இரவு? பகல்?

தீர்மானிப்பது எது?

கதிரா? கண்களா?

அத்தியாயம் 4

நந்தினி வீட்டில் மதிய உணவு தயார்செய்து முடிந்திருந்தாள், வீட்டு வேலை செய்ய வருபவர் வந்திருந்ததால், பாத்திரங்களை ஒழித்துப்போட்டு, அவருக்கு காஃபி தயாரித்துக் கொடுக்கையில், அவளது அலைபேசி அடித்தது. யார் அழைப்பது? அம்மா இப்போதுதான் ஒரு மணி நேரம் முன்பு பேசினார்கள், வேறு யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கூடத்தில் சார்ஜ் செய்ய போட்டிருந்த பேசியை எடுத்துப் பார்த்தாள். அழைத்தது விஷால்!, சட்டென பச்சையில் விரல் போனது.”சொல்லுங…”,அவள் முடிப்பதற்கு முன் குறுக்கிட்ட விஷால்,

“ஹலோ நந்தினி, நான் இன்னும் அரைமணி நேரத்துல நான் வீட்டுக்கு வர்றேன், அதுக்குள்ள பேங்க்-லேர்ந்து அசிஸ்டன்ட் மேனேஜர் வந்தாலும் வருவார். அவரை உக்கார வச்சு காஃபி, ஸ்னாக்ஸ் ஏதாவது கொடு”, என்று படபடத்தான்.

“ஓஹ், ஓகே”, என்று விட்டு ஏதாவது விபரம் கூறுவான் என்று நந்தினி காத்திருக்க, அலைபேசி கீங்… என்ற சப்தத்துடன் மௌனமானது. சில நொடி அதை வெறித்தவள், ஸ்னாக்ஸ் என்ன இருக்கின்றது என்று பார்க்கக் சென்றாள். குக்கீஸ் இருந்தது, ஆனால் மதிய நேரம் தருவதற்கு ஏற்றதல்ல, இப்போது என்ன ஸ்னாக்ஸ் தருவது? என்று யோசித்தவள், கட்லெட் செய்யலாம், காரணம் அதனை இலகுவாக செய்ய முடியும், கூடவே சற்றே பசியினை அமர்த்தும், வருபவர் வேண்டாமென மறுத்தால் அதிகமாக இருப்பதை ஸ்ருதி வீட்டிற்கு கொடுத்து விடலாம், என்ற எண்ணத்துடன், சிறிய குக்கரில் உருளைகளை வேகவைத்து, கேரட் பீன்ஸ் பட்டாணி முதலானவைகளை பிரிட்ஜில் இருந்து எடுத்து நறுக்கி வைக்கவும், வாசலில் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

வாசலுக்கு சென்று கதவைத்திறந்தவளின் எதிரே நின்றிருந்தது, ரமணன்!!.

இருவரும் அதிர்ந்து சில வினாடிகள் ஸ்தம்பித்தனர். முதலில் சுதாரித்த ரமணன், “ஹ்க்கும். மிஸ்டர் விஷா..ல். வீடு இதுதான?”

திகைப்பு அடங்கியவளாக, “ம்ம். ஆமா, நீங்க..? பேங்க்-லேர்ந்து வர்றீங்களா?”, என்ற நந்தினியின் கேள்விக்கு ரமணன் பதில் சொல்லும் முன், வாசலில் விஷாலின் புல்லட் சப்தம் கேட்க, இருவரும் வாசலை நோக்கினர்.

பரபரப்புடன் வண்டியில் இருந்து இறங்கிய விஷால், “வாங்க மிஸ்டர் ரமணன், கடைல கஸ்டமர் இருந்தாங்க அதான் கொஞ்சம் லேட்டாயிடிச்சு”, என்றபடி கேட்டைத் திறந்து காம்பௌண்டுக்குள் நுழைந்தான்.

தடதடக்கும் மனதுடன் நந்தினி உள்ளே நடக்க, ஆண்கள் இருவரும் அவளைப் பின் தொடர்ந்து வந்து கூடத்தில் அமர்ந்தனர். இருவரது பேச்சில் இருந்து, தனது வீட்டை அடமானமாக வைத்து இரண்டாவது கடைக்குத் தேவையான சரக்குகளை வாங்குவதற்கும், கூடவே ஓவர்ட்ராஃப்ட் கணக்கும் தேவைப்படுவதால் விஷால் அவன் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுக, வீட்டை, அதன் மதிப்பை மேற்பார்வையிடுவதற்காக அங்கு துணை மேலாளராக பணிபுரியும் ரமணன் வந்திருகிறான் என்பதை அடுக்களையில் வேலை செய்தபடி நந்தினி புரிந்துகொண்டாள்.

காஃபி சிற்றுண்டியுடன் சிறிது நேரம் பேசிய பின், “இந்த வீட்டுக்குண்டான EC (வில்லங்க சான்று), இன்னும் நீங்க தரல, அது வந்ததுன்னா நம்ம பிரான்ச் ல என்ன மாக்சிமம் லிமிட் இருக்கோ அதை உங்களுக்கு சாங்ஷன் ஆகறா மாதிரி பாக்கறேன்”, என்றுவிட்டு விடைபெற்றான் ரமணன்.

ரமணனை வழியனுப்பி வைத்து உள்ளே வந்த விஷால், “இன்னிக்கே வேலைய முடிக்கலாம்னு பாத்தேன், ஆனா, அங்க சப் ரெஜிஸ்திரார் ஆபீஸ்ல சர்வர் டௌன், சரியாக இன்னும் ஒரு வாரமாவது ஆகும்னு சொல்லிட்டாங்க, அப்பறமாத்தான் வில்லங்க சர்டிபிகேட் கிடைக்குமாம், ஆன்லைன் அப்ளிகேஷனும் பெண்டிங்-ல இருக்காம், பணம் வேற அர்ஜெண்டா வேணும். ஹ்ம்.. என்ன பண்றது?”, என்று அவனுக்கே சொல்வது போல சொல்லிக்கொண்டான்.

பின், “சரி நான் வர்றேன், நீ போயி தர்ஷித்தை கூட்டிட்டு வந்துடு, இன்னிக்கு நான் வர்றதுக்கு லேட்டாகும்”, என்று கிளம்பிவிட்டான். அவனது ஆபிஸ் எனப்படுவது விஸ்தீரணமான கடையின் இரண்டாவது தளத்தின் மேல் பகுதியில் முக்கால் பங்கு குடவுனாக மாற்றி மீதியை கண்ணாடி தடுப்பு கொண்டு அலுவலகம் போல தடுத்து ஏசி வசதி செய்து கொண்டிருந்தான்.

விஷாலின் வன்பொருள் அங்காடியில் கட்டுமான பொருட்களை தவிர்த்து, வீடு கட்டுவதற்கு தேவையான மற்ற அனைத்தும், விதவிதமான பதி கற்களில் இருந்து, பாத்ரூம் பொருட்கள், பீங்கான் சாமான்கள், எலெக்ட்ரிக்கல், பெயிண்ட் வகையறாக்கள் என ஒரு கட்டுமானம் முழுமையாக நிறைவுற என்னென்ன தேவையோ அனைத்தும் விஷாலின் கடையில் மொத்த விலையில் கிடைக்கும்.

விஷால் தரும் பொருட்களின் உத்திரவாதம் இரண்டு வருடங்கள் (மின் உபகாரணங்களைத் தவிர). எனவே அவற்றை மேற்பார்வையிட, பழுது ஏற்பட்டால் சீர்செய்ய பிளம்பர், எலட்ரிஷியன், மேஸ்திரி என ஒரு குழுவை வைத்து நிர்வகிப்பது அவனது ஹார்ட்வேர் கடையின் தனிச் சிறப்பு. எனவே அருகிலிருக்கும் சிறிய கட்டுமான நிறுவனத்தினர், அவர்களது எல்லாவித தேவைகளுக்கும் விஷாலை அணுகுவது வழமை.

தரமான பொருள், நியாயமான விலை, நம்பகத்தன்மை, கூடவே உத்திரவாதமும் சேர்ந்தால் விற்பனைக்கு கேட்பானேன்?, லாபம் பெருகியதால் விஷால் அருகாமையில் உள்ள உள்ளகரத்தில் தனது அடுத்த கடையை திறக்க ஆயத்தமாகிக்கொண்டிக்கிறான்.

விஷால் ரமணனுடன் பேசி வீட்டிலிருந்து கடைக்கு வர, மாடியில் ஒருஅந்த பிரபல கட்டுமான நிறுவன மேலாளர் வந்து இருபது நிமிடங்களாக காத்திருப்பதாக கடையில் வேலை பார்க்கும் ஒருவன் கூற, அவர்கள் நிறுவனம் இந்த பகுதியின் அருகாமையில் ஒரு பல்லடுக்கு குடியிருப்பினை கட்ட ஆரம்பித்திருப்பது நினைவில் வர, வேகமாக படியேறினான்.

********

மேஜையில் இருந்து மெல்ல தலை நிமிர்ந்த ஸ்ருதி சுற்றும் முற்றும் பார்த்து, ‘எவ்ளோ நேரமா இப்படி டேபிள்-ல தல வச்சு மயங்கி இருந்தேன்னு தெரிலையே, நல்ல வேளையா இது ஆபிஸ் லன்ச் டைம், இல்லன்னா கூட வேலை பாக்கறவங்க அத்தைக்கு போன் போட்டு, இத பெரிய விஷயமாக ஆக்கி இருப்பாங்க’, என்று நினைத்தபடி தனது இருக்கையில் நேராக அமர்ந்தாள்.

‘ஆனா அந்தப் பொண்ணு சொன்ன விஷயம் உண்மைதானா? ராகவ் இறந்ததுக்கு  பின்னால அவங்க இருப்பாங்களோ? இருக்கறதிலேயே உருப்படியான சொத்துன்னு  சொன்னா இப்போ இருக்கிற அந்த ஒரு வீடு மட்டும்தான், அதைக் கேட்பானாமே? பணம் கொடுத்தா எதையும் வித்துட வேண்டியதுதானா? ஆனா, ராகவ் உயிரை விட சொத்து சுகம் முக்கியம்-ன்னு நினைக்கும் ரகமில்லையே? அப்படி இருந்தும் ராகவ் ஏன் விக்கறதுக்கு சம்மதிக்கல?’, என்று மூளை யோசிக்க, வாய் விட்டு “இல்லை, ரொம்ப குழப்பமா இருக்கு, கொஞ்சம் நிதானமா யோசிக்கணும், முதல்ல சாப்பிடணும் பசிக்கிது”,என்று தனக்குத் தானே பேசி கொண்டாள்.

தீவிர சிந்தனையுடன் சாப்பாடு சாப்பிட்டு முடித்து, சிறிய பாட்டிலில் இருந்த மோரைக் குடித்த பின்தான் ஸ்ருதி சற்று ஆசுவாசமானாள். பின் அலுவலக ஆட்கள், உணவினை முடித்து வந்துவிட இவள் இங்கிருப்பதை பார்த்து, “நீ லன்ச் சாப்பிட்டியா? ஏன் அங்க வரல?”, என்று அடுத்த செக்ஷனில் பணியாற்றும் கௌசல்யா கேட்டார். “சின்ன வேலை இருந்தது, போன் வேற வந்ததா? அப்டியே பேசிட்டே சாப்டுட்டேன்”, என்று சமாளித்தாள். அதன் பின் எதையும் யோசிக்க நேரமின்றி, வேலை ஸ்ருதியை ஆட்கொண்டது.

மாலை நான்கு மணியளவில் அன்றைய பணிகள் முடித்துவிட, ராகவ் வேலை பார்த்த கிளைக்கு சென்று சுசீலாவிடம் பேசி சில விபரங்கள் தெரிந்து கொள்ள முடிவெடுத்து, அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி பெற்றாள். பின் அத்தைக்கு போன் செய்து வீடு வர சற்று தாமதமாகும் என்ற தகவலை தெரிவித்து, ஆட்டோ புக் செய்து ராகவ்-வின் அலுவலகத்திற்கு சென்றாள். அங்கு அவளுக்கு பல விஷயங்கள் புலனாயின. அவற்றுள் முக்கியமானது, ராகவை அவன் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் இருவர் வந்து சந்தித்து சென்றதும், அவர்களிடம் சற்றே கோபமாக ராகவ் பேசியதும்.

“எதுக்கு கேக்கற?”, என்று கேட்ட சுசீலாவிற்கு,

“இல்ல, அவர் ஏதோ குழப்பத்தில இருந்ததால இந்த ஆக்சிடென்ட் ஆச்சா-ன்னு தெரிஞ்சிக்கலாம்-ன்னு தான் கேட்டேன்”

“அப்டில்லாம் இல்லம்மா, ரெண்டு பேர் வந்த அன்னிக்கி ஒரு நாள்தான் ரகு டென்க்ஷனா இருந்தான், அதுகூட அவங்க கிட்ட பேசறவரைக்குந்தான், அப்பறம் நார்மலா அவன் வேலைய செய்திட்டு இருந்தான். ஹ்ம். ராகவ் இருக்கிற இடம் எப்போதும் கேலியும் கிண்டலமுமாத்தான் இருக்கும், நானாவது ஈகோ பாப்பேன், அவன் பந்தாவே இல்லாம டீ கொண்டுவர்றவங்ககிட்ட கூட சகஜமா பேசுவான். அவனுக்கு இவ்வளவு சீக்கரமா முடிவு வந்திருக்க வேண்டாம்”, என்று கண்கலங்க ஸ்ருதிக்கும் தொண்டை அடைத்தது.

சுசீலா சட்டென தலையில் தட்டி, “ஸாரிடா, என்னவோ பேச ஆரம்பிச்சி.. எமோஷனலா போயிடிச்சு, வா வா பக்கத்து ஹோட்டல்-ல சூடா ஸ்னாக்ஸ் சாப்பிட்டு பேசலாம், அப்பறம் சொல்லு, வேலை பிடிச்சிருக்கா? கஷ்டமா இருக்கா?”, என்று இலகுவானார். ஸ்ருதியையும் இலகுவாக்கினார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, என்ன ப்ரித்விக்கு தான் இன்னும் செட் ஆகலை, எப்போவும் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது நான் இருந்து பழகிட்டாளா? கொஞ்ச நாள் தேடினா, இப்போ பரவால்ல, அத்தை கிட்ட சமத்தா இருக்கா”, ஆனால் ஸ்ருதிக்கு தெரியாது ப்ரித்வி அத்தையிடம்  மட்டுமாக அல்ல, அந்த நெடு நெடு மாறன் சரத்துடனும்.பாட்டிகள் பர்வதம் மற்றும் வசந்தம்மாவுடனும், போனில் சரத்தின் தங்கை ஈஸ்வரியிடமும் மகள் லூட்டியடிக்கிறாள் என்று.

“ஓகே டா, வா போலாம்”, என்று இருவருமாக அருகில் இருந்த உணவகத்திற்கு சென்று, சிற்றுண்டி முடித்து, ப்ரித்விக்கு பிடித்த சமோசாவும், காஜூ கத்லியும் வாங்கிக் கொடுத்து ஸ்ருதியை ஆட்டோவில் ஏற்றிவிட்டு சுசீலா அவரது வீட்டிற்குக் கிளம்பினார். மணி இரவு ஏழை நெருங்கி இருந்தது.

ஆட்டோவில் அமர்ந்தவாறே, மதியம் போனில் பேசிய பெண்ணின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தாள்.

“அலோ, ரகுண்ணே”, ஒரு பாமரத்தனமான பரிட்சயமில்லாத பெண் குரல்.

“அவங்க இல்ல, நீங்க யாரு?”

“அண்ணிங்களா?, ம்மா நா சொல்றத அண்ணன்கிட்ட சொல்லிடுங்க, என் போன் ரிசார்ஜ் பண்ண காசு தரமாட்டேங்கிறாரு எங்க வீட்டுக்காரரு, அதனால பக்கத்து வீட்டு போன் ல இருந்து பேசறேன். எங்க வீட்டை என்ன வேணா பண்ணலான்னு இவங்க கிட்ட பவர் எழுதி வாங்கிட்டாங்கமா, என்னை அதுக்காகத்தான் ஊருக்கு அனுப்பியிருக்காரு இந்த மனுசன், எனக்கு ரெண்டு புள்ளைக இருக்கும்மா, எங்களுக்குன்னு மிச்சம் இருக்கறது அந்த ஒரு ஓட்டு வீடுதான், அதையும் இந்த பாழாப்போன ஜென்மம் பில்டிங் கற்றவனுங்க தினமும் ஊத்திக்  குடுக்கற சாராயத்துக்காக விக்க துணிஞ்சிட்டாரு”

“உங்க வீட்டு இடத்தையும் சேர்த்துத்தான் கட்டறதுக்கு திட்டம் போட்டுருக்கானுவ, தயவு செஞ்சி குடுத்துறாதீங்க, ஓட்டை உடைசலா இருந்தாலும் தலைக்கு மேல கூரை இருக்குற நம்பிக்கைல காலம் தள்ளறேன்மா, ரெண்டு புள்ளைங்கள அதை வச்சுத்தான் கரையேத்தணும், அண்ணன்கிட்ட சொல்லுங்க, அங்க வந்தா நேர்ல பேசறேன்னு, ஆனா இந்த ஆளு மெட்றாஸ்க்கு எங்களை கூப்பிடுவாருனு தோணல”

“அண்ணன அவங்களோட பேசும்போது பாத்து பக்குவமா பேச சொல்லுங்க, கொலைகாரப்பாவிங்க வீட்டைத் தரமாட்டேன்னு சொன்னா, கொண்டு போட்ருவானுங்கடீ-ன்னு சொல்றாரு எங்க வீட்டுக்காரரு, அப்டி சொல்லிதான் என் வாயடைக்கிறாரு, மொத்தமா வித்தா அதிகமா காசு தர வேண்டியிருக்குமுன்னு தினந்தினம் இவருக்கு ஊத்திக் கொடுக்கறானுவமா. நான் எப்படியாவது இந்த வாரத்துக்குள்ள சென்னைக்கு வந்துடுவேன் அய்யோ எங்க மாமியா குரல் கேக்குது வச்சிடறேன்மா”

வீடு தரவில்லையென மறுப்பவர்களை அவர்கள் கொன்றுவிடுவதாக அப்பெண்மணி சொன்னதும், “ஒருவேளை ராகவை கொலை செய்திருப்பார்களோ?”, என்ற விபரீத எண்ணம் தோன்ற, முகம் வெளிறி அப்படியே மேஜையின் மேல் மயங்கி விழுந்தது நினைவுக்கு வந்தது.

இப்பெண் பேசியதில் பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தபோதும், தனது வீட்டினை  எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் தரப்போவதில்லை, ராகவ் செய்ய விரும்பாத ஒரு செயலை நானும் செய்யப்போவதில்லை, என்று தீர்மானமாக முடிவெடுக்கும் சமயம் அவளது வீடு வந்திருந்தது. இந்த குழப்பங்களில் ஸ்ருதி தனக்கு ஏன் அடிக்கடி அதீத பசி ஏற்படுகிறது என்பதை கவனிக்க மறந்திருந்தாள்.

அங்கே, ஸ்ருதி வீட்டின் கம்பிக்கிராதியைத் திறந்து படிக்கட்டினை நோக்கி உள்ளே செல்லும் போது, தரைத் தளத்தில் இருந்த  ராகவின் கார் உயிர்பிக்கப்பட்டு உள்ளே விளக்கெரிந்தது. துணுக்குற்று அருகே சென்ற ஸ்ருதி கண்டது, காரில் சரத் சாய்வாக அமர்ந்து வண்டியில் இருந்த ரேடியோவில் பாட்டுக்கு கேட்டுக் கொண்டிருந்தான்.

சுறுசுறுவென கோபம் முகிழ்க்க, “ஹலோ மிஸ்டர் என்ன பண்றீங்க?”, என்றாள்.

படக்கென கண் திறந்த சரத், “அட, வீட்டுக்காரம்மா”, என்றான்

“ஹௌஸ் ஓனர்-ன்னு சொல்லுங்க”

“அதெப்பிடிங்க சொல்றது? நான் வாடகைக்கு இருக்கும்போது என் வீட்டுக்கு நான்தானே ஓனரா இருக்க முடியும்?”

“எது?”, ஸ்ருதி குழப்பமும் கோபமுமாக பார்க்க…

“இப்போ காட்ட (நிலம்/வயல் ) குத்தகைக்கு விடறோம்னு வச்சுக்கங்க, அதோட குத்தகைக்காலம் முடியற வரைக்கும் அது நம்ம நிலமா இருக்கும், என்ன பயிர் வேனா போடலாம், கிட்டத்தட்ட முதலாளி மாதிரி”

“கிட்டத்தட்ட தான? முழுசா இல்லையே? சரி எப்படியோ போங்க, இப்போ அதில்ல பேச்சு, எங்க வண்டி-ல உக்காந்துகிட்டு என்ன பண்றீங்க?”,

“சும்மா ஒட்டாம இருந்தா பாட்டரி சார்ஜ் போயிடும் அதான், இங்க பக்கத்துல வக்கீல் வீடு வரைக்கும் போறேன்”

“தேவையில்லை, கீழ் இறங்குங்க, எங்க வண்டிய நாங்க பாத்துப்போம்”, சிடுசிடுத்தாள்.

“அட சரிங்க இறங்கறேன், ரொம்ப நாளா ஓட்டாம இருந்தா ஸெல்ப் எடுக்காதேன்னு நினைச்சுதான்.. “, என்று தன்மையாகத்தான் சொல்லி இறங்க யத்தநித்தன்.

“எனக்கு ஒட்டத் தெரியும், நீக்க முதல்ல இறங்குங்க”, என்றதும்

ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவாறே, “ஹா ஹா ஹா”, வென வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து, “கூரை ஏறி கோழி படிக்காதவன், வானம் ஏறி வைகுந்தம் போன கதையால்ல இருக்கு”, என்றான்.

“யேங்..அப்டின்னா?”

“ம்ம்.  ரெண்டு வீல் வச்ச வண்டியே ஓட்ட மாட்டாம, தோ இருக்கற ஆபிஸ்க்கு ஆட்டோலையும் பஸ்லயும் போறீங்க, நீங்க கார் ஓட்டப் போறீங்களாமா?, அதுல நீங்க உங்களுக்கு ஓட்டத் தெரியும்னு வேற சொன்னீங்க பாருங்க, செம காமிடி போங்க”, என்ற அகடவிகடம் பேசிய சரத்தைப் நெருப்புப் பார்வை பார்த்தாள் ஸ்ருதி.