அத்தியாயம் 11

வசந்தம்மா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய ஸ்ருதியை பார்த்தபடியே பேசியோடு அறையினின்று வெளியே சென்று மகனிடம் பேசினார். அத்தையின் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்ததும், “வாய் ரொம்ப ஜாஸ்தி அந்த ஆளுக்கு”, என்று முணுமுணுத்தாள்.

மெல்லிய தலையசைப்போடு, “ம். வாய் மட்டுமில்ல, பிடிவாதமும் ஜாஸ்திதான்”, என்றார் பர்வதம்.

இவள் கேள்வியாக நோக்க, “அவனப்பத்தி ஒரு வார்த்த தப்பா வந்துடுச்சுன்னு கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு நிக்கறவன என்ன சொல்றது?”, என்றார் அவர்.

“ஓ, இன்னும் கல்யாணமாகலையா?”, என்று அத்தையிடம் சொன்னாலும் ‘நல்ல வேளை, ஒரு பொண்ணு தப்பிச்சா, இல்லன்னா இடக்கு பேசியே உயிரெடுத்துருப்பான்’, என்று மனதில் எண்ணம் எழ, உடனே ‘சே. இது என்ன இப்படி ஒரு நினைப்பு?’ என்றும் தோன்றியது.

“ம்ம். வசந்தம்மா கவலையே இவனப்பத்திதான். எதையும் அவன் தங்கை ஈஸ்வரி சொன்னா கேப்பானாம், ஆனா இந்த விஷயத்துல அவ சொல்றதுகூட காதுல வாங்க மாட்டேன்கிறானாம்”

சில நொடிகள் அத்தையையே ஒரு வித குறுகுறுப்போடு பார்த்தாள் ஸ்ருதி. அவரும் இவள் பார்ப்பதை உணர்ந்தாரோ என்னவோ, நிமிர்ந்து என்ன என்பது போல புருவம் நெறிக்க.., “இல்ல பொதுவா யார்கூடவும் வம்பு பேசமாட்டீங்க, நீங்க உண்டு உங்க வேலையுண்டுன்னு இருப்பீங்க, இவங்க குடும்ப விஷயம் பூராவும் உங்களுக்கு தெரியுதே-ன்னு பார்த்தேன்”

“அவங்க பேசினா நாம கேட்டுத்தானே ஆகணும்? ஒரு சிலர் முகம் பார்த்தாலே, உள்ள ஒண்ணு வெளிய ஒண்ணு பேச மாட்டாங்க-ன்னு தெரிஞ்சிடும். அதுவுமில்லாம ஸ்ரீகுட்டி ஸ்கூல் போயிருக்கும் போதும் கீழ அவினாஷ் ஈஸ்வரி கூட விளையாடும்போது நான் வீட்ல சும்மாதானே உக்காந்திட்டு இருப்பேன்? வசந்தி வந்து பேசிட்டு இருப்பாங்க, அதுல அப்டியே அவங்க வீட்டு விஷயமெல்லாம் தெரிஞ்சிது”

“ஈஸ்வரி ஈஸ்வரி..ன்னு சொல்றீங்க ஆனா இதுவரை அவங்கள நா பாத்ததே..”, ஸ்ருதி பேசிக்கொண்டிருக்கையிலே வாசலில் இருந்து அரக்க பறக்க உள்ளே வந்த வசந்தம்மா, “அம்மாடீ, இந்தா என் பையன் பேசணும்ங்கிறான்”, என்று அலைபேசியை ஸ்ருதியிடம் நீட்டினார். கூடவே அத்தையிடம், “அது ஸ்பீக்கர்-ல இருக்கறது தெரியாத பேசினானில்ல, மன்னிப்பு கேக்கறானாயிருக்கும்”, என்று பெருமையாய் சொல்லவும் வேறு செய்தார்.

‘அப்டியா?’ என்ற கேள்வி மனதில் தொக்கி நிற்க பேசியை வாங்கியவள், “ஹலோ”, என்க..

“ஹலோ வீட்டுகாரம்மாவா ? நீங்க கூட இருக்கீகன்னு தெரியாம…”, என்று அங்கே யோகி இழுக்க..

“பரவால்ல அதனாலென்ன..”, என்று பெருந்தன்மையாக (‘இதென்ன எதோ விளையாட்டு பேச்சுக்கு மன்னிப்பு?’ என்று ஸ்ருதிக்கு எண்ணம்), சொல்ல….

“ல்ல முன்னமே தெரிஞ்சிருந்தா..”, என்று நக்கலாக இழுத்து, “ஒரே வீட்ல கூட இருந்திட்டு நாலுமாசமா ஒத்த வார்த்த பேசாம.., தட்டு பாத்து சோறு போடாம பட்டினியா விட்டுட்டு…, அவங்க காலை உடைச்சுக்க வச்சது நீங்கதானன்னு உண்மைய நச்சுன்னு-ல்ல சொல்லியிருப்பேன்.  உங்களுக்கெல்லாம்… சீரியல்ல வர்ற மாமியார் மாதிரி ஆளு வந்திருக்கணும்”, என்றான் அனாயாசமாக வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவன் சொன்னதின் சாராம்சம் புரிவதற்குள், “மன்னிப்பாமில்ல? யாரு ? யார்கிட்ட..? ஹ”, ஏளன சிரிப்போடு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. முதலில் சொன்னதை உள்வாங்கி திரும்ப பேசுவதற்குள்ளாக அவனது பகடி புரிய கோபத்தில் ஸ்ருதியின் ரத்தம் முகம் முழுதும் வியாபித்தது. சில நொடிகள் அலைபேசியையே வெறித்துகொண்டு நின்றவள், ‘இவன?’, என்ற குமுறலோரு அங்கிருந்த மற்ற பெண்கள் இருவரையும் பார்த்தாள். அத்தை புத்தகத்தில் ஆழ்ந்திருக்க, வசந்தி அங்கிருந்த தொலைக்காட்சியில் கவனம் வைத்திருந்தார்.

‘அஃப்டரால் வாடகைக்கு இருக்கிறவன், என்னை என்ன பேசிட்டான்?’ உள்ளம் கொதித்தாலும், ‘இத்தன நாளா அத்தை சாப்பாட்டை கம்மி பண்றத பார்த்தும் பேசாம இருந்ததானே? அப்போ அவன் சொல்றது ஒருவகையில உண்மைதானே?’ என்று நியாயமான சிந்தனையும் வந்தது.

எப்பொழுதும் அறிவு சொல்லும் நியாயமானவைகளை தானெனும் கர்வம் புறந்தள்ளும். ஸ்ருதியும் நியாயமானதை புறக்கணித்து, ‘இதற்கெல்லாம் காரணம் முன் பின் தெரியாத மனிதர்களின் உதவியை நாம் நாடியதால்தான்’, என்று புதிதாக ஒரு ஞானோதயம் அவளுக்கு உண்டானது.

‘நா எங்கே ஹெல்ப் வேணும்னு கேட்டேன்? அவங்களா செய்யறாங்க. விஷால் ஆகட்டும், அவன் வொய்ப் நந்தினி ஆகட்டும் ஜஸ்ட் எட்டிப்பார்த்துட்டு போயிட்டாங்க. எதாவது வேணுமான்னு வாய்வார்த்தையா கூட கேக்கல. நாலுமாசமாத்தான் தெரியும் இவங்கள, இந்தம்மாவ யார் செய்யச்சொன்னது? இவங்க செஞ்சதுனால இவங்க பையன்ட்ட-ல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு. ச்சே.’, என்று மனது தறிகெட்டு ஓடி, தானாக தம்பியிடம் வந்து நின்றது, ‘கூப்பிட்டா  வந்திருப்பான். ஆனா அங்கே வர்ஷாவுக்கு ட்வின்ஸ் கூட அப்பாவையும் வைச்சுகிட்டு திண்டாடுவா. இவனும் வந்து சும்மாயில்லாமல் கன்னாபின்னா-ன்னு உளறுவான். ஹூம்.’

இப்படியான எண்ணங்களோடு அந்த அறையில் குறுக்கே நடந்து கையிலிருந்த வசந்தம்மாவின் அலைபேசியை அவரருகே சென்று கொடுக்க, “என்னம்மா கண்ணு சொன்னான்?”, இவளது தொடுகையில் டிவி-யில் இருந்து நடப்புக்கு திரும்பிய அவர், வாஞ்சையாய் கேட்டார். எப்போதும் அமைதி தவழும் நட்பான முகம். இவர் இயல்பே இப்படித்தானோ? இப்படி ஒரு அம்மாவிற்கு அப்படி முகத்தில் அடித்தாற்போல் பேசும் பிள்ளை? இவர் கேட்பதற்கு என்ன பதில் சொல்லமுடியும்?  “நீங்களே கேட்டுக்கோங்கமா…”, என்றுவிட்டு, “காபி குடுச்சிட்டு வர்றேன்மா”, என்றுவிட்டு  பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.

உணவகத்தில் பாதாம் பால் கேட்டு அமர்ந்திருந்தாள். அப்போது சில தீர்மானங்கள் ஸ்ருதியின் மனதில். அதில் முதன்மையான ஒன்று, டெலிவரிக்கு நான்கு நாட்கள் முன்பாகவே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும் என்பதும், சமையலுக்கும் மேல் வேலைகளுக்கும் ஆள் வைத்து விட வேண்டும் என்பதும். நினைப்பதெல்லாம் சரிதான். நடக்குமா?

***************

“நந்தினி, உங்க லோன் டாக்குமெண்ட் ஒன்னு இன்னும் பென்டிங்-ல இருக்கு, ஆடிட் அப்போ நாங்க காமிக்கணுமே? இன்னுமா ரெடியாகல?”, ரமணன்.

“தெரிலையே, நா வேணா அவருக்கு கால் பண்ணி கேட்டு சொல்லட்டா?”, வெகு இயல்பாக நந்தினி. காரணம் சில பல நாட்களாக மெசெஞ்சர், அதிலிருந்து வாட்ஸாப் தகவல் பரிமாற்றங்கள் என்று வேர் விட்ட இருவரது நட்பு இன்று நந்தினியின் வீடு வர அவனை அழைத்து வந்திருந்தது. அந்த பக்கமாக வேலை இருந்ததால் நந்தினியை பார்க்க ஒரு காரணம் இருந்ததால் இங்கே ரமணனின் விஜயம்.

“ம்ம் ஓகே வெயிட் பண்றேன்”

நந்தினி விஷாலுக்கு அழைத்து, “ஹெலோ நா”

“ம்ம் தெரியுது சொல்லு”,

“எதோ பேங்க்-க்கு பத்திரம் தரணும்னு சொன்னீங்களே? ரெடியாயிடுச்சா?”

“ப்ச். அதெல்லாம் உனக்கெதுக்கு? என் வேலைய நா பாக்க மாட்டேனா? பெரிசா கேள்வி?  நாலெழுத்து படிச்ச திமிர்.. போன வை”, என்று அழைப்பை துண்டித்து பாசமாக கொஞ்சினான் கணவன். அலைபேசியில் பேசினாலும் அமைதியாக இருந்த அந்த வீட்டில் ஸ்பீக்கர் போடாமல் கூட விஷால் பேசியது தெளிவாக ஹாலில் அமர்ந்திருந்த ரமணனுக்குக் கேட்டது.

அவன் அமைதியாக இருக்க, நந்தினிக்கு ஒரு வித அசவுகரியம். மென்று விழுங்கி, “அது என்னவோ அவருக்கு மூட் சரி இல்ல போல, அதான் இப்படி பேசறார். இல்லன்னா எப்பவும்”

“ப்ச். சும்மா பூசி மழுப்பாத நந்து”, சொன்னவனின் குரலில் அப்பட்டமான வலி. “இதான் நீ சொன்ன கேர்-ஆ? நாலு நாளா இந்தாள் உன்னை அப்படி தாங்குவான், இப்படி தாங்குவான்னு கதை அளந்த? தாங்கற லட்சணம் நல்லாவே தெரியுது”

எப்படி ஆராதிக்கப்பட வேண்டிய பெண் என்று அவன் மனம் வேதனைப்பட்டது. படிக்கும்காலத்தில் நந்தினி பட்டிமன்றத்தில் வந்து நின்றால், கைதட்டல்கள் ஓயவே வெகு நேரம் ஆகும். இவனோடு அணி சேர்ந்து நான்கைந்து முறை பேசியுள்ளாள். இவளுக்கென ஒரு நேயர் வட்டம் இருந்தது. அதில் இவனும் ஒருவன். அவளுக்கு சீனியர் தான் ஆனாலும் ஒரு பிடித்தம், முதலில் பேச்சு. பின் போகப்போக பேசியவளும்.

அதிலும், பாரதியின் வார்த்தைகளான…

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

     இளைப்பில்லை காண்.  என்று நந்தினி மேடையில் முழங்கும்போது, கல்லூரியே அதிரும். இப்போது…? எதிரே தலைகுனிந்து நின்று கொண்டிருந்த பெண் அவள் இல்லை. அல்லது அவள் இவளுள் சமாதியாகிவிட்டாள் இன்னும் சரியாக சொன்னால் உள்ளே வைத்து அடக்கம் செய்து விட்டான் அந்த விஷால் என்று ரமணனின் மனம் குமுறியது.

நந்தினியோ வேறொரு மனநிலையில் இருந்தாள். இத்தனை நாளாய் கணவர் நல்லவர், அன்பானவர், பாசமானவர் என்று இவனிடம்  ஆடிய நாடகம் இப்படி திடுமென வெளிச்சத்துக்கு வந்தது நந்தினிக்கு ஏமாற்றமாக இருந்தது. முகநூலிலோ, மெசஞ்சரிலோ ரமணனோடு பேசும்போது விஷாலை அன்பானவனாக அவளே சித்ததரித்துக் கொண்டு பேசுவாள். அது அவளுக்கு சுகமான கற்பனை.

நிஜத்தில்தான் அவ்வாறில்லை, இப்படி மூன்றாம் மனிதரோடு பேசும்போது நாம் எண்ணிய வாழ்க்கை கிடைத்ததாக உருவாக்கப்படுத்திக் கொள்ளலாமே? தெரியவா போகிறது? என்று அவள் கட்டிய ஆகாயக்கோட்டை சில நாட்களில் அவள் கணவனாலேயே தரை மட்டமாகி விட்டது.

அவளுக்கு கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள் என்பது புரியவில்லை. ரமணனின் பார்வையில் ஆதங்கத்தோடு கூடிய பரிதாபம் இருக்க, கண்களில் கண்ணீர் திரள கழிவிரக்கம் வந்தது.

“கொஞ்ச நாள் காத்திட்டு இருன்னு சொன்னேனே, பதிலே சொல்லாம… , ப்ச். இப்படி இந்தாள் கிட்ட பேச்சு வாங்கவா அவசர அவசரமா கல்யாணம் பண்ணிகிட்ட?”,  என்று கூறி வெளியேறினான் ரமணன்.

இனி லோன் குறித்த எதுவாயினும் விஷாலிடம் நேராகவே கேட்டுக்கொல்வது என்ற தெளிவான முடிவோடும் கூட. ஆனால் முக்கியமான காரணம், இனியும் இங்கே நின்றால், கண்ணீர் தளும்ப நிற்கும் அவனது கணவுப் பெண்ணை அணைத்து ஆறுதல் சொல்ல ஆர்ப்பரிக்கும் இந்த உணர்வை தடுக்க இயலாது என்பது தெரிந்து, மனதை வெகுவாக கட்டுப்படுத்தி வெளியே சென்றான்.

நில்லென்று சொன்னால் மனம் நின்றால்…?, அது ஞானியர்க்கே கைவராத போது இந்த ரமணன் எம்மாத்திரம்?

********************

ஸ்ருதி அத்தையை பார்த்துக் கொள்ள ஒரு மாதத்திற்கும் மேல் விடுப்பு எடுத்திருந்தாள், வேண்டாம் என்று பர்வதம் எத்தனை தடுத்தும் கேளாமல் வீட்டில் இருந்து அவரை கவனித்து கொண்டாள். கிட்டத்தட்ட அவளது பழைய வாழ்க்கை, ஆனால் புதிய ஸ்ருதி. இப்போது இவள் செய்யும் காரியங்களில் நல்ல திட்டமிடல் இருந்தது. அத்தையை பார்த்துக்கொள்ள நர்ஸ் ஒருவரையும் வைத்தாள், கூடவே வசந்தம்மா இருக்க எந்த தொல்லையுமின்றி காலம் பறந்தது.

அன்றைய அலைபேசி பேச்சிற்கு பின் அந்த இடக்கு ஏகாம்பரத்தை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. அவ்வப்போது வந்து செல்கிறான் என்பது மட்டும் தகவலாக வரும். அன்றிலிருந்து பேச்சுத்துணைக்காக மட்டுமே யோகியின் தாயாரை அனுமதித்தாள். மற்ற வேலைகளை இவளில்லாத போது தாதி பார்த்துக் கொள்வார். இப்போது வயிறு இன்னும் மேடிட்டு இருக்க, ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது தெரிந்தது.

தம்பி அடிக்கடி அத்தைக்கு போன் செயது அவளது உடல்நிலை குறித்து கேட்டுக்கொண்டான். இவள் பேசமாட்டாள், ஆனால் அத்தையோ ஸ்ரீகுட்டியோ பேசுவதை தடுக்க மாட்டாள். அது என்னவோ ஒரு பிடிவாதம், என்னை நம்பாமல்.. என்னிடம் பேசாமல் இடையில் வந்த அத்தை உறவு இவனுக்கு பெரிதாகப் போய் விட்டதா? என்று ஒரு கோபம். இது பிறந்த வீட்டு மனிதர்களுடன் அதிலும் கூடவே வளர்ந்த சொந்தத்துடன் மட்டுமே வரும் மனத்தாங்கல்.

அத்தை கைபிடித்து நடக்கும் அளவு தேறிவிட, அலுவலகம் சென்றாள். இப்போது அலுவலகம் சென்று வர வாடகை கார் வைத்துக் கொண்டாள். இந்த கார் இவளது வழமையான ஆட்டோகார அண்ணா ஏற்பாடு செய்தது, எனவே அவரையே டெலிவரிக்கு அழைத்து செல்லவும் பணித்திருந்தாள். நிச்சயித்த தேதிக்கு ஒரு வாரம் முன்பாக செல்வதாக முடிவெடுத்திருந்தாள் அல்லவா? ஆனால் அதற்கும் நான்கு நாட்கள் முன்பே ஸ்ருதிக்கு வலி வந்துவிட்டது.

அத்தையும் ஸ்ரீகுட்டியும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். எனவே அவர்களை தொந்தரவு செய்யாமல், (கார் வந்ததும் சொல்லி கூட்டி செல்லலாம் என்று எண்ணி) வாடகை கார் காரருக்கு அழைத்தால், அவர் திருத்தணி சென்றிருந்தார். மறுநாள்  வந்து விடுவேன் என்று பதைபதைப்போடு தகவல் சொன்னார்.

இன்றே இப்போது இந்த இரவே பூமிக்கு வருகிறேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையை என்ன செய்வது? பல்லைக் கடித்து, உபேர் க்கு புக் செய்ய முயற்சிக்க, நள்ளிரவு இரண்டு மணி.  வருகிறேன் என்று ஒப்புக் கொண்ட ஒரு டிரைவரும்.. இவளது போதாத வேளையோ என்னமோ.. பதிவு செய்த ட்ரிப்-பை கேன்சல் செய்ய., திணற ஆரம்பித்தாள். வலி வேறு உயிர் போனது.

ஸ்ருதி குறுக்கும் மறுக்கும் இரண்டு மூன்று முறை நடந்ததில் தூக்க மாத்திரையையும் மீறி அத்தை விழித்துக் கொண்டார். எழுந்து கொண்டவர் “என்ன பண்ணுது ஸ்ருதி?”, கேட்க..

“வலிக்கிது த்த”, என்று முகம் சுணங்கி ஸ்ருதி சொல்லவும், பரபரப்பாகி, “உக்காரு, சூடா கஷாயம் தர்றேன், உன் போனை குடு”, நடப்பதற்கு தாங்கலாக கையில் குச்சி வைத்திருந்தாலும், வேகமாக செயல்பட்டார்.

அடுப்பில் வேலை செய்தவாறே, “வசந்தி, கொஞ்சம் மேல வாம்மா”, என்று வசந்தம்மாவை அழைக்க, ஸ்ருதிக்கு ஏதும் சொல்ல முடியாத நிலை. இன்னும் மருத்துவமனைக்கு தேவையானவைகளை வேறு எடுத்து வைக்க வேண்டுமே, என்று மலைப்பாக இருந்தது.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வசந்தி ஆஜரானார். கூடவே யோகியும், வாசலில் நின்றதால் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. வசந்தம்மாவிற்கு ஸ்ருதியின் முகம் பார்த்ததுமே இது பிரசவ நேரம் என்று தெரிந்து விட்டது. வீட்டின் வெளியே தயங்கி நின்ற மகனிடம் “தம்பி, ஸ்ரீகுட்டிய நம்ம ஈஸ்வரிட்ட படுக்க வை”, என்று சொல்லி, அடுத்து ஸ்ருதியிடம், “கட்டை பையி எங்கம்மா இருக்கு?”, கேள்வி கேட்டபடி பரபரவென அனைத்தும் தயார் செய்தார்.

கஷாயம் குடுக்க ஸ்ருதியை மறைத்து பெண்கள் இருவரும் நின்றதால், யோகி சரத்  ஸ்ரீயை தூக்க உள்ளே சென்றதை ஸ்ருதி பார்க்கவில்லை. கண்கள் மூடி கூடத்தில் அமர்ந்திருந்தாள். சுவாமி மாடம் முன்பு நின்ற அத்தையோ கண்கள் கலங்க நின்றிருக்க, வசந்தம்மா, “என்னமா நீங்களே பயப்படறீங்களே?”, என்று கேட்டார்.

யாராவது கேட்பார்களா தனது மன உளைச்சலை பகிர்வோமா என்று பர்வதம்மா இருந்தார் போலும், “நான் சொன்னா மாதிரி ஒருவேளை பிள்ளை ஏதாவது குறையோட பிறந்துட்டா?”, என்று வசதியிடம் கதற.., கூடத்தில் தானே ஸ்ருதி இருந்தாள்? அவர் பேசுவது தெளிவாக கேட்டது. அன்றைய தினம் அவர் பேசியது, அதன் பின்னணி அனைத்தும் சட்டென நினைவில் வர, “அப்படி இருந்தாதா என்ன? தூக்கியா போட முடியும்?”, வெடுக்கென கேட்டாள் ஸ்ருதி. அவரைக் காயப்படுத்த வேண்டுமென்று பேசவில்லை, ஆனால் இப்போதைய வலி +  அந்நாளில் அத்தையின் செயல் மனதில் எழ, தன்னையறியாது பேசிவிட்டாள்.

அடுத்த நொடியே உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகுட்டியை தோளில் தூக்கியபடி ஸ்ருதியின் முன் புயலென வந்து நின்ற யோகி, “போட்ருவீங்களோ? தூக்கி போட்ருவீங்களோ? பாத்திர்றேன் அதையும்”, என்று கண்கள் சிவக்க இவளை பார்த்து கர்ஜிக்க… சில  நொடிகள் மூச்சு விட மறந்து மருண்டு விழித்தாள் பெண்.

ஸ்ருதியின் மறுமொழிக்கே பர்வதமும் வசந்தம்மாவும் பூஜையறையில் இருந்து வெளியே வந்திருந்தனர். கூட யோகி இப்படி அவளை மிரட்டவும் பதறிப்போன வசந்தி, அவன் தோளைத் தொட்டு உலுக்கி, “தம்பி, அதுவே வலில என்ன பேசறோம்னு தெரியாம பேசுது, நீ என்னப்பு அது கூட மல்லுக்கு நிக்கற? போ போயி வண்டிய எடு”, என்றார். அவரையும் ஒரு கோபப்பார்வை பார்த்தே ஸ்ரீகுட்டியை தூக்கிக்கொண்டு கீழே சென்றான்.

ஸ்ருதிக்கு ஒன்றும் புரியவில்லை. எதையும் யோசிக்கும் மனநிலையிலும் அவள் இல்லை. எதுவும் தன்னால் ஆகாதென்று தெரிந்தது. தவிரவும் கொஞ்சம் வாய் விட்டு விட்டோமோ என்ற குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டதோ என்னமோ, சுற்றி இருந்தவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டாள்.

அரைமணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, விடிகாலை மூன்றரை மணி சுமாருக்கு அவளின் எலுமிச்சை ஒத்த நிறத்தில் ஆண் மகவை பெற்றெடுத்தாள். சற்று நேரத்தில் பிள்ளையை சுத்தம் செய்து தாதி காண்பிக்க, அவளது அரை மயக்க நிலையிலும் பிள்ளையை முழுவதுமாக பார்த்தாள் ஸ்ருதி, அப்போது யோகியின் கோப முகம் கண்ணில் தெரிந்தது.

வெளியே வசந்தம்மாவிடம் குழந்தை தரப்பட, அவர் அங்கே அமர்ந்திருந்த பர்வதம்மாவிடம் கொடுத்தார். கண்களில் நீர் திரையிட கையில்  (அவருக்கு அதிக நேரம் நிற்க முடியாது) வாங்கி உச்சி முகர்ந்தார்.

‘ச்சே. ஏன் அந்த பெண்ணிடம் அப்படி கடுமை காட்டினேன்?’, என்று நூறாவது முறையாக அவனையே நொந்து கொண்டிருந்த யோகி சரத்-தை, “யேய் அப்பு, இங்க வா குழந்தய பாரு, சும்மா லட்டு மாதிரி இருக்கு”, என்று கூப்பிட்டார் வசந்தி.

அவன் கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து, அம்மா வசந்தியின் அருகே வந்து, அவர் கையில் இருந்த சிசுவை பார்த்தான். சுருட்டை சுருட்டையான முடியோடு, இள மஞ்சளும், சிவப்பும் சேர்ந்த கலவையாக பிள்ளை இருக்க, மெல்ல அதன் கைகளை வருடினான். அன்னையிடம், “நம்ம ஈஸு இப்படித்தான இருந்துச்சி?”, என்றான் முகம் விகசிக்க.