Advertisement

அத்தியாயம் 15

நாட்கள் கடக்க கடக்க ஆதிரா தன் புகுந்த வீட்டோடு ஓரளவு பொருந்திப் போய் விட்டாள்.. விசாலம் சுமி இருவரும் அவளுடன் ஒட்டாதிருக்க, அருணாச்சலம் அவளோடு இயல்பாகப் பேசினார்..

இதில் சர்வாவைத் தான் எதில் சேர்ப்பதென்று அவளுக்குத் தெரியவில்லை..

ஒரு நேரம் குளிர்கிறான் என்று நெருங்கினால் மறு நொடியே காரணம் இன்றிக் காய்வான்..

அவன் கோபத்துக்குக் காரணம் என்ன என்று தெரிந்தால் தன்னைத் திருத்திக் கொள்ளலாம் என்று இவளும் அதை அறிய பெரும் முயற்சி எடுக்கிறாள் தான்.. ஆனால் முடியத் தான் இல்லை.. அவன் சொன்னாலன்றி இவளுக்கு எப்படி தெரியுமாம்..

இருந்தும் அவளின் முயற்சியில் தயங்கி் தயங்கிப் பேசிப் பழகி இந்த இரு வாரங்களில் ஓரளவேனும் இயல்பாக அவனுடன் பேச முடிகிறது அவளால்.. ஆனால் அவன் அனலெனக் காயும் நேரங்களில் மாத்திரம் இவள் மௌனமாய் ஒதுங்கி விடுவாள்.. அவள் இயல்பே அது தானே..

அவனுக்கும் மனதில் நிறையக் குழப்பங்கள் கூடவே சுமியின் திருமணம் போன்ற விஷயங்கள் மனதில் வரிசை கட்டி நிற்க, தங்களின் இந்த நிலை மாற என்ன செய்வது ஏது செய்வதென்று புரியாமல் விட்டு விடுவான்.. இவ்வளவு வேற்றுமைகள் இருந்தும் இவனைப் போய் திருமணம் செய்து கொண்டோமே என்று ஆதிக்கு தோன்றியதுமில்லை.. இவ்வளவு முரண்பாடுகள் இருக்க இந்தத் திருமண வாழ்வில் இருந்து விடுபடுவோமா என்ற எண்ணம் சர்வாவுக்கும் தோன்றவேயில்லை.. இப்படியே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.. 

அப்படித் தான் அன்று திடீரென அவள் முன் வந்து நின்றவன், 

“உனக்கு எதுன்னாலும் என்கிட்ட நேரடியா கேட்க தெரியாதா? உனக்கு எல்லாத்துக்கும் ஒரு மீடியேட்டர் வேணுமா?” என்று காட்டமாய் கேட்கவே , எதைக் கேட்கிறான் இவன் என புரியாது இவள் அவனை கேள்வியாய் நோக்கினாள்..

“முதல்ல இப்படி ஊமைப் பார்வை பாக்குறத நிறுத்து ஆதிரா.. எதுனாலும் வாயைத் திறந்து கேட்கப் பழகு.. இதையே ஓயாம எல்லா நேரமும் உனக்கு சொல்லிட்டு இருக்க என்னால முடியாது..” என்று இன்னுமே அவன் காய

அதில் சுதாரித்தவள் தன் மௌனம் கலைந்து, 

“என்னங்க பிரச்சனை?” என்றிருந்தாள்.. கேட்காவிட்டால் அதற்கும் திட்டு விழுமே..

“உனக்கு காலேஜ் போகணும்னா,

நேரா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே.. அது என்ன உங்க அண்ணன்கிட்ட சொல்லி,  சொல்லுறது?..” என்று அதட்டினான்.. தங்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும் அடுத்தவர் அறியும் படி இருக்க வேண்டாம் என்ற நியாயமான கோபம் அவனது..

அவளுக்கே அப்போது தான் விஷயமே புரிந்தது.. இவள் அண்ணி ஒருவேளை கல்லூரி செல்வது பற்றி அண்ணனிடம் கூறி  கணவனிடம் பேசச் சொல்லி இருப்பார் என்று எண்ணினாள்..

“இல்ல நான் அண்ணாக்கிட்ட கேட்க சொல்லி எதுவுமே சொல்லல.. இப்போ ரெண்டு வீடு சைடும் மாறி மாறி விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க.. அதுக்குப் போகாம இருக்க முடியாதில்லயா? அதான் விருந்து எல்லாம் முடிஞ்சு நானே  உங்க கிட்ட கேட்கலாம்ன்னு இருந்தேன்.. ஆனா  அண்ணா அதுக்கு முன்னாடி சாதரணமா தான் சொல்லிருப்பாங்க..” என்ற அவள் பதிலில் தான் அவன் சற்று நிதானமானவன், 

நெற்றியை விரலால் நீவிக் கொண்டே, 

“நீ ஃபைனல் இயர் தானே?” என்றான் அமைதியாக..

அவள் ஆமாம் என்று தலையசைக்கவே,   

“ஃபைனல் இயர்.. எக்ஸாம் முடிச்சு சக்சஸாகி பாஸ் அவுட்டாகி வெளிய வரணும்.. நல்ல ரேங்க் எடுக்கணும்ற பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாம, விருந்து முடியட்டும்.. காலேஜ் போறேங்கிற?” என்று அதற்கும் திட்டி விட்டு அவள் முழிக்க இது தேறாத கேஸ் என்று தன் தலையில் தட்டி விட்டுச் சென்றவன், அடுத்த நாளே அவளை கல்லூரியில் தானே சென்று இறக்கி விட்டான்..

கல்லூரி வாசலில் அவள் இறங்கிச் செல்லவே, மற்ற மாணவர்களையும் இவளையும் பார்த்தவனுக்கு ஆதிரா மேல் சற்று இரக்கம் சுரந்தது என்னவோ உண்மை..

எந்தக் கவலையும் இல்லாமல் மற்றவர்கள் படிப்பையும் இளமைக் கனவுகளையும் சுமந்து கொண்டு வந்து செல்ல, இவள் திருமணம் என்ற ஒரு சிக்கலில் சிக்கி அதைத் தீர்க்க என்று தன்னினிடம் கழுத்தை நீட்டி, அதன் பின் இல்லத்தரசி என்ற பொறுப்பை ஏற்று என்று பல தாங்கொணா சுமைகளை சுமந்து கல்லூரி செல்கிறாளே என..

அதுவும் அன்பு அவள் கல்லூரி செல்ல வேண்டும் என்று கூறும் வரை அது பற்றி எந்த நினைவும் இல்லாதிருந்தவனுக்கு, அப்போதே அவள் தன்னை விட எப்படியும் ஆறு ஏழு வயது சின்னப் பெண்ணாக இருப்பாள் என்ற நினைவே வந்தது..

அன்றைய சூழ்நிலை தவிர்த்து,  இயல்பாக இவன் திருமணப் பேச்சு எடுத்திருந்தால் நிச்சயம் இந்த வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்திருக்க மாட்டான்.. அவனை விட இரண்டோ மூன்றோ நான்கோ வயது குறைந்த பெண்ணைத் தான் பார்க்க சொல்லியிருப்பான்.. 

எனில் அவளுக்கும் திருமணம் தொடர்பாக அப்படி ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்திருக்குமோ? வேறு வழியின்றி தான் அன்று என்னைத் திருமணம் செய்ய சம்மதித்திருப்பாளோ? என்று ஏறுக்கு மாறாக யோசித்தவன், உடனேயே அந்த சிந்தனையை அழித்தும் இருந்தான்.. இனி அதை நினைத்து எந்த பயனும் இல்லை.. நடந்தது நடந்து விட்டது.. இனி அதைப் பற்றி சிந்திப்பது தங்கள் வாழ்க்கைக்கு நல்லதல்ல.. 

எது எப்படியோ, வாழ்வில் திருமணம் என்பது ஒரு முறை தான்.. அது அவளுக்கு என்னுடனும் எனக்கு அவளுடனும் முடிந்து விட்டது.. கஷ்டமோ நஷ்டமோ இனி இறுதி வரை இருவரும் தான் ஒருவருக்கொருவர் என்று அந்த நினைவை உதறி விட்டு

அவள் வயதையும் படிப்பையும் கருத்தில் நிறுத்தி, இப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடர வேண்டாம் என்றும், அவளுக்கு அதற்கான போதிய அவகாசம் கொடுப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டான்..

இப்போது கல்லூரியில் பிற மாணவர் மத்தியில் அவளை பார்க்க பாவமாக இருந்ததில் அவன் கோபம் மொத்தம் ராஜியின் மேல் தான் திரும்பியது.. இப்படி ஒரு நிலையில் அவளை நிறுத்தி விட்டாரே என்று..

இன்று அவள் மேல் வந்த இளக்கம் அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்தது.. சுமூகமான பேச்சு வார்த்தைகளில் இரு நாட்கள் நகர ஆதிராவும் அப்பாடி என்றிருக்க அது எப்படி என்பது போல் இன்று அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டவன்

சர்வா, “இன்னைக்கு உங்க வீட்ல இருந்து சுமியப் பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரியும் தானே?” என்று கேட்க..

ஆதிராக்கு அது தனக்கு தெரியும் என்று அவனுக்குத் தெரிந்தும் ஏன் இப்போது இந்தக் கேள்வி என்று தோன்றினாலும், “ஆம்..” என்றாள் தலையசைப்பில்..

“ம்ம்.. தெரிஞ்சா மட்டும் போதாது.. எந்த பிரச்சனையும் இல்லாம எல்லாமே நல்ல படியா நடக்கணும்.. கொஞ்சம் எதுவும் பிசகி நடந்தாலும்‌.. என்று இழுத்தவன் மேலே எதுவும் சொல்லாமல் “பார்த்துக்கோ..” என்று அவளை ஆழம் பார்த்தவன் கிளம்பி விட்டான்..

இதையும் ஏன் தன்னிடம் இப்படிக் கண்டிப்பாகக் கூறுகிறான் என்று புரியாமலே சரியென்றவள், அன்று அரை நாள் கல்லூரியில் இருந்து விடுமுறை பெற்று வந்திருந்தாள் தன் வீட்டினரைக் காணும் ஆவலுடன்..

வந்தவள் குளித்து ரெடியாகி இருக்க அவள் வீட்டாரும் வந்து விட்டிருந்தனர்.. நொடியில் இந்த வீட்டாளாய் மாறி அவள் அவர்களை வரவேற்று அமர வைத்து விட்டு,  கயலை அழைத்து வராததற்கு அண்ணியிடம் குறைபட்டவள், அதற்கு மேல் தன் பொறுப்புணர்ந்து வேலைகளில் கவனமானாள்..

எந்தக் குறைகளும் இன்றி  பரபரப்பாய் வேலைகளைக் கவனிக்கும் ஆதிராவின் செயலே சொன்னது, அவள் திருமண வாழ்வை இயல்பாய் ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று..

திடீரென மாப்பிள்ளை மாறி ஏதேதோ சங்கடங்கள் நிகழ்ந்து நடந்த திருமணம் என்பதால் அவள் இங்கே எப்படி பொருந்திப் போவாளோ? என்று நினைத்து கவலையுற்றதெல்லாம் வீண் என்பது போல் இருந்தது ஆதியின் வீட்டினருக்கு..

அத்தனை பரபரப்பிலும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அவ்வளவு நேர்த்தியாக செய்து கொண்டிருந்தாள் ஆதிரா.. அவளிடம் எதுவும் கூறியிருக்காவிட்டாலும் மிகுந்த சிரத்தையுடன் தன் கடமைகளைச் செய்திருப்பாள் அவள்..

இதில் காலை கணவன் வேறு இவளைக் குறிப்பிட்டு சொன்னதில், தங்கையின் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும்.. அதற்கு அவன் மனைவியாக தான் முன்னின்று எல்லாவற்றையும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்கிறான் அவன் என்று தானாகவே அவனை அர்த்தம் செய்து கொண்டவள், இன்னும் சிரத்தையுடன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள்..

திருமணப் பேச்சு வார்த்தையென்பதால் தாய்மாமனாக கைலாசமும், வந்திருந்தார்.. கூடவே மனைவி பார்வதி மகள் லாவண்யாவையும் அழைத்துக் கொண்டு..

அவருக்கு பரணிக்கு மகளைப் பெண்ணாக எடுக்காததில் சிறு வருத்தம் இருந்தாலும், பெரிது படுத்தாமல் தன் கடமையாற்ற வந்து விட்டார்..

லாவண்யாவுக்கு தான் முகத்தில் அருள் என்பதே இல்லை.. ஏதோ பெருங் கவலையில் ஆழ்ந்திருப்பது போல் இருந்தது அவள் முகம்..

அவள் யாரென அன்பு அறிமுகம் செய்ததில் அறிந்து கொண்ட விசாலமும் அவளை ஊன்றிக் கவனிக்கவே, அவள் வருத்தம் அவர் கண்ணில் படாமலில்லை.. அதை பிறர் அறியாது மகன் காதிலும் போட்டு வைத்தார்.. அவன் அதைக் கேட்டுக் கொண்டாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று திருமணப் பேச்சு வார்த்தைகளை தொடங்குமாறு தந்தையிடம் சைகை காட்டினான்..

அவரும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, நேரடியாக விஷயத்தைப் பேசலானார்..

“என்ன சொல்ல சம்மந்தி.. எதிர்பாராம நிறைய விஷயம் நடந்து முடிஞ்சுடுச்சு.. நடந்ததையே நினைச்சுட்டு இருந்தா வீணான கசப்பு தான் மிஞ்சும்.. அதானால அதை விட்டுட்டு நாம அடுத்து நடக்க வேண்டியதுல கவனத்தை வைப்போம்.. நான் சொல்றது சரியா சம்மந்தி?” என்றவர் கேள்வி தணிகை வேலிடம் என்றாலும் பதிலை எல்லோரிடமும் தான் எதிர்பார்த்தார்.. 

அதை எல்லோரும் மௌனமாக ஆமோதிக்க தணிகை வேல் வாய் வார்த்தையாகவே சொல்லி விட்டார்.. “அதே தான் சம்மந்தி.. நடந்து முடிஞ்சது எதுக்கு? இனி நல்லது நடக்கும்னு நம்பி ஆக வேண்டியதை தொடங்குவோம்..” என்ற விசாலம், ராஜி தவிர்ந்த அனைவர் முகத்திலும் நிறைவான புன்னகை.. 

“சரி சம்மந்தி.. நீங்களே சொல்லிட்டிங்க.. அதனால நானும் அதையே பேசலாம்னு இருக்கேன்.. இன்னும் ஒரு மாசத்துல நல்ல முகூர்த்த நாள் இருக்கு சம்மந்தி.. அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே விரும்பிருக்காங்கனும் போது இன்னும் கல்யாணத்தை தள்ளிப் போட வேணாமேன்னு பார்க்கிறோம்.. இது எங்களோட விருப்பம் தான்.. மத்தப்படி உங்க விருப்பமும் என்னன்னு சொன்னீங்கன்னா கலந்து பேசி முடிவு பண்ணிக்கலாம்..”

என்றவர் அவர்கள் பேசி முடிவெடுக்க அவகாசம் கொடுத்து அமைதி காத்தார்..

அன்பும் தந்தையும் தம்மிடையே பேசிக் கொள்ள அவர்களோடு இணைந்து கைலாசமும் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்க,

 ராஜி இடை புகுந்து,

“அதெப்படி ஜாதகம் பொருத்தம் எல்லாம் எதுவும் பார்க்காமலே நேரடியா கல்யாணப் பேச்சை எடுக்கலாம்? முதல்ல ஜாதகம் எல்லாம் பொருந்தி வரட்டும்.. அப்புறம் மாத்ததை பார்த்துக்கலாம் என்றிருந்தார், அலட்சியம் போல்.. அவருக்கு இன்னும் சிறு நப்பாசை உண்டு.. எப்படியாவது ஜாதகம் பொருந்தாமல் இந்த திருமணம் நடக்காமலிருக்ககாதா என்று?

ஆனால் சர்வா என்ற ஒருவன் இனி தன் குடும்பத்தின் அனைத்து முடிவுகளிலும் முன் நிற்பான் என்பதை மமதையில் அவர் மறந்து போனார்.. அவர் பெண்ணின் திருமணத்துக்கே அவர் சம்மதம் வேண்டாதவன், தன் தங்கை திருமணத்துக்கா அவரிடம் சம்மதம் வேண்டி நிற்பான்?

ஆதிரா, தன் தாயின் அநியாயப் பேச்சில் அதிர்ந்து போய் நியாயஸ்தனான தன் கணவனைப் பார்த்தாள். .அவள் நினைத்தது சரிதான் என்பது போல் அவன் கண்ணில் கோபச்சுடர் கொழுந்து விட்டெரிய அமர்ந்திருந்தவன், இவள் பார்ப்பதை உணர்ந்தானா இல்லையா தெரியாது, ஆனால் சட்டென இவள் புறம் பார்வையைத் திருப்பினான்..

அதில் இவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தாலும் தாயும் தூக்க மாத்திரையும் மாறி மாறி அவள் நினைவை அலைக்கழிக்க, அவர் மனம் வருந்தும் படி எதுவும் பேசி விட வேண்டாம் என்பது போல் அவனிடம் கண்களாலே கெஞ்சினாள்.. 

ஒரு வெட்டும் பார்வையில் அவள் கெஞ்சலை அப்புறப் படுத்தியவன், 

ராஜியை வார்த்தையில் தாக்கியிருந்தான்..

“இங்க வரன் பார்த்து கல்யாணம் முடிவு பண்ணல.. ஜாதகமாம்லாம் பார்த்து பொருந்தினாக் கல்யாணம் இல்லன்னா அடுத்த வரன்னு போய்கிட்டே இருக்க.. அவங்க ரெண்டு பேரும் விரும்பிட்டு இவங்களை தான் கட்டிப்பேன்னு உறுதியா நிக்கும் போது இந்த பொருத்தம்லாம் இருந்தாலும் ஒன்னு தான்.. இல்லைனாலும் ஒன்னு தான்..

அப்பறம் ஜாதகம் பொருந்தி ஏற்பாடு பண்ணுற கல்யாணம் எல்லாம் எப்டி நடக்கும்ன்னு உங்களை விட வேற யாருக்கு நல்லா தெரிஞ்சிடப் போகுது? ஜாதகம் எதுவும் பார்க்க விருப்பப் படலன்னாலும் விரும்பி வந்த அவங்க கல்யாணத்தையே இன்னும் ஒரு மாசம் கழிச்சு நடத்த தான் பிளான் பண்றோம்..” என்று அந்த ஒரு மாசத்தை இழுத்து சொன்னான்.. நீ ஜாதகம் பார்த்து திருமணத்தை நாட்கணக்கில் முடிவெடுத்து எதை சாதித்தாய்? என்பது போலான அவன் குத்தல் பேச்சில் ராஜிக்கு முகத்தை எங்கு வைப்பதென்று தான் தெரியவில்லை..

அன்பும் தணிகை வேலும் அவரை முறைப்பாய் பார்க்கவே, அதன் பின் அவர் அமைதியாகி விட்டார் மருமகனை மனதில் கருவிக் கொண்டு..

விசாலத்துக்கு ராஜி அப்படிப் பேசியது அபசகுனமாகப் பட்டதில் முகம் மாறிப் போனார்.. அவர் முக மாற்றத்தைக் கண்டு கொண்ட நேத்ராக்கு மாமியாரை என்ன செய்வதென்று தான் தெரியவில்லை.. தன் பொண்ணும் இங்க தான் வாழுறானு கொஞ்சமாச்சும் இவங்களுக்கு பயமிருக்கா இவங்களுக்கு? என அவருக்கு மனதிலே அர்ச்சித்தவள் கவலையாக ஆதியைப் பார்த்தாள்..

அவள் சார்வாவை முறைப்பது போல் தோன்றவே ஆச்சரியத்தில் விழி விரித்தாள் அவள்.. ஒரு நொடி தான் அவள் ஆச்சர்யத்துக்கு ஆயுள் என்பது போல் சர்வா எதற்கோ இவள் புறம் பார்வையைத் திருப்ப தலையைக் குனிந்தவளின் தைரியத்தில் நேத்ராக்கு மற்றது பின் செல்ல ஆதிராவை நினைத்து சிரிப்பு வந்துவிட்டது.. இருந்தும் இருக்குமிடம் அறிந்து அதை உள்ளுக்குள் அடக்கி விட்டாள்..

ராஜியே அமைதியான பின் அனைத்தும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு சம்பிரதாயகமாக சுமிக்கு பூவும் முடிக்கப்பட்டது ஆதிராவின் கையால்..

அதில் விசாலத்துக்கும் சுமிக்கும் உள்ளே அவ்வளவு மகிழ்ச்சி.. யாரைத் தன் தமையனைத் திருமணம் செய்யக்கூடாது என்று தற்கொலை வரை போனாளோ, அவள் கையாலே இந்த திருமணத்தின் சடங்குகள் செய்யப் படுகிறதேயென்று.. இதை நிச்சயம் பரணிக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் சுமி..

திருமணத்துக்கு  லீவு அதிகம்  தேவையென்றதால் இப்போது எடுத்தால் சிரமம் என்று இன்றைய‌ நிகழ்வுக்கு பரணி வருகை தந்திருக்கவில்லை..

அதில் சுமிக்கு வருத்தம் இருந்தாலும் திருமணம் விரைவில் என்ற மகிழ்ச்சியில் அவனை அதிகம் படுத்தவில்லை அவள்..

எல்லாம் முடித்து கிளம்பி வெளியே தாம் வந்த வாகனத்தின் அருகே காத்திருந்தனர் அன்பு குடும்பத்தினர்..

ஆதியிடம பேசச் சென்றிருந்த  லாவண்யாவையும் நேத்ராவையும் காணாது அவர்கள் காத்திருக்க பின் பக்கம் காய்கறி தோட்டத்தில் இருந்து நேத்ரா மட்டும் தனியே வரவும் லாவண்யாவை எங்கே? என்று கேட்டான் அன்பு..

அவங்க ரெண்டு பேரும் அந்த பக்கம் மல்லிகை பந்தல் பக்கம் நின்னு பேசிட்டிருக்கும் போதே, லாவண்யா தலை வலிக்குதுன்னு சொன்னா.. அதனால அவங்களை அப்போவே உங்ககிட்ட போக சொல்லிட்டு, நான் பின்னாடி தோட்டம் பார்த்திட்டு வரேன்.. அவங்க இன்னும் இங்க வரலயா?”

நேத்ராவின் கேள்வியில் , இவர்களை வழியனுப்ப வந்திருந்த சர்வா, தான் அவர்களைப் பார்த்து வருவதாக கூறி விரைந்தான்.. நடக்கும் வழியெல்லாம் ஆதிராவைத் திட்டிக் கொண்டு தான் நடந்தான்..

“அன்னைக்கே சொன்னேன் இவகிட்ட.. இந்த பக்கம் இருட்டின அப்புறம் போகக் கூடாதுன்னு.. இப்போ பாரு அந்தப் பொண்ணையும் கூட்டிப் போய் வச்சிருக்கா..” என்று திட்டிக் கொண்டே போனவன் காதில் ஆதிராவின பேச்சு அச்சு பிசகாமல் விழுந்தது..

“இவ்ளோ தூரம் போராடி வந்திட்டு, இதுக்குப் போய் கவலைப் படலாமா அண்ணி? இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு.. அதுக்குள்ள என்ன மாஜிக் வேணாலும் நடக்கலாம்.. யார் யாரோ போட்ட கணக்கு ரிவர்ஸ் ஆகி ஆண்டவன் ஒரு கணக்கை போட்டு முடிக்கலாம்.. வெற்றி நமதே! மை டியர் அண்ணி..” என்று ஆதி கேலியாய் முழங்க, லாவண்யா அதுவரை இருந்த இறுக்கம் போய் மலர்ந்து சிரித்திருந்தாள்..

அவர்கள் தங்கள் போக்கில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த வேளை, “ஆதிரா..” என்று வந்த கணவனின் கர்ஜனைக் குரலில் உடல் தூக்கிப் போட அதிர்ந்து திரும்பினாள் அவள்..

தொடரும்….

Advertisement