அத்தியாயம் 05
சண்முகநாதன் துர்காவுடன் கிளம்பியவன் அந்த மருத்துவமனையை அடைய, காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். துர்கா நேராக அந்த மருத்துவமனையின் மெயின் கவுண்டர் அருகில் சென்றவள் அன்னையின் பெயரை சொல்லி பணம் கொண்டு வந்திருப்பதாக கூற, அந்த கவுண்டரில் இருந்தவரோ ஏற்கனவே பணம் செலுத்தி விட்டனர் என்று கூறிவிட, சரியாகத்தான் பார்த்தாரா?? என்று சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.
மீண்டும் ஒருமுறை தன் அன்னையின் பெயரை கூறியவள், அவரின் ஆஞ்சியோ சிகிச்சை பற்றியும் கூறி விசாரிக்க, பணம் செலுத்தி விட்டதாகவே கூறினர் அங்கு இருந்தவர்கள். அவள் திரும்பி சண்முகநாதனை பார்க்க “வேற யார்கிட்டேயும் பணம் கேட்டு இருந்தியா துர்கா??” என்று அவன் வினவ, மறுப்பாக தலையசைத்தாள் அவள்.
சண்முகநாதன் அவள் கையை பிடித்து விட்டான் இப்போது. அவளின் வலது கையை இறுக்கி பிடித்துக் கொண்டவன் கவுண்டரில் “என்ன பேர்ல பணம் கட்டி இருக்காங்க..” என்று விசாரிக்க
“திருநாவுக்கரசு” என்று முடித்து விட்டு தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டனர் கவுண்டரில் இருந்தவர்கள். எதிரில் நின்றிருந்த இருவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் சண்முகநாதன் முதலில் சுதாரித்துக் கொண்டான். மலைக்கு சென்றிருந்தவன் இங்கே எப்படி ? அதுவும் இன்றே எப்படி வந்தான்? என்று உள்ளே ஓடிக் கொண்டிருந்தாலும்,இப்போது விட்டு விட்டால் துர்கா இனி எப்போதும் தன் கைகளில் சிக்க மாட்டாள் என்பதும் தெரிந்தே இருந்தது அவனுக்கு.
அவன் பார்வையில் படுவதற்கு முன்பாக அவளை அங்கிருந்து அழைத்து சென்று விடுவது ஒன்றே அவன் குறியாக இருக்க, அவள் கையை பிடித்திருந்தவன், அவளை வேகமாக வாசலை நோக்கி நகர்த்த, அதிர்ந்து நின்றிருந்தவளோ தெளிந்து கையை அவனிடம் இருந்து விலக்கி கொள்ள போராட, அவன் பிடியை அசைக்க கூட முடியவில்லை.
மெய்ன் கவுண்டர் மருத்துவமனையின் வாசலுக்கு அருகிலேயே இருக்க, அவனுக்கு வசதியாக போனது. அவன் இழுத்த இழுப்பிற்கு அவள் சென்று கொண்டிருக்க, அனாயாசமாக அவளை இழுத்து வந்தவன் வாசலை தாண்டி தன் காரின் அருகில் செல்ல, அவனை உரசிக் கொண்டு வந்து தன் வண்டியை நிறுத்தினான் திரு.
வண்டியை நிறுத்தியவன் அதே கருப்புநிற உடை, கழுத்தில் துண்டு என்று சாமியாகவே இருக்க சட்டைக்குள் இருந்த துளசி மணிமாலை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக நடுவில் ருத்திராட்சம் கோர்த்திருந்த அவனின் தங்க சங்கிலி அவன் கழுத்தில் குடியேறி இருக்க, அவன் பார்வையில் உக்கிரம் தெறித்து கொண்டிருந்தது.
வண்டியில் அமர்ந்தவாறே நிதானமாக கைகளை கோர்த்து நெட்டி முறித்து, அதே நிதானத்துடன் இறங்கி சண்முகநாதனின் எதிரில் நின்றான் அவன். அவன் பார்வையில் பயம் வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனும் தைரியமாகவே நிற்க, தன் வலது கையை நீட்டி துர்காவின் இடது கையை பற்றியவன் அவளை தன்னருகில் இழுக்க முற்பட, அவள் வலது கைதான் சண்முகநாதனின் கைகளில் இருந்ததே.
அப்போதுதான் பார்ப்பது போல் திருவும் அவன் கையை கூர்மையாக பார்க்க, அப்போதும் அவள் கையை விட்டானில்லை அவன். திரு பார்க்கவும் ஆட்களை உடன் அழைத்து வராத தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன் வெளியே “இங்கே பார் திரு.. இது சரியே இல்ல, என் அக்காப்பொண்ணு இவ.. நீ தேவ இல்லாம எங்க வழில வர்ற..” என்று அவன் சொல்லி முடிக்க
திரு அப்போதும் மாறாத சிரிப்புடன் அவன் இடது கை மணிக்கட்டை பிடித்து ஒரு அழுத்தம் கொடுக்க, சண்முகநாதனின் கை தானாகவே துர்காவிடம் இருந்து விலகிவிட்டது. இப்போது மணிக்கட்டை விட்டுவிட்டவன் கைகுலுக்குவது போல் அவன் கையை பிடித்து விரல்களில் அழுத்தம் கூட்டிவிட, அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மாறவே இல்லை.
ஆனால் அதற்கு நேர்மாறாக வலியில் துடித்துக் கொண்டிருந்தான் சண்முகநாதன். திரு அதே மாறாத சிரிப்போடு “உனக்கு நல்லவிதம்மா சொன்னா புரியவே புரியாது போலயே… ஹ்ம்ம்… என்ன சொன்ன அக்கா பொண்ணா.. உள்ளே படுத்துட்டு இருக்கு பாரு வள்ளிம்மா.. அது வந்து சொல்லட்டும்.. நீ யாருன்னு..”
” உனக்கு சொல்ல வேண்டி இருக்காது.. இருந்தாலும் சொல்றேன்… அந்த மார்க்கெட்ல உனக்கு என்ன தெரியுமோ, அது அத்தனையும் எனக்கும் தெரியும். நாலு வயசுல இருந்து அங்கதான் இருக்கேன்… எதுவும் வேண்டாம், வாழ்க்கை ஒழுங்கா இருந்தா போதும்ன்னு நினைச்சு தூரமா இருக்கேன்..
“இனி ஒருமுறை இவளை தொடணும்ன்னு நினைச்ச, எதுக்காகவும் பார்க்க மாட்டேன்.. உன்னை மொத்தமா ஒண்ணுமில்லாம முடிச்சு உள்ள வைக்க என்னால முடியும்… போலீஸ் னாலும் சரி.. இல்ல மார்க்கெட் பசங்க ன்னாலும் சரி. முடிக்கனுன்னு நினைச்சிட்டா முடிச்சிடுவேன்…
“பார்த்து நடந்துக்கோ சண்முகம்…இனி” என்றவன் ஒருவிரல் நீட்டி அவனை மிரட்டிவிட்டு, துர்காவை வலக்கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனையின் உள்ளே நடந்து விட்டான். சண்முகநாதன் தான் அதிர்ந்து நின்றிருந்தான் திருவின் வார்த்தைகளில்.
அவனுக்கு தெரியும் திருவின் தொழில் தொடர்புகளும், அவன் நட்பு வைத்திருக்கும் இடங்களும். எதிலும் அவன் பெயர் இருக்காது, ஆனால் அவனுக்கு என்று கூறிவிட்டால் அவன் சொல்வதை செய்து முடிக்க அந்த மார்க்கெட்டிலேயே அத்தனை பேர் இருந்தனர்.
மாநிலம் விட்டு மாநிலம் தொழில் செய்வதால் காவல் துறையிலும் அவனுக்கென்று சில நண்பர்களை வைத்திருந்தான் அவன். அந்த ஒரு விஷயத்திற்காக தான் சண்முகநாதன் அமைதியாக நிற்பது. அவன் அக்காவிடம் சொன்னது போல் “போலீசா ” என்று அசால்டாக அவனிடம் சொல்லிவிட முடியாது என்பதும் தெரியும் அவனுக்கு.
தான் எதுவும் வாயை விட்டுவிட்டால் “பேசினாய்தானே வாங்கிக்கொள்” என்று முடித்துவிடுவான் என்று புரிந்தவன் அப்போதைக்கு அமைதியாகி விட்டான். அவனுக்கு, துர்காவை பார்த்த திருவின் பார்வையில் தெரிந்த நெருக்கம் வேறு கதையை சொல்ல, அதுவேறு கொதித்துக் கொண்டு வந்தது.
ஆனால் அனைத்திற்கும் மேலாக கைவலி உயிரைக் குடிக்க, அந்த நிமிடம் கைதான் முக்கியம் என்று முடிவெடுத்து அவனும் அதே மருத்துவமனைக்குள் நுழைந்தான் வைத்தியத்துக்காக. “பாவிப்பய.. எத்தனை எலும்பை ஒடச்சானோ, தெரியலையே…” என்று புலம்பிக் கொண்டே வைத்தியம் முடித்து கிளம்பி இருந்தான் அவன்.
இங்கு திரு துர்காவை அழைத்துக் கொண்டு உள்ளே நடக்க, அவள் கையை விடுவித்துக் கொள்ள பார்த்தும் கூட கையை விலக்கவே இல்லை அவன். அவன் பாட்டிற்கு நடக்க, அசையாமல் நின்று விட்டாள். அவன் திரும்பி பார்க்கவும் “கையை விடுங்க” என்றாள் அவன் கண்களை பார்த்து.
“ஏன் உன் மாமன் பிடிச்சிருந்தானே.. அவன்கிட்ட சொல்ல வேண்டியதுதானே.. கையை விட சொல்லி” என்று அவன் ஆத்திரமாக அவளை முறைக்க, பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளின் பார்வையில் மேலும் கொதித்தவன் “அறிவில்ல.. படிச்சிருக்க தானே.. எங்க போகணும், வரணும்?? யார்கிட்ட பேசணும் ?? எதுவும் தெரியாதா..? அவன்லாம் ஒரு ஆளுன்னு அவன்கிட்ட உதவி கேட்க போயிருக்க..” என்று அவன் பொரிந்து கொண்டிருக்க
“ப்ளீஸ்.. அவன்கிட்ட உதவி கேட்டு போனது எவ்ளோ பெரிய தப்பு ன்னு அவனே புரிய வச்சிட்டான்..