ஸ்ருதிபேதம்
பகை? நட்பு?
நிர்ணயிப்பது எது?
செயலா? சிந்தையா?
அத்தியாயம் 3
“ஓஹோ, வாடகைக்கு இருக்கறவங்க என்ன சாப்பிடணும்னு கூட வீட்டம்மா தான் இந்த ஊர்ல முடிவு பண்ணுவாங்களோ?”, இடக்காக கேட்ட அந்த மனிதனை ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. புருவம் முடிச்சிட கூர்மையாக அவனைப் பார்த்தாள்.
“இல்ல..? உங்க வீட்ல குடியிருக்கறவங்க ஹோட்டல்-ல கூட நான்-வெஜ் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லறீங்களே? அதான் கேட்டேன்”
அவனது குயுத்தியான பதிலைக் கேட்டு பல் கடித்தவள், “இங்க.. வீட்ல.. மாமிசம் சமைக்கவோ சாப்பிடவோ கூடாதுன்னு தான் சொன்னேன்”, என்பதை அழுத்தமாக சொல்லி, ‘நீ வெளில என்ன சாப்பிட்டா எனக்கென்ன?’ என்று மனதில் நினைத்தவள், “சரி, உங்களுக்கு பிடிச்சிருந்தா மத்ததை நாளைக்கு அத்த கிட்ட பேசிக்கோங்க”, என்று அந்த அம்மாளிடம் கூறி பேச்சை முடிக்க ஸ்ருதி நினைக்க,
“என்னங்க, பொண்ணா பாக்கறோம், அப்பறம் சொல்றோம்ன்னு சொல்றதுக்கு?, அட்வான்ஸ் எவ்வளவுன்னு சொல்லுங்க?”, என்று அவன் கூற..
“சரத்து, செத்தயிரு “, என்று மகனை அடக்க, அவரது விளிப்பு, ஸ்ருதியை நிமிர்ந்து ‘இந்த இடக்கு ஏகாம்பரத்துக்கு பேரு சரத்தா?’ என்று ஒரு நொடி அம்மனிதனைப் பார்க்கச் சொன்னது. “அம்மாடி, அத்தை வீட்லதானே இருக்காங்க, இப்ப பேசலாமில்ல?”, என்று தொடர்ந்து அப்பெண்மணி இவளிடம் கேட்க..
விடமாட்டார்கள் போலவே? என்று நினைத்தபடி, “ம்ம். இருக்காங்க..”, அரைமனதுடன் கூறி, “வாங்க”, என்று மாடிக்கு கூட்டிச் சென்றாள்.
சற்றே வேக நடை போட்டு, “இவங்களுக்கு வீடு விட வேணாம் அத்த, ஏதாவது சொல்லி அனுப்பிடுங்க”, என்று அத்தையிடம் சொல்லிவிட நினைத்தாள். ஆனால் அவளது வீட்டில் நுழைந்த நேரத்தில் பர்வதம் பாத்ரூமில் இருந்தார். அவர் வெளியே வருவதற்கும், அன்னையும் மகனுமான இவர்கள் இருவரும் ஹாலில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
முறைப்படி அறிமுகம் முடித்ததும், மெலிதாக வியர்த்திருந்த அந்த பெண்மணியை அவதானித்த பர்வதம், “உக்காருங்க, இவங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வா ஸ்ருதி”, என்றார்.
“நானே தண்ணீ கேட்கலாம்னு இருந்தேன், இவ்ளோ வெக்கை பழக்கமில்லை பாருங்க, அதான் மூச்சு வாங்குது”, என்றார் முறுவலுடன் வசந்தி என்ற அப்பெண்மணி.
அத்தை சொன்னபடி அடுக்களை சென்று மோர் தயாரித்து எடுத்து வந்து ஸ்ருதி இருவருக்கும் கொடுக்க, “அட, காஃபிதான் வரும்னு நினைச்சேன், நேரம் கேட்ட நேரமானாலும் காஃபிய நீட்டறதுதான பட்டணத்துப் பழக்கம்?”, என்றான் சரத்.
எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லும் அவனைப் ஏறிட்டுப் பார்த்து, “நேரத்துக்கும் ஆளுக்கும் தேவைக்கும் ஏத்த மாதிரி குடுக்கத் தெரிஞ்சவங்களுக்கு பட்டணமா இருந்தா என்ன? பட்டிக்காடா இருந்தா என்ன?”, ஸ்ருதி.
“ஆமாம்மா, ரொம்ப சரியா சொன்ன, எங்க ஈஸ்வரியும் அப்படித்தான், தக்காருக்கு தக்கபடி, இட்டாருக்கு இட்டபடின்னு நடக்கும்”
“ஈஸ்வரி…?”, பர்வதம்.
“எம்பொண்ணு, எங்க பக்கத்து ஊர்ல கட்டி கொடுத்துருக்கோம், பெரீய பண்ணக்காரம்மா, இவன்னா அதுக்கு கொள்ளை பிரியம், இவனாவது கம்மியா பேசுவான், அவ கட் அண்ட் ரைட்டா பேசுவா”, என்றார் வசந்தம்மா பெருமையாக.
‘ம்க்கும். சரிதான், குடும்பமே இப்படித்தான் போல’, என்று மனதுக்குள் நினைத்து ‘எப்படி இவர்களை இங்கே குடி வர விடாமல் தடுப்பது?’ என்ற யோசனையுடன் நின்றாள். அத்தை இவள் பக்கம் திரும்பினால், ஏதேனும் சைகை செய்யலாம் என்றால், சம வயது பெண்மணி பேச கிடைத்ததும், அந்த வசந்தம்மா அத்தையைப் பிடித்துக் கொண்டார். எப்போதும் அளவாகப் பேசும் அத்தையும், அவருக்கு ஈடுகொடுத்துப் பேச, ஏதும் செய்ய முடியாமல் ஸ்ருதி உள்ளே சென்று விட்டாள்.
அதற்கேற்றாற்போல் மாதேஷ் அலைபேசியில் அழைக்க, ராகவின் பேசி இப்போது ஸ்ருதியுடையதாகி இருந்தது, தம்பியுடன், ப்ரித்வியுடன், தம்பி மனைவியிடம் பேசி, தனது தந்தையின் நலம் விசாரித்து (அவருக்கு அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயின் தீவிர நிலையில் இருந்தார், எப்போதும் அவருக்கு காவலாக ஒருவர் அவர் அருகில் இருந்தே தீரவேண்டிய கட்டாயம், அன்னை ஸ்ருதியின் திருமணம் முடித்து இரு வருடங்களில் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார், அதிலிருந்து தந்தையின் நோய் தீவிரமானது) நேரம் போனதே தெரியாமல் முடிக்க, மணி ஒன்பதரைக்கு சென்றிருந்தது.
கூடத்தில் யாருமில்லாதிருக்க, இந்த அத்தையை எங்கே காணோம்? என்று யோசித்த ஸ்ருதி, மாடி வராந்தாவில் தேட, அங்கே வசந்தம்மா கண்களை துடைத்துக் கொண்டிருக்க, பர்வதம் அவர் தோள் தட்டி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த கரிய திருமாலைக் காணவில்லை. இவள் வாசல் திறந்து வெளியே வந்து தேடுவதைப் பார்த்த பர்வதம், “இங்கதான் இருக்கேன்மா, இப்போ வர்றேன்”, என்று வசந்தம்மாவை வழியனுப்பி வைத்து விட்டு வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்ததும், “ஸ்ருதி, சுவாமி கிட்ட அவங்க கொடுத்த அட்வான்ஸ் பணம் வச்சிருக்கேன், நாளைக்கே நாள் நல்லாயிருக்காம், பால் காய்ச்சிடறேன்னு சொன்னாங்க, சரின்னுட்டேன்”
“ம்ம்”, என்று தலையசைத்தவள், “அத்தை, அவங்க அழுதிட்டு இருந்தாங்களா?”, என்று கேட்க..
“ஹூம். வீட்டுக்கு வீடு வாசப்படி. அவங்க கஷ்டத்தை சொன்னாங்க, சொல்லும்போதே கண் கலங்கிடிச்சு, பாவம்”
“ஓஹ்”, என்று நிறுத்திவிட்டு, “அத்தை, மாதேஷ் ப்ரித்வி-யை நாளன்னிக்கி கூட்டிட்டு வர்றதா சொன்னான்”
“அப்பாடி, நானே சொல்லணும்னு இருந்தேன், குழந்தையை பாக்காம கண்ணு பூத்து போச்சு, குட்டி போன்-ல பேசினாளா?”
“ம்ம். பேசினாத்தை, அப்போ அவங்க வந்திருந்தாங்க, நீங்களும் பேசிட்டு இருந்தீங்களா?, அதான் தொந்தரவு பண்ணல”
“ம்ம். சரி போய் படும்மா”, என்று பழக்க தோஷமாக கூறியவர், சட்டென சுதாரித்து, “படுக்கையை இங்க எடுத்திட்டு வா, படுத்துக்கலாம்”, என்றார். ராகவ் இறந்ததிலிருந்து இருவரும் கூடத்தில்தான் படுத்து உறங்குகிறார்கள், ஸ்ருதியை தனியே படுக்க பர்வதம் அனுமதிப்பதில்லை.
*************
நந்தினி, ரமணனின் முகப்புத்தக நட்பு விண்ணப்பத்தை வெறித்துப் பார்த்து விட்டு, அவனைப் பற்றிய விபரங்களை தேடினாள், (ப்ரொபைல்) சென்னையில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது, ஒடிசாவில் இருந்து வந்து விட்டான் போலும் என்று நினைத்தவள், அவனது விண்ணப்பத்தை ஏற்கவும் செய்யாமல் அழிக்கவும் செய்யாமல், அப்படியே கடந்து சென்றாள். சிறிது நேரம் இணையத்தில் செலவழித்து விட்டு, தர்ஷித் கோச்சிங்-ல் இருந்து வந்ததும் ஆசையாக குக்கீஸ் கேட்பான் என்பதால், மைக்ரோவேவ் அவனில் ஏற்கனவே தயார் செய்த குக்கீஸ் கலவையை பிரிஜ்ஜில் இருந்து எடுத்து பிஸ்கட் துண்டுகளாக்கி சூடாக இருந்த அவனில் வைத்தாள்.
பத்து நிமிடங்களில் சாக்லேட் குக்கீஸ்-ன் வாசனை வீடு தாண்டி வாசல் வரை பரவியது. “ம்மா”, என்று பிள்ளையின் குரல் கேட்டதும் வாசலை நோக்கி கால்கள் விரைய, வீட்டின் கேட்டைத் திறந்து “ஹேய்!! சாக்லேட் குக்கீஸ்!”, என்றபடியே உள்ளே வந்தான் தர்ஷித். நந்தினி வெளியே பார்க்க, கணவனது இருசக்கர வாகன புகை வீதியில் கலப்பது தெரிந்தது. மகனிடம் திரும்பி, “கை கழுவிட்டு வா, டேபிள்-ல பிஸ்கட்டும் பாலும் எடுத்து வைக்கறேன்”, என்றாள். மகன் பாத்ரூம் செல்ல, ‘பிஸ்கட் வாசனை ஊர கூட்டுது, சூப்பர் ப்ளேவர்’ என்று விஷால் சிரித்துக்கொண்டே சொல்வது போல கானல் கனவு கண்டாள்.
********************
ஒரு வாரம் சென்றிருந்தது, ப்ரித்வி வந்துவிட்டாள், அவளது லூட்டிகள் ஓரளவுக்கு ஸ்ருதியை இலகுவாக்கி இருந்தது, இதோ நாளையில் இருந்து அலுவலகம் செல்லப்போகிறாள். இவர்கள் இருப்பிடத்திற்கு சற்று தள்ளி அமைத்திருக்கும் மின்சார வாரிய அலுவலகம், அங்குதான் இவளுக்கு போஸ்டிங் ஆகி இருந்தது. தினசரி பேருந்து பயணம் செல்ல வேண்டும் என்பதே இவளுக்கு கிலியாக இருந்தது.
காரணம், அவள் பள்ளி அவளது வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில், கல்லூரிக்கு சென்றது கல்லூரி பேருந்தில், வீட்டினருடன் சுற்றுலா செல்லும்போது வாடகை கார் அல்லது வேன், திருமணம் ஆனதும் கணவன் காரில் கூட்டிச்செல்வது வழமை. ஆதலால், பொது போக்குவரத்தை உபயோகிப்பது என்பதை யோசித்தது கூட கிடையாது.
முன்பு எப்போதோ சில முறை தோழிகளுடன் ஆட்டோவில் சென்றதுண்டு. அதிலும் தனியாக இதுவரை எங்கும் பயணித்ததில்லை. இப்போது இவர்கள் வீட்டில் காரும் இருசக்கர வாகனமும் இருந்த போதும், இவளுக்கு எதையாவது சாலையில் ஓட்டத் தெரிய வேண்டுமே? ஆனால், ஆச்சர்யப்படும் விதமாக இவளிடம் இலகுரக வாகனத்திற்க்கான லைசன்ஸ் உண்டு, அவர்களது வீட்டின் அருகே இருந்த பெரிய மைதானத்தில், யாரும் இல்லாத நெரிசல் அற்ற நேரத்தில், ராகவ் பிடிவாதமாக அவளுக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து, லைசன்ஸ் வாங்கி இருந்தான்.
ஆனால் லைசன்ஸ் தேர்வுக்காக வாகனத்தை ஓட்டிக் காட்டும்போது, ஸ்ருதி சிக்னல் முறையாக போடவில்லை என்று அதற்கு கையூட்டு கொடுத்து காரியத்தை முடித்ததாக ராகவ் கூறி, அதன் பிறகு எத்தனையோ முறை காரை ஓட்டுமாறு அவன் கடிந்து கூட சொல்லிப் பார்த்தான், ஸ்ருதி “யார் மேலயாவது இடிச்சிடுவேனோன்னு பயமா இருக்குங்க”, என்று ஸ்டியரிங்கை தொட்டதேயில்லை. டியோ-வையாவது ஓட்டப் பழகு என்றால், “பேலன்ஸ் இல்லாம நான் விழுந்துடுவேனோன்னு பயமா இருக்குங்க”, என்று அதற்கும் ஒரு சாக்கு.
ஆனால் இனி இவள் தனியாக பயணம் மேற்கொள்ளவேண்டும், அதுவும் தினசரி. அத்தையிடம் அலுவலக தூரத்தை குறையாக சொன்னபோது, “அவங்கவங்க செங்கல்பட்டுலேர்ந்து தினசரி சென்னைக்கு வந்து வேல பாத்துட்டு போறாங்க. நீயானா நாலு ஸ்டாப்பிங் தூரத்துக்கு அலுத்துக்கற? ரெண்டு நாள் போயிட்டு வா பழகிடும், தோது படலன்னா பின்னால ஆட்டோ இல்லன்னா டாக்சி மாச வாடகைக்கு வச்சிக்கலாம் “, என்று விட்டார்.
மறுநாள் காலை விஷால் வந்து, “நா வேணா சிஸ்டரை இன்னிக்கு ஆபிஸ்க்கு கூட்டிட்டு போகட்டுமா?”, என்று காரோடு வந்து அத்தையிடம் கேட்டு நின்றான்.
பர்வதம், “இன்னிக்கு நீ வருவ, நாளைலேர்ந்து அவ தனியா தான போகணும்? ஒன்னு பண்ணு, அவகூடவே இன்னிக்கு நீயும் பஸ்ல போயிட்டு வா, அது சரியா இருக்கும்”, என்றதும் அவன் எச்சில் கூட்டி விழுங்கினான். “ம்மா, உங்களுக்கே தெரியும், இன்னொரு கடை புதுசா ஆரம்பிக்க போறேன், அதுக்கு உள்ள ஷெல்ப் வேலை போயிட்டிருக்கு, மர வேலை பாக்கறவங்க வந்துட்டாங்க ன்னு போன் வந்துடுச்சி. அரைமணி நேரத்துக்குள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டு இங்க வந்தேன். பஸ்ல போயிட்டு வர்றதுனா ரொம்ப லேட்டாயிடும்”, என்று அவன் தயக்கத்துடன் சொல்ல…
“அண்ணா, நா பாத்துக்கறேன், இதோ நாலு எட்டுல பஸ் ஸ்டாப் இருக்கு. அஞ்சாவது ஸ்டாப்பிங்-ல இறங்கணும், ஆபிஸும் நடக்கற தூரம்தான். இதுக்கு எதுக்கு நீங்க?”, என்று ஸ்ருதி சொன்னதும், வேறு வழியின்றி விஷால் அவனது வேலையை பார்க்க சென்றான்.
இவள் கிளம்பும் நேரம், வசந்தம்மா வாசலில் காத்திருந்தவர் இவளுடனேயே பேருந்து நிறுத்ததிற்கு நடந்தபடி, “அம்மா, எனக்கு அந்த பக்கமா வேலை இருக்கு, எங்க பேங்க் அங்கதான் இருக்கு, பணம் எடுக்கணும், நானும் வர்றேன்”, என்று கூற,
“ஏன் நீங்க பேங்க் போறீங்க? உங்க பையன் இல்ல?”, என்று ஸ்ருதி கேட்க..
“அவன் என்னை இங்க விட்ட அடுத்த நாளே ஊருக்கு போயிட்டானே? உனக்கு தெரியாதா?”, என்றார் அவர்.
இவள் அன்று இவர்களுக்கு வீடு காண்பித்த பிறகு எங்கே வெளியே வந்தாள்?, பூனேவில் இருந்து மாதேஷ் வந்து இருநாட்கள் தங்கிவிட்டு, வீட்டிற்கு தேவையானவைகளை வாங்கி வைத்து விட, அவன் மனைவி வர்ஷாவோ ஸ்ருதி அலுவலகம் செல்லத் தேவையான உடைகளை செட் செட்டாக பிரித்து பெட்டியில் அனுப்பி விட்டிருந்தாள். “என்கிட்ட புடவை இல்லையாடா? இதெல்லாம் எதுக்கு?” என்று ஸ்ருதி போனில் வர்ஷாவிடம் குறைபட, “சுடிதார் வசதியா இருக்கும் அண்ணி, இதெல்லாம் என் சைஸ் தான், உங்களுக்கு சரியா இருக்கும், போட்டுட்டு போங்க”, என்று சொல்லிவிட்டாள்.
ப்ரித்வி வந்துவிட்டதால் அவளோடு இருந்த நேரம் போக, சமையல், வீட்டு வேலைகள் என ஸ்ருதிக்கு சரியாக இருந்தது. அப்படி இருக்குமாறு அத்தை பார்த்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இரவு உறங்கச் செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் ராகவின் நினைவு அவ்வளவாக இல்லை, அவ்வப்போது அவன் சிரித்த முகம் கண்ணில் தோன்றினாலும், ஸ்ருதியின் முக மாறுதலை வைத்து அத்தை கண்டுபிடித்து விடுவார். உடனே ஸ்ருதிக்கு சொல்வதற்கென்று அவரிடம் வேறு வேலை ஏதேனும் தயாராக இருக்கும்.
அவளது வீட்டு விஷயங்களில் மூழ்கியவளுக்கு, வசத்தம்மா பிள்ளை வந்ததும் போனதும் எவ்வாறு தெரிந்திருக்கும்?
“இல்ல, நா கவனிக்கல”, என்று சற்றே அசவுகரியமாக கூறினாள்.
“பரவால்லம்மா அதனாலென்ன? அவன் ஒரு இடத்துல நிக்க மாட்டான்மா, இப்போதான், வந்த வேலைய முடிக்காம போறதில்லைன்னு ஒரு முடிவோட இங்க வந்திருக்கான். ஈஸ்வரிட்ட காட்டை பாத்துக்க சொல்லிட்டு, எங்க கோவித்துக்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வர்றேன்னு போனான்”.
“ம்ம்”, என்றவளுக்கு இவர்களுக்கு சென்னையில் என்ன வேலை? யார் கோவிந்து? என்பதெல்லாம் தெரியாது, ஆனால் எல்லாம் இவளுக்கு தெரியும் என்ற எண்ணத்தில் வசந்தம்மா பேசிக் கொண்டே போக.. ஸ்ருதி தலையாட்டும் வேலையை செவ்வனே செய்தாள்.
அவளது நிறுத்தத்தில் இறங்கி, ஒரு வித படபடப்போடு அலுவலகம் செல்ல, அங்கு ராகவுடன் வேலை பார்த்த சுசீலா இருக்கவும் சிறிது ஆசுவாசமானாள். அலுவலக நடைமுறைகள் முடிந்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு வரும்வரையில் சுசீலா கூடவே இருந்தார், பின் வேலை விபரங்களைத் தெரிவித்துவிட்டு, ஏதாவது சந்தேகமென்றால் அல்லது எந்த தேவையாக இருந்தாலும் தனது அலைபேசியை தொடர்பு கொள்ளச் சொல்லி சென்றாள் சுசீலா. அன்றும் அதற்கடுத்தடுத்த நாட்களும் வேகமாக சென்றது.
மெது மெதுவாக ராகவ் இல்லாத வாழ்க்கைக்கு ஸ்ருதி பழக்கமாகிக் கொண்டு இருந்தாள், அனைத்துமே க்ரீஸிட்ட இயந்திரம் போல இயல்பாகவே சென்றது, ஸ்ருதி வேலைக்கு சேர்ந்த மூன்றாவது வாரம் அலுவலகத்தில் மயங்கி விழும் வரை.