அவ்வூரில் அவர்களுக்கு இருக்கும் அந்த பெரிய செங்கல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் தன் நண்பனை காணவென வந்திருந்தான் அஞ்சன். வேலை நேரம் முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்க, அஞ்சன் வாசலிலேயே வண்டியை நிறுத்தி நண்பனுக்காக காத்திருந்தான். அவனும் வேலை முடித்து கேள்வியோடு அஞ்சனை நோக்கி வந்தான்,
“உள்ளார வர வேண்டியதுதானே? ஏன் இங்கேயே நிக்குறவ?”
“நீ வேலை பாக்குற இடத்துல எதுக்கு அக்கபோரு கூட்டுவானேன்?” என்றான் அஞ்சன்.
“ஏதே? நான் வேலை பாக்குற இடமா? இவித்த பூராவும் உன்ற வூட்டுதுனு தானே? ஒய்யாரமா உரிமையோட உள்ளாரா வாராத்துக்கு என்ன?” என்று அருண் அஞ்சன் தோளில் லேசாய் தட்ட, அஞ்சனின் முகம் இறுகியது.
“இது என்ற இடம் இல்லை, இதுல எனக்கு உரிமையும் இல்லை. என்ற அப்பா சம்பாரிச்சு என்ற பெரிய அண்ணனுக்கு கொடுத்தது.”
“உனக்கு குடுத்தா மட்டும் அப்புடியே வாங்கிபுடுவ? ஏன்டா இப்புடி இருக்க? அவிங்க உன்ற ஐயாவும் அண்ணனும் தானே! அவிங்ககிட்ட என்ன வீம்பு உனக்கு?” எப்போதும் போல் ஆதங்கத்துடன் கேட்டான் அருண்.
“என்ற இடத்துல இருந்தாதான் என்ற வலியும் நாயமும் புரியும்.” அவரவர் நியாயம் அவர்களுக்கு என்ற பிடியில் நின்றான் அஞ்சன்.
“என்ன புரியோனும்? என்னை பாரு… எனக்கு எல்லாம் இத்தாச்சோடு(மிகப்பெரிய) குடும்பம் இல்லை. என்ற வூட்டுல நான் ஒரே புள்ளை. அதுவும் அம்மை அப்பா என்ற சின்ன வயிசுலேயே போயிடுச்சுங்க. ஆயா தான் ஏதோ உங்க சூளைல கல்லு பொறுக்கி என் வயித்த கழுவுச்சு. பொறவு உன்ற ஐயா டிப்ளமோ படிக்க உதவுனாரு. இப்போ வேலையும் போட்டு குடுத்து ஒரு நிலையில வச்சி இருக்காரு… அப்படிப்பட்ட ஐயா உனக்கு கசக்குறாரா?” என்று அருண் ஆயாசமாய் கேட்க, அஞ்சன் காதை தேய்த்தான்.
“உன்ற சுயபுராணம் உபதேசம் எல்லாம் முடிஞ்சுதா? நம்ம படத்துக்கு போலாமா?”
“ஏன் இப்புடி இருக்க நீ?” சலிப்பு அருணிடம்.
ஒவ்வொரு முறையும் அஞ்சன் ஏதாவது முறுக்கினால் மொத்த குடும்பமும் அவனை படுத்திவிடுவார்கள். நீதான் அவனிடம் பேசி சம்மதிக்க வைக்க வேண்டும். நீதான் அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று அவன் தலைதான் உருளும். நம்மை தானே நெருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்வதை செய்தால் அஞ்சன் கடுப்படிப்பான். அவ்வப்போது மத்தளமாய் இருபக்கமும் இருப்பது பழகி போயிருந்தாலும் அவன் ஓட்டு என்னவோ அஞ்சனின் குடும்பத்திற்குதான். தேவையில்லாத விஷயங்களை பெரிதாக்கி தானும் இறுகி மற்றவர்களையும் அஞ்சன் நெருங்க விடுவதில்லை என்பது அவன் எண்ணம்.
எப்போதும் போல அஞ்சனின் பதில்கள் உவப்பாய் இல்லையென்றாலும் வேறு வழியின்றி அவன் பின் வண்டியில் ஏறினான் அருண். அருண் ஏறியவுடன் அஞ்சன் வண்டியை முறுக்க அது ஸ்டார்ட் ஆகவில்லை.
“இதை உதைச்சு உதைச்சே உன் தெம்பெல்லாம் கரைஞ்சிடும் போலடா… இந்த வண்டி பழசாக்கிடுச்சு வேற வண்டி வாங்குன்னு சொன்னா கேக்க மாட்டேங்குற. வாங்கி தரேன்னு சொல்ற உங்க ஐயா பேச்சையும் கேக்க மாட்டேங்குற? ஏன்தான் இப்டி இருக்கீயோ!” மீண்டுமொரு புலம்பல் அருணிடம்.
அதை காதில் வாங்காத அஞ்சன் கண்ணும் கருத்துமாய் வண்டியை உதைத்து அதை ஸ்டார்ட் செய்ய பார்த்தான். பத்து முறையேனும் உதைத்திருப்பான் அது கிளம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க வண்டியிலிருந்து கீழ இறங்கிய அருண்,
“உன் வண்டியை இக்கட்ட விட்டுரு. நம்ம மெக்கானிக்கை வந்து பாத்து சரி பண்ண சொல்லுவோம். இப்போ என்ற வண்டியில போகலாம்.” என்க, அதற்கும் முறைத்தான் அஞ்சன்.
“என்ன முறைப்பு? இக்கட்ட நின்னு உன் வண்டியை கிளப்புறத்துக்குள்ள அக்கட்ட படமே முடிஞ்சிடும்.”
அருண் சொல்வதும் சரியாய் பட அஞ்சன் குனிந்து தன் வண்டியை பார்த்தான். படித்து முடித்து வெளியே வேலைக்கு கோவை செல்கிறேன் என்று கிளம்பி நின்றவனுக்கு அவனது நடு அண்ணன் சுந்திரநாதன் பயன்படுத்திய பைக்கே கைமாறியது.
படித்து முடிக்கும் வரைதான் தனக்கென்று ஒன்றும் இல்லை இனிதான் வேலைக்குச் சென்று சம்பாதிக்க போகிறோமே இப்போதும் அவனுக்கே அவனுக்கென்று சொந்தமாய் வண்டி கூட வாங்கித்தர முடியாதா? என்று பெற்றவர்கள் மீது கொதித்தவன், இனி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கத்தி, வேலைக்குச் சென்று ஒரு வருடம் கழித்து தனக்கே தனக்கென்று பார்த்து பார்த்து வாங்கினான் அந்த பஜாஜ் பைக்கை. இருப்பதிலேயே துவக்க நிலை பைக் தான் அவன் வருமானம் கொண்டு மாத தவணையில் வாங்க முடிந்தது.
ஒருவருடம் வீம்பாய் தினம் பேருந்தில் அவன் வேலைக்குச் செல்லவும்தான் அவனின் வீம்பும் பிடிவாதமும் வீட்டினருக்குப் புரிய, அதன்பின் அவனுக்காக என்று எது அவர்கள் வாங்க நினைத்தாலும் அஞ்சனின் பதில் ‘வேண்டாம்’ என்பதே.
“என்னடா வண்டியை உருகி உருகி பார்த்துட்டு இருக்க? கரைஞ்சிட போவுது… இவித்த விட்டா உன் வண்டியை எவனும் தூக்கிட்டு போயிட மாட்டான். ஒழுங்கா கிளம்பு என்ற வண்டில போகலாம்.” அஞ்சனின் எண்ண ஓட்டம் புரிந்து அருண் உசுப்ப, பிரிய மனமே இன்றி வண்டியை அங்கேயே நிறுத்தி அருணுடன் கிளம்பினான்.
கொஞ்ச தூரம் சென்றிருக்கும் நினைவு வந்தவனாய், “அன்னைக்கு பேசிட்டு இருந்தப்பவே போனை கட்பண்ணிபுட்ட? ஐயா ஏன் திடுதிப்புனு என்னோட கண்ணாலம் பத்தியெல்லாம் பேசுறாங்க?” என்று அருண் அன்று நடந்ததை துவங்க,
“அன்னைக்கு வேலையா இருந்தேன் அதான் ரொம்ப நாழி பேச முடில.” பதிலே இந்த விஷயத்தை இதோடு விடேன் என்ற தொனியில் இருந்தது அஞ்சனிடம்.
“இல்ல வூட்டுல இருக்குற உன்னை விட்டு எனக்கு பாக்குறேனு சொல்றாகளே…” என்று இழுத்தான் அருண்.
“அவங்களுக்கு என்னையத் தவிர எல்லார் மேலையும் அக்கறை அதுதான்! நீயெதுக்கு இந்த விஷயத்தை வுடாம இவ்வ்ளோ இழுக்குற? உனக்கும் சேர்த்து என்ற வீட்டுல இப்போ பொண்ணு பாக்க சொல்லனுமா?” என்று குறும்பாய் அஞ்சன் கேட்க, அருணின் முகத்தில் மலர்ச்சி.
கேட்ட கேள்விக்கு பதில் வராமல் போக, அருணின் தோளை தட்டிய அஞ்சன், “என்ன பேச்சையே காணோம்?”
“நான் என்ன உன்ற மாதிரியா? பொண்ணெலாம் நானே பாத்துட்டேன்!” என்று குழைந்து ஒலித்தது அருணின் குரல்.
“டேய் அருணு என்றகிட்ட கூட சொல்லவே இல்லை பாத்தியா… கள்ளன்டா நீ… எங்கன பாத்த? யார் அந்த அம்மிணி? எத்தினி நாளா நடக்குது?” என்று அஞ்சன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, அருணின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
“நம்ம பூமி அண்ணன் கடை ஆரம்பிச்ச புதுசுல லோட் எடுக்க அடிக்கடி என்னையும் திருப்பூர் கூட்டிட்டு போவாரு. பூமி அண்ணன் லோட் எடுக்குற அந்த துணி மில்லில தான் அம்மணியும் வேலை பாக்குறாங்க. அப்புடியே பழக்கமாகி புடிச்சு போச்சு…”
“பொறவு ஏன்டா இன்னும் கண்ணாலம் கட்டாம இருக்க? ஆயாவுக்கும் இப்போ முடியல… நீ கண்ணாலம் கட்டினா அதுக்கும் சந்தோஷம்தான?”
“இப்போவே கண்ணாலத்துக்கு என்ன அவுதி? இந்த ஆறு மாசமாதான் சூப்பர்வைசரா இருக்கேன். பதினெட்டாயிரம் சம்பளதுல முன்னாடி வாங்குன கடனுக்கு வட்டி கட்ட கொஞ்சம் போயிடுது, ஆயா மருந்து செலவு அதுஇதுனு வரவுக்கு செலவு சரியா இருக்கு. இப்போ போயி கண்ணாலம் பண்ணா என்ற அம்மணியும் என்ற கூட கஷ்டப்படனும். இன்னும் ஒரு வருசம் போவோட்டும், என்ற கடனும் முடிஞ்சுடும். நிம்மதியா இருக்கலாம்.”
நண்பனிடம் கூறியதை மனம் விரும்பியவளிடம் பகிர்ந்திருந்தால் புரிதலுடன் அவனுக்கு துணை நின்று நடக்கப்போகும் விபரீதத்தை அவளாவது தவிர்த்திருப்பாள். ஆனால் விதி வலியதாகிற்றே!
*******
அலைபேசியில் முகம் பதித்து மூழ்கியிருக்கும் மகளை காணக்காண கமலத்தின் பதட்டம் தவிப்பு கூடிக்கொண்டே போனது.
“காதல் கானல் நீர் மாதிரி. தூரத்திலேந்து பாக்கும் போது ஈர்க்கும் ஆனா கிட்ட போனா ஒண்ணுமே இருக்காது. இது புரியாம நீ இன்னும் என்ன அந்த போனை வச்சி நோண்டிட்டு இருக்க? ஒழுங்கா எல்லாத்தையும் மறந்துட்டு பொழப்பை பாரு. காதல் கத்திரிக்காய்னு ஒன்னு கிடையவே கிடையாது அப்படியே இருந்தாலும் அது தப்பா தான் இருக்கும்.” என்று அவர் அதட்ட, அலட்சியமாய் பார்த்தாள் கீர்த்தி.
வார்த்தையிலும் அதே அலட்சியம் பிறப்பெடுக்க, “காதல்ல சரி தப்புனு எல்லாம் கிடையாது. ஆள் வேணும்ணா தப்பா போகலாம் உன் சாய்ஸ் மாதிரி.” என்ற கீர்த்தியை அடித்துவிடும் வேகம் கமலத்திடம்.
“உன் அப்பன் ஏமாத்திட்டு போனபிறகு என் அண்ணன் உன்னை ஆசிரமத்துல விட்டுட்டு வேற கண்ணாலம் பண்ணிக்க சொன்னப்போ அவங்க பேச்சை கேக்காம உன்னை தூக்கிட்டு பூம்புகார்லேந்து திருப்பூர் வந்து தனியாளா உன்னை இவ்ளோ தூரம் வளர்த்து விட்டிருக்கேன்ல நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ…”
“நீதான் என்னை பேச வைக்குறமா… என்னை பெத்தவன் காதல்னு சொல்லி ஏமாத்திட்டு போனா உலகத்துல இருக்கிற எல்லாரும் ஏமாத்திடுவாங்கனு அர்த்தமா? மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துர கதையா இருக்கு நீ சொல்றது…” அன்னைக்கு புரிய வைத்துவிடும் வேகம் அவளிடம்.
காதல் பற்றி அன்று பேசியபின் அலைபேசியை பிடுங்கிய கமலம் மறுநாளே மகளின் பாதுகாப்பை எண்ணி அலைபேசியை கொடுத்துவிட்டார். ஒரு தனியார் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்யும் கீர்த்திக்கு காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு வரை வேலை. அதை முடித்து வீடு வர மணி ஏழாகிவிடும். அந்தி சாயும் வேளையில் மகள் தனியாய் வீடு வருவது அவ்வப்போது உறுத்தினாலும் அவள் காதல் என்ற பிறகுதான் ஐயம் வந்திருந்தது. அவளின் வயது பூதமாய் கிளம்பி அவரை அசைத்த தருணமது.
வார்த்தைக்கு வார்த்தை தன்னுடன் வாயாடும் மகளை வார்த்தையின்றி பார்த்தவர் செய்வதறியாது கைபிசைய, கீர்த்தி அலைபேசியுடன் அறைக்குச் சென்றுவள் அந்த சிறிய அறையின் நீளம் அகலத்தை அளந்தபடி யோசனையுடன் நடைபோட்டாள்.
‘அவர்கிட்ட சொல்லிடுவோமா? அவரும் அம்மாகிட்ட வந்து ஒருமுறை பேசட்டும். அவரே வருவாருனு அவருக்காக காத்திருந்தா இப்போதைக்கு எதுவும் நடக்காது.’
அன்னையிடம் பேசியதை இன்னும் அருணுக்கு அவள் சொல்லியிருக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலை மறந்துவிடு என்று மூளைச்சலவை செய்ய முற்படும் அன்னையை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் அருணுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.
இரண்டு மூன்று முறை தொடர்ந்து அழைக்க, அழைப்பை ஏற்றவன் படத்திற்கு வந்திருக்கிறேன் பிறகு பேசுகிறேன் என்று அழைப்பை துண்டித்துவிட, கீர்த்தி கடுப்புடன் படுத்தாள்.
அறைக்கு வெளியே மகளின் உறுதியில் தன் உறுதி ஆட்டம் காணும் தவிப்பில் தன் அண்ணனுக்கு அழைத்துவிட்டார் கமலம்.
“நீங்க வந்து அவளுக்கு புத்திமதி சொல்லுங்கண்ணா… நான் சொன்னா கேக்கமாட்டேங்குறா…” விஷயத்தை சொல்லி அண்ணனின் உதவி நாட,
“உன்னை மாதிரிதான் உன் பொண்ணு இருப்பா. உனக்கு ஒரு துணை வேணும்னு நானும் எவ்ளோ எடுத்து சொன்னேன் கேட்டியா நீ? இப்படி தனியா இருந்து கஷ்டப்பட்டுதான் ஆகணும்னு புடிவாதமா இருந்தா என்ன பண்றது?” இருபத்தி மூன்று ஆண்டுகளாய் ஒலிக்கும் அதே பல்லவி மீண்டும் ஒலிக்க, இம்முறை அதை கேட்பதை தவிர வேறு வழியில்லை கமலத்திற்கு.
அவர் எடுத்த ஒரு தவறான முடிவு அவர் வாழ்க்கையை பிசகாக்கிவிட, அதை மறக்கவே விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் பலபேர் என்றால் அதில் முதன்மை அவர் வீட்டினரையே சேரும். இன்றும் இப்படி குத்திக்காட்டுவதால் கமலம் உடன் பிறந்த தன் ஒற்றை அண்ணனிடம் கூட தேவையின்றி பேசிட மாட்டார். இன்று மகளின் போக்கு ஐயத்தை கொடுக்க உறவினர் உதவியை நாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை அவருக்கு.
“இப்போவாவது புரிஞ்சிக்கோ… தனியா வாழலாம் ஆனா ஒருசில விஷயத்துக்கு குடும்பம் தேவை. எப்போதுமே எல்லாரும் எல்லாத்தையும் தனியா சமாளிக்க முடியாது. உனக்கு மட்டுமில்லை உன் பொண்ணுக்கும் சேர்த்து தான் சொல்றேன்.”
“என்ன பண்ணலாம்னு சொல்றீங்க?” குழப்பம் தாங்கிய கமலத்தின் வார்த்தைகளுக்கு பதிலாய் வந்தது அவர் வேண்டாம் என்று மறுத்த ஒன்று.
“அவளுக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும் கமலம்.”
“அதுதான் நான் இருக்கேனே!” பட்டென்று கமலம் சொல்லவும் அவர் அண்ணனின் வார்த்தைகள் அழுத்தமாய் வந்தது,
“புரியாம பேசாத. மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு இருபது வருஷம் இருப்போமா நம்ம? அதுவும் உறுதியா சொல்ல முடியுமா? அதுக்கப்புறம் புள்ளைங்க என்ன பண்ணும்? கடைசி வரைக்கும் அவ தனியா இருக்கணும்னு தான் ஆசைப்படுறீயா?
இருபத்தி மூணு வருஷம் முன்னாடி நீ உடைஞ்சி போயி நின்னப்போ வாழ்க்கையில உனக்கு பிடிப்பா இருந்தது உன் பொண்ணு. ஆனா அவளுக்கு? யோசி… நான் இந்த வார கடைசியில வரேன். என்ன பண்ணலாம்னு பேசுவோம்.” என்று பேச்சை முடித்துக்கொள்ள,
அண்ணன் தூவிவிட்ட விதை மெல்ல கிளர்ந்து எழும்ப கமலத்திடம் ஒரு மாற்றம்.