திருமகள் நாச்சியார் கட்டிலில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் அவள் முகம் பார்த்து நின்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.எதையோ நினைத்து அவள் கண்கள் விடாமல் கலங்கி கொண்டே இருக்க, அசையாது அவளை வெறித்திருந்தான் வாசுதேவன்.
திரு சில நொடிகளில் தன்னை மீறி தேம்பியவள் அடக்கமுடியாமல் கணவனை சட்டென எட்டி கைகளால் வளைத்துக் கொள்ள, அவளுக்கு வாகாக அவளை நெருங்கி நின்றான் வாசுதேவகிருஷ்ணன். அவன் வயிற்றின் மேல்பகுதியில் முகம் புதைத்தவள் வெடித்து அழ, அவள் உடல் லேசாக நடுங்கியபடியே இருந்தது.
வாசுதேவன் அவள் முதுகில் இரு கைகளையும் கோர்த்து நின்றபடியே அவளை அணைத்துப்பிடிக்க, உடலின் நடுக்கம் மெல்ல குறைய, இன்னும் அவனிடம் ஒண்டினாள் மனைவி.
வாசுதேவன் மெல்லிய குரலில் அவள் காதோடு “என்ன திரும்மா..” என்று அன்புடன் விசாரிக்க,
சட்டென கிள்ளையாய் கேவி அழுதது அவன் கிளி. அழுகையினூடே “பயந்துட்டேன் மாமா…” என்றாள்.
“என்னால மறக்கவே முடியல. எவ்ளோ கேவலமா பேசினான் தெரியுமா.. நீங்க ஏன் வீட்டுக்கு வரமா இருந்திங்க. உங்களாலதான் எல்லாம்..” என்றவள் அவனை கோபத்துடன் தள்ளிவிட, சட்டென பூத்துவிட்ட ஒரு புன்னகையுடன் ஓரடி தள்ளி நின்றான் வாசுதேவன்.
அவன் சிரிப்பில் திரு விழிக்க, “ச்சாரி…” என்றான் வாசுதேவன்.
“ஏன் போன் எடுக்கல..” என்று மீண்டும் அவள் கேட்க,
“ண்ண்ன்நீ ப்போன் ப்பண்ணிட்டே இருந்தது ப்ப்ப்ப்பிடிச்சது..” என்றான் தடுமாற்றத்துடன்.
திரு அவனை முறைக்க, “க்க்க்க்கோபம் ப்ப்போய்டுச்சா..” என்றான் மீண்டும்.
“கோபம் போக என்ன செஞ்சீங்க..” என்றாள் திரு..
“ண்ண்ண்ன்நிறைய ப்ப்பேசினேன் த்திரு.” என்றவனை என்ன செய்யலாம் என்பது போல் திரு கடுப்புடன் நோக்க,
“ஏஏஏஏஏஎன்ன ப்ப்பண்ணனும்…” என்றான் மீண்டும்.
“என்னை ஏன் அடிச்சீங்க..” என்று திரு சட்டென கோபம் கொள்ள,
“அஆஆஆதுதான் க்க்கோபமா..” என்றான் வாசுதேவன்.
அவள் வாய்திறக்காமல் தலையை அசைக்க, “அதுக்கு ப்ப்ப்பப்பேசாம இஇஇருப்பியா..” என்று வாசுதேவன் கோபம் கொள்ள,
“ஆமா.. பேசமாட்டேன்..” என்று அவனுடன் பேசியவளைக் கண்டு, இதழ்பிரிக்காமல் சிரித்துக் கொண்டிருந்தான் வாசுதேவன்.
“சிரிக்காதிங்க.” என்று அதற்கும் அவள் மிரட்ட, அதற்கும் சிரிப்புதான்.
அவளின் கள்ளமில்லா குணம் அவனைப் பெரிதும் ஈர்க்க, இப்படிப்பட்டவளிடம் என்னடா உனக்கு வீம்பு என்று மனம் இடிக்க, தன் மனைவியை நெருங்கி அணைத்தவன் மீண்டும் ஒருமுறை “ச்ச்ச்சாரி..” என்றான் வெளியே கேட்காத குரலில்.
திருவிற்கு அவன் பேச்சில் முகம் மலர்ந்துவிட, அவன் இன்று அதிகம் திக்கி பேசுவதும் அப்போதுதான் கவனத்தில் விழுந்தது.
“ஏன் கஷ்டப்படறீங்க.. பேச ரொம்ப கஷ்டமா இருக்கா..” என்று பதறியவளாக அவள் வினவ, மெல்ல தலையசைத்து கழுத்து நரம்புகளை நீவிக்கொண்டான் வாசுதேவன்.
“என்னாச்சுப்பா..” என்றவள் குரல் மீண்டும் கலங்க,
“ஒன்னுமில்ல..” என்பதாக தலையசைத்து, “அப்பப்போ அதிகமா பேச முயற்சி பண்ணா வலிக்கும்..” என்றான் சைகையில்.
“பேசினா வலிக்குமா..” என்று நொந்தவள் “என்கிட்டே முன்னாடியே சொல்றதுக்கென்ன..” என்று கோபம் கொள்ள, “என்ன செய்து விடுவாய் நீ.” என்று மனைவியைப் பார்த்தான் கணவன்.
“இதுக்கு முன்ன இப்படி ஆனதில்லையே..” என்று அவளே மீண்டும் குழப்பிக்கொள்ள, தனது டைரியை எடுத்துக்கொண்டு அவள் எதிரில் அமர்ந்தான் வாசுதேவன்.
“பதட்டமோ, கோபமோ அதிகமா இருந்தா வலிக்கும்.. பேச்சும் அதிகமா திக்கும்.. எப்போவாவது நடக்கிறது தான்.” என்று அவன் எழுதிக்காட்ட, அவளுக்கு பலமாக வலி கொடுத்தது அவன் எழுத்துகள்.
இத்தனை நாளும் அவனை பேச சொல்லி படுத்தி எடுத்தவள் இன்று வார்த்தை வராமல் கண்ணீர் வடிக்க, “இங்கே வா.” என்பதாக மெல்ல தலையசைத்து அவளை அருகில் அழைத்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவள் நெருங்கி வரவும், அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் “எப்போதும் வலிக்காது திரு. அழாத..” என்று மீண்டும் எழுதி அவளிடம் நீட்ட, “சாரி மாமா..” என்று மீண்டும் அவன் புஜத்தை கண்ணீரால் நிறைத்தாள் திரு.
“த்திரு..” என்று சத்தமாகவே வாசுதேவன் அதட்ட, “பேசாதீங்க..” என்று அவன் வாயைப் பொத்தினாள் மனைவி.
“பேச வேண்டாமா..” என்று கணவன் கண்களால் கேள்வி தொடுக்க,
“நிறைய பேசணும்.. ஆனா, உங்களுக்கு வலிக்கும்னா வேண்டாம்…” என்றவள் அவனை கழுத்தோடு கட்டிக்கொள்ள, அவள் அன்பில் அமைதியாக அவளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொண்டிருந்தது அவன் மனது.
தன் முகத்துக்கு பக்கவாட்டில் தெரிந்த அவள் கன்னத்தில் வாசுதேவன் முத்தமிட, லேசாக கூசி சிலிர்த்து அடங்கினாள் திரு. அவள் காதுமடல் அருகே இருந்த பூனைமுடிகள் மயிர்கூச்சத்தால் சிலுப்பி நிற்க, அதை ஆவலோடு தொட்டு பார்த்தவன் அவள் காதுமடல்களின் மீது மீண்டும் முத்தமிட, இருவருக்குமே மயக்கம் மீதூறிய கணங்கள் அவை.
கன்னத்திலும், காதிலும் இதழ்பதித்து மீண்டவன் அவள் தாடையை தொட்டு இதழ்களை தொடும்வேளையில் பட்டென விலகினாள் திரு. வாசுதேவன் கையில் கிடைத்ததை தொலைத்த குடியானவன் போல் விழிக்க, “காப்பு கட்டியிருக்கு மாமா..” என்று வேகமாக நினைவுபடுத்தினாள் மனைவி.
உச்சம் தொட்டு கொண்டிருந்த உணர்வுகள் சட்டென அடங்க, மனைவியை செல்லமாக முறைத்தான் கணவன்.
“சாரி மாமா..” என்று திரு மீண்டும் அவனை கட்டியணைக்க, ஒரு விரல் நீட்டி அவளை தடுத்தவன் “கிட்ட வந்த அப்புறம் எதுக்கும் நான் பொறுப்பில்ல..” என்று சைகை செய்ய, வேகமாக விலகி அமர்ந்தவளை விளையாட்டாக அடிக்க கையோங்கியவன் அவள் தலையில் தட்டி “இங்கே இருந்தா தப்பாகிடும்.. வெளியே இருக்கேன் வா.” என்று அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
திருமகளுக்கு அவன் ஓட்டத்தில் அப்படி ஒரு சிரிப்பு. தனக்கான தன் கணவனின் தேடல் யாருக்குத்தான் இனிக்காது. விலகலும் விருப்பமாகிப் போனது அந்த நிமிடம்.
உடல் வெகுவாக அசந்து போனதாக உணர்ந்தவள் குளித்து சேலையை மாற்றி வெளியே வர, அவள் கட்டியிருந்த அடர்சிவப்புநிற ஷிபான் சேலை அவளை இன்னும் அழகுபடுத்த, வாசுதேவனின் நிலை இன்னும் கவலைக்கிடமாகியது.
“என்ன நினைச்சு இதெல்லாம் செய்யுறா இவ..”என்று பதறியவன் வேலை இருப்பதாக சைகை செய்து ஓடியேவிட்டான். திரு வேகமாக சென்றவனை புரியாமல் பார்த்துவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள்.
ஆனால், வாசுதேவனின் சோதனை அத்துடன் முடியவில்லை என்பதாக அடுத்த இரண்டு மணிநேரத்தில் அவனை வீடு வர சொன்னார் விசாலம். பத்து நாட்கள் கழித்து அன்னை அழைத்திருக்க, அதில் மகிழ்ந்தவன் வேகமாகவே வீடு வந்து சேர்ந்திருந்தான்.
மகன் வீட்டிற்குள் நுழையவும், “என்னவோ மனசு சங்கடமா இருக்கு கண்ணா.. நீ திருவைக் கூட்டிட்டு போய் ஆண்டாளைப் பார்த்திட்டு வந்திடு..” என்றார் விசாலம்.
அன்னையிடம் சரியென்பதாக தலையசைத்தவன் மனைவியை தேட, பூஜையறையில் இருந்து வெளிப்பட்டாள் மனைவி. அரைமணி நேரத்திற்கும் மேலாக பூஜையறையில் நின்றவள் பூஜையை முடித்து வெளியே வர, நெற்றியில் ஆங்காங்கே போட்டு பொட்டாக வியர்த்து போயிருந்தது.
கன்னத்திலும், கழுத்திலும் வழிந்த நீர்துளிகளும், லேசாக நீர்பட்டு வழிந்து இருந்த குங்குமமும், தலையில் வைத்திருந்த இருவாட்சியும் மூச்சடைக்கக் வைத்து வாசுதேவனை.
“அடிப்பாவி.” என்று உள்ளுக்குள் பதறியவன் வெளியே எதுவும் பேச முடியாமல் “வா..” என்று தலையசைக்க, தங்கள் அறைக்கு சென்றவள் முகத்தை லேசாக ஒழுங்குப்படுத்திக் கொண்டு அவனுடன் வெளியே கிளம்பினாள்.
கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி இருவரும் தம்பதி சமேதராக கோவிலுக்குள் நுழைய, அங்கிருந்த பலரின் கண்களும் அவர்கள் மீது ஒருமுறையாகினும் பதிந்து மீண்டது.
வாசுதேவனின் கையோடு ஒரு கை பிணைந்திருக்க, மற்றொரு கையில் பூஜைகூடை. முகத்தில் வாசுதேவனின் அருகாமையில் தானாகவே வந்து அமர்ந்துவிட்ட வெட்கப்புன்னகை என்று ஜொலித்துக் கொண்டிருந்தாள் திருமகள்.
அத்தனை இதமான மனநிலையில் இருந்தனர் இருவரும். மதியம் நடந்த நிகழ்வுகள் இருவருக்கும் மறந்தே போயிருக்க, அந்த நிமிட ஆனந்தத்தை அனுபவிக்கத் தொடங்கியிருந்தனர்.
ஆண்டாள் சன்னதியில் வணங்கி முடித்து அரங்கனையும் தரிசித்து வெளியே வந்தவர்கள் கோவிலைச் சுற்றி வர, கோவில் வளாகத்தில் இருந்த பலகாரக்கடையை நெருங்கவும் தானாக கால்கள் தடுமாறியது இருவருக்கும்.
வாசுதேவனுக்கு அன்று அவள் தூக்கியெறிந்தது நினைவுக்கு வர, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அந்த கடையை கடந்துவிட முனைந்தான் அவன். ஆனால், முன்னே நடந்து விட்டவனின் கையை பின்னிருந்து திரு இழுக்க, அடுத்த அடி எடுத்து வைக்காமல் நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
ஏதும் அறியாதவனாக மனைவியைத் திரும்பி பார்த்தவன் “என்ன..” என்று தலையசைக்க, அவனின் நாடகத்தில் கோபம் வரப்பெற்றவள் அவன் கையை விட்டு வேகமாக முன்னே நடந்துவிட்டாள். முகமும் முணுக்கென கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது.
வாசுதேவகிருஷ்ணன் அவள் செயலில் சத்தமாக சிரித்தாலும், அவளை பின்தொடராமல் அந்த பலகாரக்கடையை நோக்கி நடந்தான். திரு பிரகாரத்தின் முன்பக்கம் வந்து அமர்ந்துவிட, கையில் அவளுக்கு பிடித்த பால்கோவாவுடன் வந்து அவள் அருகில் அமர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
தன் கையிலிருந்த பொட்டலத்தை அவளிடம் நீட்ட, கணவன் மீது கோபத்தில் இருந்தவள் முகத்தை திருப்ப, அவள் செயலில் சிரித்தவன் அவள் கையிலிருந்த கூடையில் இனிப்பை வைத்துவிட, “ரொம்ப பண்றிங்க..” என்று அவன் கன்னத்தை கிள்ளி விட்டாள் மனைவி.
வாசுதேவன் பதறியவனாக தங்களை சுற்றி பார்வையைச் சுழற்ற, “ஹலோ.. என் புருஷன் கன்னத்தை தானே கிள்ளினேன்.. தப்பில்ல..” என்றாள் ஆணவமாக.
அவளை முறைத்து தலையில் தட்டியவன் “எழுந்துக்கோ..” என்று சைகை செய்து கொண்டே எழுந்துவிட்டான். திரு சிறு சிரிப்புடன் அவன் பின்னே நடக்க, முகம் நிறைந்த புன்னகையை மறைத்துக் கொண்டே முன்னால் நடந்தான் வாசுதேவன்.
அன்று இரவிலும் அதே நிலை நீடிக்க, மனதை சூழ்ந்திருந்த மயக்கத்துடன் தான் நடமாடிக் கொண்டிருந்தாள் திருமகள் நாச்சியார். அன்று இரவு உணவு முடிந்து அவரவர் அறைக்கு செல்ல, விசாலம் மருமகளை அழைத்தவர் “என்னோட படுத்துக்கோ திரு..” என்றார் அவள் முகம் பாராமல்.
திருவுக்கு அவர் கூற வருவது புரிந்து போக, “நைட்டி எடுத்துட்டு வரேன் அத்தை..” என்று அறைக்குள் நுழைந்தாள் அவள்.
அறையின் வாசலில் வைத்தே இருவரும் பேசிக்கொண்டதால் அறைக்குள் அமர்ந்திருந்த வாசுதேவனுக்கு இருவர் பேச்சும் கேட்டிருக்க, அவள் அறைக்குள் நுழையும் நேரம் விரிந்து சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.
சைகையால் இல்லாமல் பார்வையால் அவன் மயக்கத்தை வெளிப்படுத்த, கட்டிலின் மீதிருந்த தலையணையை எடுத்து அவனை மொத்தினாள் திரு.
வாசுதேவன் சிரித்துக்கொண்டே “போடி..” என்று சத்தம் வராமல் வாயசைக்க, அதற்குள் “நாச்சி..” என்று குரல் கொடுத்திருந்தார் விசாலம்.
“என் மாமியாவோட..” என்று சலிப்புடன் உடையை மாற்றி வந்தவள் நிதானமாக அறையை விட்டு வெளியேற, பொங்கிப் பெருகும் ஏக்கத்தை பார்வையால் அவளுக்கு கடத்தியபடி அமர்ந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திரு சிரிப்புடன் தலையசைத்து அவனிடம் விடைபெற, அவள் அலப்பறையில் சிரித்துக் கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அதே சிரிப்புடன் வெளியே வந்த திருமகளோ ‘எதுக்கு இப்போ கத்திட்டு இருக்கீங்க.. நானும் இதே ஊர்ல பிறந்தவை தானே.. சுத்தபத்தமா இருக்கணும்னு தெரியாதா எனக்கு..” என்று விசாலத்தை மிரட்ட
“அடியேய்… உன் வயசை தாண்டி வந்தவ தாண்டி நான்.. உன்னை மாதிரி எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்.. போய் படுடி..” என்று அவளுக்கு மேலாக அதட்டினார் மாமியார்.
“என்ன பார்த்த நீ.. ரொம்ப பண்ற அத்தை..” என்று திரு கோபம் கொள்ள,
“உங்க ரெண்டு பேர் பார்வையும் சரியில்ல.. அவனும் ராத்திரியோட ராத்திரியா வீட்டுக்கு வர்றவன் இன்னிக்கு உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.. வம்பு பண்ணாம வந்து என்னோட படு.”என்று அதட்டி அவளை இழுத்துச் சென்றுவிட்டார் விசாலம்.
அந்த குடும்பம் நிம்மதியாக உறங்கச் செல்ல, அடுத்தநாள் காலையில் திருமகளின் வீட்டில் அதிகாலை பால் கறக்கும் வேலைகளை முடித்து வந்த ராகவனின் முகம் நிம்மதியைத் தொலைத்திருந்தது.
வந்தவர் தன் மகனை அழைத்து விவரம் கூற, வாசுதேவன் முகம் பெரிதாக அதிரவெல்லாம் இல்லை. தந்தை கூறிய செய்தி அவன் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தது தான்.
முரளி விட்டாலும் கலியமூர்த்தி நிச்சயம் விஷயத்தை பெரிதாக்காமல் விடமாட்டார் என்று தெரிந்தே இருந்தது அவனுக்கு. ஆனால், பஞ்சாயத்தில் சென்று நிற்பார் என்று அவனும் நினைக்கவில்லை.
இப்போதும் “என்ன.. வரட்டும் பார்த்துக்கலாம்..” என்ற எண்ணம்தான் வாசுதேவகிருஷ்ணனுக்கு. ஆனால், பஞ்சாயத்து என்றால் கலியமூர்த்தி நிச்சயம் அவன் குடும்பத்தையும் உள்ளிழுக்கத்தான் பார்ப்பார் என்ற நிதர்சனமும் புரிந்தது அவனுக்கு.
என்னவோ, மனைவியிடம் அவன் தகாத முறையில் நடந்ததை பஞ்சாயத்தில் வைத்து பேச விரும்பவில்லை அவன் மனம். “என்ன இப்போ.. அடிச்சேன்னு தானே புகார் கொடுப்பான்.. நான் போதும் அவனுக்கு.” என்ற எண்ணம்தான்.
எக்காரணத்தைக் கொண்டும் வீட்டு பெண்களின் பெயரை இதில் இழுக்கக்கூடாது என்பதில் அவன் தெளிவாக இருக்க, சாரதியை அழைத்து கலியமூர்த்தியின் புகாரை விசாரிக்கும்படி கூறினான்.
முன்விரோதத்தால் வாசுதேவகிருஷ்ணன் முரளியை அடித்து, கையை உடைத்துவிட்டதாக தான் புகார் கொடுத்திருந்தார் அவரும். மெல்ல சிரித்துக் கொண்டவன் “நீங்க ரெண்டு பேரும் வரவேண்டாம்.” என்று பெற்றவளையும், கட்டியவளையும் எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு அழைப்பு வந்துவிட்டது.
வாசுதேவகிருஷ்ணன் பதட்டத்தை முகத்தில் காண்பிக்காமல் “வீட்ல இருங்க..” என்று இருவரிடமும் சைகை செய்து, பஞ்சாயத்திற்கு கிளம்பியிருந்தான்.
அவன் கிளம்பியபின்னும் கூட, திருமகளுக்கு அவனை குறித்த சிந்தனைகள் தான். நேற்று அவன் பேசுவதற்கு சிரமப்பட்டது நெஞ்சை கசக்க, “என்ன சொல்வார் இவர்.. வாயைத் திறக்க மாட்டாரே..” என்று கணவனைக் குறித்துதான் கவலை கொண்டாள் அவள்.
வாசுதேவகிருஷ்ணனும் அப்படிப்பட்டவன் தானே. இதுவரை அவளைத்தவிர பிறரிடம் அவன் வாய் திறக்க முற்படவே இல்லையே. என்னவோ கோபத்தில் ரகுவை மட்டும் பேசிவிட்டிருந்தான். ஆனால், ஊர்சபையில் பொது பஞ்சாயத்தில் அவன் வாய்திறந்து பேசுவானா என்று கலங்கியது அவள் நெஞ்சம்.
மனம் நிலையிழந்து தவித்துக் கொண்டிருக்க, அடுத்த அரைமணி நேரத்தில் சாரதி அழைத்துவிட்டான் அவளை.