அவளின் மனநிம்மதிக்காக ஆண்டாளை தேடி வந்திருந்தாள். மனம் ஓய்ந்து போயிருக்கவும், தேவையில்லாத சிந்தனைகள் மொத்தமாக சூழ்ந்து கொள்ள, யோசிக்காமல் அவர்கள் ஊரில் இருந்து ஆண்டாள் கோவில் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தவள் கோவிலுக்குள் நுழைந்து ஆண்டாளை தரிசித்து பின் இங்கே வந்து அமர்ந்து கொண்டாள்.

      தெரிந்தவர்கள் கண்ணில் பட்டால் தேவையற்ற கேள்விகள் எழும் என்பதால், அவற்றை தவிர்க்கவே இங்கு வந்து அமர்ந்திருந்தாள் அவள்.ஆனால், இப்படி வாசுதேவகிருஷ்ணனே வந்து நிற்பான் என்று நினைக்கவில்லை.

       வாசுதேவன் அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அவசரமாக வெளியேற்றி தன்னை சீர்படுத்திக் கொண்டிருக்க, அவன் செயல்களை கவனித்தவள் அவன் முகத்தில் படிந்த நிம்மதியையும் கண்டுகொண்டாள்.

        ஆனால், அதுவும் கூட அவளுக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை. வாழ்வே போராட்டமாகி விடுமோ என்று ஏதோ ஒரு பயம் சூழ்ந்திருந்தது அந்த நிமிடம். அவனிடம் பேசும் மனநிலையிலும் இல்லை அவள்.

          கண்களை மூடி முன்புபோலவே அவள் தூணில் சாய்ந்து கொள்ள, அமைதியாக அவள் அருகில் அமர்ந்து கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். அவள் கண்களைத் திறக்கட்டும் என்று அவன் காத்திருக்க, அசையாமல் சிலையாகி இருந்தாள் மனைவி.

          நேரம் கடக்க கடக்க, தன்னையறியாமல் அவன் தோள் சாய்ந்து சரணடைந்து விடுவோமோ என்று உள்ளம் அஞ்சியதில் பட்டென கண்களைத் திறந்தாள் திருமகள்.

            தன்னருகில் அமர்ந்திருந்தவனிடம் “கிளம்புங்க மாமா..” என்று தன்மையாகவே அவள் கூறி நிறுத்த, “நீயில்லாமல் நகரமாட்டேன்.” என்று கண்ணால் கதை படித்து, அவள் வார்த்தைகளை காற்றில் விட்டு அமர்ந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

            அது திருமகளுக்கு அலட்சியமாக தோன்ற “எப்போதும் நீங்க நினைச்சது மட்டுமே நடக்கணுமா மாமா..”என்றதற்கும் பதிலில்லை அவனிடம்.

            அதில் அவளின் ஆத்திரம் எல்லைமீற, “நீங்கதானே போக சொன்னிங்க.. பிறகு ஏன் தேடி வந்து வதைக்கிறிங்க.விட்டுடுங்க என்னை..” என்று கண்ணீருடன் மெல்லிய குரலில் அவள் சீற,

         “ந்ன்னிச்சயமா சொல்லு.. இஇஇஇஇந்ந்த ஆர்த்தத்துல ஸ்சொன்னனேனா ன்னன்னான்..” என்று வாசுதேவன் வாய்திறக்க,

           “எப்படி சொன்னாலும் என்னை வெளியே போக சொன்னிங்க மாமா..” என்றாள் திருமகள்.

           வாசுதேவன் முறைப்புடன் “த்திரு..” என்று வார்த்தையில் அழுத்தம் கூட்டிட,

           “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா… இந்த பத்துநாளா மட்டுமில்ல, நீங்க என்னை கட்டிக்க முடியாதுன்னு சொல்லி விட்டுட்டு போனீங்களே.. அப்போ இருந்தே பிடிக்கும்.” என்று அதிராமல் அவனுக்கு அதிர்ச்சி கொடுத்தாள் மனைவி.

           “அன்னைக்கு பஞ்சாயத்துல நீங்க தாலி கட்டாமல் போயிருந்தால், காலத்துக்கும் அப்படியேதான் நின்று இருப்பேன். அந்த முரளி எல்லாம் ஒரு ஆளே இல்ல மாமா.. மிஞ்சி போயிருந்தால் அவனைக் கல்யாணம் செய்துக்க சொல்லியிருப்பாங்க அதானே.. நானே இல்லாமல் போனதுக்கு பிறகு எப்படி அவனால எனக்கு தாலி கட்டியிருக்க முடியும்.. என் பிணத்தை தான் தொட்டிருப்பான் அவன்.”எனும்போதே வாசுதேவன் குறுக்கிட முயல, கையசைத்து அவனைத் தடுத்தாள் மனைவி.

             “நான் பேசுறேன் மாமா.. கேளுங்க…” என்றாள் கட்டளையாக.

             “அன்னைக்கு அத்தை உங்களை தாலி கட்ட சொல்லவும், அதுவரை நடந்த அத்தனையும் மறந்து போச்சு எனக்கு. நடந்தது மொத்தமும் நான் உங்களை சேரத்தானோன்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன். கல்யாணத்துக்கு பிறகும் உங்ககிட்ட எந்த தயக்கமும் வரவே இல்லை எனக்கு. இயல்பா வரவேண்டிய பயமோ, வெட்கமோ, கூச்சமோ எதுவுமே வரல. என் மாமான்னு மட்டும்தான் மனசுல பதிச்சிருந்தேன்.”

              “நான்தான் மூணு வருஷமா உங்களோட வாழ்ந்துட்டு இருந்தேனே. உங்களோட கல்யாணம் நடக்கும்னு எல்லாம் நினைச்சதே இல்ல மாமா. கனவுல மட்டும்தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணி உங்களோட வாழ்ந்துட்டு இருந்தேன் நான்.”

              “எனக்கு நீங்களோ, உங்களோட நான் வாழற இந்த பத்துநாள் வாழ்க்கையோ எதுவுமே புதுசா தெரியல. மனசு முழுக்க உங்க பிம்பத்தை நிறைச்சு வச்சிருந்தேன். நீங்க மட்டும்தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணியிருந்தேன்.”

               “அதனால தானோ என்னவோ, நீங்க என்னை அடிச்சதோ, திட்டினதோ எதுவும் பெருசா தெரியல எனக்கு. அன்னைக்கு அத்தனை சண்டையிலும் கூட, நீங்க ரகுவை அடிச்சதுக்கு தான் கோபம் வந்தது. என்னை நீங்க அடிச்சதும், திட்டினதும் ஒரு விஷயமாவே தெரியல எனக்கு.”

               “நீங்க ரகுவை பேசினதுக்கு கூட பெருசா எதையும் செய்ய முடியலையே என்னால. என்னால உங்களை எதிர்க்க முடியல மாமா. நீங்க என் முன்னாடி நின்னாலே போதும். நான் தோத்துடுவேன். என்னால உங்ககிட்ட போராட முடியாது..”

               “ஆனா, அதே சமயம் உங்களுக்கு பாரமா நான் இருக்கமாட்டேன். என் அளவுக்கு நீங்க என்னை விரும்பனும்னு அவசியமில்லையே. அவசரத்துல நடந்த கல்யாணம் தானே. உங்ககிட்ட அதிகமா எதிர்பார்க்கிறது தப்பு இல்லையா மாமா.”

                 “ஆனா, என்னால உங்களைத் தவிர வேற எதையும் யோசிக்க முடியல. நீங்க வெளியே போ ன்னு சொன்னதையும் தாங்க முடியல. வலிக்குது எனக்கு… ரொம்ப கஷ்டமா இருக்கு… நான் உங்களோட வரமாட்டேன்..”

               “நான் அப்படியென்ன தப்பு செய்தேன் மாமா. உங்களுக்காக சொந்த அக்காவையே ஒதுக்கி வச்சவ நான். அந்த முரளி யார் மாமா..? அவன்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்கனும்னு சொல்லும்போது உங்களைத்தவிர வேற எதையும் என்னால யோசிக்க முடியல.”

               “நான் பஞ்சாயத்துல வந்து நிற்கக்கூடாதுன்னு நீங்க யோசிக்கிறது சரின்னா, என் புருஷன் யார் முன்னாடியும் தலைகுனிய கூடாது ன்னு நான் நினைக்கிறது எப்படி தப்பாகும்.?”

              “நீங்க எனக்கு யாரோ இல்லையே.. எப்படியும் போங்கன்னு நான் விட்டுட்டுப் போக. என் புருஷன் நீங்க, என்னால உங்களை விட முடியாது.”

            “ஆனா, நான் வேண்டாம்ன்னு நீங்க நினைச்சுட்டா அதையும் நான் மறுக்க மாட்டேன். நீங்க சொன்னது சொன்னபடியே இருக்கட்டும். வெளியே வந்தவ வெளியவே நிற்கிறேன்…”

            “என்னால உங்களோட வரமுடியாது மாமா. நான் இதுவரைக்கும் எப்படி இருந்தேனோ, அப்படியே இருக்கேன். நீங்க போங்க.” என்றாள் முடிவாக.

             வாசுதேவன் அவள் வார்த்தைகளை அமைதியாக உள்வாங்கி கொண்டு அமர்ந்திருந்தான். இன்னும் அவளின் காதலையே அவன் கடக்க முடியாமல் அமர்ந்திருக்கையில், அவள் வார்த்தைகள் எங்கே காதில் விழுவது. அவள் காதல் அப்படி அவனை கட்டி வைத்திருந்தது.

             ஆனால், அவன் மனைவி அங்கே நிற்பதாக இல்லை அதற்குமேல். அவனிடம் கூறி முடித்தவள் வேகமாக எழுந்து நடக்க தொடங்க, அவள் அந்த மண்டபத்தின் வாயிலை நெருங்கும்போது தான் தெளிந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

              அவள் கண்ணில் இருந்து மறையவும் வேகமாக எழுந்து அவள் பின்னே ஓடினான் வாசுதேவகிருஷ்ணன். அவள் கோவிலை விட்டு வெளியேறும் நேரம் அவளை நெருங்கி அவள் கரம் பிடித்தவன் “வ்வ்வ்வா என்னோட.” என்று அழைக்க, மறுப்பாக தலையசைத்தாள் மனைவி.

               வாசுதேவன் “க்க்க்க்கொன்னுடுவேன் உஉன்னை..” என்று அழுத்தமாக மிரட்ட,

              அவன் கைகளை கண்ணீர் கலந்த சிரிப்புடன் விலக்கியவள் “ப்ளீஸ் மாமா.. என்னை போக விடுங்க. நிச்சயமா நான் முழுமனசோட வரமாட்டேன். எனக்கு இது பிடிக்கல. நான் சொன்ன காதலுக்காக நீங்க என்னை கூட்டிட்டு போறதா தோணும் எனக்கு..” என்றாள் திருமகள்.

                அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, வலியுடன் அவளை கெஞ்சலாக பார்த்து நின்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். அவன் பார்வையை சந்திக்க விரும்பாமல் “இப்படி பண்ணாதீங்க மாமா.. ப்ளீஸ்..” என்று அதற்கும் அவள் கண்ணீர்விட, அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது வாசுதேவனுக்கு.

              சட்டென தன் கையை நீட்டி அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன் “வா.” என்று தலையசைத்து முன்னே நடக்க, அப்போதும் அசையவில்லை திருமகள்.

             “வ்வ்வீட்ல விடறேன்ன்ன் வ்வா.” என்று அவள் கரம் பிடித்து இழுத்துச் சென்றான் வாசுதேவகிருஷ்ணன்.

              வாசலில் நின்ற அவன் வண்டியின் அருகே அவளை நிறுத்தியவன் தனது இருசக்கர வாகனத்தை உயிர்ப்பிக்க, அதில் ஏற மறுத்து நின்றாள் மனைவி.

              வாசுதேவன் கண்களால் மிரட்டி “ஏறு..” என்று நிற்க, “வண்டியில ஏறினால் ஒருவேளை உங்ககூட வந்திடுவேனோன்னு பயமா இருக்கு..” என்று முகத்தை சுருக்கிக்கொண்டு அவள் கூற, தன் வாகனத்தில் இருந்து இறங்கியவன் அவளிடம் எதுவும் பேசாமல் அவளுடன் நடந்தான்.

               சாலையை அடைந்து அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மறித்து அவளை ஏற்றிவிட்டவன் தன் வண்டியில் வீடு வரை அவளைப் பின்தொடர்ந்து அவள் வீட்டு வாயில் வரை வந்து நிற்க, அவனை உள்ளே அனுமதிக்க மறுத்தாள் திருமகள் நாச்சியார்.

               “நீங்க வர வேண்டாம் மாமா.. ” என்று ஒரே வார்த்தையில் முடித்து கொண்டாள்.

               வாசுதேவன் கிளம்பாமல் நிற்க “நான் உங்களை வெளியே போங்க ன்னு சொல்லமாட்டேன். என்னால முடியாது…” என்றாள் சோகமாக

              அவள் பாவனையில் அத்தனை நேரம் இருந்த இறுக்கம் தொலைந்து புன்னகை வரப்பார்த்தது வாசுதேவனுக்கு.

              திரு “ப்ளீஸ் மாமா..” என்று மீண்டும் கெஞ்சலாக நோக்க, அவள் மறுப்பையும் மீறி அவள் வீட்டிற்குள் ஓரடி எடுத்து வைத்தவன் வீட்டின் நிலைக்கதவில் அவளை சாய்த்து அவள் இதழ்களை அழுத்தமாக தீண்டினான்.

                திரு மறுக்காமல் நிற்க, ஒரு முழு நிமிடத்திற்குப் பின் அவள் இதழ்களை விடுவித்தவன் அவள் நெற்றியில் இதழ்பதித்து “சீக்கிரம் வந்திடு..”என்ற வேண்டுதலோடு விடைபெற்றுக் கொண்டான் கணவன்.