மணிக்கும் சிண்டுவிற்கும் மனது ஆறவே இல்லை. இத்தனை விமர்சையாக, சிவா புதுவீடு புன்னியோஜனம் செய்கையில் அதில் பைரவி இல்லாமல் இருந்தால் யாருக்குத்தான் மனது ஏற்கும்.
அதிலும் செல்வியை கேட்கவே வேண்டாம்.
முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டே இருந்தார். என்ன வேலை சொன்னாலும் அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. எதோ வேண்டா வெறுப்பாய் வந்திருப்பது போல் வந்து, ஒரு ஓரமாய் அமர்ந்துகொண்டார். அவர் மகளையும் எதையும் செய்யவிடவில்லை. தன்னோடு இருத்திக்கொண்டார்.
ரஞ்சிதம் அழைத்து ஓரிரு வேலைகள் சொன்னதற்கு கூட “வேணாம் க்கா.. நாங்க இங்கனவே இருக்கோம்…” என்று முடித்துவிட்டார் செல்வி.
பைரவி இல்லாமல் அவருக்கு இந்த ஓராண்டு காலம் என்பது மிக மிக கடினமாய் இருந்தது. பெற்ற பெண் போல அல்லவா அனைத்தும் பார்த்து பார்த்து செய்தாள். ஒருநாள் ஒருபொழுது கூட வேலை செய்பவர் என்று அவள் எண்ணியதில்லை தானே.
சிவாவும் பைரவியும் விரும்புகிறார்கள் என்று தெரிந்துமே, ஒரு அன்னையின் ஸ்தானத்தில் இருந்து தானே செல்வி அவளிடம் பேசினார். இப்போது அவள் இல்லாத இந்த புதுமனை புகுவிழா அவருக்கு இனிக்கவில்லை.
மணியும், சிண்டுவும் கூட அப்படித்தான். கடமைக்கு என்று வந்து நின்றிருக்க, முதல் நாள் இரவு வாஸ்து பூஜை முடிந்து, இதோ இன்றைய தினம் அதிகாலை பிரம்மா முஹூர்த்ததில் கணபதி கோபம் செய்து, இதோ இப்போது காலை விருந்தும் நடந்துகொண்டு இருந்தது.
“டேய்… என்னடா இங்க ஓரமா வந்து குந்தின்னு இருக்கீங்க…” என்று சிவா வந்து கடிய, மணி அப்பட்டமாய் முறைத்தான்.
“என்னடா?!” என்று மீண்டும் சிவா கேட்க,
“அண்ணா.. என்ன இருந்தாலும் பைரவியக்காவ நீ கூப்பிட்டிருக்கணும்…” என்று சொல்லியேவிட்டான் சிண்டு.
பைரவி என்ற பெயரைக் கேட்டதுமே, சிவாவின் முகம் கோபத்தை காட்ட “என்ன மச்சி.. அவன் சொல்றது சரிதான. இந்த வீடு இத்தனை அழகா வந்திருக்குன்னா அதுக்கு பைரவி தான் காரணம். அந்த பொண்ணு எல்லாத்துக்கும் பார்த்து இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு எத்தனை ஆசையா சொல்லிட்டு இருந்தது…” என்று மணி கடிய, சிவாவிற்கு மனது அத்தனை ரணமாய் வலித்தது.
ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாதே.
சிவா பழைய சிவாவாய் மாறி இருந்தான். அதே பிடிவாதம், கோபம் அழுத்தம் எல்லாம் மீண்டும் வந்திருந்தது. அவன் மனது கண்டிருந்த அந்த மென்மை பைரவியோடு காணமல் போயிருந்தது.
கண்களை இறுக மூடி, முகத்தில் மேலும் இறுக்கம் கூட்டியவன் “இப்போ ரெண்டு பேரும் எந்திரிச்சு போய் பந்தி பாருங்க..” என, இருவரும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே எழுந்துகொள்ள,
அவர்களை மீண்டும் ஒரு பார்வை பார்த்தவன், நகரப் போக “என்ன இருந்தாலும் பைரவிய அப்படி அழ வைச்சு நீ அனுப்புனது தப்பு தான் சிவா…” என்று ஆழ்ந்த குரலில் சொல்லிவிட்டு மணி நகர, சிவாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
நிஜம் அதுதானே.
அழ அழ அவளை அப்படி பிடிவாதமாய் அனுப்பி வைத்தானே.
போகமாட்டேன் என்று அவனைக் கட்டிக்கொண்டு அழுதவளை பிடிவாதமாய் காரில், தள்ளாத குறையாய் ஏற்றி அனுப்பி வைத்தான் அதுவும் தினேஷோடு.
“நோ சிவா, நான் போகமாட்டேன். போகவே மாட்டேன். நான் என்ன தப்பு பண்ணேன்? பதில் சொல்லு நீ…” என்று அவள், அவனது சட்டையை பிடித்து உலுக்கியது இப்போதும் அப்படியே பசுமையாய் நினைவில் நிற்கிறது.
அவளது வாசம், அவளது ஸ்பரிசம், அவளாது மென்மை, அவளது காதல், அவளது கொஞ்சல் கெஞ்சல் என்று எல்லாமே, கண்ணிமைக்கும் நேரத்தில் இதோ அவனது உணர்வுகளுக்கு நடுவில் எட்டிப் பார்க்க, மீண்டும் கண்களை மூடிக்கொண்டான் சிவா.
‘பைரவி…’ என்று அவனது கட்டுப்பாட்டை மீறி அவனது மனம் அவளது பெயரை உச்சரிக்க, சிவாவின் கரமோ மெதுவாய் தன் நெஞ்சை நீவிக்கொண்டது.
அவள் சாய்ந்துகொள்ளும் நெஞ்சம். அவளுக்கு மட்டுமே உரித்தான இடம். அவளை இப்போதும் சுமக்கும் மனது. மேலும் கனத்து காந்தியது.
“சி.. சிவா.. இங்க இன்னாடா பண்ணிட்டிருக்க.. அங்க மாமா அத்தை எல்லாம் உன்னிய காணோம்னு கேக்குறாங்க…” என்று ரஞ்சிதம் வர,
பட்டு வேஷ்டி சட்டையில், ஜம்மென்று இருக்க, யாருக்குமே இப்போதிருக்கும் சிவாவின் தோற்றத்தையும், நிலையையும் காணும் பொழுது அவனுக்கு பெண் கொடுக்கவேண்டும் என்றுதான் தோன்றும்.
ஆம், தன் நிலையை கூட்டி இருந்தான் சிவா. இந்த ஒரு வருடத்தில் அசுர வேக வேலைகள் தான் அவன் செய்தது. கார் சர்வீஸ் செய்து கை மாற்றி கொடுப்பதில், அவனுக்கு கணிசமாய் வருமானம் வர, அதை முறைப்படி தொழிலாய் மாற்றினான்.
கார் என்பது மட்டுமில்லாமல், இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என்று இப்போது அவனிடம் இல்லாத பொருட்கள் இல்லை. அவனது கடைக்கு பின்னிருந்த அந்த பழைய காயலான் கடையை தனக்கு சொந்தமாக்கி இருந்தான். அதில் பல மாற்றங்கள் செய்து, கடையை புது பொலிவில் கொண்டு வந்திருந்தான்.
வீடு கட்டிக்கொண்டே இந்த வேலைகள் ஆரம்பிப்பது அத்தனை சுலபமாய் இல்லை. இடையில் வீடு கட்டுவதை கொஞ்சம் தள்ளி வைத்தான். அனைவருமே இவன் என்ன இப்படி எதையோ எதையோ செய்கிறான் என்று நினைக்க, வீட்டிலோ யாரும் அவனோடு பேசவே முடியவில்லை.
அதற்கு அவன் வீடு சென்றால் தானே. எப்போதேனும் சென்று சொக்கனை பார்த்துவிட்டு வருவான். ரஞ்சிதம் கேட்கும் கேள்விகள் எதற்கும் அவனிடம் பதில் இருக்காது. துணிந்து பெருந்தொகை ஒன்றை கடனாய் வாங்கினான். திட்டமிடல்ம, கடின உழைப்பு என்று அவனது நல்ல நேரம், அவன் தொட்டது அனைத்தும் துலங்கியது. அவனது காதல் தவிர.
“ப்ளீஸ் சிவா…” என்று பைரவி கண்ணீர் விழிகளோடு அவன் முன்னே நின்று பேசியது, இப்போதும் அவன் கண் முன்னே காட்சியாய் வர,
“வேண்டாம் சிவா. இப்போ இதெல்லாம் நினைச்சு நிக்கிற நேரமில்லை…” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன்,
“என்ன மாமா?” என்று கேட்டபடி ரஞ்சித்ததின் அண்ணன் முன்னே சென்று நிற்க,
“அட வா மாப்ள.. இப்படி உக்காரு…” என்று தன்னருகே அமர்த்தியவர் “பெருமையா இருக்கப்பா…” என்று சொல்ல, பெயருக்கு புன்னகை செய்துகொண்டான்.
“அப்புறம்.. வருமானமெல்லாம் பரவாயில்லையா?” என்று அவர் கேட்க,
“ம்ம்…” என்று பொதுவாய் தலையசைக்க,
“அம்மா சொல்லுச்சு, குருபார்வை இன்னும் மூணு மாசம் தான் இருக்காம். அதுக்குள்ளே ஒரு பொண்ண பார்க்கனும்னு. அது ஏன் வெளிய பார்க்கணும். நம்ம சின்னவன் பொண்ணு இருக்குன்னு சொன்னேன்…” என்று பீடிகை போட்டு, அவர் சிவாவின் முகத்தைப் பார்க்க, அவன் முகத்திலோ எவ்வித உணர்வும் இல்லை.
அதற்குமேலே அவராலும் எதுவும் பேசமுடியவில்லை. பாவமாய் ரஞ்சிதம் முகம் பார்க்க, ரஞ்சிதமோ என்ன நடந்திருக்கும் என்று இப்போது வரைக்கும் ஒன்றும் புரிபடாமல் குழம்பிக்கொண்டு இருந்தார்.
திடீரென பைரவி அங்கில்லாமல் போனாள். சிவாவிடம் என்னவென்று கேட்டதற்கு “அவளுக்கு இங்க செட்டாகல…” என்று சொல்லி முடித்துக்கொண்டான்.
அதன்பின் அவன் கவனமெல்லாம் தொழிலில் தான். தனது நிலையை உயர்த்திக்கொள்வதில் மும்மரமாய் இருந்தான். தொழிலும் வளர்ந்தது தான். பொருளாதாரா நிலையும் வளர்ந்தது தான். ஆனால் அவனது காதல் என்னவானது என்பது மட்டும் ரஞ்சிதத்திற்கு தெரியவில்லை.
இந்தமுறை மணியும் சரி, செல்வியும் சரி வாய் திறக்கவே இல்லை. ரஞ்சிதம் எப்படி எப்படியோ கேட்டதற்கு கூட “எங்களுக்கு ஒன்னும் தெரியாது…” என்று விட்டனர்.
இதோ புன்னியோஜனத்திற்கு நாள் பார்க்கும்போது கூட ரஞ்சிதம் கேட்டார் “பைரவி வருவா தானே…” என்று.
இதற்கு மகன் சொல்லும் பதிலை வைத்து, அவர்களது நிலை என்ன என்று கண்டுகொள்ளலாம் என்று இருக்க, அவனோ “அவ ஆஸ்ட்ரேலியா ட்ரிப் போயிருக்கா ம்மா…” என்றுவிட்டான்.
அவன் சொன்னதற்கு ஏற்ப, பிரபல தொலைகாட்சி ஒன்று, ஒரு முன்னணி இசையமைப்பாளர் ஒருவரின் ஆஸ்ட்ரேலியா இசை நிகழ்ச்சியை ஒளிபரப்ப, அதில் பைரவியும் இருந்தாள்.
“ஹ்ம்ம்..” ரஞ்சிதத்தால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
சரி இப்போது சொந்த பந்தத்தின் நடுவில் திருமண பேச்சினை எடுத்தாலாவது, ஏதேனும் பதில் வரும் என்று பார்த்தால் ஒரேதாய் ஷாலினிக்கு முதலில் முடிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டான்.
கோபம் கோபமாய் வந்தது அவருக்கு. சொக்கனுக்கு இப்போது முன்னைவிட உடல்நிலை தேறி இருந்தாலும், மகனை எண்ணி அவருக்கு வருத்தமில்லாமல் இல்லை. பைரவி யாரின் மகளாய் இருக்கக் கூடும் என்ற யூகம் இருந்தாலும், திடீரென இப்போது நடந்த மாற்றங்கள் அவரை கேள்வியை மகன் முகம் பார்க்க வைத்தது.
யார் என்ன பார்த்து என்ன பிரயோஜனம்.
சிவாவிடம் எதற்கும் பதில் இல்லை. உழைக்கும் இயந்திரம் போலாகி போனான்.
அங்கே பைரவிக்கோ இருப்பே கொள்ளவில்லை. தாமஸ் புது வீட்டின் புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி இருந்தான். தாமஸிற்கு ஓரளவு இவர்களின் நிலை தெரியும். இருந்தும் பைரவி கேட்டுக்கொண்டதால் புதுவீட்டின் புகைப்படங்களை அனுப்பி இருந்தான்.
ஒவ்வொன்றும் அவள் சொன்னது போல் தான் இருந்தது. சுவற்றில் பூசும் வர்ணம் கூட, அவள் சொன்னதை தான் அடித்திருந்தான் சிவா. அவள் கற்பனை செய்து சொன்ன வீடு, இப்போது நிஜத்தில் ஆச்சு பிசகாமல் இருக்க, அதை படத்தில் தான் அவளால் பார்க்க முடிந்தது.
கசந்த புன்னகை ஒன்று அவளது இதழில் தோன்றி மறைய “சிவா…” என்று அவளது மனது அவனது பெயரை சொல்லிப் பார்த்துக்கொண்டு இருக்க, தாமஸ் அனுப்பியிருந்த படத்தில், சிவா பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க, பார்த்ததுமே அவளது கண்கள் பளிச்சிட்டாலும்,
அவன் முகத்தில் இருக்கும் இறுக்கமும், அவன் கண்களில் தெரியும் தனிமையும் அவளுக்கு அவனது நிலையை சொல்லாமல் சொல்லியது. சொல்லப்போனால் தற்போது அவளது நிலையும் இதுதானே.
பைரவி யார் என்று தெரியவுமே ‘இனி உனக்கும் எனக்கும் ஒத்துவராது. இது காலத்திற்கும் சரியாகாத வடு..’ என்று அவன் சொல்கையில், அவனா இதனை சொல்கிறான் என்று நம்பாமல் பார்த்தாள் பைரவி.
“நா.. நான்… நான் என்ன தப்பு பண்ணேன் சிவா?” என்று அவள் கேட்க,
“இதுல யார் மேல தப்புன்னு சொல்றதுக்கு எதுவுமில்லை. ஆனா நடந்த எதையுமே மாத்த முடியாது. உங்கம்மாவோட வார்த்தைகளை நம்பி, இங்க வாழ்கையை தொலைச்சவங்க நிறைய. அவங்க குடும்பங்கள் இன்னும் இங்க வலியோட வாழ்ந்துட்டு தான் இருக்கு. எல்லாத்துக்கும் மீறி, நீ யார்ன்னு எங்க வீட்ல தெரிஞ்சா அது இன்னும் பல பிரச்சனைகளை உண்டுபண்ணும்…” என்று தன் பேச்சினில் தீர்மானமாய் இருந்தவனிடம் அவளுக்கு மேற்கொண்டு என்ன கேட்க என்றுகூட தெரியவில்லை.
மலங்க மலங்க விழித்து அவனைப் பார்த்து நிற்க “நீ இங்கிருந்து கிளம்பிடு பைரவி…” என்று அவன் சொன்ன வார்த்தைகளின் வலி இப்போதும் அவள் நெஞ்சில் அப்படியே இருந்தது.
‘எப்படி சிவா என்னை போக சொல்ல மனசு வந்தது உங்களுக்கு…’ என்று எப்போதும் போல் இப்போதும் கேட்டுக்கொண்டாள். அவளையும் மீறி கண்கள் கசிந்தது.
இருக்கும் இடம் உணர்ந்து, கண்களை வேகமாய் துடைத்துக்கொண்டாள்.
அன்றைய தினம் பாண்டிச்சேரியில், எல்லாமே நல்லவிதமாய் தான் ஆரம்பித்தது. பைரவி எந்த நேரத்தில் பழைய கதைகள் பற்றி பேச்செடுத்தாளோ, அது அத்தனையையும் அபஸ்வரமாய் மாற்றிவிட்டது.
அழகாய் கழிந்த அவர்களின் தனிமை, முடிவில் பிரிவில் வந்து நின்றது. வலுக்கட்டாயமாய் சிவா அந்த முடித்தான் என்று பைரவியை ஏற்கவும் வைக்கச் செய்தான். ஆனால் அவளும் விடவில்லை. இறுதிவரைக்கும் அவனிடம் பேசி பார்த்தாள்.
அவனோ மனது இலகவே இல்லை.
அந்த பைனான்ஸ் கம்பனி திவால் ஆனதுமே, இங்கே இவர்களின் ஏரியாவில் என்னென்ன நடந்தது என்று சிவா கண்முன்னே கண்டவன் ஆகிற்றே. எத்தனை பேரின் வாழ்வே தடம்புரண்டு போனது. இப்போது வரைக்குமே மீண்டு வராமல் இருப்பவர்கள் எத்தனை பேர்.
அத்தனை ஏன், இத்தனை ஆண்டுகளாய் விடாது வைத்தியம் செய்தும் சொக்கனை சரி செய்ய முடியவில்லை தானே. ரஞ்சிதம் இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு எத்தனை கஷ்டங்களை தாங்கி, தாண்டி வந்திருக்கிறார். அம்மாவின் முகம் அவன் கண் முன்னே வந்து போகவுமே, நொடியில் முடிவு செய்துவிட்டான், இனி தன் வாழ்வில் பைரவி இல்லை என்று.
அவனுக்கும் வலித்தது தான். எத்தனை நம்பிக்கை வார்த்தைகள் அவளிடம் சொல்லியிருக்கிறான். எத்தனை ஆசை வார்த்தைகள் அவளிடம் பேசியிருக்கிறான். அவளை பேச வைத்திருக்கிறான். இதோ சில நிமிடங்கள் முன்னர் கூட ஒருவரை ஒருவர் அணைத்து முத்தமிட்டுக்கொண்டு தானே இருந்தார்கள்.
அவளது அந்த ஈர இதழின் ருசி அவன் மனது உணர “ஆ…!” என்று தன்மீதே கோபம் கொண்டு ஆங்காரமாய் கத்தியவன், தலையை அழுந்த கோதி “கிளம்பு…” என்று சொல்லி அவளையும் அழைத்துக்கொண்டு இங்கே சென்னையில் அவளின் வீடு வந்துவிட,
வந்ததுமே அவன் சொன்னது ‘இனி நமக்கு ஒத்து வராது பைரவி.. நீ இந்த வீட்ல இங்க இருக்காத. கிளம்பிடு.. இன்னிக்கே.. இப்போவே…’ என்று சொல்ல,
“சிவா…” என்று அதிர்ந்து பார்த்தாள்.
“ஆமா… கிளம்பிடு.. இனி நமக்கு செட்டாகாது…” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
“எங்க என்னைப் பார்த்து, என்னை நேரா பார்த்து சொல்லுங்க. நமக்கு செட்டாகாதா?” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கிக் கேட்க, சிவா அவளது முகம் காணாமல், பார்வையை வேறுபக்கம் திருப்ப,
“என்னை பாருங்க சிவா…” என்று அவளும் பல்லைக் கடித்து, அடிக்குரலில் பேச,
“என்ன டி?” என்றான் ஆற்றாமையுடன்.
அவனுக்குமே நேரம் செல்ல செல்ல, அவளோட பேச பேச தனது உறுதி மாறுமோ என்ற எண்ணம். காதல் அவனுக்கும் சொந்தமானது தானே.
“போன்னு சொல்றவருக்கு டி போட்டு பேசுற உரிமை இருக்கா என்ன?” என்று நக்கலாய் கேட்டவள் “நான் என்ன தப்பு பண்ணேன்…” என்றாள் அவனது விழிகளை நேருக்கு நேர் பார்த்து.
சிவாவிற்கு தெரியும், இந்த முடிவினை பைரவி அத்தனை எளிதில் ஏற்கமாட்டாள் என்று. இத்தனை வருடங்களாய் தனக்கு உற்ற துணையாய், பக்க பலமாய் இருக்கும் நண்பர்களையே எதிர்த்து அவனை காதலித்தவள், அத்தனை எளிதில் அவனது இந்த முடிவினை ஏற்பாளா என்ன?!
முடியாது தானே.
ஆனால் சிவா அதனை முடித்தே தீரவேண்டும் என்கிற முடிவினில் இருந்தான்.
“நீ என்ன சொன்னாலும் சரி பைரவி. இனிமேல் உனக்கும் எனக்கும் ஒத்துவராது…” என்று ஆணித்தரமாய் சொல்ல,
“ப்ளீஸ் சிவா இப்படி பேசாதீங்க…” என்றாள் கண்ணீர் வடித்து.
அவளது கண்ணீர் அவனை அசைக்க, அவளை இழுத்து ஒருமுறை இறுக்கமாய் அணைத்தவன் “ப்ளீஸ் தான் பைரவி. நீ போயிடு.. இங்க இருக்காத. என் கண் முன்னாடின்னு இல்லை. இங்க யார் கண் முன்னாடியும் நீ இருக்காத.. கிளம்பிடு.. நீ யாருன்னு தெரிஞ்சா இங்க ரொம்ப பிரச்சனைகள் வரலாம்.. வேண்டாம்.. எல்லாமே அமைதியா இருக்கு. நம்ம காதல்னால பழைய பிரச்சனைகள் திரும்ப வரவேணாம்…” என,
“எல்லாத்தையும் நான் பேஸ் பண்றேனே…” என்றாள் பாவமாய் அவன் முகம் பார்த்து.
நான் போகமாட்டேன் என்று கெஞ்சும் குழந்தை போல் அவனை இறுகப் பற்றி நின்று இருந்தாள்.
“நீ எதையும் பேஸ் பண்ண வேணாம்.. என் தப்பு.. நீ இந்த வீட்டுக்கு வந்ததுமே, நீ யாருன்னு எல்லாம் விசாரிச்சு இருக்கணும்…” என்றவன், வேகமாய் அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்திவிட்டு
“நீ கிளம்பிடு…” என்றான் மீண்டும்.
“முடியாது…” என்று பைரவி தீர்க்கமாய் சொல்ல
“நீ போயித்தான் ஆகணும். உனக்கு நாளைக்கு வரைக்கும் டைம். கிளம்பிடு…” என்றுவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.
பைரவி மட்டும் என்ன உடனே இதனை கேட்டுவிடுவாளா என்ன?
என்ன செய்துவிடுவான் பார்ப்போம் என்று அவள் மறுநாள் அந்த வீடு விட்டு அசையாமல் இருக்க, மறுநாள் இரவு வரைக்கும் பார்த்தவன் “கிளம்பலையா நீ…” என்று அவளுக்கு அழைத்துக் கேட்க,
“கிளம்ப மாட்டேன்… உங்கனால என்ன செய்ய முடியும்?” என்றாள் பதிலுக்கு.
இது வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன், தாமஸிடம் வேறுவிதமாய் பேசி தினேஷ் அலைபேசி எண்ணை வாங்கியவன் “பைரவி யாருன்னு தெரிஞ்சா இங்க அவளுக்கு பாதுகாப்பு இல்லை. வந்து கூட்டிட்டு போயிடுங்க…” என்று சொல்லி அவனை வரவழைத்து,
அவள் போகமாட்டேன் என்று அழ அழ அவளை வம்படியாய் அவனோடு அனுப்பிவிட்டான்.