தனது அறையின் பால்கனியில் கையில் ஒரு நாவலை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதி. கடந்த ஒரு வரமாகவே அவளின் வாசம் இங்கேதான். இந்த ஒரு வாரத்தில் ஒருமுறை கூட, வீட்டை விட்டு வெளியே எங்கேயும் நகரவே இல்லை.
தான் ஆஜராக வேண்டிய வழக்குகளையும் கூட உடல்நிலையை காரணம் காட்டி தள்ளி போட்டிருந்தாள். மற்ற வழக்குகள் கீர்த்தி மூலம் நடந்து கொண்டிருக்க, முழு தவத்தில் தான் இருந்தாள். கீர்த்தி ஏதாவது முக்கியமாக பேச வேண்டும் என்றால் கூட வீட்டிற்கு வந்து நேரடியாக தான் கேட்டுச் சென்றாள்.
உமாதேவி கூட அவர் பங்குக்கு மகளை மலையிறக்க முயற்சிக்க, எதற்கும் செவி கொடுப்பதாக இல்லை மகள். புத்தகங்கள் சிறு வயது முதலே அவளின் துணையாக இருக்க, இப்போது முழு நேரமும் அதோடு கரைந்து கொண்டிருக்கிறாள்..
இந்த தனிமை வாசம் அவளுக்கே வெறுத்து போனாலும், இன்னும் மனமிறங்காமல் தான் இழுத்து பிடித்து கொண்டிருக்கிறாள். இந்த ஒரு வாரமாக அவளின் அலைபேசியையும் அணைத்துவிட, தமிழ் இடையில் ஒருமுறை வரதன் இல்லாத நேரம் வீட்டிற்கே வந்து நின்றிருந்தான்.
அப்போதும் தன்னை சிறைபடுத்திக் கொண்டவள் அவன் கண்ணிலேயே படாமல் போக்கு காட்டி இருந்தாள். மூடிய அவளின் அறைக்கதவை உடைத்து விடுவது போல் தட்டிக் கொண்டிருந்தவனுக்கு பதிலாக, ” நீங்க நினைச்சது நடந்தது இல்ல… கல்யாண வேலை நிறைய இருக்கும்..போய் அதெல்லாம் பாருங்க… நிச்சயமா கல்யாண நேரத்துக்கு உங்களோட வந்திடுவேன்…” என்றாள் .
அதில் இன்னும் ஆத்திரம் கொண்டவனாக, “கதவை திற யாழி… அப்படியென்ன பிடிவாதம் உனக்கு… ஒருமுறை என்னை பாருடி..” என்று அவனும் கத்த
“எனக்கு உங்களை பார்க்க வேண்டாம்… அதான் எல்லாம் உங்க விருப்பம் போல நடந்துடுச்சே.. இன்னும் என்ன… போங்க… இந்த ஒருமுறை என்னை என் விருப்பத்துக்கு விடுங்க.. இனி எப்பவும் நீங்க அத்தனைக்கும் தலையாட்டுவேன்..போங்க..” என்று கூறியவள் குரலில் அழுகையை உணர்ந்தவன்
“யாழி அழாத…முதல்ல கதவை திற.. சின்னப்பசங்க மாதிரி பண்ணாத..” என்று அதட்ட
“அப்படிதான் பண்ணுவேன்.. நீ கிளம்பு முதல்ல..” என்று அழுகை அதிகமானது..
“ஏண்டி இப்படி சாகடிக்கிற.. எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க..” என்று அவன் கத்தியதற்கு பதிலாக, “நீதான் என்னை அழ வைக்கிற.. இங்கே இருந்து கிளம்பு… நிச்சயமா நான் கதவை திறக்கவே மாட்டேன்..” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, தனது கோபம் மொத்தத்தையும் அந்த கதவில் காட்டி ஒரு உதை விட்டவன் “மரியாதையா வெளியே வா யாழி.. என்னை டென்சன் பண்ணாத…” என்று ஓங்கி குத்தினான் அந்த கதவில்…
ஆனால் துளிகூட அவனை சட்டை செய்யாமல் காதை இரண்டு கையாளும் மூடிக் கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள் யாழி… அதற்குமேலும் வெகுநேரம் அங்கேயே நின்றவன், இறுதியில் உமாதேவி மேலேறி வரவும், அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினான்.
அவரின் முன்னால் மூடிய கதவிற்கு வெளியே நின்றது சற்றே அவமானமாக இருந்தது அவனுக்கு. அதன் பொருட்டே கிளம்பி இருந்தான். அதன்பின் வந்த நாட்களில் இந்த பக்கமே வரவில்லை அவன். வீட்டை விட்டு வெளியே சென்றால் அடுத்த நிமிடம் தன்னை அவன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வான் என்று புரிந்ததால் தான், வீட்டிற்குள்ளேயே தவமிருந்தாள் அவள்.
இவளின் இந்த நடவடிக்கையால் பெரிதாக என்ன நிகழ்ந்துவிடும் என்றால், எதுவுமே இல்லை என்று அதுவும் தெரியும் அவளுக்கு. ஆனால், இனி இப்படி ஒரு இக்கட்டில் மாறன் அவளை நிறுத்தாமல் இருக்க, இது அவசியம் என்று நினைத்தாள் யாழி.
தன் கோபத்தை அவனுக்கு காட்டும் வழியாக இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை தேர்ந்தெடுத்து இருந்தவள் ஒரு வாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இருந்தாள்.
இவள் ஆட்டத்தில் வென்றிருக்க, அங்கே இன்னொருவன் தேய்ந்து கொண்டிருந்தான். மூன்று ஆண்டுகளாக அவளை திரும்பிக் கூட பார்க்காமல் தவிக்க விட்டவனால், இந்த ஒரு வார தவிர்ப்பை தாங்கி கொள்ள முடியவில்லை.
யாழி வேண்டுமென்றே செய்கிறாள் என்பதும் நிச்சயம் தான். தன்மீது நிரம்ப கோபத்தில் இருக்கிறாள் சரிதான்… ஆனால், அதற்காக இப்படி ஒளிந்து கொள்வாளா என்று மீண்டும் கோபம் தான்.. “போடி… இன்னும் ஒரு மாதம் முழுசா அந்த வீட்ல இருப்பியா.. அதுக்கு பிறகு எங்கே போய் ஒளிஞ்சிப்ப..” என்று முதல் இரண்டு நாட்கள் எண்ணமிட்டவன் இதோ ஏழு நாட்கள் முடியும் தருவாயில் “முடியல யாழிம்மா..” என்று அவள் புகைப்படத்தை பார்த்து புலம்பும் நிலைக்கு வந்திருந்தான்.
ஆனாலும், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் இறுக்கமாக வளையவர, தம்பிக்கு புரிந்தது அண்ணனின் மாற்றம்.. சில நாட்களாக அவன் முகத்தில் தேங்கி இருந்த அந்த மென்புன்னகை மீண்டும் தேய்ந்து போயிருக்க, அந்த பழைய கடுகடு முகம் திரும்பி இருந்தது..
பொறுத்து பொறுத்து பார்த்தவன் அன்று காலையில் பிடித்துக் கொண்டான் அண்ணனை. தோட்டத்தில் வேலை செய்யும் வயதானவரை தமிழ் எதற்காகவோ கடிந்து கொண்டிருக்க, அவரை அனுப்பி விட்டவன் அண்ணனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தம்பியின் பார்வை உணர்ந்தவன் “என்னடா.. என்ன தெரியுது என் முகத்துல.. காலையில உனக்கு வேற வேலை எதுவும் இல்லையா..” என்று அவனையும் விரட்ட
“இப்போதைக்கு இதுதான் வேலை..” என்றான் எழில்.
“என்ன என்ன வேலை..” என்று தமிழ் பார்க்க
“என்ன ஆச்சு உனக்கு.. ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க..” என்றான்.
“எப்படி வச்சிருக்கேன்..அதெல்லாம் ஒன்னும் இல்ல.. வழியை விடு.. எனக்கு டைம் ஆச்சு..” என்று தமிழ் கழண்டு கொள்ள முற்பட
“நான் உன்கிட்ட தான்டா அண்ணா பேசிட்டு இருக்கேன்..” என்று அவன் முன்னால் வந்து நின்று கொண்டான் இப்போது.
“எழில் என்ன வேணும் உனக்கு..” என்று தமிழ் அவனை முறைக்க
“நீ ஏன் மறுபடியும் வேதாளமா மாறி இருக்க.. அதை சொல்லு..” என்றவன் விடாப்பிடியாக நின்றான்.
தமிழ் அவனை முறைத்து விட்டு, “காலையில டென்சன் பண்ணாத எழில்.. வழியை விடுடா…” என்று விலகி செல்ல
“சரி.. நீ கிளம்பு.. நான் அம்மாகிட்ட சொல்றேன்… தமிழ் என்னவோ போல இருக்கான்.. கேட்டா எதுவும் சொல்லல ன்னு சொல்றேன்..” என்றான் தம்பியாண்டவன்..
கையில் இருந்த லேப்டாப் பேகை அவன் மீது வீசி இருந்தான் தமிழ்.. “என் உயிரை எடுக்கவே இருக்கீங்களாடா நீங்க… எனக்கு தலைவலி வெளியே இருந்து வரவே வராது… ஒன்னு நீ கொடுப்ப.. இல்ல உன்கூட சேர்ந்த அந்த வானரம் கொடுக்கும்… இப்போ அந்த வானரம் தான் முருங்கை மரம் ஏறி இருக்கு போதுமா..” என்று வெடித்தவன் எழில் கீழே விழாமல் பிடித்து வைத்திருந்த அவன் லேப் பேகை பிடுங்கி கொண்டு நடக்க,
“நீ என்ன பண்ண அவளை..” என்று கார் வரை அவனை துரத்தி வந்தான் எழில்…
“சொல்லமுடியாது… வேணும்ன்னா அவளையே கேளு… உன் அண்ணன்தான நான்.. என்னடி செஞ்ச என் அண்ணனை ன்னு அவகிட்ட கேளு..கிளம்பு போ..” என்று தமிழ் கூற
“அவ உன்னை செய்யுறாளா?? நீ அவளை எதுவும் பண்ணாம இருந்தா போதும்.. அது பாவம் பச்சப்புள்ள.. அந்த அளவுக்கு விவரம் பத்தாது.. நீ என்ன செஞ்ச.. அதை சொல்லுடா..” என்று எழில் நிற்க
“சொல்ல முடியாது போடா..” என்று கத்தியவன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டிருந்தான்.
எழில் அவன் காரை பார்த்திருந்தவன் ஒரு புன்னகையுடன் தான் வீட்டிற்குள் வந்தான். உள்ளே வந்து அவன் ஆதிக்கு அழைக்க, அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு நாளுக்கு முன்பு அழைத்த போதும் இப்படியே இருந்திருக்க, “இப்ப என்ன செஞ்சு வச்சிருக்காங்க தெரியலையே..” என்று தன் அண்ணன் அண்ணியை தெரிந்தவனாக தனக்குள் புலம்பிக் கொண்டான் அவன்.
எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று அவள் வீட்டு எண்ணுக்கு அழைக்க, உமா அழைப்பை ஏற்றார். தமிழை போல் எழிலிடம் தயக்கம் ஏதும் இல்லை. உமாவின் குரலை கண்டு கொண்டவன் “ஆதி எங்கே அத்தை..” என்று அதிகாரமாக கேட்க
உமா சில வினாடிகள் கழித்தே எழிலின் குரலை அடையாளம் கண்டு கொண்டார். இந்த உரிமையான, அதிகாரத்துடன் கூடிய “அத்தை..” என்ற அழைப்பு அவனுக்கு மட்டுமே சொந்தம்.
“இப்போதான் கண்ணு தெரியுதாடா உனக்கு..” என்று அவரும் முறைப்பு காட்ட
“நான் கேட்கணும்.. எங்க அப்பாவோட அப்படியே விட்டாச்சு எங்களை.. இப்போகூட நாந்தான் உங்களை கூப்பிட்டு இருக்கேன்.. ஆதி எங்கே??” என்றான் அவன் அழுத்தமாக