கார்த்திகேயன் கழுத்தை நெரித்தும் கயல்விழி கத்தவுமில்லை. அவனை தடுக்கவுமில்லை. வலியை பொறுத்துக்க கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.
அவள் முகம் படும் வேதனையை பார்த்து கையை எடுத்தவன் “பைத்தியமா நீ. செத்து கித்து போய் இருந்தா? என்ன என்னைய கொலை கேஸுல உள்ள தள்ளலாம் என்று பாக்குறியா?” அவள் மீது கோபம் இருந்தாலும், அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் தன்னால் தங்கத்தான் முடியுமா? என்ற ஆதங்கத்தில் வந்தது அவன் வார்த்தைகள்.
“நீ தான் பெரிய லாயராச்சே. கொலை கேஸுல இருந்து எப்படி வெளில வரணும் என்று உனக்குத் தெரியாதா?” அவனை முறைத்தவாறே இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
பாராட்டுகிறாளா? கிண்டல் செய்கிறாளா? ஒரு கணம் கார்திகேயனுக்குப் புரியவேயில்லை. ஆனால் நடந்ததை விட்டு வழக்கை கவனிக்க அமர்ந்து விட்டாள் என்று மட்டும் தெளிவாக புரிந்தது.
“இவள் எந்த மாதிரிப் பெண்? தனது குடும்பம் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையென்று என்னையே தூக்கியெறிந்து விட்டாளே. காதலித்தவனை விட இவளுக்கு அவன் குடும்பம் தான் முக்கியமா? பணத்துக்காக ஒன்றும் இவள் இன்னொருவனை திருமணம் செய்தது போலும் தெரியவில்லை. உண்மையிலயே இவள் அப்பா சொன்னதற்காக வேறொருவனை திருமணம் செய்து கொண்டாளா? என்னை பற்றி கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்காமல் இருந்து விட்டாளே” யோசனையாக அவள் எதிரே அமர்ந்தான் கார்த்திகேயன்.
“கேஸ பாக்குறோமா? இல்ல பெர்சனல் விஷயம் தான் பேசணுமா? வெட்டி வேல பார்க்க நான் இங்க வரல”
“எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் தெரியணும். உன் முடிவுல நீ தீவிரமாக இருக்க என்ன காரணம்” கயல்விழி அன்று கூறினாலும் அவளது தீவிரம் தான் அவனுக்கு புரியவில்லையே. மீண்டும் கேட்டான்.
சொல்லாமல் இவன் தன்னை விட மாட்டான் என்று புரிய “உன் கூட போன்ல பேசும் பொழுது எங்கம்மாவும், அப்பாவும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க என்று சொன்னேனே. எங்களுக்கு சொந்தம் என்று யாருமில்ல. என் குழந்தைகளுக்கும் அந்த நிலைமை வரக் கூடாது என்று நானும், அப்பாவும் பேசி எடுத்த முடிவு தான் இது” என்றாள்.
அவனுக்கு புரியவைக்க அவள் அவ்வாறு கூறினாலும் அவனோடு காதல் மொழி பேசும் பொழுது “எனக்கு நீயும் முக்கியம், உன் குடும்பமும் முக்கியம். அவங்க சம்மதம் இல்லாம உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். சீக்கிரம் என்ன உன் வீட்டுக்கு கூட்டிகிட்டு போ” என்று பல தடவை கூறியிருக்கிறாள்.
தன் மீது அதீத பாசம் வைத்திருக்கும் அன்னை சம்மதித்து விடுவாள். அவள் தந்தையை சம்மதிக்க வைத்தும் விடுவாள் என்று நம்பினான். அப்படியே அவர்கள் சம்மதிக்காவிட்டால் என்ன? தான் ஒரு வக்கீல். தனக்கு சட்டம் தெரியாதா? “சரி சரி” என்ற கார்த்திகேயன் தான் அலட்ச்சியமாக இருந்து விட்டான்.
இதற்காக இவள் தன்னை விட்டு விட்டாளே என்று கோபத்தை அடக்கியவாறு “அதுக்கு நீ உன் அப்பா பார்த்த மாப்பிளையையே கல்யாணம் பண்ணி இருக்கணும். காதல் என்ற பேர்ல என்னைய ஏமாத்தியிருக்கக் கூடாது” சத்தமாக சிரித்தான்.
இவன் சொல்வது உண்மை தான் இவ்வாறான முடிவில் இருக்கும் நான் காதலித்தது தப்புதான். ஆனால் காதல் தான் யார் மீது எப்பொழுது வரும் என்றே தெரியாதே. அதை இவனிடம் புரியவைக்க முடியாது என்று உணர்ந்தவள்
“நான் காதலிச்சது தப்பில்ல. நான் காதலிக்க தேர்ந்தெடுத்த நபர் தான் தப்பானவன்” அவனை குற்றம்சாட்டினாள்.
கார்த்திகேயனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “நீ ஒரு முடிவோட இருந்திருக்க, அந்த முடிவுல கடைசிவரைக்கும் இருந்திருக்கணும். ரெண்டு வருஷமா என்ன பார்த்துகிட்டு இருந்தவ என் கூட பேசாமலையே போய் இருந்தா நான் உன்ன காதலிச்சிருக்க மாட்டேன். இந்த வேதனையும், வலியும் எனக்கிருந்திருக்காது.
நீ என் வாழ்க்கைல விளையாடிட்டு, என் வீட்டாளுங்க வேணாம் என்று சொன்னதும் அப்படியே போய்ட்ட, அவங்க என்ன பேசியிருந்தாலும் அவங்கள சம்மதிக்க வைக்க நீ என்ன முயற்சி எடுத்த? எந்த முயற்சியும் எடுக்கல. என்னமோ நான் உன்ன ஏமாத்தி வயித்துல புள்ளைய கொடுத்துட்டு போனது போல என்னைய குத்தம் சொல்லுறியா?”
தன் மீது இவனுக்கு எவ்வளவு கோபம் இருந்தால் இவ்வாறான வார்த்தைகளை கக்குவான் என்று கயல்விழிக்கு புரியாமலில்லை ஆனாலும் தன்னை குற்றம் சொன்னதும் கோபத்தில் முகம் சிவந்தாள் கயல்விழி.
இவன் அண்ணன் பார்த்தீபனுடைய காதலுக்கு இவன் அன்னை சம்மதம் தெரிவிக்காத பொழுதே கூறினாளே வீட்டாருக்கு என்னை அறிமுகப்படுத்தி வை. நன்றாக பழகினால் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று. எந்த முயற்சியையும் இவன் எடுக்காமல் என்னை குற்றம் சொல்கிறானா? இதை பற்றி இனி பேசி என்ன பிரயோஜனம் என்று “கண்டிப்பா எடுத்திருப்பேன். எங்கப்பா அவரோட கடைசி நேரத்தை எண்ணிக்கிட்டு இருக்கும் பொழுது எனக்கு உன்னை விட எங்கப்பா தான் முக்கியம் என்று நான் அவர் ஆசைய நிறைவேத்திட்டேன்” என்றவள் கண்கள் கலங்க அதை அவனுக்கு மறைக்க தலையை குனிந்து விழியை மீறும் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
“எந்த மாதிரியான சூழ்நிலையிலும் காதலையோ, காதலனையோ விட்டுடக் கூடாது. இத நான் பண்ணி இருந்தா ஏத்துக்கிட்டு இருந்திருப்பியா? கடைசி வரைக்கும் சேர்ந்து வாழ முடியலைன்னா காதலிக்கவே கூடாது”
அவன் சொல்ல விளைவதை புரிந்துகொள்ளாமல் “காதல் யாருக்கு யாருமேல எப்பொழுது வரும்மென்று தெரியாதே” முறைத்தாள் கயல்விழி.
காதல் என்பது சில பேருக்கு செடி மாதிரி ஒன்னு போனா இன்னொன்னு. எனக்கு பூ மாதிரி ஒரு தடவ தான் பூத்தது உதிர்ந்திருச்சு அவ்வளவு தான். நீ இப்படியொரு முடிவுல இருக்கன்னு சொல்லாதது உன் தவறு” மனதிலுள்ள காயங்கள் ஆற அவளையே குற்றம்சாட்டினான்.
தன்னை தூக்கியெறிந்து, இன்னொருவனை மணந்து, தன்னை மறந்து அவனோடு வாழ இவளால் மட்டும் எப்படி முடிகிறது?
சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என் விழியில் வாள் கொண்டு வீசி..
இளம் மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்ததே தவறா…
உயிரே…. உயிரே….
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
காதல் வெறும் மேகம் என்றேன்..
அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்..
நீ தீயை மூட்டினாய்….
மொழியாக இருந்தேனே…
உன்னால் இசையாக மலர்ந்தேனே…
என் உயிரோடு கலந்தவள் நீ தான் ..
ஹே பெண்ணே..
கனவாகி கலைந்ததும் எனோ..
சொல் கண்ணே..
மௌனம் பேசியதே…
உனக்கது தெரியலயா..
காதல் வார்த்தைகளை..
கண்கள் அறியலயா…
“இன்னக்கி வேலை பார்கலைனா, நான் வீட்டுக்கு கிளம்புறேன். எனக்கு நிறைய வேலை இருக்கு” புதிதாகத்தானே குடி வந்தாள். பிரிக்கப்படாத பொருட்களும், அடுக்கப்படாத பாத்திரங்களும், தளபாடங்கள் என்று வீடு நிறைய பொருட்கள். வீட்டுக்கு சென்றால் அவற்றை ஒழுங்கு படுத்தலாம் என்று தான் கூறினாள்.
“இவளை பேசினால் குழந்தை போல் கோபித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறேன் என்பாளா?” கடுப்பான கார்த்திகேயன் “என்ன இன்னும் ஹனிமூன் போன மூட்லயே இருக்கிறியா? வீட்டுக்கு போகணும் என்று சொல்லுற? ஏன் உன் புருஷன் நேரங்காலத்தோட வீட்டுக்கு வர சொன்னானா?”
இன்னும் என்னவெல்லாம் சொன்னானோ அவனை முறைத்தவள் “அப்போ வேலைய பார்க்கலாமா சார்?”
இதற்கு மேல் பேசினால் இவள் எழுந்து சென்று விடுவாள் என்று தோன்ற “ம்ம் ம்ம்” தெனாவட்டாக சம்மதித்தான்.
“சார் எங்க?” என்றவாறே வந்தாள் தகவல் குழுவில் இருக்கும் திவ்யா. பைக்கில் பயணித்து வந்திருப்பாள் போலும் ஹெல்மட்டோடு வந்திருந்தாள்.
விக்னேஷோடு எதோ ஒரு வழக்கை பற்றி உரையாடிக் கொண்டிருந்த திரு “மீட்டிங் ரூம்ல” என்றான்.
அப்பக்கம் திரும்பிப் பார்த்த திவ்யா “ஒரு நாளும் இல்லாம இன்னக்கி ஏன் கேர்ட்டின் போட்டிருக்கு” புரியாமல் திருவை ஏறிட, விக்னேஷ் பதறியவனாக சென்று அறைக்கதவை திறந்தான்.
“என்ன” கார்த்திகேயன் கேட்டது மட்டுமல்லாது, கயல்விழியும் அவனை ஏறிட்டாள்.
பூட்டிய அறையில் கார்திகேயனால் கயல்விழிக்கு ஏதும் ஆபத்தோ என்றுதான் விக்னேஷ் அடித்துப் பிடித்து கதவை திறந்தான். இவர்கள் எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க என்ன சொல்வதென்று முழித்தவன் “நான் காபி குடிக்க போறேன் விழிக்கு வேணுமான்னு கேட்கத்தான் வந்தேன்” என்று சமாளித்தான்.
“கயல் காபி குடிக்க மாட்டா” என்றான் கார்த்திகேயன்.
“இவனுக்கு இது இன்னும் ஞாபகம் இருக்கிறதா? என்று அவள் ஆச்சரியமாக பார்க்க
“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டிருந்தான் விக்னேஷ்.
“இவ தான் சொன்னா” கயல்விழி அன்றொருநாள் கூறியதை கண்களுக்குள் கொண்டு வந்தவாறே கார்த்திகேயன் கூற,
“நான் உள்ள வந்த உடனே சார் காபி வேணுமான்னு கேட்டாரு. குடிக்க மாட்டேன்னு சொன்னேன். அத சொல்லுறாரு” என்று கயல்விழியும் சமாளித்தாள்.
“உனக்கு டீ. சார் உங்களுக்கு?” விக்னேஷ் கார்த்திகேயனை ஏறிட
கயல்விழியை பார்த்தவாறே “எனக்கும் டீ” என்றவனுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. விக்னேஷுக்கும் இவளுக்கும் அப்படியென்ன உறவு? தன்னை ஏற்கனவே தெரியும், காதலித்ததாக சொல்லாமல் இவனிடம் ஏன் மறைகின்றாள்? குறைந்தபட்சம் தெரியும் என்றாவது கூறியிருக்கலாம். எதற்காக மறைகிறாள். ஒருவேளை விக்னேஷும் இவள் கணவனும் நல்ல நண்பர்களா? இங்கே நடப்பவைகளை விக்னேஷ் இவள் கணவனிடம் சொல்லி விடுவான் என்று எண்ணுகின்றாளோ?” என்றெல்லாம் கார்த்திகேயனின் எண்ணம் செல்ல திவ்யா உள்ளே வந்து அவன் எண்ண ஓட்டத்தை தடுத்து நிறுத்தினாள்.
“சார், சார், சார்” என்று அவள் பல தடவை அழைத்தும் கார்த்திகேயன் சிந்தனையில் இருக்க, கயல்விழி மேசையை பலமாக தட்டிய பின் தான் என்னவென்று அவளை ஏறிட்டான்.
கயல்விழி திவ்யாவை காட்ட “என்ன திவ்யா” என்று கார்த்திகேயன் அவளை புரியாத பார்வை பார்த்து வைக்க,
என்ன ஆச்சு இவருக்கு என்ற பார்வையோடு “தாரா கேஸ் சார்” என்றாள்.
“என்கிட்டே கொடுங்க” என்று கயல்விழி திவ்யா கொண்டு வந்த கோப்பை பெற்றுக் கொண்டாள்.
“சார் ஏதும் பெரிய பிரச்சினையா? நீங்க ஒரு திசையை பார்த்து யோசிச்சிகிட்டே இருந்தாலும், அட்டவதானியா இருப்பீங்க. இன்னக்கி நீங்க நீங்களாகவே இல்ல” கார்த்திகேயனை நன்கு அறிந்தவள் போல் பேசினாள் திவ்யா.
“இந்த பெண்ணுக்கு இவன் மீது விருப்பம் இருக்கும் போலயே” என்று கயல்விழி அவளை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
ஜீன்ஸ், டீ ஷார்ட் அணிந்திருந்தவள், பைக்கர்ஸ் அணியும் ஜாக்கட் அணிந்திருந்தாள். நீளமான சுருட்டை முடி. கையில் ஹெல்மட்டோடு அடுத்த ரைடுக்காக நான் தயார் என்ற தோற்றம்.
ஆடையை வைத்தோ, தோற்றத்தை வைத்தோ யாரையும் எடை போட முடியாதே. அவள் செய்யும் தொழிலுக்கு அவள் நியாயம் செய்கிறாளா? மற்ற மக்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறாள். பண்பு, குணம் என்பவை தானே நல்லவளா? கெட்டவளா? என்று சொல்லும். கண்முன்னே நடிப்பவர்களை விட… கயல்விழியின் எண்ணங்கள் எங்கோ செல்ல கார்த்திகேயனின் குரல் அவளை மீண்டும் இங்கே கொண்டு வந்தது.
“என் எக்ஸ் லவர் ஞாபகம் வந்திருச்சு” என்ற கார்த்திகேயனை பார்த்து வாய் பிளந்த திவ்யா வேறெதுவும் பேசவில்லை.
“இப்படித்தான் வர்றவள எல்லாம் துரத்தியடிக்கிறான் போல” கார்த்திகேயனை முறைக்கவும் தவறவில்லை கயல்விழி. ஆனால் அவளுக்குத்தான் தெரியவில்லை வேலை பார்பவர்களோடு எந்த விதமான சொந்த விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள மாட்டானென்று.
“என்ன?” என்று அவன் புருவம் தூக்கி இவளை ஏறிட “ஒன்றுமில்லை என்று திவ்யா கொடுத்த கோப்பை புரட்டலானாள்.
“என்ன மாதிரியான தகவல்கள் கிடைச்சிருக்கு திவ்யா?” கயல்விழியின் மீது பார்வையை வைத்தவாறே கேட்டான் கார்த்திகேயன்.
கயல்விழியின் கையிலிருக்கும் கோப்பை தான் பார்க்கின்றான் என்று திவ்யாவும் அதை பார்த்தவாறே பேசலானாள்.
“குழந்தை காணாம போன உடனே போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தவங்க, குழந்தையோட போட்டோவ மீடியா மூலம் கண்டு பிடிச்சி கொடுக்க சொன்னது மட்டுமில்லாம நோட்டீஸ் அடிச்சி எல்லா இடத்துலயும் ஒட்டியிருக்காங்க. “உங்க குழந்தையோட முதுகுல ஒரு மச்சம் இருக்கு தானே” என்று வந்த போன் கால் தான் கால் பண்ணவங்களுக்கு பணம் கொடுக்க இவங்க முடிவு பண்ணியிருக்காங்க. ஏன்னா முதுகுல மச்சம் இருக்குறத போலீஸ் ரிப்போர்ட்ல மட்டும் தான் குறிப்பிட்டிருக்காங்க”
“பணத்தை எப்படி கொடுத்திருக்காங்க. எப்படி குழந்தையை பெற்றுக்கொண்டாங்க?” ரகு மற்றும் ராதா மூலம் அறிந்தது தான். வெளியே விசாரித்தால் மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று தான் திவ்யாவை அனுப்பியிருந்தான்.
“சென்னை டு மதுரை போற ட்ரைன்ல பணத்தோட ஏற சொல்லி குறிப்பிட்ட இடத்துல பணப்பையை தூக்கிப் போட சொல்லி இருக்காங்க”
“போன் பண்ணி தானே”
“ஆமா சார். அன்னக்கி ட்ரைன்ல போனவங்கள தேடி விசாரிச்சேன். சம்பவம் நடந்தது உண்மை தான்”
டீ கப்புக்களை கார்த்திகேயனுக்கும், கயல்விழிக்கும் கொடுத்தவன் “நீங்க இருக்குறது தெரியல. உங்களுக்கு கொண்டு வரல” என்று காபியோடு அமரபோனவனை
“மிஸ்டர் விக்னேஷ் நீங்க உங்களுக்கு கொடுத்த வேலைய பார்த்துகிட்டு காபி குடிக்கலாம். எங்களை வேல பார்க்க விடுறீங்களா?” கார்த்திகேயன் கறாரான குரலில் கூற விக்னேஷுக்கு கோபம் வந்தாலும் வேலை பார்க்கத்தானே வந்தேன் என்று எதுவும் பேசாமல் காபியை திவ்யாவிடம் கொடுத்து விட்டு சென்றான்.
திவ்யாவும் காரியாலயத்தில் அரட்டையடிப்பவள் தான். கார்த்திகேயன் எதுவும் சொல்லவும் மாட்டான். முறைத்துக் கூட பார்க்க மாட்டான். இன்று அவன் வினோதமாக நடந்துகொள்வதாக தோன்றினாலும் விக்னேஷுக்கு கொடுத்த வேலையை அவன் முடிக்காமல் வந்ததினாலும், தங்களுடைய வேலை முடியவில்லை என்பதினால் கோபப்பட்டிருப்பான் என்று எண்ணினாள்.
கார்த்திகேயன் அனாவசியமாக கோபப்படுகிறான் என்று கயல்விழிக்கு தோன்றினாலும் அதை பற்றி அவனிடம் இப்பொழுது வாக்குவாதம் செய்வது வீணென்று தாராவின் வழக்கில் அவளது கருத்தை கூறலானாள்.
“போலீஸ் கம்பளைண்ட்ல மட்டுமே இருக்குற குழந்தையோட மச்சத்தை பத்தி, கூட இருக்குறவங்க, சொந்தக்காரங்க, நண்பர்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. பணத்தை எடுத்துக்கிட்டு அவங்க அப்படியே போகல. குழந்தை இந்த ஆசிரமத்துல இருக்கு என்று தகவல் கொடுத்திருக்காங்க. அப்படியென்றா குழந்தையை கடத்தினதும் அவங்களாக கூட இருக்கலாம்.
அப்படி இல்லனா ஆசிரமத்துல தாரா போலயே முதுகுல மச்சம் இருக்குற இன்னொரு குழந்தை இருந்து அந்த குழந்தையையே பார்த்தவங்க பணத்துக்காக தகவல் சொல்லி பணத்தை பறிச்சாங்களான்னு முதல கண்டு பிடிக்கணும்” என்றாள்.
கயல்விழி கூறக் கூற அங்கிருந்த வெள்ளை பலகையில் குறிக்கலானான் கார்த்திகேயன்.
“ரெண்டு வயசுல காணாம போன குழந்தை நாலு வருஷம் கழிச்சி கிடைச்சிருக்கு என்று சொல்லுறீங்க. அப்போ எப்படி இப்போ பணம் கேட்டுட்டு குழந்தையை கொடுத்திருக்காங்க?”
“பணம் கேட்டு பல தடவை அலைபேசி அழைப்புக்கள் வந்திருக்கு. போலீஸ் கண்காணிக்கிறாங்க என்றதும். யாரும் பணத்தை வாங்க வரல. போலீஸ் தன்னோட பார்வையை இந்த கேஸ்ல இருந்து அகற்றும் வரைக்கும் காத்திருந்து பொறுமையா காய் நகர்த்தியிருக்காங்க. அதனாலதான் சொல்லுறேன் குழந்தையை கடத்தினதும், பணத்தை அடிச்சதும் நல்லா தெரிஞ்சவங்கனு”
“குட். திவ்யா ஆசிரமத்துல என்ன விசாரிச்ச?”
“சந்தேகப்படும்படியா எதுவுமில்லை. ஆனா ஒரு ரெண்டு வயசு குழந்தை கிடைச்ச அன்னைக்கே காணாம போய் இருக்கு” என்றாள்.
“தட்ஸ் ரைட் அது தான் தாரா. குழந்தையை கடத்தினவங்க, குழந்தையை ஆசிரமத்துல விட்டிருக்கணும், அவங்கள பின் தொடர்ந்த வேற யாரோ அவங்களுக்குத் தெரியாம குழந்தையை கடத்தியிருக்கணும்” என்றான் கார்த்திகேயன்.
“ஆமாம்” அவன் கூற்றை ஆமோதித்த கயல்விழி “இது தெரியாம கடத்தினவங்க நாலு வருஷம் காத்திருந்து போலீஸ் கெடுபிடி குறைஞ்சதும் பணம் கேட்டு வாங்கி, குழந்தை இருக்குற ஆசிரமத்தையும் சொல்லியிருக்காங்க” என்றாள்.
“குழந்தையை கடத்தினவங்களோட நோக்கம் பணம் மட்டும் தான். நல்லா தெரிஞ்சவங்க எங்குறதால குழந்தையை தங்களோட வீட்டுல வச்சிக்க முடியாது என்று தான் ஆசிரமத்துல விட்டிருக்கணும். கடத்தினவங்கள கண்டு பிடிச்சிடலாம்” கார்த்திகேயன் புன்னகைக்க
“ஆனா சார் குழந்தையை ஆசிரமத்துல இருந்து யார் கடத்தினாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது?”
“அதுக்கு எனக்கு ரகு அண்ட் ராதாவோட பாஸ்ட் லைப் டீடைல்ஸ் வேணும் திவ்யா” என்ற கார்த்திகேயன், கயல்விழியை ஏறிட்டு காலேஜ் போறப்போ ராதா யாரை காதலிச்சான்னு உனக்கு தெரியுமா கயல்?” என்று கேட்டான்.
கயல்விழி அதிர்ந்தது “தெரியாது” என்று தலையசைக்க, திவ்யா இருவரையும் குறுகுறு என்று பார்த்தாள்.
அவள் பார்வையின் அர்த்தம் கார்த்திகேயனுக்கு புரியாதா? “உங்க காலேஜ் மேட் என்று தான் இந்த கேச என் கிட்ட கொண்டு வந்தீங்க. பிரென்ட் பத்தி உங்களுக்கே தெரியல்னா எப்படி?” என்றான்.
“ஓஹ்…” என்ற திவ்யா கார்த்திகேயன் பார்த்ததில் கொட்டாவி வந்தது போல் வாயில் கையை வைத்தாள்.
“என்ன திவ்யா டயடா இருக்கா?” ஒரு வாரம் பத்து நாள் எடுத்துக்க எனக்கு டீடைல்ஸ் மட்டும் கொடு. இப்போ கிளம்பு” என்று அவளை துரத்த அவளும் எந்திரித்தாள்.
“திவ்யா சீசீடிவி புட்டேஜ் எதுவும் கிடைக்கலையா?” ஏமாற்றமாக கயல்விழி அவளை ஏறிட
“குழந்தை காணாமல் போய் அஞ்சு வருஷமாச்சு. திரும்ப கிடைச்சி ஒரு வருஷமாச்சு. தேடிகிட்டு இருக்கேன். கிடைச்ச உடனே தரேன்” புன்னகைத்தவாறே வெளியேறினாள் திவ்யா.
அவள் தலை மறைந்ததும் “அன்னக்கி நீ போட்ட டீயும், இன்னக்கி விக்னேஷ் போட்ட டீயும் ஒரே மாதிரி இருக்கே. எப்படி? அவன் உனக்கு டீ போட சொல்லிக் கொடுத்தானா? இல்ல நீ அவனுக்கு சொல்லிக் கொடுத்தியா?” இவர்களுக்குள் என்ன மாதிரியான உறவு என்று அறிந்துகொள்ளவே கார்த்திகேயன் இப்படி பேசினான்.
“ஐயோ வேதாளம் திரும்ப முருங்கை மரத்துல ஏறுதே” என்று அவனை பார்த்தவள், அவளுக்கு திருமணமாகி அவள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பொழுது விக்னேஷை சந்தித்தாள் என்று கூறினால் மேலும் கேள்விகள் எழும் என்று “விக்னேஷ் பரசுராமன் அங்கிள் பையன். பரசுராமன் அங்கிள் என் அப்பாவோட வக்கீல்” என்று முடித்தாள்.
“ஓஹ் ரெண்டு பேரும் சைல்ஹுட் ப்ரெண்டா? அதான் ரொம்ப உரிமை எடுத்து உன் கூட பழகுரானா? ஆனா எனக்குத்தான் உன்ன பத்தி முழுசா தெரியல” காதலிக்கும் காலத்தில் இப்படியொரு நண்பன் இருக்கிறான் என்று சொல்லவில்லையே என்று குற்றம்சாட்டினான்.
அப்பொழுது விக்னேஷ் நண்பனாக இருந்திருந்தால் சொல்லியிருப்பாளே. சொல்லும் அளவுக்கு விக்னேஷ் முக்கியமான நண்பன் இல்லை என்றும் சொல்ல முடியாது. விக்னேஷை பற்றி சொல்லுமளவுக்கு நீ முக்கியமானவன் இல்லை என்றும் சொல்ல முடியாதே