அலுவலக உதவியாளரை அழைத்து டீ வாங்கி வரச் சொன்னவன் அமைதியாய் தம்பியின் எதிரே அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில் டீ வர ஒன்றை தம்பியிடம் நீட்டி மற்றொன்றை தான் எடுத்துக்கொள்ள, டீ கிளாஸை அழுந்தப்பிடித்தபடி வெறித்த பார்வையுடன் கனன்று கொண்டிருந்தான் அஞ்சன்.
“எதுவா இருந்தாலும் பொறுமையா இரு அஞ்சு. இம்புட்டு கோபம் ஆகாது. டீ குடிச்சிட்டு கிளம்பி வூட்டுக்கு போ. அருணை நான் கூட்டியாறேன்.” நிலைமை கைமீறி போவதற்கான முகாந்திரம் அனைத்தும் தென்பட, அஞ்சனை அங்கிருந்து கிளப்ப எத்தனித்தான் சுவாமிநாதன்.
“போன் போட்டு அவனை வரச் சொல்லு… ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும் இன்னைக்கு…” நகரமாட்டேன் என்று அழுத்தமாய் இருந்தவனைக் கண்டு சுவாமிநாதனுக்கு எதுவோ உதைத்தது. அலைபேசி எடுத்துக்கொண்டு தந்தையை அழைத்தபடி வெளியே சென்றுவிட்டான்.
“அருணுக்கு இவனுக்கும் ஏதோ பிரச்சனை. என்ன பிரச்சனைனு சொல்வான்னு எனக்கு தோணல. ஆளுங்க எல்லாம் வேலை ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நேரத்துல இவன் பிரச்சனை பண்ணா நல்லா இருக்காது. வூட்டுக்கு போக சொன்னாலும் முடியாதுனு வுக்காந்திருக்கான். என்ன பண்ணட்டும்?”
“அருணுக்கு போன் போட்டு நம்ம வூட்டுக்கு வரச் சொல்லு… நா விசாரிக்கிறேன்.”
“அருண் ஏன் வரலைன்னு அஞ்சு கேப்பானே? போன் போட்டு விரசா வரச்சொல்லுன்னு சொல்லிட்டிருக்கான். அவனை எப்படி சமாளிக்க?” குழப்பத்தில் தலை சொரிந்தபடி நின்ற சுவாமிநாதனின் பார்வையில் அருண் சூளைக்குள் வருவது தெரிய, போச்சு என்ற அலறல் அவனுள்.
“அருண் வந்துட்டான் ப்பா… அஞ்சு இருக்குற கோபத்துக்கு அம்புட்டு லேசுல பிரச்சனை பண்ணாம வுடுவானு தோணல… நீங்க வரீங்களா? அஞ்சுவை என்னால தனியா சமாளிக்க முடியாது.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனைத் தாண்டிச் சென்று அருண் சட்டைக் காலரை பிடித்திருந்தான் அஞ்சன்.
அவர்களிடம் விரைந்த சுவாமிநாதன் அஞ்சன் கைப்பிடித்து அருணை விடுவிடுக்க முயல, அவனை உதறியவன் அருணின் கன்னத்திலும் உடலிலும் கண்மண் தெரியாது அடித்தான்.
அஞ்சனின் அடிகளிலிருந்து முடிந்தளவு தப்பித்தபடி உடலை வளைத்து நெளித்த அருண் பின்னோக்கி அடி வைத்த வண்ணம், “சொல்றதை கேளு அஞ்சா?”
“இன்னும் என்ன கேக்கணும்? ம்ம்… என்ன கேக்கணும்? காது குளிர எல்லாம் கேட்டாச்சு.” என்றபடி அருணின் வயிற்றிலே ஒரு குத்துவிட்டான்.
“அஞ்சு என்ன பண்ற? விடு அவனை…” சுவாமிநாதன் இருவருக்கும் குறுக்கே நின்று அஞ்சன் நெஞ்சில் கைவைத்து தடுத்தபடி அருண் புறம் திரும்பி அவனை கிளம்புமாறு தலையசைக்க, திமிறினான் அஞ்சன்.
“வாழ்க்கை பிச்சை போடுறானா அவன்? அப்புடி ஒன்னுமில்லாமையா இருக்கேன் நானு?” என்று கர்ஜித்தபடி எகிறிச் சென்று அருணை மீண்டும் வெளுத்தான் அஞ்சன்.
அவன் பின்னோடே ஓடிச் சென்ற சுவாமி அஞ்சனை பின்னிருந்து பிடித்து தடுத்தபடி, “எல்லாரும் பாக்குறாங்கடா அஞ்சு… பொறுமையா பேசலாம்.” எனும் போதே வேலை செய்யும் ஒன்றிரெண்டு பேர் அவர்களை நெருங்கி வந்து ரத்தக்கறையுடன் கீழே விழுந்திருந்த அருணை எழுப்பிவிட்டனர்.
“பேசி தீத்துக்கலாம் அஞ்சு ண்ணா… அமைதியா இருங்க.” என்றான் அவர்கள் சூளையில் அருணுடன் வேலை பார்த்தவன்.
“உன்ற வேலையை பாத்துட்டு போடா வெண்ணை.” கோபத்தில் அவனை அஞ்சன் எடுத்தெறிந்து பேச, நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த சுவாமிநாதன் வேலையாட்கள் இருவரிடம் அருணை அப்புறப்படுத்தும்படி ஆணையிட்டு அஞ்சனை தன்னுடன் அலுவலக அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்.
“அடக்காம? நீ அவன் கை காலை உடைக்குற வரைக்கும் பாத்திட்டு இருக்க சொல்றியா?” தம்பிக்கு குறையாத கோபம் தற்சமயம் சுவாமியிடமும்.
“முதுகுல குத்துன அவன் கை காலை உடைச்சிருக்கணும்…” அவன் கோபத்தின் அளவை அமைதியாய் குத்து வாங்கி ஏற்றுக்கொண்டது காற்று.
“முதுகுல குத்துனானா? என்னடா அஞ்சு பிரச்சனை? எதுவும் சொல்லாம உன்ற இஷ்டத்துக்கு குதிச்சிட்டு இருக்க?” சுவாமியின் கேள்வியில் அஞ்சனின் இதழ்கள் இறுக மூடிக்கொண்டது.
சில நாட்கள் முன்புவரை என் மனைவியின் காதலன் இந்த அருண்… அறிந்து தெரிந்தே எங்கள் திருமணத்தை நடக்க விட்டிருக்கிறான் என்று நா வரை எழுந்த வார்த்தைகளை அவமானம் கருதி விழுங்கி இருந்தான். ஆம் அவமானம் தான். ஊர்கூடி ஆசைப்பட்டு கட்டிய மனைவி தனக்கு முன் தன் நண்பனை நேசித்திருக்கிறாள் என்று மற்றவர்கள் முன் வெளிப்படுவது தனக்கு இழுக்கு என்ற எண்ணமே அஞ்சன் வாயை அடைத்தது.
அமைதியாய் தண்ணீர் வாங்கிக்குடித்த அஞ்சன் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,
“எதுனாலும் சொல்லு உக்காந்து பேசலாம். பேசி தீக்க முடியாத பிரச்சனை எதுவும் கிடையாது.” என்ற அண்ணனின் கூற்றுக்கு வெற்றுச் சிரிப்பை உதிர்த்த அஞ்சன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியேற, எதிரே ஆட்டோவிலிருந்து இறங்கினார் பழனி.
அவரை பார்த்தும் பார்க்காதது போல் அஞ்சன் அவரை தாண்டிச் செல்ல, கோபமாய் உள்ளே நுழைந்தார் மனிதர்.
“என்னவாம் உன்ற தம்பிக்கு? என்ற மூஞ்சியை பாத்துட்டு பாக்காத மாதிரி போறான்.”
“என்னனு தெரிலப்பா… முதுகுல குத்திட்டாங்குறான்… வாழ்க்கை பிச்சைங்குறான்… ஒழுங்கா சொல்ல மாட்டேங்குறான்.” என்றான் சுவாமிநாதன் கவலையாய்.
“கேட்டாலும் முறுக்கிட்டு போவான் சொல்ல மாட்டான். இந்த அருண் பய எங்க?”
“அவனும் போக சொன்னா போகாம இவன்கிட்ட அடிவாங்கிட்டு இருக்கான். நம்ம ஆளுங்க ரெண்டு பேரை வுட்டு அழைச்சிட்டு போக சொல்லிட்டேன்.” என்ற சுவாமியின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் படர்ந்தது.
“போன் போட்டு எங்க இருக்காங்கனு கேளு.”
காலையே அஞ்சனும் கீர்த்தியும் வீட்டிற்கு வந்தபோது இருந்த சந்தேகம் தற்போது வலுப்பட எப்போதும் போல் மகனை விடுத்து அருணை நாடி விஷயம் அறிந்துகொள்ள முயன்றார் பழனி.
சுவாமிநாதனும் தந்தை பேச்சை தட்டாது விசாரித்துச் சொல்ல, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த அருண் சிகிச்சை முடிந்து வீடு செல்லவும் பழனியும் அவனைக் காண வீடு சென்றார்.
“எதுக்கு அஞ்சு உன்னை அடிச்சான்? உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” அங்கங்கு பிளாஸ்டர் ஒட்டியிருக்க சோர்ந்து போயிருந்த அருணை நலம் விசாரித்துவிட்டு சுற்றி வளைக்காது பேச்சை துவங்கியிருந்தார் பழனி.
முதலில் வாய் திறக்க மறுத்த அருண் பழனி அழுத்திக் கேட்கவும் உண்மையை உடைத்துவிட, மகனின் மனம் படும்பாட்டை எண்ணி கோபம் பொங்கியது.
“என்னடா பண்ணி வச்சிருக்க? அஞ்சுகிட்ட சொல்றதுக்கு முன்னாடி உங்கிட்ட தானே வந்து முதல்ல கீர்த்தியை பத்தி சொன்னேன். அப்போவே வாய் திறந்து சொல்லி தொலைச்சிருந்தா இப்போ மூணு பேரும் நிம்மதியா இருந்திருக்கலாம். கீர்த்தியில்லைனா இன்னொரு பொண்ணை பாத்து கட்டி வச்சிருப்பேன் என்ற மவனுக்கு.” கடிந்தவர் பின் அருணை தீர்க்கமாய் பார்த்து, “இனி நீ இந்த ஊர்லையே இருக்க கூடாது.” என்க, தலைகுனிந்தான் அருண்.
“இப்படி சொன்னா நாங்க எங்க போறதுங்க ஐயா?” அதுவரை அதிர்ச்சியில் அமைதியாய் இருந்த அருணின் ஆயா முன்வந்து பேச,
“உங்க பேரன் செஞ்சதெல்லாம் போதும்… உண்ட வூட்டுக்கே உபத்திரம் பண்ணி இருக்கான் இன்னும் எங்க இடத்துலையே இவனை வச்சிக்கிட்டு என்ற மவன் கஷ்டப்படணுமா. பழகின பழக்கத்துக்கு வெளியூருல வேலைக்கு ஏற்பாடு பண்றேன் பொட்டி கட்டி ரெடியா இருங்க.” என்றவர் திரும்பியும் பார்க்காது நடைகட்டினார்.
“என்ன ராசா இதெல்லாம்?” பழனி சென்றதும் அருணின் ஆயா கலங்கிய குரலில் அவன் தோள் பற்றி கேட்க,
“சிலதுக்கு குடுப்பணை வேணும் ஆயா. ஆனா அந்த குடுப்பணையும் நம்ம சரியா இருந்தாதான் அமையும். ஐயா சொன்ன மாதிரி பொட்டியை கட்டு.” என்ற அருண் அமைதியாய் சென்று படுத்துக்கொண்டான்.
கோபத்துடன் திருப்பூரில் இருக்கும் அவர்கள் வீட்டுக்குச் சென்ற அஞ்சன் உண்ணாது அறைக்குள் முடங்கினான். அருணை அடித்துவிட்டாலும் ஆத்திரம் மட்டுப்படவில்லை. தேவையில்லாது என்னை அவர்களுக்கிடையில் யார் பொருத்தச் சொன்னது? என் வட்டத்திற்குள் இருந்துகொண்டே என்னை ஏமாற்றியிருக்க நானும் ஏமாந்திருக்கிறேன் என்று கருவிக்கொண்டவன் எதுவும் செய்ய இயலா தன் நிலையை எண்ணி நாளங்கள் சூடேற, விரல்கள் அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பலமுறை சென்றுகொண்டே இருந்த அழைப்பு ஏற்கப்படவே இல்லை. அதில் இன்னும் கடுப்பானவன் கார்மென்ஸ்கே சென்றுவிடும் வேகத்தில் எழ, அவளிடமிருந்து அழைப்பு வந்தது.
“எதுக்கு விடாம போன் பண்ணிட்டே இருக்கீங்க?” அழைப்பு ஏற்கப்பட்டவுடன் கீர்த்தியின் எரிச்சல் மிகுந்த குரல் அவன் செவியை எட்ட,
“பத்து நிமிஷத்துல உன்ற கார்மெண்ட்ஸ்க்கு வர முடியும்.”
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர் இல்லை என்று காட்டிக்கொள்ள இடக்கான பேச்சுக்கள் நீண்டது சில நொடிகள். சைலென்டில் இருந்த அலைபேசியை மதிய நேர இடைவெளியில் எடுத்து பார்த்தவளுக்கு அவனின் அழைப்புகள் தொடர்ந்து வந்ததற்கான அறிவிப்பு இருக்க, கோபம் இருந்தாலும் அழைப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவனுக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால் இப்போது வார்த்தையாடல் நீள நேரமின்மையில் அவளுக்கு அழுத்தம் கூடியது.
“எதுக்குடி அவனை விட்டு என்னை கட்டுன? வாழ்க்கை பிச்சை போடுறீங்களா ரெண்டு பேரும்?”
“எந்த நேரத்துல என்ன பேசுறீங்க?”
“பேச வேண்டிய நேரத்துல பேசாம என் கழுத்தறுத்துட்டு என்னடி வீம்பு உனக்கு?”
“அதுக்குத்தான் என்னை அவன் வீட்டுல கொண்டுபோய் விட்டு என்னை மொத்தமா முடிச்சிட்டீங்களே. சொல்லாம இருந்தது தப்புனு ஒத்துக்கிட்டேன் இன்னும் என்ன பண்ணனும் நானு?” மீண்டும் மீண்டுமா என்று ஆயாசமாய் வந்தது கீர்த்திக்கு.
“ஒத்துக்கிட்டா எல்லாம் ஆச்சா? மறக்க முடியாமத்தான இன்னும் அவனை சுமந்துட்டு இருக்க?” என்று அஞ்சன் அனலை வீசவும் அழைப்பை துண்டித்து அலைபேசியை அணைத்துவிட்டாள் கீர்த்தனா.
அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் அலைபேசியை வெறித்து நோக்கியவன் ஆத்திரத்தில் அதை தூக்கி விட்டெறிய, சுவரில் பட்டு தெறித்தது அலைபேசி. எதுவும் செய்ய பிடிக்காது போக வெறுமை தன்னால் அவனை நிறைத்தது.
ஊண் உறக்கம் மறந்து தவித்துக்கொண்டிருந்தவன் வீட்டில் அதற்கு மேல் தனித்து இருக்க முடியாமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். எவ்வளவு நேரமானது எத்தனை நாட்களானது என்பது கூட மறந்து சுற்றித் திரிந்தவனை பிரயத்தனப்பட்டு கண்டுபிடித்த கீர்த்தி அழுது தீர்த்துவிட்டாள்.