வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-90
158
அத்தியாயம் 90
ஸ்ரீயை அர்ஜூன் பாட்டி வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவள் அங்கிருக்க அர்ஜூன் அனுவை காயத்ரி அக்காவிடம் இருக்க கேட்டான்.
எதுக்கு அர்ஜூன்? அனுவை நான் பார்த்துப்பேன். இனி இன்று போல் கூட அவளை தனியே விட மாட்டேன். ப்ளீஸ் அர்ஜூன் என்றான்.
காரணம் இருக்கு ஸ்ரீ. சொன்னால் புரிஞ்சுக்கோ..
என்ன புரியணும்ன்னு சொல்ற? அவள் அழ மாட்டாளா? அவள் இல்லாமல் நானும் இருக்க மாட்டேன்.
புரியாம பேசாத ஸ்ரீ. அனுவை ஒரு பக்கம் கொலைகாரன் கொல்ல நினைக்கிறான். இன்னொரு பக்கம் அவளோட குடும்பமே கொல்ல நினைக்கிறாங்க. புரிஞ்சுக்கோ..அனு எப்படியும் உன்னிடம் வந்து சேர்வா. அவனுக்கு இப்ப என்னை விட நீ தான் தேவை..என்று அர்ஜூன் சொல்ல வந்த வார்த்தைகளை மென்று விழுங்கினான்.
அவனை பொறுத்தவரை அவளுடன் சேர்ந்து வாழ்வது போல தானே நினைக்கிறான். சொன்னால் கோபப்படுவாள் என்று தான் நிதானித்து பேசுகிறான்.
அவள் மனசில்லாமல் ஒத்துக் கொள்ள, அனுவை அர்ஜூன் மறையிடம் அழைத்து சென்றான். அவனை மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்கு வர வைத்திருப்பான்.
மறையிடம் அர்ஜூன் அனைத்தையும் சொல்ல..அவன் தயங்கிக் கொண்டு, அவங்களோட நாங்க மட்டும் இருந்தா ஊரார் தப்பா பேச மாட்டாங்களா அர்ஜூன்?
இந்தாங்க பாப்பாவை பிடிங்க என்று அனுவை அவன் கையில் கொடுக்க, அர்ஜூன்…என்று அவனை பார்த்தாள். வேலு அகல்யாவுடன் வந்தான்.
என்னடா அதுக்குள்ள வந்துருக்க?
சொல்லாதீங்க என்று அர்ஜூன் கையசைக்க..அனு அர்ஜூன் என்று அவனிடம் தாவினாள். இல்லடா..கால் கொஞ்சம் பெயினா இருக்கு. அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.
அப்படியா? நிஜமாகவே கால் வலியா? இல்லை காதல் வலியா? அகல்யா கிண்டல் செய்ய, அவளை முறைத்தான் மறை.
வேலு..அமைதியா இருக்கிற என்னை சீண்டுறாங்க? அப்புறம் நான் பேசுவேன் என்றான்.
தாரிகாவிடமிருந்த ராக்கி மறையை பார்த்து அவனிடம் ஓடி வந்து, ஹாய்..ப்ரெண்டு வந்துட்டீங்களா?
அவனை பார்த்து விட்டு அர்ஜூனை பார்த்தான் மறை. பின் அவனை தூக்கினான்.
சார், காயத்ரி மேம் விழிச்சுட்டாங்க..என்று நர்ஸ் வெளியே வந்து சத்தம் கொடுக்க, எல்லாருக்கும் முன் அர்ஜூன் ஓடினான்.
காயத்ரி அவனை பார்த்து, ராக்கி என்று கேட்டாள்.
அர்ஜூன் தலையை நீட்டி..அண்ணா என்று மறையை அழைத்தான். ராக்கி அவனுடன் விளையாண்டு கொண்டே உள்ளே வந்தான்.
காயத்ரி மகனை பார்த்து கண்கலங்க எழுந்தாள். மறை அவளிடம் ராக்கியை கொடுத்தான். அவன் தன் மகனை அள்ளிக் கொஞ்ச இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அக்கா..நான் உங்களிடம் பேசணும்? அர்ஜூன் கூற, நான் வெளிய இருக்கேன் அர்ஜூன் என்று மறை கிளம்ப, அண்ணா..நில்லுங்க என்று அவனை நிறுத்தினான். காயத்ரி இருவரையும் பார்த்தாள்.
அக்கா..உங்களுக்கு வினிதாக்கா சொத்து ஏதும் எழுதி வச்சிருக்காங்களா? அர்ஜூன் கேட்க, அர்ஜூன் என்ன பேசுற? அவ புருசன் சம்பாதிச்சதை எனக்கு எதுக்கு எழுதி தரப் போறா?
இல்லக்கா..”5 ஸ்டார் ஹோட்டல்” ஒன்று உங்க பேர்ல எழுதி வச்சிருக்காங்க.
என் பெயரிலா?..என்று சிந்தித்த காயத்ரிக்கு கடைசியாக கோவிலில் வைத்து வினிதாவை பார்த்தது நினைவுக்கு வந்தது. அம்மாவை பார்க்க போறேன்னு சந்தோசமா சொன்ன வினிதா நீயும் ராக்கியும் அவங்களிடமிருந்து விலகும் வாய்ப்பு கிடைத்தால் அர்ஜூனை பார் என்று நம்பரை கொடுத்து அவனிடம் கொடு என்று ஒரு காகிதத்தை கொடுத்திருப்பாள்.
அர்ஜூன்..என்னோட பேக்ல அவ எழுதிய கடிதம் ஒன்று இருக்கு. உன்னிடம் அவள் கொடுக்க சொன்னாள். நான் உனக்காக தான் எதையோ கொடுத்திருக்கான்னு நினைச்சு நான் பிரிக்கவில்லை.
அக்கா..உங்களுக்கு அவங்க வியாதி..
தெரியும் என்று கண்கலங்கினாள். முதல்ல அனுவை கூட என்னிடம் தான் பார்த்துக்க சொன்னாள். ஆனால் உனக்கே தெரியும். நான் என் ராக்கியை அவங்களிடமிருந்து காப்பாற்றவே போராட வேண்டி இருந்தது. இதில் அனுவை எப்படி பார்ப்பது? என்று அவளிடமே கேட்டேன். ரொம்ப கலங்கி போயிட்டா..
அப்புறம் தான் ஸ்ரீயை பார்த்து ஒரு நம்பிக்கையில் இருவரும் பார்த்துப்பீங்கன்னு உன்னிடம் பேசினாள். எனக்கு ஸ்ரீ பற்றி கூட முழுசா தெரியும்.
உங்களை சந்தித்தால் அவங்களால் பிரச்சனை வந்துருமோன்னு தான் நான் உன்னிடம் பேசலை. ஆனால் நீயே எனக்கு போன் செய்வன்னு எதிர்ப்பார்க்கலை. ரொம்ப தேங்க்ஸ் அர்ஜூன்.
அக்கா..இன்னும் ஏதும் முடியலை. உங்க பேர்ல இருக்கிற ஹாட்டலுக்காக தான் அன்று உங்களை கடத்த முயற்சி செஞ்சிருக்காங்க. ராக்கியையும் கொல்ல பார்த்தாங்க. நல்ல வேலையாக அண்ணா உங்க இருவரையும் காப்பாற்றி விட்டார் என்று மறையை பார்த்தான்.
இவர் தான் காப்பாற்றினாரா? நீங்க சொல்லவேயில்லை? எங்களால் தான் உங்களுக்கு அடிபட்டிருக்கா? கேட்டாள் காயத்ரி.
உங்களுக்கு இப்ப நல்லா இருக்கா? மறை கேட்டான். அவனது கையில் கட்டை பிரித்திருந்தான். காலில் மட்டும் கட்டு போட்டிருந்தது.
நான் நல்லா இருக்கேன். ஆனால் இன்னும் உங்களுக்கு சரியாகலைல்ல.
அவனிடம் வந்த ராக்கி அவனது சட்டையை தூக்கி கையை பார்த்தான். ரொம்ப அடிபட்டதா? என்று காயத்ரி அவனருகே வர மறை விலகினான்.
என்னாச்சு? என்று அவள் மீண்டும் அவனிடம் வர, அவன் மீண்டும் விலகினான். அவளுக்கு வேலு மறையை பற்றி கூறியது நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் நான் உங்களை ஏதும் செய்ய மாட்டேன் என்று அவனருகே வந்து அவனது காயத்தை பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அய்யோ..ரூட்டு மாறுதே..என்று அர்ஜூன், அக்கா..நான் இன்னும் முடிக்கலை என்றான்.
இல்லடா. அடிபட்டிருக்குல. பார்த்தேன் என்றாள். மறைக்கு அவள் கன்னத்தில் கொடுத்த முத்தம் அவனுக்கு நினைவு வர அர்ஜூன் நான் வெளிய இருக்கேன்.
அண்ணா..முக்கியமான விசயமே இப்ப தான் சொல்லப் போறேன் என்ற அர்ஜூன், காயத்ரி அக்கா உங்க மாமியார் தவிர யாருமே சரியில்லை. எல்லாரும் சொத்துக்காக தான் சேர்ந்து இருக்காங்களாம்.
இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும் என்றாள் சலிப்பாக. அர்ஜூன் எப்படி என்னோட கையெழுத்து இல்லாமல் ஹோட்டல் என் பெயரில் இருக்கும்.
அவள் யோசித்து விட்டு, அடப்பாவி என்னடி செஞ்சு வச்சிருக்க என்று புலம்பினாள்.
நீங்க தான் பண்ணீங்களா? அர்ஜூன் கேட்டான்.
அர்ஜூன் நாங்க காலேஜ் சேர்ந்தப்ப சும்மா சைன் பண்ணி விளையாடினோம். அவள் தான் என்னோட சைனை செலக்ட் பண்ணா. அதிலிருந்து அதை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதை என்னிடம் எடுத்து வைத்து அவளே சைன் செய்து எனக்காக செய்திருக்கிறாள்.
அக்கா..அந்த காகிதம்?
உன்னோட பாட்டி வீட்ல தான் இருக்கு என்றாள்.
சரிக்கா இங்கேயே இருங்க..என்று அவர்களது திட்டத்தை கூறினான்.
அர்ஜூன் ஏற்கனவே இவருக்கு அடிபட்டிருக்கு. இவர் தான் வரணுமா?
தருணும் இருப்பான்க்கா.
அதெல்லாம் பிரச்சனையில்லை என்று மறை அர்ஜூனிடம், பிரதீப் அண்ணா எங்கே? கேட்டான்.
அவன் அந்த விசயத்தை சொல்லவும். அர்ஜூன் அவங்க எப்படி இவங்கள தேடி வருவாங்க?
அவங்களோட எல்லா ஆதாரத்தையும் நீங்க இருக்கப் போற வீட்ல தான வைக்க போறோம்.
என்ன? ஆட்டை வைத்து புலியை பிடிக்கும் கதை போல் இருக்கு. இதுல ரிஸ்க் அதிகம்.
அதான் அண்ணா. உங்களால செய்ய முடியும்ன்னு தோன்றியது அர்ஜூன் காயத்ரியை பார்த்தான்.
சரி..இங்க இருங்க. நான் வீட்டுக்கு சென்று அந்த கடிதத்தை எடுத்துட்டு வாரேன் என்று அர்ஜூன் கிளம்பினான்.
மறை வெளியே செல்ல, இருங்க சார். அர்ஜூன் இப்ப வந்துருவான் காயத்ரி கூறிக் கொண்டே தன் மகனை தூக்கினாள்.
அம்மா…என்று அணைத்த ராக்கி, அக்கா இங்க தான் இருக்கா.
அவள் மறையை பார்க்க அவன் அமைதியாக போனை பார்த்துக் கொண்டு நின்றான்.
உட்காருங்க சார்..
சார்ன்னு சொல்லாதீங்க. பெயரை சொல்லியே அழையுங்கள் அவன் சொல்லிக் கொண்டே அமர்ந்தான். அவன் நண்பர்கள் உள்ளே வந்தனர்.
என்னடா? இங்க என்ன பண்ற? அவன் அமர்ந்திருந்த சேரின் கைபிடியில் அமர்ந்தான் ஒருவன்.
எழுந்திருடா..என்று மறை எழுந்தான்.
டேய்..அந்த பொண்ணை பார்த்தேனே? என்றான் ஒருவன்.
யாரைடா சொல்ற?
ம்ம்..அவன் அவனோட ஆளை சொல்றான். உன்னோட ஆளையா சொல்றான்? ஒருவன் காயத்ரியை பார்த்தான்.
டேய்…வாய மூடுங்க.
நாங்க வெளிய இருக்கோம் என்று மறை அவர்களை இழுக்க, உங்களுக்கு அவனோட ஆளை தெரியுமா? ரொம்ப அழகா இருப்பாங்க என்று ஒருவன் சொல்ல,
ஏய்..வெளிய வா..என்று அவன் நண்பர்களை வெளியே இழுத்து வந்து, இது என்ன விளையாட்டு?
விளையாட்டு இல்லடா. நீ தான் பாக்குற நேரமெல்லாம் அந்த பொண்ணோட அறையிலே இருக்கீயே? அப்புறம் என்னன்னு நினைக்கிறது?
இதுக்கே இப்படி பேசுறாங்களே? நைட் தருண் இருந்தாலும் தெரிஞ்சா ஓவரா பேசுவானுகளே? என்று அமர்ந்தான்.
தப்பா பேசாதீங்கடா என்று மறை கோபமுடன் சொல்ல,
சரி பேசலைப்பா. ஆனால் அந்த பொண்ணை பார்த்தா ஒரு பையனுக்கு அம்மா மாதிரி இல்லை. என்னவொரு கண்ணு, என்ன உதடு..என்ன ஸ்ரெக்சர்..அப்படி இருக்காலடா ஒருவன் கூற, மறை அவனை அடித்தான்.
டேய்..மற, என்ன பண்ற? அனைவரும் சேர்ந்தவாறு கத்த, வேலுவும் அகல்யாவும் உள்ளே வந்தனர். மறை சினமுடன் வெளியே செல்ல.. நில்லுடா என்று வேலு அவனை நிறுத்த, மறை அவன் கையை தட்டி விட்டு வெளியே சென்றான்.
ஏன்டா, அவனுக்கு இவ்வளவு கோபம்?
டேய்..நீயா தான்டா பேச வரணும். உனக்குன்னு யாருமில்லாத போதே உனக்கு இவ்வளவு திமிரு? நீ மட்டும் செட் பண்ணிட்ட. ரொம்ப பண்ணுவ போலடா என்று ஒருவன் கத்த, காயத்ரியும் வெளியே வந்தாள்.
என்ன பேசுறீங்கடா? என்று வேலு அவனை அடித்து விட்டு, உனக்கு உடல் நலமில்லை என்றால் கூட அவன் தான் உன்னை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்வான். உன்னோட சொந்தமல்ல. யாருமில்லாமல் தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அவன் இருபது வருசமா தனியா இருந்திருக்கான். அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவன் நம்மிடம் சொல்ல கூட மாட்டான். வேலை செய்ய வரலைன்னு தெரிஞ்ச பின் தான் அவனை பார்க்க போவோம். எல்லாத்தையும் மறந்து இஷ்டத்துக்கு பேசுறீங்க?
நீங்க சொன்னதை கேட்டிருந்தால் அவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிருக்கும். நல்ல வேலை அவன் சென்ற பின் பேசுனீங்க? அவனுக்கு நம்மை தவிர யாருமில்லை. நீங்க என்னடா செஞ்சீங்க? என்று வேலு கேட்க, எல்லாரும் காயத்ரியை பார்க்க, இவங்க எதுக்கு என்னை பாக்குறாங்க? என்று அவர்களை பார்த்தாள்.
வேலு புரிந்து கொண்டு, யாருடா பேசியது? கேட்டான்.
அனைவரும் அவனை பார்க்க அவர்களை வெளியே அழைத்து வந்து, என்ன பேசுன? அவனிடம் கேட்டான்.
இவன் மேல தான்டா தப்பு என்றான் ஒருவன்.
என்ன பேசுனன்னு கேட்டேன்?
அவன் கூறி விட்டு சாரிடா மச்சான். நான் சும்மா கிண்டலுக்காக பேசினேன்.
கிண்டலா? அந்த பொண்ணோட புருசன் எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கான்னு தெரியுமா? ஒரு நிமிசம் உன்னோட தங்கச்சி இடத்துல அந்த பொண்ணை வச்சு பாரு..பேச முடியுமாடா? கேட்டான்.
அவனுக்கு உண்மையிலே அந்த பொண்ணை பிடிச்சிருக்கு? ஆனால் வெளிய காட்டிக்க மாட்டிக்கிறான். தயவு செஞ்சு எதையும் கெடுத்துடாதீங்கடா? நீ பேசியதிலே கோபப்பட்டு அவன் அடிச்சிருக்கான். நல்ல முன்னேற்றம் தான்.
முதல்ல அவனை சமாதானப்படுத்து. நீ தான் பண்ணணும் என்றான் வேலு. அவனும் சென்று மறையை பார்க்க..அவன் மரத்தின் கீழே அமர்ந்து யோசனையுடன் இருந்தான்.
அவன் செல்லும் முன் அர்ஜூன் அங்கு வந்து, அண்ணா இங்க என்ன பண்றீங்க?
ஒன்றுமில்லை அர்ஜூன்.
அக்கா..என்று அவன் அழைக்க, அவங்க அறையில் தான் இருப்பாங்க அர்ஜூன். எனக்கு பதிலாக வேற யாரையாவது பாரேன் அர்ஜூன்.
அவள் கையில் ராக்கியுடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். மறை அவளை பார்க்க, அவள் வேலுவையும் அவன் நண்பர்களையும் பார்த்தாள்.
அவர்களும் அவளை பார்த்து நிற்க, ராக்கி கீழே இறங்கி மறையிடம் ஓடி வந்தான். காயத்ரியும் ராக்கி பின் வந்து ராக்கியை தூக்கி மறையை முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.
அம்மா..ப்ரெண்டு..ப்ரெண்டு..என்று அழுதான் ராக்கி.
காயத்ரி மகன் அழுவதை கூட பொருட்படுத்தாது கோபமாக உள்ளே சென்றாள். மறை ஏக்கத்துடன் இருவரையும் பார்த்தான். பின் அர்ஜூனை பார்த்து தலை கவிழ்ந்து நின்றான்.
என்னாச்சு அண்ணா?
வேலு அவனிடம் வந்து, சாரிடா..நான் கவனிக்காம பேசிட்டேன். மற..நீ போ பேசு என்றான்.
டேய்..நீ எதுக்குடா தலை கவிழ்ந்து நிக்குற? சொல்லுடா வேலு பேச, அர்ஜூன் இருவரையும் பார்த்தான்.
நீ வேற யாரையாவது கூப்பிட்டுக்கோ அர்ஜூன். நான் வாரேன் என்று மறை கிளம்ப, அந்த பொண்ணை மறைக்கு பிடிச்சிருக்குடா அர்ஜூன் என்றான் வேலு.
அண்ணா..நில்லுங்க. நான் பேசுறேன். உங்க விசயத்தை அப்புறம் பார்க்கலாம். முதல்ல..என்று அர்ஜூன் பேச்சை நிறுத்தி.. வாங்கண்ணா..என்று மறையை காயத்ரி அறைக்கு இழுத்து சென்றான். அனைவரும் அவர்களை பார்த்தனர்.
அர்ஜூன்..என்று வேலு அவர்கள் பின் ஓடி வந்தான். காயத்ரி அறையினுள் அழுது கொண்டிருந்தாள்.
அர்ஜூன் மறையுடன் வருவதை பார்த்து கண்ணை துடைத்து எழுந்து மறையை முறைத்துக் கொண்டிருந்தாள். ராக்கி அழுது தூங்கிப் போனான்.
அக்கா..அர்ஜூன் தொடங்க, அர்ஜூன் நான் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இதுக்கு மேல முடியாது. எனக்கு ராக்கியை தவிர யாரும் தேவையில்லை என்றாள். மறை கண்கலங்க தலை கவிழ்ந்து நின்றான்.
அக்கா..நிறுத்துங்க. நான் உங்க பர்சனல் விசயத்தை பேச வரலை என்று அப்படியே மாற்றினான் அர்ஜூன். மறை நிமிர்ந்து அர்ஜூனை பார்த்தான். அர்ஜூன் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு..
வினிதாக்கா எழுதிய கடிதம் என்று கொடுத்தான். அதில் அவள் குடும்ப ஆட்கள் செய்த தவறு அனைத்தும் இருந்தது. காயத்ரி புருசனும் கண்டிப்பாக தண்டனைக்குரியவன் தான். அவன் செய்யும் வேலையில் அவன் ஜெயிலிலிருந்து வெளியே வர வாய்ப்பில்லை. இதை அனைத்தும் அர்ஜூன் நீ தான் நிரூபித்து அனைவருக்கும் தண்டை வாங்கித் தரணும்.
என்னிடம் எப்படி தம்பியாக பழகினாயோ? அது போல் எனக்கு பின் அவளுக்கு நீ என்றும் இருக்கணும். அவளுக்கென வேற யாருமில்லை. அவளுக்காக நல்ல துணையை தேடி தந்து அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தரணும். இது என்னுடைய கடைசி ஆசை அர்ஜூன்.
உன்னை நம்பி எனக்குரியவர்களையும், நம் சொத்தையும் விட்டு போகிறேன். பார்த்துக் கொள்.
காயூவிற்கு ஆசிரியர் ஆகணும்ன்னு ஆசை. இதில் உள்ள நம்பரை எடுத்துக்கோ. அதில் உள்ள பணத்தை வைத்து படிக்க வை. அவள் கனவு, ஆசை அனைத்தும் அழிய காரணமே நான் தான்.
அர்ஜூன்..அவளுக்கு ஹோட்டல் மட்டுமல்ல எங்க வீடும் அவள் பெயரில் தான் இருக்கும். அதை விற்று அவளுக்கு பணமாக கொடுத்து விடு. என்னோட கார்டு அனைத்தும் நீ வச்சுக்கோ..அனுவை நல்லா பார்த்துக்கோ அர்ஜூன். ஸ்ரீ என்ன செஞ்சாலும் அவளையும் விட்றாத.
சாரி..அர்ஜூன் எல்லாருக்கும் செஞ்சுட்டேன். ஆனால் உனக்கு ஏதும் என்னால் கொடுக்க முடியலை. உன் அம்மாவிடம் என்னை விட நிறைய இருக்கு. ஆனால் அர்ஜூன் இது உனக்காக என்று இருந்தது. அர்ஜூன் அந்த கவரை பிரித்து பார்த்தான். அர்ஜூன், ஸ்ரீக்கான மோதிரம். அந்த கவரில் பென்டிரைவ் ஒன்றும் இருக்க, அதை மறையிடம் கொடுத்து அர்ஜூன் அழ, காயத்ரியும் கதறி அழுதாள்.
என்னடி பண்ணிட்டு போயிருக்க? இதை விட நீ கூட இருந்தா சந்தோசமா இருந்திருப்பேன்டி என்று காயத்ரி அழுதாள்.
அர்ஜூன் தோளில் மறை கை வைக்க..அவன் எழுந்து மறையை கட்டிக் கொண்டு அழுதான்.
அர்ஜூன் நேரமாகிறது. மணியை பாரு..அவன் கூற, முகத்தை துடைத்த அர்ஜூன், அக்கா..அண்ணா தான் உடன் இருப்பாங்க. தருணும் வருவான். வேற யாரும் இந்த மாதிரி உதவிக்கு பசங்களை அனுப்ப மாட்டாங்க. அதுவும் இந்த நேரத்தில் உங்களுக்கு அனு, ராக்கி உயிர் முக்கியமா? இல்லையா? கேட்டான்.
ஏதாவது செய் என்று தன் மகன் ராக்கியை தோளில் போட்டு கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். இருவரும் வெளியே வந்தனர்.
யாருடா அர்ஜூன்? அந்த பொண்ணு..எல்லாருக்கும் இவ்வளவு செஞ்சுட்டு செத்து போயிருக்கு.
இன்னும் ஒன்று இருக்குன்னா. நான் தான் அக்காவிடம் சொல்லலை. சொன்னா கோபப்படுவாங்க என்றான் அர்ஜூன்.
சரிடா என்று வெளியே இருவரும் அமர்ந்தனர். வேலுவும் நண்பர்களும் அவனிடம் வந்து பேச, அவன் பேசவே இல்லை.
அர்ஜூன் ஒத்துக்க வச்சுட்டியா?
நாங்க பேசுறதுக்கு முன்னாடியே அண்ணாவை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. நான் தான் பேச்சை மாற்றி சமாளித்தேன்.
அண்ணா..நீங்க காத்திருங்க பார்க்கலாம். அக்கா பட்ட கஷ்டத்திலிருந்தே வெளியே வரலை. அதான் இப்படி பேசுறாங்க.
சாரிடா மற..எல்லாமே என்னால தான். நான் அப்படி பேசியிருக்கக்கூடாது காயத்ரியை பேசியவன் மன்னிப்பு கேட்க, மறை எழுந்து வெளியே சென்றான்.
நில்லுடா, நீ இவ்வளவு சீரியசா ஆவன்னு நினைக்கலை டா. எப்பொழுதும் போல் தான் பேசினேன். ஒரு பொண்ணை பற்றி பேசியது தவறு தான். சாரிடா..பேசாம மட்டும் இருக்காதடா என்று கத்திய அவன் அழுதான்.
மறை நின்று அவனை திரும்பி பார்த்து, நீ என்னை பற்றி பேசலை சாரி சொல்ல..சொல்ல வேண்டியவங்களிடம் சொல்லணும் என்று அதட்டினான்.
சுற்றி அனைவரும் அவர்களை பார்த்தனர். சரிடா, நான் சொல்லிட்டா எப்பொழுது போல் பேசுவேல்ல.
மறையும் அவனை அணைத்து, இனி விளையாட்டிற்கு கூட இப்படி பேசாதே. எல்லாரும் கிளம்புங்க என்றான்.
நான் சாரி சொல்லணும் என்றான் அவன்.
அதெல்லாம் தேவையில்லை. நீங்க கொடுத்த சத்தத்தில் அக்காவிற்கே நீங்க பேசியது கேட்டிருக்கும் என்றான் அர்ஜூன்.
தாரிகா அம்மா, கமலி இருவரும் அர்ஜூனை புன்னகையுடன் பார்த்தனர். அவர்கள் கிளம்பிய பின் அந்த பென்டிரைவ் பற்றி மறை கேட்க, அதை இருவரும் காயத்ரி அறைக்கே கொண்டு சென்று பார்க்க, மறை காயத்ரி பக்கம் திரும்பி கூட பார்க்கலை. அவளும் அதை பார்த்தாள். கம்பெனி பொருட்களையே திருடி விற்ற காட்சி, போதை மருந்து சம்பந்தப்பட்டது, பெண்களை கட்டாயப்படுத்தி கற்பை சூரையாடும் காயத்ரி புருசனின் அரக்கத்தனம். அனைத்தும் பதிவாகி இருந்தது.
காயத்ரி முகம் மாற..அர்ஜூன் மறையிடம் அனுவை கொடுத்து கண்ணை காட்ட அவன் வெளியே சென்றான்.
ஸ்ரீ வீட்டிற்கு கிளம்பும் போது அனைவரும் அவளுடன் சென்றிருப்பர். அகிலும் ரதியும் துருவனுடன் இருந்தனர்.
அக்கா..ஏன் அக்கா? அண்ணா மீது இப்படி கோபப்படுறீங்க? அண்ணா ரொம்ப நல்லவருக்கா.
அர்ஜூன், என்ன தான் அவனால் நான் கஷ்டப்பட்டாலும் அவன் என்னோட கணவன். அவன் இறந்து ஒரு நாள் ஆகுது. அதற்குள் இது என்ன பேச்சு?
புரியுதுக்கா..ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்க. வினிதாக்காவும் அண்ணா இறந்த பின் ஆண்கள் பார்க்கும் பார்வையால் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க. உங்களுக்கே தெரியும். நீங்க கஷ்டப்படாதுன்னு நான் நினைக்கிறது தப்பா?
அர்ஜூன்..யார் என்னை எப்படி பார்த்தாலும் நான் பெரியதாக எடுத்துக்க மாட்டேன்.
அக்கா..பிரச்சனை முடிஞ்சு ஒரு மாசத்துல நாங்க எல்லாரும் சென்னை கிளம்பிடுவோம். உங்களையும் ராக்கியையும் பார்த்துக்க யார் இருப்பா? யாரிடம் உங்களை விட்டுட்டு போறது? நான் எப்படி நிம்மதியா இருப்பேன்? உங்களையும் வினிதா அக்கா போல் என்னால் விட முடியாது. நீங்க பாதுகாப்பா இருக்கணும். அதுக்கு நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் என்ன?
உங்களுக்கு தெரியுமா? மறை அண்ணா..அம்மா உங்களை போல் கணவனை இழந்து தவிச்சாங்க. அண்ணாவுக்கு ஏழெட்டு வயசு தான் இருக்கும். இருந்தும் பார்த்துக்கிட்டாங்க. ஆனால் ராக்கி இன்னும் வளரலை. அவனை நீங்க பார்த்துக்க முடியும். ஆனால் உங்களை அவனால் பார்த்துக்க முடியாது. காய்ச்சலில் நீங்க படுத்தா கூட அவன் உங்களை பார்த்து அழ தான் செய்வான். அதனால் அவனும் பாதிக்கப்படுவான்.
இல்லை. என்னோட பாட்டி வீட்ல இருப்பீங்களா? கேட்டான் அர்ஜூன்.
நோ..அர்ஜூன். எனக்கு தனியா வீடு பார்த்து கொடுத்திரு. எனக்கு அம்மா கொடுத்த நகை இருக்கு. அதை வைத்து வீடு மட்டும் வாங்கிக் கொடு..படித்துக் கொண்டே வேலை பார்க்கணும். வேலையும் வாங்கிக் கொடு போதும்.
அக்கா..அக்கா..அக்கா..உங்களுக்கு புரியுதா? இல்லையா? இன்று அண்ணாவோட ப்ரெண்ட்ஸே எப்படி பேசுனாங்க? ஊர்ல கட்டுப்பாடுகள் இருக்கு தான். ஆனால் அதனால் நீங்க பாதுகாப்பாக இருக்க முடியும்ன்னு நினைக்காதீங்க? குடிப்பாங்க..வீட்டு திண்ணையில் ஆட்கள் விழுந்து கிடப்பாங்க. இன்னும் பிரச்சனை இருக்கு.
நான் நாளைக்கே இந்த ஊரை விட்டு நான் வளர்ந்த ஊருக்கு போறேன்.
சரிக்கா..அண்ணாவுடன் சென்று விடுங்கள். நான் கிளம்புகிறேன்.
நான் அவருடன் செல்ல மாட்டேன். எங்களை நீ தான் கூட்டுட்டு போகணும்.
சோ..சாரிக்கா. நான் என்னோட ஏஞ்சலை பார்க்க போகணும். அவளும் இவ்வளவு நேரமும் உடல் நலமில்லாமல் இங்கே தான் இருந்தா. அனு வேற இல்லை “பை க்கா”..என்று கதவை திறந்து வெளியே வந்தான். காயத்ரியும் அவன் பின் வந்து, அர்ஜூன் இந்த நேரத்துல நீ அவள பார்க்க போக வேண்டாம். எங்களை விட்டுட்டு போகாதடா.
அக்கா..நாங்க நேரமெல்லாம் பார்க்க மாட்டோம். ஒரே அறையிலே தூங்கி இருக்கோம். அண்ணா..தருண் வந்துருப்பான். நீங்க அக்காவுடன் கிளம்புங்க என்று அர்ஜூன் கண்ணடிக்க,
நில்லுடா..என்று அனுவுடன் மறை எழுந்தான். காயத்ரி அவனை பார்த்து முறைத்தாள்.
அர்ஜூன்..நில்லு என்று அவன் வர, அதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அய்யோ, அர்ஜூன் தனியே மாட்டி விட்டுட்டு போயிட்டியே? என்று மறை மீண்டும் காயத்ரியை பார்த்தாள். அவள் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.
அவளுக்கு பசிப்பது போல் இருக்க..ராக்கியை தூக்கிக் கொண்டு வெளியே வந்து பார்த்தாள். மறை கையில் சாப்பாட்டுடன் அவள் முன் வந்தான்.
உனக்கு எவ்வளவு தைரியம்? என்று அவள் திட்ட, ஏங்க போதும். இதுக்கு மேல திட்டாதீங்க. பசங்களுக்கு கேட்கப் போகுது. என்னை அப்புறம் திட்டிக்கலாம். முதல்ல வாங்க பக்கத்துல தான். சீக்கிரம் போயிடலாம். அங்க தருண் வந்துருப்பானும். தனியா அவனுக்கு ஏதும் ஆகி விடாமல்..
அவள் ஏதும் சொல்லாமல் அனுவை தூக்கி மறை பின் அமர வைத்து அவள் ராக்கியை தூக்கிக் கொண்டு அமர்ந்தாள். அனு விழித்து..அம்மா.. என்று அழைக்க..சித்தியிடம் சாஞ்சிக்கோ செல்லம் என்று அவளை காயத்ரி தன் மீது சாய்த்து, அவளை பிடித்துக் கொள்ள நால்வரும் பைக்கில் கிளம்பினர்.
சற்று நேரத்தில் வந்து சேர்ந்தனர். தருண் அவர்களுக்காக காத்திருந்தான். மறையை பார்த்த பிரெளனி குதிரை கனைத்தது.
வண்டியை நிறுத்தி விட்டு அவனும் தீனாவின் பண்ணை வீட்டுக்கு செல்ல..அங்கே அனைத்து வளர்ப்பு பிராணிகளும் இருந்தது. பிரெனியிடம் வந்து..யாராவது வந்தா உடனே சொல்லணும் என்று குதிரையை முத்தமிட்டான். அனு விழித்து ஆசையுடன் தொட்டு பார்த்தாள்.
ராக்கி இறங்க முயற்சிக்க..காயத்ரி அவனை இறுக்கமாக பிடித்து, நோ..ராக்கி என்றாள். அவன் அழ ஆரம்பித்தான். மறையை பார்த்த தருண் ராக்கியை தூக்கிக் கொண்டு குதிரையிடம் வந்து அதை தொட, குதிரை கனைத்தது. தருண் பின் செல்ல..தருண் ராக்கி கையை பிடித்து குதிரையை மெதுவாக வருடினான். அது அமைதியானது.
பின் ராக்கி மறையிடம் செல்ல, காயத்ரி அவனிடம் வந்து ராக்கியை பிடுங்கி சென்றாள். அவன் அழ, தருணும் மறையும் காயத்ரியை முறைத்தனர்.
அண்ணா..விடுங்கண்ணா. அர்ஜூன் சொன்னான். இவங்க கொஞ்சம் ஓவரா தான் போறாங்க.
இல்லடா. அவங்க நிலைமையில இருந்து பார்த்தா தான் அவங்க கஷ்டம் தெரியும் என்று அவன் சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான். தருணிடம் சாப்பாட்டை கொடுத்து காயத்ரியிடம் சாப்பிட சொல்லி விட்டு, அவன் காலில் இருந்த கட்டை பிரித்தான்.
அவனை பார்த்து, அண்ணா..ஏன் பிரிக்கிறீங்க?
இன்று மாலை பிரிக்க வர சொன்னாங்க. நான் இந்த பிரச்சனையில் மறந்துட்டேன். அண்ணா..வேறேதுவும் மருந்து போட வேண்டி இருந்தா என்ன பண்றது?
நாளைக்கு பார்த்துக்கிறேன்.
ஏன் அண்ணா..என்று போனை எடுத்து கேசவனிடம் கூறினான் தருண். மற அண்ணாவால் வர முடியாத சூழல் என்ன செய்யலாம்? கேட்டான்.
அவர் அவனுக்காக சிகிச்சையை பார்த்து விட்டு, அவனுக்கு ஒன்றும் செய்யாது. பிரித்த பின் வெந்நீர் வெதுவெதுப்புடன் வைத்து நன்றாக துணியை பிழிந்து துடைத்து மட்டும் விடு. போதும். சரியாகிடும் என்றார்.
அவரை எதுக்குடா தொந்தரவு செய்ற? அவரே தன் மனைவிய இழந்த வருத்தத்தில் இருப்பார்.
ஆமாண்ணா. இத்தனை வருசமா நித்திக்காக ஆன்ட்டிய பிரிஞ்சு இருந்திருக்கார். ஆனால் பாருங்களேன். வாரத்திற்கு ஒரு முறை அலைச்சலை கூட பார்க்காமல் அவங்கள பார்த்துக்க போயிருக்கார். நித்தி பக்கத்துல இருந்தும் அவளுக்கு ஏதும் தெரியல. இப்ப அழுது என்ன செய்றது? அவளும் பாவம் தான் அம்மா இல்லாம கஷ்டமா தான் இருந்திருக்கும்.
அச்சோ..இப்ப தான் நினைவு வருது. சைலேஷ் வந்துட்டார்ன்னா தெரியல? என்று போனை எடுத்து சமையலறைக்குள் சென்றான். அறைக்குள் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது. சமையலறையில் இரண்டு மூன்று பாத்திரங்கள் மட்டும் இருக்க..கேஸ் சிலிண்டர் இல்லை. விறகடுப்பை பற்ற வைத்து நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
அக்கா..என்ன பண்றீங்க?
எங்களால தான அடிபட்டது. நானே பார்த்துக்கிறேன்.
சரிக்கா. விறகடுப்பை உங்களுக்கு பயன்படுத்த தெரியுமா?
தம்பி..நானும் கிராமத்து பொண்ணு தான். அந்த சிட்டி தான் எனக்கு பிடிக்கலை. அங்க போன ஒரு வருசத்துல என்னோட வாழ்க்கையே மாறிப்போச்சு.
விறகை வெளியே எடுத்து விட்டு தண்ணீரை எடுத்து அவனிடம் வந்தாள். அவன் சாய்ந்து கண்ணை மூடி படுத்திருந்தான்.
ஏன்டா தருண், உன்னோட ப்ரெண்டு அர்ஜூன் இன்னும் ஸ்ரீயை விடுவதாக தெரியலை தருண் என நினைத்து அவன் கேட்க, அதற்கு அவளிடம் முறைப்பு மட்டும் தான் கிடைத்தது.
அதுவா அண்ணா? இப்ப இருவருமே முன்னேறி இருக்காங்க.
அதான் சொன்னானே! ஒரே அறையில் என்று சிந்தித்த மறை கண்ணை விழித்து திரும்பி பார்த்தான். தருண் புன்னகையுடன் கண்ணை காட்ட, காயத்ரி அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு கீழே அமர்ந்து அவளது முறைப்பை தொடர்ந்தாள்.
ஏங்க மேடம், இங்க என்ன பண்றீங்க? என்று காலை மேலே துக்கினார்.
ஹலோ, ஓவரா திங்க் பண்ணாதீங்க. நீங்க எங்களுக்கு உதவினீங்கல்ல.. அதுக்காக நானே பண்றேன். பேன்ட்டை துக்குங்க. ஒத்தடம் கொடுக்க,..கடினமாக அவள் பேச, அவன் விழித்துக் கொண்டு தருணை பார்த்தான்.
அவன் காலை இறக்கி கொடுக்க, கேசவன் சொன்னது போல் செய்து விட்டு அவள் எழுந்திருக்க, உங்களுக்கு ஞாபகம் வந்துருச்சா? கேட்டான் மறை.
என்ன ஞாபகம்?
நீங்க தான் நான் காப்பாற்றியதா சொன்னீங்கல்ல..அந்த நினைவு வந்துருச்சா?
ஏன் அண்ணா கேட்குறீங்க? ஏதும் நடந்ததா? தருண் கேட்டான்.
மறை பயந்து எழுந்து,..இல்லை..இல்லை.. என்று பதறினான்.
அண்ணா..தருண் அழைக்க, அவன் அமைதியானான். காயத்ரி சந்தேகமுடன் அவனை பார்த்து விட்டு, நான் சாப்பிட்டேன் தருண். நான் ரெஸ்ட் எடுக்கணும். நான் அறைக்கு போறேன் என்று சென்று பசங்களை தூங்க வைத்து அவளும் படுத்தாள். அவள் யோசித்தும் நினைவிற்கு வரவில்லை.