அத்தியாயம் 17

காலை மணி எட்டை தொட்டது. ஆதேஷ் எழுந்து முகம் கழுவி அவன் வேலையை முடித்து அறைக்குள் வந்தான். அவனுக்கு யாரோ இருப்பது போல் தெரிந்தது. அதே இடத்திலே நின்று சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். ஓரிடத்தில் கை ஒன்று லேசாக தெரிய, ஒரே எட்டில் அங்கே சென்று அந்த கையை பிடித்தான்.

அது ஒரு குட்டிப் பொண்ணு. ஆதேஷை பார்த்து அந்த குட்டிப் பொண்ணு அழ, எதுக்கு அழுற? என்ற குரல் கேட்டு திரும்பினான். அந்த அறையினுள் ஐந்து வாண்டுகள்.

சாரி..மாம்ஸ். நாங்க அறை மாறி வந்துட்டோம் சக்கரை கூற, யாருடா நீங்க எல்லாரும்? கேட்டான் ஆதேஷ்.

வாடா..போயிடலாம் என்று பொண்ணு ஒன்று கூற,

கொடிக்கா தொக்கு சும்மா இரு. மாம்ஸ் ஒன்றுமே செய்ய மாட்டாங்க என்றான் அந்த வாலு சக்கரை.

மாம்ஸ் நாங்க ஜானுவை பார்க்க வந்தோம்.

ஜானுவையா? எதுக்கு?

புவி அக்கா தான் ஹாஸ்பிட்டல இருக்கிறாங்கள. எங்க அம்மா எல்லாரும் ஸ்கூல் டியூசன் சேர்க்கப் போறாங்களாம். அதான் ஜானுகிட்ட உதவி கேட்டா ஏதாவது செய்வா? அவள பார்த்துட்டு புவி அக்காவை எப்ப பார்க்க போகலாம்னு கேட்டு போக தான் வந்தோம்.

மாம்ஸ்..இத வச்சுக்கோங்க என்று மாங்காய் ஒன்றை கையில் கொடுத்தான். இது ஜானுவுக்கு கொண்டு வந்தேன். நீங்க வைச்சுக்கோங்க. அவளுக்கு இன்னொரு நாள் கொடுத்திடுவேன்.

மாம்ஸா..

ஆமாம். ஜானுவுக்கு நீங்க மாமான்னா எங்களுக்கும் மாமா தானே?

ஓ..மாமா தான். மாம்ஸ் ஆகிடுச்சா..

ஆமா மாம்ஸ்.

கதவை கொஞ்சம் திறந்தீங்கன்னா நல்லா இருக்கும். நீங்களும் வாங்க மாமாவென்று ஒரு பொண்ணு கூற, வாங்க என்று அவர்களுடன் வெளியே வர,

மாம்ஸ் என்ன பண்றீங்க? அண்ணா பார்த்தா அவ்வளவு தான். குனிஞ்சுக்கோங்க என்று அவர்களை போல் அவனையும் வர வைத்து, ஜானு அறை கதவை மெதுவாக தட்டினான் ஆதேஷ்.

மாம்ஸ்..வேண்டாம். இருங்க அவளே வருவா? என்று அவன் வண்டு சத்தம் போல் ரீங்காரமிட்டு காட்ட, வாவ் சூப்பர்டா என்று ஆதேஷ் அவனை பாராட்டினான்.

ஆனால் கதவு திறந்து தான் இருந்திருக்கும் போல. சக்கரை அக்கா உனக்கு பல்பு கொடுத்துட்டா என்று மற்றொரு பையன் சிரித்தான்.

வாயை மூடுடா பால் டப்பா..என்று சக்கரை அவனை திட்டி விட்டு கதவை திறந்து ஒவ்வொருவராக உள்ளே சென்றனர். கடைசியில் ஆதேஷும் சென்றான்.

தாரிகா தூங்கிக் கொண்டிருந்தாள். அருகே சென்ற ஆதேஷ் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு நிமிர்ந்தான். குளித்து விட்டு பள்ளிச்சீருடையில் உச்சிக்கொண்டையுடன் வெண்பனி மேகமாய் முன் நின்றாள் ஜானு. தாவணியில் பார்த்த பொண்ணு சீருடையில் பார்க்க, அவனை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் அவனை பார்த்து கத்த வந்தாள்.

அக்கா..கத்தாதே பால் டப்பா ஜானு முன் வந்தான். ஆனாலும் ஆதேஷை பார்த்து பயந்து விலகினாள். ஆதேஷ் அப்படியே தாரிகா அருகே அமர்ந்திருக்க,

இங்க என்ன செய்றீங்க? என்று ஆதேஷை பார்த்து, யாராவது பார்த்தால் அவ்வளவு தான் என்று மணியை பார்த்தாள். போச்சு அண்ணா வேற வருவானா?

நீங்க என்னடா பண்றீங்க? அந்த பசங்களிடம் கேட்டாள். பசங்க விசயத்தை சொல்ல, கேட்கும் நேரமாடா இது? எப்பொழுதும் மாலையில் தானே பார்ப்போம். பள்ளியில் பார்த்து பேசி இருக்கலாம். ஏன்டா என்று? தலையில் கை வைத்தாள்.

அக்கா..நீ சொல்லு. நாங்க அண்ணாவிடம் மாட்டாம போயிடுவோம்.

டேய் சக்கர..சினத்துடன் அவள் அந்த பையனை முறைத்தாள். அவள் முகத்தில் குளித்த அந்த நீர் முத்து முத்தாய் இருக்க, ஆதேஷ் அதை பார்த்து எச்சிலை விழுங்கினான்.

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்று தலையில் தட்டி விட்டு எழுந்தான். ஆதேஷ் கையிலிருந்த மாங்காயை பார்த்து விட்டு அவனை பார்த்தாள்.

அமைதியா இருங்க என்று கதவருகே சென்று தலையை வெளியே நீட்டி எட்டி பார்த்தாள். ஆதேஷும் என்ன பார்க்கிறால் என்று அவளருகே சென்றான். தாரிகா விழித்து எழுந்தாள்.

இவர்கள் அனைவரையும் உறைந்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். ஜானு..என்று சக்கரை அழைக்க..இருடா வாரேன் என்று திரும்பினாள் ஜானு. ஆதேஷை பார்த்து ஆவ்..என்று கத்த வந்தவளது வாயை பொத்தினான் அவன்.

அவள் அவனிடமிருந்து விலகி நெஞ்சை தடவிக் கொண்டு, அப்பா முடியலடா என்று தாரிகாவை பார்த்து, அக்கா..இவனுக காலையிலே ஆரம்பிச்சிட்டானுக. அண்ணா பார்த்தா அவ்வளவு தான். அதுவும் மாமா என்று கூற வந்த வாயை அவளாகவே நிறுத்தி, மூளையில்லாத மாமா என்றாள்.

என்ன? என்ன? சின்ன பசங்க முன்னாடி என்ன பேசுற? என்று வேகமாக வந்து ஜானுவை தள்ள, அவள் விழாமல் அவனை பிடித்து விடலாம் என்று அவனை பிடிக்க இருவரும் படுக்கையில் விழுந்தனர்.

அங்கிட்டு போய் சண்டை போடுங்கடா என்று தாரிகா எழுந்தாள். அவள் மீது இருவரும் விழுந்திருப்பர். பசங்க இதை பார்த்து சிரித்து விட்டனர். பிரதீப்பும் வந்திருப்பான். சத்தம் நன்றாக கேட்டது.

ஜானுவும் ஆதேஷும் முறைத்து விட்டு எழ, அவள் அண்ணன் கொடுத்த சத்தத்தில் பதட்டமானாள் ஜானு. அவள் கண்கள் படபடத்தது.

வாங்கண்ணா..என்று அழைத்தாள் தாரிகா. போச்சு..போச்சு..என்று ஜானு அண்ணைனை பார்க்க, பிரதீப் ஆதேஷை பார்த்து, மாப்பிள்ள இங்க என்ன பண்றீங்க?

எனக்கு உடுத்த ஆடை இல்லை அண்ணா. அதனால் தான் அவனை அழைத்து வாங்கி வர சொன்னேன் என்று தாரிகா சமாளித்தாள். பசங்க அங்கங்கு ஒளிந்து கொண்டனர். ஆனால் ஆதேஷ் கையில் இருந்த  மாங்காய் ஜானு கையில் இருக்க கண்ட ஜானுவிடம், நீ சீக்கிரம் தயாராகி வா..என்று ஜானுவிற்கும் தாரிகாவிற்கும் காபி எடுத்து கொடுத்து விட்டு அறையை நோட்டமிட்ட படி சென்றான்.

அவன் சென்றதும் ஜானு அப்படியே அமர்ந்தாள்.

என்ன ஜானு சமாளிச்சாச்சுல? என்று தாரிகா கேட்க, ஹம்..ஹம்..நீங்க மாட்டல. நான் தான் மாட்டிக்கிட்டேன் என்று காபியை பார்த்தவள் ஆதேஷிடம் நீட்டினாள்.

நீ குடிச்சிட்டு கிளம்பு. திரும்ப மாமா வந்துற போறாரு என்றான்.

நீ மாட்டினியா? தாரிகா கேட்க, அவள் மாங்காயை காட்டினாள்.

அதை எதுக்கு என்னிடமிருந்து வாங்குன? இரு மாமாகிட்ட நான் பேசுறேன்.

யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். அந்த பசங்களை அழைத்தாள்.

அவங்க ஆடை, தலை களைந்து இருக்க, அதை சரி செய்து விட்ட ஜானு அவர்களிடம் பள்ளி முடிந்து காத்திருங்கள். நாம் புவியை பார்க்க செல்லலாம்.

அக்கா டியூசன்..

துருவனிடம் பேசிட்டு சொல்றேன். அவன் பள்ளிக்கு வருவானான்னு தெரியல. பார்த்துக்கலாம் நீங்க சீக்கிரம் கிளம்புங்க என்று கூற, குட்டிப் பொண்ணு அவள் கன்னத்தில் முத்தமிட்டு “லவ் யூ அக்கா” என்று சொல்ல, “லவ் யூ டூ டா” என்று அவள் பறக்கும் முத்தம் கொடுக்க சந்தோசமாக சென்றனர்.

சக்கர..சீக்கிரம் அனைவரையும் அழைத்து செல். பார்த்து பத்திரமா போங்க என்று கையாட்டினாள். தாரிகாவும் ஆதேஷும் அவளை மெய் மறந்து பார்த்தனர்.

அவர்களை பார்த்து விட்டு, நீங்க பேசிக்கிட்டு இருங்க என்று அவள் தயாராக ஆரம்பித்தாள். அவர்கள் கீழே சென்றனர். தயாராகி விட்டு கீழே வந்தாள்.

ஆதேஷ், தீனா குடும்பம் அமர்ந்திருக்க துகிரா ஜானுவை பார்த்து, வாவ் க்யூட்டா இருக்க என்று அவளை சுற்றி சுற்றி பார்த்தாள்.

துகி சும்மா இரு..ஆதேஷ் அம்மா சொல்ல, அவளுடைய புத்தகப்பையை இறக்கி வைத்து விட்டு துளசியிடம் சென்று அண்ணா எங்கே? கேட்டாள்.

ஏன்டி, என்ன செஞ்சு வைச்ச? அப்பத்தா கேட்டார்.

அவரை பார்த்து விட்டு ஆன்ட்டி, நான் அண்ணாவை பார்த்துட்டு வாரேன் என்று பிரதீப் அறைக்கு சென்றாள். ஆதேஷும் தாரிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துளசியும் பள்ளிச்சீருடையில் சாப்பிட்டே முடித்து விட்டாள்.

ஜானு பிரதீப் அறைக்குள் செல்ல, அந்த பசங்க கூட சுத்தாதடா..அவங்க சின்ன பசங்கடா. நீ வளர்ந்துட்ட அடுத்த வருடம் கல்லூரிக்கு செல்ல போகிறாய்.

அண்ணா..ப்ளீஸ் அண்ணா. அவங்களும் என்னோட ப்ரெண்ட்ஸ்.

என்ன ப்ரெண்ட்ஸோ? மாமா உங்கள் அறையில் என்ன செய்தான்?

அக்காவிற்கு ஆடை தான் அண்ணா.

சரி..அக்காவிற்கு உன் ஆடை ஒன்றை கொடுத்துட்டு போ என்றான்.

அண்ணா..சாரிண்ணா. நான் மாமாவை நேற்று அங்கே அழைத்து வந்திருக்க கூடாது.

அவன் வந்ததும் நல்லது தான். நீ ஆடையை எடுத்து கொடுத்துட்டு வா..சாப்பிட்டு கிளம்பலாம்.

தாரிகாவை தனியே அழைத்து சென்று ஆடையை காண்பித்து, நீங்க போட்டுக்கோங்க என்று சாப்பிடும் இடத்திற்கு வந்தாள். பிரதீப் சாப்பாட்டை எடுத்து வைத்திருந்தான். அம்மா..எடுத்து வைக்கிறேன் என்று கூறினாலும் அவன் கேட்கவில்லை. அவன் தான் ஜானுவிற்கு ஊட்டி விட்டான். சாப்பிட்டு விட்டு அண்ணா..போன் என்று கேட்டாள்.

அவன் கொடுக்க, வாரீயா இல்லையா? என்று அனைவர் முன்னும் வந்து அவளது புத்தகப்பையை எடுத்துக் கொண்டு, கேட்ட படி, அண்ணா துரு வரான் அவனுடன் செல்கிறேன் என்று பிரதீப்பிடம் கூறி விட்டு அவள் எழ

அவனுக்கு இன்னும் சரியாகவில்லை. உனக்கு தெரியாதா? என்று துளசி கேட்க, போனை வாங்கி அவனிடம் நீ முன்னாடி செல். நான் வந்து விடுவேன் என்று போனை அணைத்து விட்டு,

அண்ணா..நான் மறந்துட்டேன் என்று அனைவரிடமும் சொல்லி விட்டு அவள் வாசற்படிக்கு செல்ல, நில்லுடா ஜானு என்று ஆதேஷ் அம்மா அழைக்க ஆன்ட்டி என்று திரும்பினாள். அவளை புகைப்படம் எடுத்தார். ஓடி வந்து அதை பார்த்து விட்டு, ஆன்ட்டி இது சரியில்லை. வேற எடுங்க என்று அவள் போஸ் கொடுக்க,

ஜானு நேரமாகுது. நான் வாரேன் என்று பிரதீப் கூற, நோ..அண்ணா..நானே சென்று விடுவேன் அவள் வெளியே செல்ல, துகிரா பிரதீப்பிடம் நான் போயிட்டு வரவா?

அவ ஒத்துக்க மாட்டாம்மா..

நான் பார்த்துக்கிறேன் என்று துகிரா வெளியே வர, ஆது துகியுடன் போயிட்டு வா..என்றார் அவன் அம்மா.

ஓ.கே மாம் என்று அவன் எழ, துளசி பிரதீப்பிடம் அண்ணா என்னை விட்டு விடுறீங்களா? கேட்டாள்.

வாம்மா..போகலாம் என்று அவளை அழைத்து வெளியே வந்தான். ஆது நில்லு, நானும் வாரேன் என்று தாரிகாவும் வந்தாள்.

இவர்களை பார்த்து ஜானு,.நான் என்ன ஊருக்கா போகப் போகிறேன்? எல்லாரும் வாரீங்க?

உங்க ஊரை பார்த்ததில்லை. நாங்க வாரோமே? தாரிகா கெஞ்ச, வாங்க என்று ஒத்துக் கொண்டாள் ஜானு.

நால்வரும் நடந்து சென்று கொண்டிருக்க, ஜானு என்று குரல் கேட்டு அவள் விலக, ஆனாலும் உன்னை அடிப்பேன் என்று துருவன் ஜானு தலையில் தட்டினான்.

எருமை..எருமை..ஏற்கனவே இரவு விழித்திருந்ததால் சரியான தலை வலி. நீ வேற..

வர சொல்ற? வேண்டாம்னு சொல்ற? பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு? துருவன் வினவினான்.

உனக்கு எப்படி இருக்கு? நீ ஓ.கே வா?

இப்பொழுது பரவாயில்லை.

ஜானு நின்று, துருவனை உற்று பார்த்தாள்.

என்ன? அவன் கேட்டான்.

உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்காடா?

அவன் முகம் மாற, இல்லை என்றான் அமைதியாக.

ஏன்டா பொய் சொல்ற? அண்ணாவும் புவியும் காதலிக்கிறாங்க. தெரியும்ல.

ஜானு போதும். எதுவும் சொல்லாதே என்று வருத்தமானான்.

ஜானு அவன் தோளில் கை போட்டு, விடுடா. அதான் நான் இருக்கேன்ல.

நீயா? என்று அவளை பார்த்த துருவன், உன்னை யாராவது காதலிப்பாங்களா? என்று நகைத்து விட்டு நீயும் அழகா தான் இருக்க. என்ன பேச்ச குறைச்சேனா நல்லா இருக்கும்.

பேசாம இருக்க என்னால முடியாதுடா. துரு எனக்கு ஒரு கெல்ப் பண்றியா?

என்ன?

வகுப்பு முடிந்ததும் பசங்களுடன் வாரேன். உன்னால படிக்க சொல்லி தர முடியுமா?

பசங்களுக்கா? ஓ.கே. ஆனால் எனக்கு திண்பன்டம் வாங்கித் தரணும்.

துரு..எனக்கு என்று இழுத்தாள். நின்ற துருவன் உனக்கா? என்று கையெடுத்து கும்பிட்டு என்னால முடியாது தாயே. என்னை விட்டுடு.

ப்ளீஸ்டா..நான் புவிக்கு சொல்லித் தாரேன் என்று அவள் கூற, ரோடென்றும் பாராது பயங்கரமாக சிரித்தான். அவன் கண்ணில் கண்ணீர் வரும் வரை சிரித்தான்.

இதை பார்த்து அனைவரும் எதுக்கு இவன் சிரிக்கிறான்? என்று பார்க்க ஆதேஷ் கேட்டு விட்டான். ஜானு அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

அண்ணா..இவ புவிக்கு சொல்லித் தாராலாம் என்று அவன் மேலும் சிரிக்க, வேண்டாம்டா துரு நிறுத்து என்றாள் ஜானு முறைப்புடன்.

ஜானு..நீ..நீயா? என்று மேலும் அவன் சிரிக்க, தன் புத்தகப்பையை தாரிகாவிடம் கொடுத்து விட்டு துருவிடம் வந்து அவனது தலையை பிடித்து இழுத்து சிரிக்காதேடா..என்று அடித்தாள்.

சரி விடு என்று மேலும் அவன் சிரிக்க, அவள் கோபமாக அவனை மொத்தி எடுத்தாள்.

விடுடி..விடுடி..ஜானு..விடுடி..அவன் கத்த, ஆதேஷும் துகிராவும் ஜானுவை பிடித்தனர். துகிராவால் முடியாமல் விட்டு விட ஆதேஷ் அவளை பிடித்தான். அவன் கை அவளது இடுப்பில் இருக்க, உணர்ந்த ஜானு அமைதியாக அவனை திரும்பி முறைத்து பார்த்து விட்டு அவள் இடுப்பை பார்த்தாள்.

ஆதேஷும் பார்த்து விட்டு அவளை விட, தாரிகாவிடம் பையை வாங்கிக் கொண்டு, போடா..நாயே என்று துருவனை எத்தி விட்டு நடந்தாள்.

ஜானு நில்லு என்று சிரித்துக் கொண்டு துருவன் அவளிடம் வந்து, நீ அவளுக்கு சொல்லித் தர வேண்டாம். அவளுக்கு நோட்ஸ் கொடு போதும். அவளே படித்துக் கொள்வாள்.

ஜானு திரும்பி ஆதேஷை பார்த்தாள். துருவும் அவனை பார்த்தான். ஆதேஷ் துகியிடம் பேசிக் கொண்டே வந்தான்.