Advertisement

அத்தியாயம் 19

ஆதியின் வீட்டில் மாப்பிள்ளைக்கு தடல் புடலான மரியாதை நடந்து கொண்டிருந்தது.. சர்வா வரும் முன்னே அன்புக்கு தகவல் சொல்லியதால், நேத்ரா குறுகிய நேரத்தில் சிறிய விருந்தையே தயார் செய்து முடித்திருந்தாள்..

அவர்கள் வந்த நேரமும் மதிய உணவுக்கு சரியான நேரமாக இருக்கவே, அவர்கள் சிறிது தங்களைத் தூய்மைப் படுத்தி வர நேரே சாப்பிட அழைத்து சென்று விட்டிருந்தனர்.. 

இதில் கயல் தான் ஆதியை விடாமல் அவள் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.. இன்று காலையில் சற்று உடல் சுடவே நேத்ரா கயலைப் பள்ளிக்கு அனுப்பியிருக்கவில்லை.. நேத்ரா தயாரித்துக் கொடுத்த கசாயமும் ஓய்வும் அவள் உடலை தெம்பாக்கி இருக்க அத்தையை விடாது 

தொற்றிக் கொண்டு கேள்விகளைக் கணையாய்த் தொடுத்தாள்..

“நீங்க இனி இங்க வரமாட்டீங்களா த்தை?”

“இப்போ வந்திருக்கேனே கயல்.. இதே மாதிரி இனியும் அத்தை இங்க வருவேனே.. அதுவும் கயலைப் பார்க்க மட்டும் தான்..” என குழந்தைக்கு சந்தோஷம் தரும் விதமாய் சொல்ல அவள் ஏற்றுக் கொள்ளவில்லை..

“அதில்ல.. இங்கேயே என் கூட இனி இருக்க மாட்டீங்களா? நீங்க போனா என்கூட விளையாட, எனக்கு ஹோம் ஒர்க் பண்ணித் தர யாரும் இல்லையே? நான் என்ன பண்ணுவேன்?” அவள் உதடு பிதுக்கி அழுவது போல் கேட்க, ஆதிக்கும் அவள் ஏக்கத்தில் அழுகை வரவா? என்று இருந்தது.. அதனால் கயலுக்கு பதில் சொல்ல வியலாது அவள் தவிக்க இருவர் நிலை கண்ட அன்புக்கு தாங்கவில்லை..

மகளை தன்னிடம் தூக்கிக் கொண்டவன், 

“கயல் மா இனி உங்க கூட விளையாடணும்ன்னா அம்மாட்ட சொல்லி அப்பாக்கு ஒரு ஃபோன் போடு.. இருக்க வேலை எல்லாத்தையும் விட்டுட்டு அப்பா உடனே ஓடி வந்துடுறேன்.. அப்படியே உன்னை அத்தை வீட்டுக்கு கூட்டிப் போய் அப்பா விட்டுடுவேனாம்.. நீங்களும் அத்தையும் ரொம்ப நேரம்  விளையாடலாமாம்.. இப்போ என் செல்லம் சிரிங்க பார்க்கலாம்?.. என அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட தந்தை வழி சொன்னதிலும் அவன் கிச்சு மூட்டியதிலும் “அப்பா..” என்று குலுங்கி குலுங்கி சிரித்தாள் குழந்தை.. அதன் பின்னே ஆதியும் மலர்ந்து சிரித்தாள்.. 

சர்வா அன்பு கயல் இருவரையும் தான் கண்ணெடுக்காது பார்த்திருந்தாதான்.. அத்தனை கவிதையாக இருந்தது அந்த தந்தை மகள் அன்பைப் பார்க்கவே..

மகள் முகம் சிறிது சுணங்கவே தாங்காது தாங்கிக் கொண்டதில் தெரிந்த தந்தை பாசம் இவனை ஈர்த்ததில் அவன் பார்வை ஆதிரவைத் தழுவி மீண்டது.. அவனுக்குள்ளும் தந்தையாகும் ஆசை வந்ததோ? 

அவள் லாவண்யாவை அண்ணி என்று அழைத்ததில் இதுவரை அவள் மேல் மூண்டிருந்த சினம் தற்போது சிறிதே தணிந்தது போல் ஒரு தோற்றம்.. அதனால் ஒரு வேளை குழந்தை வந்தால் எல்லாம் சரியாகப் போகுமோ என்ற சிந்தனை வந்ததுமே , தலையை உதறி அதைத் தடுத்திருந்தான்.. இது என்ன வரமாய் சுமக்க வேண்டிய மழலை செல்வத்தை தம் சிக்கல் தீர்க்கும் வழியாக எண்ணுகிறேனே என்று தன்னையே மனதில் திட்டிக் கொண்டான்..

அவன் சிந்தனை எங்கோ இருக்க நேத்ரா தான் அவனைப் பேச்சில் இழுத்தாள்.. 

“அப்டி அப்பா வர மாட்டேன்னு சொன்னா, நீ அத்தையோட மாமாகிட்ட கேட்டா அத்தைய இங்கேயே கூட்டி வந்து விட்டுடுவாரு.. நீ வேணாம் கேட்டுப் பாரு அவருக்கிட்ட?” என்றதும்

நேத்ராவின் பேச்சில் கவனம் கலைந்த சர்வா கயலை நோக்கிப் புன்னகைத்தான்.. அப்போது தான் ஆதிராக்கு மூச்சு சீரானது.. கணவன் முகம் காரில் இருந்ததுக்கு மாறாக வீட்டுக்குள் வந்ததிலிருந்து வேறாக மாறியிருக்கவே என்றும் போல் இங்கும் அந்நியன் அவதாரம் எடுத்து விடுவானோ என்று பயந்து தான் போனாள்..

நேத்ராவின் பதிலில் சர்வாவைப் பார்த்த கயல் அவன் தன்னைப் பார்த்து சிரிக்கவே அதில் தைரியம் வரப்பெற்று, “நீங்க சும்மா பொய் சொல்றீங்கம்மா.. அவங்க அத்தைய விட மாட்டாங்க..” என்றாள்..

அன்பு எங்கே சர்வா கோபித்து விடுவானோ என்று பதறி 

“கயல் அப்பிடிலாம் சொல்லக் கூடாது.. மாமாகிட்ட சாரி கேளு..” என்றான்..  

ஆதிக்கும் அதுவே பயம்.. அவளும் அவனைப் பார்த்திருக்க இவர்கள் பயம் அநாவசியம் என்பது போல், புன்னகையுடன் கயலை நோக்கி தன்னிரு கரங்களை நீட்டியிருந்தான் சர்வா..

அவள் தந்தையைப் பார்க்க ,

“போடா மாமா தான்..” என்று சொல்லியிருக்கவே அசைந்தாள்.. அவளின் அந்த பழக்கம் சர்வாவை இன்னுமே ஈர்த்தது.. புத்திசாலிக் குழந்தை என்று மனதில் மெச்சிக் கொண்டான்..

அவன் அருகே வந்தவளை தன் மடியில் தூக்கி அமர வைத்தவன், அவளிடம் கனிந்த குரலில் பேசினான்..

“உங்க பேரென்ன குட்டி?” என்றான் தெரிந்து கொண்டே..

“கயல்விழி அன்பரசன்..” தன் பெயர் கேட்டதற்கு தந்தை பெயரையும் அவள் இணைத்து சொல்லியிருந்தாள்.. அதில் தந்தை மகள் இருவருக்கும் அத்தனை பெருமிதம்.. அவர்கள் கண்களில் அதைக் கண்ணுற்ற சர்வாவுக்கும் அது ரசிக்கும்படி தான் இருந்தது..

ஆனால் நேத்ரா, “எல்லாம் அவ அத்தைகிட்ட பழகின பழக்கம்.. யார் பேர் கேட்டாலும் அப்பா பேரையும் சேர்த்து சொல்றது..” என நொடித்துக் கொண்டாள்..

நேத்ராவின் கூற்றில் அப்படியா? என சர்வா ஆதியைப் பார்த்தான்.. அவள் இவனை ஏதோ அதிசயப் பிறவி போல் பார்த்ததில் இவன் என்ன? என்று ஒற்றைப் புருவமுயர்த்தி வினவ, “ஒன்னும் இல்லை..” என்று தலையசைத்து தலை குனிந்து கொண்டாள்.. அவள் பாவனைகளில் சர்வா உதட்டோரம் சிரித்துக் கொண்டான்..

இப்போது மீண்டும் கயல் புறம் கவனத்தை வைத்த சர்வா, கயலின் கையைப் பற்றிக் குலுக்கிக் கொண்டே, “குட் மிஸ் கயல்விழி அன்பரசன்.. இப்பிடி தான் புதுசா பார்க்கிற யார் கூடவும் அப்பா அம்மா சொல்லாம பேசக் கூடாது.. அவங்க கூப்டா போகக் கூடாது..” என்று பாராட்டினான்..

அவன் பாராட்டில் முகம் மலர்ந்து போன கயல் அவனைப் பார்த்து அழகாக சிரித்தாள்.. அந்த மயக்கும் சிரிப்பில் தொலைந்து போனவன், “அம்மா பொய்யெல்லாம் சொல்லல.. அத்தை கூட விளையாடணும்ன்னா அத்தையும் இங்க வரலாம்.. நீங்களும் அங்க அத்தை வீட்டுக்கு வரலாம்.. நானே கூட வந்து கூட்டிட்டுப் போவேன்..” என்றான்..

என் வீடு என்று கூறாது அத்தை வீடு என்று சொன்னதில் அங்குள்ளவர்கள் மனதில் சர்வாவின் பிம்பம் உயர்ந்து போனது.. 

“அப்போ ஏன் அன்னைக்கு மட்டும் நான் அழ அழ என் அத்தையக் கூட்டிப் போனீங்க?” அவனிடம் குறை கண்டு விட்டது போல் கேட்டாள்..

இங்கிருந்து ஆதிராவும் தானும் கிளம்பிய முதல் நாளை சொல்கிறாளென அவனுக்குப் புரிந்தது..

சிரித்துக் கொண்டவன்,

“உங்க அத்தை என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கல.. அப்போ அங்க தான இருக்கணும்.. அவங்களை அங்க கூட்டிப் போலன்னா எங்கம்மா என்னை அடிப்பாங்களே.. அதான் கூட்டிப் போனேன்..” அவளுக்கு ஏற்றவாறு கதை புனைந்தான்..

“இவளோ பெருசு நீங்க, உங்களை அடிப்பங்களா யாராச்சும்? நம்ப மாட்டாத ஆச்சர்யத்தில் அவள் விழிகள் அப்படி விரிந்து அதில் அவள் கேள்வியும் தொக்கி நின்றது..

அப்போதே அதைக் கவனித்தான் சர்வா.. கயல் அப்படியே ஆதிராவின் ஜாடை.. தன்னிடம் சில நேரம் புரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் ஆதிராவை நினைத்துப் பார்த்தவனுக்கு இப்போதிருக்கும் கயலுக்கும் அவளுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.. அதில் ஆதிராவைப் பார்த்துக் கொண்டே இருந்தவனை கயல் உலுக்கி,

“சொல்லுங்க மாமா பெருசா இருக்கவங்கள யாரும் அடிப்பாங்களா?” 

“ம்ம்.. ஆமா.. தப்பு யார் பண்ணாலும் தப்பு தானே.. அப்போ தண்டனையும் கிடைக்கணும் தானே..” என்றவனுக்கு இப்போது மறந்த நினைவுகள் எல்லாம் திரும்பி வரவே ,அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது நேத்ராவிடம்,

“அம்மா வர வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தம்ன்னு ஜவுளி எடுத்துக்கலாமான்னு கேட்டு வர சொன்னாங்க சிஸ்டர்..” என கேட்டு நின்றான்..

இதுவரை அமைதியாக இவர்களை வேடிக்கை பார்த்திருந்த தணிகை வேல் திருமணப் பேச்சு வரவும் பெரிய மனிதராய் பேச்சைத் தன் கையில் எடுத்தார்..

“அதான் மாப்பிள்ளை.. நாங்களும் தான் பார்த்தோம்.. இன்னைக்கு உங்க வீட்ல பேசலாம்ன்னு இருந்தோம்.. அதுக்குள்ள நீங்களே வரீங்கன்னதும் நேரா பேசலாம்ன்னு இருந்திட்டோம்.. அன்னைக்கே ஜவுளி எடுக்கப் போயிடலாம்.. தனித்தனியா எடுக்க நேரமும் இல்லயே.. அதனால அன்னைக்கே எல்லாருக்கும் சேர்த்து எடுத்திடலாம்.. டைம் என்ன ஏதுன்னு நீங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லுங்க..”

ஆதிரா வீட்டில் பெரும்பாலான பேச்சு வார்த்தை எல்லாமே சர்வாவுடனும் அவன் தந்தையுடனும் மட்டும் தான்.. விசாலம் இவர்களுக்குப் பேச சந்தர்ப்பம் தருவதேயில்லை.. அதனால் இவர்களும் புரிந்து அவருடன் ஒரு இடைவெளியை பேணிக் கொண்டனர்..

சர்வா சரி எனத் தலையசைத்தவன், டைம் ஆச்சு கிளம்பணும் என்றான் கயலைத் தூக்கி அன்புவின் மடியில் வைத்துக் கொண்டே இயல்பாய்..

அவனுக்கும் வேலைகள் அதிகம் இருக்கும் என்று தெரிந்தவர்கள் ஆதலால் எதுவும் கூறாது அவர்களை வழியனுப்பி வைத்தனர்.. கயலுமே இம்முறை மகிழ்வாய் வழியனுப்பி வைத்தாள்.. புது மாமா கிடைத்த மகிழ்வில்.. சர்வாவும் மீண்டும் ஒரு முறை அவளைத் தூக்கி உச்சி முகர்ந்து விட்டு அவளை இறக்கி விட்டு விட்டு ஆதிராவுடன் புறப்பட்டான்..

செல்லும் வழியெங்கும் ஒரு இறுக்கம் சூழ்ந்த அமைதி அந்த வண்டியினுள் சூழ்ந்து கொண்டது.. ஆதிராவுக்கு தான் இந்த திடீர் இணக்கமும் மறு நொடி பிணக்கமும் சற்றே அழுத்தத்தை தோற்றுவித்தது மனதில்..

அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டவன் அமைதியாக கிளம்பியும் சென்றிருக்க, உள்ளே வந்தவளை விசாலம் பிடித்துக் கொண்டார்..

“உன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்க நீ? நானும் எதுவும் பேசக் கூடாதுன்னு பார்த்தா, வர வர உன் ஆட்டம் ரொம்ப ஓவரா தான் இருக்கு..” முதலுரை முடிவுரை ஏதுமின்றி அவர் ஆரம்பிக்க ஆதிரா

இவ்வளவு நாள் கழித்து இன்று இப்படி நேரடியாக பேசும் மாமியாரின் செயலில் வியந்தாலும் அவரின் கோபம் ஏனென்று புரியாமல் குழம்பித் தான் போனாள்..

“என்னத்தை ஆச்சு? நான் என்ன பண்ணேன்?” என புரியாமல் அவள் கேட்கவும்

“ஏன் உனக்குத் தெரியாது? இன்னைக்கு உங்கம்மா வீட்டுக்கு போறோம்னு சர்வா தான் என்னைக் கூப்பிட்டு சொல்றான்.. ஏன் மகாராணி வந்து சொல்ல மாட்டீங்களோ? இல்ல சொன்னா தான் உங்க கிரீடத்துல தூசு படிஞ்சிடுமோ?” என இடக்காகக் கேட்டார்..

இன்று அங்கு செல்வோம் என்று அவளுக்கே தெரியாத போது எப்படி இவரிடம் சொல்வது என்று மனதில் ஓடினாலும் அவரிடமே ஆனாலும் கணவனை விட்டுக் கொடுக்க மனமில்லாது, 

“சாரி அத்தை.. இனி இப்படி பண்ண மாட்டேன்..” என்று தன்னை அப்படியே ஒப்புக் கொடுத்திருந்தாள்.. அதில் விசாலம் ஆச்சர்யமாய் அவளை மேலும் கீழும் பார்த்தவர், அவளிடம் எதுவும் பேசாமல் தனக்குள் ஏதோ சிந்தித்தபடி தன்னறைக்குள் புகுந்திருந்தார்..

இவள் கொஞ்சம் தனக்காய் வாதாடியிருந்தால் கூட விசாலம் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பார்.. இவளானால் அமைதியாக மன்னிப்பு கேட்டு சும்மாவே ஆடும் அவர் காலுக்கு ஒரு டஜன் சலங்கையை கட்டி விட்டிருருந்தாள்..

இனி அவள் பிடி விசாலம் கையில்..

தொடரும்..‌‌.‌.

Advertisement