“யப்பா..” என்று அவரை அணைத்து கொண்ட மகன் “தெய்வம்ப்பா நீ.. என் தெய்வம்… என் வாழ்க்கைல வெளீக்கேத்தி வச்ச சாமி நீ..” என்று தந்தையின் காலில் விழுந்து வணங்கினான் மகன்.
இருவரும் பேசியது மொத்தத்தையும் அன்று இரவே தந்தை மறந்துவிட, “நாளைக்கே தூக்குடா..” என்றதை மட்டும் மறக்காமல் பிடித்துக் கொண்டான் மகன்.
இருவரும் அந்த குடியிருப்பின் பின்பகுதியிலேயே படுத்து உறங்கியிருக்க, காலை எட்டு மணி அளவில் அவர்கள் முகத்தில் வந்து விழுந்தது அந்த பாலிதீன் பை. அதிலிருந்து வீசிய துர்நாற்றம் குடலைப் பிடுங்க, அது வந்து விழுந்த வேகத்திற்கு அடித்துப் பிடித்து எழுந்து கொண்டனர் தந்தையும் மகனும்.
“ஏய்.. எவடி அவ.. அழ படுத்து இருக்கறது தெரியல..” என்று அந்த வரிசையில் இருந்த இரும்பு ஜன்னல்களைப் பார்த்து அவர் சத்தமிட, எந்த எதிரொலியும் இல்லை அங்கே.
அதற்குமேல் கத்தி பயனில்லை என்று புரிந்தவர்களாக தந்தையும் மகனும் தங்கள் வீடு நோக்கி வர, அப்போதுதான் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.
அவர்கள் வீட்டின் கீழே இருந்த கடையில் அவர் சாவியை கொடுத்துவிட்டு செல்ல, அவர் சென்ற ஐந்தாவது நிமிடம் சாவியை வாங்கிக் கொண்டான் மகன்.
தந்தையும், மகனும் வீட்டிற்கு சென்று குளித்து முடிக்க, வெள்ளை வெட்டி சட்டையை அணிந்து தயாராகி விட்டார் தங்கராஜ்.
அவர் கிளம்பவும், கார்த்திகா சமைத்த உணவை தட்டில் போட்டு வயிறு நிறைய உண்டு முடித்து பிரியதர்ஷினி படிக்கும் கல்லூரிக்கு கிளம்பினான் கதிர்வேல்.
மதியம் பன்னிரண்டு மணி அளவில் அவள் கல்லூரியை அடைந்தவன் கல்லூரி விடும் நேரத்திற்காக காத்திருக்க, ஒன்றே காலுக்குத் தான் கல்லூரி முடிந்து வெளியே வந்தாள் ப்ரியா.
இவனை வாசலில் காணவும், அவள் அருகில் வர “எவ்ளோ நேரம் நிற்கிறது.. உனக்காக இப்படிலாம் இனிமே தேவுடு காக்க முடியாது. ஒளுங்கா இப்படியே என்கூட கிளம்பு..” என்றான் கதிர்வேல்.
“இப்போ எப்டி வர முடியும் மாமா.. சும்மா காமெடி பண்ணாத.. கெளம்பு.” என்று ப்ரியா மறுக்க,
“ஏய் யார் காமிடி பண்றா.. இப்போ என்னோட வர முடியுமா.. முடியாதா உன்னால.. ஆனா, நீ வரல.. நீதான் என் சாவுக்கு காரணம்னு எளுதி வச்சுட்டு இத்த குடிச்சிருவேன்..” என்று ஏதோ ஒரு பாட்டிலை எடுத்துக் காட்டினான் அவன்.
“ஏன் மாமா இப்படி பண்ற.. கொஞ்சநாள் பொறுமையா இரேன்..” என்று ப்ரியா அவன் கைகளைப் பிடித்துக் கெஞ்ச,
“நான் வேணும்ன்னா, இப்படியே என்னோட நீ வந்தாவனும்..” என்று கதிர் நிற்க, அவன்மீது இருந்த கண்மூடித்தனமான காதலால் அவனோடு கிளம்பினாள் ப்ரியா.
கதிர் அவன் நண்பன் ஒருவனிடம் இருந்து ஐந்தாயிரம் கடனாக வாங்கி வந்திருக்க, அதை மட்டும் கையில் வைத்துக்கொண்டு திருவேற்காடு கோவிலுக்கு வந்திருந்தனர் இருவரும்.
வரிசையில் நின்று அம்மனை வேண்டிக்கொண்டு வெளியில் வந்து அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் வைத்தே அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டான் கதிர்வேல். பிரியாவிற்கும் பெரிதாக குற்ற உணர்ச்சியெல்லாம் இல்லை.
எப்படியும் அவள் அண்ணன் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டான் என்பது அவள் அறிந்தது தானே. எப்படியோ திருமணம் நடந்தால் சரி என்ற மனநிலையில் இருந்தவள் தான் அவளும். இன்று கதிர்வேல் கொஞ்சம் நெருக்கவும், மறுப்பதுபோல் காட்டிக்கொண்டு அவனுடன் வந்துவிட்டாள்.
கதிர்வேல் தாலி கட்டிய நிமிடம் உலகத்தை வென்ற நினைப்புதான் அவளுக்கும். இவர்கள் திருமணம் முடிந்தபோதே நேரம் நான்கு மணியைக் கடந்துவிட, அதற்குமேலும் வீடு செல்லும் எண்ணமில்லை கதிர்வேலுக்கு.
அங்கிருந்தபடியே அவன் தன் தந்தைக்கு அழைக்க, மூன்று அழைப்புகளுக்குப் பின் அவன் அழைப்பை ஏற்றார் தங்கராஜ்.
“அப்பா.. நான் ப்ரியாவை கூட்டிட்டு வந்துட்டேன். இங்கே திருவேற்காட்ல கல்யாணத்தைக் கூட முடிச்சுட்டேன்.. என்ன பண்ணட்டும்..?” என மகன் கேட்க,
“டேய் இன்னாடா சொல்ற.. யாரைக் கேட்டு கண்ணாலம் பண்ண நீ..” என்று அவர் பதற,
“ப்பா.. நீதான நேத்து சொன்ன.. என்ன தெளிஞ்சதும் மறந்து போச்சா..” என்று மகன் அதட்டினான்.
“டேய்.. நான் குடிச்சுட்டு பேசினத வச்சு கல்யாணமே பண்ணிட்டியாடா.. உன் ஆத்தாளுக்கு யார் பதில் சொல்றது..” என்றார் அவர்.
“ப்பா.. அதெல்லாம் ஒரு ஆளே இல்ல எனக்கு.. அப்பன்னு உங்கிட்ட சொல்றேன்.. உன்னால முடிஞ்சா பாரு.. இல்ல, என் பொண்டாட்டியை எப்பிடி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும்..” என்ற மகனின் பேச்சில் குளிர்ந்து போனார் தங்கராஜ்.
“இல்லடா மவனே.. தெரிஞ்சா கத்தியே ஊரைக் கூட்டுவா.. அதுக்குதான் பார்த்தேன்.. ” என்று யோசித்தவர் “நம்ப முனுசாமி ஊடு அங்கே, மதுரவாயல்ல தான் இருக்கு.. நீ அவன் ஊட்டுக்கு போ.. ரெண்டு நாள் போவட்டும்.. பேசிக்குவோம்.. அவங்க ஊட்லயும் கொஞ்சம் அடங்கட்டும்.” என்று அறிவுரை கூறினார் தந்தை.
அவர் கூறிய அறிவுரைப்படி மகனும் அந்த முனுசாமியின் வீட்டிற்கு சென்றுவிட, அந்த முனுசாமி தங்கராஜின் கையாளாக இருந்ததால் ஏக மரியாதை கதிருக்கு.
ப்ரியதர்ஷினிக்கும் அது திருப்தியாக இருக்க, வீட்டைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை அவள். சென்ற இடத்திலும் கதிரை விட்டு அசையாமல் அவனை ஒட்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
அன்று இரவும் நெருங்கிவிட, இங்கே புதிதாக மணமானவர்கள் தங்கள் இளமைக்கு தீனி போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த அதே நேரம், தங்கையைக் காணாமல் தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தான் குமரகுரு.
மதியத்திலிருந்து தண்ணீர்கூட குடிக்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். பூச்சியும் அவனுடன் சேர்ந்து தேடிக் கொண்டிருக்க, அன்று நள்ளிரவில் தான் தங்கை கதிர்வேலுடன் சென்றிருப்பதே தெரியவந்தது. கதிர்வேலை குமரகுருவுக்கும் தெரிந்தே இருந்தது.
ஆனால், இப்படி தன் வீட்டிலேயே கை வைப்பான் என்று நினைக்கவில்லை. அதைவிட தன் தங்கை எப்படி அவனை நம்பி சென்றாள் என்பது பெரிய கேள்வியாக இருந்தது.
குமரகுரு அறிந்தவகையில் முழுநேர குடிகாரன் கதிர்வேல். அத்தனை பொறுப்பானவனும் இல்லை. அங்கிருக்கும் அவனின் சில நட்புகளையும் குமரகுருவிற்கு தெரியும். அவனை நம்பிச் சென்ற தங்கையின் நிலை என்னவாக இருக்கும் என்பதும் புரிய, மனதளவில் நொறுங்கிப் போனான் அவன்.
எப்படி இவளால் முடிந்தது.. என்று உள்ளம் தங்கையை நினைத்து வேதனை கொள்ள “இவள் படிப்பென்ன.. பழக்கம் என்ன..? அவனோட எப்படி குடும்பம் நடத்துவா..” என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தவனை அதட்டி, கையில் ஒரு டீயை வாங்கி கொடுத்தான் பூச்சி.
“டேய்.. உன் தங்கச்சியை அவன் ஒன்னும் கடத்தினு போல.. அவளாதான் கூட போயிருக்கா.. மூடிட்டு குடிடா..” என்ற அவன் வார்த்தையில்,
“இல்லடா.. அந்த அளவுக்கு தைரியமெல்லாம் அவளுக்கு கிடையாதுடா.. இவன்தான்… இந்த தே… மவன் தான் ஏதோ வேலை பார்த்து இருக்கான்.. அவனை விடவே கூடாதுடா… என் கையாள தான் சாவு அவனுக்கு.. அறுத்து போடறேன் பார்..” என்று அவன் கொதிக்க, கையில் இருந்த கண்ணாடி குவளையை தூக்கி தூர அடித்துவிட்டான் கோபத்தில்.
“டேய்.. நட்டு கழண்டிருச்சா உனக்கு.. அறிவு கெட்டவனே..” என்று கத்திகொண்டே, அவனை இழுத்து வந்து ஆட்டோவில் அமர்த்தினான் பூச்சி.
“ஏன்டா இப்படி எழவை கூட்ற.. உன் தங்கச்சியே உனக்கு பேசமாட்டா.. ரொம்பநாளா பழக்கம் இருக்கு போல.. நம்ம வௌவால் சொன்னான்..” என்று குமரகுருவிற்கு புரியவைக்கும் நோக்கில் பூச்சி பேசிக் கொண்டிருக்க, குமரகுருவோ கதிரை என்ன செய்வது என்றுதான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
விடுயும் வரை ஒருவழியும் புலப்படாமல் அமர்ந்திருந்தவனை பூச்சி வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துவர, வீடு செல்லும் எண்ணமில்லாமல் ஆட்டோ ஸ்டாண்டிலேயே ஆட்டோவை நிறுத்தி அமர்ந்துவிட்டான் குமரகுரு.
அங்கிருந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும் அவன் நிலைப் புரிந்து அவனை நெருங்காமல் தங்கள் வேலையை கவனித்துக் கொண்டிருக்க, சரியாக அந்த நேரம் தான் அருகே இருந்த பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் கார்த்திகைச் செல்வி.
அவளைப் பார்த்த நிமிடம் எதுவோ மூளையில் ஓட, “பூச்சி..” என்று அருகிலிருந்தவனை அழைத்தான் குமரகுரு.
பூச்சி திரும்பவும், “அவன் தங்கச்சி தானே அவ.” என்றான் கார்த்திகாவைக் காண்பித்து.
“ஆமாடா..” என்றவன் “நல்ல பொண்ணுடா..” என்று வாயைவிட, அவனை அடித்துவிடுவான் போல முறைத்து வைத்தான் குமரகுரு.
அவன் மனம் எதையோ கணக்கிட, எதிரில் நின்றவள் வேறு அழகாகத் தெரிந்தாள் அவனுக்கு. “இவ நல்லவளா.. அப்போ என் தங்கச்சி..” என்று வன்மமாக எண்ணமிட்டவன் “ஏன் நாங்க எல்லாம் நல்ல பொண்ணை தூக்க கூடாதா.. அவன் தங்கச்சியை தூக்குனா தான, என் வலி அவனுக்கு தெரியும்..?” என்று யோசிக்க துவங்க, அவன் மனம் அத்தனையும் அவனுக்கு சாதகமாகவே சாட்சி கூறியது.
“அண்ணன் என் தங்கச்சியை தூக்குவான்.. இவ ஜாலியா காலேஜிக்கு போவாளா.. நீ வீட்டுக்கு போகமாட்டடி இன்னிக்கு..” என்று தனக்குள் முனகிக் கொண்டான் அவன்.
தனக்குள் சில திட்டங்களை வகுத்துக் கொண்டவன் அதன்படி, தன் அன்னையை வைத்து கதிர்வேல் மீது புகார் கொடுக்க வைத்துவிட்டான் காவல் நிலையத்தில். அந்த புகாரின் பேரில் தங்கராஜ், மகாலட்சுமி இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட, தங்கராஜ் ஆளும்கட்சி என்று குதித்ததை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை அந்த ஆய்வாளர்.
“உங்க பையனை வர சொல்லுங்க..” என்று அதிலேயே நிற்க, வேறு வழியில்லாமல் மகனை அழைத்தார் தங்கராஜ்.
அவனும் அடுத்த ஒருமணி நேரத்தில் வந்துவிட, தான் விரும்பித்தான் அவனுடன் சென்றதாக அடித்துக் கூறினாள் பிரியதர்ஷினி. மேலும் தங்களை பிரிக்க நினைத்தால் செத்து விடுவேன் என்றும் அவள் மிரட்ட, சேகர் அங்கேயே வைத்து மனைவியை ஒரு அறைவிட்டவர் “நிஜமாவே அவ செத்துட்டான்னு நினைச்சுக்கோடி.. கருமாதி பண்ண சொல்றேன் அவளுக்கு..” என்றுவிட்டார்.
தங்களுக்கும், தங்கள் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதிய தாளில் கையெழுத்திட்டு அவர் வெளியேற, ராணியும் அழுதுகொண்டே வந்தார் அவருடன்.
இதில் எங்கும் குமரகுருவின் இல்லை. அவன் காட்சியிலும் வரவில்லை.
ஆனால், இங்கே தங்கள் மகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சேகர் எழுதிக் கொடுத்த அதே நேரம் அங்கே மகாலட்சுமியின் மகளைத் தனக்கு சொந்தமாக்கும் வேலையில் இறங்கியிருந்தான் குமரகுரு.