நெஞ்சம் பேசுதே 19

                 திருமகள் நாச்சியார் வெளியே கிளம்பிய நேரம் விசாலம் சமையல் அறையில் இருந்திருக்க, ராகவன் ஏதோ வேலையாக சாரதியுடன் வெளியே கிளம்பியிருந்தார்.

                  யாருமில்லாத நேரத்தில் இவள் வீட்டை விட்டு வெளியேறியது முதலில் தெரியவே இல்லை விசாலத்திற்கு. மருமகள் மகனுடன் அறையில் இருக்கிறாள் என்று நினைத்திருந்தார் அவள்.

              வாசுதேவகிருஷ்ணன் வேலை இருப்பதாக அவனது அரிசி மில்லுக்கு கிளம்பிவிட, அதன்பின்பே மருமகளைத் தேட தொடங்கினார் விசாலம்.

                அவள் அறையில் பார்த்து, பின்பு வீடு முழுவதுமே அவர் தேடி முடிக்க, எங்கும் திருமகளை காணவில்லை. “எங்கே போயிருப்பா..” என்று யோசனையுடன் அவர் திருமகளுக்கு அழைக்க, அலைபேசி அவளது அறையிலேயே கிடந்தது.

              விசாலம் பயந்தவராக தன் மகனுக்கு அழைக்க, “அங்கேதான் எங்கேயாவது இருப்பா.. நல்லா பாரும்மா.” என்றான் மகன்.

              “கண்ணா வீடு முழுக்க பார்த்துட்டேன்டா..” என்று விசாலம் கலங்க,

              “நான் பார்க்கிறேன் இரு.” என்று அழைப்பைத் துண்டித்து விட்டாலும், “எங்கே சென்றிருப்பாள்.?” என்று கலக்கம் தான் வாசுதேவனுக்கு.

               அரிசி ஆலையில் இருந்து கிளம்பியவன் முதலில் அவள் வீட்டிற்கு செல்ல, வீடு பூட்டியே கிடந்தது. “எப்படியும் அவள் வீட்டில் தான் இருப்பாள்.?” என்ற நம்பிக்கையில் தான் அவன் நேரே இங்கு வந்தது. அவள் வீட்டில் இல்லாமல் போகவுமே பதட்டம் தொற்றிக் கொண்டது அவனை.

              தனது பேச்சும் நினைவில் இருக்க, “அவசரக்காரி.. என்ன செய்து வைத்தாளோ..” என்று உள்ளம் பதறியது வாசுதேவகிருஷ்ணனுக்கு.

               அந்த சிறிய ஊரில் இருந்த மூன்று கோவில்கள், குளக்கரை, வயல்வெளி என்று தேடி அலைந்து ஓய்ந்து போனவனாக அவன் வீடு திரும்ப, வீட்டில் ராகவன் அவனுக்காக காத்திருந்தார்.

               அவன் வீட்டிற்குள் நுழையவும் “நாச்சியார் எங்கே கண்ணா..” என்றார் தந்தை.

            என்ன பதில் சொல்ல முடியும் அவனால். வாசுதேவகிருஷ்ணன் தலைகுனிய, “ஏதாவது பேசு வாசு.” என்று கண்டிப்புடன் வினவினார் ராகவன்.

             “தத்தத்தெரியலைப்ப்ப்பா..” என்று மகன் கலங்கிய குரலில் இயம்ப, அதில் இன்னும் பயந்து போனார் ராகவன்.

               “என்ன நடந்தது வாசு.. உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா.. எங்கே போனா நாச்சியா.?” என்று மீண்டும் மகனிடம் கேட்க, மீண்டும் மௌனம் சாதித்தான் மகன்.

               “நான் சொன்னேன்ல.. இவன்தான் ஏதோ பண்ணி இருக்கான்.. எங்கேடா என் மருமக.?” என்று விசாலம் மகனை நெருங்க, “இரு விசாலம்.” என்று அவரை அடக்கி, மகனை மீண்டும் விசாரித்தார் ராகவன்.

               “ஏஏஏஏன்னால த்தான்.. ன்னன்னான் த்த்தான் வ்வ்வ்வ்வெளியே ப்ப்ப்போக சொன்ன்ன்ன்ன்ன்னன்.” என்று மகன் தடுமாற, பல ஆண்டுகளுக்குப் பின் தன் மகனை கைநீட்டி அடித்திருந்தார் விசாலம்.

               வாசுதேவகிருஷ்ணன் அன்னையின் அடியை வாங்கிக்கொண்டு அசையாமல் நிற்க, “நீ யாருடா அவளை வெளியே போக சொல்ல.. நீ முதல்முறை அவளை கைநீட்டி அடிச்சப்பவே உன்னை வீட்டை விட்டு துரத்தியிருக்கணும் நான். செய்யாம விட்டதுதான் தப்பா போச்சு..”

               “உனக்கு எங்கே இருந்து பொம்பளையை கைநீட்டுற பழக்கம் வந்துச்சு..”என்று அவர் மீண்டும் அவனை அடிக்க முற்பட, “விசாலம்.” என்று மனைவியின் கையைப்பிடித்து தடுத்தார் ராகவன்.

               “விடுங்க என்னை… தோளுக்கு மேல வளர்ந்துட்டான்.. பெரிய மனுஷன் ஆகிட்டான்ன்னு நீங்க நினைக்கவும்தான் முட்டாள்தனம் பண்ணிட்டு இருக்கான் இவன். என்ன நினைச்சுட்டு இருக்க நீ.. அவ கழுத்துல தாலி கட்டிட்டதால அவளை நீ என்ன வேணாலும் செய்யலாமா..”

             “என் தம்பி உசுரோட இல்ல, யார் கேட்பாங்கன்னு திமிர்ல ஆடிட்டு இருக்கியா.. நான் இன்னும் சாகல இல்ல.. உயிரோட தானே இருக்கேன்.. நான் கேட்பேன்.. என் மருமகளை வெளியே போக சொல்ல நீ யாருடா..?”

              “உனக்கு பொண்டாட்டியாகறதுக்கு முன்னமே என் மருமக அவ. அவளை எப்படி வெளியே போக சொல்வ நீ.. எதுக்குடா சொன்ன..?” என்று பெருத்த குரலில் பேசிக்கொண்டே அவர் மகனை நெருங்க, அவரின் பேச்சில் வெகுவாக காயப்பட்டான் வாசுதேவகிருஷ்ணன்.

             தவறு தன்மீது இருந்தாலும், பேசுவது அன்னையாக இருந்தாலும் இப்படிப்பட்ட பேச்சுக்களை விரும்பவில்லை அவன். அன்னையிடம் எதுவும் பேசாமல் அவன் வெளியே கிளம்ப, “வாசு.” என்று அவன்பின்னால் ஓடினார் ராகவன்.

            மகன் நிற்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான் இதற்குள். மாலை நான்கு மணி அளவில் பஞ்சாயத்து முடித்து வீடு திரும்பியவர்கள். இதோ இப்போது நேரம் ஆறைக் கடந்திருக்க, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவன் மனைவியை காணவில்லை.

           இந்த நிமிடம் வரை எங்கிருக்கிறாள் என்றும் தெரியவில்லை என்பதே வாசுதேவனைக் கொன்று கொண்டிருந்தது. அவன் அன்னை பேசியது எல்லாம் இந்த நிமிடம் நினைவிலேயே இல்லை. “எங்கே போயிருப்பா..” என்ற கேள்வியை ஈராயிரம் முறைக்கும் மேலாக அவன் இதயம் கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு பதில் தெரியாமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

            வண்டியை அதன்பாட்டிற்கு செலுத்திக் கொண்டிருந்தவன் கண்ணில் வழியில் இருந்த ஒரு விளம்பரப்பதாகை தென்பட, அதில் இருந்த ஆண்டாள் படம் அப்படியே நிறுத்தியது வாசுதேவகிருஷ்ணனை. வண்டியை ப்ரேக்கிட்டு நிறுத்தி விட்டவன் ஒரு முழு நிமிடம் யோசித்து நின்றான்.

            என்னவோ “திருமகள் நிச்சயம் ஆண்டாளிடம் தான் இருப்பாள்..” என்று உள்ளம் உறுதிகூற, சட்டென வண்டியை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு புறப்பட்டிருந்தான் அவன். அவன் ஊரிலிருந்து ஆண்டாள் கோவிலுக்கு முக்கால் மணி நேரம் பயணம். அரைமணி நேரத்தில் அந்த தூரத்தைக் கடந்தவன் வண்டியை வாசலில் நிறுத்தி கிட்டத்தட்ட கோவிலை நோக்கி ஓடினான் எனலாம்.

             அத்தனை வேகமாக கோவிலுக்குள் நுழைந்தவன் கண்கள் வேகமாக கோவிலை சலிக்க, எங்கேயும் தென்படவில்லை அவன் வாழ்க்கையானவள். முதலில் ஆண்டாள் சன்னதியில் நுழைந்தவன் அங்கு மனைவி இல்லை எனவும் கோவிலின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் விடாமல் அலசிக் கொண்டிருந்தான்.

             திரு அருகில் இருக்கிறாள் என்று அவன் உள்ளுணர்வு அடித்துக் கூற, மூன்று முறை கோவிலை சலித்து முடித்து நான்காம் முறையாக பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தான் அவன். மனம் “தாயே.. அவளை இனி திட்டவோ அடிக்கவோ மாட்டேன்.. உன் மேல சத்தியம். அவளை என் கண்ணில் காட்டிடு..” என்று ஆண்டாளிடம் அவசரவேண்டுதல் வேறு விடுத்துக் கொண்டிருந்தது.

             அவன் பிரகாரத்தை சுற்றி வந்து ஓய்ந்தவனாக மீண்டும் ஒருமுறை ஆண்டாள் சன்னதிக்குள் நுழைந்தான் வாசுதேவகிருஷ்ணன். எதுவும் கேட்க தோன்றாமல் கருவறையில் இருந்தவளை சில நிமிடங்கள் வெறித்து நோக்கியபடி நின்றவன் கண்ணில் துளிர்த்த ஒருதுளி நீரை சுண்டிவிட்டு திரும்ப, இரண்டு சிறுகுழந்தைகள் ஒளிந்து விளையாட கையடித்துக் கொண்டிருந்தது.

               அதிலிருந்த பெண் குழந்தை ஆண்பிள்ளையை தூணில் சாய்த்து கண்ணை மூட சொல்லி, வேகமாக ஓடி மறைய, தன்னையறியாமல் வாசுதேவனின் கண்கள் அவளைப் பின்தொடர்ந்தது. ஓடிய அந்த குழந்தை அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்த தூணின் பின்புறம் சென்று மறைய, சென்ற வேகத்தில் ஓரடி பின்னே நகர்ந்து நின்றது குழந்தை.

          “சாரி ஆன்ட்டி.” என்று மன்னிப்பையும் வேண்ட, ஏதோ உந்துதலில் வேகமாக அவளை நெருங்கினான் வாசுதேவகிருஷ்ணன். அங்கே அழுது சிவந்த கண்களோடு தூணோடு தூணாக ஒடுங்கியிருந்தாள் அவன் மனைவி.

          அந்த குழந்தை “சாரி ஆன்ட்டி தெரியாம மிதிச்சிட்டேன்.. பாப்பா சாரி..அழாதீங்க..” என்று பயந்து அழ தொடங்கவும், “இல்லடா.. ஆன்டிக்கு நீ மோதியது வலிக்கல ராஜாத்தி.. ஆன்ட்டி நல்லா இருக்கேன்டா.” என்று வாசுதேவகிருஷ்ணனை கவனிக்காமல் குழந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள் திருமகள் நாச்சியார்.

           அந்த பிஞ்சு அவள் விளக்கத்தில் சமாதானம் ஆகி, “சாரி ஆன்ட்டி..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட, அவள் சென்ற திசையில் திரும்பியவள் வாசுதேவகிருஷ்ணனைப் பார்த்து அதிர்ந்து நின்றாள். அவன் தேடி வரக்கூடும் என்றெல்லாம் சிந்திக்கவே இல்லை அவள்.