பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது,அதோடு வானை பிளந்து கொண்டு வந்த இடியின் சத்தத்தில் கன்யா மேலும் அதிர்ந்து ஆரியை கட்டிக் கொண்டாள்.காரின் உள்ளே அமைதி மட்டுமே நிலவியது.கன்யா பயத்தில் ஆரியின் தோள்களை கட்டிக் கொண்டபடி இருக்க ஆரியின் விரல்கள் அவளின் வெற்றிடையில் அழுந்த பதிந்து இருந்தது.ஆனால் இருவரும் தாங்கள் இருக்கும் நிலையை உணரும் நிலையில் இல்லை.இயற்கை காட்டும் வர்ண்ன ஜாலங்களையும் அதில் இருக்கும் ஆபத்தையும் பார்த்து பயந்து தான் போயிருந்தனர்.
வெளியில் பெய்து கொண்டிருந்த பேய் மழையையும்,அடிக்கும் சூறைக்காற்றையும் கண்டு மிரண்டு தான் போயிருந்தாள் கன்யா.ஆரியின் திண்மையான மார்பில் இருந்து தன் தலையை தூக்கவேயில்லை உடல் முழுவதும் நடுங்கி கொண்டிருந்தது.அவள் அணிந்திருந்த பூனம் புடவை வழுவி அவளின் அங்கங்கள் தெரிய ஆரியனுக்கு தான் மேலும் அவஸ்தையாகி போனது.தன் மனைவி தான் ஆனால் இருவரும் இதுவரை இம்மாதிரி மிகவும் நெருங்கியது எல்லாம் இல்லை.ஆனால் இன்று அவளின் முழுயெடையும் அவனின் மேல் தான் இருந்தது.கரங்கள் இரண்டும் மனைவியை தழுவியிருக்க அவன் மனதில் முதல் முறை சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தாள் கன்யா.
ஒரு வேலை விஷயமாக வந்திருந்தான் ஆரியநாதன் வரும் வழியில் மழை பிடித்துக் கொண்டது.மழை வலுவாக பிடிக்கும் முன் சென்றுவிடலாம் என்று வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு வர எதிரில் நிழற்குடையின் உள்ளே ஒரு உருவம் இருப்பது போல் தெரிந்தது.முதலில் ஆணாக இருக்கும் பட்சத்தில் உதவலாம் என்று தான் சற்று வேகத்தை குறைத்தான் ஆனால் நின்று கொண்டிருப்பது பெண் என்று தெரிந்தவுடன் கடந்து சொன்றுவிட்டான்.ஆனால் அவன் கடந்து செல்லும் சமயம் தனது கண்ணாடியின் வழியே பார்த்தவனுக்கு அதிர்ச்சி நிற்பது தன் மனையாள் என்றவுடன் வேகமாக மீண்டும் பின்னோக்கி வந்திறங்க அவளோ இவனைக் கண்டவுடன் வில்லில் இருந்து பாய்ந்து வரும் அம்பு போல் அவனின் மீது ஒட்டிக் கொண்டாள்.
ஆரியும் இரு நாட்களாக கன்யாவை பற்றிய நினைவுகளிடன் தான் சுற்றி வந்தான். கன்யாவின் இந்தியா அலைபேசி எண்ணும் அவனிடம் இல்லை. அவனும் போட்டி நடத்திய குழுமத்திடம் அவளை பற்றி விசாரிக்க அவனுக்கு கிடைத்தது என்னவோ அவள் வேலை பார்க்கும் கம்பெனியின் விபரங்கள் தான் வேறு எதுவும் அங்கு உள்ளவர்களுக்கு தெரியவில்லை அதனால் அவளின் கம்பெனியில் பேசி தெரிந்து கொள்ளலாம் என்று இருந்தான். ஆனால் இவ்வாறு அவளை காண்பான் என்று அவன் நினைக்கவில்லை.
“ஏய் ஶ்ரீ….ஶ்ரீ….இங்க பாரு எந்திரி….பயப்படாத…நான் தான் கூட இருக்கேன்ல….”என்று ஆரியின் குரல் சற்று கரகரப்பாக ஒலித்தது.அவனுக்குமே அதிர்ச்சி தான் அவளது பயத்தைக் கண்டு எப்போதும் படபட பட்டாஸாய் பொரிபவள் இன்று கலங்கி போய் இருந்தது வலித்தது.அன்றும் இதே போல் தானே கலங்கி நின்றாள் ஏதோ யாருமற்றவள் போல் அவள் நின்ற தோற்றம் அவன் மனதை அசைத்து பார்த்தது.தான் எதிலேயோ தவறுகிறோமோ என்று யோசிக்க தொடங்கினான்.இவ்வாறு அவன் யோசனையில் இருக்க கன்யா சற்று தெளிந்து அவனிடம் இருந்து விட முயன்றாள்.ஆனால் வழக்கத்து மாறாக அவனின் பிடி இறுகியது.
“சீ….சீனியர்….சீனியர்….”என்று மெதுவாக அழைத்தாள்.முதலில் பயத்தில் அவனை கட்டிக் கொண்டு இருந்தவளுக்கு இப்போது தான் இருக்கும் நிலை புரிய மனது படபடவென அடித்துக் கொண்டது.அதிலும் அவனது கைகள் அவளது இடையை அழுத்தமாக பற்றி இருக்க அதுவேறு அவளை மேலும் அவஸ்தையை கொடுத்தது.அவள் இரண்டுமுறை அழைத்தும் அவன் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பதை உணர்ந்து,
“சீனியர்….சீனியர்….”என்று அவனின் கைகளை கிள்ள,
“ஸ்ஸ்ஸ்….ஆஆஆஆ….ஏய் ஏன்டி கிள்ளுன….”என்று அவளை விடுவித்து கேட்க,அவளோ அவனது கை தளர்ந்த நேரம் வேகமாக தனது இருக்கையில் அமர்ந்து தனது மூச்சை சீராக்க முயன்று கொண்டிருந்தாள்.
“கிள்ளாம…என்ன செய்வாங்க….இப்படியே இறுக்கமா கட்டி பிடிப்பீங்க….மூச்சு முட்டுது….பாவம் உங்க பொண்டாட்டி….”என்று தன் போக்கில் பேசுகிறேன் என்று தன்னையே அவள் அங்கு வாரிக் கொண்டிருந்தாள்.அவளது பதிலை கேட்ட ஆரிக்கு சிரிப்பு பீரிட்டது,
“ஹா…ஹா…ஹா….”என்று அவன் வாய்விட்டு நகைக்க,அவன் எதுக்கு சிரிக்கிறான் என்று புரியாமல் விழித்தவள்,
“இப்போ நாம அப்படி என்ன ஜோக் சொல்லிட்டோம்னு இவரு இப்படி சிரிக்காறாரு….”என்று அவள் குழப்பத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,அவளது புரியாத பாவனையில் ஆரிக்கு மேலும் சிரிப்பு பீரிட்டது.
“சீனியர்….சீனயர்ர்ர்…இப்ப எதுக்கு இப்படி சிரிக்குரீங்க….”என்று கோபம் போல அவள் கேட்க,ஆரியோ எப்போதும் போல் அவளது பாவனையிலும் அந்த குண்டு கண்களின் சுழட்டலிலும் மயங்கினான்.ஆரியநாதன் பார்பவர்களை இழுக்கும் ரகம்,கன்யா பார்க்க பார்க்க பிடிக்கும் ரகம்.அதுவும் கண்கள் உருட்டி பேசினால் அவ்வளவு பிடிக்கும் ஆரிக்கு.அவளின் தலையை ஒரு தட்டு தட்டியவன்,
“ம்ம்…மக்கு…நீ என்ன திட்டுறேனு நினைச்சுகிட்டு உன்னையே திட்டிக்கிற அதான் சிரிச்சேன்…”என்று சிரித்துக் கொண்டே கூற,கன்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை அதனால் பேந்த பேந்த முழிக்க,ஆரிக்கு மேலும் சிரிப்பு பொங்க அதை பார்த்து மூக்கு நுனி சிவக்க,
“சீனியர்ர்ர்ர்ர்….இப்ப சொல்ல போரீங்களா இல்லையா….”என்று கத்த,ஆரி தன் காதுகளை பொத்திக் கொண்டு,
“ஏய்….எதுக்கு இப்படி கத்துற….நான் உன் பக்கத்தில தான இருக்கேன்….”என்றவன்,அவள் முறைப்பதைக் கண்டு,
“சரி சரி முறைக்காத….சொல்லுறேன் சொல்லுறேன்….நீதான சொன்ன என் பொண்டாட்டி ரொம்ப பாவம்னு…அதான் சிரிச்சேன்….”என்று கூறிவிட்டு அவளின் முகத்தை பார்க்க,அவள் முகம் இப்போதும் தெளிவில்லாமல் இருந்தது.
“ஏய்…என்ன….இன்னுமா புரியலை….”என்று ஆச்சிரியமாக கேட்க,கன்யா தன் குண்டு கண்களை உருட்டி,உதட்டை பிதுக்கி இல்லை என்னும் விதமாக தலையை ஆட்ட,
“ஓய்ய்ய்….நீ தான்டி என் பொண்டாட்டி….அதைக் கூட மறந்துட்டியா….”என்று அவள் தோள்களை உலுக்கி கேட்க,
“அச்சோ….”என்று தன் முகத்தை மூடியவளை பார்த்து ஆரி அவளின் கையை இழுத்தவாரே,
“ஓய்ய்ய்…..பொண்டாட்டி ஓய் பொண்டாட்டி….”என்று அவள் காதுகளில் கத்த,
“இதை அடிக்கடி சொல்லுங்க சீனியர் நான் மறந்து போயிடுறேன்….”என்று அவள் விளையாட்டாக கூற,ஆரியின் முகம் மாறியது அதுவரை அவளின் கைகளை பிடித்து விளையாடுக் கொண்டிருந்தவன் கைகளை விட்டுவிட்டு மீண்டும் நிமிர்ந்து அமர்ந்தான்.அப்போது தான் கன்யாவிற்கு அவள் உதிரித்த வார்த்தைகள் புரிய அவளும் அமைதியாக அவனை பார்க்காமல் வெளியில் பார்த்தபடி அமர்ந்தாள்.காருக்குள் அமைதி நிலவியது வெளியில் கேட்ட சூறைக் காற்றின் சத்தமும்,சோ வென்று பெய்யும் மழையின் சத்தமும் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் வண்டியை சாலையில் இருந்து ஓரம்கட்டி நிறுத்தியிருந்தான் ஆரி.சற்றுமுன் இருந்த இலகு தன்மை இருவரிடமும் இல்லை மீண்டும் தங்களின் கூட்டுக்குள் அடைந்து கொண்டனர்.ஆரிக்கோ மனதில் ஏதோ சாட்டையால் அடித்தமாதிரி இருந்தது அவளின் பதில்.தான் ஏதாவது தவறு இழைத்துவிட்டோமோ என்று மனது அடித்துக் கொண்டது.கன்யாவிற்கோ மனதிலும்,மூளையிலும் ஒரே எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது,அது இது தான் சந்தர்ப்பம் அவனிடம் மன்னிப்பை கேட்டு விடு என்று.
“கனி சொல்லிடு…இல்ல இவரை பிடிக்க முடியாது….”என்று ஒரு குரல் கேட்க தன்னை சமன் செய்து கொண்டு அவனின் புறம் திரும்பியவள்,
“சீ….”என்று அழைக்கும் முன்,
“ஶ்ரீ….”என்று அவனும் அவளை அழைக்க திரும்ப இருவரின் முகம் வெகு அருகில் இருந்தது,இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள,வெளியில் அடித்த குளிர்ந்த காற்றுக்கு அவர்களின் மூச்சுக் காற்று வெண்மையில் இருவரின் உடல்களும் சிலிர்த்து அடங்கியது.இருவரின் கண்களும் தங்களின் இணையையே பார்த்துக் கொண்டிருந்தது.கன்யாவின் கண்கள் காதலாக என்றால் ஆரியின் கண்களில் தெரிந்ததவோ ஒருவித புதுஉணர்வில் சிக்கியிருந்தது.இதில் முதலில் தெளிந்தது கன்யா தான் தன்னை மீட்டுக் கொண்டவள் சற்று தன் முகத்தை பின்னோக்கி நகர்த்த அதில் தெளிந்த ஆரி,
“அ….அ…அது….”என்று என்ன சொல்ல வந்தான் என்பதை மறந்து முழிக்க,
“சீனியர்….சீனியர்….”என்று அவனின் முகத்தின் முன் இரு கைகளையும் ஆட்டி தன்னை பார்க்க செய்தாள்,அதில் தெளிந்தவன் அவளை காண,
“சீனியர் நான் முதல் பேசிடுறேன்…”என்றவள் அவனின் முகத்தை பார்க்க,அவனோ அவளை முறைத்தபடி இருந்தான்.இப்ப என்ன சொல்லிட்டோம்னு இப்படி முகத்தை வச்சிக்கிட்டு இருக்காரு என்று திருதிருக்க,அவளின் தலையில் ஒரு கொட்டு கொட்டினான் ஆரி.
“ஆஆஆஆஆ…..ஏன் சீனியர் கொட்டுனீங்க….”என்று கத்த,மீண்டும் ஒரு கொட்டு,அதில் கோபமானவள் அவனின் கைகளை பிடித்துக் கொண்டு,
“நானும் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்….இப்படி கூப்பிடாதனு….”என்று கோபமாக கூற,
“ம்ம்….வேற எப்படி கூப்பிடறதாம்….நீங்களே சொல்லுங்க….”என்று அவளும் கைகளை பிடித்துக் கொண்டே கூற,
“அது….”என்று இப்போது முழிப்பது ஆரியின் முறையானது.
“ப்ச்…விடுங்க சீனியர்…எனக்கு உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் தான் உங்க பின்னாடியே வரேன்….நான்….நான் அன்னைக்கு செஞ்சது தப்பு பெரிய தப்பு தான்….என்னால என்னையே மன்னிக்க முடியல….”என்றவள் மீண்டும் தன் இருக்கையில் பின்னோக்கி அமர்ந்து கொண்டாள்.ஆரியும் அவள் முழுதாக பேசட்டும் என்று அமைதியாக அமர்ந்து கொண்டான்.
“நான் அப்படி பேசியிருக்க கூடாது….ஏன் அப்படி பேசினேனு எனக்கே தெரியல…பெரிய தப்பு பண்ணிட்டேன்…மன்னிச்சிடுங்க….என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்…எதிலேயும் பொறுமையில்லாம நடந்து இப்ப உங்க வாழ்க்கையும் சேர்த்து கேள்விக்குறி ஆகிட்டோனு மனசாட்சி உருத்துது…..நான் நா….”என்று மேலும் பேச முடியாமல் அவளுக்கு தெண்டை அடைத்தது.அவளின் நிலை அறிந்து அவளின் முன்னே தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.அவளும் மறுக்காமல் வாங்கி கூடித்து தன்னை ஆசுவாசபடுத்திக் கொணாடாள்.
“அது….மன்னிச்சிடுங்க சீனியர்….சாரி…”என்றுவிட்டு ஓவென்று அழ தொடங்கினாள்.ஆரிக்குமே மனதிற்கு பாரமாக இருந்தது.வெளியில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய அதே அளவு இருவரின் உள்ளங்களும் கனத்து தான் இருந்தது.