பெண்ணியம் பேசாதடி – 2

கவி எழுத எண்ணும் போதெல்லாம்

தடை செய்கிறது உன் மென்மை!

சரி உன் மென்மை கொண்டு நான்

கவி படிக்க எண்ணினால்

தடை செய்கிறது உன் பெண்மை!

எதை கொண்டு நான் கவி படிக்க சொல்லடி.

நாளை அக்கா மதுவுக்கு திவசம் அதனால் வீடு முழுவதும் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் காஞ்சனை.அவளது தந்தையும் அதற்கு உதவி கொண்டு இருந்தார்.

மகளின் நினைவு எழுந்து அவரை வருந்ததான் செய்தது இருந்தும் அதனை வெளி காட்டாது மறைத்துக் கொண்டார் மூர்த்தி.

அக்கா என்ற பாசம் இருந்தாலும் இது தான் நிதர்சனம் என்று மனதை தேற்றி கொண்டாள் காஞ்சனை.

அவள் அப்படித் தான் எதற்கும் அலட்டி கொள்ள மாட்டாள்.நிதர்சனம் பேசி நிற்கும் இப்பெண் புதுமை வகை கொண்டவள் போலும்.

இவர்கள் சுத்தம் செய்ய வாசலில் நின்று கொண்டு தனது தாத்தாவை கத்தி அழைத்தான் வளவன்.

“தாத்தா!.. தாத்தா!..” கோபமாக இருக்கிறாராம் அதனால் வீட்டுக்குள் வர மாட்டாராம். அதனால் யாரோ போல் வெளியிலிருந்து ஒரே கூச்சல்.

“அப்பா அந்தச் சின்ன நாய் உள்ள வந்தா பேசுங்க இல்லாட்டி அதைத் தொரத்தி விடுங்க” அசால்ட்டாகக் காஞ்சனை சொல்ல துள்ளி கொண்டு உள்ளே சண்டைக்கு வந்தான் வளவன்.

“இங்க பாருங்க மிஸ்டர்.மீசை உங்க பொண்ணு கிட்ட சொல்லி வைங்க என்ன வம்பு பண்ண வேணாம்னு, நான் உங்களை தானே கூப்பிட்டேன்”.

“தைரியம் இருந்தா என்ன பார்த்து பேசுடா” விடாமல் வம்பு செய்தால் காஞ்சனை.

“ஏன்? எனக்கு என்ன பயமா?” ஏகுறிக் கொண்டு வந்தவனை நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்.

“டேய்! வளர்ந்து கெட்டவனே தள்ளி நில்லு மேல விழுந்து வைக்காத”.

“தாத்தா உங்க பொண்ணுகிட்ட மல்லுக்கு நிற்க எனக்கு நேரமில்ல. அப்பா உங்க இரண்டு போரையும் கூட்டிட்டு வர சொன்னாரு. இப்போ என்கூட வரீங்களா என்ன?” என்றவனுக்கு பதில் சொன்னாள் காஞ்சனை அதுவும் வெகு அலட்சியமாக.

“வருவோம்! வருவோம்! எங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வருவோம்” காஞ்சனை சொன்ன பாவனையில் விட்ட சண்டையை வளவன் தொடர போக அவனைத் தடுத்து நிறுத்திய மூர்த்தி.

இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? அம்மா, பையன் மாதிரியா பேசிக்கிறீங்க அக்கா, தம்பி மாதிரி நித்தமும் சண்டை பிடிக்க வேண்டியது” இருவரையும் பொதுவாக கடிந்தவர்.

“உனக்கு என்ன வயசு காஞ்சனை, எப்போ பாரு அவன் கூட மல்லுக்கு நிக்குற பாவம் புள்ள முதல அவனுக்குச் சாப்பிட எதாவது குடு” மகளை திட்டி வைக்க.

கடிந்து கொண்ட தந்தையை சிறு பிள்ளை போல் முறைத்து விட்டு.வளவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு சென்றாள். அவளது செயலை பார்த்த இருவருக்கும் அழகான புன்னகை.இவள் கணிக்க முடியாத முதிர் கன்னி போலும்.

காஞ்சனை கொடுத்த சாப்பாட்டை முறைத்து கொண்டே உண்டவன் அதன் பின்பு அவர்களுடன் சேர்ந்தே வீட்டை சரி செய்து விட்டு வாமனனின்  வீட்டை நோக்கி சென்றனர்.

அங்கே அவர்களை வரவேற்று அவர்களுக்கு அறையை ஒதுக்கி கொடுத்தார் வாமனன்.

பிறகு காஞ்சனையிடம் வந்தவர் “காஞ்சனை ஐயருக்கு வாங்க வேண்டிய சாமான் எல்லாத்தையும் மாமாவை கேட்டு எழுதிக் கொடும்மா.சாப்பாடு ,யார் யாரை கூப்பிடனும் என்ன செய்யனும் எல்லாம்”.

வாமனன் பேச்சுக்கு சரியென்று தலை அசைப்பு மட்டுமே அவளிடம். ‘சரிங்க மாமா என்றோ’ ‘சரி என்றோ’ பேச வாய் வரவில்லை. ஏனோ ஓர் ஒதுக்கம் அன்றிலிருந்தே.பின்பு தனது மாமனிடம் திரும்பிய வாமனன்,

“மாமா நீங்க வாங்க நம்ப அடுத்த வேலைய பார்க்கலாம்” என்று அவரை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றார்.

இவர்களது உறவு ஒரு எல்லை வரை தான் அத்தை மகன் என்ற பாச பிணைப்பு அவளுக்கும் இல்லை, அவருக்கும் இல்லை.

மாமன் சொந்தம் பிறகு மனைவியின் சொந்தம் அது வரையில் மட்டுமே அவர் பேச்சு.

அடுத்த நாள் சற்றுக் கனமாகத் தான் விடிந்தது. ஆறு மணிக்கே எழுந்து ஆத்துக்குச் சென்று திதி கொடுத்து வந்தனர் தகப்பனும் மகனும்.

பின்பு வீட்டில் சொந்தங்கள் சூழ பூஜை ஆரம்பமானது.அனைத்து காரியமும் மூர்த்தி நின்று வழி நடத்த மற்றவை காஞ்சனை தலைமையில் நடந்தது.

நல்ல படியாக காரியங்கள் முடிய பொதுவாக பேச்சு தொடங்கியது வழமை போல் காஞ்சனையின் திருமணம் பற்றி, வளவனின் தொழில் பற்றி, மிதமான குத்தல் பேச்சுகள் ஆராயும் பேச்சுகள் என வந்தவர்கள் சிலர் சிறப்பாக வேலை பார்த்து வைத்தனர்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத காஞ்சனைக்குக் கோபத்தைக் கொடுத்தது வாமனனின் மறுமணம் பேச்சு.

சொந்தத்தில் அத்தை முறை உள்ள பெண் வாமனனை பிடித்து வைத்து  ஒரு பொண்ணை பார்த்து முடிச்சா என்ன? சிறுசுல கல்யாணமாகி போச்சு வேற அதானே என்றதும் ஓர் புன்னகை மட்டும் சிந்தி நகர்ந்து விட்டார் வாமனன் காஞ்சனைக்கு தான் அத்தனை கோபம்.

 “ஏண்டா! அதுங்க தான் கூறுகெட்ட தனமா ரெண்டாவது கல்யாணத்தைப் பத்தி பேசுதுங்கனா உங்க அப்பாக்கு எங்க போச்சு புத்தி,

பால் குடி மாறாத புள்ளைய வச்சுருக்காரா கஷ்ட பட. பீர் குடுக்குற புள்ளைய வச்சுக்கிட்டுக் கல்யாணம் கேக்குது”

“சித்தி நீ என்ன ரொம்ப டேமேஜ் பண்ற, அப்பா முன்னாடி அப்படியே பம்புற என்கிட்ட மட்டும் தான் வாய் சின்னப் புள்ள கிட்ட உன் வீரத்தை காட்டாத தைரியமிருந்தா  எங்க அப்பாகிட்ட பேசு பார்ப்போம்”.

“அய்ய! உங்க அப்பனுக்கு கொம்பிருக்கா நான் பயந்துக்க? நீ! சின்னப் புள்ளையா? எங்க அக்கா திவசத்தைக் கொண்டாட சரக்கு வாங்கி வச்சிருக்க நீ பச்ச புள்ள நாங்க நம்பனும்.

மரியாதையா என்னையும் எங்க அப்பாவையும் வீட்டுல விட்டுட்டு அப்பனும்  மகனும் கூத்தடிங்க இல்ல கொன்னுடுவேன்.” பதுங்கி பதுங்கி மறைந்து கொண்டு வந்த தீர்த்தத்தைப் பார்த்து விட்டு தான் காஞ்சனை மிரட்டியது.

“உனக்கென்ன தெரியும் நாங்க உண்மையா அம்மாவ மிஸ் பண்ணுறோம்.கண்கள் லேசாக கலங்க சொன்னவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும். கொஞ்சம் இறங்கி வந்தால் இவனைச் சமாளிக்க முடியாது என்று எண்ணிய காஞ்சனை”.

“சரி சரி நம்புறேன் போய் வேலைய பாரு” அதற்கும் அலட்டிக்காமல் சொன்ன சிற்றன்னையைப் பார்த்து பல்லை கடித்தவன்.

“நீ சித்தி இல்ல ராட்சசி”.

“சரிதான் போடா” தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் இவர்கள் முட்டிக் கொள்வதை மட்டும் நிறுத்த போவதில்லை.

அதன்பின் மதிய உணவுண்டு சொந்தங்கள் கிளம்ப மூர்த்தியும், கஞ்சனையும் கூட விடை பெற்றனர். ‘போகாதீங்க மாமா’ என்ற வார்த்தைகள் இல்லாமல் பத்திரமா போயிட்டு வாங்க மாமா என்ற வாமனன், அவர்களைத் தங்கள் காரில் அனுப்பிவிட்டு ஓய்வு எடுக்கச் சென்றார்.

************

இரவு 9 .30 கடிகாரம் மணி அடிக்கச் சரியாக வாமனனின்  போனும் அடித்தது.யாரு என்று அறிந்தவர் போனை எடுத்துக் காதில் வைக்க “என்ன எழுத்தாளரே! நல்ல படியா காரியம் முடிஞ்சுதா” பேரிளம் பெண் கேட்க.

“ஹ்ம்ம்!… முடிஞ்சுது என்னமோ மாதிரி இருக்கு சொல்ல தெரியல. மது ரொம்ப அமைதி அவளுக்கு என் மேல காதல் இருந்ததான்னு தெரியல,ஆனா ஆசை இருந்தது எனக்கும். அவ இல்லங்கிறதை ஏற்க முடியலை.

“புரியுது எழுத்தாளரே!”.

“நீயும் தூரமா இருந்து ரொம்பக் கஷ்ட படுத்தறடி” சிறுது மௌனத்திற்குப் பின்.

“நான் எப்படி அங்க? நான் எப்போதும் உங்க ரசிகை தான். வாமனன் எழுத்துக்கும் அவர் ஆளுமைக்கும் நான் என்றும் ரசிகை.

அவர் கவிதைக்கு நான் அடிமை அதைத் தாண்டி யோசிக்க ஒன்னுமில்ல எழுத்தாளரே” பேரிளம் பெண் படும் தெளிவு போலும்.

“சரிடி ஒரே ஒருதரம் உன்னை பார்க்கணும் அதுக்கு மேல தொந்தரவு செய்ய மாட்டேன்” வாமனன் குரல் கெஞ்ச இரக்கமே இல்லாமல் பதில் தந்தது பேரிளம் பெண்.

“அது சாத்தியமில்லை எழுத்தாளரே!”. பெண் இயல்பாகக் கூற எழுத்தாளருக்குக் கோபம் உச்சம் தொட்டது.

“ஏண்டி! உன்ன தூக்கிட்டு வர எனக்கு ரொம்ப நேரம் ஆகாது”.

“என்ன தூக்குனா இலவச இணைப்பு உண்டு எழுத்தாளரே! உங்களுக்குத் தான் தலை வலி”.

“ஏன் உன் தங்கச்சி இருக்காளா?”

“காலம் போன கடைசில உங்களுக்குக் கொழுப்பு தானே. நான் சொன்னது என் வீட்டுக்காரர், என் பிள்ளைகளை” சிறுதும் தயக்கமின்றி

“அவங்களையும் கூட்டிட்டு வந்துடலாம் எனக்கு பிரச்சனை இல்லை” என்றவரை என்ன செய்தால் தகும்.

வாமனன் பிடிவாதம் எரிச்சலை தர “எப்படி இந்தப் பக்கம் நீங்க. அந்தப் பக்கம் என் வீட்டுக்காருனு நான் குடும்பம் பண்ணவா? நல்ல வாயில வந்துரும் வாமனன்”.

பேரிளம் பெண்ணுக்குக் கோபம் வந்தால் மரியாதை சற்று குறைந்து கொண்டே வரும் முதலில் எழுத்தாளர்!… ‘வாமனனாகி’…. வாமனன் ‘வாடா’ வாகி,வாடா ‘போடவாகி’ போகும்.

“ப்ளீஸ் டி..” என்றவரது கெஞ்சலை கிடப்பில் போட்ட பேரிளம் பெண்.

“வெறுப்பான இரவு வணக்கம் எழுத்தாளரே” என்றவள்  அவரது பதிலை எதிர் பார்க்காமல் போனை வைத்து விட்டாள்.

கோபம் கோபமாக வந்தது வாமனனுக்கு.அதே கோபத்துடன் நீச்சல் குளம் நோக்கி சென்றவர் அங்கே தனக்காகத் தனது மகன் கோப்பையுடன் காத்திருந்தான்.அவரது முகமே அவரது கோபத்தைப் பறைசாற்ற.

“என்னப்பா? என்ன சொன்னாங்க உங்க கண்ணம்மா உங்க முகத்தைப் பார்த்தா அடி பலம் போலையே” சன்ன சிரிப்புடன் மகன்.

“அடப்போட ரொம்பத் திட்டுறா”.

சிறு பிள்ளையென முகம் தூக்கிய தந்தையை ரசித்தவாறே “நீங்க என்னப்பா பண்ணீங்க” சரியாக நாடி பிடித்த மகனிடம் தான் பேசியதை கூறியவர்.

“ரொம்பக் கஷ்டமா இருக்குடா கண்ணா” என்று புலம்ப.

“அப்பா வ்ருத்திக்காதீங்க இத்தனை நாள் அம்மா இருந்தாங்க ஓகே, ஆனா இப்போ நிலைமை வேற நீ உங்களுக்காக வாழுங்கப்பா.உங்கள் பிறந்த நாளுக்கு என் பரிசு உங்க கண்ணம்மா தான்” கண்ணடித்து கூறிய மகனை கட்டி அணைத்தார் வாமனன்.

இவர்கள் இருவரும் தந்தை மகன் உறவை தாண்டி நின்றனர். அதுவும் மதுவின் இறப்பிற்குப் பிறகு இருவருக்கும் உள்ள நெருக்கும் இன்னும் கூடியது.

பின்பு மௌனமாகக் குடித்தவர்கள் எழுந்து உறங்க போக “ஒரு நிமிஷம்” என்று வாமனனை தடுத்த வளவன்.

“சப்போஸ் அவங்களுக்குக் குடும்பம் இருந்தா நம்ப விலகிடனும் அதுக்கு உங்களுக்குச் சம்மதமா?” என்றவனை பார்த்து சிரிப்புடன் சம்மதம் என்று தலை ஆட்டினார் அவனும் சிரிப்புடன்.

“குட் நைட் ப்பா”

“குட் நைட் கண்ணா”

வளவனுக்கு சிறு வயது முதலே தனது தந்தையிடம் செல்லம் அதிகம்.வளர்ந்த பின் அவரே தனக்கு ஹீரோ என்பது போல அவரைக் கொண்டே எல்லாம் செய்வான் வளவன்.

இது வழமையான ஒன்று தான் எல்லாருக்கும் அவரவர் தந்தை கதாநாயகன் தான்,ஆனால் வளவன் சற்று வித்தியாசமானவன் தந்தையை அணு அணுவாக ரசிப்பவன்.அவரது ஒவ்வொரு செய்கையும் அவனது ரசனையாக.

மது பாசமாக இருந்தாலும் அம்மாவை விட அப்பாவிடம் அதிகம் அன்பு உண்டு. அதனால் தான் என்னவோ அவன் தாயின் இறப்பை வெகுவாக கடந்து விட்டான்.

மதுவிற்கு பார்த்து பார்த்து செய்த வாமனன் இதுவரை தனக்கென்று எதுவும் செய்து கொண்டு அவன் பார்த்ததில்லை.

அவர் ஈடுபாடு காட்டும் இரு விடயங்கள் என்றால் ஒன்று எழுத்து, இன்னொன்று அவர் கண்ணம்மா.

ஆம்! அவர் தனது பதினெட்டு வயதில் முதல் முதலில் ஒரு நாளிதழில் கவி எழுதும் போதுக் கிடைத்த ரசிகை தான் பேரிளம் பெண்.

ரசிகை என்ற நிலையில் மட்டுமே அவள் இருக்கச் சிறுது காலமாக அவரது நிலை அதற்கும் மேல் என்று அடித்திக் கொண்டது.

பணம்,பதவி,சொத்து,சுகம்  அனைத்தும் இருக்க இவையெல்லாம் ஆள அழகான மகனும் இருக்க அவரது  உயிர்ப்பு?

அது தனது ரசிகையிடம் மட்டும் அல்லவா உண்டு. பார்ப்போம் அவரது மகன் அவருக்கு உயிர்ப்பை கண்டு தருவானா என்று…….

கைக்குக் கிட்டுமா வண்ணத்துப் பூச்சி, இல்லை ஆட்டம் காட்டி ஆடுமா கண்ணாமூச்சி.