சில மணி நேரத்திற்குள் ஸ்வேதாவும், பாலாவும் வீடு வந்து சேர்ந்தனர்.
அம்மா…அம்மா….என கூவிக் கொண்டே உள்ளே வந்தான் பாலா.
அம்மா அவர்களுடைய அறையிலே இருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்தார்கள்.
அம்மா என்ன ஆயிற்று? பதறினான்.
பயப்படாதே! ஒன்றுமில்லைடா. திடீரென மயக்கம்.
மயக்கமா? எப்போது?
இப்பொழுது ஓரளவு பரவாயில்லை .
வீட்டில் யாருமே இல்லை. எப்படி சமாளித்தீர்கள்?
பக்கத்து வீட்டு பங்கஜம் தான் உதவி செய்து படுக்க வைத்தாள். இப்பொழுது தான் டாக்டரை கூப்பிட போனாள்.
ஸ்வேதா, ”உள்ளே வா” கூப்பிட்டான்.
அம்மா உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தேன். ஆனால் நீங்கள்…
யாருடா ஸ்வேதா?
இந்த பெண்ணை ரயில்வே ஸ்டேசனில் வைத்து பார்த்தேன். இவளுக்கென யாருமில்லை. அதனால் நம் வீட்டிற்கு அழைத்து வந்தேன் என் தங்கையாக.
தங்கையாகவா? எட்டி பார்த்தார் அம்மா.
ஸ்வேதா பாலா பின் ஒளிந்து கொண்டாள்.
அவளை இழுத்து அவன் அம்மா முன் நிறுத்தினான் .
அவளை பார்த்த அம்மா அப்படியே மயங்கி விழ, மருத்துவர் உள்ளே வந்தார். உடன் பங்கஜம் அக்காவும் வந்தார்.
ஸ்வேதாவை பார்த்து அதிர்ந்து நின்று, அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நேரம் நான் உங்களுடன் வந்திருக்கக் கூடாது அண்ணா. நான் தவறிழைத்து விட்டேன். நான் வந்தது அம்மாவிற்கு பிடிக்கவில்லை போல என்றாள் அழுகுரலுடன்.
மருத்துவர் பார்வதி அம்மாவை பரிசோதிக்க, பாலா ஸ்வேதாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
என்னடா பாலா, அம்மாவிற்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளது?
பார்த்தீர்களா அண்ணா! என்னை பார்த்து தான் அம்மாவிற்கு இப்படி ஆகி விட்டது.
அதெல்லாம் இல்லைமா. உன்னை பற்றி அம்மாவிற்கு ஏதும் தெரியாது. உன் உருவத்தை பார்த்து தான் பயந்து இருப்பாங்க.
என் உருவத்தில் என்ன உள்ளது?
இருக்கிறதுமா. அப்புறம் சொல்கிறேன்.
யாருடா அந்த பொண்ணு ?
நடந்தவற்றை கூறி விட்டு பங்கஜத்தையும்,மருத்துவரையும் தனியாக அழைத்து பாலா அவர்களிடம் ஏதோ கூறினான்.
அவர்கள் பாலா கூறியதை கேட்டு அதிர்ச்சியோடு ஸ்வேதாவை பார்க்க, அவள் புரியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
பங்கஜம் வெளியே சென்றாள் ஸ்வேதாவை பார்த்துக் கொண்டே .
அம்மாவிற்கு ஒன்றும் ஆகாது தானே! மருத்துவரிடம் வினவினான் பாலா.
அதான் நீ வந்து விட்டாயே! இனி எல்லாமே சரியாகி விடும். அவர்களுக்கு அதிக மனஅழுத்தமாயிற்று. அதனை குறைக்கணும் இல்லைன்னா காப்பாற்றுவது மிகவும் கடினம். தற்பொழுது மயக்கம் மட்டும் தான் உள்ளது. அவர்களது மனஅழுத்தத்தை போக்க என்ன செய்ய முடியுமோ அதனை செய்தால் சரி செய்யலாம்.
இப்பொழுது இந்த பொண்ணு தான் அம்மாவிற்கு சரியான மருந்து. நடந்ததை நினைத்து நினைத்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர் மனது மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. நான் அவரது உடல் நிலைக்கான மருந்து எழுதி தருகிறேன், மனநிலையை நீங்கள் தான் மாற்ற வேண்டும் என ஸ்வேதாவை பார்த்து விட்டு, பாலாவை பார்த்து அம்மாவை பார்த்துக் கொள் கூறி விட்டு கிளம்பினார் மருத்துவர்.
ஓ.கே டாக்டர் என்றான் பாலா.
நான் அம்மாவை பார்த்துக் கொள்ளவா? மறுபடியும் அவர்களுக்கு ஏதும் ஆகிவிடுமா?
நீ அவர் எழுந்தவுடன் உன் பெயரையும், உன்னை பற்றியும் கூறி விடு. அவருக்கு ஏதும் ஆகாது.
அண்ணா, நீங்கள் சாப்பிடுவதற்கு ரொட்டியும், பாலும் வாங்கிட்டு வாங்க. நான் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன்.
ம்ம்ம்…கிளம்புகிறேன். பார்த்துக் கொள். வெளியே கிளம்பினான் பாலா.
அவன் திரும்பி வந்து பார்த்த போது அம்மாவும், ஸ்வேதாவும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடையே நெருக்கம் தெரிந்தது.
கண்கலங்கிய நிலையில், அம்மா…என்றான்.
டேய், இவ்வளவு நேரமா? பார்வதி மெதுவாக பேச
மீண்டும் கண்கலங்கிய நிலையில், எப்படி இருக்கிறீர்கள் அம்மா?
அண்ணா, நானே என்னை அம்மாவிடம் அறிமுகபடுத்திக் கொண்டேன் ஸ்வேதா கூறினாள்.
கண்ணை துடைத்துக் கொண்டே, ம்ம்ம்…என்றான்.
அண்ணா, அதை கொடுங்கள் என வாங்கி வந்தவற்றை இவள் வாங்கி விட்டு, நீங்கள் இங்கேயே இருங்கள் என சமையற்கட்டிற்குள் சென்று பாலை சூடு செய்து, ரொட்டியை தோசைக்கல்லில் சுட்டு எடுத்து பார்வதி அருகே சென்று அவரை சாப்பிட வைத்து மருந்தை கொடுத்து நீங்கள் நன்றாக ஓய்வு எடுங்கள் என்று இருவரும் வெளியே வந்தனர்.
அண்ணா! நீங்கள் அப்பவே பசிக்கிறது என கூறினீர்களே? சமையற்கட்டிற்குள் இருவரும் செல்ல, ரொட்டி வைத்து உணவுகளை செய்தாள்.
அவன், உன்னிடம் கொஞ்சம் பேசணும் ஸ்வேதா.
நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். அப்புறம் பேசலாம்.
அவள் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தான். அவளும் சாப்பிட்டாள்.
எனக்கு ஒரு தங்கை இருந்தாள் ஸ்வேதா.
அப்படியா அண்ணா! அவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டீர்களா?
இல்லைம்மா. அவள் ஒரு பையனை இழுத்துட்டு ஓடிட்டா. அதனை நினைத்து தான் அம்மா இப்படி வேதனைப்படுகிறார்கள். அம்மா அவளை பொக்கிஷமாக நினைத்தார்கள். எங்களுக்கு அவள் தான் எல்லாமே. நல்ல வரன் வந்தது. அவர்களை பற்றி அவளிடம் நாங்கள் பேசினோம்.
யோசித்து கூறுகிறேன் என கூறி விட்டு ராத்திரியோட ராத்திரியாக வீட்டை விட்டு ஓடி விட்டாள். மறுநாள் காலையில் தான் அவள் சென்றது தெரிய வந்தது. ஏற்கனவே அவளை அந்த வரன் பார்க்க வந்தனர். அவளை பற்றி தெரியவும் அந்த பையனோட அம்மா கத்தி ஊரையே கூட்டி, எங்கள் மானத்தையே வாங்கிட்டாங்க. அதனால் அம்மா ஒரு மாதமாக வீட்டிலே அடைந்து இருந்தார்கள். பக்கத்து வீட்டு பங்கஜம் அக்கா தான் அம்மா நிலைமை புரிந்து அவர்களுக்கு கூடவே இருந்து பார்த்துக் கொண்டார்கள்.
நானும் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாட்கள் தான் ஆனது. ஸ்டேசனுக்கும் விசயம் தெரிந்து…..பேச முடியாமல் கண்கள் கலங்கின. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நல்ல பெயரை சம்பாதித்தேன்.
என்னுடைய தங்கைனா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவள் இல்லாமல் வீடே மயானமாக காட்சியளித்தது. அண்ணா..அண்ணான்னு கூப்பிட்டு கொண்டே திரிவாள். அவள் இல்லாமல் மனது ரொம்ப கஷ்டமாக உள்ளது. உன்னை ஸ்டேசனில் பார்த்தவுடன் பயங்கரமான அதிர்ச்சி. நீ என்னுடைய தங்கையை போல் அப்படியே அச்சு அசலாக இருக்கிறாய். ராசாத்தியால் மக்களுக்கு அடிபட்டு விடக்கூடாது என பார்த்துக் கொள்ள தான் வந்தேன். அப்பொழுது தான் உன்னை பார்த்தேன். நீ என் தங்கை தானா? என்று பார்க்க நினைத்தேன். அதற்குள் அந்த ரவுடி உன்னை தாக்க வந்தாள். நாம் வீட்டிற்கு வரும் வரை நன்றாக கவனித்தேன். நீ என் தங்கை இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.
நீங்கள் உங்கள் தங்கையை தேடவில்லையா? என்னை பார்த்தவுடன் உங்கள் தங்கை என நினைத்திருப்பீர்கள்? என் மேல் கோபம் வரவில்லையா? ஓஓ….அதனால் தான், நான் தங்கை இல்லை என தெரிந்தும், வீட்டில் இருக்க ஒத்துக் கொண்டீர்கள்.
நாம் இங்கே இருக்கக்கூடாது. நம்மை பற்றி தெரிந்தால் இவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என மனதினுள் நினைத்தாள்.
உன்னை பற்றி அறிந்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிடித்தும் போயிற்று. கண்டிப்பாக அம்மாவை உன்னால் மட்டுமே சரி செய்ய முடியும். ஒரு வேளை நீ என் தங்கையாக இருந்தால் உன்னை வீட்டிற்கு அழைத்து வந்திருக்க மாட்டேன்.
என்ன அண்ணா சொல்றீங்க?
ஆமாம்மா. அம்மா பட்ட கஷ்டமும், நான் வேலையில் பட்ட கஷ்டமும் அவளால்தான். அவளை என் வாழ்க்கையில் எப்பொழுதும் பார்க்கவே கூடாது என நினைத்தேன். உன்னை பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்தது. ஆனால் நீ ஒரு பாட்டிக்கு உதவி செய்தாய். அப்பொழுதே எனக்கு நீ அவளாக இருக்க முடியாது என தோன்றியது. அவளுக்கு வயதானவர்களை பார்க்கவே பிடிக்காது. அவர்களை தொந்தரவாகவே எண்ணுவாள். ஆழ்ந்து கவனிக்கவே நீ அவள் இல்லை என்றவுடன் தான் மகிழ்ச்சி. உன் குணம் பிடித்து தான் உன்னை தங்கையாக ஏற்றுக் கொண்டு, உன்னிடம் கேட்டேன் என கூறி முடித்தான்.
அண்ணா! நீங்களாகவே போ என்று கூறினால் மட்டும் தான் நான் செல்வேன். அதுவரை நான் இங்கேயே இருப்பேன். யாருமே இல்லாத எனக்கு அம்மா,அண்ணா என்று நீங்கள் இருவரும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அண்ணா! ப்ளீஸ் எதற்கும் கவலைப்படாதீர்கள். நான் எப்பவுமே உங்களையும், அம்மாவையும் விட்டு எங்கேயும் செல்லமாட்டேன்.
“ஒவ்வொருவர்
வாழ்நாளும்
ஆயிரம் துன்பங்கள்
இன்பத்தை
அறிவோமானால்
துன்பமும் அறிவோம்
சகல நிகழ்விற்கும்
காரணம்
இருக்குமானால்
இன்பத்தை போல்
துன்பத்தையும்
ஏற்று கொள்”
ஸ்வேதா ஏதோ ஒரு வீட்டிற்கு ஆட்டோவிலிருந்து இறங்கி போனாயே, அவர்கள் யார்? அவனுக்கு ஏன் உன் மேல் அவ்வளவு கோபம்? நடந்த எதுவுமே புரியலை.
அண்ணா! நீங்கள் நடந்ததை பார்த்தீர்களா?
ஆமாம் பார்த்தேன். அதனால் என்ன?
அடுத்தவர்கள் வீட்டில் நடப்பதை பார்க்கக்கூடாது. தெரியாதா உங்களுக்கு?
நீ சென்றதால் மட்டும் தான் கவனித்தேன் என்றான்.
சரி அண்ணா.
அவன் எதுவும் கூறாமல் அவளை பார்த்தான்.
அவருடைய பெயர் ரகு. அவருடைய மனைவி இறந்துட்டாங்க. அவர்களுடைய பொண்ணு பெயர் ரியா. நடந்தவற்றை ஸ்வேதா கூறி விட்டு, நான் அவருடைய பொண்ணை அவரிடமிருந்து பிரித்து விடுவேன் என நினைத்து தான் என் மேல் கோபமாக உள்ளார்.
நீ பொறுமையாக கூட இருக்கிறாயே?
அவர் கோபப்படுகிறார் என நானும் அவர் மேல் கோபப்பட்டால், ரியா தான் பாதிக்கப்படுவாள்.
இருந்தாலும்மா..
அய்யோ அண்ணா, உங்களிடம் ஒன்று கூற மறந்து விட்டேன். நான் தினமும் ரியாவை சந்திப்பேன் என சத்தியம் செய்துள்ளேன். இப்பொழுது தான் ஞாபகம் வருகிறது
இல்லை நீ போகக்கூடாது. நான் உன்னை போக விட மாட்டேன்.
அண்ணா, ப்ளீஸ் ரியாவிற்காக தான். இதுவரை அம்மா இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அது மாதிரி அவளும் இருக்கக் கூடாது.
அப்படியென்றால் நீ அந்த குட்டி பொண்ணுக்கு அம்மாவாக செல்லப் போகிறாயா?
அப்படியெல்லாம் இல்லை. அவளுக்கு அம்மா இல்லாத குறையை எதிர்த்து நிற்க சொல்லித் தர போகிறேன்.
நீ அங்கே சென்றால் அந்த ரகு கோபப்படுவானேம்மா?
ஆமாம் அண்ணா. என்னோட உறவுகளுக்காக எதையும் சமாளிப்பேன்.
என்ன உறவா?
நட்பும் உறவு தானே. அம்மாவிற்கு சரியான பிறகு அவரிடம் சொல்லி விட்டு ரியாவை பார்க்க செல்வேன்.
நீ கூறுவது சரி இல்லை. நீ அங்கே செல்வது எனக்கு விருப்பமில்லை.
என்ன அண்ணா? சிறு பிள்ளையாட்டம் பேசுகிறீர்கள்?
யார் நானா? நீ தான் என்றான் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு.
அண்ணா, ப்ளீஸ் புரிந்து கொள்ளுங்கள்.
அவன் உன்னை காயப்படுத்துவான்.
அதான் உதவிக்கு நீங்கள் இருக்கிறீர்களே?
நானா? ம்ம்ம்….நான் இருக்கிறேன்.
இப்பொழுதாவது ஒத்துக் கொள்ளுங்கள்.
சரி..சரி..ஒத்துக் கொள்கிறேன். பிரச்சனை என்றால் கண்டிப்பாக கூற வேண்டும்.
ஓ.கே அண்ணா என்றாள் சிரித்துக் கொண்டே.
இரண்டு நாட்கள் கழிந்தது. ஸ்வேதா அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ள, பார்வதி அம்மாவிற்கு உடல்நிலை சீரானது. அம்மா, நான் சாப்பிடுவதற்கு தக்காளி தொக்கும், வெண்டைக்காய் பொரியலும் செய்கிறேன்.
சரிம்மா. நானும் வரவா?
இல்லைம்மா. நீங்கள் நன்றாக ஓய்வு எடுங்கள். நீங்கள் இங்கிருந்து எழுந்தால் நான் பொறுப்பல்ல என ஓர் இடத்தில் உட்கார வைத்து செல்லமாக கூறி விட்டு, சமையல் வேலையை செய்ய ஆரம்பித்தாள் .
என்னடா, இவள் என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டேன் என்கிறாள் என போலீஸ் உடையுடன் உள்ளே நுழைந்த பாலாவிடம் கூறினார் அம்மா.
ஏய் ஸ்வேதா, இங்கே வா என்றான் அதட்டலாக,
அவள் அருகே வந்தவுடன், இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, சூப்பர்டா ஸ்வேதா என கூற இருவரும் மாறி மாறி கையை அடித்துக் கொண்டனர்.
அதனை பார்த்த பார்வதி,
டேய் படவா, நீயும் அவளுடன் சேர்ந்து கொண்டாயா?
ஆமாம் அம்மா, நீங்களும் சந்தோசமாக இருக்க வேண்டும்மா. இத்தனை வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தீர்கள்? போதும்மா என கண்கலங்கிய தன் மகனை அணைத்துக் கொண்டார் பார்வதி.
இன்னும் கொஞ்ச நாட்கள் தான். இவளும் நம்மை விட்டு சென்று விடுவாள்.
எங்கே செல்வாள் இவள்? பாலா கேட்க,
என்னம்மா சொல்றீங்க? நான் எங்கே செல்லப் போகிறேன்?
கல்யாணம் முடிந்து புருசனோட போக தானே போகிறாள் அதை தான் கூறினேன் என்றவுடன்
ஸ்வேதா கண்ணில் நீர் பெருக, அறைக்குள் சென்று கதவை தாழிட்டு அழுதாள். பார்வதியும், பாலாவும் கலங்கி விட்டனர்.
ஸ்வேதாம்மா, என்னாயிற்று? கல்யாணம் பற்றி தானே பேசினேன். எதற்கு அழுகிறாய்? என அறைக்கதவை தட்டிக் கொண்டே, கதவை திறம்மா… அம்மா கூப்பிட ,
ஸ்வேதா, அம்மா சும்மா பேச தானே செய்தார்கள் என பேசிக் கொண்டே கதவை பலமாக தட்டினான்.
கண்ணீரை துடைத்துக் கொண்டே, கதவை திறந்தாள் ஸ்வேதா.
எனக்கு கல்யாணம் வேண்டாம்மா ப்ளீஸ். அண்ணா, அம்மாவிடம் கூறுங்களேன்.
சரிடா. இப்பொழுது வேண்டாம் பாலா கூற,
என்னடா, நீயும் அவளுடன் சேர்ந்து புரியாமல் பேசுகிறாய்?
அம்மாவிடம் திரும்பி, கண்ணடித்தான் பாலா. அவள் கொஞ்சநாட்கள் நம்முடன் தான் இருக்கட்டுமே?
அவனை பார்த்துக் கொண்டே, சரிம்மா. நான் இதைப் பற்றி பேசலை.
ஏம்மா தாய்களா! ரொம்ப பசிக்கிறது. சீக்கிரம் ஏதாவது ரெடி பண்ணுங்களேன்.
இன்னும் கொஞ்சம் தான் வேலை. சீக்கிரம் தயாராகி விடும் அண்ணா.
உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு, மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்வேதா,
அண்ணா, அம்மாவிடம் சம்மதம் வாங்கித் தாருங்களேன் என கண்களால் சைகை செய்ய,
என்ன? என்பது போல பார்த்தான்.
ரியா என வாயசைத்துக் கூறவே, புரிந்து கொண்ட அவன் நடந்த அனைத்தையும் அம்மாவிடம் கூறினான்.
முதலில் முடியாது என்றாலும், அம்மா இல்லாத குழந்தைக்காக என்பதற்காக ஒத்துக் கொண்டார்.
ஆனால் நீ சீக்கிரமே வந்து விட வேண்டும்.
என்ன! சீக்கிரமேவா? ஸ்வேதா கேட்க,
ஆமாம். பாலா கூறுவதை போல் சீக்கிரம் வந்து விடணும்.
ஸ்வேதா, பாலாவை முறைத்துக் கொண்டே,
சரிம்மா, நான் கிளம்புகிறேன் என எழுந்து கை கழுவி விட்டு, தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
” கடலினில் அலை பிரியாது.
கரையினில் நிலம் பிரியாது.
என் மனதினில் வலி தெரியாது.
ஆகாய பறவைகளாய் நாம் பறப்போம்.
தமையன் தமைக்கை உறவே
நீடூழி வாழும் பல காலம்”
ரகுவின் மாளீகையை அடைந்ததும் உள்ளே சென்று ஸ்வேதா, ரியா…ரியா….கூப்பிட்டாள்.
ராஜம்மா வெளியே எட்டிப் பார்த்தார்.
என்னம்மா, போன் நம்பர் கூட கொடுக்காமல் சென்று விட்டீர்களே?
என்ன ஆயிற்றும்மா? ரியாவை எங்கே? வீடே அமைதியாக உள்ளது.
ரியாவிற்கு உடல்நிலை சரியில்லை. அவள் உங்களை பார்க்காமல் சாப்பிட மாட்டேன்னு சொல்லி ரொம்ப அடம் பிடித்து எல்லாரையும் ஒரு வழி செய்து விட்டாள். பாவம் ரகு தம்பி, அவர் சொல்லியும் ரியா கேட்கவே இல்லை.
ரகு, அவளை முறைத்துக் கொண்டே கீழே இறங்கினான்.
நீ என்ன தான் செய்ய நினைக்கிறாய்? உனக்கு நாங்கள் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா? ஏன் இப்படி செய்கிறாய்? உன்னை யார் ரியாவிடம் சத்தியம் செய்து கொடுக்க சொன்னது? சத்தியம் செய்தாயே, அதனை கடைபிடித்தாயா? கோபமாக பேசினான்.
ரியாவிற்கு என்ன தான் ஆயிற்று? ப்ளீஸ்..சொல்லுங்கள் கண் கலங்கினாள் ஸ்வேதா.