அத்தியாயம் 17

அன்றிரவு மாப்பிள்ளை வீட்டு உறவுப்பெண்களும் பூங்கோதையும் ஜெயந்தியை அலங்கரித்துக் கொண்டிருக்க, “பூவு! கயலு எங்கடி?” என்க, “எங்கூட தான் சாப்பிட்டா, தலைவலிக்குனு சொல்லி படுத்துட்டான்னு அத்தை சொன்னாங்க ஜெயந்தி” என்றாள்.

அவ முகமே சரியில்ல பூவு, எனக்கென்னவோ இந்த கல்யாணத்துல அவளுக்கு விருப்ப..ம்..மி..” என்னும் போதே லேசாக அவளைக் கிள்ளிய பூவு, உறவுப் பெண்களை ஜாடை காட்டினாள். ஜெயந்தியும் அதையறிந்த அமைதியாகி விட, அவள் மனதிற்குள் என்னவோ நெருடலாக இருந்தது. 

சந்திரனிடமாவது பேசிப்பார்க்கலாம் என்று நினைத்து, “அண்ணா எங்கடி இருக்காங்க?” என்க, “யாரு,சந்திரன் மாமா? இல்ல செல்வா..?” என்னும் போதே பற்களைக் கடித்துக் கொண்டு,”என் உடன் பிறப்பு தான் எங்க அவன்?” என்றாள். 

அவங்களும் அப்போவே சாப்பிட்டு போனாங்களே, இப்போ படுத்திருப்பாங்க?” என்றாள். அலங்காரமும் முடிந்துவிட எழுந்தவள், சந்திரனைப் பார்த்து வருவதாகச் சொல்லி மாடியேறினாள். 

சந்திரன்,கயல்,ஜெயந்தி என மூவருமே சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்த்தவர்கள் அப்படி இருக்க, சந்திரனுக்குக் கயலின் மீது காதல் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது. உரிமையோடு தன்னிடம், அன்பு,அதட்டல், அதிகாரத்தைக் காட்டியதை போன்று தான் அவளிடமும் நடந்து கொண்டான். 

ஒரு பார்வை கூட அவன் வித்தியாசமாகக் கயலை பார்த்ததில்லை. என்றுமே ஜெயந்திக்கும்,கயலுக்குமிடையில் சந்திரன் வித்தியாசம் காட்டியதில்லை. அவ்வாறு இருக்க அவர்கள் இருவரையும் காதலர்களாக நினைக்கத் தங்கியது ஜெயந்தியின் மனம். 

கயலுக்கும் தன் அண்ணனுக்கும் திருமணம் நடப்பதில் மகிழ்ச்சி தான், பெரியவர்கள் பேசி திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணி இருக்க, சந்திரனின் அவசரமும், கயலின் கவலை முகம் காண ஜெயந்திக்கு ஏதோ சரியில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியது. இருவரின் வாழ்க்கையும் நலமோடும், மகிழ்வோடும் இருக்க வேண்டும் என்றெண்ணினாள். 

சந்திரன் நிம்மதியோடு இரவின் நிலவழகை ரசித்துக் கொண்டிருக்க,”இத எதுக்குடா எங்கிட்ட சொல்லல்ல? இத்தனை வருஷம் உன் கூட இருந்திருக்கேன் ஆனா நீ எங்கிட்டையே கயலை லவ் பண்ணுறத சொல்லல்ல, நீயெல்லாம் ஒரு ஃப்ரண்ட்டா?” எனக் கேட்டவாறு அவனை பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. 

சந்திரனிடம் பதிலில்லை, பரவசநிலையில் மேலும் புன்னகைத்துக் கொண்டிருந்தான். செல்வா கடுகடுப்புடன் முறைத்துக் கொண்டு நிற்க, “எனக்கும் அதே சந்தேகம் தான்? நீ உண்மையாவே கயலை விரும்புனையா?” எனக் கேட்டவாறு வந்து நின்றாள் ஜெயந்தி. 

அதற்கும் சந்திரன் அமைதியுடன் இருக்க, அவன் முன் வந்து முகம் பார்த்து நின்றவள், மீண்டும் கேட்க,”ஆமா ஜெயந்தி கயலைத் தான் சின்ன வயசுல இருந்தே விரும்புறேன், உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையாமா?”என்றான்.

இஷ்டமில்ல தான், எனக்கு இல்ல கயலுக்கு அவ முகமே சரில்லண்ணா! அவ கிட்ட யாருமே கேட்கலையே, இன்னைக்கு மேடையில எப்படி உக்கார்ந்திருந்தா தெரியுமா? கண்ணு கூட கலங்கி இருந்துச்சு” என்க, 

அப்படிலாம் இல்லம்மா, திடீர்னு கல்யாணம்னு சொல்லவும் பயந்துட்டா போல அதான் அப்படி இருந்தா” என அவனே விளக்கம் கூறினான். 

ஆனால் ஜெயந்தி அதை ஏற்றுக்கொள்ளாமல் தயங்கி நிற்க, அதற்குள் அவள் அன்னை வந்து அழைத்துச் சென்றார். 

தான் விரும்பிய தன் அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வரவிருக்கிறாள் என்ற மகிழ்ச்சியிலிருந்தவர், ஜெயந்தி, கயல் இருவரையும் கவனிக்கவில்லை. ஜெயந்தியிடம் ஒரு பால் செம்பை கொடுத்தவர் விக்னேஷின் அறைக்குள் அனுப்பி வைத்தார். 

குழப்பமுடன் உள்ளே செல்ல, கதவின் பின்னிருந்து தீடிரென விக்னேஷ் அணைத்தான். பயத்தில் பதறி பால் செம்பை கீழே போட்டவள், வேக மூச்சு வாங்க அவன் முகம் பார்த்து நின்றாள்.

என்ன சொல்லுவானோ என்ற பயத்திலே அவள் கைகள் நடுங்க, மெல்லிய புன்னகையோடு அருகே வந்தவன், “யேய் ஜஸ்ட் ரிலாக்ஸ்! ரிலாக்ஸ், பயப்பட வச்சிட்டேனா? நான் என்னவோ எதிர்பார்த்தேன் பட் என் ஐடியா இப்படி சொதப்பிரிச்சு” சிந்திய பாலை பார்த்தவாறு தன் தலையில் தட்டிக் கொண்டு சிரித்தான். 

ஜெயந்தியும் லேசாகச் சிரிக்க, அவளையும் அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தியவன், அவள் கைவிரல்களை மென்மையாக வருடிக்கொண்டு, “ஆமா நீ ஏன் ஒரு மாதிரி இருக்க? விருப்பமில்லையா?” என்றான் குரல் இறங்க. 

அவள் இடது வலதாக, லேசாகத் தலையாட்ட, தன் கையை விளக்கிக் கொண்டவன் தள்ளி அமர்ந்தான். அதன் பின்னே அவன் கேள்வியும் செயலும் புரிய, பதட்டத்துடன் அவன் முகம் பார்த்தவள், “அண்ணனுக்கு நிச்சியம் நடந்துல விருப்பமில்லைனு சொன்னேன்!” என்றாள். 

அவளை இழுத்து அணைத்தவன், “அப்போ இப்போ விருப்பம் அப்படி தானே?” என்க, மெல்லிய சிணுங்கலோடு மேலும் அவனோடு ஒட்டிக்கொண்டாள். 

இங்க பாரு ஜெயாம்மா, முதல்ல என்ன இருந்தாலும் எங்கிட்ட சொல்லும்மா. இப்போ என்ன உன் பிரச்சனை? கயல் முகமே சரியில்ல, நிச்சயதார்த்தம் நடந்ததுல கயலுக்கு விருப்பமில்லைனு நினைக்குற அப்படித்தானே?” என்க, அவனிடமிருந்து எழுந்து அவன் முகம் பார்த்து தலையை மட்டும் ஆட்டினாள். 

ஒருவேளை கயலும் சிரிச்சி, சந்தோஷமா இருந்திருந்தா நீயும் சந்தோஷமா இருந்திருப்ப சரிதானே?”என்க,”ம்ம்ம்..” என்றாள். 

கயலுக்கு விருப்பமா? இல்லையானு நீ கேட்டுட்டு அப்பறம் பெரியவங்க கிட்டப் பேசு, அவ மனசு தெரியாம நீ எதுவும் பேசி, பிரச்சனையாகிட வேண்டாம் சரியா?” என்றதற்கும் தலையாட்டினாள். 

உனக்கும் விருப்பம்னு சொல்லிட்ட, அதனால பேசுனதெல்லாம் போதும்னு நினைக்குறேன்” என மென்குரலில் கிசுகிசுத்தவன் மீண்டும் அவளை இழுத்து அணைக்க, அவளும் முகம் சிவக்க அவன் நெஞ்சில் பதிந்து கொண்டாள். 

செல்வாவும் சென்றுவிட, சந்திரன் படுக்கையில் படுத்துக் கொண்டு இரவு வானத்தை வெறித்தவாறு சிரித்தான். 

சந்திரனின் மனதில் பதிந்திருந்தது என்னவோ சிறுவயது கயல் தான். சிறுமிக்கும், இளம் பெண்ணிற்குமான வித்தியாசத்தைக் கூட கயலிடம் தேடியதில்லை. ஜெயந்தி எண்ணியதை போல ஒரு பார்வையில் கூட கயலை வேறுபடுத்திப் பார்த்ததில்லை தான் ஆனால் கயலைத் திருமணம் செய்ய நினைப்பதற்குக் காரணம் அன்பு. 

அவனறிந்து பொதுவாக அன்பு பெண்களிடம் பேசியதேயில்லை. அப்படியிருக்கக் கயலிடம் அவன் காட்டும் ஆர்வம் அவள் மேல் கொண்ட காதல் தான் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டான். அதுவும் ஒவ்வொரு முறையும் அவன் பார்க்கும் பார்வையில் உள்ள எல்லையில்லா காதலைச் சரியாகக் கண்டுகொண்டான் சந்திரன். அன்புவின் பலகீனம் அவள் தான் என்பதைச் சரியாகக் கணித்துக் கொண்டான். 

மேலும் தன் அன்னை மேல் இருக்கும் பாசம். அவருக்குக் கயலின் மேலிருக்கும் பாசம் அனைத்தும் அறிந்ததே! தங்கள் வீட்டு அடுப்பறையில் அன்னையோடு பேசிக்கொண்டு கயல் சமையல் செய்யும் அழகை என்றும் ரசித்ததுண்டு. தன் அன்னைக்குக் கயலை விடச் சிறந்த மருமகள் கிடைக்க மாட்டாள். எப்படியும் தன் வாழ்வில் ஒரு பெண்ணை மணப்பது தானே, அது தன் கயலாகவே இருக்கட்டும் என்றெண்ணினான். 

கயலை தன் மனைவியாக, தன்னோடு பார்க்கையில் அன்புவால் தாங்க இயலாது அவன் நெஞ்சே வெடித்து விடும். அவன் காதலே அவனை சிறுக சிறுக கொன்றுவிடும். 

சந்திரனின் எண்ணத்தில் கயல் மகிழ்ச்சியை வாரி வழங்கும் பொக்கிஷ புதையல், அன்புவை அணு அணுவாய் கொல்லக் கிடைத்த ஆயுதம். 

இவ்வாறெல்லாம் எண்ணி இருக்க, எல்லாரும் கேட்கும், “நீ கயலை விரும்பினாயா? உண்மையா?” என்ற கேள்வி அவனுக்கு அடக்க இயலாத சிரிப்பைக் கொடுத்து. அதே சிரிப்புடன் விழி மூடினான். 

காலையில் வேகவேகமாக அன்பு வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, “நம்ம பெரியமாமா ஊருல ஒரு பொண்ணு இருக்காம், பார்க்க அழகா இருக்கலாம், போய் ஒரு தடவை பாப்போமாடா, உனக்கு பிடிச்சா தான் இல்ல வேண்டாம்” என்று வந்து நின்றார் சிவகாமி. 

கடந்த ஒருமாதமாகப் பெண் பார்ப்பது பற்றி பேசாமல் இருந்தவர் இப்போது கேட்பது ஏன் என்று கூட யோசிக்காமல், “ஆச்சி, எத்தன தடவ சொல்லுறது அதெல்லாம் வேண்டா, எனக்கு இப்போ வேலயிருக்கு நைட் பேசிக்கலாம்” என்று வெளியே சென்றான். 

அந்த சந்திரன் பயலுக்கே நிச்சியம் பண்ணிட்டாங்க, உனக்குப் பண்ண வேண்டாமா?” என அவர் கேட்டது அவன் காதில் விழவேயில்லை. 

டவுனுக்கு சென்றவன் நேராக தாலுகா அலுவலகம் சென்றான். ஒருவாரமாக விடுமுறையிலிருந்த டி.எஸ்.ஓ அப்போது தான் வந்திருக்க அவரை பார்க்கச் சென்றான். 

அன்புவை பார்த்ததும், புன்னகை பூக்க வரவேற்று அமர வைத்து, “வாங்க அன்புச்செழியன், உங்க அப்பா பத்தி கேள்விப்பட்டேன் வருத்தமா இருந்துச்சு. ரொம்ப நல்ல மனிதர், எனக்கு நிறையவே உதவி பண்ணி இருக்காரு. ஒரு அரசாங்க அலுவலர் நேர்மையா இருக்கும் போது எவ்வளவோ பிரச்சனை வருது, அப்படி சில பிரச்சனைகள் எனக்கு வரும்போது அவருதான் ஹெல்ப் பண்ணாரு அன்ட் பர்சனலாவும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணிருக்காரு. அவருக்கு நான் எப்பவும் நன்றி கடன்பட்டவன்” சற்று தளர்வுடன் பேசினார். 

தந்தை இதுபோல் நிறையப் பேருக்கு உதவியிருக்க, அவனும் இது போல் கேட்டுப் பழகியதால் லேசான புன்னகையுடன் அமைதியாக இருந்தான். 

அது இருக்கட்டும் அன்புச்செழியன் என்ன விஷயம் இவ்வளோ தூரம் வந்திருக்கீங்க?” என்க, “சார் ஒரு உதவி கேட்டுத் தான் வந்தேன், எங்க ஊருக்கு இந்த மாதத்துக்கு ரேஷன் பொருள்கள் அனுப்பியாச்சான்னு செக் பண்ணிச் சொல்ல முடியுமா?” எனக் கேட்டான்.

உடனே தன் முன்பிருந்த கணினியில் பதிவு செய்துள்ள தகவல்களைச் சரிபார்த்தவர், இந்த மாதம் மூன்றாம் தேதி உணவுப் பொருட்களும், ஐந்தாம் தேதி எண்ணையும் அனுப்பியுள்ளதாகக் கூறினார். 

அதே தேதியில் தான் அன்று ரேஷன் கடையில் சரக்கு இறங்குவதைப் பார்த்தது நினைவில் வந்தது அன்புவிற்கு, ஆக ஊருக்குள் பொருட்கள் வந்து கடையில் இறக்கப்பட்டது வரை உறுதி செய்து கொண்டவன், சிந்தனையில் இருக்க, “என்ன அன்புச்செழியன் ஏதாவது பிரச்சனையா?” என்றார். 

தன்னிடமிருந்து ஆறு குடும்ப அட்டையை(smart card) எடுத்துக் கொடுத்தவன், “இவர்களுக்குப் பொருட்கள் கொடுத்தாச்சானு செக் பண்ணிச் சொல்ல முடியுமா சார்?” எனக் கேட்டான். 

மீண்டும் கணினியின் பதிவுகளைப் பார்த்தவர், “ம்ம், இந்த மாசம் பத்தாம் தேதி இந்த ஆறு கார்டுக்கும் டிஸ்டிப்புட் பண்ணியிருக்காங்க அன்புச்செழியன்” என்றார்.

அன்புவிற்கே சற்று ஆச்சரியம் தான், தன் பண்ணையில் வேலை செய்யும் ஆறு பேரிடமிருந்து அவர்கள் குடும்ப அட்டையை வாங்கியிருந்தான். அதில் இருவருக்கு மட்டுமே இந்த மாதத்திற்கான பொருட்கள் வழங்கியிருக்க, நான்கு பேருக்கு வழங்கவில்லை என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்திருந்தான். ஆகவே இவர் கூறும் தகவல் அதற்கு முரணாக இருப்பதால் யோசனையோடு அமர்ந்திருந்தான். 

அவரும் என்ன என்று விசாரிக்க அனைத்தும் கூறினான். “எனக்கு கீழ இவ்வளோ பெரிய தவறு எனக்கே தெரியாம நடந்திருக்கே? சரியான நேரத்தல எனக்கு தெரியப்படுத்துனதுக்கு நன்றி. நான் உடனே நடவடிக்கை எடுக்குறேன். உங்களால பொதுமக்கள் சார்பா ஒரு காம்ப்ளைன்ட் எழுதித் தர முடியுமா?” என்றார். 

அவனும் சரியென்று ஒரு காம்ப்ளென்டை எழுதி தனது கையெழுத்திட்டுக் கொடுத்தான். அதன் பின்னே விடைபெற்றுக் கிளம்பினான். 

ஜெயந்தியின் கல்யாணத்திற்கு அடுத்த நாளே திருவிழா தொடங்கியது. திருவிழாவிற்குப் பின் இரண்டாம் நாளே சந்திரன், கயல் திருமணம் இருந்தது. ஆகையால் வந்த உறவுகள் அனைவரும் அப்படியே தங்கிவிட்டனர்.

ஜெயந்தியும், சந்திரனின் திருமணத்திற்குப் பின்பே புகுந்த வீட்டிற்குச் செல்வதாக இருந்தது. 

ஊரே திருவிழா கொண்டாட்டத்தில், வண்ண விளக்கொளியில் இருக்க, கயல் மட்டும் தனிமையில் இருளில் இருந்தாள். 

மறுநாளே கயலைப் பார்க்க வந்த ஜெயந்தி, ஒரே நாளில் புயலில் சிக்கிய பூங்கொடியாய், நலிந்த தேகமும், பொலிவிழந்த முகமும், கண்ணீர் தடம் பதிந்த கன்னமுமாகக் காண, அதிர்ந்தே போனாள்.

புதுப்பெண்ணான ஜெயந்திக்கு உறவுகளுக்கும், காதல் கணவனுக்கும் இடையில் நேரமே கிடைக்கவில்லை. அவ்வாறு இருக்கக் கிடைக்கும் நேரத்தில் தனிமையில் கயலிடம் பேசிப்பார்த்தாள்.

ஆனால் கயலின் மௌனத்தை அவளால் உடைக்கவும் முடியவில்லை. அதன் காரணமும் அறிய முடியவில்லை. கயல் கூறியது ஒரே ஒரு வார்த்தை, இந்த திருமணம் நடக்காது என்பது மட்டுமே!

அதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்காமல் தங்கள் வீட்டுக்குச் சென்று விட்டாள் கயல். 

என்னதான் தன் மீது கோபமிருப்பினும் அன்பு தன்னை கை விடமாட்டான். இந்த திருமணத்தைக் கண்டிப்பாக நிறுத்துவான் என்ற உறுதியுடன் இருந்தாள்.

ஆனால் விதியின் சதியோ, கயலுக்குத் திருமணம் என்பதையே அன்பு இன்னும் அறியாமலிருந்தான்.