இரண்டு வாரங்கள் இயல்பு வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, அருகில் தன் கை பிடித்து உறங்கும் அஞ்சனை பார்த்தபடி விழித்திருந்தாள் கீர்த்தி.
இருட்டில் அவன் முகம் தெரியவில்லை என்றாலும் மனதில் பதிந்திருந்த அவன் வடிவத்தின் அங்க அளவீடுகள் அனைத்தும் அத்துப்படி. அவனின் அன்றாட பழக்கங்கள் யாவும் அவள் ஆழ்மனதில் பதிந்து விட்டிருந்தது. பதிய வைத்திருந்தான் அஞ்சன். எந்த நேரம் எழுவான், என்னென்ன விரும்பி உண்பான், வேலை நிமித்தமாக எங்கெல்லாம் செல்வான் என்று அவனது அனைத்து விவரங்களையும் அவள் கேட்காமலேயே தினம் பகிர்ந்து விடுவான். உடன் அவனின் விருப்பு வெறுப்புகள் எதிர்பார்ப்புகள் என்று ஒவ்வொரு இரவும் ஒவ்வொன்றை பகிர்ந்து அவளுடைய விருப்புகளை கேட்க முயன்று தோல்வியை தழுவி உள்ளான்.
குழப்பங்கள் அண்டாது அவள் தெளிவு நிலையில் இருக்கையில் அவனை எண்ணி அவளுக்கே சங்கடமாய் இருக்கும். இப்போதும் அப்படியே. படத்திற்கு செல்ல வேண்டும் என்று அழைத்தான் அவளால் முடியவில்லை. காரணம் அருணுடன் அவள் சென்ற முதல் படம் நினைவு வந்து தொலைத்துவிட்டது. அருணின் நினைவுகள் தாக்கும் சமயம் அவளால் அஞ்சனிடம் இயல்பாய் இருந்திட முடிவதில்லை. மனம் சோர்வுற்று அதையே எண்ணித் தவிக்கும். அந்த சோர்வை நீக்கும் வழி தெரியாது தவிப்பவள் அடங்கி விடுவாள். நேரம் சென்ற பின்னே அஞ்சனின் எதிர்பார்ப்பை ஏமாற்றியது அவள் மரமண்டைக்கு உறைக்கும் உடன் அவளின் கிறுக்குத்தனமும் தான்… தற்சமயம் போல…
தவறு இழைத்தது புரிந்ததும் எச்சில் கூட்டி விழுங்கியவள் தயக்கத்துடன் லேசாய் புரண்டு அவன் தோளை உரசும் வகையில் படுத்துக்கொண்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு அவளது நெருக்கம் தெரியாது போக, பிடித்த கையை இறுக்கியபடியே உறங்கினான். என்ன மெத்தையில் கோர்த்திருந்த அவர்கள் கரம் அவளின் தேகத்திற்கு மாறியிருந்தது.
‘எப்படியாவது இவரோட நல்லா வாழ்ந்துடனும். சீக்கிரம் வழி கண்டுபிடிச்சி இவரோட சேந்துடனும்.’ என்ற வேண்டலுடன் தன் மற்றொரு கரத்தை அவன் கரம் மீது பதித்தாள். காலை வரை அவர்களின் நிலை அப்படியே நீடிக்க, எழும் போதே முறுவலுடன் எழுந்தான் அஞ்சன்.
அமைதியாய் தூங்கும் அவளை ரசித்த வண்ணம் அவள் கரத்திலிருந்து தன் கரத்தை உருவிக்கொண்டவன் நுனிவிரல் கொண்டு அவள் வதனத்தில் ஊர்வலம் நிகழ்த்த சட்டென விழித்துக்கொண்டாள் கீர்த்தி. விழித்ததும் அவனை அத்தனை அருகில் கண்டவள் படபடப்புடன் எழுந்துகொள்ள,
“அம்புட்டு கொடுமையாவா இருக்கு என்ற முகம். இரு பாக்குறேன்.” என்றவன் அவள் கைபிடித்து அருகே இழுத்து விழி நோக்க, முகம் திருப்பினாள் கீர்த்தி.
“ம்ச்… என்ற முகத்தை பாக்கவுடு…” அவள் தாடை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் விழிகளோடு விழி கலக்கவிட்டு அந்த கருவிழிகளில் தன்னைத் தேடி விரும்பியே தொலைத்தான்.
“என்ன பண்றீங்க?” காத்துதான் வெளியேறியது அவள் இதழிடுக்கிலிருந்து. உடன் பட்டாம்பூச்சியாய் படபடத்தது அவளது இமைகள்.
“உன்ற கண்ணுல நான் அழகாத்தான் தெரியுறேன் பொறவு ஏன் பயம்…” என்றவன் அவள் மூக்கை உரசும் அளவு நெருங்கியிருந்தான்.
‘நகராத கீர்த்தி. அவரு மூடை கெடுத்துடாத. அவரோட தான் வாழப்போற அவரை பழகிக்கோ.’ அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.
“இப்போல்லாம் என்றகூட சகஜமா பேசி நீ இப்படி இருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு தங்கம்.” என்றவன் அழுத்தமாய் அவள் கன்னத்தில் ஈரமுத்தமொன்றை வைத்து விலக, கீர்த்தியின் கண்கள் அழகாய் மூடிக்கொண்டது.
மூடிய அவள் இமைகளுக்கும் அடுத்தடுத்து முத்தம் வைத்தவன் தழைந்து அவள் தாடையில் இதழ் பதித்து அங்கிருந்து விலகாமல் அப்படியே கீழ் நோக்கி ஊர்வலம் சென்றவன் அவள் கழுத்தில் தஞ்சம் புக, கீர்த்தியின் சப்தமும் அடங்கி உடல் நடுங்கியது.
அவளது மூச்சுக்காற்று சீரற்று வேகமாய் படையெடுக்க, அவன் கிளறிவிட்ட உணர்ச்சிகளை கையாளத்தெரியாமல் அவனை உதறித்தள்ளி அப்படியே மெத்தையில் சரிந்து தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அவனின் தூண்டலில் துடைத்து வைத்தது போலிருந்த மனதிற்கும் மூளைக்கும் என்ன செய்வது என்றுகூட விளங்கவில்லை. விடுவானா அஞ்சன்? அவளை பின்னிருந்து அணைத்தவன், “இன்னைக்கு லீவு போட்டுறலாமா?” என்று காதில் கிசுகிசுக்க, பட்டென எழுந்து அமர்ந்தாள் கீர்த்தி.
“சமைக்கணும். வேலைக்குப் போகணும்.” என்று அவன் முகம் காணாது இறங்கிச் சென்றுவிட, பொம்மையை பிடுங்கிக்கொண்டது போல் முகம் கோணி படுத்துவிட்டிருந்தான் அஞ்சன்.
அவனிடமிருந்து தப்பித்தோம் என்று வேகமாய் குளியலறைக்குள் புகுந்துகொண்டவள் நெஞ்சில் கைவைத்து சுற்றோடு ஒண்டிக்கொண்டாள்.
‘என்ன நடந்துச்சு இப்போ? இப்போலாம் அவர் கிட்ட வந்தா எனக்கு கோவம் வர்றது இல்லையே ஏன்? அவரை ஏத்துக்க ஆரம்பிச்சிட்டேனா? ஆனா… ஆனா… ஏன் இன்னும் தவிச்சி தயங்கிட்டு இருக்கேன்… அவர் என்னை நெருங்குற மாதிரி என்னால ஏன் முடியல… ஏன் ஏன்?’ அவளது கேள்விகளுக்கு அன்று இரவே பதில் கிடைத்தது.
சில நொடிகள் குளியலறையில் நின்று யோசித்தவள் காலை வேலைகளை முடித்துக்கொண்டு சமையலில் தன்னை புகுத்திக் கொள்ள, நிமிடங்கள் பல கழித்து சட்டையை தூக்கிக் கொண்டு அவளிடம் வந்தான் அஞ்சன்.
“கீர்த்தி…”
அழைப்பில் திரும்பியவள் எதிரே நீட்டப்பட்ட சட்டையை மறுக்காது வாங்கிக்கொண்டு அவனுக்கு மாட்டிவிட்டு இயல்பாய் பொத்தான்களை போட்டுவிட்டாள். இரண்டு நாட்களாக தொடரும் இந்த பழக்கத்தை வழக்கமாக்க கீர்த்திக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதில் அவனுக்கு இன்றளவும் ஆச்சர்யம்.
“இதென்ன சின்னபுள்ளைதனமா சட்டை கூட உனக்கு போடா முடியாதானு சண்டை போடுவேன்னு நெனச்சேன் தங்கம்.” என்றான் ஆவல் நீங்காது.
“எனக்காக எல்லாம் செய்யுறீங்க… நானும் உங்களுக்கு செய்யணும்ல.” என்றாள் குனிந்த தலை நிமிராது சிரத்தையாய் பொத்தான்களை மாட்டியவண்ணம்.
“பதிலுக்கு பதில் கடமைக்காக செய்ய வேணாம்.” முகம் தூக்கி அவள் கரத்தை தட்டிவிட்டான் அஞ்சன்.
அவன் தட்டிவிட்டதில் அவள் கரம் அடுப்பில் இருந்த கரண்டி மேல் பட்டு அது கீழே விழ, அது தெறித்து விழும் முன் அவன் சட்டையை மசாலா கறையாக்கியது.
“ம்ச்… இதுக்குத்தான் சமைக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்றேன். கேக்கவே மாட்டேங்குறீங்க.”
அவனை வசைபாடியபடி கரண்டியை எடுத்து வைத்தவள் அடுப்பில் கவனம் செலுத்த, முகம் சுருக்கியவன் சட்டையை கழட்டி துவைக்கும் இடத்தில் போட்டான். அங்கோ ஏற்கனவே ஒரு மூட்டை துணி கிடந்தது.
“துணி எதுவும் துவைக்கலையா?” கேள்வியுடன் அவளிடம் வர, முறைப்பு பெண்ணிடம்.
“காலையில சமைச்சி வீடு பெருக்கி கிளம்பி வேலைக்கு போகத்தான் சரியா இருக்கு… சாயங்காலம் வந்தா அலுப்பா இருக்கு. சனிக்கிழமை தான் துவைக்க முடியும்.”
அன்னையும் மகளும் தானே தங்கள் உடைகளை துவைத்துக்கொண்டதால் கீர்த்தி வீட்டில் துணி துவைக்கும் மெஷின் இல்லை. அதனால் அவர்கள் சீரிலும் வாங்கிடவில்லை. அஞ்சனின் அண்ணன் வீடுகளில் மெஷின் உண்டு என்றாலும் இவர்கள் வீட்டில் அவன் அம்மாவே துவைத்துவிடுவார். அதனால் அவனுக்கும் அது நினைவில் இல்லாமல் போக இப்போது ஒரு மூட்டை துணி கண்ணில் படவும் புதிது வாங்கிவிடலாம் என்ற யோசனை.
கீர்த்திக்கு அதில் மகிழ்ச்சியே… தான் எத்தனை தூரம் விலகிப் போனாலும் எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்கிறானே என்று அவன் மீது இயல்பாய் ஒரு பரிவு வந்தது. இப்படி தன் மீது நேசம் வைத்திருப்பவனுக்கு நியாயம் செய்திட வேண்டும் என்று அக்கணம் தோன்ற,
“வாங்கலாம்… இன்னைக்கு லீவு போட்டு கடைக்குப் போய் வாங்கிட்டு அப்படியே எங்கேயாவது போய்ட்டு வரலாமா?” அவளே பிள்ளையார் சுழி போட, அதை நேர்கோடாய் மாற்றுவதில் வல்லவனாயிற்றே அஞ்சன்.
“சாப்பிட்டு போலாம் தங்கம்… சீக்கிரம் கிளம்பிடு.” அதன்பின் அவன் கால் எங்கே தரையில் நின்றது.
முகம் சுழிக்காது தானே அவன் தோள் பற்றி வண்டியில் ஏறினாள் கீர்த்தி. முதலில் கடைக்குச் சென்று அவளுக்கு பிடித்தபடியே வாஷிங் மெஷின் வாங்கியவர்கள் அதை மாலை வீட்டிற்கு கொண்டு வரும்படி சொல்லிவிட்டு, படத்திற்குச் சென்றனர். படம் முடிந்ததும் மதியம் வெளியே சாப்பிட்டு அந்த மதிய வெயிலில் இருந்து தப்பிக்க மீண்டொமொரு படம்…
“நேத்திக்கு படத்துக்கு கூப்பிட்டப்போ நீ வரலன்னு சொல்லவும் கஷ்டமாகிடுச்சு தங்கம்… ஆனா இன்னைக்கு அதுக்கும் சேர்த்து ரெண்டு பார்த்தாச்சு.” என்று அவள் விரல்களுடன் விரல் கோர்த்து அவன் ஆசையாய் சொல்ல, இதழ் வளைத்து சிரித்தாள் பெண். அவன் அகம் மகிழ்ந்ததில் அவள் மனமும் நிறைந்தது.
மாலையாகியதும் வீட்டிற்கு செல்லலாமா என்று அவன் பார்க்க, மறுப்பு பெண்ணிடம். முதல் முதலாய் ஒரு நாள் முழுதும் அருணின் நினைவின்றி அஞ்சனின் முகம் பார்த்து அவனுக்காய் அனைத்தும் செய்ததில் பாரம் குறைந்து மனம் இலகியிருந்தது.
“என்ன தங்கம் இன்னிக்கு இத்தனை அதிர்ச்சி குடுக்குற… தாங்காதுமா என் நெஞ்சம்.” அவன் நெஞ்சில் வைத்து தலை சாய்க்க, விரிந்தது அவள் இதழ்கள்.
“எனக்கும்தான்… உங்ககூட இப்படி இருக்க முடியும்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சுது. அதான் ஐஸ்கீரிம் சாப்புடனும்னு தோணுது. சந்தோஷமா இருந்தா ஐஸ்க்ரீம் சாப்பிட பிடிக்கும் எனக்கு.”
முதன்முதலாய் அவளது பிடித்தத்தை அவனிடம் வெளிப்படுத்தியிருக்க, அவ்வூர் முழுதும் சுற்றி அங்கிருக்கும் பெரிய ஐஸ்கிரீம் கடைக்கு அவளை அழைத்துச் சென்று நிறுத்தினான் அஞ்சன்.
“உனக்கு புடிச்சதை வாங்கிக்கோ தங்கம்.”
அவர்கள் ஊரில் வெகு நாட்களாய் இருக்கும் கடையென்றாலும் அவள் அங்கெல்லாம் சென்றதில்லை. இன்று அஞ்சன் அழைத்துச் செல்லவும் அக்கடை முழுதும் சுற்றி தனக்கு பிடித்ததை வாங்கி நிதானமாய் ரசித்து உண்டாள். தனக்கும் அவளையே சேர்த்து ஆர்டர் செய்யச் சொன்னவன் அவளின் அழகை ரசித்தபடி உண்டான்.
சில்லென தொண்டையில் இறங்கிய பனிக்கூழின் இதம் அவர்கள் வீடு வரும் வரையிலுமே மனதில் லயித்திருக்க, அவ்வப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அஞ்சனிடம் வெட்கச்சிரிப்புகள் பஞ்சமின்றி வெளிப்பட, அவனை பார்ப்பதும் பின் ஏதோ யோசிப்பதுமாய் கீர்த்தி இரவு உணவு தயார் செய்தாள். வாஷிங் மிஷினும் வந்து இறங்கி அஞ்சனின் பிடிவாதத்தால் அன்றே மாட்டியாயிற்று.
“இந்த வாரம் சுந்தர் வூட்டுக்கும் குரு வூட்டுக்கும் போலாமா?”
சென்ற வாரம் சுவாமிநாதன் மற்றும் பூமிநாதன் வீட்டிற்கு விருந்துக்காய் சென்று வந்தனர். அதனால் இந்த வாரம் மற்றைய அண்ணன்கள் வீடு என்று முடிவாக, மறுக்காது ஒத்துக்கொண்டாள் கீர்த்தி.
“உனக்கு அலைச்சலா இருக்குன்னா சொல்லு… அடுத்த வாரம் கூட போலாம்…” என்றான் அவள் முகம் பார்த்து இரவு உணவு உண்டபடி.
“அக்கா முன்னாடியே கூப்பிட்டாங்க… போயிட்டு வந்துடலாம்.” என்ற கீர்த்தி நொடி தயங்கி, “சாப்புட்டு பூ வாங்கிட்டு வறீங்களா?” என்று கேட்டிட யோசனையுடன் பார்த்தான் அஞ்சன்.
“இப்போவா? வரும் போதே வாங்கி இருக்கலாமே தங்கம்… சரி வாங்கிட்டு வரேன்.”
நீ ஒன்று கேட்டு நான் அதை மறுப்பதா என்று தலையசைத்தபடி உண்டு முடித்த கையோடு வெளியே கிளம்பிவிட, கதவை சாற்றி தாழிட்டவள் நேரே பூஜையறை சென்றாள்.
‘என் மேல இத்தனை அன்பு வச்சி இருக்குறவரை நான் ரொம்ப படுத்துறேன்… அங்கங்க ஒட்டியிருக்கிற என்னோட பழைய நியாபகங்கள் வராம இருக்கணும்னா எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல… அருணோட காதலேந்து முழுசா வெளில வந்து அஞ்சனோட மனைவியா மாறனும்… மாத்திடு… இனியாவது நாங்க நல்லா இருக்கனும். எந்த குழப்பத்தையும் எனக்குள்ள வரவிடாத…’ வேண்டுதல் வைத்தபடி அறைக்கு சென்றவள் வேகவேகமாய் அலமாரியில் இருந்த மஞ்சள் பையை எடுத்து அதிலிருந்த புதிய புடவையை கட்டிக் கொண்டாள்.
சற்று நேரத்திலேயே அழைப்பு மணி கேட்க அஞ்சனாய் இருக்கும் என்ற படபடப்புடன் கீர்த்தி கதவைத் திறக்க அவள் எண்ணத்தை பொய்க்காது அஞ்சன் நின்றான் கையில் பூவோடு.
கதவை திறந்துவிட்டு அவள் உள்ளே சென்றுவிட, அதிர்வில் உறைந்து நின்றுவிட்டான் கணவன். திருமணப் புடவை எடுக்கச் சென்ற போது பரிசாய் கொடுக்கவென அவன் முதன்முதலாய் அவளுக்கென வாங்கிய சேலையில் ரதியென மின்னினாள் அவனவள்.
அவன் உள்ளே வரவில்லை என்பதை உணர்ந்தவள் கதவருகே சென்று தயக்கத்தில் அவனை ஏறிட்டு பார்க்கவும் திராணியற்று, “உள்ள வாங்க…” என்று அழைக்க மறுக்காது உள்நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டான்.
“என்ன கீர்த்தி?”
அவனது கேள்விக்கு பதில் சொல்லாதவள் உள்ளே சென்று ஹேர்பின் எடுத்துவந்து அவன் கையில் கொடுத்து அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொள்ள, அவள் கடத்த வரும் செய்தி புரிபடவும் மூச்சுவிடவும் மறந்து போனான் அஞ்சன்.
“என்ன பண்ற நீ? நீ… உன்ற… நீ என்ன பண்றேன்னு புரியுதா உனக்கு?” தடுமாறி நின்ற கணவனின் தயக்கத்திற்கு மனைவியின் பதில் தலையசைப்பு மட்டுமே.
“என்ன திடீர்னு?” இத்தனை நாள் காத்திருந்து விரும்பிய ஒன்று கிடைக்கையில் அதை அனுபவிக்க முடியாமல் இது எப்படி சாத்தியமானது என்ற கேள்வியே அஞ்சனிடம். என்ன பதில் சொல்லுவாள் பாவை?
காலை நீ நெருங்குகையில் கோபம் வரவில்லை மாறாக உன்னை ஏற்றுக்கொள்ள மனம் விழைந்துவிட்டது என்றா? இல்லை இப்போதெல்லாம் உன் அருகாமை அருணின் நினைவுகளை தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறது அதுபோல என் வாழ்க்கை முழுதிலிருந்தும் அவனை ஒதுக்கி வைக்க வேண்டும் அதற்கு உன் உரிமையை என் மனதில் பதிய வைக்க வேண்டுமென்றா?
காரணங்கள் யாவும் சுயநலமாய் இருக்க எதைச் சொல்லுவாள்? சொற்கள் தேடித் தேடி ஓய்ந்தவள் மெளனமே என் மொழி என்று நின்றுகொள்ள, தன் கையிலிருந்த பூவையும் அன்று காலை முதல் அவனிடம் அவள் நடந்துகொண்ட விதத்தையும் மனதில் ஒருமுறை ஓட்டிப்பார்த்தவன் தெளிந்தவனாய் வாங்கி வந்த மல்லிச்சரத்தை அவள் தலையில் சூட்டி விட்டான்.
முதுகு காட்டி நின்றவள் அடுத்து வரப்போவதை எண்ணி ஒருவாறு தன்னை தயார் செய்து கொண்டிருக்க அவள் தோள் பிடித்து திருப்பியவன் அவள் தாடையை நிமிர்த்தி, “எனக்கும் ஆசைதான்… ஆனா எனக்காக ஒத்துக்காத.”
காதலுடன் அக்கறை வழிந்த அவன் பார்வையை சஞ்சலமின்றி எதிர்கொண்டவள் நொடி விழி மூடித்திறந்து, “எனக்காகவும் தான்… நீங்க யாருன்னு இதுக்குப்புரியனும்..” என்று இதயத்தையும் மூளையையும் அவள் சுட்டிக்காட்டி அவன் தோளில் மெல்லச் சாய்ந்திட, இது சரியா என்ற யோசனை அஞ்சனிடத்தில் வந்தாலும் உரியவளின் நெருக்கத்தில் அவன் உடல் கட்டுப்பாடின்றி சூடேறியது.
மூளை யோசிக்க மறந்து மனதின் வழியை பின்பற்றும்படி ஆணையிட, அவளை கைகளில் ஏந்தியிருந்தான் அஞ்சன். ஏந்துயிருப்பது உன் கணவன் என்ற கட்டளையை மூளை மனதிற்கு இட்டிருக்கும் போல ஒரு நொடி மீண்டும் இறுகி இலகியது அவளுடல்.
அவளை தூக்கிச் சென்று மெத்தையில் விட்டவன் திரும்ப வந்து அனைத்து கதவுகளையும் சாற்றி விளக்கணைத்துவிட்டு, அறையில் சிறிய விளக்கை ஒளிரவிட்டு அவளை நெருங்க, கீர்த்தி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
மூடிய இமைகளுக்கு அவ்விரவின் முதல் அச்சாரத்தை இட்டவன், “ஓகே தானே கீர்த்தி?”
அவனது கேள்வி உயிர் வரை சென்று தாக்கிட, ‘எங்கும் என் விருப்பு வேண்டும் இவனை பிரியவே கூடாது.’ என்று நெகிழ்ந்தது அவள் மனது. ஆனால் அனைத்தும் சில நிமிடங்களே…
நெஞ்சத்தில் இவனுக்கான நேசம் ஊற்றெடுக்க வேண்டும் என்று வேண்டியவளின் நெஞ்சத்தை அவனிதழ்கள் தீண்டிய நொடி அதிர்ச்சியாய் அவளை ஏறிட்டவன் விழியோரத்தில் துளிர்த்த நீரோடு, “என்னை இம்புட்டு புடிக்குமா கண்ணு.” என்று அவள் முகம் ஏந்திக் கேட்டிட, அதுவரை அவனது காதலில் கட்டுண்டு இருந்தவள் விழித்து என்னவென்று பார்க்க…
“AK.” என்று ஆங்கில எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து அவள் நெஞ்சுக்குழியின் மேல் சட்டமாய் வீற்றிருந்த அவளது டேட்டூவை சுட்டிக்காட்டினான்.
“என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் என்னை சுத்தல்ல வுட்டியா?” சிரிப்புடன் கேட்டவன் தலை சாய்த்து அவள் கன்னத்தை கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் அவனை உதறித் தள்ளியிருந்தாள்.
“என்ன கண்ணு?” புரியாது அவன் விழிக்க, நழுவியிருந்த உடையை சுருட்டி தன் மேல் போட்டுக்கொண்டவள் குற்றவுணர்ச்சியில் சுருண்டு சுவற்றோடு ஒட்டிக்கொண்டாள்.