தித்திக்கும் முத்தங்கள் 11

கார்த்திகாவிடம் அவள் படிப்பைப் பற்றி பேசியதில் இருந்தே அதே யோசனையாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தான் குமரன். என்ன யோசித்தாலும், எப்படி அவள் புத்தகங்களை எடுத்து வருவதென்று ஒருவழியும் புலப்படவில்லை.

அடுத்தநாள் காலையிலும் அதே சிந்தனையுடன் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு சுலபமாக வழியமைத்துக் கொடுத்தது பூச்சிதான். குமரன்  விஷயத்தைக்  கூறிய கணமே அவன் நினைவில் வந்தது விஜயா தான். அன்று காசுக்காக கார்த்திகாவை ஏமாற்றியவர் தானே.

ஆம். உண்மையில் அன்று விஜயாவுக்கு பணம் கொடுத்துதான் அவன் நினைத்தபடி பேச வைத்திருந்தான் குமரன். இப்போதும் அவரை வைத்தே காரியம் சாதிக்க நினைத்தவன் தன் அலைபேசியில் இருந்து விஜயாவுக்கு அழைத்துப் பேச, முடியவே முடியாதென்றார் அவர்.

பணத்திற்கு கூட மசிவதாக இல்லை. மகாலட்சுமிக்கு மட்டும் விஷயம் தெரிந்தால் தன்னை ஒருவழி செய்துவிடுவார் என்று பயத்துடன் அவர் மறுக்க, குமரன் கையில் இருந்த அலைபேசியைப் பிடுங்கிய பூச்சி, “நீ மட்டும் அவன் கேட்டதை செய்யல, நானே மகாக்கா கிட்ட போட்டு கொடுப்பேன். இன்னும் உன் புருஷனுக்கும் விஷயத்தை சொல்லிட்டு, சரக்கு வாங்கி ஊத்தி அனுப்புவேன். யோசிச்சுக்கோ.” என்றான் மிரட்டலாக.

“டேய் இதெல்லாம் ரொம்ப ஓவரு.” என்று விஜயா குரலுயர்த்த,

“ஹான். எண்ணி நாலு வார்த்த பேச, சுளையா பத்தாயிரம் வாங்குனியே. அது ஓவரா இல்ல.” என்றான் பூச்சி.

“என்னை என்னடா பண்ண சொல்ற.?” என்று விஜயா தணிந்து வர,

“இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்குள்ள, கார்த்தியோட புக், ட்ரெஸ் எல்லாம் என் கைக்கு வரணும். இல்ல..” என்று மிரட்டலாகவே அழைப்பைத் துண்டித்தான் பூச்சி.

குமரன் “ஏன்டா அந்த பொம்பளையை பதற விட்ற..” என்று பரிதாபப்பட,

“கம்முனு இருடா. அன்னிக்கு காசு வாங்குனா இல்ல. ஒரு பொண்ணு வாழ்க்கைனு கூட பார்க்காம பொய் சொன்னா இல்ல. செய்யட்டும்.” என்றான் பூச்சி.

“எனக்கென்னவோ அது மேல நம்பிக்கை இல்ல. அது பேசி, கார்த்தி அம்மா புக்கை தரும்னு நினைக்கிற..”

“உனக்குதான் விஜியாவை பத்தி தெரியல. வாழைப்பழம் மாறி பேசும் அது. எப்டியும் முடிச்சுடும் பாரு.” என்று பூச்சி கூற, அப்போதும் நம்பிக்கையில்லாமல் தான் இருந்தான் குமரன். ஆனால், இறுதியில் பூச்சி கூறியபடி தான் நடந்தது.

மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் குமரனை அழைத்துவிட்டார் அவர். “தம்பி நீ சொன்னபடி உன் பொண்டாட்டி பொருளெல்லாம் வாங்கி வச்சிட்டேன்.  வந்து எடுத்துக்கோ.” என்றவரிடம் பதில் கூறாமல் அழைப்பைத் துண்டித்தவன் அரைமணி நேரத்தில் அவர்  வீட்டின் முன் நின்றிருந்தான்.

விஜயா எதிர்வீட்டு வாசலருகே வைக்கப்பட்டிருந்த மூன்று பைகளை கைகாட்ட, அதில் ஒரு பையில் கார்த்திகாவின் உடைகளும், மீதமிருந்த இரண்டு பைகளில் அவளது புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

குமரன் விஜயாவிடம், “கார்த்தி வீடு…” என்று கேள்வியுடன் நிற்க, உட்பக்கமாக தாழிடப்பட்டு இருந்த எதிர்வீட்டை காட்டினார் விஜயா. குமரனுக்கு மகாவிடம் பேசும் எண்ணமெல்லாம் இல்லாததால் அவன் கார்த்திகாவின் உடமைகளை எடுத்துக்கொண்டு கீழிறங்க, இரண்டாம் தளத்தின் பால்கனியில் நின்றிருந்தாள் அவன் தங்கை.

யாரோ படிகளில் இறங்கும் அரவம் கேட்டு திரும்பி பார்த்த ப்ரியா நிச்சயம் குமரகுருவை எதிர்பார்க்கவில்லை. பார்த்தவுடன் பெரிதாக பாசமெல்லாம் பொங்கி வழியவும் இல்லை. ஆனால், கண்முன் நிற்பவனை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அவள் தயங்கி நிற்க, அவள் தயக்கப்பட எந்த தேவையும் இல்லை என்று உணர்த்துபவனாக, அவளை முன்பின் தெரியாதவன் போல் கடந்துச் சென்றான் குமரன்.

ஆனால், பிரியாவும் அதற்கெல்லாம் கவலை கொள்ளும் ஜென்மம் அல்லவே. அவன் கையை நீட்டாமல் அமைதியாக கடந்து விட்டதே நிம்மதியாக இருந்தது அவளுக்கு. ஆனால், தன் அண்ணன் ஏன் இங்கே வந்தான் என்பது அவள் தலையைக் குடையத் தொடங்கி இருந்தது. அதுவும் கையில் வைத்திருந்த பைகள் வேறு.

விஷயம் என்னவென்று தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது பிரியாவுக்கு. ஆனால், அவளுக்கு உதவுவதற்காகவோ என்னவோ, மேலிருந்து கையில் காலிக்குடங்களுடன் கீழே இறங்கி வந்தார் விஜயா.

அவரும் குணத்தால் பிரியாவைப் போன்றவர் தானே. “வந்தது உன் அண்ணங்காரன்தான.” என்றார் பிரியாவிடம்.

ப்ரியா வெறுமனே தலையசைத்து வைக்க, “ம்ம். பொண்டாட்டி துணியெல்லாம் வாங்கினு போறான். உங்கிட்ட ஒன்னும் சொல்லிக்கலியா..” என்றார் மீண்டும்.

பிரியா பதில் கூறுமுன்பே “இந்த காலத்துல எல்லாம் அப்டிதான் இருக்கு. பொண்டாட்டி வந்துட்டா எல்லாம் மறந்துடுது.” என்று போகிறபோக்கில் பேசிச் சென்றார் அவர்.

‘ஓஓ… பொண்ணு வேண்டாம்னு சொல்லி நாடகம் போட்டுட்டு, இப்போ மருமகனோட உறவாடிட்டு இருக்கா இந்தம்மா.. இரு, உனக்கு எங்க பத்த வைக்கணுமோ, அங்க வைக்கிறேன்.’ என்று நினைத்தவளாக கோபத்துடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள் பிரியா.

குமரன் பிரியாவை அப்போதே மறந்து போயிருக்க, அவன் கவனமெல்லாம் ஆட்டோவில் இருந்த புத்தகங்களில் தான் இருந்தது. எப்படியும் கார்த்திகாவை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பியே தீருவது என்று முடிவெடுத்திருந்தான் அவன்.

‘அவ வாழ்க்கையை தான் நாசம் பண்ணியாச்சு. ஒழுங்கா படிப்பையாவது முடிக்க வைப்போம்.’ என்ற தீவிரம் அவனை சரியான வழியில் செலுத்திக் கொண்டிருந்தது. ‘அவள் கல்லூரி செல்ல என்னென்ன தேவையோ அத்தனையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்’ என்று பலவிதமான சிந்தனைகளுடன் வீடு வந்தவன் ஆட்டோவை வாயிலில் நிறுத்தி, அவளது உடைமைகளையும், உடைகளையும் எடுத்துச்சென்று கார்த்திகாவிடம் நீட்ட, சொல்ல முடியாத உணர்வுகளுடன் அவன் முகம் பார்த்தாள் கார்த்திகா.

‘வீடு வந்திருந்த தன் பொருட்களை நினைத்து மகிழ்ந்து போவதா… நின்று போன கல்லூரி படிப்பு தொடரப் போவதை நினைத்து நிம்மதி கொள்வதா… இல்லை, தன் பொருட்களை போலவே தன்னையும் அன்னை தூக்கியெறிந்து விட்டார் என்று கவலைகொள்வதா…’ என்று புரியாமல் உணர்வு கலவையாக நின்றிருந்தாள் கார்த்திகா.

குமரனுக்கு அவள் மௌனமும், முகத்தில் தெரிந்த உணர்வுகளும் புரியவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் கேட்டதைச் செய்துவிட்டான். அவள் கல்லூரி சென்றாக வேண்டும்… அவ்வளவே. அதைத்தவிர்த்து அவளின் மென்உணர்வுகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவமில்லை அவனிடம்.

ஒருவேளை, கார்த்திகா தன் மனக்குமுறல்களை வாய்விட்டு கூறியிருந்தால் புரிந்திருக்குமோ என்னவோ… அவளும் அழுத்தமாக மௌனம் சாதிக்க, அவளின் உணர்வுகள் புரியாமலே போனது குமரனுக்கு.

வழக்கம்போல் கையில் துண்டை எடுத்துக்கொண்டு அவன் குளிக்க கிளம்ப, அவர்கள் வீட்டுக்கதவு சற்று அழுத்தமாக தட்டப்பட்டது. குளியலறைக்குள் நுழையப் போனவன் என்ன நினைத்தானோ, தானே வந்து கதவைத் திறக்க, வாசலில் அவன் அத்தை சுந்தரி நின்றிருந்தார்.

குமரன் அவரைக்கண்ட நிமிடம், “அத்த..” என்று கட்டிக்கொள்ள பார்க்க, “தொடாதடா என்னை. சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டு.. அத்தயாம். இப்போதான் கண்ணு தெரியிறேனா நான்.” என்று கோபம் கொண்டார் சுந்தரி.

“உள்ளே வா. உன் மருமகன் வீடு தான். உள்ள வந்து பேசு.” என்று அவரைக் கைபிடித்து வீட்டிற்குள் அழைத்துவந்தான் குமரன்.

அவன் பேசத் தொடங்கும்போதே கார்த்திகாவும் கொஞ்சம் தெளிந்திருக்க, குமரனின் பேச்சை கவனித்து தான் இருந்தாள். அவன் பேசிய தொனியில் அவனுக்கு மிகவும் பிடித்தமானவர் என்று தெரியவர, அமைதியாக ஒதுங்கி நின்றுவிட்டாள்.

குமரன் அவரை அமர வைத்து அருகில் அமர்ந்தவன் “இரு. டீ வாங்கிட்டு வரேன்.” என்று எழ,

தன்னிச்சையாக “பால் இருக்கு.” என்றிருந்தாள் கார்த்திகா. குமரன் அவளை அதிசயமாக பார்த்ததைக் கவனிக்காமல் அந்த சமையல் தடுப்புக்குள் நுழைந்து கொண்டவள் அடுத்த ஆறுநிமிடங்களில் வந்தவருக்கு டீ கொடுக்க, சுந்தரி அந்த டீயின் மணத்திலேயே கார்த்திகாவை ஓரளவு கணித்துவிட்டார்.

“ராணியை போல் கடைக்கு போய் வாங்கிட்டு வரட்டும்.” என்று அவள் நிற்காததே, அவள்மீது ஒரு நல்லெண்ணத்தை தோற்றுவித்தது.

உண்மையில், குமரனின் திருமண விஷயத்தைக் கூறி அவரை அழைத்தது ராணிதான். குமரன் செயலைக்கேட்டு அதிர்ந்தவர் அண்ணன் மகன் மீது கொண்ட பாசத்தால் கிளம்பி வந்திருக்க, ராணி கூறியது மொத்தமும் குறைகள் தான்.

பிள்ளைகள் இருவரும் தங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக கூறி கண்ணீர் வடித்து இருந்தார் அவர். ‘இனி, சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்.. இப்படி இந்த வயசுல அனாதையா நிக்கிறோமே.’ என்று வாய்க்கு வந்தபடி புலம்பியவர், கார்த்திகாவையும் விட்டு வைக்கவில்லை.

ஊமைப்போல் இருந்து கொண்டு மகனை மயக்கிவிட்டதாக அவள்மீதும் எக்கச்சக்க குறைகள்.

சுந்தரிக்கு தன் அண்ணியைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால்,அவர் பேசிய எதையும் பெரிதாக எடுக்கவில்லை சுந்தரி. ஆனால், ராணியின் நச்சரிப்பு தாங்க முடியாமல் போகவும்தான் கிளம்பி வந்திருந்தார். ஆனால், இங்கு வந்து குமரனையும், கார்த்திகாவையும் நேரில் பார்த்த பின் தன் அண்ணியை நினைத்து அப்படி ஒரு கோபம்.

கொண்ட பாசம் கொஞ்சமும் குறையாமல் ஓடிவந்து அண்ணன் மகன் தன்னை அணைக்க முற்பட்டபோதே அவன் இயல்பு எந்தவிதத்திலும் மாறவில்லை என்பதை புரிந்துகொண்டார் சுந்தரி. கார்த்திகாவின் முகத்தில் தெரிந்த சிறுபிள்ளைத்தனமும், இயல்பாக அவளிடம் ஒட்டிக்கொண்டிருந்த பயமும் அவள்மீதும் ஒரு நல்லெண்ணத்தை தான் தோற்றுவித்தது.

இப்படியான பிள்ளைகளை வைத்து வாழத் தெரியவில்லையே… என்று கசப்புடன் நினைத்துக் கொண்டவர் மேலுக்கு மருமகனை கேள்வி கேட்க தொடங்கினார்.

“என்னடா.. கல்யாணம் பண்ணினு வந்துட்டா, பெத்தவள ரோட்ல விட்டுடுவியா..” என்றார்.

“நானா.. அதுதான் வீட்டை விட்டு வெளிய போடான்னு சொல்லுச்சு. ரோட்ல வச்சி அசிங்கம் பண்ணுச்சு. அது தொல்ல தாங்காம தான் தனியா வந்ததே.”

“கோவத்துல ரெண்டு வார்த்த பேசறதுதான். அதுக்கு தனியா வந்துருவியா? நாளைக்கு நான் பேசினாலும். என்னையும் ஒதுக்கி வச்சிடுவியா.”

“அட ஏன்த்தை நீ வேற.? நாங்க அங்க இருந்தா நித்தமும் ஏதாவது தலைநோவா தான் இருக்கும். ஏதாவது கொடைச்சல் கொடுத்துனே தான் இருக்கும் அது. அதான் வந்துட்டேன்.?”

“இதெல்லாம் செரிதான். உன் அம்மா வளர்த்த வளர்ப்புக்கு உன் தங்கச்சி இதத்தான் செய்வான்னு என்னிக்கோ  நான் எதிர்பார்த்தது தான். ஆனா, உனக்கு இன்னாடா ஆச்சி. நீ எப்புடிடா லவ், கல்யாணம்னு…  உன் ஆத்தா சொல்றப்ப நெஞ்சு வலியே வந்துடுச்சி. உன் ஆத்தா தான் பஜாரி. என்கிட்டே சொல்றதுக்கு இன்னாடா. என் ஊட்டுக்கு வரவேண்டியது தான.?” என்று உரிமையுடன் அவர் கோபிக்க,

“போனத விடுத்த.. இப்போ  நடக்கிறத பேசு. என்னவாம் உன் அண்ணிக்கு.” என்று குமரன் கேட்க,

“என்ன.. வழக்கம் போல பஞ்ச பாட்டுதான். சோத்துக்கு வழியில்லாம போய்ட்டாளாம். அனாதையா விட்டுட்டியாம்.”

“ம்ம்.. இத தவிர வேற ஒன்னியும் தெரியாது என் அம்மாக்கு.” என்று சலித்து சிரித்தவன் “போய் சொல்லு. அப்டி ஒன்னும் விட்டுட மாட்டேன். நான் குடுக்கவேண்டிய காசு சரியா வந்து சேரும்.” என்றான் விரக்தியாக.

“சோர்ந்து போவாத, இதுவும் நல்லதுக்கு தான். உனக்கும் குடும்பம்னு ஆகிப்போச்சு. வரவு செலவெல்லாம் அளவோட இருக்கட்டும். உன் ஆத்தாக்காரி உன்னை அங்க கூட்டினு வர சொன்னா. நான் பேச வேண்டியத பேசிட்டேன்னு சொல்லிடறேன். நீ உன் பொழப்ப பாரு.”

“இனியாவது உனக்குன்னு ஏதாவது சேர்த்து வை. உன்னை நம்பி அந்த பொண்ணும் இருக்குல்ல.” என்றவர் மேலும் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டே கிளம்பினார்.

அவர் கிளம்பவும், கார்த்திகா குமரனுக்கு உணவை எடுத்து வைக்க, தன் அன்னையைப் பற்றி தெரிந்தவனாக பால்கனியில் சென்று நின்றான் குமரன்.

அவன் நினைத்தது போலவே, கீழே குடிநீர்த்தொட்டியின் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார் ராணி. சுந்தரி அவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, அதை மறுப்பவராக கையை நீட்டி நீட்டி நியாயம் பேசிக் கொண்டிருப்பது பார்த்ததும் புரிந்தது.

இறுதியில், சுந்தரி  அதட்டலாக ஏதோ பேச, அமர்ந்த இடத்தில் இடத்தில் இருந்து எழுந்துகொண்டார் ராணி. சுந்தரியை அவர் மரியாதையில்லாமல் ஏதோ பேச, அதற்குமேல் நிற்காமல் வேகமாக கீழிறங்கினான் குமரன்.

அவர்களை நெருங்கியவன் தன் அத்தையுடன் நின்றுகொள்ள, குமரனைக் காணவும் “இதோ நான் பெத்ததே எனக்கு நிலைக்கல. உன்னையெல்லாம் பேசி என்னாவ போவுது. போடி நன்றிகெட்டவளே.” என்று திட்டியவர் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

குமரன் கோபமாக எதுவோ பேச வர, அவனைத் தடுத்து பிடித்துக் கொண்டார் சுந்தரி.

“போறா விட்றா. அவ புத்தி தெரிஞ்சுது தான. நீ போ, சாப்பிட்டு படு.” என்று அவனை அனுப்பி வைக்கப் பார்க்க, குமரனா விடுவான்.

தன் ஆட்டோவிலேயே அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட்டவன் அதன் பிறகே தன் வீடு வந்தான்.

கார்த்திகாவிற்கு நடப்பது எதுவும் புரியாமல் போக, தனித்திருப்பது வேறு பயம் கொடுக்க குமரன் வரும்வரை உண்ணாமல், உறங்காமல் தான் அமர்ந்திருந்தாள் அவள்.

அவனுக்கு வந்த சோதனைகளின் பயனால் தன் சொந்த கவலையை அவள் மறந்து போயிருக்க, குமாரனை நினைக்கையில் கொஞ்சம் பாவமாக இருந்தது.

என்ன செய்ய போகிறானோ… என்பதே பிரதானமாகி இருந்தது கார்த்திகாவிற்கு.