ரஹ்மான் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். ரஹ்மான் மட்டும் வீட்டிலில்லை. ஷஹீராவின் வீட்டிலிருந்து அஸ்ரப்போடு கிளம்பிச்சென்றவன் இன்னும் வீடு வந்து சேர்ந்தானில்லை.
பெரியவர்கள் ரஹ்மான் செய்ததை நம்ப முடியாமல் ஆளாளுக்கு அதை பற்றியே பேசிக்கொண்டிருக்க, முற்றத்தில் அமர்ந்திருந்த இளசுகள் ரஹ்மானுக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கொண்டிருந்தனர்.
“அன்னைக்கி அவ்வளவு உருகி உருகி லவ் ஸ்டோரி சொன்னவன் இப்படி பண்ணி இருக்க வாய்ப்பில்லப்பா..” வசீம் சொல்ல
ஜமீலாவும் ரஹ்மானும் பானுவும் பேசிய பின்புதான் ரஹ்மான் கல்யாணத்தை நிறுத்த சொன்னதாக சொல்ல
“என்ன நடந்திருக்கும்னு எனக்கு புரிஞ்சி போச்சு” பாஷித் எல்லாம் அறிந்தவன் போல் யோசனைக்குள்ளானான்.
“சொல்லுடா… முந்திரி கொட்ட” ஜமீலா அவன் காதை திருக்கியவாறே கேட்டாள்.
“பானு மைனி காலேஜ் முடிஞ்ச பிறகு கல்யாணத்த வச்சிக்கலாமான்னு கேட்டிருப்பாங்க. நாநாவும் எல்லாம் பேசி முடிச்சாச்சே இப்போ என்ன பண்ணுறதுனு வாசலுக்கு வந்து மைனியோட பேச்ச தட்ட முடியாம, என்ன சொல்லுறதுனு புரியாம உளறி கொட்டி கல்யாணத்த நிறுத்த சொல்லி அரைகுறையா சொல்ல, இடைல பாஞ்சு அந்த சிடுமூஞ்சி முபாரக் ஏதோ பேச டென்ஷன்ல இவரு வேற கத்திட்டாரு. ஆளாளுக்கு இவரை வில்லனாக்கி பேசி கடைசில மைனி கிட்ட கேட்டா அவங்க அவங்களோட ஆசையையே சொல்லிட்டாங்க. எங்கட நல்லவரு, வல்லவரு தான் கெட்டவனானாலும் பரவால்ல, மைனி ஆசைப்படி நடந்தா போதும்னு அமைதியா இருந்திருப்பார்”
“எப்படிடா… கிட்ட இருந்து பார்த்தா மாதிரியே சொல்லுற?” வசீம் கேட்க
“கண்டிப்பா இப்படித்தான் நடந்திருக்கும்” ஜமீலா அடித்து சொல்ல
“அவசரப்பட்டு பேசி அவன் மனச கஷ்டப்படுத்திட்டாங்களே! முதல்ல இந்த முபாரக்க ஒரு வழி பண்ணனும்” வசீம் பொரிய
“அத அவன் தங்கச்சியே பாத்துப்பான். வீட்டுல பெரியவங்கள எப்படி சமாதானப்படுத்துறது? சொல்லி புரிய வைங்க” ஜமீலா வஸீமை உள்ளே இழுத்து செல்ல பாஷித் அஸ்ரப்புக்கு அழைப்பு விடுக்கலானான்.
அஸ்ரப் தன் வீட்டுக்கு ரஹ்மானை அழைத்து வந்து ஏதாவது சாப்பிடுறாயா என்று கேட்க மறுத்தவன் கட்டிலில் சுருண்டு படுத்துக்கொள்ள அஸ்ரபும் ரஹ்மானிடம் எதுவும் கேட்காமல் சூடாக டீ போட்டு தரும்படி அன்னையிடம் கூறியவன் வலூக்கட்டாயமாக ரஹ்மானுக்கு கொடுக்க அதை சாப்பிட்டவன் எதுவும் பேசாமல் மீண்டும் படுத்துக்கொள்ள, அஸ்ரப் அவனை தொந்தரவு செய்யாது அறையை சாத்தி விட்டு நகர்ந்தான்.
ரஹ்மானுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. என்னெல்லாமோ நடந்து விட்டது. எந்த நாளும் ஏதாவது ஒரு புதுப்பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. மனஉளைச்சலுக்கு ஆளான தந்தை. தன்னிடம் பேசாதே என்று சொன்ன அன்னை. பானுவுக்கு உண்மையிலயே தன்னை பிடிக்கவில்லையா அல்லது படிக்க முடியாமல் போய் விடும் என்று கோபத்தில் பிடிக்கவில்லை என்றாளா? திருமணத்துக்கு எதற்கு சம்மதித்தாள். ஒன்றும் புரியவில்லை. அவளிடம் தெளிவாக பேச வேண்டும். குடும்பத்துக்காக சம்மதித்திருந்தால் இந்த திருமணம் நடக்காது என்று கூற வேண்டும்”
“திருமணம் நடக்காதா? அப்போ அவ யாரை கல்யாணம் செய்தாலும் உனக்கு பரவால்லையா? இல்ல நீதான் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாயா?” மனம் கேள்வி எழுப்ப
“அவதான் படிச்சு முடியும் வர கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லுறாளே! என் காதலை புரியவைக்க டைம் இருக்கு” மனதில் ஆயிரம் சிந்தனையில் உழன்றவன் வீட்டுக்கு செல்லலாம் சென்றால் உண்மையில் அன்னை பேசாமல் இருந்து விடுவார்களோ என்பது ஞாபகத்தில் வர மனம் கசந்தது.
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அஸ்ரப் “ஏன் டா… நல்லவனே! கோபத்தை கட்டு படுத்து, கட்டு படுத்துனு சொன்னா கேட்டியா இப்போ அந்த முபாரக் பேசினத்துக்கு திருப்பி பேசப்போய் உன் வீட்டுல நீ கெட்டவனாய் நிக்குற” அஸ்ரப் திட்டியவாறே வர
எழுந்தமர்ந்த ரஹ்மான் அமைதியாக இவன் என்ன புதுசா கத சொல்லுறான் எனும் விதமாக பாத்திருந்தான்.
“என்ன முழிக்கிற? தங்கச்சி படிச்சி முடிஞ்சி கல்யாணத்த வச்சிக்கலாம்னு சொன்னதுல என்ன டா தப்பிருக்கு? அத சொல்ல வேண்டியது தானே! பெரியவங்க பேசி முடிச்சிட்டாங்கனு எப்படி சொல்லுறதுன்னு முழிக்க போய் அந்த முபாரக் பய வீண் பிரச்சினையை உண்டு பண்ணிட்டான். நீயும் கோபத்துல பேசிட்டே கடைசில உன்ன தானே கெட்டவனாகிட்டாங்க. சரி வா வீட்டுக்கு போலாம் எல்லாரும் உனக்காக வைட்டிங்”
அஸ்ரப் சொன்ன விஷயங்களை கிரகித்த ரஹ்மான் கெட்டதுளையும் ஒரு நல்லது நடந்திருக்கு. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் எப்படியோ உம்மா பேசினா போதும் என்று எண்ணியவன் “ஆமா இத யாரு உன் கிட்ட சொன்னாங்க”
“எல்லாம் உன் தம்பிதான் கண்டு புடிச்சி உன் வீட்டுல சொல்லி இருக்கான். உன்ன புரிஞ்சிக்காம பேசினத்துக்காக எல்லாரும் வருத்த படுறாங்களாம். வா போலாம்”
“நீ இருடா நைட்டாகிருச்சு நான் போறேன்” என்ற ரஹ்மான் அஸ்ரப்பின் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
ஜமீலா அழைத்து பேகத்திடம் விஷயத்தை கூறி இருக்க ரஸீனாவிடம் மன்னிப்பு கேட்ட பேகம் முபாரக்கை திட்டி தீர்க்கலானாள்.
“ஏன் டா… நீ இப்படி இருக்க? மாப்புள ஷஹீய பத்தி யோசிச்சுதானே பேச வந்தாரு. கோபப்பட்டு பேசி, அவரையும் கோபப்படுத்தி கடைசில அவரை அவங்க குடும்பத்து ஆளுங்க முன்னாடியே குத்தவாளியா நிக்கவச்சி. நீ பண்ணுறது நல்லா இல்ல முபாரக். கோபத்தை குறை. சந்தோசமா நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சி. யாரு கண் பட்டதோ இப்படி ஆகிருச்சே யா அல்லாஹ்” பேகம் புலம்பிக்கொண்டே இருக்க,
தங்கையை முறைத்த முபாரக் “ஏன் டி… படிச்சு முடிஞ்ச பிறகு கல்யாணத்த வைக்கலாம்னு உம்மா கிட்ட சொல்லுறது, இல்ல என் கிட்ட சொல்லுறது. அதென்ன அவன் கிட்ட சொல்லி இருக்க? இப்போவே அவனுக்கு சப்போர்ட்டா?” என்றவன் ஷஹீயை அடிக்க கையை ஓங்க
முபாரக்கை தடுத்த பேகம் “ஏன் டா… எப்போவாச்சும் அவ கிட்ட அன்பா பேசி இருக்கியா? எப்போ பாத்தாலும் அடிக்கிற. பயத்திலையே அவ உன் கிட்ட பேச மாட்டா. அதான் உன் கிட்ட சொல்ல? எனக்கும்தான் படிப்பை பத்தி தெரியாது. கட்டிக்க போறவன் கிட்ட சொன்னது குத்தமா? இப்போ அது இல்ல பிரச்சினை. உன்னால நடந்த பிரச்சினைக்கு நாளைக்கு காலையிலையே மாப்புளைய சந்திச்சு மன்னிப்பு கேக்குற” பேகம் கறாராக சொல்ல தங்கையை முறைத்த முபாரக் தனது அறைக்குள் நுழைந்தான்.
ஷஹீராவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு ரஹ்மானை சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்காக அன்னை கதறும் பொழுது அமைதியாக பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியுமா? ரஸீனா மாமி கெஞ்சலாக கேட்கும் பொழுது எனக்கென்னன்னு இருக்க மனம் வரவில்லையே! நாளைக்கு நவ்பர் மாமாக்கு ஏதாவது ஆனா அந்த ரஹ்மான் என்னதான் குத்தம் சொல்வான். அது மட்டுமா அவனை கல்யாணம் பண்ணா தானே கிட்ட இருந்தே டாச்சர் பண்ண முடியும். இதெல்லா காரணத்துக்கும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா அவன் பெரிய தியாகி ஆகிட்டான். எவ்வளவோ நல்லவனா நீ? நீ என் கிட்ட வந்து பேசின அன்னைல இருந்து என் நிம்மதி போச்சு, நாநா திட்டிகிட்டே இருக்காங்க. உம்மா அழுது கிட்டே இருக்காங்க. உன்ன என்ன செய்யலாம்? ஏதாவது செய்யணுமே” ஷஹீயின் மனம் தாறுமாறாக சிந்திக்க ரஹ்மானை பற்றி துளியளவேனும் நல்ல விதமாக சிந்திக்க தோணவே இல்லை.
வீடு வந்த ரஹ்மானை ரஸீனாவை தவிர மற்ற அனைவரும் வாசலில் இருந்தே வரவேற்றனர். வந்தவன் தம்பியைத்தான் கட்டிக்கொண்டான். பேச வார்த்தை வரவில்லை. கண்கள் கலங்கி இருக்க அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருந்தனர் அனைவரும்.
“ஏன் பா ஒரு வார்த்த சொல்லி இருந்தா இவ்வளவுதூரம் பேச்சு வந்திருக்காதே! என் கையாள உன்ன அடிச்சிட்டேனே!” நவ்பர் பாய் கதற தந்தையை கட்டிக்கொண்டவன் அவரை சமாதானப்படுத்த
“நீங்க அடிச்ச அடில திக்குமுக்காடி என்ன பேசுறதுன்னு சிலையாகிட்டானோ என்னமோ” பாஷித் சிரிக்க
“உம்மா எங்க?” அன்னையை கண்களால் தேடியவாறே ரஹ்மான்
“அவங்க இன்னும் உன்மேல கோபமாத்தான் இருக்காங்க. உள்ள போய் சமாதானப்படுத்து” தம்பியை உள்ளே செல்லுமாறு சைகை செய்தாள் ஜமீலா.
உள்ளே சென்றவன் அன்னையை தேட தொழுகையை முடித்துக் கொண்ட ரஸீனா தொழும் பாயில் அமர்ந்து ஓதிக்கொண்டிருந்தாள். கதவருகே நின்று அன்னையை பார்த்திருந்தவன் அமைதியாக நின்றிருக்க நிழலாடுவதைக் கண்டு ஓதுவதை நிறுத்தி தலையை உயர்த்தி பார்த்த ரஸீனா குர்ஆனை மூடி வைத்தவாறே
“வா பா… வந்து சாப்பிடு”
அன்னை தன்னோடு பேசிய சந்தோசத்தில் ரஸீனாவை தூக்கி தட்டாமாலை சுற்ற
“ஏய்.. விடு பா…” என்று கத்தியவள் மகனின் தோளில் அடிக்க
“எங்க நீங்க என் கிட்ட பேச மாட்டீங்களோனு பயந்துட்டேன்” கீழே இறக்கியவாறு அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டான் ரஹ்மான்.
“உண்மை என்னனு தெரிஞ்சதால பேசுறேன் ஆனாலும் உன் மேல கோபமாத்தான் இருக்கேன். உன் கோபத்தால் வார்த்தையை விட்டு வீண் பிரச்சினை உருவாகி வாப்பா உன்ன அடிச்சி. என்னெல்லாமோ நடந்து போச்சு” ரஸீனா கோபமாகவே சொல்ல
“ம்ம் எனக்கு எங்க இருந்து இவ்வளவு கோபம் வந்தது எல்லாம் இங்க இருந்துதான். முதல்ல நீங்க கோபத்தை குறைங்க” என்றவன் அன்னையை கண்ணாடியின் புறம் திருப்ப தனது கோபமான விம்பத்தை கண்டு முகம் சுருக்கிய ரஸீனா மகனை கண்ணாடியினூடாக முறைக்க,
குடும்பம் மொத்தமும் சமாதானமடைந்த சந்தோசத்தில் திகழ்ந்த ரஹ்மான் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லும் பானுவின் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பது? என்று யோசிக்க அவன் கொடுத்த அலைபேசியி ஞாபகத்தில் வரவே நேரமானதால் தூங்கி இருப்பாள் அதனால் இன்று வேண்டாம் நாளை பேசலாம்.
தான் பேசினால் பேசுவாளா? அழைப்பை துண்டிப்பாளா? முதலில் குறுந்செய்தி அனுப்புவோமா? பதில் வந்தால் அழைப்பு விடுப்போம். ஸ்டேப் பை ஸ்டேப் தான் போகணும். என்ற முடிவுக்கு வந்தவனின் மனமோ!
“அவ பையையே திரும்பியும் பார்க்கல போன் இருக்குறது தெரியுமோ! என்னவோ!” என்று பானுவை அறிந்து சொல்ல
“என் மேல இருக்கும் கோபத்துக்கு சாக்லட் சாப்பிடாம இருப்பாளா? இத்தனைக்கும் மொத்தமும் காலியாகி இருக்கும். போன பார்த்து அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துல தூங்காம கூட இருப்பா” மனசாட்ச்சியை குட்டியவன் அறியவில்லை அவளின் வெறுப்பின் அளவை.
அடுத்த நாளே முபாரக் ரஹ்மான் கொடுத்த அலைபேசியோடு ரஹ்மானின் வீடு தேடி வந்தான்.
நேற்று நடந்த பெண் பார்க்கும் படலத்தால் வீடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க, காலையிலையே! வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினாள் ஷஹீரா.
அறையை சுத்தம் செய்யும் பொழுதுதான் ரஹ்மான் கொடுத்த சாக்லட் பையை கவனித்தாள். ரஹ்மான் கொடுத்த சாக்லட் பையை தொட்டும் பார்க்காமல் ஹஸனிடம் பானு கொடுக்க அதை வீட்டுக்கு எடுத்து சென்றவன் ருகையாவோடு பகிர்ந்துண்ண பையிலிருந்த அலைபேசியை கண்டு ருகையா எடுத்து விளையாட அதை கண்டு குழந்தைகளையும் அடித்த மஸீஹா தாம்தூம் என குத்திக்கலானாள்.
அக்பரிடமும், முபாரக்கிடமும் மட்டும்தான் அலைபேசி இருக்கும். அக்பர் வந்தால் தான் மஸீஹாவே வீட்டுக்கு அழைத்து பேசுவாள். அப்படி இருக்க ஷஹீக்கு ரஹ்மான் அலைபேசியொன்றை பரிசளித்தது வயிறெரிய அக்பரிடம் குறை கூற ஆரம்பித்தவள் அக்பரையும் அழைத்துக்கொண்டு பேகத்திடம் வந்து முறையிட்டாள்.
முபாரக்கும் வீட்டில் இருப்பதால் ஷஹீராவுக்கு அடி விழும் குறைஞ்சது திட்டு விழும் என்று எதிர் பார்த்து வந்தவள் முபாரக்கை சீண்டும் படி பேசினாள்.
“என்ன மைனி இந்த கூத்து? போன் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காரு உங்க மாப்ள. உங்க கிட்ட அனுமதி கேட்டாரா? என்னமோ நிகாஹ் முடிஞ்சது போலவே நடந்துகிறாரே! ஊரு உலகத்துக்கு தெரிஞ்சா நல்லாவா இருக்கும்? குறைஞ்சது முபாரக் கிட்டயாவது சொல்லி இருக்கணும். அது சரி இவங்க ரெண்டு பேருக்கும்தான் ஆகாதே! எப்படி சொல்லுவாரு? அவரு கொடுத்தா ஷஹீக்கு எங்க போச்சு புத்தி? இவ வேணாம்னு சொல்லி இருக்கணுமா? இல்லையா? இவ்வளவு பிரச்சினை நடந்து முடிஞ்ச பிறகும் இன்னும் போன்லயும் பேசணுமா? இப்போவே போன்ல பேச ஆரம்பிச்சா? கல்யாணத்துக்கு பிறகு என்ன பேச போறாங்க? இப்பதான் போன்ல வேண்டாததெல்லாம் வருதே! படிக்குற பொண்ணுக்கு எதுக்கு போன்? எதுக்குன்னு கேக்குறேன். அதுவும் வீட்டுக்குள்ள இவ்வளவு பேர் இருக்கும் பொழுது அவர் எப்படி இவ கிட்ட கொடுத்தாரு?” அதிகாரமாக மஸீஹா கேட்டுக்கொண்டிருக்க பையில் அலைபேசி இருந்ததை அறியாத ஷஹீரா முழிக்கலானாள்.
பேகத்துக்கு மஸீஹாவின் மேல் கோபம் கோபமாக வந்தாலும் அக்பருக்காக பொறுமை காத்தவள் “ஏன் ஷஹீ மாப்புளத்தான் போன் தந்தாரா?”
“இல்ல… பைலை போன் இருக்கிறதே எனக்கு தெரியாதே!” யோசித்தவள் ரஹ்மானும் அதை பற்றி சொல்லாததால் ஒரு வேலை ஜமீலாதான் போட்டிருப்பாள் என்று கணித்து “ஜமீலா மைனிதான் பைய கொண்டு வந்து…” என்றவள் பையை ஜமீலா ரஹ்மானிடம் கொடுத்தாள் என்பதை சொல்லாமல் மறைத்தாள். சொல்லி இருந்தால் ரஹ்மானிடம் தனியாக பேசினாயா? யார் அனுமதி கொடுத்தது? என்ன பேசினாய்? என்றெல்லாம் கேள்விகள் வந்து இன்னொரு பிரச்சினை உருவாகும்.
“அப்போ பைல போன் இருந்தது உனக்கு தெரியாதா?” முபாரக் அதட்டலாகவே கேட்க
“வல்லாஹி {அல்லாஹ் மேல சாத்தியமா} எனக்கு தெரியாது” ஷஹீ அடிக்கடி சத்தியம் செய்ய மாட்டாள் இக்கட்டான சூழ் நிலையில் அல்லாஹ்வின் மீது ஆணை என்று சொன்னால் அதில் உண்மையை தவிர வேறு இல்லை என்று முபாரக்கும் அறிந்து வைத்திருந்தான்.
முபாரக்கின் அச்சமெல்லாம் அவனுக்கு பிடிக்காத ரஹ்மானை தங்கை விரும்பி இருப்பாளோ! காதர் பெண் பார்க்க வந்ததை தங்கைதான் ரஹ்மானிடம் சொல்லி இருப்பாளோ! அறையினுள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. இருவரும் சேர்ந்து பேசி காதரிடம் தங்களுக்காக பேச சொன்னார்களோ! ஒரு வருடத்தில் திருமணம் என்று பேசி முடிவு பண்ணிய பின் ரஹ்மான் திடீரென கல்யாணத்தை நிறுத்த சொன்னதும், ஷஹீ படிப்பு முடிந்த பின் கலயாணம் செய்து கொள்கிறேன் என்பதும் இருவரும் பேசி எடுத்த முடிவு போல் தான் தெரிகிறது. முபாரக்குக்கு ரஹ்மானின் மீது துளியளவேனும் நம்பிக்கை இல்லை. பெரியவர்கள் முன்னின்று திருமண ஏற்பாட்டை செய்ததால் ரஹ்மானின் வீட்டில் ஷஹீராவுக்கு ரஹ்மானால் எந்த ஆபத்தும் வராது என்று நம்பியவன் தங்கையிடம் பேசி பேசியே அவள் மனதை களைத்து தன்னை பழிவாங்க ஏமாற்றி விடுவானோ என்ற பயம் தான். அதற்கு முதல் கட்டமாகத்தான் இந்த அலைபேசியோ! என்ற சந்தேகத்தில் தான் தங்கையை பொறுமையாக விசாரித்தான். ஜமீலா கொடுத்தாள் என்றதும் நிம்மதியடைந்தவன்
அன்னை கூறியதற்கா ரஹ்மானின் வீடு செல்ல தீர்மானித்தவன் ரஸீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினானே ஒழிய ரஹ்மானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அங்கு செல்ல தயாராகி வந்தவனைத்தான் மஸீஹா நிறுத்தி பஞ்சாயத்து பண்ணிக்க கொண்டிருந்தாள்.
“ஜமீலா கொடுத்தாள் என்று பொய்யா சொல்லுற? எத்துன சினிமா பாத்திருப்பேன். இந்த சிடுமூஞ்சி அங்க போய் போன கொடுக்க, ஜமீலா முழிக்க, போன் தந்தது உன் வருங்கால புருஷன்னு தெரிஞ்சிடும். பொய் சொன்னதுக்கு சேர்த்து உனக்கு இன்னைக்கி அடி விழப் போகுது” ஷஹீராவை பார்த்து கோணல் சிரிப்பை உதிர்த்தாள் மஸீஹா.
“யா அல்லாஹ் நாநா போய் கேட்டா அவங்க என்ன சொல்வாங்களோ! இன்னைக்கி இன்னொரு பிரச்சினை வீட்டுல வெடிக்க போகுதே! எல்லாம் அந்த ரஹ்மானால் யார் அவன் கிட்ட போன் கேட்டாங்க? அவன…” ரஹ்மான் எது செய்தாலும் ஷஹீராவின் கண்களுக்கு தப்பாகவே தெரிய அவனை வசை பாடியவாறே அறையினுள் நுழைந்தாள்.
ரஹ்மானின் வீட்டை அடைந்த முபாரக் வண்டியை நிறுத்தி உள்ளே வரவும் வாசலில் அமர்ந்திருந்த வசீம் வரவேற்றான்.
“வாங்க வாங்க” இன்முகமாக வரவேற்றாலும் என்ன பிரச்சினையை கொண்டு வரானோ என்ற ஆராய்ச்சி பார்வையை வீச தவறவில்லை வசீம்.
“நவ்பர் மாமாவும், மாமியும் இருக்காங்களா? நேத்து என்னால நடந்த பிரச்சினைக்கு மன்னிப்பு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்” வந்த விஷயத்தை கூறியவன் மறந்தும் ரஹ்மானின் பெயரை குறிப்பிடவில்லை.
“மாமா இப்போதான் வெளிய கிளம்பி போனாரு. மாமி அவங்கட அக்கா, தங்கச்சியோட ஆத்துக்கு குளிக்க போய் இருக்காங்க” என்றவன் ஜமீலாவை அழைக்க சத்தம் கேட்டு ரஹ்மானும் பாஷித்தும் வாசலுக்கு வந்து ஸலாம் சொல்லியவாறே அமர்ந்து கொள்ள ஸலாத்துக்கு பதில் சொன்ன முபாரக்கும் என்ன பேசுவதென்று தடுமாறி நின்றான்.
ஜமீலா உள்ளே குரல் கொடுத்து முபாரக் வந்திருப்பதாக அவனுக்கு டீ போடும் படி சொன்னவள் ஷஹீராவை பற்றி விசாரிக்க, அலைபேசியின் ஞாபகம் வந்தது.
முபாரக்குக்கு தங்கையின் மேல் சிறிதளவும் சந்தேகம் வரவில்லை. வந்திருந்தால் அலைபேசியை ரஹ்மானிடம் நீட்டி இருப்பான். நீட்டி இருந்தால் ஷஹீ மாட்டி இருப்பாள். முபாரக் கோபக்காரனானாலும், குறுக்குப்புத்தி உடையவனல்ல. கோபத்தை உடனுக்குடன் காட்டி விடுவானே! ஒழிய மனதில் வஞ்சம் வைத்து பழிதீர்ப்பவனுமல்ல. ஜமீலாதான் அலைபேசியை கொடுத்திருப்பாள் என்று நம்பி
“மைனி நீங்க நேத்து ஷஹீக்கு மொபைல் கொடுத்தீங்கள்ல அத உம்மா வேணாம்னு சொன்னாங்க” தான் சொல்வதை போல் சொல்லாமல் அன்னை சொன்னதாக சொல்ல
“பேகம் மாமி சொல்லி இருக்கா விட்டாலும் இந்த சிடுமூஞ்சி பானுவை என் கூட பேச விட மாட்டானே! இவன் தான் போன் வேணாம்னு சொல்லி இருப்பான். நல்ல வேல மெஸேஜ் பண்ணல. பண்ணி இருந்தா அத பார்த்துட்டு என்ன பிரச்சினையை இழுத்திருப்பானோ!” ரஹ்மான் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான். இருந்தாலும் மனதின் ஓரத்தில் பானுவோடு பேசிப்பழக கிடைத்த ஒரே கதவும் மூடப்பட என்ன செய்வதென்று யோசிக்கலானான்.
“என்னது போனெல்லாம் பரிமாறப்பட்டதா? மச்சான் நீங்க பெரிய ஆளுதான்” ரஹ்மானை பார்த்து கிண்டலாக கேட்க வாய் திறந்த வசீம் ரஹ்மான் மற்றும் ஜமீலாவின் பார்வை மாற்றத்தால் வாயை இறுக மூடிக் கொண்டான்.
முபாரக்குக்கு தங்கையுடனான உறவு தாமரை இலை மீது தண்ணீர் போல தான் அன்பும், பாசமும் மனதில் இருந்தாலும் வெளிப்படையாக சிரித்துப் பேசியதே இல்லை. எதுவானாலும் நேரடியாக பேசத் தெரிந்தவனுக்கு அக்கா தம்பியின் பார்வை மாற்றங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. கவனிக்கவுமில்லை.
பாஷித் அந்த வீட்டின் கடைக்குட்டி என்றாலும் நாளா பக்கமும் கண்ணை வைத்திருப்பவன் சகோதரர்களின் பார்வை மாற்றத்தை நொடியில் புரிந்துக்கொண்டு நாநா தான் வாங்கி கொடுத்திருப்பார் என்று புரிய “ஏன் முபாரக் மச்சான் மைனி காலேஜ் போக போறாங்கல்ல போன் தேவ படாதா?” நாநாவுக்கு கண்சிமிட்டியவாறே கேட்க
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். படிக்கிற பொண்ணுக்கு தேவ இல்லனு உம்மா சொன்னாங்க. அப்படி அவசரமா பேசணும்னா என் போன் இருக்கு” பட்டென்று சொன்னவன் அமைதியாக
முபாரக்கின் சூடான பதிலைக் கண்டு “ஹப்பா… எந்த நேரமும் அடில நெருப்போடயே! அலையிறானே!” வஸீம் நெற்றியை தடவ சமையலறையிலிருந்து டீயோடு வந்த ஹாஜரா ஜமீலாவின் கையில் கொடுத்தவள் முபாரக்கை முறைத்து விட்டு சென்றாள்.
பாவம் அவன் அவளை பாத்திருந்தால் அந்த டீயை வேண்டாம் என்று சொல்லி இருப்பானோ! என்னவோ! ஜமீலா கொடுக்கவும் வாங்கி கொண்டவன் ஒரு மிடர் குடிக்க இருமலானான்.
அவன் முதுகை நீவி விட்ட பாஷித் “பார்த்து குடிங்க சூடு தொண்டையை சுட்டுடும்”
அந்த டீயை கஷ்டப்பட்டு குடித்தவன் விடை பெற்று வெளியேறி வண்டியை கிளப்பி கொஞ்சம் தூரம் வந்தவன் வாந்தியெடுக்கலானான். வீட்டிலிருந்து வரும் போது வெறும் வயிற்றோடுதான் வந்திருந்தான் முபாரக். டீயில் உப்பை அள்ளிக் கொட்டி பழிவாங்கி இருந்தாள் ஹாஜரா.
“சக்கரைனு நினைச்சி உப்ப போட்டுட்டாங்க போல” தனக்குள் முணுமுணுத்தவன் பழிவாங்கும் செயல் என்று அறியாமலே! வீடு சென்றான். சுதாரித்திருந்தால் அடுத்த தாக்குதலிலிருந்து தப்பித்திருக்கலாம்.
பானுவின் படிப்பு முடியும்வரை அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான் ரஹ்மான். ஆனாலும் தூரத்திலிருந்து அவளை சைட் அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
பானுவும் காலேஜ் சேர்ந்திருந்தாள். அவள் கனவு ஆங்கில ஆசிரியையாக வேண்டும் என்பதே! அதனால் கலை பிரிவில் ஆங்கில இலக்கியத்தை தெரிவு செய்திருந்தாள். காலேஜ் முடித்த ரஹ்மான் மேற்படிப்பை தொடர பானுவின் காலேஜில் சேர்ந்தான்.
இரண்டு வருடங்கள் அவளை அருகில் இருந்து பார்க்கலாம் என்ற மகிழ்ச்சி மட்டுமே அவன் மனதில். ஆனால் பானுவுக்கு தெரியாமல் பார்ப்பது தனி சுகம்தான். அதனாலயே அவள் படிக்கும் காலேஜில் சேர்ந்தவன் அதை யாருக்கும் சொல்லவுமில்லை. பானு காலேஜில் உள்ளே சென்று ஐந்து நிமிடங்கள் கடந்த பின்தான் ரஹ்மான் உள்ளே வருவான். அதனால் பானுவுக்கு அவன் அங்கே படிப்பது தெரியவில்லை. படித்து முடிந்து ஒரு வேலையை தேடாமல் தன் பின்னால் அழைப்பவனை வெறுப்போடு பானு நோக்க அவளுக்கு தன்னை பிடிக்க வைக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான் ரஹ்மான்.