Advertisement

அத்தியாயம் 20

சர்வாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருக்க, அங்குள்ள சுவர்கள் கூட கல்யாண களையில் களித்திருந்தது.. அண்ணனாக சர்வா அங்கும் இங்கும் வேலைகளைக் கவனித்தபடி நில்லாது ஓடிக் கொண்டிருந்தான்.. விசாலமும் அருணாச்சலமும் மண மேடையை விட்டு அங்குமிங்கும் அசையவேயில்லை.. தங்கள் பெண்ணின் மணக்கோலத்தை விட்டு கண்களையும் அவர்களால் அசைக்க முடியவில்லை.. 

அவர்கள் இருவருமே ஒரு விதமான நெகிழ்ச்சியில் இருக்க அவர்கள் நிலையறிந்து சர்வா இருவரையும் தொல்லை செய்யாது ஆதிராவை துணைக்கு வைத்துக் கொண்டு முடிந்த வரை தானே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டான்.. . அவளும் நல்ல மனைவியாக கணவனுக்கு தோள் கொடுத்தாள்..

அதைப் பார்த்திருந்த ராஜி, தணிகைவேல் பக்க உறவுகள் இவர்களிடம் “பரவாயில்லையே கல்யாணத்தில குழப்பம் நடந்து மாப்பிளை மாறி இருந்தாலும் ஆதி நல்லா தான் வாழுறா போல?” என்று உண்மை மகிழ்ச்சியில் பலரும் மனப் பொருமலில் சிலரும் வந்து சொல்லிச் செல்ல இவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி..

அதில் ராஜிக்கு கூட சந்தோசமே.. பிள்ளை வாழ்வு நன்றாய் இருந்தால் எந்த தாய்க்கு தான் மகிழ்ச்சியில்லை? ராஜிக்கு மகள் வாழ்வைப் பார்த்த பூரிப்பில் இவ்வளவு நாள் இருந்த வீண் வீம்பும் அற்றுப் போனதில் தன்னைக் கேளாமல் சர்வாவுக்கு திருமணம் செய்ய சம்மதம் என்று சொன்னதால் மகளிடம் இத்தனை நாள் முகம் காட்டியவர் இன்று மகளுடன் சற்று இணக்கமாகவே பேசினார்..

ஆதிக்கு அண்ணன் திருமணம் பிளஸ் தாய் தன்னுடன் பேசிய மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து கொள்ள அணிந்திருந்த பட்டு புடவை நகைகளைத் தாண்டியும் அவள் முகம் அப்படி மின்னியது. அத்தனை வேலைக்கு நடுவிலும் அவளைப் பார்க்கும் பொழுதுகளில் சர்வாவுக்கு தான் திணறிப் போனது..

இப்போதெல்லாம் அவள் அருகாமை அவனை தடுமாறச் செய்வது என்னவோ உண்மை.. அவளைக் கண்காணிக்கிறேன், வேலை சொல்கிறேன் பேர்வழியென்று வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் தன்னருகிலே அவளை வைத்திருந்து தனக்கே ஆப்பு வைத்துக் கொண்டது போலானது சர்வாவுக்கு..

எப்படித் தான் திட்டினாலும் கோபத்தில் முகம் திருப்பினாலும் தனக்கு செய்யும் எந்த வேலையையும் தவிர்க்காமல் செய்து, பேச மாட்டானா? என்று தன் முகம் பார்த்து நிற்கும் அவள் மேல் பரிவு தோன்றாவிட்டால் தான் ஆச்சர்யம்..

இவனும் மற்றது மறந்து அவள் அன்பை அனுபவிப்பான்.. அவனைப் பொறுத்த வரை சுமி விடயம் தாண்டி அவள் நல்லவளே என்பதே அவன் கருத்து.. அதுவும் அன்று அவள் வீட்டில் இவளைப் புறக்காணித்து சென்ற லாவண்யா அதன் மேலும் இவளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யாமல், ஏதோ தன் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்வதாக கேள்விப் பட்டவன், அதன் பின்னும் நிகழ்ந்த எந்த திருமண சடங்கிலும் அவள் பங்கு கொள்ளாதது என்று ஆதிக்கு சாதகமாக எல்லாம் நடந்ததில் சர்வாவுக்கும் ஆதிராவுக்கும் இடையில் எந்த இடையூறும் இருக்கவில்லை.. ஆதிரா அவளும் திருமண சடங்கில் மகிழ்வுடன் பங்கேற்க எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விட்டாள், இனி எல்லாம் சுபமே என்று நினைத்தான் அவன்.. 

இப்போது மண மேடையில் நின்று கொண்டு மாங்கல்யத்தை எடுத்து சென்று சபையினரிடம் புன்னகையோடு ஆசி வாங்கும் அவளையே சர்வா  பார்க்காது பார்த்திருக்க, பிரபா பின்னிருந்து அவன் தோளைத் தட்டினான்..

அவன் இடையூறு தந்ததில் பல்லைக் கடித்துக் கொண்டே “என்னடா?” என்று கேட்டுக் கொண்டே அவனிடம் திரும்பினான் சர்வா..

“மச்சான்! என் வார்த்தைக்கு நீ இவளோ மரியாதை குடுப்பேன்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கலடா.. நீ என் பிரென்ட்டா கிடைக்க நான் நிறையக் குடுத்து வச்சிருக்கணும்டா..” அவன் நெகிழ்ந்து போய் கண்ணில் வராத கண்ணீரை சுண்டி விட்டபடி சொல்ல,

“என்னடா உளறிட்டிருக்க?” என்றான் சர்வா கடுப்பாக..

“இல்ல, அன்னைக்கு நான் பொண்டாட்டிய நல்லா பார்த்துக்கோன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக நீ இப்பிடி விடாம பார்ப்பன்னு கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலடா.. நீ உத்துப் பார்த்ததுல என்னை மாதிரியே உன் கண்ணு கூட கலங்கிப் போச்சுப் பாரு..” என்று அவன் கண்ணையும் துடைப்பது போல் பாவ்லா பண்ணினான்.. குரலின் நெகிழ்வுக்கு மாறாக கண்ணில் அத்தனை நக்கல் பிரபாவுக்கு..

அதிசயத்திலும் அதிசயமாக சர்வாவுக்கே அவன் கேலியில் வெட்கம் வரும் போல் இருக்க அதை மறைக்க பிரபாவை முறைத்து விட்டு முன்னால் திரும்பியவனின் உதட்டில் துளிர்த்த துளி வெட்கப் புன்னகையில் பேரழகனாக தெரிந்தான்..

அவனை எட்டிப் பார்த்த பிரபா சன்னமாய் அலறினான்.. 

“சர்வா சத்தியமா உன் நல்லதுக்கு தான்டா சொன்னேன்.. இந்த மாதிரி சிரிச்சு உன் அழகைக் கூட்டிக்காத.. ஏற்கனவே இந்த உலகம் தன்னை மட்டும் தான் உத்து நோக்கணும்ன்ற எண்ணத்துல பார்லர்லாம் போய் பல கோடிங் போட்டு பக்காவா பளிச்ன்னு தன் கல்யாணத்துக்கு வந்து உக்காந்திருக்க உன் மாப்பிள்ளை, உன்னை இப்படிப் பார்த்து காண்டாகி உன்னை விட அழகா ஆயிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு மணவறைய விட்டு எந்திரிச்சு ஓடிடப் போறான்.. அதனால நீ உன் பர்ஃபாமன்ஸ தனியா தங்கச்சி கூட வச்சுக்கோ.. சரியா?..” என்றதும் சர்வா பரணியைப் பார்த்தான்..

பிரபா சொன்னது போல தான் பரணியும் பளிச்சென தனி பிரகாசத்துடன் தெரிய சர்வா அவன் எண்ணப்போக்கு புரிந்து பிரபாவைப் பார்த்து சிரித்தவன், 

“நீ சொல்றது மாதிரி நடக்கவும் வாய்ப்பிருக்கு..” என்றவன் புன்னகையின் அளவு மட்டும் குறையவில்லை..

ஆசி வாங்கிய மாங்கல்யத்துடன் மேடையேறி வந்து கொண்டிருந்த  ஆதிரா கணவன் பிரபாவிடம் ஏதோ பேசி சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே வந்தவள் அரிதாகக் காணக் கிடைக்கும் அந்த புன்னகை முகத்தை ரசிக்கும் மும்முரத்தில் படியில் கவனம் வைக்கத் தவறி விழுந்து வாரிக் கொள்ள இருந்தவளை கடைசி நொடியில் அவதானித்த சர்வா விரைந்து தாங்கிக் கொண்டான்.. ஆனால் அவள் கையில் வைத்திருந்த தாம்பூலம் தாலியுடன் கீழே விழுந்து விட்டிருந்தது.. 

” ‘அச்சசோ..’ ‘ஆ..’ ‘ஐயோ..’ ‘என்ன இப்பிடி ஆகிப் போச்சு?..’ ” போன்ற அதிர்ச்சியான பாவங்களில் வெளி வந்த வார்த்தைகள் எதுவும் சர்வா காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.. தன் கையைப் பிடித்து நடுங்கிக் கொண்டிருந்தவளை ஆசுவாசப் படுத்தும் முயற்சியில் இருந்தான் அவன்.. ஆனால் அவள் நடுங்கியதே விசாலம் இவளைப் பார்த்த பார்வையில் தான் என்று அவனுக்குத் தெரியவில்லை.. 

ராஜி மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் இந்த நிகழ்ச்சியில் பயம் பிடித்துக் கொண்டது.. இப்போது தான் அவள் வாழ்க்கை குறித்து மகிழ்ந்திருந்தோம்.. அதற்குள் திருஷ்டி பட்டதே என்று அங்கலாய்த்து கொண்டனர்..

“இறங்கிப் போகும் போது இதே படியில தான இறங்கிப் போன? மேல ஏறும் போது படியை மறந்து ஏறுனியா? பார்த்து வரமாட்ட?..” என்று சர்வா அவளை வைது கொண்டிருக்க, விசாலத்துக்கு அதைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது.. அதையே தன் சொற்களிலும் வெளிப்படுத்தியவராக,

“சர்வா, உன் தங்கச்சி கழுத்துல ஏற வேண்டிய தாலி தரையில விழுந்து கிடக்குது பாரு.. அதை எடுத்துக் குடுத்தேன்னா அவ கல்யாணத்தை முடிச்சிடலாம்.. ஏற்கனவே அபசகுனம் மாதிரி தான் எல்லாமே நடக்குது.. இதுல முகூர்த்தத்தையும் தவற விட வேண்டாம்..” என்றார் குத்தலாக..

அப்போதே அது பற்றிய சிந்தனை வந்தவனாக சர்வா கீழே பார்த்தான்.. தாம்பூலம் ஓரிடத்திலும் தேங்காயும் தாலியும் இரண்டு பிரிவாய் வெவ்வேறு இடத்திலும் விழுந்து கிடப்பதை கண்டவன் திடுக்கிட்டு சுமியை நோக்கி அவன் பார்வை செலுத்த அவள் கலங்கிய கண்களோடு இவன் முகத்தைப் பார்த்திருக்க தகப்பன் தாய் முகத்திலும் அதே கலக்கமே காணப்பட்டதை அவதானித்தவனுக்கு மனது பிசைந்தது.. அவனின் உணர்வுகளை அருகில் நின்று பார்த்திருந்த ஆதிராக்கு இப்போது உதறல் எடுத்தது.. அவன் எதுவும் சொல்லும் முன் தானே தன் பக்கம் சொல்ல வாயெடுத்தவளை முந்திக் கொண்டான் பிரபா.. 

“விசாம்மா.. நல்ல வேளை இத்தோட போச்சேன்னு நினைச்சுக்கோங்க.. அப்பிடின்னு இல்லாம ஆதி விழுந்து அடிபட்டு ஹாஸ்பிடல் போற மாதிரி எதுவும் வந்திருந்தா எவ்வளவு சங்கடம்? நீங்க வேற பொண்ணு கல்யாணம்னு சைஸ் சைஸா குத்துவிளக்க அடுக்கி வச்சிருக்கீங்க.. அப்பிடி ஒன்ன நினைக்கும் போது அதை விட இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே.. நல்லதுன்னு ஒன்னு நடக்கும் போது இப்பிடி சில தடங்கல் நம்மள மீறி நடக்கிறது எல்லா இடத்துலயும் சகஜம் தான்.. நாம நல்ல மனசோட இருந்தா எல்லாம் நல்லபடியா நடக்கும்..” என்று யாரும் மறுத்துக் கூறாத படி இப்போது நடந்ததை விட பெரிய விஷயம் ஒன்று நடக்க இருந்தது.. அது நடக்கவில்லையே என்று திருப்தி கொள்ளுங்கள் என்று அவன் பேசிய அழகில் சர்வாவே அதிர்ந்து பின் தெளிந்து ஆதியின் கரத்தைத் தட்டிக் கொடுத்தான் ஆதரவாக.. 

இல்லையென்றால் விசாலத்தின் பேச்சிலும் சுமியின் கண்ணீர் சுமந்த விழிகளிலும் அவன் வாயில் என்ன என்ன வந்து விழுந்திருக்குமோ தெரியாது.. அது தெரிந்து அவனின் முகத்தைப் பார்த்தே அவன் உணர்வுகளைப் புரிந்து தானே பிரபா அப்படிப் பேசியதே.. கணவனின் இப்போதைய செயலில் ஆதிரா நிம்மதியுற்றவளாய் பிரபாவை நன்றியாய் ஒரு பார்வை பார்த்தாள்.. அவனும் புன்னகையுடன் அவள் நன்றியை ஏற்றுக் கொண்டான்..

பிரபா பேசிய பின் அதைக் குறித்து பேச மேலே எதுவும் இல்லாது போக சர்வாவே மாங்கல்யத்தை எடுத்து தட்டில் வைத்துக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்ட ஐயரின், கெட்டி மேளம்.. கெட்டிமேளம்.. என்ற ஒலி மற்றவர்களின் முணுமுணுப்புகளை மழுக்கடிக்க, அதை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பரணி இரண்டு முடிச்சுப் போட்டு  மூன்றாம் முடிச்சைப் போட ஆதியை அழைத்தான்.. அதை அவளே எதிர்பார்க்கவில்லை.. இருந்தாலும் ஏற்கனவே நடந்த அசம்பாவிதத்தைக் கருத்தில் கொண்டு நல்ல நேரம் தாழ்த்தாமல் மூன்றாம் முடிச்சைப் போட்டு முடித்து விட்டாள்.. நேத்ராவும் அவளருகே வந்து நின்று கொண்டாள்..

இதைப் பார்த்த சர்வா,  மத்தவங்களைப் போல இல்லாம இவ மேல கொஞ்சம் பாசம் வச்சிருக்கான் தான் போல.. என்று தன் தங்கை கணவனை தவறாக எண்ணிக் கொண்டான்..

ஆனால் பரணியின்  கணக்கோ வேறு.. சுமி திருமணம் பற்றி இவனிடம் ஃபோனில் உரையாடும் போது, அண்ணன் எல்லாம் மூணாம் முடிச்சுப் போட என்னைக் கூப்பிடவே இல்ல.. அவரே தான் போட்டாரு.. நீயும் அது மாதிரியே தான் போடணும்.. தங்கச்சி பாசம்ன்னு அவளைக் கூப்பிட்ட அப்பறம் தெரியும் பார்த்துக்கோ என்று மிரட்டியிருந்தாள்..

அவள் அதை சொல்லாமல் விட்டிருந்தால் கூட தானே மூன்று முடிச்சையும் போட்டிருப்பான் அவன்.. ஆனால் என் அண்ணன் செய்யவில்லை.. ஆகவே நீயும் செய்யாதே என்றவே ஆதியை வைத்து மூன்றாம் முடிச்சுப் போட்டு தான் பரணி என்று காட்டி விட்டான்..

சுமி அவனை முறைக்கவே அதைக் கண்டு கொள்ளாமல் அய்யர் சொன்ன மிகுதி சடங்குகளை செய்ய ஆரம்பித்தான் அவன்.. திருமண நாளன்றே கரம் பிடித்தவளின் ஆசையை மதிக்காதவனைத் திருமணம் செய்து வைத்து விட்டு தான் ஆதியின் செயலில் அபசகுனம் பார்த்தார் விசாலம்.. அவனே ஒரு அபசகுனம் இதில் வெளியில் இருந்து வேறு யாரேனும் அதைக் கொண்டு வர வேண்டுமா என்ன? 

சுமியும் இவனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அதன் பின் தானும் சடங்குகளில் கலந்து கொண்டாள்..

எல்லாம் முடிந்து சர்வா வீட்டில் இருந்து சுமி புகுந்த வீடு செல்ல தயாராக அவளை வழியனுப்ப எல்லோரும் வாசலிலே நின்று கொண்டிருந்தனர்.. 

ஆதி நேத்ராவுடன் பேசிக் கொண்டே இங்கே ஒரு கண் வைத்திருந்தாள் கணவன் மேல்.. சர்வா, பிரபா அருகில் வெறுமனே நின்றிருந்தவன் முகமே களையிழந்து காணப்பட்டது போல் இருந்தது அவளுக்கு.. 

சர்வாவுக்கு சுமி மேல் எத்தனை தான் மனஸ்தாபம் இருந்தாலும் இத்தனை நாள் கூடவே பிறந்து வளர்ந்த பாசம் மாறிப் போகுமா? ஐந்து வயதில் பாப்பா வேண்டாம் என்று சொன்னவன் அதன் பின் அவள் பிறந்ததில் இருந்து அவள் வேண்டும் என்ற எதையும் வேண்டாம் என்று மறுக்காது செய்து வரும் சிறந்த அண்ணன் அவன்..

இப்போது இன்னொரு வீட்டிற்கு உரிமையாகிறாள் தங்கை என்ற நினைவில் உணர்ச்சி வசப்பட்டிருந்தான்.. இதில் விசாலம் அருணாச்சலம் நிலை சொல்லவே தேவையில்லை.. அவளை விட்டு இம்மியும் நகர மனமின்றி தவித்திருந்தனர்.. 

பெற்றவர்களை வீட்டில் விட்டு விட்டு தானும் மனைவியும் சென்று தங்கையை புகுந்த வீட்டில் விட்டு விட்டு வரலாம் என்று நினைத்திருந்த சர்வா, அவர்கள் நிலை பார்த்து தன் முடிவை மாற்றிக் கொண்டான்..

பிராபாவிடம் அம்மா அப்பாவுடன் ஆதிராவையும் அழைத்துச் செல்லுமாறும் வீட்டில் யாரேனும் இருக்க வேண்டுமென்பதால், தான் இங்கே இருந்து கொள்வதாகவும் கூறினான்.. அதன் படியே எல்லோரும் காரில் ஏறி அமர்ந்து கொள்ள,

சுமிக்கும் மனதில் எதுவோ ஒன்று பிசையத் தான் செய்தது.. தன் வீட்டினரைப் பிரிந்து இவ்வளவு நாளும் சென்னையில் இருந்தாலும் இப்போது பிரிவது அவ்வாறான ஒன்றல்லவே.. அந்த நினைப்பில் சுமிக்கும் வருத்தமிருக்க நேரே தமையனிடம் வந்தவள், 

“அண்ணா..” என்று குரல் கமற அழைக்க சர்வா என்னவென்று அவளைப் பார்த்திருந்தான்.. 

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா.. உங்க கிட்ட சொல்லாம எல்லாம் மறைச்சது தப்பு தான்.. ஏதோ புத்தி தவறி நடந்துக்கிட்டேன்.. அதுக்காக என்னை வெறுத்திட மட்டும் வேணாண்ணா..” என்று கண்ணீர் வழியக் கரகரத்த குரலில் உணர்ந்து   கூறினாள்..

அதில் சர்வாவுக்கு அவள் மேல் இருந்த சிறு சுணக்கமும் நீங்க அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன், 

“பெரிய பேச்செல்லாம் பேசாத சுமி.. நான் எப்போ உன்ன வெறுக்கிறேன்னு சொன்னேன்? எப்போவும் போல தான் நான் இருக்கேன்.. இடையில உன் மேல சின்ன வருத்தம் தான்.. அதுக்கு இப்பிடியா பேசுவ?” என்று நெகிழ்ந்த குரலில் அவளை அதட்டியவன்,

“உனக்கு என்னனாலும் எப்போவும் போல அண்ணனுக்கு ஃபோன் பண்ணனும் சரியா? இப்போ சந்தோசமா கிளம்பு..” என்று கார்க்கதவைத் திறந்து அவளை காரில் அமர வைத்தவன், கார் கிளம்பிய பின் பிரபாவிடம பொறுப்பை ஒப்படைத்து விட்டு அதற்கு மேல் தாங்காது உள்ளே சென்றவன் மிகுதி இருந்த உறவுகளை ஓய்வெடுக்குமாறு கூறி விட்டு மேலே தன்னறை சென்று விட்டான்..

பிரபா ஆதியிடம் வந்து சர்வா அவளையும் உடன் அழைத்துப் போகச் சொன்னதாக சொல்ல சரியென்றவள் கால்கள் மாத்திரம் நேத்ராவுடன் காரை நோக்கி நகர, கண்கள் மட்டும் திரும்பித் திரும்பி வீட்டை பார்த்தபடியே இருந்தது.. 

அவளைக் கண்ட நேத்ரா, 

“என்ன ஆதி தேடுற?” என்றாள் அவளைத் தெரிந்து கொண்டே..

“ம்ம்.. அண்ணி அங்க நான் வந்து பண்ண எதுவும் இல்லன்னா நான் இங்கவே இருந்துக்கவா, வீட்டைப் பார்த்துக்கிட்டு?” என்று தயங்கியபடி கேட்டாள்..

அவள் கேள்வியே ஆமென்று சொல்லி விடுங்களேன் என்பது போல் தான் வர, நேத்ரா அவளிடம் விளையாடிப் பார்க்க எண்ணி,

“இங்க இருந்து வெறும் வீட்டைப் பார்த்துக்கிறதுக்கு அங்க வந்தா நம்ம சொந்தங்கள் எல்லாரையும் பார்த்துக்கலாமே..” என்றவும் 

அவள் முகத்தைப் பாவமாய் வைத்து  நேத்ராவைப் பார்த்தாள்..

“சத்தியமா இதுக்கு மேல முடியாதுடி ஆதி.. நான் சத்தமா சிரிக்கிறதுக்குள்ள உன் புருஷன்கிட்ட ஓடிப் போயிடு.. ஓடு..” என விளையாட்டாய் விரட்டினாள்..

அண்ணி தன்னைப் புரிந்து கொண்டதில் முகம் மலர்ந்தவள், விட்டால் போதும் என்று ஓடியிருந்தாள் வீட்டுக்குள்.. 

அவள் செல்வதைப் பார்த்த பிரபா நேத்ராவைக் கேள்வியாகப் பார்க்க , “அவளுக்கு வீட்டைப் பார்த்துக்கணுமாம் தம்பி ,நீங்க வண்டிய எடுங்க நாங்க போகலாம்..” என்றாள் சிரித்துக் கொண்டே..

அவனும் புரிந்து கொண்டவன், சர்வாவின் தாய் தந்தை மற்றும் அன்பு நேத்ரா இருந்த வண்டியைக் கிளப்பினான்.. கயல் முன்னாடியே பார்வதியுடன் சென்றிருந்தாள்..

உள்ளே வந்த ஆதிரா கோமதியின் விசாரணைகளுக்கு பதில் அளித்துக் கொண்டே கணவனுக்கு டீ தயாரித்தவள், கோமதியிடம் கீழே பார்த்துக் கொள்ள கூறி விட்டு ,  மேலே சென்றாள்..

சுமியின் பேச்சில் அவள் திருமணம் செய்து இன்னொரு வீட்டுக்கு போகப் போகிறாள் என்று தெரிந்தும் அவளிடம் இத்தனை நாள் பேசாமல் இருந்து அவளை வருத்தியிருக்க வேண்டாமோ என்று தனக்குள் வருந்தியபடியே கட்டிலில் மல்லாந்து கண்களைக் கையால் மூடியபடி படுத்திருந்தான் சர்வா..

ஆதிரா உள்ளே வந்தவள், 

“என்னங்க டீ..” என்று அழைத்தது தான் தெரியும்..

அடுத்த நொடி டீ நிலத்தில் சிதறியிருக்க, அவளை இழுத்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் மடியில் தலை வைத்து அவள் வயிற்றோடு தன் முகத்தை அழுத்திக் கொண்டான்..

ஆதிராவுக்கு அவன் செய்கையை உணரவே ஒரு நிமிடம் தேவைப்பட்டது..

சர்வாவுக்கு இருந்த மனநிலையில் ஆதியை அனுப்பியிருக்காது தன்னுடன் நிறுத்தியிருக்கலாமோ என்று ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தவன் இவள் அரவம் உணரவும் ஏற்பட்ட மகிழ்ச்சியில், எதுவும் யோசிக்காது அதை செயலில் காட்டியிருந்தான்.. அவன் நல்ல நேரம் டீ அவன் மேல் அல்லாது நிலத்தில் சிந்தியிருந்தது..

ஆதிராக்கு தான் புதிதான அவன் செய்கையில் கூச்சமாக இருந்தாலும் அவனை விலக்கவும் மன வரவில்லை..  ஆதலால் தயங்கித் தயங்கித் தன் கையால் அவன் முடியை கோதிக் கொடுக்க ஆரம்பித்தாள்..

அந்த சுகத்தில் காலை முழுதும் இருந்த அயர்வு எல்லாம் சூழ்ந்து கொள்ள அவள் மடியிலே உறங்கிப் போனான் சர்வா.. அவளுக்கும் அசதியாக இருந்ததில் அப்படியே கட்டிலில் சாய்ந்து உறங்கிப்போய் விட்டாள்..

தொடரும்….

Advertisement