Advertisement

அத்தியாயம் 16

சர்வாவின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆதிரா.. 

“உன்னை இருட்டின அப்பறம்  இங்க வரக் கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?”

“இல்லை அது.. லாவண்யா.. அண்ணி..” என்று என்ன சொல்வதென தெரியாது அவள் திணற,

“மூச்.. அங்க உங்க அண்ணா கிளம்பறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. அவங்க சீக்கிரம் வீடு போய் சேர வேண்டாமா? போ.. போய் அவங்களை அனுப்பி வை..”

“ம்ம்..” என்றவள் லாவண்யாவையும் அழைத்துக் கொண்டு போனாள்..

செல்லும் வழியிலேயே லாவண்யா, “என்னடி இப்டி அதட்டுறாரு உன்னைய? இப்டி தான் எப்போவுமே பேசுவாரா? உனக்கு தான் லைட்டா குரல் உசந்தாலே அலர்ஜி ஆச்சே..” என மெதுவான குரலில் கேட்டாள்.. எங்கே சர்வாவுக்கு கேட்டு விடுமோவென்று.. 

“அப்பிடில்லாம் இல்ல அண்ணி.. ஏதாவது தப்பு பண்ணா இப்பிடி  தான் சொல்லத் தெரியும் அவங்களுக்கு.. மற்றபடி எல்லாம் நார்மலா தான் பேசுவாரு..” கணவனை அவள் குறை போல் சொன்னதும் வேகமாய் அவளை இடை‌ மறித்தாள் பெண்.‌.

“ப்பா.. பேச்சுல என்னா ஒரு வேகம்? புருஷனை தப்பா சொன்னதும் பொங்கிட்டு வர? நீயும் சராசரியான இல்லத்து அரிசியா ஊறிப் போயிட்டியே ஆதி?” லாவண்யா ஏகத்துக்கும் அவளை நக்கல் பண்ணினாள். 

“அண்ணி நீங்க கேட்டிங்கன்னு தான் சொன்னேன்.. அதோட நான் சொன்னதும் உண்மை தான்..” என்று‌ சிணுங்கியவளைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது..

“சரி.. சரி.. உன் அவரு மேல நான் எந்தத் தவறும் சொல்லல.. இப்போ வா அங்க நம்மள தேடுவாங்க..” என்று அழைத்து சென்றாள்..

அவர்கள் சென்ற பின்னும் சர்வா அங்கேயே தான் நின்று கொண்டிருந்தான்.. தனக்கு வந்த கோபத்தை அடக்க முயன்று தன் பின்னந் தலையைக் கோதி விட்டுக் கொண்டே பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து விட்டான்..

அவனுக்கு இவளை அதான் ஆதிராவை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்று தான் தெரியவில்லை.. தன்னிடம் காட்டும் அப்பாவி முகம் இவளதா? இல்லை தனியே காட்டும் தந்திர முகம் தான் இவளுக்கு உண்மையானதா? என்று முழுதாய் அவளை அறிய முடியவில்லை.. சுமியைப் பரணிக்கு உறுதி செய்து பூ முடித்த பின்னும் லாவண்யாவை அண்ணி என்று அழைத்தது, அவள் பேச்சு எல்லாம் சேர்ந்து அவள் மேல் மீண்டும் ஒரு மாயத் தோற்றத்தை உண்டு பண்ணி விட்டது சர்வாவுக்கு..

தனக்குள்ளே சிறிது நேரம் போராடியவன் சிறிது நேரத்தில் நிதானத்துக்கு வந்து வீட்டின் முன் பகுதிக்கு வந்தான்.. அவர்களை வழியனுப்பி வைக்க என..

அவர்களும் இவனுக்காகவே காத்திருந்தது போல் இவனிடம் சொல்லி விட்டுக் கிளம்ப, ஆதியும் கணவனின் அருகே நின்று அவர்களுக்கு கையசைத்து விடை தந்தாள்.. 

“அந்தக் காட்சியைக் காரில் இருந்து கண்ட நேத்ரா பின் நோக்கிப் பார்த்துக் கொண்டே, நாம பயந்த மாதிரி இல்லாம ஆதி இங்க நல்லாவே செட் ஆயிட்டா இல்ல..” என்று கேட்க,

“ஆமாக்கா, அந்த அண்ணன் எங்களைக் கூப்பிட வந்தப்போ இங்க ஏன் இருக்கன்னு  ஆதியை அதட்டினாரு.. அதுக்கு இவரு இப்பிடி தான் எப்பவுமான்னு கேட்டதுக்கு சண்டைக்கு வராத குறையா புருஷனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரா.. ஆனா ஒன்னுக்கா.. அந்தக் கல்யாணம் நின்னு இப்டி ஆனது கூட நல்லது தான்.. இல்ல?”

அவள் சொன்னதில் அனைவருக்கும் உடன்பாடே.. அந்த திருமணம் பேசியதில் இருந்து எதையோ இழந்த மாதிரி இருந்த ஆதி, அன்று தங்கள் வீட்டிலிருந்து சர்வாவுடன் கிளம்பும் போது தங்களைப் பிரியும் சோகம் தவிர அவனுடன் செல்வதில், எந்த சங்கடத்தையும் அவள் முகத்தில் காண முடியவில்லையே.. அன்று அவர்கள் அடைந்த நிம்மதிக்கு அளவு கணக்கே இல்லையே..

அவர்களை அனுப்பிவிட்டு எங்கே கணவன் மீண்டும் எதுவும் தொடங்கிடுவானோ என்று பயந்த ஆதிரா சமையலறை சென்று கோமதியுடன் இணைந்து மிகுதி வேலைகளை முடிக்க உதவிக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம் மேலே அறையில் நின்று சர்வா இவளைக் கத்தி அழைத்தான்.. அவன் சத்தத்தில் உண்டான பதட்டத்தில் கையில் வைத்திருந்த பாத்திரத்தை கீழேயே போட்டு விட்டுருந்தாள் ஆதிரா.. 

அதில் சிரித்த கோமதி, தான் மிகுதியைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி  அவளைப் போகச் சொன்னார்..

அவளும் எல்லாப் பக்கமும் தலையை உருட்டி விட்டு ஓடிப் போய் விட்டாள்.. இப்போது என்னவோ என்று ஆயாசமாக வந்தது அவளுக்கு.. விசாலம் இது எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்தார்..

மேலே சர்வாவோ ஒரு கட்டு ஃபைல்களை எடுத்து அங்கிருந்த மேஜை மேல் பரப்பி விட்டிருந்தான்..

ஆதிரா அதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவள் எதுவும் பேசாமல் அவனருகில் போய் நின்று கொண்டாள்..  

இதெல்லாம் நம்ம கிழக்க இருக்க மாந்தோப்போட இத்தனை வருஷ வரவு செலவு கணக்கு எல்லாம் இருக்க பைல்ஸ்.. இதெல்லாத்தையும் நீ ஒரு முறை நல்லா ஸ்டடி பண்ணி எல்லாத்தையும் தர வாரியா பிரிச்சு தனித்தனியா ஒரு ஃபைல்ன்னு இன்னும் இதை எவ்ளோ உன்னால ஒரு பராப்பர் டாகுமெண்ட் ஆக்க முடியுமோ பண்ணி சிஸ்டம்ல அப்டேட் பண்ணி வை..

அவன் அடுக்கிய வேலையில் இவளுக்கு தான் தலை சுத்திப் போனது..

“இவ்ளோவுமா?..”

“ம்ம்.. இவ்ளோவும் தான் அந்த‌ மாந்தோப்போடது.. நீ இதை முடிச்சன்னா, ஒவ்வொண்ணா தந்திட்டே இருப்பேன்.. நீயும் முடிச்சுக் கொடுக்கணும்..” இதுவே என் கட்டளை‌.. என் கட்டளையே சாசனம் என்பது போல் கண்டிப்பாய் கூறி நின்றான்.. 

அவனைப் பாவமாக பார்த்தவள், “ஆனா இப்போ கல்யாண வேலை எல்லாம் இருக்குமே.. அது முடிஞ்ச அப்புறம் வேணா..” என்று ஆரம்பிக்க, அவளை இடை மறித்தவன்,

“கல்யாண வேலைலாம் பார்க்க இங்கயும் ஆளுங்க  நிறையவே இருக்காங்க.. உங்க அம்மா வீட்லயும் ஆளுங்க இருக்காங்க.. நீ போய் தான் எதுவும் பண்ணனும்னு இல்லை.. நீ தேவையில்லாத எந்த வேலையும் பார்க்காம உன் படிப்பு நேரம் முடிய மத்த நேரமெல்லாம் நான் கொடுத்த வேலையை மட்டும் பாரு.. உன் மூளையை வேற எதுக்கும் பயன் படுத்தாம இருந்தேன்னாலே இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கும்..” 

அவள் கல்யாண வேலை என்றதும் உண்டான இறுக்கத்தோடே அவளிடம் கடுகடுத்தான்..

அவன் குரலிலும் அது சுமந்து வந்த கட்டளையிலும் அகமும் முகமும் சுணங்கியவள் , “ம்ம்..” என்று தலையாட்டிக் கொண்டே, அந்த மேஜை முன்னே இருந்த சேரில் அமர்ந்து கொண்டு ஃபைலை கையில் எடுத்தவள் அதில் மூழ்கிப் போனாள்..

எதுவும் சந்தேகம் இருந்தாக் கேளு.. ஒவ்வொரு ஃபைலும் முடிஞ்சதும் நான் செக் பண்ணுவேன்.. உன் ஸ்டீஸையும் மேனேஜ் பண்ணி இதையும் பார்த்துக்கணும்.. புரிஞ்சுதா?..” 

அவனைத் திரும்பியும் பார்க்காமல் 

“ம்ம்..” என்றவள் தலை ஃபைலுக்குள் புதைந்து போவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

“ஆதிரா….” சர்வாவின் கடித்த பற்களிடை அவள் பெயர் கடித்து துப்பப்பட்டது..

அதில் படாரென அவன் புறம் திரும்பியவள், ஆமாம் என்று அவனைப் பார்த்துக் கொண்டே கூறியிருந்தாள்.. அதன் பின்னே அந்த இடத்தை விட்டு அகன்றவன், அவள் போனை தன்னுடனே எடுத்து சென்று விட்டான்.. அதை அவள் கவனிக்கவில்லை..

ஆதிராவுக்கு அவனுக்கு உதவுவது குறித்து எல்லாம் ஒன்றுமில்லை.. அவன் பாதி என்றான பின் அவனது பாதி பொறுப்புகளும் அவனது தானே.. ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்கையில் இரு வீட்டிலுமே ஏக வேலைகள் இருக்க, இப்போது அவசரமே இல்லாத இந்த வேலையை தன் தலையில் கட்டிவிட்டு, தாய் வீட்டிற்கும் செல்லக் கூடாது என்று சொல்வதைத் தான் தாங்க முடியவில்லை.. ஒரு மாதிரி அழுகை வந்தது அவளுக்கு.. இருந்தும் அடக்கிக் கொண்டாள்.. அதற்கும் திட்டு வாங்குவான் ஏனென்று.. தன் வேகத்தை எல்லாம் அவன் கொடுத்த வேலையில் காட்டினாள்.. கூடவே காலை தான் எல்லாத்தையும் நல்லா பார்த்துக்கோ என்று சொன்னவன், இப்போது நீ எதுவும் செய்ய வேண்டாம் என்கிறான்.. இவனை எந்தக்  கணக்கில் சேர்ப்பது என்ற யோசனையும் அதே வேகத்தில் அவள் மண்டைக்குள் ஓடியது.. 

சர்வா பிரபாவுக்கு ஃபோன் செய்து கொண்டிருந்தான்.. அவன் எடுக்காதிருக்கவே, இன்று ஊரில் விசேஷம்  எதுவும் இல்லையே.. இந்த ஓசிக் குடி எங்க போனான்? என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பிரபா இவனை அழைத்திருந்தான்..

இவன் அழைப்பை ஏற்கவே, 

“சொல்லு சர்வா,  மெஷின் சவுண்ட்ல கூப்பிட்டது கேட்கல..”

லாவண்யா பற்றி அவனிடம் விசாரிக்கவென ஃபோன் செய்திருந்தவனுக்கு இப்போது மனம் முரண்டியது..  என்ன தான் பிரபா நம்பிக்கைக்குரியவனாக இருந்தாலும் இன்னும் திருமணம் முடியாத பெண்ணைப் பற்றி அவனிடம் என்றில்லை யாரிடமும் விசாரிப்பது என்பதை ஒரு பெண்ணுடன் கூடப் பிறந்த சர்வாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதனால் 

“சுமி கல்யாணம் நிச்சயமாயிடுச்சு பிரபா.. அடுத்த மாசம் முதல் முகூர்த்தத்துலேயே கல்யாணம்..” என்று சுபச் செய்தியை சொன்னான்..

“சூப்பர் மச்சான்.. சுமிக்கு நான் வாழ்த்து சொன்னதா சொல்லிடு.. அப்போ எப்போ மச்சான் நாம பார்ட்டி வச்சுக்கலாம்?”

“நாளைக்கு..”

“நாளைக்கேவா? சூப்பர் சூப்பர்.. துரியோதனனுக்கு கர்ணன் கிடைச்சா மாதிரி பல யுகம் கடந்து நீ எனக்கு கிடச்சிருக்க மச்சான்..”

“அதான்டா சொல்ல வரேன்.. அம்மா நாளைக்கு துர்க்கை அம்மன் கோயில்ல அபிஷேகத்துக்கு சொல்லிருக்காங்க.. வந்து நான் கிடைச்சதுக்கு அம்மனுக்கும் என்னைப் பெத்ததுக்காக எங்க அம்மாக்கும் ஒரு சேர நன்றியை சொல்லிட்டு சர்க்கரைப் பொங்கல் தருவாங்க.. வாங்கி சாப்பிட்டு முஸ்தபா பாடிட்டு போய்கிட்டே இரு..” என்றவன் சிறிதும் தாமதியாமல் ஃபோனைக் கட் பண்ணியிருந்த்தான்.. 

“லூசுப் பய மனுஷன் இருக்க டென்ஷன்ல பார்ட்டி கேக்கறான்..”

அந்தப் பக்கம் கேட்டிருந்த பிரபா முகம், ‘பியூஸ் போன பல்ப், காற்றுப் போன பலூன், ஊசிப் போன பலகாரம்.. நமத்துப் போன பட்டாசு..’ இதில் எதை இவனுக்கு உதாரணமாக சொல்லலாம் என்று யோசிக்கும் அளவு இருந்தது.. தன் முகத்தைத் தானே பார்த்து துப்பிக் கொண்டவன் சர்வா அவனின் நல்ல நண்பன் என்பதால் அவனையும் நல்ல வார்த்தைகள் போட்டு திட்டிக் கொண்டிருந்தான்..

நண்பனின் முகம் இப்போது எப்படியிருக்கும் என்று நினைத்த சர்வாவின் முகத்தில் புன்னகை..

அவனோடு பேசியதில் இதுவரை இருந்த இறுக்கங்கள் சற்று தளர, கையில் இருந்த ஆதிராவின் மொபைலைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான்..

அது அவன் பயன்படுத்திய இரண்டாவது தொலைபேசி தான்.. அவள் தொலை பேசி வீட்டில் என்று கூறவே, தற்காலிகமாக பயன்படுத்த தனதைக் கொடுத்தவன் பிறகு புதிது வாங்கித் தருவதாக கூறியிருந்தான்.. அவள் தான் இதுவே போதும்.. என்று வேண்டுமானால் அவனைப் புதிது வாங்கிக் கொள்ள சொல்லவே அவனும் விட்டு விட்டான்.. அவன் பயன்படுத்திய ஃபோன் என்பதால் அவன் ஃபிங்கர் ஃப்ரின்ட்டும் அதில் அக்சஸ்ஸில் இருக்கவே, லாவண்யாவின் நம்பர் எடுக்கவே அதைக் கொண்டு வந்தவன், இப்போது அவனுக்குள் இருந்த நல்லவன்(?) வேண்டாமென்று தடுக்க விட்டு விட்டான்..

சுமி திருமணம் வரை, ஆதிராவின் கவனம் மொத்தம் தன்னில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதில் வெற்றியும் கண்டான்.. ஆனால் அதன் பின்னும் ஆதிராவின் கவனம் மொத்தமும் சர்வா என்று ஆகிப் போனான்.. அவனும் சிறிது சிறிதாக அவள் பால் சரியத் தான் செய்தான்..

தொடரும்….

                            

Advertisement