அந்த அறை அமைதி மிகுந்து காணப்பட்டது. அறையின் வெளியிலோ விஸ்வநாதன் மீனாட்சி அனு என அனைவரும் நெஞ்சம் தடதடக்க அமர்ந்திருக்க
அவர்களை பதறவிட்டிருந்த ஹர்ஷாவோ அறையினுள் வசுந்தராவுடன் அமர்ந்திருந்தான். வந்து பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டிருந்தது.
ஆனால் ஹர்ஷாவோ வசுந்தராவோ இருவரில் ஒருவரும் வாயை திறந்தபாடில்லை. வசுந்தரா குற்றவுணர்ச்சியில் வாயை திறக்காது இருந்தார் என்றால், ஹர்ஷா தயக்கத்தில் வாயை திறக்காமல் இருந்தான்.
எனவே சில நேரம் அங்கே மௌனமே நிலவியது. இப்படியே போனால் எப்படி என்று யோசித்த ஹர்ஷா ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு பேச துவங்கினான்.
“எப்படி இருக்கீங்க?” ஹர்ஷா மெதுவாக கேட்க
“ம்ம் ஏதோ இருக்கேன் கண்ணா” என்று தானாகவே உரிமையாய் அழைத்திட்டு, ஹர்ஷா இப்படி அழைத்ததை தப்பாக எடுத்துக் கொண்டானா என்று சற்று பதறிப்போய் தான் பார்த்தார்.
ஆனால் பதிலுக்கு ஹர்ஷா அமைதி காக்கவே நிம்மதி கொண்டார் வசுந்தரா.
“நான் எதுக்கு உங்களை பாக்க வந்திருக்கேன்னு உங்களுக்கு தோனலாம். அதுக்கும் நானே பதில் சொல்றேன்” என்று ஆரம்பித்தான்.
“நடந்த எல்லா விஷயத்திலும் நாம ரெண்டு பேருமே பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிகமா பாதிக்கப்பட்டது நீங்க தான்.
உண்மையாவே உங்கள நினைச்சு பாத்தா என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்றதுனும் எனக்கு தெரியல.
சின்ன வயசுல அதாவது ஒரு அஞ்சு வயசு வரைக்கும் என்னோட அம்மாவோட பாசத்துல வளந்திருக்கேன். அவங்க என்னை அவ்ளோ பாசமா பாத்துகிட்டாங்க.
என்மேல உயிரையே வச்சிருந்தாங்க. ஆனா திடீர்னு அவங்க என்னை பெத்தவங்க இல்லைன்னு தெரியவும் என் மனசு அதை ஏத்துக்கவே இல்ல”
ஹர்ஷா முகத்தில் வலியை காட்டி பேசப்பேச வசுந்தரா மனமோ பெரிதாக தவித்துப் போனது. தன் மகன் தன் கண்முன்னே கலங்கி தவிக்க அவனை அணைத்து ஆறுதல் கூட கூற முடியாது இருக்கும் தன் நிலையை வெறுத்தார் வசுந்தரா.
“ஆனா இதுல உங்களையும் குறை சொல்ல முடியாதுல. எனக்கு வந்தது கஷ்டமனா உங்களுக்கு நடந்தது கொடுமை.
என் வீட்ல இருக்கவங்க அன்னைக்கு வீட்ல நடந்த விஷயத்தை பத்தி அதுக்கு அப்புறம் யாரும் எதுவும் பேசவே இல்லை. ஆனா ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விஷயம் சொன்னாங்க.
உங்களை பத்தி உங்களோட கஷ்டத்தை பத்தி. உங்களுக்கு என்னை நல்லா மகனா இருக்க சொல்லி” என்று ஹர்ஷா நிறுத்தி வசுந்தராவின் முகம் பார்க்க
வசுந்தராவின் முகம் இன்னதென கூற முடியா உணர்ச்சி பிடியில் இருந்தது. அவருக்கு தன் மகனை உரிமை கோற மனம் முழுவதும் வேகம் கொண்டிட, அவர் மூளையோ இன்னும் தர்க்கம் செய்து நின்றது.
“என்னால உங்கள சட்டுன்னு அம்மாவா ஏத்துக்க முடியுமானு தெரியலை. ஆனா ஒரு நல்ல மனுஷியா உங்களை பாக்க முடியுது.
என் வீட்ல இருக்கவங்க சொன்னதுக்கு பின்னாடி நான் ஒரு வாரம் நல்லா யோசிச்சேன். ஆனா அம்மானா அது சுபத்ரா அம்மான்னு நல்லா மனசுல பதிஞ்சு போச்சு.
சாரி நீங்க என்னை பெத்தவங்க. ஆனா அந்த உரிமையை எடுத்துக்க மனசு முரண்டுது. அதனால எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.
இந்த விஷயத்தை எல்லாம் என் மனசு ஏத்துக்க கொஞ்ச டைம் வேணும். குடுப்பீங்களா ம்மா..” என்று வலியுடன் ஹர்ஷா எச்சிலை முழுங்கி தவிக்க, அவன் விழிகள் இரண்டு சொட்டு நீரை வெளியேற்றியது.
ஹர்ஷாவின் விழிகளில் நீரை பார்க்கவும் “ஐயோ கண்ணா” என்று அவனை அணைத்து கொண்டவர் “நீ அவ்ளோ கஷ்டப்பட வேண்டாம்பா. நீ என்ன அம்மாவா ஏத்துக்கலைனாலும் நீ என்னோட பையன் தான்டா கண்ணா.
அதை யாராலையும் மாத்த முடியாது. நீ கஷ்டப்பட்டு என்னை அம்மான்னு கூப்பிடக் கூட வேணாம். அதுவா மனசுல இருந்து வரனும்.
எப்போ உன் மனசு ஓத்துக்கிட்டு என்னை அம்மாவா நினைக்கிதோ அப்போவே நீ என்ன அப்படி கூப்பிட்டுக்கபா. அம்மா அதுவரை எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்”
வசுந்தரா ஹர்ஷாவை அணைத்தவாறே அவனை ஆறுதல் படுத்த சற்று கண்ணீர் மட்டுப்பட்டு சமாதானம் ஆனான் ஹர்ஷா.
ஒருவாறு இருவரும் தங்களை தேற்றிக் கொண்ட பின் ஹர்ஷா மெதுவாக வெளியே வந்தான். அதன்பின் வசுந்தராவும். வெளியே இருந்தவர்கள் இவர்களின் அழுத முகத்தை கண்டு பெரிதும் வருத்தப்பட்டனர்.
ஆனால் அதற்கு அவர்களாலும் ஒன்றும் செய்யமுடியாதே. இதை குறித்தான முடிவை எடுக்க வேண்டியது அவர்கள் இருவரும் என்பதால் அமைதி காத்தனர்.
அதன் பின்னான நாட்கள் வசுந்தராவிற்கு சற்று நன்றாகவே சென்றது எனலாம். ஏனெனில் அவரின் மூத்த மகன் ஹர்ஷா அவரிடம் தற்போது எல்லாம் கைப்பேசியின் வழியே தினமும் அழைத்து இரண்டு வார்த்தையேனும் பேசி விடுகிறான்.
வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் வந்துப் பார்த்து செல்கிறான். அதுவே அவருக்கு யானை பலம் வந்தது போல் உள்ளது.
ஹர்ஷாவின் வீட்டிலோ விக்ரமின் கல்யாண வேலைகள் எல்லாம் படு ஜோராக நடந்துக் கொண்டிருக்க, எல்லாம் ஹர்ஷாவின் பொறுப்பு தான்.
விக்ரமை ஆடைகள் வாங்க அழைத்து செல்வது முதல் திருமண மண்டபம் சமையல் ஆட்கள் பத்திரிகை அடித்து அதை கொடுப்பது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறான் ஹர்ஷா.
அபிமன்யுவும் தன் அண்ணனுக்கு உதவியாக இருந்து கொண்டு, அதே நேரம் விக்ரமை வம்பிழுத்து என அந்த வீட்டையே எப்போதும் பிசியாக சுற்றுகிறான்.
அன்றும் அப்படித்தான் “விக்ரம் அத்தான்” என்று வீட்டின் நடுவில் நின்று அபி காட்டு கத்தாக கத்த, அனைவரும் என்னவோ ஏதோ என பதறிப் போய் வந்தனர்.
“என்னாச்சு அபி. ஏன்டா இப்படி கத்துன” என்று விக்ரம் கேட்டதற்கு “எனக்கு ஒரு நியாயம் வேணும்” என்றான் சட்டமாக அமர்ந்துக் கொண்டு.
“என்னடா போராட்டம் எதுவும் பண்ண போறியா. அதுக்கு டிரைனிங் எடுக்க வீட்டுக்குள்ளையே நீதி வேணும் நியாயம் வேணும்னு கேக்குறியா?” என்று விக்ரம் கேட்க,
மற்றவர்கள் இது எங்கே போய் முடியும் என அறிந்தவர்கள். எனவே அமைதியாக அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிட்டனர். கடைசியாக நின்றது என்னவோ விக்ரம் தான்.
“போராட்டமா?” என ஒரு மாதிரி கேட்ட அபி “ஆமா போராட்டம் தான். ஆனா என் வாழ்க்கைகான போராட்டம்” என்று தத்துவமாக பேசினான்.
“என்னடா சொல்ற?” என்று கடுப்பாகி விக்ரம் கத்த
“பின்ன என்ன அத்தான். நீயும் கவி சிஸ்டாவும் ஒரு வருஷம் முழுசா லவ் பண்ணி இருப்பீங்களா?
அதுக்குள்ள உனக்கு கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டாங்க. ஆனா நான் என் அம்மு குட்டிய செவன் இயர்ஸ் முழுசா செவன் இயர்ஸா லவ் பண்றேன்.
உனக்கு முன்னாடியே என் லவ்வ சொல்லி ஓகே வாங்கி கமிட் ஆகிட்டேன். ஆனா எனக்கு அப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சு. அந்த லவ்வ கூட புரிஞ்சுக்க துப்பில்லாம சுத்திட்டு இருந்த உனக்கு கல்யாணம் ஆகுது.
ஆனா இந்த கதைல ஆரம்பத்துல இருந்து லவ் பண்ற எனக்கு எப்படா கல்யாணம் ஆகும்” என வேண்டும் என்றே விக்ரமை வம்பிழுத்தான் அபி.
அதில் அவன் கடுப்பும் சிறிது இருந்தது குறிப்பிடத்தக்கது. அபிமன்யு இவ்வாறு பேசவும் அவனை நக்கலாக பார்த்து வைத்த விக்ரம்
“அதுக்கு எல்லாம் ஒரு முகராசி கொடுப்பினை இதெல்லாம் வேணும் ராஜா” என்றான் காலரை தூக்கி விட்டு.
விக்ரம் இப்படி கூறியதும் அவன் முகத்தை மேலிருந்து கீழ் வரை நோக்கிய அபி “அது உண்மனா எப்படி அத்தான் உனக்கு போய் கல்யாணம் நடக்குது.
உன் மொகரகட்டைக்கு தான் சுட்டுப் போட்டாலும் முகராசின்னு ஒன்னு வரவே வராதே” என்று சீரியசாக கேட்டு வைக்க
“டேய் பம்பரகட்ட மண்டையா! உன்னை என்ன பண்றேன்னு பாருடா” என்றவாறு அடிக்க துரத்தினான். சிக்குவானா அபி அடித்து பிடித்து ஓடி விக்ரமிடம் சிக்காமல் அறையில் தஞ்சமானான். அதுவும் ஆதிராவின் அறையில்.
“எது நடந்தாலும் எதாவது ஒன்னு பண்ணி என் தங்கச்சியோட டூயட் பாடுறதுல கொண்டு போய் முடிச்சிடுறான் பக்கி பய” என்று வயிற்றெரிச்சலில் சத்தமாக கத்தியே சென்றான் விக்ரம்.
அங்கே அம்முவின் அறைக்கு சென்ற அபியா சும்மா இருப்பான். அவன் அம்முவை கொஞ்சி கெஞ்சி சில முத்தங்களை கொடுத்து பல செல்ல அடிகளை பெற்று விட்டே வெளியேறினான் அபி.
இப்படி கிண்டலும் குதூகலமாக ஹர்ஷாவின் இல்லம் இருக்க, விக்ரமின் திருமண நாளும் வந்தே விட்டது.
“மச்சான் ஏன்டா நெளியிற. கொஞ்ச நேரம் ஆடாம நில்லேன்டா”
ஹர்ஷாவின் எந்த அதட்டலும் கெஞ்சலும் மிரட்டலும் விக்ரமிடம் எடுபடவில்லை. விக்ரம் தனது திருமணத்திற்கு வேட்டி கட்ட படுத்துகிற பாடுதான் இது.
புதிதாக வேட்டி அணிகின்ற விக்ரமிற்கு அது தன் இடுப்பில் நிற்காதோ என்ற பயம் ஒருபுறம் என்றால், பக்கத்தில் ‘நேரம் கிடைத்தால் உன் வேட்டியை அவிழ்த்து விடுவேன்’ என்ற பாவனையில் நிற்கும் அபியால் இன்னொரு புறம் பயம்.
அவன் பயத்தை போக்கி அவனுக்கு வேட்டியை அணிவிக்க திணறுவது நம் ஹர்ஷவர்தனே.
“ஏன்டா தடிமாடு மாதிரி வளந்திருக்க. ஒரு வேட்டி கட்ட இவ்ளோ அலப்பறை பண்ற. ஏன்டா என் உயிரை வாங்குற” கடுப்பில் ஹர்ஷா கத்திவிட்டான்.
அவ்வளவு படுத்தி எடுத்தான் விக்ரம். அதை கண்டு கடுப்பான அபி “ண்ணா நீ போய் கெஸ்ட்ட பாரு. நானே நம்ம விக்ரம் அத்தான நல்லா ரெடி பண்ணி நானே கூட்டிட்டு வரேன்” என்று கூற பயந்துவிட்டான் விக்ரம்.
“மச்சான் உன் உயிர் நண்பனை உன் தம்பியை நம்பி விட்டுட்டு போயிராதடா” என்று மரண பீதியில் சொல்ல
விக்ரமை கையால கூடிய சரியான ஆள் அபியை தவிர வேறு யார். எனவே “ஓகே அபி. அவனை கெளப்பி கூட்டிட்டு வந்திடு டா. நான் போய் நம்ம கெஸட்ட வெல்கம் பண்றேன்” என்று ஹர்ஷா நேக்காக அபியிடம் விக்ரமை கோர்த்து விட்டு சென்றுவிட்டான்.
“டேய் மச்சான் நான் பாவம்டா. இரக்கமே இல்லாம உன் தம்பி கிட்ட கோர்த்து விட்டுட்டு போறியே. இது நியாயமா” என்று வசனம் பேச, அதை கேட்க அங்கே ஹர்ஷா இருந்தால் தானே.
அவன் தான் எப்போதே சென்றுவிட்டானே. “கிராதகா இப்படி இவன் கிட்ட மாட்டிவிட்டுட்டு போய்ட்டானே. இன்னைக்கு என் கல்யாணம் நடக்குமா?” என்று பீதியாய் விக்ரம் அபியை பார்க்க
அபியோ “ஹா..ஹா..ஹா..” என்று வில்லன் போல் சிரித்து வைத்தான். அப்படியே மெதுவாக விக்ரமை நெருங்கி “அப்புறம் விக்ரம் அத்தான் ரெடி ஆகலாமா?” என்று கேட்க பீதி ஆகிவிட்டான் விக்ரம்.
அப்புறம் என்ன விக்ரமை போட்டு பாடாய் படுத்தி எடுத்துவிட்டான் அபி. இன்று அவன் திருமணம் என்று கூட பார்க்கவில்லையே.
“ஏன் விக்ரம் அத்தான் இவ்ளோ பெருசா வளந்துருக்கியே தவிர உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்ல. உனக்கு ஒரு வேட்டி கட்ட தெரியுதா?
நீ எல்லாம் என்னத்த கல்யாணம் பண்ணி, என்னத்த குடும்பம் நடத்த போறியோ. பாவம் என் சிஸ்டா. உன்கிட்ட வந்து மாட்டனும்னு அவ தலையில எழுதியிருக்கு”
இதெல்லாம் அபி பேசிய வசனங்களே. அவன் பேசியதை கேட்டு “வேட்டி கட்டுறதுக்கும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தறதுக்கும் என்னடா சம்மந்தம்” என்று விக்ரம் தான் நொந்து விட்டான்.
ஆனால் அபி பேசிய பேச்சிற்கு மறுபேச்சு பேசவில்லை. ஏனெனில் அபி தான் வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல் ஜம்மென்று தயாராகி நின்றிருக்கிறானே.
மேலும் அவன் அமைதியாக இருக்க இன்னொரு காரணம் அவன் அபியிடம் வாயை கொடுத்தால் இன்று அவன் திருமணம் நடந்தது போல் தான். எனவே இன்று விக்ரம் அமைதியின் சிகரம் ஆகிவிட்டான்.
இதுபோன்ற சில பல கலாட்டாக்களோடு விக்ரமின் திருமணம் அவன் ஆருயிர் சங்கவியோடு இனிதே நடைபெற்றது.