“எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வாடி.” என்றவருக்கு தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தேன். அதற்கு மேல் அங்கிருந்தால் நானே ஏதாவது உளறி கொட்டிவிடுவேன். அதுவும் ஞாயிற்றுகிழமை வேறு. சொல் தப்பினால் மொத்தத்தையும் இன்றைக்குள் என் வாயிலிருந்து பிடுங்கிவிடுவார் என் கில்லாடி அம்மா.
இப்போதெல்லாம் தனிமை அது இனிமை என்ற காலம் மாறி புதிதாய் புலரும் நாழிகைகள் யாவும் அவனுக்கானதாய் அவன் எண்ணங்களுக்கானதாக மாறிற்று. காணும் காட்சிகள் யாவும் அவனுடன் ஒப்பிட வைக்கிறது.
இதெல்லாம் போதாதென சிந்தையில் புகுந்து விளையாடும் அவனால் தன்னிலை இழந்து மெய்மறந்து நிற்கும் காலங்கள் அதிகரிக்க துவங்கிவிட்டன.
இதுதான் காதலா? என்ற கேள்வி அவ்வப்போது எழுந்தாலும் சுகம் சுகம் என்று அந்த இதத்தை இதயத்தில் படரவிட்டு இதுதான் காதல் என்று நிரூபிக்கிறது மனம்.
இதம் இனம் கண்டுகொண்டு இச்சையைத் தூண்ட ஏக்கம் படர்ந்தது நெஞ்சத்தில்.
வெளியே சொன்னால் வெட்கக்கேடு… குறுநகை உதிர்த்தாலே அலைபேசி எண் வாங்கி விண்ணை முட்டி நிற்கும் அளவு பேசி ஊரையே பலமுறை வலம்வரும் இக்காலத்தில் நான் என் அலைபேசி எண்ணையும் கொடுக்கவில்லை அவனுடையதையும் வாங்கவில்லை.
நான் தான் இப்படி என்றால் அவனாவது வாங்கி இருக்க வேண்டாமா? பக்கி அவனும் தொடர்பை விரிவுபடுத்த தனிப்பட்ட முறையில் எதுவும் செய்யவில்லை. அலுவலகத்தில் பார்த்து பேசுவதோடு சரி.
இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒலிக்கும் அவன் அழைப்புகளை ஏற்று சப்தமின்றி பேசத் துடிக்கும் கணங்கள் யாவும் இன்னும் எனக்கு கிட்டவில்லை.
அவன் பெயர். அது மட்டுமே தெரியும். அதுவும் வேறொருவர் அவனைக் கூப்பிடும் போது செவியில் விழுந்தது. மற்றைய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழ நானும் எடுத்தேன் ஆயுதத்தை.
நவீன மனிதனின் ஆறாம் புலனாகி இருக்கும் அலைபேசியில் எங்கள் இரு துறைக்கும் பொதுவாய் இருக்கும் ஒரு தோழிக்கு அழைப்பை தட்டினேன். மூன்றே நிமிடத்தில் அவன் எண் என் அலைபேசியில்.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் எதிரெதிரே இருவரும் கையில் கோப்பையுடன் அமர்ந்தோம்.
“சொல்லுங்க மேடம்… மெனக்கெட்டு என் நம்பர் எல்லாம் வாங்கி இன்னைக்கு என்னை ரெஸ்ட் எடுக்க விடாம இங்க வரச் சொன்ன காரணம் என்ன?”
அவனின் வார்த்தை கோர்ப்பு என் கோபத்தை வெடுக்கென தூண்டியது, “கிளம்பலாம் நீங்க. எனக்காக யாரும் அவங்களோட நேரத்தை வீணடிக்க வேணாம்.”
“ரைட் தென்… நான் கிளம்புறேன். மீட் யூ டுமாரோ.” என்று அவன் எழ, என் சினமும் மேல் எழும்பி, கண்களில் நீர்படலம் மெல்ல எட்டிப்பார்த்தது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி? அதீத கோபம் வந்தால் கண்ணீரும் சேர்ந்து வந்துவிடுகிறது. கோபத்தை கூட நேரடியாய் வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஆற்றாமையில் கண்ணீர் தன் உற்பத்தியை பெருக்க, எழுந்தவன் அமர்ந்துவிட்டான்.
“ஓகே நான் கிளம்புல… கோபப்படாதீங்க.” என்றவனை கூர்மையாய் பார்த்தேன்.
“அதெப்படி நான் என்ன நினைக்குறேனு ஒவ்வொரு முறையும் சரியா சொல்றீங்க?” நா தழும்ப என் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கும் சமயத்தில் என் சந்தேகத்தை எழுப்ப,
“கண்ணுல முறைப்போட அழுதா கோபமில்லாம வேறென்னாவாம்? உங்க முக பாவனையை வச்சு நான் மட்டும் இல்லை சுதாரிப்பா இருக்கிற யாரா இருந்தாலும் கண்டு புடிச்சிடுவாங்க.” என்றுவிட்டு அவன் அமைதி காக்க, அதுவே அங்கு பிரதானமாகியது.
நீயா நானா யார் முதலில் அமைதியை உடைப்பது என்ற போட்டி சில நிமிடங்கள் தாக்குப்பிடிக்க அவனே முன்வந்து, “உங்களுக்கும் என் மேல ‘X – ஃபாக்டர்’ தோணுச்சா?” என்று கேட்க,