அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.
அவள் அருகில் வர, அவன் கோபப் பார்வையின் அனல் வீச்சு மேலும் கூடியது. “இங்கன உனக்கு என்ன வேல? வேண்டாதவங்க இடத்துல ஆகாத நேரம் எதுக்கு நிக்குற? ம்ம்..” கேள்வியே அதட்டலுடன் வெளிவந்தது.
“டதூரா ஸ்டரமோனியும் (Datura stramonium)” என்க, அவன் புரியாமல் யோசிக்க, ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டாள்.
அவன் நிமிர்ந்து பார்க்கத் தலை குனிந்து கொண்டாள். “அப்படினா…?” புரியாத பாவனையில் மேலும் எரிச்சலுடன் கேட்டான்.
துப்பட்டாவை விரலில் சுற்றிக் கொண்டிருந்தவள் அதை விடுத்து அன்புவின் தோப்பு வீடு நோக்கிக் கை காட்டி, “அந்தா இருக்குதே அந்தப் பூ, அந்தப் பூவ பறிக்க வந்தேன்” என்றாள்.
அவள் பதில் மேலும் கோபம் கொண்டு வெளிப்படையாகவே அவளை முறைத்தவன் அதற்கு மேலும் நிற்க இயலாது என்றெண்ணி, “முதல்ல வண்டியில ஏறு, வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று வண்டியை ஸ்டார்ட் பண்ணப் பின்புறம் ஏறி அமர்ந்தாள்.
“ஆமா, அது என்ன பூவு? ஊருலையே இல்லாதது அவன் தோப்புல மட்டும் இருக்குற பூவு?” எனக் குத்தலுடன் கேட்க, ” ஊமத்தம் பூ” என்றாள் மென் குரலில்.
அவனுக்குக் கோபம்தான் பொங்கியது, ஏனெனில் அந்தப் பூ அவன் தோட்டம் முழுவதும் இருந்தது. மேலும் கயல் வீட்டின் பின் புறத்திலே இருக்க, அவள் அன்புவின் தோப்பில் பறிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி அவன் மனதில் உடனே எழுந்தது.
அவன் சிந்தனையில் அமைதியாகி விட, அவன் எண்ணம் அறிந்தவள், “அப்பாவ பார்த்துட்டு வயல்ல இருந்து வரும் போது அந்தப் பூவ பார்த்தேனா? அப்போ தான் டூஷன் பசங்க அந்தப் பூ கேட்டது ஞாபகம் வந்ததா? அதான் உடனே பறிக்கப் போனேன். அதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்க” எனச் சிறு பெண் போல் அப்பாவியாகக் கூறினாள்.
‘மாமா இவள பாட்னி படிக்க வச்சதே தப்பா போச்சு, எப்பப் பாரு தெரிஞ்ச பூவுக்குத் தெரியாத பேரச் சொல்லிக்கிட்டு பூவ பறிக்கிறேன்,காயப் பறிக்கிறேன்னு காட்டு வழியா சுத்திக்கிட்டு இருக்கா’எண்ணியவாறு கயலின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்.
அதே நேரம் கயலின் தந்தை வேல்முருகனும் வர அவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“வாடா மாப்பிள்ள, எப்படி இருக்கே? என்ன இந்த பக்கம்?” என்றவர் திண்ணையில் அமர, கயல் வீட்டிற்குள் சென்றுவிட அவனும் திண்ணையில் அமர்ந்தான்.
“அதுவா மாமா கயலு தனியா நடந்து வந்துச்சி. அதான் இந்த நேரம் தனியா போகுதேன்னு கூட்டியாந்தேன், அவள எதுக்குத் தனியா அனுப்புறீங்க?” என்றான் உரிமையான கோபத்துடன்.
“பொழுதாவே கிளம்பிட்டாளே, இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வந்துருப்பான்னு நினைச்சேன். சின்ன புள்ளைக கூட சுத்திட்டு வரா போல. அது சரி, மாப்புள்ள என்ன சாப்புடுற?” என்றவாறு வீட்டுக்குள் குரல் கொடுத்தார்.
தன் மகளை விட்டுக் கொடுக்காது பேசியவர் பேச்சை மாற்றினார். அதே நேரம் வீட்டிற்குள்ளிருந்து வந்த கற்பகம் அவன் கையில் ஒரு காஃபி கிளாஸை கொடுத்து விட்டு, ” வாங்கத் தம்பி…” என வரவேற்பாக அழைத்தார்.
அவரிடம் தலையாட்டியவன், அவர் தந்த காஃபியை பருகிவிட்டு இருவரிடமும் விடை பெற்றுக் கிளம்பிச் சென்றான்.
அவன் சென்ற பின், அன்பு மகளை நேரடியாகக் கண்டிக்க இயலாது மனைவியிடம் மகளுக்கு அறிவுரை கூறுமாறு சொல்லிச் சென்றார்.
வேல்முருகனும் வசந்தாவும் (சந்திரனின் அன்னை) உடன்பிறப்புகள். தந்தை இல்லாது குடும்ப பொறுப்புகளைத் தாங்கி அன்னையும் தங்கையும் கவனித்து வந்தார் வேல்முருகன்.
இருக்கும் சிறிதளவு நிலத்தில் விவசாயம் பார்த்து உடன் கால்நடைகளையும் வளர்த்து தங்கையைப் படிக்க வைத்து வளர்த்தார். வேல்முருகன் கடுமையான உழைப்பாளி.
வசந்தாவின் இயற்கை அழகும் அமைதியும் கண்டு விரும்பிய விஜயராகவன், அவரையே மணக்க வேண்டுமெனத் தங்கள் வீட்டில் கூறினார். இதில் முதலில் விருப்பமில்லாத ருக்மணி, பின் மகனின் பிடிவாதம் கண்டு சம்மதித்தார்.
வசந்தாவிற்கு அண்ணனைக் கடனாளியாக்கிப் பெரிய வீட்டு மருமகளாகச் செல்வதில் விருப்பமில்லை தான். ஆனால் வேல்முருகன் பெரிய வீட்டுச் சம்பந்தம் மேலும் தன் தங்கையை நேசிக்கும் மைத்துனர், தங்கையும் இதே ஊரில் இருப்பாள் என்பதால் விருப்பமுடன் தங்கையும் சம்மதிக்க வைத்தார்.
நிலங்களை அடமானம் வைத்து அன்னையின் நகை, இதுவரை தங்கைக்காகச் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு, மேலும் கால்நடைகளை விற்று சீர் செய்து சிறப்புடன் அவர்கள் திருமணத்தை நடத்தினார்.
முதலில் ஜெயச்சந்திரன் பிறக்க, அவனுக்கும் தாய்மாமன் கடமைகளைச் செய்தார். அதன் பின் அன்னையும் தங்கையுமாகக் கற்பகத்தைப் பெண் பார்த்து வேல்முருகனுக்கு மணமுடித்தனர்.
ஜெயந்தி பிறந்த இரண்டாம் மாதத்திலே கயலும் பிறந்தாள். இருவரும் சம வயது என்பதால் சிறு வயதில் இருந்தே சொந்தத்தைத் தாண்டிய நட்பு இருவருக்குள்ளும் இருந்தது.
பள்ளி செல்லும் போது இவர்களுடன் பூங்கோதையும் சேர்ந்து கொள்ள, எப்போதும் ஒன்றாகவே விளையாடுவது, பள்ளி செல்வது, ஊர் சுற்றுவது என உறங்கும் நேரம் தவிர மூவரும் ஒன்றாகவே இருந்தனர் அவர்களின் கல்லூரி படிப்பு முடியும் வரை.
மூவரும் பட்டம் முடித்ததும் ஜெயந்தியின் தந்தை விஜயராகவனும், பூங்கோதையின் தந்தை இராஜமாணிக்கமும் தங்களின் பிள்ளைகளுக்கு வரன் தேட தொடங்கினர். இருவருக்குமே தங்களின் பிள்ளைகளை நகரத்தில் திருமணம் செய்து கொடுத்து. அனைத்து வசதிகளுடன் வாழ வைக்க ஆசை கொண்டிருந்தனர். அதற்கான தகுதியும் இருக்க நல்ல வரனாகத் தேடினர். ஜெயந்திக்கு அமைந்து விட, நிச்சியம் முடித்து திருமணத்திற்கான ஏற்பாட்டிலிருந்தனர்.
ஆனால் வேல்முருகனுக்குக் கயலைச் சந்திரனுக்கு மணமுடிக்க வேண்டும் என்ற ஆசை. தன் இரத்தம் தன் தங்கையின் தலைமகன் எனச் சந்திரனை முதல் முதலாக கைகளில் ஏந்திய நாட்களிலிருந்தே அவன் மேல் தனி பாசம்.
வேல்முருகன், ஜெயசந்திரனை ஒரு கண்ணும் கயலை ஒரு கண்ணுமாக எண்ணினார். ஆனால் அவராக முன் சென்று இதைப் பேச விருப்பமில்லை எங்கே பாசத்தில் பந்தம் வேண்டிச் சென்று பணத்துக்காக வந்ததாக ருக்மணி ஒரு சொல் சொல்லிவிடுவாரோ என்ற தயக்கம்.
ஜெயந்தி திருமணத்திற்குப் பின் சந்திரனுக்குத் தன் மகளை அவர்களாகப் பெண் கேட்டு வந்தால் திருமணம் செய்து வைப்போம், இல்லையெனில் வெளியூரில் மாப்பிள்ளை பார்க்க எண்ணியவர், அதுவரை மகளின் விருப்பப்படி பி.எட் படிக்க வைத்தார்.
ஆனால் கற்பகத்திற்கு இதில் விருப்பமில்லை. தங்கள் செய்யும் சீர் முறைகளை விசேஷங்களின் போது மறைமுகமாக ஜாடையில் ருக்மணி குறை கூறுவதையும், அவ்வப்போது வசந்தாவை வார்த்தைகளில் குத்துவதையும் கற்பகம் இதுவரையிலும் கவனித்து வந்துள்ளார். வசந்தா அமைதியான குணம் தான். ஆனால் ருக்மணியின் குணம் அவரை மிரளச் செய்தது.
மேலும் தன் பெண் இந்தக் கிராமத்திற்குள் தன்னைப் போல் கஷ்டப்படக் கூடாது, அவள் படிப்பிற்குத் தகுந்த வேலையோடு நகரத்தில் நலமுடன் வாழ வேண்டுமென்றே அவர் தாயுள்ளம் ஆசை கொண்டுள்ளது. இந்த ஊரில் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டாம் என்பதில் உறுதியுடன் இருந்தார்.
வசந்தாவிற்குத் தன் அண்ணன் இதுவரை தனக்குச் செய்ததற்கெல்லாம் கைமாறாகக் கயல்விழியை தன் மருகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என மிகுந்த ஆசை.
இதுவரையிலும் தன்னையே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வார்த்தையில் வதைக்கும் மாமியார் ருக்மணிக்கு முன் தன் விருப்பத்தை வெளிக்காட்டாது அமைதி காத்தார். தன் ஆசையைக் கயலை அழைக்கும் விதத்திலும் கூட வெளிக்காட்டியதில்லை.
ஒருவேளை கயலை மருமகளே என்றழைத்து, அது ருக்மணியின் காதியில் விழுந்துவிட்டால் அவ்வளவு தான். வீட்டிற்கு வந்து செல்லும் கயலை ஏதாவது சொல்லிவிடுவார் என்ற பயத்தில், இதுவரையிலும் ஆசை இருந்தும் அனைவரையும் போல் கயலுஎன்றே அழைப்பார் வசந்தா.
மேலும் தோழமையோடு பழகும் சிறுவர்களுக்குள்ளும் சலனம் வேண்டாமென்றும் எண்ணினார். அவர் கணவர் மட்டும் அவரின் விருப்பமறிந்திருந்தார்.
ருக்மணிக்கு ஜெயச்சந்திரன் என்றால் அவ்வளோ பாசம். ஜெயந்தியைக் கூட சிறிது கண்டிப்புடன் வளர்த்தவர் சந்திரனை ஒரு சொல் சொன்னதில்லை. சரியோ தவறோ அவன் செய்யும் அனைத்து செயல்களையும் பாராட்டுவார். சந்திரன் அவர்கள் வாரிசு என்பதிலே அவருக்குத் தனி பெருமிதம்.
மகனின் திருமணம் தன் விருப்பம் போல் நடக்காததால் சந்திரனுக்கு அவர் விருப்பத்தைப் போல் திருமணம் செய்ய வேண்டுமென்ற ஆசை.
ஊர் மெச்சும் அழகு கொண்ட, நன்கு படித்த நகரத்துப் பெண்ணை திருமணம் செய்து வைத்துக் கண் குளிர காண வேண்டும். அதுவும் சிவகாமி கண்டு வியக்கும் படி ஊரே பெருமை பேசும்படி சந்திரனின் திருமணத்தை நடத்த வேண்டுமென்ற நீண்ட கனவைத் தன்னுள் சேமித்து வைத்திருந்தார்.
இதில் யார் யார் ஆசை நிறைவேற?
ஒவ்வொருவரின் விருப்பமும் வெவ்வேறாக வெவ்வேறு இலக்கை நோக்கி இருக்க, அவர்களின் எண்ண வலைக்குள் அன்பு – கயலின் காதல் அவர்கள் அறியாது சிக்கித் தவித்தது.
இரவில் அவள் நினைவில் உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தவனுக்கு, ‘மாமா..’ என்ற அவள் அழைப்பு, அந்தக் குரல் இப்போதும் அவன் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.
அப்போதே திரும்பிச் சென்று அவளை அணைக்கத் துடித்தன கைகள், அதைச் செய்து விடுவோமோ என்ற பயத்திலே விலகி ஓடி வந்தவன், இப்போது நிம்மதியின்றி தவித்தான்.
‘செல்லம்மா.. செல்லம்மா..’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் தன் தவிப்பை அடக்கி, ஆறுதல் தேடி கண் மூடினான்.
மெத்தையில் படுத்திருப்பினும் உறக்கமின்றி அருகேயிருந்த ஜன்னல் வழி தொலைவில் தெரிந்த நிலவை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் கயல்.
நீண்டு விரிந்து கருமை பூசிய வானில், நட்சத்திரங்களின்றி நிலவு மட்டும் தனித்துத் தவித்துக் கரைந்து கொண்டிருந்தது அவளைப் போல். தான் அழைத்தும் கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்திச் சென்றானே என்ற எண்ணம் எழுகையிலே விழியும் கலங்கியது.
ஆனால் உள்மனதில் எப்போதும் ஒரு நம்பிக்கை அவளை அழுத்தியது. பதினைந்து நாட்களுக்கும் மேலாக அவனைக் காணாமல் தவித்தவள், இன்று கண்டு கொண்டாள் அல்லவா? கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்தது மகிழ்ச்சி தானே? இன்று இனிமையான நாள் தானே? என்ற நேர்மறையான நம்பிக்கைக் குரல் உள்ளுக்குள் அழுத்தி ஒலிக்க நெஞ்சை அழுத்திப் பிடித்தாள். அந்த உற்சாகத்தில் விழி மூடினாள்.
மறுநாள் விடியலிருந்தே உற்சாகமும் துள்ளலுமாகத் தனது அன்றாட பணிகளைச் செய்தவளின் சிந்தனைக்குள் ஒரு கேள்வி தான் சுழன்றது. ‘அவனை நெருங்குவதற்கான முதல் அடி நான் தான் எடுத்து வைக்க வேண்டும்.என்ன செய்து அவனை நெருங்க?’இந்த கேள்விகளுக்கான விடைதான் தேடிக் கொண்டிருந்தாள்.
மாலையில் எப்போதும் அவர்கள் தெருவிலிருக்கும் அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் சிறிது நேரம் பாடம் சொல்லிக் கொடுப்பாள். இன்றும் வேப்பமர நிழலில் பத்து பதினைந்து சிறுவர் சிறுமிகளோடு அமர்ந்திருக்க, “கயலக்கா! எனக்கு இந்த செம்பருந்தி பூ படம் வரைந்து கொடு” என்றவாறு ஒரு பெண் அவளை இடித்துக் கொண்டு அமர்ந்து அவள் மடியில் ஒரு நோட் புக்கை வைத்தாள்.
அதற்கு மேல் ஒரு கணக்கு நோட்டை வைத்த சிறுவன், “அக்கா, இதுல இருக்குற கணக்குக்கெல்லாம் முதல்ல ஆன்சர் போடு. நான் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேன்” என்க, “ஏலே,குமாரு நில்லுடா. உனக்குத் தெரியாத கணக்க நான் சொல்லித்தான் தருவேன். உன் ஹோம் ஒர்க்கை நீ தான் பண்ணனும்டா” என்றாள்.
சற்று ஓடிச் சென்று தூர நின்று கொண்டு, “ஓய் கயலு, நீ இப்போ எழுதல அப்புறம் நீ எங்க கூப்பிட்டாலும் துணைக்கு வரமாட்டேன் பார்த்துக்கோ” பெரிய மனித தோரணையில் மிரட்டினான்.
“டேய், இங்க வாடா உனக்கு இருக்கு பாரு” குச்சியை நீட்டியவாறு கயல் மிரட்ட, “ஏலே குமாரு, நான் போய் நாளைக்கு டீச்சர் கிட்டச் சொல்லிக் கொடுத்திருவேன்டா” என்று அவன் வகுப்புச் சிறுமியும் கூறினாள்.
“ஏய் கோணக் குடும்பி கோகிலா, எங்க வீட்டுப் பக்கம் வரும் போது என் டாமியை விட்டுக் கடிக்க வச்சிருவேண்டி பார்த்துக்கோ!” என்று மிரட்டியவன், சிறுவர்கள் பிடிக்க வருவதற்குள் ஓடிவிட்டான்.
கயல் பரிதாபமாக முகத்தைச் சுருக்கிக் கொள்ள, அவள் தாடையில் கை வைத்து அவள் முகத்தைத் தன்புறம் திருப்பிய சிறுமி, ” கயலக்கா, நீயே எனக்கு டீச்சரா வந்திருக்கலாம். எல்லா கணக்கையும் நீயே பண்ணிடுவ” என்றாள்.
அருகே அமர்ந்திருந்த சிறுவர்கள்,“ஆமாடி கயலக்கா டீச்சரா இருந்தா நாம தப்பா எழுதுனாலும் எல்லா கேள்விக்கும் மார்க் போட்டுருவாங்க”
“நம்மக்கா டீச்சரா இருந்தா நாம பரிட்சையே எழுத வேண்டாம். நம்ம எல்லாருக்கும் பாஸ் மார்க் போட்டுருவாங்கப்பா!”
“அப்போ நான் பாஸ் ஆகிடுவேன். எங்க அப்பா என்ன திட்டமாட்டாங்களே”
எதிர்பார்ப்பு நிறைந்த ஆசைகளோடு தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, அனைத்தையும் கேட்டவள், சிரித்தவாறு அமர்ந்திருந்தாள். அதே நேரம் உள்ளுக்குள் ஒரு யோசனையும் தோன்றியது.
இரவு உணவிற்குப் பின் அன்னை பின்புறம் பாத்திரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருக்க, அவர் அருகே சென்றவள் அவர் கேட்காமலே அவருக்கு உதவினாள்.
இது தான் சமயம் என அவர் கணவரின் கூற்றுப் படி. ‘இப்படி நடந்து கொள், அப்படி நடந்து கொள்’ என்று அறிவுரைகளை அள்ளி வழங்கினார்.
எப்போதும் கேட்காமல் எழுந்து ஓடிவிடுவாள் இப்போது அமைதியுடன் தலையை ஆட்ட, அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
அவர் பேசி முடிக்கவே, ” எல்லாமே சரிம்மா இனிமே நான் தனியா எங்கையும் போக மாட்டேன், சின்னப் புள்ளைகளோட விளையாட மாட்டேன். அப்போ சும்மாவே நான் என்ன பண்ணட்டும்?சும்மா இருக்குறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா?” என்க,
“அது சும்மா இருக்குறவுங்களுக்குத் தான் தெரியும்டி எனக்கு எம்புட்டு வேல இருக்கு வழிய விடு” என்றவர் எழுந்து உள்ளே செல்ல, அவர் பின்னே சென்றவள், “அதாம்மா நானும் சொல்ல வந்தேன் நான் வேலைக்குப் போட்டுமா?” என்றாள்.
அவருக்குத் திடுக்கென்று இருந்தது எதுக்கு இப்போது இவளிடம் பேச்சை ஆரம்பித்தோம் என்று தன்னையே நொந்தவர், இப்போது என்ன சொல்ல எனச் சிந்தித்தார்.
“நம்ம ஊருல உள்ள ஸ்கூலுக்குத் தான், வேலைக்குப் போட்டுமா? ப்ளீஸ்ம்மா..” என்க, “உனக்குத் தான் இன்னும் ரிசல்ட்டே வரலையேடி” என்று அவர் மடக்கினார்.
“அது ஒன்னும் பிரச்சனை இல்ல, இன்னும் இரண்டு வாரத்துல ரிசல்ட் வந்துரும். அப்புறம் என் டிகிரி செர்டிபிகேட் இருக்கு அது போதும்மா,டவுன்ல வேலைக்கு போணும்னா முன்னாடியே ஒரு ஸ்கூல்ல வேல பார்த்த அனுபவம் இருக்கணும்னு சொல்லுவாங்கம்மா. அதுக்கு தான் இப்போவே நம்ம ஸ்கூலுக்கு போறேம்மா” என்றாள்.
அவளின் எதிர்கால நலன் என்று கூறியதில் சிறிது யோசித்தவர், பின் சரி என்றார்.
“நாளைக்கு காலையில சீக்கிரம் எழுந்து ரெடியாகு, போய் கேட்டுட்டு வரலாம்” என்க, அந்த பதிலில் மகிழ்ந்தவள், அன்னையின் கைகளைப் பிடித்து ஒரு சுற்று சுற்றி விட்டுத் துள்ளலுடன் தன் அறைக்குச் சென்றாள்.
அவருக்கோ, ‘சந்திரனிடம் என்ன சொல்ல? தன் கணவரிடம் என்ன சொல்ல?’என்ற சிந்தனை. மேலும் எப்படியேனும் தன் மகளின் எதிர்கால நலனுக்கு இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற உறுதியோடு உள்ளே சென்றார்.
பள்ளியின் நிர்வாகப் பொறுப்புகள் அன்புவிடம் தான் இருந்தது மேலும் பள்ளியில் புதிதாகக் கட்டிடம் மற்றும் சுற்றுச் சுவர் கட்டுவதால், அன்பு தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறான் என்பதைக் கயல் அறிந்திருந்தாள்.
அவனைத் தினமும் பார்க்கவே இப்படி ஒரு திட்டம். நாளை அவனைப் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகத்திலே அவளுக்கு உறக்கம் வரவில்லை. எப்போது விடியும் எனக் காத்திருந்தாள்.