மன்னிப்பாயா….4

தனது ஹோட்டல் அறையில் ஜன்னலின் வழியே இரவு நேர வானத்தை வெறித்துக் கொண்டு நின்றாள் ஶ்ரீகன்யா.சாலையில் வாகனங்கள் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தன.விளக்கொளியில் பூனே நகரம் அழகாக இருந்தது.மற்ற நாட்களாக இருந்தால் கன்யா இதையெல்லாம் கவனித்து இருக்கமாட்டாள் ஆனால் இன்று அவனை கண்ட மகிழ்ச்சியில் காண்பவை அனைத்தும் அழகாகவே இருந்தது அவளுக்கு.ஆனால் மனதில் ஒரு குறை தான் அது இன்றும் அவனிடம் மன்னிப்பை கேட்க முடியவில்லை அவளால் அது தான் பெரிய குறை.

ஆம் அவனிடம் இன்று எப்படியேனும் பேசிவிட வேண்டும் என்று தான் அவனிடம் வேகமாக சென்று நின்றது ஆனால் அவனை அருகில் பார்த்தவுடன் மீண்டும் அனைத்தும் மறந்து போனது.அவனை பார்த்தவள் பேசாமடந்தையாகி போனாள்.இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று மோதி நின்றன அவளது விழிகள் காதலாக அவனை தீண்ட அவனது விழிகளோ அவளை ஆராயும் விதமாக தீண்டியது.அந்த பார்வையே அவளை அவனிடம் இருந்து தள்ளி நிறுத்தியது.அவளும் திருமணம் முடிந்ததில் இருந்து அவனது கண்களில் தனக்கான காதலை தேடி ஓய்ந்து போய்விட்டாள்.இவ்வாறு இருவரும் பார்வையாலே பேசிக் கொண்டிருக்க ஆரியின் கைபேசி இசைக்க அதில் சுயம் பெற்றனர் இருவரும்.

“ஹலோ….”என்று அவன் கைபேசியில் கவனம் செலுத்திக் கொண்டே கைகளால் இரண்டு நிமிடம் என்று சைகை செய்துவிட்டு சற்று தள்ளி நின்று பேச சென்றான்.கன்யாவிற்கு ஏதோ மாயவலை அருப்பட்டது போல் இருந்தது.தனக்கு தோன்றும் எதுவும் இவனுக்கு தோன்றவில்லையா ஏன் இவன் என்னை தேடவில்லை மனதில் சிறு ஆசைக் கூட இருப்பது போல் தெரியவில்லையே என்று தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தாள்.

ஆண்களில் பலர் தங்களின் உணர்வுகளை வெளிகாட்ட விரும்பமாட்டார்கள் அதற்காக அவர்கள் காதலிக்கவில்லை என்று பொருள் அல்ல அவர்களின் காதலை சொல்லில் புரியவைப்பதைவிட செயலில் உணர்த்த முயற்சி செய்வர் அதில் ஆரியநாதன் மட்டும் விதிவிலக்கா என்ன இதை கன்யா அறிந்திருக்க வாய்ப்பில்லை.திருமணமே அதிவேகமாக நடந்தவொன்று அதில் அவர்கள் இருவரும் இணைந்து இருந்த நிமிடங்கள் என்றால் கைவிட்டு எண்ணிவிடலாம்.அதற்குள் இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ள அதில் இவள் வார்த்தைகளை சிதறவிட இருவருக்கும் பிரிவு.அவன் இவளை வெளியே செல் என்று சொல்லவில்லை தான் ஆனால் அவள் செய்த தவறு அவளை அவனுடன் இருக்கவிடவில்லை அதனாலே வந்துவிட்டாள்.

“டொக்…..டொக்…..”என்று மேஜை தட்டப்படும் ஓசை கேட்க தன்னுணர்வுக்கு வந்தாள் ஶ்ரீகன்யா.

“என்ன பழைய நினைவுகளா…..”என்று ஆரியின் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.அவளின் பார்வையின் தாக்கம் தாங்காமல் அவன் தான் பார்வையை திருப்ப வேண்டியதாயிற்று இருந்தும் அவனுக்கு இப்போது அவளிடம் பேச வேண்டும் நேரம் வேறு குறைவு என்று உணர்ந்து,

“ஏய்…..ஏய்….ஶ்ரீ…..”என்று தன் கைகளை இருபக்கமும் ஆட்ட,

“ஆங்….”என்று அவள் இமைகளை சிமிட்டி அவனை பார்த்து,

“சாரி….”என்று கூறிவிட்டு தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.மனது அவனிடம் நீ கூறவந்ததை கூறிவிடு என்று ஒரு குரல் ஓடிக் கொண்டிருக்க தன்னை நிதானபடுத்திக் கொண்டு திரும்பி அவள் பேசும் முன்,

“ஆங்….ஶ்ரீ….அது…..”என்று அவன் ஏதோ கூற வந்து தயங்க,

“சொல்லுங்க சீனி….”என்று அவள் கூற சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு அவளை முறைத்தான்.இப்ப எதுக்கு இவர் என்னை முறைக்கிறாரு என்று யோசித்தவளுக்கு அப்போது தான் புரிந்தது அவனுக்கு சீனி என்று கூப்பிட்டாள் பிடிக்காது என்று இருந்தும் அவன் கூறவருவதை எல்லாம் கேட்பவளா அவள் அதனால் அழுத்தமாக இருந்தாள்.அவளை தீர்க்கமாக முறைத்தவன்,

“எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டல்ல….”என்று சற்று காட்டமாகவே கேட்க,

“ப்ச்….சாரி சீ….”என்று கூறவந்து நிறுத்திவிட்டாள்.அவளை கோபமாக முறைத்தவன் நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டு ஒற்றை கையால் தன் கேசத்தை அழுந்த கோதினான்.இது எப்போதும் நடக்கும் ஒன்று தான் அவனுக்கு எப்போது எல்லாம் கோபம் அதிகமாகிவிடுதோ தன்னை நிதானபடுத்த இவ்வாறு செய்வான்.அது பார்ப்பவர்களுக்கு அவ்வளவு ரசனையாக இருக்கும் அதே போல் தான் இன்று அங்கு அருகில் இருப்பவர்கள் பார்வை ரசனையாக விழுந்தது.இங்கு கன்யாவிற்கோ காதில் புகை வராத குறைதான் அவளோ அங்கிருப்பவர்களை விட்டால் எரித்துவிடுபவள் போல் ஒருமுறை பார்த்துவிட்டு,

“இதுக்கு தான் அழகாக இருக்குரவனை காதலித்து கல்யாணம் பண்ணிக்கக்கூடாது….இப்ப பாரு எப்படி பார்க்குறாளுக….இவராவது கொஞ்சம் அழகை குறைக்கலாம்….”என்று தன் வாயிற்குள் முனகிக்கொண்டு இருக்க,

“எப்படி குறைக்கலாம்னு நீயே சொல்லு….”என்று ஆரியின் குரலில் அதிர்ந்து அவனை நோக்க அவனும் அவளை பார்த்து தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க,அதிலேயே அவன் அனைத்தையும் கேட்டுவிட்டான் என்று புரிந்து தலையை இடவலமாக ஆட்டினாள்.

“ப்ச் பாரு உன்னால நான் சொல்லவந்ததே மறந்துட்டேன்…..அது எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு….”என்று அவன் கூறி முடிக்கவில்லை கன்யா இறுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள்.

“ஏய் இரு….நான்….”ஏதோ கூற வர,

“இல்லை பரவாயில்லை நீங்க பாருங்க….நான் கிளம்புறேன்….”என்று அவள் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க,வேகமாக அவளின் கைகளை பிடித்தவன்,

“எப்போதும் உனக்கு அவசரம் தான் இல்லை….எதுலேயும் பொறுமை இல்லை…”என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப,பொறுமை இல்லை என்ற வார்த்தை அவளை மிகவும் தாக்கியது மீண்டும்,அவனது முகத்தை வெறுமையாக நோக்கியவாரே அமைதியாக நின்றுவிட்டாள்.கண்கள் கலங்கி கண்ணீர் விழவா என்று நிற்க ஆரிக்கு அப்போது தான் உதிர்த்த வார்த்தைகள் புரிய

“சா…”என்று கூற வர,

“வேண்டாம்….நீங்க உங்க வேலையை பாருங்க…என்னோட பிரண்ட் வேற வெயிட் பண்ணுறா…நான் போகனும்….”என்று குரல் கமற கூறிவிட்டு அவனிடம் இருந்து தன் கைகளை உருவிக் கொண்டு வந்துவிட்டாள்.ராதிகா தான் வரும் வழியெல்லாம் ஏதோ கேட்டுக் கொண்டே வர ஒருகட்டத்தில் அவளின் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல்,

“ராதி…எனக்கு தலைய வலிக்குதுடி…உன் மடியில் படுத்துக்கவா….”என்று கேட்க,ராதிகாவிற்கு மொத்தமாக உருகிவிட்டது.அவள் தலையை அசைக்க அவளது மடியில் படுத்துவிட்டாள்.ராதிகாவும் கவனித்தாள் தான் ஆரியிடம் விடைபெற்று வரும்போதே அவளது முகம் சரியில்லை அதானலே அவள் வேறு பேசி மனதை மாற்ற நினைக்க ஆனால் அவளால் முடியவில்லை.அப்படி என்ன தான் பிரச்சனை இருவருக்கும் என்று கேட்கலாம் என்றால் அதற்கும் கன்யாவிடம் பதில் இல்லை.இவ்வாறு இருவரும் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

“கன்யா…கன்யா….”என்று ராதிகா அழைக்கும் சத்தில் தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் கன்யா.அறைக்குள் வர அங்கு ராதிகா கிளம்பி கொண்டு இருந்தாள்,ஆனால் முகத்தில் அவ்வளவு கோபம்.

“நீயும் கிளம்புடி….”என்று அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் மீண்டும் ஒருமுறை அழைத்தாள் ராதிகா.

“ப்ச்…நீ போ ராதி இன்னும் இரண்டு நாள்ல நான் வந்துடுவேன்….ப்ளீஸ்….”என்று இரைஞ்சுதலாக கேட்க அதற்கு மேல் ராதிகாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அவளால்.

போட்டியின் முடிவுகள் வர இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன அதனால் ராதிகாவை முதலில் கிளப்பினாள் கன்யா இந்த அறிக்கைகளை சமர்பிப்பதற்காக.ராதிகா சென்றவுடன் தனது கட்டிலில் படுத்தவள் வெகு நேரம் கழித்தே உறங்கினாள்.

காலை எழுந்தவுடன் நேராக சென்றது அந்த போட்டி நடந்த இடத்திற்கு தான் அங்கு சென்று ஆரியை பற்றி விசாரித்தாள் ஆனால் அவர்களிடம் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை அதனால் சோர்ந்த மனதுடன் வெளியில் சுற்றிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்துவிட்டாள்.கால்கள் வலிக்க நடந்துவிட்டு வந்ததால் வலியெடுத்தது.அதே அளவு வலி அவளது மனதிலும் சூழ்ந்து இருக்க விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள்.

கன்யா மனது முழுவதும் வலி மட்டுமே மிஞ்சி இருந்தது.ஏன் தான் தேடுவது போல் அவன் தன்னை தேடவில்லை என்ற ஒரு கேள்வி மட்டுமே மனது முழுவதும் நிறைந்து இருந்தது.இனி அவன் இங்கு பூனேவில் இருப்பான் என்ற நம்பிக்கை இல்லை அவளுக்கு இருந்தாலும் நாளை அவளுக்கு முக்கியமான நாள் அவளது பிறந்த நாள் அதோடு அவள் ஆரியிடம் முதன் முதலாக பேசிய நாள்.அதனால் தான் ராதிகாவுடன் சென்னை செல்ல மறுத்துவிட்டாள்.அவள் இந்த நாளில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு தன்னவனுடன் செலவழித்த நொடிகளை நினைத்தபடியே அந்த நாளை ஓட்டுவாள்.

மறுநாள் காலை வழக்கம் எழுந்தவள் குளித்து முடித்து தனது பேக்கில் இருந்து வெள்ளையில் சிவப்பு ரோஜாக்கள் எம்பிராயிடிரி போட்ட புடவையை கட்டிகொண்டு பூனேவில் பிரசத்தி பெற்ற  ஶ்ரீ ஓம்காரீஷ்வர் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்.வாழ்க்கை இனி என்ன வைத்திருக்கிறது அவளுக்கு என்ற யோசனையுடனே வந்தவளுக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது தான் வெகு தூரம் வந்துவிட்டோம் என்று.

வானம் வேறு கருத்துக் கொண்டு வர அவள் இருந்த இடத்திலோ ஆட்கள் நடமாட்டம் வேறு மிகவும் குறைவாக இருந்தது.அதுவொரு நெடுஞ்சாலை அதில் ஒன்று இரண்டு வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தன,

“அச்சோ எவ்வளவு தூரம் வந்துட்டோம்னு தெரியலையே….”என்று தலையில் அடித்துக் கொண்டு வேகமாக நடக்க தொடங்கினாள்.அப்போது வானத்தில் மின்னல் ஒன்று வெட்டி செல்ல கன்யாவிற்கு தொண்டை குழியில் இதயம் வந்து சென்றது.

“போச்சு….இன்னைக்கு நீ செத்தடி கனி….உனக்கு இது தேவையா….ஒழுங்கா சாமி கும்பிட்டு ஹோட்டலுக்கு போயிருக்கலாம்….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மழை துளிகள் பெரிது பெரிதாக அவளின் மேல் விழ பக்கத்தில் ஏதாவது ஒதுங்க இடம் கிடைக்கிறாத என்று பார்த்தாள்.சற்று தூரத்தில் ஒரு பயணிகள் நிழற்குடை தெரிய வேகமாக அதனுள் தன்னை நுழைத்துக் கொண்டாள்.சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த இடமே இருள் சூழ்ந்து கொண்டது அதனுடன் மழையும் வெளுக்க,கன்யாவிற்கு மனது பயத்தில் நடுங்க தொடங்கியது.

அதே நேரம் தூரத்தில் ஏதோ ஒளி ஒன்று தெரிய அது தன்னை நோக்கி வருவது போலவே இருந்தது கன்யாவிற்கு.திக் திக் என்று எகிற குதிக்க தொடங்கிய இதயத்தை பிடித்துக் கொண்டு அவள் நின்று கொண்டிருக்க தூரத்தில் தெரிந்த வெளிச்சம் ஒரு காரின் ஹெட் லைட் என்று புரிந்தது.அந்த கார் தன்னை கடந்து வேகமாக சென்றவுடன் தான் அவளுக்கு மூச்சே வந்தது போல் இருந்தது.

“ப்பா….அது கார்….நான் வேற எதுவோனு பயந்துட்டேன்….”என்று புலம்பிக் கொண்டிருக்க,அவளை கடந்து சென்ற கார் அதே வேகத்தில் அவள் நின்ற இடத்திற்கு பின் பக்கமாக வந்து நிற்க,கன்யா அதிர்ந்துவிட்டாள்.தான் இருப்பதோ ஆள் நடமாட்டம் இல்லாத இடம் இப்போது தனக்கு என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவும் தெரியாது அய்யோ கடவுளே என்று வேண்டியவளுக்கு ஓட வேண்டும் என்று கூட தோன்றவில்லை மூளை சம்பித்த நிலை.அப்போது காரின் கதவை திறந்து கொண்டு வந்த உருவத்தைக் கண்டவள் அது தன்னை நெருங்கும் முன்னே இவள் வேகமாக சென்று கட்டிக் கொண்டாள்.

“சீனியர்….சீனியர்…..”என்று அவள் பிதற்ற,ஆரியனுக்கு இப்போது சம்பித்த நிலை அதோடு மழையில் வேறு இருவரும் நனைந்து கொண்டிருக்க வேகமாக அவளை இழுத்து காரினுல் விட்டவன் தானும் வேகமாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.எதிர்பாராமல் நிகழும் சில நிகழ்வுகள் பெரிய மாற்றத்தை உருவாக்கும் அதே போல் தான் இருவரும் தனித்து விடப்பட்ட இந்த ஏகந்த பொழுதில் ஆரியநாதன் தன் மனதில் உள்ள காதலை உணர்வானா…