ராணிமேரிக் கல்லூரியின் வாயிலில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அவளுடன் நின்றிருந்த அவளது தோழிகள் எதிரில் தெரிந்த கடற்கரைக்குச் செல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, இதுவரை இரண்டு பேருந்துகளை தவற விட்டு அதே இடத்தில நின்றிருந்தனர்.
கார்த்திகைச்செல்வியையும் அவர்கள் உடன் வருமாறு அழைக்க, “முடியவே முடியாது..” என்று அவள் மறுக்கவும், அவளை விடாமல் பிடித்து வைத்திருந்தனர் அவர்கள்.
“ஒருநாள் தானேடி கூப்பிடுறோம்.. செகண்ட் இயர் படிக்கிறோம்.. ஏதோ நேத்துதான் காலேஜ் வந்தவ போல பயந்து சாகுற.. ப்ளீஸ்டி வாயேன் எங்களோட..” என்று அவளது நெருங்கிய தோழி தர்ஷனா விடாமல் வற்புறுத்த,
“என் நிலைமை உனக்கு தெரியாதா தர்ஷ்.. நான் லேட்டா போனா, அம்மா நிறைய பேசுவாங்க. அதோட தேவையில்லாத சண்டையெல்லாம் வரும். இப்போவே லேட் ஆகிடுச்சு.. இதுக்குமேல லேட் ஆனா, நான் நாளைக்கு காலேஜ் வர்றதே சந்தேகம்தான். புரிஞ்சிக்கோயேன்..” என்றாள் இயலாமையுடன்.
“ரொம்ப பண்றடி..” என்ற மற்றொரு தோழியிடம் வெறும் புன்னகையை மட்டுமே அவள் பதிலாக்க, அதற்குள் அவளுக்கான அடுத்த பேருந்து வருவது தெரிந்தது. அவள் தர்ஷனாவை பாவமாகப் பார்க்க, தர்ஷனாவுக்கும் அவள் நிலை கொஞ்சம் தெரியுமென்பதால் “அவ போகட்டும் விடுங்கடி..” என்றுவிட்டாள் மற்ற தோழிகளிடம்.
கார்த்திகைச் செல்வியும் “தேங்க்ஸ்டி..” என்றதோடு வேகமாக வந்து நின்ற பேருந்தை நெருங்கி அதில் ஏறிக் கொண்டாள். பேருந்தில் ஏறிய பின்பே மற்ற தோழிகளைப் பார்த்து கையசைத்தாள் அவள். அவள் செயலில் கடுப்பாகி முறைத்தாலும், அவர்களும் கையசைக்க பேருந்து நகரவும் அவர்களை மறந்து போனாள் கார்த்திகைச் செல்வி.
மதியநேரம் என்பதால் பேருந்தும் காலியாக இருக்க, ஜன்னலோரம் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டவள் தூரத்தில் தெரிந்த கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அமர்ந்துவிட்டாள். இந்த நேரங்கள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. எந்த சிந்தனைகளும் இல்லாமல் கண்களில் தெரியும் காட்சிகளை அப்படியே மனதில் பதித்து வைத்துக் கொள்வாள்.
கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவி என்பதால் ஆசிரியர்களுக்கும், சக மாணவிகளுக்கும் மிகவும் பிடித்தவள் கார்த்திகைச்செல்வி. இளநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி. படிப்பைப் போலவே ஒழுக்கத்திலும் மிகவும் கெட்டி தான்.
மற்ற மாணவிகளை போல ஆண் நண்பர்கள், கல்லூரிக்கால காதல் என்று எதுவும் கிடையாது என்பதைவிட தெரியாது அவளுக்கு. யாரும் அவளைப் பார்ப்பது போல் தெரிந்தால்கூட, அடுத்தநாள் சற்று முன்பாகவே கிளம்பி வேறு பேருந்தில் சென்றுவிடும் குணம் கொண்டவள் தான்.
தான் கல்லூரி வருவது படிப்புக்காக மட்டுமே என்பதில் உறுதியாக நிற்பவள். தன்மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டாலும், முதல் பலி தன்னுடைய படிப்புதான் என்று தெரியும் அவளுக்கு. அதன் காரணமாகவே தவறு செய்யும் எண்ணம் வராது அவளுக்கு.
அவள் கல்லூரி வாழ்க்கைக்கு அப்படியே எதிரானது அவள் வீடு. அன்னை, தந்தை, ஒரு அண்ணன் என்று அளவான குடும்பம்தான். அவள் தந்தை தங்கராஜ் ஆளுங்கட்சியில் உறுப்பினராக இருக்க, எந்த நேரமும் கட்சியும், தலைவரும் தான் அவர் நினைவில். குடும்பம், பிள்ளைகள் எல்லாம் அதன்பின்னர் தான்.
அவள் அண்ணன் கதிர்வேல் படிப்பு வராமல் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட, ஒரு துணிக்கடையில் வேலைப் பார்த்து வந்தான். மாதம் பன்னிரண்டாயிரம் சம்பளம் வந்தாலும், பாதியை மட்டுமே வீட்டில் கொடுப்பவன் மீதி பணம் மொத்தத்திற்கும் ஏதோ ஒரு கணக்கு வைத்திருப்பான்.
வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்தையும் கற்றுக் கொண்டிருந்தான் அவன். அவன் அன்னை மகாலட்சுமிக்கு அவன் கவலையே பெரிதாக இருக்க, அவனை வைத்தே மகளையும் எடை போடுவார் அவர்.
மூன்று வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்திவர, மகள் நன்றாக படிப்பவன் என்பதாலும், அரசு கல்லூரியில் இடம் கிடைத்ததாலும் மகளை கல்லூரியில் சேர்த்திருந்தார். ஆனால், படிப்பு ஒன்றில்தான் சுதந்திரம் மகளுக்கு.
அவர்கள் இருக்கும் இடமும், அன்றாடம் அங்கு கேள்விப்படும் விஷயங்களும் மகாலட்சுமிக்கு எப்போதும் ஒரு இறுக்கத்தைக் கொடுக்க, விளைவு அத்தனையும் கார்த்திகைச் செல்வியின் தலையில் விடிந்தது.
சத்தமாக பேசக்கூடாது, வெளியில் வாசலில் நிற்கக்கூடாது, வெளி ஆட்களிடம் பேசக்கூடாது, கல்லூரி விட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு வந்துவிட வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள் அவளுக்கு. அத்தனையும் அப்படியே அவள் பின்பற்றினாலும் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை தான் பார்ப்பார் அவர்.
அன்னையின் நிலை புரிந்தவளாக காலையில் எழுந்து சமைத்து வைத்து, பாத்திரம் விளக்கி, வீட்டை ஒதுங்கவைத்த பின்பு கல்லூரி செல்பவள் மதியம் வீடு வந்தபின்னும் துணிகளை துவைப்பது, பூஜைப்பொருட்களை விளக்கி வைப்பது என்று அத்தனை வேலைகளையும் முடித்து விடுவாள்.
வெளியில் மூன்று வீட்டு வேலை செய்கிறாரே என்று அன்னையின் மீதான அக்கறையில் அவர் வரும் நேரத்திற்கு வெந்நீர் வைத்து கொடுத்து அவருக்கு கால் அழுத்தி விட்டு, அவர் வலிக்கு தைலம் பூசி விடுவது வரை அத்தனையும் செய்வாள் மகள்.
மகாலட்சுமிக்கும் மகள்மீது பிடித்தம் அதிகம் தான். ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். கணவரும், மகனும் ஏற்கனவே பொய்த்து போயிருக்க, மகள் ஒருத்தியாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் தன் சக்தியை மீறி அவளைக் கல்லூரியில் சேர்த்து விட்டிருந்தார் அவர்.
தங்கள் நிலை உணர்ந்து படிக்கும் மக்கள்மீது கொள்ளை பிரியம் இருந்தது அவருக்கும். அதுவும் பள்ளியிலும், கல்லூரியிலும் அத்தனை ஆசிரியர்களும் அவளைப் பாராட்டி பேசும்போதெல்லாம் பெற்றவராக குளிர்ந்து போவார். அந்த நிமிடங்கள் தான் மகளை படிக்க வைக்கும் வைராக்கியத்தை கொடுத்தது அவருக்கு.
ஆனால், அத்தனையும் செய்தாலும் எப்போதும் அவள் மீது ஒருகண் இருக்கும். அவள் ஏதேனும் தவறு செய்துவிட்டாலும் வளர்ந்துவிட்டாள் என்ற எண்ணமே இல்லாமல் அடித்து விடுவார். துடைப்பம், கரண்டி என்று கைக்கு கிடைப்பதை வைத்து ஆத்திரம் தீர அடித்தபின்பே தன் தவறுக்காக வருந்தும் குணம் கொண்டவர் அவர்.
இப்படிப்பட்ட சூழலில் இருந்து படிக்க வருபவளுக்கு மற்ற எதையும் விட படிப்பே முதன்மையாக இருக்க, வேறு எதற்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை கார்த்திகைச் செல்வி. அவள் கனவெல்லாம் படித்து ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்.. அவள் அன்னையை உட்கார வைத்து அவள் சம்பளத்தில் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
மற்றபடி பெற்றவரிடமோ, உடன் பிறந்தவனிடமோ பெரிதாக ஓட்டுதல் கிடையாது. அவள் அண்ணனும் எப்போதும் அவளை ஏதாவது குறை சொல்வானே தவிர, தங்கையென்று பாசம் காண்பித்தது கிடையாது.
அவள் அன்னை ஒருவர்தான் அவளுக்கான பிடிப்பு. அவருக்காக மட்டுமே படிக்கிறாள். அவரை புரிந்ததால் மட்டுமே அவரின் அத்தனை கட்டு திட்டங்களுக்கும் அடங்கிப் போகிறாள்.
இதற்குள் அவள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடவும், பேருந்தை விட்டு இறங்கி சாலையில் நடக்கத் தொடங்கினாள் கார்த்திகைச்செல்வி. இப்போதும் குமரனின் ஆட்டோ ஸ்டாண்டை அவள் கடக்கையில் எதேச்சையாக மீண்டும் ஒருமுறை குமரனின் கண்ணில்பட்டாள் அவள்.
அவன் தன்னையே பார்ப்பதைக் கூட உணராமல், அவள் போக்கில் நடந்து வீட்டை அடைந்தவள் “அப்பாடா..” என்று சாய்கையிலேயே, “என்ன கார்த்தி.. இன்னிக்கு லேட்டா வந்திருக்க.. பஸ்சு வரலியா..” என்றாள் எதிர்வீட்டில் இருக்கும் விஜயா.
“ஆமா அத்தை. பஸ் கிடைக்கல..” என்றவள் வேகமாக எழுந்து வாசலுக்கு வந்தாலும், மனது அப்போதே தவிக்கத் தொடங்கிவிட்டது.
“ஹான்.. என்ன குழம்பு வச்ச காத்தால..” என்றார் விஜயா.
“சாம்பார் வச்சு, வாழக்காய் வறுத்தேன் அத்த..”
“இதுல கொஞ்சம் ஊத்திக்கொடு.. மாமாவுக்கு சோறு போடணும்..” என்று அதிகாரமாக கேட்டு வாங்கிக்கொண்டு அவர் நடக்க, “எப்படியும் தாமதமானதை அன்னையிடம் போட்டுக் கொடுத்து விடுவார்..” என்று நினைக்கையிலேயே பயமாக இருந்தது கார்த்திக்கு.
அந்த ஒற்றையறை வீட்டின் ஒருமூலையில் கிடந்த துடைப்பம் உலகின் மிகப்பெரிய ஆயுதமாக தோன்றியது அவளுக்கு. அதைக் கையில் எடுத்தபடியே “இன்னைக்கும் உன் கையால அடி வாங்கணும்னு இருக்கு போல என் தலையெழுத்துல..” என்று அலுத்துக்கொண்டே தனது அன்றாட வேலைகளைத் தொடங்கினாள் அவள்.
வீட்டில் இருந்த நான்கு பேரின் துணிகளையும் துவைத்து முடித்து, வீட்டை மீண்டும் ஒருமுறை பெருக்கியெடுத்தவள் வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் படிக்க அமர்ந்துவிட்டாள்.
மாலை ஆறு மணி அளவில் புத்தகத்தை எடுத்து வைத்தவள் வீட்டில் விளக்கேற்றி வைத்து பயத்துடன் அமர்ந்திருக்க, அவள் நினைத்தது போலவே அவள் அன்னை படியேறும்போதே அவரிடம் வத்தி வைத்துவிட்டார் விஜயா.
“போச்சு..” என்று நடுக்கத்துடன் அவள் நிற்கையிலேயே அவள் அன்னையும் வீட்டிற்குள் நுழைந்தார். மகளின் பயந்த முகம் கண்டு பாவமாக இருந்தாலும், “எங்கடி போன.. ஏன் லேட்டா வந்த..” என்றார் அதட்டலாக.
“நிஜமா நான் எங்கேயும் போகலம்மா.. பஸ்தான் லேட்.. ” என்று மகள் கூற,
“தினமும் வர்ற பஸ் தானே. அதெப்படி இன்னிக்கு மட்டும் லேட்டா வருதா உனக்கு.. உன் அப்பனோட சேர்ந்து அவனை மாறியே பொய் சொல்ல வருதா.. நீயும் என் தலையில மண்ணை வாரி போடா பார்க்கிறியா..” என்றவர் அவள் என்ன ஏதென்று உணரும் முன்னமே பழுக்க ஒரு அடி வைத்தார் மகளின் கன்னத்தில்.
கார்த்தி பாவமாக கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நிற்க, மீண்டும் வலிக்க அவள் மண்டையில் கொட்டியவர் “ஒழுங்கா படிக்க முடியும்ன்னா காலேஜிக்கு போ.. இல்ல, வீட்டோட கெட.. உனக்கும் சேர்த்தே தண்டசோறு போடா முடியும் என்னால..” என்றார் ஆங்காரமாக.
அவர் பேச்சில் வருத்தம் கொண்டாலும், வாயைத் திறந்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை கார்த்தி. மகளின் முகம் பார்க்கவே பாவமாக இருந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக வீட்டின் ஒருமூலையில் அமர்ந்து கொண்டார் மகாலட்சுமி.
கார்த்தி சில நிமிடங்கள் பெருகிய கண்ணீருடன் நின்றாலும், அன்னையின் சோர்வு புரிந்தவளாக கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துவிட்டாள்.
காலையில் காய்ச்சி வைத்த பால் மீதியிருக்க, அதை மீண்டும் காய்ச்சி அன்னைக்கு டீ வைத்து எடுத்துவந்து அவள் நீட்ட, அன்னை வாங்கி கொள்ளவும் அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டாள் கார்த்தி.
மகாலட்சுமி மகளை கோபமாக பார்க்க, அவர் பார்வையை சந்திக்காமல் அவர் மடியிலேயே தலைவைத்து படுத்துக்கொண்டாள் மகள். இயல்பான அன்பு அவள்மீது சுரந்தாலும் கூட, கல்போல அசையாமல் டீயை குடித்து முடித்தார் மகா.
மடியில் படுத்திருந்தவள் அழுதுகொண்டே உறங்கிப்போக, அவளை கீழே படுக்க வைத்து விட்டு இரவு சமையலைப் பார்க்க சென்றார் மகா. மகளை அடித்துவிட்டதால் அதை சரிசெய்யும் நோக்கில் இரண்டு முட்டையும், கருவாடும் வாங்கி வந்தவர் அவளுக்கு பிடித்தபடி தக்காளி வெங்காயத்தை வதக்கி தொக்காக்கி, அதில் கருவாட்டையும் சேர்த்து இறக்கி வைத்தார். அவித்த முட்டைகளையும் அதில் போட்டு ஊறவிட்டவர் மகளை எழுப்பவே இல்லை.
எப்போதாவது தான் அவள் இப்படி அசந்து உறங்குவாள் என்பதால், உறங்கட்டும் என்று விட்டுவிட்டார் மகா. கைவேலையாக பக்கத்தில் இருந்த ஒரு கம்பெனிக்கு செயற்கை பூக்களை மாலையாக தொடுத்து கொடுப்பாள் கார்த்தி. இப்போது அவளது வேலையைத் தான் எடுத்துக் கொண்டவர் அந்த காகிதப்பூக்களை ஊசியில் செருகி மாலையாக்கி கொண்டிருக்க, ஒன்பது மணிக்குதான் உறக்கம் தெளிந்தது மகளுக்கு.
எழுந்த வேகத்தில் அவள் சமையலுக்கென இருந்த தடுப்புக்குள் நுழைய, அன்னை சமையலை முடித்து வைத்திருக்கவும், கழிவறைக்குள் நுழைந்து வெளியே வந்தாள். அன்னையின் அருகில் அமர்ந்து கொண்டவள் தானும் அந்த பூக்களை கையில் எடுக்க, “எழுந்து போய் சாப்பிடு.. இதை அப்புறம் பாரு..” என்று அதட்டினார் அவர்.
“நீயும் வாம்மா.. சாப்பிட்டு கோர்க்கலாம்..” என்று மகள் அழைக்க, “போடு..” என்று அந்த பூக்களை கீழே வைத்து கழிவறைக்குள் நுழைந்தவர் கையில் ஒட்டியிருந்த சாயம் போக சுத்தமாக கையை கழுவிக்கொண்டு வந்து அமர, தாய்க்கு பரிமாறி தானும் அமர்ந்து கொண்டாள் கார்த்தி.
ஒரு முட்டையை மட்டும் எடுத்துக் கொண்டவள் அன்னைக்கு ஒன்றை வைத்துவிட்டு உணவை உண்ண, ” அதையும் வச்சுக்கோ.. நான் பெத்த தறுதலை வீட்டுக்கு வராதாம்.. பசங்களோட கூடி சினிமாக்கு போறானாம்..” என்றார் தகவலாக.
“போதும்மா..” என்றவள் முட்டையை எடுக்காமல் உணவை தொடர, அவள் பேச்சை காதில் வாங்காமல் இன்னொரு முட்டையை வைத்தவர் “ஒழுங்கா வயித்துக்கு தின்ன கூட உன்கிட்ட கெஞ்சணுமா.. படிக்கிற புள்ள உன் மேல உனக்கு அக்கறை இருக்கா.. மதியம் வீட்டுக்கு வந்ததும் சோறு தின்ன என்ன கேடு உனக்கு..”
“ஒரு ஆள் சோத்தை எடுத்து குப்பையில கொட்டுனேன்.. சாப்பிட முடியாதுன்னா எதுக்கு உலை வைக்கிற..” என்று மீண்டும் அதட்டினார் மகா.
“இல்லம்மா.. சாம்பார் கெட்டுப்போச்சு.. அதான் கீழே கொட்டிட்டேன்.” என்று மகள் காரணம் கூற,
“சாம்பார் கெட்டுப்போனா பத்து ரூபாய்க்கு தயிரை வாங்கி ஊத்தி சாப்பிட வேண்டியதுதானே.. எல்லாம் ஒரு ஆள் சொல்லனுமா..” என்று அதற்கும் திட்டு விழுந்தது.
மகள் அமைதியாக “அள்ளி தின்னு.. எவ்ளோநேரம் வச்சுட்டு உட்கார்ந்து இருப்ப..” என்றுவிட, வேகமாக அவள் உண்டு முடித்து இடத்தை சுத்தம் செய்யவும், மீண்டும் பூ கோர்க்க அமர்ந்து கொண்டார் மகா.
மகளை மட்டும் “படுத்து தூங்கு.. காலையில நேரத்துக்கு போகணும் இல்ல.. இதுல உக்காந்துட்டு படிப்பை கோட்டை விட்றாத..” என்றார்.
“தூக்கம் வர வரைக்கும் செய்றேன்மா..” என்று மகளும் அமர்ந்து கொள்ள, நேரம் பத்தைக் கடக்கவும் அந்த பூக்களை எடுத்து ஓரம் வைத்து படுத்துவிட்டார் மகா. மகளையும் அதட்டி தன்னுடனே படுக்கவைத்துக் கொண்டார்.
இது வழக்கமாக நடப்பதுதான். பலநாட்கள் கட்சி அலுவலகத்திலேயே உணவை முடித்து அங்கேயே உறங்கி விடுவார் தங்கராஜ். மகனும் பாதி நாட்கள் தியேட்டர், கிரவுண்ட் என்று இரவில் வீடு தங்கமாட்டான். அவர்களை பற்றி நன்கு தெரிந்து போனதால் மகாவும் கண்டுகொள்ள மாட்டார் அவர்களை.
எப்படியோ போய் தொலையட்டும் என்ற எண்ணம்தான். ஆனால், இவர்களால் மகளின் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் கணத்தில் எப்படி மாறுவாரோ மகாலட்சுமி.