இருந்தனர். கவிதாவும் மற்றவர்களும் உள்ளே வந்தனர். சூர்யாவிற்கு பிடித்த உணவை மஞ்சு வாங்கி வந்திருந்தாள். அவனிடம் அவள் கொடுக்கவே,
ஏய், அறுந்த வாலு, ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாய். ஏதாவது பேசு…. சூர்யா கேட்க, மஞ்சு அமைதியாகவே இருந்தாள் அழுகையை கட்டுபடுத்திக் கொண்டு.
அவள் வாங்கி வந்ததை எடுத்தான். அவனால் பிரிக்க கூட முடியவில்லை. இதை பார்த்து அவளே சூர்யாவிற்கு ஊட்டி விட்டாள். அதை பார்த்ததும் கவிதாவிற்கு பிடிக்கவில்லை.
மஞ்சு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் அண்ணாவிடம் கொடு. அவர் ஊட்டி விடுவார். மஞ்சு திரும்பி, அதனால் என்ன? நானே பார்த்துக் கொள்கிறேன்.
உனக்கு புரியவில்லையா? கவிதா கேட்க,
நீ நினைப்பது தவறு. எனக்கு எல்லாமே புரியும். நான் ஒன்றும் சின்ன குழந்தை அல்ல. புரிகிறதா? சத்தமாக மஞ்சு பேச
எதற்காக சத்தம் போடுகிறாய்? சூர்யா கேட்க
என்னுடைய விசயத்தில் நீ தலையிடாதே? உன் வேலையை பார்த்துக் கொண்டு செல் கவிதாவை பார்த்து மஞ்சு கூறினாள்.
உனக்காக தான் கூறுகிறேன்.
எனக்காக கூற நீ யார்? மஞ்சு கேட்டவுடன், கவிதாவின் கண்கள் கலங்கியது.
நீ எதற்காக அங்கே வந்தாய்? உன்னால் தான் எல்லா பிரச்சனையும் ராஜாவும் சத்தமிட்டான்.
என்னால் பிரச்சனையா? நான் என்ன செய்தேன்? கவிதா கேட்க,
உன்னால் தான் எங்களது திட்டமே பாழாகிவிட்டது. நல்ல வேலை அந்த பொண்ணுக்கு ஏதும் ஆகவில்லை.
என்னாலா?
ஆமாம், உன்னால் தான் ராஜா கத்தினான்.
அவளுடைய தோழி, இவள் என்ன செய்தாள்? என்று கேட்க,
இவளால் தான் எல்லா பிரச்சனை. எதற்காக மற்றவர்கள் விசயத்தில் தலையிடுகிறாய்? முதலில் பாலா விசயத்தில் தலையிட்டு அவர்களது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தினாய்? இப்பொழுது என்ன? என்னுடைய தங்கை விசயத்தில் தலையிடுகிறாயா? கோபமாக பேசினான்.
கவியின் மனது நொறுங்கி போனது.
தோழிக்கு கோபம் வரவே,
என்ன இவளால்? இவள் எதற்கு வந்தாள் தெரியுமா?
எதுவும் பேசாதே! என்று தோழியிடம் கண்டிப்புடன் கூறி விட்டு, ஆமாம் என்னால் தானே உங்களது திட்டம் பாழாகிவிட்டது. அப்புறம் நீ என்ன கூறினாய்? நமக்குள் ஏதும் இல்லை தானே? நமக்குள் எந்தவொறு நட்பும் இல்லை தான். நீங்களும் சரியாக கூறினீர்கள். இனி யாருடைய விசயத்திலும் நான் தலையிட மாட்டேன் என்று இருவரையும் பார்த்து விட்டு அங்கிருந்து அழுது கொண்டே ஓடினாள். தோழியும் உடன் ஓட சுந்தர்,
ஹே,..நில்லுங்கள்..நில்லுங்கள்..பின்னே ஓட, மஞ்சுவின் அப்பா அவனிடம், எதற்காக அந்த பொண்ணு ஓடுகிறாள்?
எனக்கே என்ன நடக்கிறது? என்று புரியவில்லை அங்கிள் என்றான்.
வெளியே வந்தவுடன் ஓரிடத்தில் உட்கார்ந்து கவிதா அழுது கொண்டே பாலா சார் போல் தான் இவரும். காதலெல்லாம் ஒன்றுமில்லை. நான் தான் எப்பொழுதும் போல் தவறாக எண்ணிக் கொண்டேன். அவளது தோழி அவளுக்கு தோள் கொடுத்தாள்.
பின் அழுகையை நிறுத்தி விட்டு, இருவரும் நடக்க, தயவு செய்து அவர்களை விடு. நீ பழைய படி உன் வாழ்க்கைக்குள் செல். அது தான் நல்லது என்று தோழி அறிவுரை கூற, கவிதா எதுவும் பேசாமல் நடந்தாள்.
வார்டனை பார்த்தவுடன், கட்டுபடுத்த முடியாமல் அழ ஆரம்பித்தாள். தோழி நடந்த அனைத்தையும் கூறினாள்.
உன் மீதும் தவறுள்ளது. உன்னால் ஏதும் நடக்கவில்லை. ஆனாலும் உன்னை தான் குற்றம் சாட்டினார்கள். இது தான் உலகம். உனக்கு அவர் மீது காதல் வந்திருக்கலாம். ஆனால் அவருக்கு இருக்க வேண்டுமே? ஒரு பரிதாபத்தில் கூட அவர் உனக்கு அனைத்து உதவியும் செய்திருக்கலாம். அவருக்கு உன் மீது காதல் இருந்தால் உன் மனதை காயப்படுத்தி இருக்கமாட்டார் வார்டன் அறிவுரை கூற மீண்டும் அழுதாள் கவிதா. வார்டனுக்கும் ராஜா மீது கோபம் வந்தது.
தோழி அவளை அறைக்கு அழைத்து செல்ல, கோபமாக எல்லாவற்றையும் உடைக்க ஆரம்பித்தாள். தோழிகள் இருவராலும் அவளை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, வார்டன் வந்து கவிதாவை பளாரென்று அறைந்தார்.
அழுது கொண்டே அவர் மீது சாய்ந்து விட்டாள். கொஞ்ச நேரத்தில் தூங்கினாள்.
மருத்துவமனையில் சூர்யா, டேய் என்னடா பேசுகிறீர்கள்?
மஞ்சு, அவள் உன்னுடைய தோழி தானே! இப்படி பேசி விட்டாய்?
ஏன்டா, நம்ம திட்டபடி தானே எல்லாமே நடந்தது. எதற்காக அவளிடம் இப்படி பேசி விட்டாய்?
உனக்கு அடிபடாமல் அவள் தானே பார்த்துக் கொண்டாள்? ஏன்டா?
கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி விட்டேன். என்னடா செய்வது? என்று யோசித்தவன் வேகமாக வெளியே வந்தான்.
சுந்தர் அவனருகே வந்து, அவர்கள் சென்று விட்டார்கள். என்னடா ஆயிற்று உனக்கு?
பதிலேதும் கூறாமல் சூர்யா அறைக்கு சென்றான் ராஜா.
அன்று பாலா கூறினான். உனக்கு நினைவுள்ளதா? கோபத்தால் எல்லாவற்றையும் இழக்க போகிறாய்? என்று. அது நடந்து விடும் போல் உள்ளது சுந்தர் கூற,
நான் அவளை இழக்க மாட்டேன் என்று ராஜா கூற, மஞ்சு யோசித்து விட்டு கவிதாவிற்கு போன் செய்தாள். அவள் எடுக்கவில்லை.
தவறு செய்து விட்டேனோ! என்று வருந்தினாள் மஞ்சு.
சூரியன் மறைய அப்பொழுது தான் கவிதா எழுந்தாள்.நான் இங்கே இருக்க மாட்டேன். நான் கல்லூரிக்கு போக மாட்டேன் என்று அழுதாள்.
நீ அவர்களை பார்க்க விரும்பவில்லையென்றால், விடுதியில் இருந்தே படி….அவள் ராஜா இருக்கும் இடத்தை பார்த்து விட்டு, வார்டனிடம் எனக்காக பணஉதவி செய்பவர்களிடம் ஒரு உதவி மட்டும் கேட்க வேண்டும். மூன்று மாதங்களும் நான் கல்லூரி செல்லாமல் தேர்வு மட்டும் எழுத உதவி கேட்க வேண்டும். எனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை. நான் பிரியங்கா அக்காவிடம் பேச வேண்டும்.
வார்டன் போன் போட்டு கொடுக்க, அக்கா நான் கொஞ்ச நாட்கள் உங்களுடன் இருக்கலாமா?
என்ன கவி, இப்படி கேட்கிறாய்? கண்டிப்பாக வா. வார்டனிடம் போனை கொடு.
அவர்கள் பிரியங்காவை பற்றி விசாரித்து விட்டு, போனை கவிதாவிடம் கொடுக்க அரை மணி நேரமாக பேசினாள்.
இவள் யாரிடமும் இவ்வளவு நேரம் பேச மாட்டாளே! என்று அறைத்தோழி வார்டனிடம் கேட்டாள்.
அந்த பொண்ணும் இதே விடுதியில் ஆறு வருடங்களுக்கு முன் இருந்தாள். அப்பொழுது அவளும் கவிதாவும் ரொம்ப நெருக்கமாக இருப்பார்கள். அவள் உங்களுடன் இருப்பதை விட.
யார் அவங்க?
அவள் பெரிய இடத்து பொண்ணு. அவர்களிடம் பணம் இருப்பதால் திமிராக யாரையும் மதிக்காமல் நடந்து கொள்வாள். அவளை திருத்தவே,இங்கே கொண்டு வந்து விட்டார்கள். இங்கே வந்தும் அப்படி தான் இருப்பாள். இருவரும் ஒரே அறையில் இருப்பதால், சின்ன வயதிலும் கவிதா அவளுக்கு எல்லா வேலையும் செய்து வந்தாள். கவிதாவின் குணமும், அன்பும் பிரியங்காவை மாற்றி விட்டது. அதனால் அவளுடைய பெற்றோர்கள் கவிதாவிற்கு பரிசாக பணம் கொடுத்தனர். ஆனால் கவிதா அதை மறுத்து விட்டாள். நான் உதவி என்று கேட்டேன் என்றால் அன்று உதவுங்கள் என்று கூறினாள். அதை வைத்து தான் தன் கவலையை மறக்க அவளது வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளாள். அதுவும் வீட்டிலே இருந்து வேலை செய்து பணமும் சேர்த்துக் கொள்வாள். அவர்களது குடும்பத்தில் பன்னிரண்டு நபர்கள் வசிக்கிறார்கள். பிரியங்கா உடன் இருப்பதால் ஆட்களுடன் கவிதா வேகமாகவே பழகி விடுவாள். அதனால் தான், நான் தைரியமாக ஒத்துக் கொண்டேன்.
கவிதா வார்டனிடம் வந்து, நான் நாளையே கிளம்ப வேண்டும். தயவு செய்து அவர்களிடம் இப்பொழுதே பேசுங்கள் என்று கூற, அவர் பேசி விட்டு அவளிடம் கொடுக்க, அவளும் அவர்களை ஒத்துக் கொள்ள வைத்தாள்.
கவிதா தன் தோழிகளுடன் சேர்ந்து செய்த செயல் திட்டத்தை அன்று தனியாகவே இரவு முழுவதும் விழித்திருந்து முடித்தாள். ராஜா வீட்டிற்கு வந்தவுடன் கவிதாவின் அறையையே பார்த்துக் கொண்டிருக்க, விளக்கு அணையாமல் இருப்பதை பார்த்தான். அவளிடம் பேச வேண்டுமென்று மனம் ஏங்கியது. ஏனோ பேச அவனால் முன் வர முடியவில்லை. அன்றிரவு தூங்காமல் இரவை கழித்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் மஞ்சுவை கல்லூரியில், இறக்கி விட்டான் ராஜா. உயர் அதிகாரி வரச் சொன்னதாக ராஜாவிற்கு அழைப்பு வரவே, அங்கு சென்றான். சூர்யாவை தவிர மற்ற நண்பர்கள் அனைவரும் அங்கு வந்தனர். அதிகாரி அனைவரையும் கூப்பிட்டு எம் எல் ஏ பெண்ணை காப்பாற்றியதற்காக, பாராட்டு தெரிவித்து விட்டு இரண்டு நாட்களில் ராஜாவை வேலையில் சேர்ந்து கொள்ள சொன்னார். பின் ராஜா வாழ்த்துக்கள். உங்களுக்கான பதவி உயர்வு கிடைத்துள்ளது. உங்களுக்கு பாலாவிற்கு சமமான பொறுப்பை நியமித்துள்ளனர் என்று கூறினார். ராஜாவிற்கு பயங்கர சந்தோசம்.
நண்பர்களுடன் அன்று முழுவதும் மகிழ்ச்சியாக ஊரை சுற்றினான் ராஜா. மாலையில் மஞ்சுவை அழைக்க, கல்லூரி சென்றால் அவள் வேகமாக ஓடி வந்து பைக்கில் ஏறி சீக்கிரம் கிளம்பு. கவியோட விடுதிக்கு செல்.
நானும் அவளிடம் என்னுடைய உயர் பதவியை பற்றி சொல்லணும் வாயை மூடிக் கொண்டு வேகமாக போடா…அழுது கொண்டே கத்தினாள்.
எதற்காக அழுகிறாய்? நீ வீட்டிற்கு செல்லவில்லையா? கல்லூரியில் இருந்து அவள் வேகமாக கிளம்பி விட்டாளா?
அவள் இன்று கல்லூரிக்கு வரவில்லை. அவள் இன்று போகிறாளாம்.
போகிறாளா? எங்கே?
டேய், அவள் முழுவதுமாக நம்மை விட்டு செல்ல போகிறாள்.
அவன் சட்டென பைக்கை நிறுத்த, சீக்கிரம் போடா…மீண்டும் கத்தினாள்.
நான் சூர்யா மீதுள்ள காதலினால் அவள் மீது கோபப்பட்டேன். நீயும் ஏன்டா, இப்படி செய்தாய்?
விடுதிக்கு வந்தனர் இருவரும். அங்கே வார்டன் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்.
மஞ்சு வேகமாக வந்து, கவி…கவி…என்று கீழிருந்து கத்த, வார்டனும் அறைத்தோழியும் வந்தனர். மற்ற பெண்கள் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
எதற்காக வந்தாய்? உனக்கும் அவளுக்கும் என்ன உள்ளது? என்றவள் ராஜாவை பார்த்தவுடன், ஆக்ரோசமாக அவள் இனி வரமாட்டாள். அவ்வளவு தான். சென்று விட்டாள் அவனது சட்டையை பிடித்து உலுக்க,
உன்னுடைய திட்டம் அவளால் கெட்டது என்றாயே? உன்னுடைய திட்டமும் தெரியாது. அவள் எதுவுமே செய்யவும் இல்லை. அன்று ஒரு ஓரமாக தானே இருந்தாள். உன்னுடைய அந்த கோபம் எங்களையும் பிரித்து விட்டது.
முதலில் அவள் எதற்காக வந்தாள் தெரியுமா? நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போகிறாயோ? என்றும், உண்மையானால் திருமணத்தை நிறுத்தி அவளது காதலை கூறி விட வேண்டும் என்று நினைத்தாள். அதற்கு தான் அவளை அழைத்து வந்தேன்.
ஆனால் இருவரும் அதிகமாகவே அவளை காயப்படுத்தி விட்டீர்கள்!
உங்களுக்கு நீங்கள் கோபமாக பேசியது மட்டும் தான் தெரியும். அவளுடைய நிலையில் இருந்து யோசித்தால் தான் அவளது கஷ்டம் தெரியும். உங்களுக்கு பிரச்சனை என்றால் யாரிடமாவது கூறுவீர்களோ, இல்லையோ, பேசுவதற்கு யாராவது உங்களுக்கு என்று இருப்பார்கள்.
ஆனால் அவளுக்கென்று யாருமில்லை. இங்கேயே இருங்கள் என்று அறைக்கு சென்று அவளுடைய மேக் அப் பொருட்களை எடுத்து வந்து தூக்கி எறிந்தாள். இது என்னவென்று தெரியுமா?
அவள் மனது காயப்படும் போது அவளுடன் இருப்பது. ஓ…புரியவில்லையா?
நீங்கள் அன்று பார்த்தீர்களே அதே பொருட்கள் தான். அவள் காயப்படும் சமயம் அவள் அழுவதினால் தூங்காமல் இருப்பதினால் முகத்தில் ஏற்படும் வலியை மறைக்க பயன்படுத்துவாள். அவளை அவளே காயப்படுத்துவதினால் முகத்தில்,கை, கால்களில் காயம் ஏற்பட்டால் இதை பயன்படுத்தி மறைத்து விடுவாள்.
அனைவரும் அழகிற்காக பயன்படுத்தும் பொருட்களை கூட தன்னுடைய வலி மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக பயன்படுத்துவாள் அவள் அழுது கொண்டே கூறி விட்டு,
பாலா சாரால் அன்று மனதளவில் காயப்பட்டாள். ஒரு நாள் முழுவதும் அவள் எழவே இல்லை. அவளது உடலும், மனமும் மிகவும் பலகீனமாக இருந்தது. அவள் எழுந்ததை நினைத்து சந்தோசபடவா? எங்கள் கண் முன்னே அவளை அவளே காயப்படுத்தியதை நினைத்து வருத்தப்படவா? என்று எங்களுக்கே தெரியவில்லை.
அவளால் மற்றவர்கள் காயப்படுகிறார்கள் என்று தான் அவள் அவ்வாறு நடந்து கொள்வாள். அவள் இவ்வாறு நடந்து கொள்வதால் அவள் பைத்தியம் இல்லை. எல்லாவற்றையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவள் பேச பேச…மஞ்சு பயங்கரமாக அழ ஆரம்பித்தாள். ராஜா தலையில் கை வைத்தபடி அப்படியே உட்கார்ந்தான்.
அவள் எங்கே சென்றிருக்கிறாள்?அவன் கேட்க, அவனது முகத்தில் ஒரு காகிதத்தை தூக்கி எறிந்து விட்டு அவள் அழுது கொண்டே அறைக்கு சென்றாள்.
அம்மா, தயவு செய்து கூறுங்கள். அவள் எங்கே சென்றிருக்கிறாள்? அவரது காலில் விழுந்து ராஜா அழ, அனைத்து பெண்களும் வேடிக்கை பார்த்தனர்.
நீ இங்கிருந்து சென்று விடு. உன்னை பார்க்கவே எனக்கு விருப்பமில்லை. நீயும் அவளை காதலிக்கிறாய் என்று நினைத்து தான் உன்னை உள்ளே விட்டேன். அவள் வந்ததிலிருந்து என்னை விட்டு பிரிந்து இருந்ததே இல்லை. நானும் அப்படிதான். என்னுடைய மகள் மாதிரி அவள் எனக்கு.
ஆனால் இனி அவளை பார்க்க முடியுமோ? என்னமோ? என்று கண்கலங்கிக் கொண்டே உள்ளே சென்றார். அவன் காகிதத்தை பிரிக்க, மஞ்சுவும் அவனருகே வந்து உட்கார்ந்தாள்.
நீ என்னுடன் எப்படி நினைத்து பழகினாயோ எனக்கு தெரியாது மஞ்சு. எனக்கு நீ என்னுயிர் தோழி தான். ஆனால் நீ பேசியது என்னுள் பதிந்து விட்டது. எனக்கு உன்னை பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பது என்பது முடியாத காரியம். நீ சந்தோசமாக இரு. எப்பொழுதும் போல் அதே சுட்டி மஞ்சுவாக இரு. அப்புறம் உன்னுடைய அம்மா, அப்பாவை நன்றாக பார்த்துக் கொள். சூர்யா சாரை காதலிப்பதை உடனே சொல்லி விடு. அவன் எல்லா பெண்களிடமும் நன்றாக பேசுவார். அது வந்து….எப்படி கூறுவது? நான் ஏதாவது கூறி தவறாகி விடாமல்…. நீயே பார்த்துக் கொள். காதலில் ஏமாந்து விடாதே! அதை விட பெரிய வலி வேறெதுவும் இல்லை. சீக்கிரம் கூறி விடு.
ராஜா சார், நான் பாலா சார் மூலம் தான் உங்களுக்கு அறிமுகமானேன். அவரும் எனக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை. அவரை நான் காதலித்தேன் என்று தான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் எனக்கு அவர் மீது இருந்தது வெறும் ஈர்ப்பு தான் என்பதை நேரம் கழித்து தான் புரிந்து கொண்டேன். நான் எப்பொழுதெல்லாம் கஷ்டப்பட்டேனோ! சரியான நேரத்தில் வந்து நீங்கள் தான் உதவி இருக்கிறீர்கள்! திட்டினாலும் நீங்களும் என் மீது அக்கறையுடன் இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். அன்று நான் உங்களை பார்க்க தான் வந்தேன். என் நேரமோ என்னமோ, கூற வந்ததை கூற முடியவில்லை. அதுவும் நல்லது தான். ஏனென்றால் அது எனக்கு பெரிய வடுவாகி இருக்கும். சார், என்னுடைய தோழியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவளுடைய காதல் கைகூட உதவி செய்யுங்கள். இனி நாம் பார்க்க முடியாது. எனக்காக நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. உங்களுக்காக என் அறைக்கு வெளியே உள்ள பூந்தொட்டியில் ஒன்று வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சு உனக்கும் ஒன்று உள்ளது. வைத்துக் கொள்.
இருவரும் வேகமாக உள்ளே சென்றனர். அதில் நட்சத்திர டாலரில் அவனுடைய பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. உயர் பதவிக்கான வாழ்த்துகள் என்று சிறிய காகிதத்தில் எழுதி வைத்திருந்தாள். அதனை பார்த்து அவன் மேலும் அழ, அவனுடைய செயினில் டாலரை கோர்த்து வைத்தான் ராஜா.
மஞ்சுவிற்கு ஒரு கவர் கிடைத்தது. குடும்பமாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க, சுற்றுலா தலத்திற்கான டிக்கெட் வைத்திருந்தாள். உடன் ராஜா செல்வதற்கான விடுப்பும் உயர் அதிகாரியிடம் வாங்கி வைத்திருந்தாள். மஞ்சு தேம்பி தேம்பி அழ அறையின் உள்ளிருந்த தோழி வெளியே வந்து, அவளுக்கு நீரை கொடுத்து விட்டு,
ஒருவர் உடன் இருக்கும் போது அவர்களுடைய அருமை தெரிவதில்லை. இருவரும் அழுவதை நிறுத்தி விட்டு, வேலையை பாருங்கள். உங்கள் இருவரையும் பார்த்துக் கொள்ள சொல்லி என்னிடம் கூறி விட்டு தான் சென்றாள்.
தயவு செய்து அவள் எங்கே என்று கூறு அவன் கேட்க, கூறினால் ஓடிச் சென்று கட்டி தழுவ போகிறீர்களா?
ஆமாம் என்று கூறி விட்டான்.
என்ன பேசுகிறீர்கள்?
நானும் அவளை காதலிக்கிறேன். அவள் பாலாவை காதலிப்பதாக கூறும் போதிலிருந்தே கூற,
அப்புறம் எதற்காக காயப்படுத்தினீர்கள்?
அந்த இடம் அவளுக்கு ஆபத்து என்பதானாலும், சூழ்நிலை சரியில்லாத நேரத்தில் அவள் அவ்வாறு பேசியதாலும் தான். முகத்தை துடைத்து விட்டு, அவள் போன் செய்தால் கூறுகிறாயா?
என்னால் முடியாது. தயவு செய்து கூறு… அவளிடம் நான் ஏதும் பேசமாட்டேன். அவள் பேசுவதை மட்டும் கேட்டால் போதும். இனி அவளை தொந்தரவு செய்ய மாட்டேன்..
சரி என்று அவள் ஒத்துக் கொள்ள, இருவரும் அங்கிருந்து கிளம்ப மணி இரவு எட்டாகியது. ஒரு நிமிடம் என்று சாப்பாட்டை எடுத்து தோழி கொடுக்க, வாங்கிக் கொண்டு மஞ்சு ராஜாவின் தோளில் சாய்ந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். ராஜா போனை எடுத்து, அம்மாவிற்கு போன் செய்து மஞ்சுவை இன்று ஒரு நாள் நானே பார்த்துக் கொள்கிறேன் என்றவுடன், ஏதும் பிரச்சனையாடா….அம்மா கேட்க,
இல்லைம்மா, செவிலியருடன் பேசிக் கொண்டே அவள் தூங்கி விட்டாள் என்று பொய் சொன்னான்.
செவிலியரிடம் விசயத்தை சொல்ல, உன்னை காதலித்து இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் இருவரும் சந்திப்பீர்கள், அதற்காக காத்திரு.
மறுநாள் காலையில் பத்து மணியளவில் கவிதா வார்டனுக்கு போன் போட, அனைத்து பெண்களும் பேசினார்கள். ராஜாவிடம் சொன்னவுடன் மஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்தான். வார்டன் முறைத்தார். அவரை சமாளித்து தோழியுடன் கவிதா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
இங்கே நிறைய பேர் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.அந்த அக்காவின் அம்மா, அப்பா, தம்பி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, குட்டி பசங்க ஆறு பேர், இன்னும் உறவுகள் இருக்கிறார்கள். என்னையும் அக்கா கூப்பிடும் அதே உறவின் பெயரை வைத்தே கூப்பிட சொன்னார்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. இதுவரை இத்தனை உறவுகளை நான் ஒன்றாக பார்த்ததேயில்லை என்று ஆர்வமாக கவிதா பேசினாள்.
அங்கே எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?
ம்ம்….நன்றாக இருக்கிறோம். மீண்டும் அழுத்தியவாறு எல்லாரும்? என்று கேட்டாள்.
அனைவரும் மஞ்சு, ராஜாவை பார்த்து, நன்றாக இருக்கிறார்கள். வார்டன் போனை சட்டென நகர்த்தி,
நீ எதற்காக சென்றாய்? எல்லாவற்றையும் மறக்க தானே! கூற, அவள் அழும் சத்தம் கேட்டது.
அக்கா, எதற்காக அழுகிறீர்கள்? குட்டி பையன் சத்தம் இவர்களுக்கு கேட்கவே, நான் எங்கே அழுகிறேன்? வா நாம் விளையாடலாம் அவள் கூற,
இங்கே பாருங்கள் கண்ணீர், அவன் கேட்க நான் வைக்கிறேன் என்று போனை துண்டித்தாள்.
ராஜாவிற்கும்,மஞ்சுவிற்கும் மனது கனமாக இருக்கவே, அம்மாவை பார்க்க சென்று அவரிடம் கூறி இருவரும் அழுதனர். ராஜா பாலாவிடமும் கூறி அழுதான்.
கவலைப்படாதேடா! அவள் சீக்கிரமே வந்து விடுவாள் என்று ராஜாவை தேற்றினான்.
எம் எல் ஏ பெண்ணை காப்பாற்றியதற்கு உயர் அதிகாரி பாராட்டிய சமயத்தில் பாலா ஸ்வேதாவை பற்றியும், ரகுவை பற்றியும் கூறி, இந்த பிரச்சனையை சரி செய்ய எனது நண்பர்களின் உதவி தேவை சார். இது முடிந்தால் நம் ஊரில் உள்ள பாதி குற்றங்கள் மறைந்து விடும். அதற்கு காரணமான ராசாத்தியும் மாட்டுவாள் என்று கூற,அவர் ஒத்துக் கொண்டார்.
அனைத்தும் முடிந்து வீட்டிற்கு மாலையில் கட்டுடன் பாலா நுழையவே அனைவரும் பதறினர். பார்வதியம்மா அழ ஆரம்பித்தார்.
அம்மா…..எனக்கு ஒன்றுமில்லை.
அண்ணா…கைக்கு என்ன ஆயிற்று?
சிறிய அடி தான். இரண்டு நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும்.
இதனால் தான் நேற்று வரவில்லையா? அம்மா கோபித்துக் கொண்டார்.
நிஜமாகவே வேலை இருந்தது.
சரி அண்ணா. நீ மேலே செல். நான் காபி போட்டு எடுத்து வருகிறேன் என்று கூறினாள் ஸ்வேதா.
ஆன்ட்டி எங்கே?
கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள்.
ரேணு… கேட்டுக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான் பாலா.
அதானே பார்த்தேன். அவளை பற்றி என் அண்ணா கேட்காமல் இருப்பாரா? அவளுக்கு தலைவலி. அவளது அறையில் படுத்து இருக்கிறாள்.
பொறுமை அண்ணா! பொறுமை! சாதாரண தலைவலி தான். மருந்து சாப்பிட்டாள். தூங்கிக் கொண்டிருக்கிறாள். எழுந்தவுடன் சரியாகி விடும்.
அடஅடடா…. என்ன அக்கறை உங்களுக்கு அவள் மீது என்று ஸ்வேதா ஆரம்பிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அறைக்கு சென்றான் பாலா. ஸ்வேதா காபி கொண்டு வர, குடித்து விட்டு உறங்கினான்.