பிரபாகரனுக்கு அடுத்து பிறந்தவன் அகிலன். இஞ்சினியரிங் முடித்து விட்டு இப்போது வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறான். அந்த வீட்டின் செல்லப் பிள்ளை என்பதால் அவன் இஷ்டத்துக்கு அவனை விட்டுவிட்டார்கள். அவனும் தவறான பாதையில் செல்பவன் கிடையாது என்பதால் தான் அவனுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அப்பா அம்மா சொல் பேச்சு மட்டும் அல்ல. அண்ணனின் சொல் கேட்டு நடப்பவன்.
அகிலனுக்கு அடுத்து பிறந்தவள் வர்ஷினி. அந்த வீட்டின் இளவரசி. ஆனால் ஒரு இளவரசிக்குரிய காருண்யமும் அன்பும் அவளுக்கு உண்டா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது.
முன்பெல்லாம் அவள் அப்படி இல்லை. அவளை அப்படி மாற்றியது அவளது கணவன் வேணுகோபால் தான். வேணுகோபால் வேறு யாரும் அல்ல, அவளது சொந்த மாமா மகன் தான்.
யசோதாவின் அண்ணன் குடும்பமும் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். யசோதாவின் அண்ணன் கார்மேகம் உயிரோடு இருந்தவரை அவர்கள் குடும்பம் தனியாக தான் இருந்தது.
கார்மேகம் இறந்ததும் அவரது மனைவி சீதா ஐந்து வயது மகனான வேணுகோபாலையும், இரண்டு வயது மகளான வினோதினியையும் வைத்துக் கொண்டு கதறும் போது யசோதா தான் சக்கரவர்த்தியிடம் அவர்களை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டாள்.
சக்கரவர்த்தி சரி என்று சொல்லவே “எங்களோடவே வந்துருங்க அண்ணி. என் மருமகனையும் மருமகளையும் நான் நல்லா பாத்துக்குவேன்”, என்று அழைத்தாள் யசோதா.
“வேண்டாம் யசோ, உன் அண்ணா இப்படி எங்களை விட்டுட்டு போவார்னு நான் நினைக்கவே இல்லை. இது தான் என்னோட விதி போல? நான் எப்படியும் கஷ்டப் பட்டாவது என் பிள்ளைகளை வளத்துக்குவேன். நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பலை”, என்று மறுத்தாள் சீதா.
“அம்மாடி சீதா, எனக்கு கூட பிறந்த பொறப்பு யாரும் கிடையாது. அதனால உன்னை என்னோட தங்கையா தான் நினைக்கிறேன். உன் புருசனோட தங்கச்சி வீடுன்னு ஏன் நினைக்கிற? உன்னோட அண்ணன் வீடுன்னு நினைச்சு நம்ம வீட்டுக்கு வா மா. இனி வேணுவும் வினோதினியும் என்னோட பொறுப்பு. வா மா”, என்று சொல்லி சக்கரவர்த்தி அழைத்ததும் தான் அந்த வீட்டுக்கு வந்தாள் சீதா.
அப்போதில் இருந்து இப்போது வரை சீதா மற்றும் அவளுடைய பிள்ளைகளுக்கு சக்கரவர்த்தியும் யசோதாவும் எந்த குறையும் வர விட்டதில்லை.
அவளுடைய பிள்ளைகளையும் தங்களின் பிள்ளைகள் போலவே தான் வளர்த்தார்கள். வேணுகோபாலை இன்ஜினியரிங் படிக்க வைத்து தன்னுடைய மகள் வர்ஷினியையும் அவனுக்கே திருமணம் செய்து வைத்தார்கள் சக்கரவர்த்தியும் யசோதாவும். வினோதினியும் இப்போது இன்ஜினியரிங் படித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
அதனால் யசோதா மற்றும் சக்கரவர்த்திக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் வைத்திருந்தாள் சீதா. பிரபாகரன், அகிலன், வர்ஷினி மூவருமே அத்தை அத்தை என்று சீதா மீது உயிரையே வைத்திருந்தார்கள். சீதா அந்த அன்புக்கு தகுதி ஆனவள் தான்.
அந்த வீட்டில் எல்லாருமே மற்றவர் மேல் அன்பாக இருந்தாலும் வேணுகோபால் மட்டும் கொஞ்சம் சுயநலவாதி. அவனுக்கு அத்தை மாமா மீது நன்றி என்றெல்லாம் இல்லை. தனக்கு ஒரு தேவை என்றால் நல்லவன் போல நடித்து காரியம் சாதித்துக் கொள்வான். அவன் ஒரு பச்சோந்தி என்பது அந்த வீட்டில் யாருக்குமே தெரியாது. இப்போது வரை அவனது மனைவி வர்ஷினிக்கு கூட தெரியாது. ஆனால் வர்ஷினியையும் அவனைப் போலவே மாற்றிக் கொண்டிருக்கிக்கிறான். பிரபாகரனுக்கு லேசாக அவனைப் பத்தி தெரியும். ஆனால் வேறு யாரிடமும் சொன்னதில்லை.
வேணு சில தவறு செய்தாலும் அவன் நல்லவன் என்று எண்ணி தான் பிரபாகரன் தன்னுடைய தங்கையை அவனுக்கு திருமணம் செய்து வைத்தான். ஆனால் திருமணம் ஆனதில் இருந்து வேணுகோபாலின் நடவடிக்கையில் பல மாற்றங்களைக் கண்டான் பிரபாகரன். முற்றிலும் புதிய வேணுகோபாலைக் கண்ட பிரபாகரனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்.
சிறு வயதில் வேணு சில தவறுகளைச் செய்திருக்கிறான் தான். அதற்கு பிறகு அவன் திருந்தி விட்டான் என்று தான் பிரபாகரன் எண்ணினான். அது மட்டும் இல்லாமல் வர்ஷினி வேணுவை விரும்பியும் விட்டாள். அதனால் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்தான். ஆனாலும் அவன் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே தான் இருக்கிறான்.
இது தான் பிரபாகரனின் குடும்பம். அந்த குடும்பம் அவனுக்கு பார்த்த பெண் தான் அர்ச்சனா. ஆனால் அவளோ அவனைப் பிடிக்க வில்லை என்று எழுதி வைத்து விட்டு ஓடி விட்டாள்.
சரியாக ஒரு மாதத்துக்கு முன்…. அலாரம் சத்தத்தில் சோம்பலுடன் கண் விழித்தான் பிரபாகரன். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தவன் குளித்து விட்டு அலுவலகம் செல்ல கிளம்பி கீழே வந்தான். அவன் வரும் போது சக்கரவர்த்தியும் யசோதாவும் காலை உணவை உண்டு கொண்டிருந்தார்கள். மகனின் வருகையைக் கண்டதும் அவர்கள் முகம் மலர்ந்தது. அவனுடைய கம்பீரத்தை அவர்கள் கண்கள் ரசித்தது.
“என்ன என்னையே பாத்துட்டு இருக்கீங்க?”, என்று சிறு சிரிப்புடன் கேட்ட படி டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
அவனுக்கு காலை உணவை பரிமாறிய சீதா “அண்ணனுக்கும் யசோவுக்கும் உன்னை நினைச்சு பூரிப்பு பிரபா. அதான் கண்ணெடுக்காம பாக்குறாங்க”, என்று சொல்லி விட்டு அவர்கள் புறம் திரும்பி “இப்படியா ரெண்டு பேரும் பிள்ளையை கண்ணு வைப்பீங்க? நம்ம கண்ணே நம்ம பிள்ளை மேல படலாமா?”, என்று கேட்டாள்.
“அத்தை அவங்களைச் சொல்லிட்டு நீங்களும் கண்ணெடுக்காம என்னைத் தான் பாக்குறீங்க?”, என்று சொல்லி சிரித்தான் பிரபாகரன்.
“கிண்டல் பண்ணாதே டா? சரி உன் கிட்ட இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்று ஆரம்பித்தாள் சீதா.
“என்ன அத்தை?”, என்று கேட்ட படி தோசையைப் பிய்த்து வாயில் வைத்தான். தாயும் தந்தையும் அத்தைக்கு கண்ணைக் காட்டுவதை அவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். மூவரையும் எண்ணி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான்.
“அண்ணன் உனக்கு கல்யாணம் பண்ணணும்னு பேசி ஒரு வாரம் ஆச்சு. நீ பதிலே சொல்லலை? இன்னைக்கு கண்டிப்பா நீ பதில் சொல்லணும் பிரபா”, என்று கேட்டாள் சீதா.
அன்னை தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு “அதுக்குள்ள கல்யாணம் பண்ணனுமா அத்தை?”, என்று கேட்டான்.
“உன்னை விட ஒரு வயசு கம்மி தான் வேணுவுக்கு? அவன் உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணி நாலு மாசம் ஆகுது? அடுத்து உனக்கு தானே பண்ணனும்? உனக்கு பண்ணினா தான் அடுத்து அகிலுக்கு பண்ண முடியும்? அவனுக்கும் கல்யாணம் பண்ணினா தான் பொறுப்பு வரும். நீ என்ன சொல்ற பிரபா?”
“கொஞ்ச நாள் போகட்டுமே அத்தை?”
“அது அது அப்ப அப்ப நடக்கணும் பிரபா. எப்படின்னாலும் உனக்குன்னு ஒரு துணை வேணும். என்ன தான் நீ ராஜாவா இருந்தாலும் உனக்கு ஒரு ராணியும் இளவரசனும் இருந்தா தான் உன் வாழ்க்கை பூர்த்தியாகும்”, என்று சீதா சொல்ல அவன் யோசித்த படி அமர்ந்திருந்தான்.
திருமணத்துக்கு முழு மனதாக சம்மதம் சொல்ல மனதில்லை தான். ஆனாலும் அவனைப் போலவே ஒரு குட்டி இளவரசனைக் கற்பனை செய்து பார்க்கும் போது சிறு ஆர்வமும் அவன் உதடுகளில் குட்டிப் புன்னகையும் வந்தது. அவனது மனைவியைப் பற்றிய கற்பனையை விட அவனது குழந்தை பற்றிய கற்பனை முதலில் உதித்தது அவனுக்கு.
“எல்லாரும் இவ்வளவு தூரம் சொல்றோம்ல பிரபா? ஒத்துக்கோ டா”, என்றார் சக்கரவர்த்தி.
“உன் மனசுல வேற ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லு பிரபா, அவளையே கட்டி வைக்கிறோம்”, என்றாள் யசோதா.
அன்னையை நக்கலாகப் பார்த்தவன் “யாரு நீங்களா இப்படி சொல்றது? நீங்க இப்படி பேசினதைக் கேட்டா தரையில இருந்து வானத்தை நோக்கி மழை பெய்யப் போகுது”, என்று சிரித்தான். ஏனென்றால் அவனுக்கு அவனது அன்னையைப் பற்றி நன்கு தெரியும்.
“எதுக்கு டா அப்படிச் சொல்ற? நான் நீ விரும்புற பொண்ணைக் கட்டி வைக்க மாட்டேனா?”, என்று கேட்டாள் யசோதா.
“நான் இப்ப ஒரு ஏழைப் பொண்ணை விரும்பினா நீங்க கட்டி வைப்பீங்களா மா?”, என்று அவன் சிறு சிரிப்புடன் கேட்க “அது எப்படி? நம்ம ஸ்டேட்டஸ்ல இருக்குற பொண்ணைத் தான் பாக்க முடியும்?”, என்று யசோதா பட்டென்று சொன்னாள்.
“இதுக்கு தான் சொன்னேன்? நீங்க அப்படிச் சொன்னது அதிசயம்னு. உங்களுக்கு பிள்ளைங்க மேல அன்பு இருக்கு. ஆனா என்ன தான் பிள்ளைங்க மேல அன்பு இருந்தாலும் உங்க உயர் தட்டு தரத்துல இருந்து நீங்க இறங்க மாட்டீங்க. நம்ம கம்பெனி ஸ்டாப் கிட்டயே நின்னு பேசாதவங்க நீங்க, அப்படி இருக்க நான் ஒரு ஏழைப் பொண்ணை விரும்பினா நீங்க சம்மதம் சொல்லுவீங்களா?”, என்று மனத்தாங்களுடன் சொன்னான் மகன்.
“அவ கிடக்குறா. அவ அப்படி தான்னு நமக்கு தான் தெரியுமே பிரபா. சரி உன் மனசுல யாராவது இருக்காங்களா பிரபா? இருந்தா சொல்லு டா. நான் கட்டி வைக்கிறேன்”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“இல்லைப்பா, அப்படி யாரும் இல்லை. இது வரை என் மனசைக் கவருற மாதிரி ஒரு பொண்ணைப் பாக்கலை. ஒரு வேளை அப்படி லவ் பண்ணிருந்தா அவ யாரா இருந்தாலும் அவளைக் கல்யாணம் பண்ணியே தீருவேன். அதை யாராலயும் தடுக்க முடியாது”, என்று உறுதியாக சொல்ல யசோதா முகம் கூம்பி போனது.
“ஆமா டா, சரின்னு சொல்லுப்பா. நான் உனக்கு பொண்ணு பாக்கட்டுமா?”, என்று ஆவலாக கேட்டார் சக்கரவர்த்தி.
“சரி பாருங்க பா. ஆனா நல்ல பொண்ணா இருக்கணும். பணக்காரியா பாக்கணும்னு சொல்லி என் வாழ்க்கையை வம்பாக்கிறாதீங்க? எனக்கு பொருத்தமா, நம்ம குடும்பத்துக்கு பொருத்தமா இருக்குற பொண்ணைப் பாருங்க”, என்று சொல்லி விட்டு எழுந்து கை கழுவியவன் “அப்பா அகிலனையும் கம்பெனிக்கு வரச் சொல்லுங்க? எவ்வளவு நாள் ஊர் சுத்திட்டு இருப்பான்? இன்னைக்காவது அவனை ஆபீஸ் வரச் சொல்லுங்க. நான் சொன்னா கொஞ்ச நாள் அண்ணான்னு கெஞ்சி கொஞ்சி என்னையே மயக்கிறான்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
பின் அப்போது தான் நினைவு வந்தவனாக “அப்பா, கொஞ்சம் வெளிய வாங்க. நான் உங்க கூட கொஞ்சம் பேசணும். ஆபீஸ் விஷயம்”, என்றான்.
வேலை விஷயம் என்பதால் யசோதா மற்றும் சீதா இருவரும் அதை கண்டு கொள்ளாமல் விட சக்கரவர்த்தி மட்டும் அவன் பின்னே வெளியே வந்தார்.
அவன் முகத்தில் இருந்த சிந்தனையே அவரைக் கலங்கடிக்க “என்ன பிரச்சனை பிரபா?”, என்று கேட்டார்.
“பிரச்சனைன்னு இல்லைப்பா. ஆனா அப்படியே விட்டா பிரச்சனை ஆகிருமோன்னு பயமா இருக்கு”
“என்ன உனக்கு பயமா? என்ன விஷயம்? சொல்லு பிரபா”
“வேணு நம்ம ஆபீஸ்க்கு வரது எனக்கு சரியாப் படலை பா. அவனுக்கு வேற எங்கயாவது ஜாப் பாத்துக் கொடுக்குறது சரின்னு தோணுது”