திருமகள் நாச்சியார் அவளது அறையில் உறங்க, வீட்டின் முற்றத்தில் அவள் நினைவுகளுடன் நிலவை துணையாக கொண்டு உறங்க முயன்றான் வாசுதேவ கிருஷ்ணன்.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கினாலும், காலை தன் வழக்கமான நேரத்திற்கு விழித்தெழுந்தவன் திருவிடம் சொல்லிக் கொள்ளாமலே அவள் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.
உறக்கத்தில் இருப்பவளை தொந்தரவு செய்ய வேண்டாமென அவன் நினைக்க, அங்கே இரவு முழுவதும் சரியாக உறங்காமல் அறையின் மூலையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவன் மனைவி.
வாசுதேவகிருஷ்ணன் தன்னை தனித்து விடாமல் வீடு வரை வந்தது மகிழ்ச்சிதான் என்றாலும், அவன் “வெளியே போ” என்றதை அத்தனை எளிதாக கடந்துவிட முடியவில்லை அவளால்.
“உன்னை அனுப்பிவிட்டு அவன் நிம்மதியாக இல்லையே.. அவனும் கலங்கித்தானே நிற்கிறான். அவன் உணவை குறித்தே கவலை கொள்ளாதவன் உனக்காக உணவு எடுத்து வந்தானே..” என்று மனம் ஒருபக்கம் இழுக்க,
“சாப்பாடு கொண்டு வந்தால், எல்லாம் சரியா போச்சா..” என்று முறுக்கியது மனது. சிந்தனையினூடே நேரம் பார்க்க, மணி ஐந்தை தொட்டிருக்கவும் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் அவள்.
வெளியே கணவன் படுத்திருப்பான் என்று வேகமாக அவள் எழுந்து வெளியேவர, அவன்தான் காலை நான்கு மணிக்கே கிளம்பியிருந்தானே. எப்படியும் பால் கறக்கும் வேலைகளை கவனிக்க தந்தை வருவார் என்று முன்னமே கிளம்பியிருந்தானே அவன்.
கணவன் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், பின்வாசலில் கேட்ட சத்தத்தில் வேகமாக அங்கு விரைந்தாள் திருமகள் நாச்சியார். அங்கே காலை வேலைகள் தொடங்கியிருக்க, ராகவன் வந்திருக்கவில்லை அன்று.
ஆட்கள் பால் கறந்து முடிக்கவும், அன்றைய கணக்கை எழுதிவைத்து அவள் வீட்டிற்குள் நுழைய முற்பட, அவளின் செல்லதம்பியான கருப்பன் கத்தி அழைத்தது அவளை.
அந்த குரலை மீறி வீட்டிற்குள் செல்ல மனம் வராமல் திருமகள் அவன் அருகில் சென்று நிற்க, தன் தலையை அசைத்தும், நாவை நீட்டியும் அவளை இன்னும் அருகில் அழைத்தது அந்த வாயில்லா ஜீவன்.
அதன் அன்பு அந்த நேரத்திற்கு அருமருந்தாக இருக்க, அவனைக் கட்டியணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள் திருமகள் நாச்சியார். திருமணம் முடிந்து விசலத்தின் வீட்டிற்கு சென்றுவிட்டாலும், தினம் ஒருமுறையாவது கருப்பனையும், அவளின் மற்ற உறவுகளையும் இங்கு வந்து பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தாள் திருமகள்.
ஆனால், ஒருத்தி கூடவே சுற்றி வந்ததற்கும், இப்போது பத்துநிமிடம் மட்டும் தங்களை பார்த்துச் செல்வதற்கும் வித்தியாசம் புரிந்ததோ என்னவோ, கருப்பனும் திருமகள் நாச்சியார் வந்துவிட்டால் அவள் பின்னோடு தான் சுற்றிக் கொண்டிருப்பான்.
அவள் வீட்டின் பின்பக்கம் இருக்கும் நேரங்களில் அவனை கட்டிவைக்க மாட்டாள் திருமகளும். ராகவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் எந்நேரமும் காவலுக்கு இருப்பதால், வீட்டைத்தாண்டி வெளியே சென்றுவிடுவானோ என்று அச்சமில்லை.
இப்போதும் அரைமணி நேரத்திற்கும் மேலாக அவனுடன் கொஞ்சிக் கொண்டு நின்றவள் அதன்பிறகே வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டில் பெரிதாக வேலையேதும் இல்லாமல் போக, அவளுக்கு மட்டும் காபியை வைத்துக்கொண்டு முற்றத்தில் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்த நேரம் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
திறந்திருக்கும் கதவை யார் தட்டுவார்கள் என்று குழப்பத்துடனே அவள் வாசலுக்கு வர, அங்கே நின்றிருந்தவனை எதிர்பார்க்கவில்லை திருமகள்.
அதுவும் இந்த காலைவேளையில் எதற்காக தன்வீட்டிற்கு வந்திருக்கிறான் என்ற சிந்தனையில் நின்றவளுக்கு அவனை உள்ளே அழைக்க வேண்டும் என்ற யோசனை கூட இல்லை அந்த நிமிடம்.
வாசலில் நின்றவன் அவனே “உள்ளே வரலாமா.” என்று கேட்டபின்பும், ஒரு நொடி யோசித்தபின்பே சம்மதமாக தலையசைத்தாள் திருமகள் நாச்சியார்.
வந்தது மனோகர். த்ரயுமகளின் வீட்டிற்குள் வந்து அமர்ந்தவனை அவள் கேள்வியுடன் பார்த்திருக்க, “ஏன் வந்தேன்னு கேட்கறியா..” என்றான் அக்காள் கணவன்.
“இப்போ அப்படி கேட்க முடியாது. என் கணவருக்கு வேண்டியவரா போயிட்டிங்களே.. என்ன விஷயம்.?” என்றாள் மச்சினி.
சிரிப்புடன் தலையசைத்துக்கொண்டவன் “சொல்லிட்டு கிளம்புடான்னு சொல்றியோ..” என்று மீண்டும் வளவளக்க,
“எப்போதும் அப்படியெல்லாம் பேசிட முடியாதே.. உங்களுக்கான மரியாதை எப்பவும் கிடைக்கும். இப்போ கொஞ்சம் மதிப்பும் வந்திருக்கு. அதனாலதான் வீட்டுக்குள்ள கூப்பிட்டதே.. இல்லாம போயிருந்தா,உயிரே போனாலும் முரளியோட அண்ணனை வீட்டுக்குள்ளே விட்டிருக்க மாட்டேன்.” என்றாள் உறுதியான குரலில்.
மனோகர் புன்னகையுடன் தலையசைத்து “நானும் பேச வேண்டியதை பேசிட்டு கிளம்பிடறேன்.. அதுதான் மரியாதை..” என்றுவிட, திரு இன்னமும் புரியாமல் நோக்கினாள் அவனை.
“இந்நேரம் நீ உன் வீட்லதானே இருக்கணும்.” என்றவன் கேள்வியுடன் திருவின் முகம் பார்க்க,
“அப்போ இது யார் வீடு..” என்றாள் திரு.
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு கோதை சொல்லியிருக்கா.. இப்போ புரியுது..” என்று மனோ சிரிக்க, திருவும் லேசாக புன்னகைத்து வைத்தாள்.
“இதை உன்கிட்ட கேட்க உரிமை இருக்கா தெரியல.. ஆனா, கேட்காமல் இருக்க முடியல. ஏன் இங்கே வந்து இருக்க நாச்சியார்..? அதுதான் எல்லாம் முடிஞ்சதே. இன்னும் என்ன சஞ்சலம் உங்களுக்குள்ள.?” என்று தயக்கத்துடனே கேட்டுவிட்டான் மனோகர்.
“நீங்க இப்படி வருத்தபடற அளவுக்கு சஞ்சலம் எதுவும் எங்களுக்குள்ள இல்ல. அப்படியே இருந்தாலும், அது எங்களோடதான். நாங்களே தீர்த்துப்போம்..” என்றாள் திரு.
“பிறகு ஏன் இங்கே வந்து இருக்கணும்.?” என்று மீண்டும் மனோகர் வினவ
“நான் எங்கே இருந்தால் என்ன.. என் புருஷன் என்னோட இருக்காரே. அது போதாதா.. அதோட நான் நேத்து இங்கே வந்தேன். இப்போவரைக்கும் ஏன் வெளியே போனேன்னு என் மாமாவோ, அத்தையோ கேட்கவே இல்ல. அதுதான் அவங்களோட புரிதல்..”
“நீயும் அப்படியே இருடான்னு சொல்லாம சொல்றியா..” என்று மனோ சிரிக்க,
“புரிஞ்சிகோங்கன்னு சொல்றேன்…” என்று திருவும் புன்னகைத்தாள்.
“வாசு அண்ணா நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம் தான் போல. நீ பேசவே விடமாட்ட போலவே.” என்று இலகுவாக அவன் கிண்டல் பேச,
“இப்போ வருவாங்களா..” என்றவன் சட்டென எழுந்து கொள்ள,
“ஏன் வந்தால் என்ன.?”
“இல்ல, நான் வந்தது பிடிக்கலைன்னா, அதிகபிரசங்கிதனம்ன்னு நினைச்சுட்டா..” என்றவன் தயங்க,
“அப்படியெல்லாம் எதுவும் நினைக்கமாட்டாங்க.. ரொம்ப நல்லவங்க அவங்க..” என்றாள் சிரிப்புடன்.
“அதுசரி.” என்று சிரித்தவன் “வாசு அண்ணா நல்லவர் தான் தாயே. எனக்கு ரொம்ப முன்னாடியே தெரியும்.. அவரை ஏமாத்தின குற்றவுணர்வு கூட இன்னும் எனக்குள்ள இருக்கு. ஆனா, இப்போ இங்கே வந்தது, உங்க விஷயத்துல தலையிடறது பிடிக்காம போகலாம் இல்லையா..”
கூடவே, “ஒரு விஷயம் செய்யும்முன்னே ஆயிரம் முறை கூட யோசிங்க. ஆனா, செஞ்சு முடிச்ச பிறகு அதுக்காக வருத்தபடறது வீண் வேலை..”
“உங்க வருத்தத்தால என்ன மாறிட போகுது. அன்னைக்கு உங்க மனைவியும் இப்படித்தான் எதையோ உளறி வச்சா.. எனக்கு பழைய விஷயங்கள் பேசுறது பிடிக்கவே இல்ல.”
“இன்னைக்கு குற்றவுணர்ச்சியை பத்தி பேசற நீங்க, அன்னைக்கு என் மாமாகிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்கலாம். நீங்க விரும்புறதை சொல்லியிருந்தா, நிச்சயமா அவர் கோதையை திரும்பிகூட பார்த்திருக்கமாட்டார்.”
“யார் எதிர்த்து இருந்தாலும், அவரே உங்களை சேர்த்து வச்சிருப்பார். அப்படிப்பட்டவர் தான் அவரும். ஏன் நீங்க இத்தனை செஞ்ச பிறகும் கூட, உங்களை எதுவும் செய்ய நினைக்கலையே.. உங்களுக்கு ஒரு சிக்கல் வந்த நேரத்துல கூட துணையா தானே இருந்தார்.” என்று மூச்சுவிடாமல் திருமகள் பேசி முடிக்க, பதிலில்லாமல் புன்னகைத்து நின்றான் மனோகர்.
அங்கு இதழ்விரியா புன்னகையுடன் வாசுதேவகிருஷ்ணன் நிற்க, அவனைக் காணவும் மீண்டும் கோபம் வந்து ஒட்டிக்கொண்டது திருமகளுக்கு. அவனுக்காக பேசி வைத்தது வேறு வெட்கம் கொடுக்க, பட்டென நகர்ந்து அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அங்கிருந்த இரண்டு ஆண்மகன்களும் தனித்து விடப்பட, “நிச்சயமா நான் உங்களுக்கு நல்லதுதான் பண்ணி இருக்கேன் வாசுண்ணா.. என்னாலதான் இப்படி ஒரு பொண்டாட்டி கிடைச்சிருக்கா உங்களுக்கு..” என்று சிரித்தான் மனோ.
வாசு அளவான புன்னகையுடன் நிற்க, “நீங்க கொலையே செஞ்சாலும், வக்கீல் எல்லாம் வைக்க வேண்டாம். இவளே மொத்த பேரையும் சுட்டு தள்ளிட்டு உங்களை தூக்கிட்டு வந்துடுவா… என் மச்சினியை நல்லா பார்த்துகோங்க.. உங்களை ரொம்ப லவ் பண்றா..” என்று அட்டகாசமான சிரிப்புடன் பேசியவன் வேகமாக அங்கிருந்து விலகி நடந்துவிட்டான்.
வாசுதேவனுக்கும் அவனைப் பிடித்து நிறுத்தும் எண்ணமில்லை அப்போது. மற்ற எதையும் விட, மனைவியைக் காண்பதே முதன்மையாக தோன்ற, வேகமாக அவள் அறைக்குள் நுழைந்தான் வாசுதேவன்.
திருமகள் தன்னை இயல்பாக காட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருக்க, மென்மையான புன்னகையுடன் வந்து அவள் அருகில் அமர்ந்தான் வாசுதேவன்.
அவனது நெருக்கத்தை உணராதவளாக திருமகள் சாளரத்தை வெறிக்க, “த்திரு.” என்றான் எப்போதும் போன்ற அழுத்தத்துடன்.
திரு நீ பேசுவதே கேட்கவில்லை என்று அமர்ந்திருக்க, மீண்டும் “த்திரு.” என்றவன் அவள் முகம் பற்றி தன்னைக் காணும்படி செய்ய, “போங்க.” என்று அவன் கையைத் தட்டிவிட்டாள் மனைவி.
கையைத் தட்டிவிட்டதில் வாசுதேவனுக்கு கோபம் வந்துவிட, “என்னதான்டி நினைக்கிற நீ.. என்ன செய்ய சொல்ற என்னை.” என்றவன் அவளிடம் இருந்து விலகி அமர்ந்துவிட, பட்டென அவனை முறைத்தாள் மனைவி.
இப்போது வாசுதேவன் அவளைக் கண்டுகொள்ளாமல் இருக்க, அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டாள் திருமகள்.
வாசுதேவன் அவள் கைபிடித்து நிறுத்தி “ராங்கி… ஏஏஏஏஏண்டி இப்படி அலையவிடற. வ்வ்வீட்டுக்கு வவந்தா, இப்படி ப்ப்போறவன் வர்றவன் ஏஏஏஏல்லாம் ப்புத்தி சொல்ல்லுவானா.” என,
“என்னை துரத்தினதே நீங்கதான். அதை மறந்துட்டு பேச வேண்டாம்.. அதோட, என் அக்கா புருஷன்னு வீட்டுக்குள்ளே விடல.. உங்க நட்புதானே.. அதுக்காகத்தான் பேசி அனுப்பினேன்.” என்றாள் காட்டமாக.
“சசசரி நான்தான் உன்னை த்த்த்துரதினேன்.. ஆஅதுக்கு என்ன ச்செயுறதா இருக்க நீ.. இன்னும் எத்த்தனை நாளைக்கு இங்கே இருப்ப.” என்றான் வாசுதேவன்.
“எத்தனை நாளைக்கு வேணாலும் இருப்பேன். என் தலைஎழுத்து உங்களை கட்டிக்கிட்டு இப்படி கிடக்கணும்னு இருந்தா, வேற என்ன செய்ய முடியும்.. இப்படியே இருக்கேன்.” என்றாள் ஆத்திரத்தில்.
“என்னைக் கட்டி என்ன குறை வந்துடுச்சு உன் தலையெழுத்துக்கு…ன்ன்ன்னன்ன்ன்ன்நானும் அமைதியாக இஈஈஈயிருந்தா உன் இஷ்டத்துக்கு பேசுவியா..”
“என்ன பேசிட்டேன் நான்.. நீங்க பேசினதை விட ஒன்னும் அதிகமா பேசல. என்னை வெளியே போக சொன்னிங்க இல்ல.”
“ன்ன்ன்னன்ன்ன்நான் ஒரே முறை தாஅன் சொன்ன்னேன்.. நீ ஒன்பது முறை சொல்லிட்ட த்திரு..” என்றான் வாசுதேவன். பெரும் ஆயாசம் அவன் குரலில்.
“அப்படித்தான் சொல்லுவேன்.இன்னும்கூட நிறைய முறை சொல்லுவேன்.. நீங்க கேட்டுதான் ஆகணும்.. என்னைத் துரத்தி விட்டிங்க இல்ல..” என்று மீண்டும் அவள் தொடங்க,
“ஒழுங்கா அன்னைக்கு வாயை வச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம்..” என்று தோன்றிவிட்டது வாசுதேவனுக்கு.
அவளை சமாளிப்பவனாக “நீ எத்தனை முறை வேணாலும் சொல்லு.. ஆனா, என்னோட க்கிளம்பி வ்வீட்டுக்கு வா… ஆங்கே இருந்து ச்சொல்லு.” என்றான் நிதானமாக.
“நான் வரமாட்டேன்..” என்று முகத்தில் அடித்தாற்போல திருமகள் பதில் கொடுக்க, அதற்குமேல் பொறுமையில்லை வாசுதேவனுக்கு.
“உன்னை கூட்டிட்டுப் போகத் தெரியாம இல்ல. இந்த நிமிஷமே தூக்கிட்டுப் போய்டுவேன். தப்பு என்மேல இருக்கவும், அமைதியா இருக்கேன். ஒழுங்கா கிளம்புற வழியைப் பாரு.” என்று பெரும்கோபத்துடன் அவன் எச்சரிக்க, அவனை அலட்சியப்பார்வை பார்த்து நின்றாள் திருமகள் நாச்சியார்.
“உனக்கு இதைவிட்டால் என்ன தெரியும்..?” என்று அவள் பார்வையே அவனை கேள்வி கேட்க, அவள் விழியசைவுகளைப் படித்துக் கொள்வதாக இல்லை அவன்.
அவளின் அந்த அலட்சியத்தை மட்டுமே கண்ணுற்றதாக காண்பித்துக் கொண்டவன் “கிளம்பு…” என்று உறுதியாக நின்று கொண்டான்.
“நான் வரமாட்டேன்.” என்று சிறுபிள்ளையாக அவள் தலையசைக்க,
“எனக்கும் வவ்வேற வ்வழி இல்ல.” என்றவன் அப்படியே இருகைகளாலும் தூக்கி கொண்டான் மனைவியை.
“ஐயோ.” என்று அலறியவள் “விடுங்க.. விடுங்க என்னை..” என்று அவன் கைகளில் திமிர, அவள் திமிறலைப் பொருட்படுத்தாமல் அவளை தூக்கிகொண்டு வாசலுக்கு நடந்தான் அவன்.
வாசலில் வேலையாட்கள் யாரும் இருப்பார்கள் என்பதே திருமகளைக் குன்ற செய்ய, “விளையாடாதிங்க மாமா.. வாசல்ல ஆளுங்க இருப்பாங்க.. ஒழுங்கா இறக்கிவிடுங்க..” என்று மிரட்டலாகவே கெஞ்ச தொடங்கினாள் திரு.
“அப்போ என்னோட வரேன்னு சொல்லு..” என்றான் அவளை கீழே விடாமல்.
“நீங்க என்ன பண்றிங்க புரியுதா உங்களுக்கு…”
“ந்நீயும் என்ன வேணாலும் ப்பண்ணிக்கோ..”
“என்னால உங்களை எதுவும் செய்ய முடியல.. அதனாலதான் இப்படி இருக்கேன்..” என்று எரிச்சலுடன் மனைவி மொழிய, அடக்கமுடியாமல் கடகடவென சிரித்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
அவன் சிரிப்பில் எரிச்சல் கூட, “கடிச்சு வச்சுடுவேன்.. சிரிக்காதிங்க..” என்று அவள் மிரட்டியதை கண்டுகொள்ளாமல் அவன் சிரிக்க, அதில் கடுப்பானவள் அவன் கையில் இருந்தபடியே, எட்டி அவன் கழுத்தை வளைத்து கன்னம் தொட முயல, அதில் லேசாக தடுமாறினான் வாசுதேவன்.
“அச்சோ.. ஒழுங்கா பிடிங்க மாமா..” என்றவள் பயத்துடன் அவன் கழுத்தைக் கட்டிகொண்டாள் இப்போது.
வாசுதேவன் சிரிப்புடன் அவளைக் கைகளில் இறுக்கிக்கொண்டு “பிடிக்கனுமா.. விடணுமா..” என்றான் அவள் காதுகளில்.
அப்போதுதான் அவன் குரல் மாற்றத்தை உணர்ந்தவள் திரும்பி அவன் முகம் காண, “விட்டுடவா..” என்று மீண்டும் சிரிப்புடன் கைகளை அவன் தளர்த்த, “அச்சோ..” என்று மீண்டும் அவன் கழுத்தைக் கட்டிகொண்டது பெண்.
“ரொம்ப ஓவர் மாமா..” என்று அவனைக் கட்டிக்கொண்டே அவள் மிரட்ட, “அப்போ என்னோட வரேன் சொல்லு.” என்றான் வாசுதேவன்.
“வரமாட்டேன்.” என்று மீண்டும் அவள் மொழிய, “அப்போ இப்படியே இரு.. ஏனக்கும் வ்வேற வ்வேலை எதுவும் இல்ல..” என்று சட்டமாக நின்றான் வாசுதேவன்.
“நீங்கதானே போக சொன்னிங்க..” என்றவள் அவன் கழுத்தில் அழுத்தமாக கீறி வைக்க,
“ஸ்ஸ்ஸ்…” என்று மெல்லிய குரலில் அலறினாலும், அவளை விடாமல் பிடித்திருந்தான் வாசுதேவன்.
மேலும், “இப்பவும் நானேதான் கூப்பிடறேன்.. என்ன்னோட வ்வா..” என்று சிறுபிள்ளையாக அவன் அடம்பிடிக்க,
“என்னால உங்களோட அலட்சியத்தை தாங்கவே முடியல மாமா.. ஆனா, நீங்க ரொம்ப சுலபமா அதை செய்துடறிங்க..” என்றவள் குரல் மாறிப்போக, அவள் குரலில் ஈரத்தை உணர்ந்தவன் அவளை தானாகவே இறக்கி கீழே விட்டான்.
திரு அவன் முகம் பார்க்காமல் தலைகுனிந்து நிற்க, அவளை விடாமல் பார்த்திருந்தான் வாசுதேவன்.
அவன் பார்வையை உணர முடியாதா அவளால். “இப்படி பார்த்து வைக்காதிங்க..” என்றாள் கோபத்துடன்.
“பார்க்ககூடவா தடை..” என்று சட்டென வாசுதேவன் பதில் கொடுக்க,
“இதெல்லாம் திக்காம வருமே..” என்று சிணுங்கினாள் அவள்.
வாசுதேவன் இலகுவாக சிரிக்க, “நீங்க கிளம்புங்க..” என்றாள் மீண்டும்.
வாசுதேவன் மறுப்பாக தலையசைத்து நிற்க, அவனுக்கு பதில் கொடுக்காமல் சேலையின் நுனியை திருகியபடியே எதையோ யோசித்து நின்றாள் திருமகள் நாச்சியார்.
“எதுவா இருந்தாலும், என்னோட இருந்து செய்.. கொன்றாலும் சரி.. கொண்டாலும் சரி.. இப்படி அடுத்தவன் எல்லாம் பார்க்கும்படி நிற்க வேண்டாமே..” என்று மிகவும் நிதானமாக வார்த்தைகளை கோர்த்தான் வாசுதேவன்.
“என்னோட மனைவி நீ.. என்னோட கர்வம் இல்லையா.. உன்னைவிட்டு நான் எதுவுமே இல்ல திரு.. உனக்கு புரியலையா..” என்று லேசான திணறலுடன் அவன் கூறி நிறுத்த, அவன் கைகள் மெல்ல அவன் கழுத்தைக் தடவிக் கொண்டது.
“ஏன் இப்படி கஷ்டபடறிங்க.. என்கிட்டே திக்கி பேசினால் என்ன..” என்று திரு கடிந்து கொள்ள,
“உன்கிட்ட எப்படி பேசினாலும் ஒன்னுமில்ல.. ஏன்னா, நீ வேற இல்ல..” என்றான் வாசுதேவன்.
அவன் குரலும், அவன் முகத்தில் தெரிந்த வலியும் திருமகளை அசைத்துப் பார்க்க, “இனி என்னை வெளியே போக சொன்னால், உங்களை வீட்டை விட்டு துரத்திடுவேன்..” என்றாள் ஒருவிரல் நீட்டி.
வாசுதேவன் அவள் வார்த்தைகள் போதும் என்பது போல், அவளைக் கைகளில் அள்ளிக்கொள்ள, இந்தமுறை பாந்தமாக அவனுடன் ஒன்றினாள் மனைவி.