தித்திக்கும் முத்தங்கள் 08

மகாலட்சுமி பணத்தைக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்தது என்று வெளியேறிவிட, கதிர்வேல் யோசிக்கும்போதே சட்டென பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி. பணத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், “இவ்ளோ நல்லவங்களா உங்க அம்மா. நமக்கு வீடெல்லாம் பார்த்து கொடுக்கறாங்க.” என்றாள்  கிண்டல்போல்.

“நீ வேற… அது நம்மளை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லாம சொல்லிட்டுப் போது. அதுவாவது நமக்கு நல்லது பண்றதாவது?”

“எப்படியோ, இதுவும் நமக்கு நல்லதுதான. இப்படி உங்கம்மாவுக்கு பயந்து பயந்து நிக்கிறதைவிட, தனியா நிம்மதியா இருக்கலாம்.”

“நானும் அதேதான் யோசிச்சேன். நம்மால இதுகிட்ட மாரடைக்க முடியாது.” என்றவன், ” குடு.. நான் வீட்டுக்கு எல்லாம் வாங்கினு வரேன்.” என்று பணத்துக்காக கைநீட்ட,

“நீ என்னத்தை வாங்குவ. வீட்டுக்கு என்ன வேணும்னு உனக்கு என்ன தெரியும்? என்னை கடைக்கு கூட்டிக்கிட்டு போ. நான் வேணும்ங்கிறதை வாங்கிக்கறேன்.” என்றாள் பிரியா.

“அதுவும் சரிதான். குளிச்சுட்டு வா.” என்றான் கதிர்.

அடுத்த ஒருமணி நேரத்தில் இருவரும் கடையில் இருக்க, பிரியதர்ஷினியின் கண்கள் ஆவலாக அந்த கடையைச் சுற்றி வந்தது. பார்க்கும் பொருட்களின் மீதெல்லாம் ஆர்வம் வர, கையில் கிடைத்ததெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

நான்ஸ்டிக் பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் என்று அதையும் அவள் வாங்கிக்கொள்ள,  மகாலட்சுமி கொடுத்த பணத்தில் மூன்றாயிரம் மட்டுமே மீதமிருந்தது. கதிர்வேல் அவள்  அடுக்கியிருந்த பொருட்களை அதிருப்தியாகப் பார்த்தாலும், மறுத்து எதுவும் சொல்லாததால் அத்தனையும் வாங்கிக் கொண்டவர்கள் வீட்டில் வந்து இறக்குவதற்கும் பணம் செலுத்தி வெளியே வர, எதிரில் இருந்த துணிக்கடை பிரியாவின் கவனத்தை ஈர்த்தது.

“மாமா. எனக்கு ரெண்டு சுடிதார் எடுத்துக்கொடு. எத்தனை நாளைக்கு இந்த நாலு ட்ரெஸை மாத்தி போடுவேன்?” என்றவள் கதிர்வேலின் கையோடு கைகோர்த்துக் கொள்ள, எதுவும் பேச முடியாமல் அவளுடன் நடந்தான் கதிர்வேல்.

இருவரும் வீட்டிற்கு திரும்பி வருகையில், மகாலட்சுமி கொடுத்த பணத்தில் வெறும் ஐநூறு ருபாய் மட்டுமே மீதமிருந்தது பிரியாவிடம்.

இவர்கள் வீடு வந்த அரைமணி நேரத்தில் பொருட்கள் வந்துவிட, இருவரும் சேர்ந்து அன்று மாலைக்குள் அத்தனையும் அடுக்கி முடித்திருந்தனர். புதுவீட்டில் பால்காய்ச்சி சாமி கும்பிட்டு முடித்து அவர்கள் வீட்டிலேயே இருவரும் இருந்துகொள்ள, அன்று மாலை வீடு திரும்பிய மகாலட்சுமியை ஒரு சகமனிதியாக மதித்துக்கூட வீட்டிற்கு அழைக்கவில்லை அவர்கள்.

மகாலட்சுமியும் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் வீட்டை கடந்துதான் தன் வீட்டிற்கு படியேறினார். வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருக்க, கதவைத் தட்டி அழைத்துப் பேச விரும்பாமல், நேரே தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார் அவர்.

யாருமில்லாத வீடு வெறுமையைக் கூட்ட, செய்வதற்கும் பெரிதாக வேலைகள் எதுவுமில்லை. அப்படியே எதையாவது செய்ய நினைத்தாலும் மனதும், உடலும் ஒத்துழைக்காது என்று தோன்ற, அமைதியாக அமர்ந்துகொண்டார்.

என்னவோ மனம் கிடந்து அடித்துக்கொள்ள, அந்த வீட்டின் அலமாரியில் இருந்த கார்த்திகாவின் நிழற்படத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். தூசி படிந்திருந்த அந்த படத்தை தன் புடவை முந்தானையால் துடைத்தவர் மகளின் முகத்தை மெல்ல வருடினார் ஏக்கத்துடன்.

“எங்கடி இருக்க.. நீ இல்லாம வீடு வீடாவே இல்லையே.. உன் நினைப்பாவே இருக்குடி.” என்று வெகுநேரம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.

———-

மகளை நினைத்து மகாலட்சுமி கண்ணீர்வடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இருந்தாள் கார்த்திகா. நேற்று இரவு லேசாக தொடங்கிய காய்ச்சல், இன்று காலையில் நெருப்பாக கொதிக்க, எழுந்து கொள்ளக்கூட தெம்பில்லை அவளிடம்.

குமரகுரு ஓடிச்சென்று ராஜம்மாவை அழைத்துவர, கார்த்திகாவின் உடல் உஷ்ணத்தைக் கண்டு அவரும் பதறித்தான் போனார்.”குமரா தூக்கு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிடுவோம்.. ஜுரம் கொதிக்குது.” என்றவர் தானும் உடன்வர, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த ஒரு மருத்துவரிடம் காண்பித்தனர்.

அவர் கார்த்திகாவின் உடலை சோதித்து காய்ச்சல் குறைய சில மருந்துகளை எழுதிக் கொடுக்க, குமரன் சென்று வாங்கி வந்து கொடுக்கவும், உடனடியாக கார்த்திகாவிற்கு ட்ரிப்ஸ் போடப்பட்டது.

ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த நேரம் மொத்தமும் ராஜம்மா அவளுடனே அமர்ந்திருக்க, குமரன் அந்த சிறிய கிளினிக்கின் வெளியே நின்றிருந்தான். ட்ரிப்ஸ் முழுதாக ஏறி முடிக்கவும், மருத்துவர் அறிவுறுத்தியிருந்த மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அப்போதுதான் வீடு வந்து சேர்ந்திருந்தனர் கார்த்திகாவும், குமரனும்.

வீட்டிற்குள் நுழையவும், கார்த்திகா குளியலறைக்குள் நுழைந்து வெளியே வந்தவள் சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொள்ள, குமரன் பாயை விரித்து அவள் படுப்பதற்கு வசதியாக தலையணை, போர்வை என்று அத்தனையும் எடுத்து வைத்திருந்தான்.

காலையிலிருந்து சாப்பிடாதது, உடலில் ஏறிய மருந்துகள் என்று அத்தனையும் சேர்ந்து அவளை புரட்டிப்போட, வெகுவாக பசிக்கத் தொடங்கியது அவளுக்கு. ஆனால், அவனிடம் எதையும் கேட்கும் எண்ணமில்லாமல் கண்களை மூடிப் பாயில் படுத்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் ராஜம்மா வீட்டிற்கு வர, அவர் கையில் அவளுக்கான உணவு இருந்தது. அவள் வாய்க்கு ஏற்றபடி ரசம் சாதத்தை அவர் கரைத்து எடுத்து வந்திருக்க, வேகமாக குடித்து முடித்தவள் மாத்திரைகளையும் போட்டுகொண்டு படுத்துவிட்டாள்.

 இத்தனைப் பசி இருந்தும், அவள் வாய் திறக்காமல் அமர்ந்திருந்தது குமரனை கொதிநிலைக்கு கொண்டுசெல்ல, ராஜம்மா இருந்ததால் எதையும் பேசிக்கொள்ளவில்லை. அவர் அவனுக்கும் சேர்த்தே உணவு கொண்டு வந்திருக்க, உணவை மறுத்துவிட்டவன், “அவளை கொஞ்சம் பார்த்துக்கோக்கா. நான் வந்துட்றேன்.” என்று கூறிக்கொண்டே வேகமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

அவன் செல்லவும், ராஜம்மா தானும் ஒருபுறம் படுத்து உறங்கிப்போக, அன்று இரவுத் தொடங்கும் நேரம்தான் விழிப்பு வந்தது கார்த்திகாவிற்கு. ராஜம்மா அவள் எழவும், கடையில் இருந்து டீ வாங்கிவந்து கொடுக்க, அதன் ருசியில் முகத்தை சுளித்துவிட்டாள் அவள்.

ஆனால், ராஜம்மா அந்த டீயை ரசித்துக் குடித்துக்கொண்டிருக்க, அதை இருவாய்க்கு மேல் குடிக்க முடியாமல் ஓரமாக வைத்துவிட்டாள்.

ராஜம்மா, “இப்போ எப்டி இருக்கு கண்ணு.” என,

“ம்ம்… இப்போ பரவாயில்லம்மா.” என்றாள் கார்த்திகா.

ராஜம்மா திடீரென, “உனக்கு சமைக்கத் தெரியுமா கண்ணு.” என்று கேட்க,

“தெரியுமே.”

“நீ டீயை குடிச்சதும் முகத்தை சுழிச்சதுமே புரிஞ்சுபோச்சு எனக்கு. உனக்கு கடைசாப்பாடு எல்லாம் ஒத்துவராது கண்ணு.” என்று அவர் சிரிக்க, சட்டென அன்னையின் நினைவு வந்துவிட்டது கார்த்திகாவிற்கு.

அவருக்கு பதில் கொடுக்காமல் அவள் மௌனமாகிவிட, “என்னம்மா.” என்றவரிடம்,

“அம்மா என்ன பண்றாங்களோ தெரியல.” என்றாள் வருத்தத்துடன்.

“என்ன செஞ்சா உனக்கு என்ன? உன்னைத்தான் வேணாம்னு சொல்லிட்டு போய்டுச்சாம்ல. அப்புறம் அதைப்பத்தி எதுக்கு கவலைப்படணும்?”

“இல்லம்மா… என் அம்மா ரொம்ப நல்லவங்க. கொஞ்சம் கோவம் வரும். ஆனா, நல்லவங்கதான். அன்னைக்கு உங்க தம்பி செஞ்ச வேலையால என்னையும் தப்பா நினைச்சுட்டாங்க. அவங்களுக்கு என்னை ரொம்ப  பிடிக்கும். எனக்கும்தான்…” என்றவள் வார்த்தைகளை முடிக்கும்முன்பே குரல் தேம்பியது.

“அழாதம்மா. நல்ல பொண்ணுல்ல, எல்லாம் சரியாப் போவும். அழாத ராஜாத்தி.” என்று ராஜம்மா தேற்றிக் கொண்டிருக்க, குமரன் வந்துவிட்டான்.

வீட்டிற்குள் நுழையும்போதே கார்த்திகாவின் அழுதமுகம் கண்ணில்பட, எரிச்சலாக உணர்ந்தான் அவன்.

சட்டென மூண்ட எரிச்சலுடன், “என்னவாம்.” என்று ராஜம்மாவிடம் அவன் கேட்க,

“ஒன்னும் இல்லடா.. என்னமோ பேசினு இருந்தோம். சட்டுனு அழுதுடுச்சு. சரியாகிடுவா விடு.” என்றவர் “நான் வீட்டுக்குப் போறன் குமரா. உலை வைக்கணும்.” என்று கூறிச் சென்றுவிட்டார்.

குமரன் கழிவறைக்குள் நுழைந்தவன் முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்து அமர, கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி அமர்ந்து இருந்தாள் கார்த்திகா.

“இப்போ எவன் செத்துட்டான்னு ஓயாம அழுதுனு இருக்க நீ. என்னதான்டி நினைச்சுனு இருக்க.” என்றவன் அவள் முன்னே வந்து  நிற்க, பட்டென கண்களைத் துடைத்துக்கொண்டாள் கார்த்திகைச்செல்வி.

“இனி என்முன்னாடி அழுமூஞ்சியா நின்னுப்பாரு.. அப்புறம் பேசிக்கிறேன்.” என்றவன் “சாப்பிட என்ன வாங்கினு வரணும்.” என்று அதே கோபக்குரலில் கேட்டுவைக்க, அவளுக்கு சாப்பிடும் எண்ணமே வரவில்லை.

குமரன் அது புரியாமல், “கேட்கறது காதுல விழுதா?” என்று அதட்ட,

“எனக்கு பசிக்கல.”

“அப்டியென்னடி.. நான் வாங்கிக்குடுத்தா என் காசுல சாப்பிடக்கூடாதா. ராஜம்மா வூட்ல இருந்து சோறு எடுத்துட்டு வந்தா பசிக்குமா. உனக்காக வீடு வீடா போய் பிச்சையெடுக்கவா நான்?” என்று கத்திவிட்டான் குமரன்.

“எனக்காக எதையும் நீ செய்ய வேணா. நான்… நானே சமைச்சுக்கறேன்.” என்றாள் பயத்துடன்.

“நீ இருக்கிற நிலைமைக்கு அது ஒன்னுதான் குறை. காலையிலதான குத்து குத்துன்னு குத்தி அனுப்பி வச்சாங்க. அதுக்குள்ள திரும்ப போறதுன்னு முடிவு பண்ணிட்டியா.?” என்றான் நக்கலாக.

கார்த்திகா எதுவும் பேசாமல் இருக்க, “உன் உடம்பு குணமானதும் என்னவேனா பண்ணிக்க. இப்போ சாப்பிட என்ன வாங்கினு வரட்டும் சொல்லு.”

“ஒருவேள சாப்பிடலன்னா செத்தா போய்டுவேன்.?”

“ஏய்.. நீ அடங்கமாட்ட… எழுந்திரு. வா, உன்னை கூட்டினுப் போய் அந்த டாக்டர்கிட்டயே உடறேன். நீ அவன்கிட்ட பேசிக்கோ வாடி.” என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்தான் குமரன்.

அவன் கையைத் தட்டி விடும் நோக்கில், “அய்யோ… விடு என்னை.” என்று கத்தியவள் தன் முழங்கையால் அவனைத் தள்ளிவிட, ஒருகால் மடக்கி அரைகுறையாக அமர்ந்திருந்தவன் பொத்தென பின்னால் விழுந்துவிட்டான்.

அவன் விழுந்த நிமிடமே, ‘ஐயோ…’ என மனதிற்குள் பதறிவிட்டாள் கார்த்திகைச்செல்வி.

குமரனுக்கு எதுவுமோ என்றெல்லாம் பதறவில்லை… சத்தமாகப் பேசுவதற்கே கோபம் கொள்பவன் இப்போது மீண்டும் அடித்துவிடுவானோ என்று தான் அச்சமாக இருந்தது.

ஆனால், குமரன் அவள் பிடித்து தள்ளியதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், “நல்லா தெம்பா தான்டி இருக்க. உங்கிட்ட அடி வாங்க வேற தனியா சாப்பிடணும் போல.” என்று விளையாட்டாக கூறிவைக்க, அவனை திகைத்து நோக்கினாள் கார்த்திகா.

‘இவனுக்கு கோபமே வரவில்லையா!’ என்பதே  பெருத்த அதிசயமாக இருந்தது அவளுக்கு.

ஆனால், உண்மையில் அவள் பிடித்து தள்ளிய நிமிடம் அப்படி ஒரு கோபம் கனன்றது குமரனுக்கு. அதே கோபத்துடன் அவன் நிமிர்கையில் தான் கார்த்திகைச்செல்வி பயத்துடன் அவனைப் பார்த்தது. குமரனுக்கு அதற்குமேல் அவளிடம் கோபப்படத் தோன்றவில்லை.

தன்னை முயன்று இயல்பாக காட்டிக்கொண்டு அவன் வாயடிக்க, அச்சம் மறைந்து அவள் விழிகளை ஆச்சர்யம் கொள்ளையடித்துக் கொண்டது.

அதில் லேசாக சிரித்துக் கொண்டவன், “இதெல்லாம் கண்டுக்க மாட்டேன். இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சிக்க. ஆனா, இந்த அழுவுறது, சாப்பாடு வேணான்னு அடம் பண்றது அதெல்லாம் பண்ணாத.” என்றான் உடனடியாக.

கார்த்திகா மௌனம் சாதிக்க, “நைட்டுக்கு மாத்திர போடணும். சாப்பிட என்ன வேணும் சொல்லு.?” என்று மீண்டும் ஒருமுறை கேட்டான் குமரகுரு.

அவன் கீழே விழுந்த அனுதாபத்திலோ என்னவோ, “இட்லி மட்டும் போதும்.” என்று வாயைத் திறந்தாள் கார்த்திகா.

“சாம்பார் சட்னி எதுவும் வேணாமா.” என்று சட்டென குமரன் கேட்டுவிட, முகம் சுருக்கி குமரனை முறைக்கத் தொடங்கினாள் கார்த்திகா.

“அப்பீட்டு..” என்று எழுந்தவன் வேகமாக வெளியே ஓடிவிட, ‘இந்த அரக்கனை புரிஞ்சிக்கவே முடியலையே.’ என்று தீவிர சிந்தனையில் இறங்கியிருந்தாள் கார்த்திகா.

அதற்குமேல் எந்தவித சஞ்சலங்களுக்கும் வழி இல்லாமல் அந்தநாள் விடைபெற, அடுத்தநாள் காலையில் குமரன் கார்த்திகாவிடம் பணத்தை நீட்ட, எதற்கென புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

“இப்டி வீட்லேயே உட்கார்ந்திருக்க முடியாது. வேலைக்கு போயாவனும். உனக்கு எதுக்காவது காசு தேவப்பட்டா அதுக்குதான் தரேன். கைல வச்சிக்க.” என்றான் அவன்.

அவனிடம் பணம் வாங்க எதுவோ தடுக்க, அவன் நின்று கொண்டிருப்பதை மறந்தவளாக, யோசனையில் ஆழ்ந்துவிட்டாள் கார்த்திகா.

அந்த நிமிடங்கள் குமரனின் பொறுமையை வெகுவாக சோதிக்க, காலையில் அவளிடம் வாக்குவாதம் செய்ய மனமற்றவனாக அவள் கையைப்பிடித்து அதில் பணத்தை திணித்து கிளம்பிவிட்டான்.

கார்த்திகா “இல்ல…” என்று வாயைத் திறப்பதற்குள் வேகமாக படிகளில் இறங்கி ஓடியிருந்தான் குமரன்.

வீட்டிற்குள் வந்தவள் உள்ளங்கையில் இருந்த பணத்தை அசையாமல் பார்த்திருக்க, நிச்சயம் சில நூறுகளாவது இருக்கும் என்று பார்க்கும்போதே புரிந்தது.

‘இவ்ளோ காசை வச்சு என்ன செய்யுறது.?’ என்று புரியாமல் சாமிபடத்தின் அருகில் வைத்துவிட்டு, மீண்டும் அந்த வீட்டின் மூலையில் அமர்ந்துகொண்டாள் கார்த்திகைச்செல்வி.

அவள் ‘சமைக்கிறேன்.’ என்று கூறியதால், குமரன் காலையிலேயே கிளம்பியிருக்க, காலை உணவையும் வாங்கி கொடுக்காமல் சென்றிருந்தான்.

வெகுநேரம் அப்படியே அமர்ந்து இருந்தவளுக்கு பசிக்க தொடங்க, மெதுவாக எழுந்து சமையலறையை ஆராய்ந்தாள். ராஜம்மா அரிசி, மளிகைப் பொருட்கள் எல்லாம் வாங்கி அடுக்கியிருந்தார். ஆனால், காய்கறிகள் இல்லாமல் எங்கிருந்து சமைப்பது.

கார்த்திகா மீண்டும் சோர்ந்தவளாக பழைய இடத்திற்கே வந்து அமர்ந்துவிட, சில நிமிடங்களில் ராஜம்மாவே வந்துவிட்டார்.

“சாப்பிட்டியா கண்ணு.” என்றவரிடம்,

‘என்ன பதில் சொல்வது.’ என்று தெரியாமல் அவள் விழிக்க, “இன்னுமா வெறும் வயித்தோட இருக்க.” என்று கடிந்து கொண்டவர், “தோச வாங்கியாறவா.” என்று கேட்க, மீண்டும் மீண்டும் அவரிடம் இப்படி நிற்க விரும்பவில்லை கார்த்திகா.

“எனக்கு ஏதாச்சும் காய்கறி, தக்காளி, வெங்காயம் மட்டும் வாங்கி கொடுக்கறீங்களா.?” என்றாள் பாவமாக.

 “இதுக்கு ஏன் நெளியுற.. சொன்னா, வாங்கினு வந்து குடுத்துட்டு போறேன்.” என்று அதட்டியவர் “இன்னா வேணும்.?” என,

“என்ன இருக்கோ, பார்த்து வாங்கிக்கோங்க.” என்றவள் சாமிப்படத்தின் அருகே இருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்க,

“காய் வாங்க  எதுக்குடி இவ்ளோ பணம்?” என்று சிரித்துவிட்டார் ராஜம்மா.

‘உங்க தம்பி தான் கொடுத்தார்.”

“பொண்டாட்டி ஆசையா எதுவும் வாங்குவான்னு கொடுத்துட்டு போயிருப்பான்.” என்ற ராஜம்மாவின் வார்த்தைகளில் கார்த்திகா அதிர்ந்து நிற்க, அவள் அதிர்ச்சியை கவனிக்காமல் சிரித்துக்கொண்டே வெளியில் சென்றுவிட்டார் ராஜம்மா.

‘பொண்டாட்டியா.’ என்று மனம் அதிலேயே திக்கி நிற்க, ஒத்துக்கொள்ளவே இல்லை மனம்.

ராஜம்மா காய்கறி வாங்கிவந்து வைத்துவிட்டு, பூ வியாபாரத்திற்கு சென்றுவிட்ட பின்பும் கூட நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே தான் அமர்ந்திருந்தாள்.

‘அவன் காசை தொட்டிருக்கவே கூடாது.’ என்று மனம் திட்டினாலும், பசி வேறுவழியை அவளுக்கு கொடுக்கவில்லை.

‘தனக்கு மட்டும் சமைப்போமா.’ என்று முதலில் யோசித்தாலும், என்னவோ அதற்கும் மனம் வரவில்லை.

தன்னிலையை வெறுத்தவளாக இருவருக்கும் சேர்த்தே சமைத்து முடித்தவளுக்கு உணவைத்தொட பிடிக்கவில்லை. நேரத்தைக் கடத்திக்கொண்டே அவள் அமர்ந்துவிட, குமரனே மதியவேளையில் வீடு திரும்பிவிட்டான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் முதல் வார்த்தையாக “சாப்பிட்டியா.” என்று கேட்க, வெறுமனே தலையை மட்டும் அசைத்தாள்.

குமரன் அவன் வழக்கமாக குளியலறைக்குள் நுழைந்து முகம் கழுவி வெளியே வர, “சாப்பாடு போடவா..” என்றாள் தானாக.

குமரன் அவள் பேச்சில் அதிர்ச்சியானவன் சட்டென தலையசைக்க, தட்டில் சாதம் வைத்து குழம்பு, பொரியலுடன் அவன் கையில் நீட்டிவிட்டாள்.

குமரன் நடப்பது புரியாத குழப்பநிலையிலேயே உணவில் கையை வைக்க, முதல்வாய் எடுத்து வைத்ததுமே கார்த்திகாவின் திடீர் அக்கறைக்கான காரணம் புரிந்துவிட்டது அவனுக்கு.

ஆனாலும், எதுவும் காட்டிக்கொள்ளாமல் அவன் அமைதியாக உணவைத் தொடர, நாலைந்து வாய் உண்டிருப்பான் அவ்வளவே. அவன் கையிலிருந்த தட்டைப் பிடுங்கி தூர எறிந்துவிட்டாள் அவள்.

குமரன் அசையாமல் பார்த்திருக்க, முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள் கார்த்திகைச்செல்வி.