“நீ யார்..” என்று அவள் கேட்டுவிட்டால் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன் என்ற பதைப்பு தான். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக திருமகள் அமைதியாக நின்றதே அதிர்ச்சி என்றால், அவர் வார்த்தையை மீறாமல் அவர் மகனை மணக்க சம்மதித்தது அடுத்த அதிர்ச்சி. அத்தனைப் பேரின் மத்தியில் அவள் மறுத்திருந்தால் எத்தனைப் பெரிய தலைகுனிவாக போயிருக்கும்.
அவள் நினைத்திருந்தால் அதை செய்து, அவரைப் பழிவாங்கிக்கூட இருக்கலாம். ஆனால், அவரின் மருமகள் அமைதியாக நின்று அவரை தலைநிமிரச் செய்தாள். மகன் திருமகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டபோதும் கூட, அவரின் மனம் முழுதாக நிம்மதியடையவில்லையே.
மகன் என்ன நினைப்பில் இருக்கிறானோ.. மருமகள் என்ன நினைக்கிறாளோ.. இவர்களின் வாழ்வு எப்படி இருக்குமோ.. மனமொத்து வாழ்வார்களா என்று ஆயிரம் கவலைகள் அந்த பெரிய மனுஷிக்கு. என்று திருமகளின் காதலை அவர் வாயால் கேட்டுத் தெளிந்தாரோ, அன்று ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை.
இவள் தன் மகனின் வாழ்வை வளமாக்குவாள் என்று. இன்றுவரை அதையேப் பிடித்துக்கொண்டு அவர் நின்றுவிட, தனது ஒவ்வொரு செயலிலும் அவரது நம்பிக்கை சரிதான் என்று கூறிக்கொண்டே இருக்கிறாள் திருமகள்.
அவள் மட்டுமல்லாது கோதை, ரகுவரன் என்று தம்பியின் மக்கள் மூவரின் வாழ்வுமே நன்றாக அமைந்துவிட்டதில் பெருத்த நிம்மதியுடன் அமர்ந்து கொண்டார் அவர். அவர் எண்ணங்கள் தன் பிள்ளைகளின் வாழ்வைச் சுற்றிவர, அவரின் சிந்தனை படிந்த முகம் பார்த்து அவர் அருகில் வந்து அமர்ந்தாள் திருமகள்.
அவள் அமர்ந்ததைக் கூட கவனிக்காமல் அவர் தன்னில் மூழ்கி போயிருக்க, “அத்தை..” என்று அவரை உலுக்கினாள் மருமகள்.
விசாலம் புரியாமல் விழிக்க, “ஏன் இப்படி பாவமா உட்கார்ந்து இருக்கீங்க.. டீ போட்டுத் தரவா.. தலை வலிக்குதா..” என்று திருமகள் மீண்டும் கேட்க,
“அதெல்லாம் ஒன்னுமில்லடி என் வாயாடி.. நீ உன் வேலையைப் பாரு போ.. உன் புருஷன் சாப்பிட்டானா கேளு..” என்று அவளை விரட்டி விட்டவர் கோதையின் வீட்டுக்கு கிளம்பினார். இதுவும் அவரின் தற்போதைய வழக்கங்களில் ஒன்று.
கோதையின் மகன் அவரையும் மயக்கி வைத்திருக்க, தினமுமே காலை பத்து மணிக்கெல்லாம் அவனைக் காண கிளம்பிவிடுவார். அவனைக் குளிப்பாட்டுவது, கோதைக்கு பக்குவம் பார்த்து சமைத்து கொடுப்பது, மற்ற உதவிகள் என்று இரவு வரை அவளுடனே இருப்பவர் இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கு தன் வீட்டிற்கு வருவார்.
இப்போதும் அவர் கிளம்பிவிட, திருமகள் வீட்டின் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். இன்று அவள் எழுந்து வர தாமதமானதால் விசாலமே காலை உணவு வேலைகளை முடித்து வைத்திருக்க, மதியத்திற்கு சமைத்து முடித்து, அவள் துணி துவைக்க அமர்ந்துவிட, மதியம் மூன்று மணிக்கு தான் எழுந்தான் வாசுதேவன்.
இவள் துணிகளை வீட்டின் பின்பக்கம் கொடியில் உலர்த்தி வீட்டுக்குள் வர, வாசுதேவன் சோஃபாவில் அமர்ந்திருந்தான். திருமகள் வந்து அவன் அருகில் அமர, “என்னடி..” என்றான் காதலாக.
கணவனும் தலையசைத்து எழுந்து கொள்ள, மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்கு கிளம்பிவிட்டனர் கணவனும், மனைவியும்.
கோவிலில் மனதார தன் வாழ்விற்காக நன்றியுரைத்தவள் தாயாரை கண்ணார கண்டு தரிசித்து வெளியே வர, அவள் கேட்கும்முன்பே பால்கோவா வாங்கி கொடுத்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
திருமகள் சிரித்துக்கொண்டே கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்து கொள்ள, அவள் அருகில் வாசுதேவன். திருமகளின் மனம் மெல்ல தங்கள் வாழ்வை அசைபோட, அந்த கோவிலில் வைத்து எத்தனை எத்தனை நினைவுகள்.
அவள் எதுவும் வேண்டாம் என்று விரக்தியின் உச்சத்தில் நின்றதும் அந்த நாச்சியாரிடம் தான். எனக்கென எதுவும் கேட்கமாட்டேன் என்று சூளுரைத்ததும் அவளிடம் தான். வாசுதேவகிருஷ்ணன் தான் என் வாழ்க்கை என்று ஒப்புக்கொடுத்ததும் அவளிடம் தான்.. அவனையும் நானாகத் தேடிச் செல்லமாட்டேன் என்று சபதம் செய்ததும் அவளிடம் தான்.
பின் அவனே வாழ்வாகவும் நன்றியுடன் வந்து நின்றதும் அவளிடம்தான். அவனிடம் சண்டையிட்டு சிறுபிள்ளையாக கண்ணில் கண்ணீருடன் சரணடைந்ததும் அந்த தாயாரைத் தான். இதோ இப்போதும் வாழ்வில் வேறென்ன வேண்டும் என்ற பெருமிதப்பட்டு நிற்பதும் அவளின் முன்னே தான்.
இப்படி ஆண்டாளைக் கொண்டு ஆயிரமாயிரம் நினைவுகள் பெண்ணுக்கு. வெகுநேரம் கோவிலில் அமர்ந்திருந்தவர்கள் நிதானமாகவே வீட்டை அடைய, விசாலமும் வீடு வந்திருந்தார்.
திருமகள் வாசுதேவன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் விஷயத்தை விசாலத்திடம் கூறும்படி வாசுதேவனை வற்புறுத்த, அன்னையின் அருகில் அமர்ந்தான் வாசுதேவன்.
மகன் அருகில் அமரவும் “என்ன கண்ணா..” என்று தன் வழக்கமாக விசாலம் விசாரிக்க,
“கொஞ்சம் பேசணும்மா..”
“என்ன கண்ணா.. என்ன விஷயம்.. என்ன சொல்லணும்..” என்று வரிசையாக விசாலம் கேட்க,
“டாக்டரைப் பார்த்தேன்மா..” என்றான் மகன்.
“என்னடா கண்ணா.. உடம்பு எதுவும் முடியலையா.. என்ன செய்யுது. காய்ச்சல் இருக்கா. தலையேதும் வலிக்குதா.. இல்ல, வேறெங்கேயும் வலிக்குதாம்மா..” என்று அவர் பாசமாக கேட்க, வாசுதேவன் மனைவியைப் பார்த்தான் இப்போது.
அவனைப் பேசவே விடாமல் விசாலம் பேச, அவன் எங்கே பேசுவது.. என்றுதான் மனவியைப் பார்த்தது. அவன் பார்வையின் பொருளை சரியாக உணர்ந்து கொண்டவளும் தனது அத்தையை கண்டனமாக பார்க்க “என்னாச்சு திரு இவனுக்கு.” என்று மருமகளிடமும் கேட்டார் விசாலம்.
“உங்க மகனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. எதுக்கு டாக்டரைப் பார்த்தார்ன்னு அவரே சொல்வாரு அத்தை. அதுக்கு நீங்க அவரைப் பேச விடுங்க முதல்ல..” என்று கோபத்துடன் திரு பேசிட,
“இல்ல திரு.. அவனுக்கு பேச கஷ்டமா இருக்கும் இல்ல..” என்றார் விசாலம்.
“அதுக்காக.. எப்பவும் பேசாம இருப்பாரா.. முதல்ல அவரை பேச விடுங்க நீங்க.. எப்பவும் நீங்களே அவருக்காக பேச முடியாது.” என்று அழுத்தமாக மருமகள் கூற, மகனைப் பாவமாக பார்த்தார் விசாலம்..
“ம்மா..” என்று அவர் கைப்பிடித்தவன் “இதுக்குத்தான் டாக்டரைப் ப்ப்பார்த்தேன். சரியாப் ப்பேசனும் இஇல்ல..” என்று வாசுதேவன் திக்க,
“என்ன அவசரம் உங்களுக்கு.. பொறுமையா பேசுங்களேன்..” என்று மகனையும் மருமகள் அதட்ட,
“அவனை ஏண்டி அதட்டிட்டு இருக்க..” என்றார் விசாலம்.
திரு கணவனையும், மாமியாரையும் முறைத்து நிற்க, “அம்மா.. ரகுதான் கூட்டிட்டுப் போனான். சீக்கிரமே சரியா பேச முடியும்ன்னு சொல்லியிருக்காங்க..” என்று மகன் உரைக்க, விசாலத்தின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
“என் பிள்ளை வாழ்வுக்கு இப்போதான் விடிவு வந்திருக்கோ..” என்று எண்ணியபடி அவர் கண்ணீர்விட,
“இப்போ எதுக்கு அழறீங்க நீங்க..” என்று மீண்டும் கண்களை உருட்டினாள் திரு.
“இவ என்னை ரொம்ப மிரட்டுறாடா.. மாமியார்ன்னு ஒரு மரியாதையே இல்ல..” என்று விளையாட்டாக மகனிடம் விசாலம் குறைபடிக்க,
“உங்களை முறைச்சு பார்க்கிறதோட நிறுத்திட்டா.. என்னை தலையணை வச்சு அடிக்கிறா.. உங்க மருமக தானே, நீங்களே கேளுங்க..” என்றபடி எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஏண்டி கட்டின புருஷனை அடிக்கிறியா.. கை அந்த அளவுக்கு நீளமா போச்சா..” என்று விசாலம் அதட்ட,
“என் புருஷனைத் தானே அடிச்சேன். நானும் அடிக்காம விட்டா, இன்னும் கொழுப்பு கூடிப்போகும் உங்க மகனுக்கு..” என்று சிரிப்புடன் கூறியவள் அவர் அருகில் சாவகாசமாக அமர, மருமகளை தோளோடு அணைத்து கொண்டார் விசாலம்.
“நீ செஞ்சிருக்கறது எத்தனைப் பெரிய விஷயம்னு உனக்கு தெரியாது. நீ என்ன கேட்டாலும் கொடுக்கலாம் நான். என் மகன் பழையபடி பேசணும்னு எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா.. உன்னாலதான் விடிவு வந்திருக்கு திரு.. என் வீட்டு சாமிடி நீ..” என்றவர் மருமகளுக்கு நெட்டி முறிக்க, அவரை சிரிப்புடன் பார்த்திருந்தாள் மருமகள்.
அதே நேரம் ராகவனும் வந்துவிட, அவருக்கும் விஷயம் பகிரப்பட்டது. அவரும் மகனிடம் ஏதும் கேட்காமல் “நன்றிம்மா..” என்று மருமகளிடம் கூற,
“என்ன மாமா..” என்று அவரை கண்டித்தாள் மருமகள்.
“உன் அத்தை தப்பான முடிவெடுத்துட்டாளோ.. உங்க வாழ்க்கை எப்படி அமையுமோன்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்தது.. இப்போ நிம்மதியா இருக்கேன். நல்லா இருங்க ரெண்டு பேரும்.. எப்பவும் இப்படியே இருக்கணும்மா..” என்று மனதார அவர் வாழ்த்த, வாசுதேவன் பெற்றவர்களின் இந்த நெகிழ்ச்சியான பேச்சில் தன் தவறை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டிருந்தான்.
தன்னை மட்டுமே யோசித்து, பெற்றவர்களை தண்டித்துவிட்டோமோ என்று அவன் தடுமாறி நிற்க, மகன் கையைப் பிடித்து அவனை தங்களுடன் தரையில் அமர்த்திக் கொண்டார் விசாலம்.
“நீ ஏன்யா தவிச்சுப் போற.. எத்தனை வேதனை இருந்தா, பேசவே கூடாதுன்னு முடிவெடுத்திருப்ப.. பிள்ளை மனசு என்னன்னு பெத்தவளுக்கு புரியாதா.. உன்னைப் புரியவும் தான் உன்னை உன் வழியில விட்டோம். இப்போ என்ன கெட்டு போச்சு..”
“இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து வச்சு பேசிடு அம்மாகிட்ட.. நீ பேசிட்டே இரு கண்ணா.. அம்மா குறுக்கே பேசமாட்டேன்.. நீ பேசறதை கேட்டுட்டே இருக்கனும்டா..” என்று விசாலம் கண்ணீர்விட,
“நல்ல நேரத்துல எதுக்கு அழுதுட்டு இருக்க சாலா.. உன்னைப் பார்த்து இன்னும் மருகி நிற்கிறான் பாரு.. கண்ணைத் துடை..” என்று மனைவியை அதட்டினார் ராகவன்.
திருமகள் இவர்கள் பேச்சை சிரிப்புடன் கவனித்து நின்றவள் “மடியில போட்டு தாலாட்டு பாடுங்க.. அது மட்டும்தான் குறையா இருக்கு..” என்று மாமியாரை நக்கலடிக்க,
“பாருடா இவளை..” என்று மகனிடம் புகார் படித்தார் விசாலம்.
திருமகள் சத்தமாக சிரிக்க, அவளின் அந்த நகைப்பொலி விசாலத்தின் வீட்டை நிறைத்தது…..