Advertisement

அத்தியாயம் 14

கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்த சர்வாவுக்கு பிரபா கூறிச் சென்றதே நினைவு முழுதும்..

என் உறவுகளுக்காக உன்னை நான் என்னோடு வாழ்ந்த நாளெல்லாம் வேதனையிலேயே வைத்திருந்தேனா?  சில கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஹாஸ்பிடலில் கண் மூடி இவன் நினைவுகளில் கிடந்த தன்னவளிடம் மனதிலே கேட்டுக் கொண்டவன், 

தங்கள் வாழ்க்கைக் காட்சிகளுக்குள்ளேயே சென்று தன் தவறுகளைத் தேடலானான்..

                 *******************

அன்று இருவருக்கும் திருமணம் ஆகி ஆதி இவர்கள் வீடு வந்த முதல் நாள்.. 

பிரபா சொன்ன நீ கட்டிக் கொண்ட மனைவி சொக்கத் தங்கம் என்ற வார்த்தைகளைக் கேட்டு அதைப் பற்றி யோசித்துக் கொண்டே தோப்பு வீட்டில் இருந்து வீடு வந்து கொண்டிருந்தவனுக்கு எதை நம்ப என்ற குழப்ப நிலை..

ஏனென்றால் காலை தாயும் தங்கையும் சொன்ன விசயம் அப்படி..

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன் ஆதிரா,, பரணி சுமியைத் திருமணம் செய்யக் கூடாது என்று தூக்க மாத்திரை சாப்பிட்டு ஹாஸ்பிடலில் இருந்ததாகவும்.. அதை அவர்கள் வீட்டினர் உடம்பு முடியாமல் இருந்ததாக மூடி மறைத்தாகவும்.. அதனால் தான் தான் திரை மறைவில் நின்று அவள் திருமணத்துக்கு பிளான் செய்ததாகவும்.. ஆனால் அபி ஓடிப் போய் அவள் வாழ்க்கை பாழாக தான் நினைக்கவில்லை என்றும் அழுது கொண்டே விசாலம் தன்னை ஒப்பித்திருக்க, சுமியும்  தாய் மேல் சத்தியம் செய்து விட்டாள், அது தான் உண்மையென்று..

தாயின் சுமி மேலான பாசத்தில் விளைந்த கண்ணீரிலும் தங்கையின் தாய் மேலான சத்தியத்திலும் உண்மையோ என்று குழம்பிப் போன சர்வா, அதற்கு மேலும் அதைப் பற்றி அவர்களிடம் அதைப் பற்றி பேசியிருக்கவில்லை சர்வா..

தான் ஆதிராவைக் கணித்ததில் எங்கோ தவறி விட்டோம் என்று எண்ணியவனுக்கு

பலமான ஏமாற்றமும் கூட..

ஆனாலும் ஒரு உறுத்தல் இருக்க, சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவளிடமே கேட்டு விடலாம் என்று எண்ணிக் கொண்டான்..

இது எல்லாவற்றையும் விட, அவள் தற்கொலை முயற்சி செய்தாள் என்ற‌ செய்தி அவனுள் அவன் இதுவரை அறியா ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது..

யோசனைகளோடே வண்டியை நிறுத்தியவன் கீழே சிறிதும் தாமதிக்காது மேலே சென்று விட்டான் தன் அறை நோக்கி..

மகனின் வண்டிச் சத்தம் கேட்டு தன்னறையில் இருந்து வெளி வந்த விசாலம் கண்டது, அவன் மாடியேறிச் செல்லும் காட்சியை தான்.. கீழே தங்களைத் தேடாது மேலே செல்லும் அவன் செயல் அவருக்கு மாபெரும் குற்றமாகத் தோன்றியது.. அதற்கு அவன் மேல் வருத்தம் கொண்டால் கூட பரவாயில்லை.. மகனை தங்களிடம் இருந்து பிரிக்கப் பார்க்கிறாளா என்று ஆதி மேல்  தேவையில்லாது வஞ்சம் வளர்த்தவர், அதை பெட்ரோல் ஊற்றி வளர்க்க மகளிடம் இதைப் புலம்ப சென்று விட்டார்..

மேலே வந்த சர்வா தான் வந்தது கூட தெரியாது, தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த உடைகளை கட்டில் மேல்  மடித்து வைத்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டவனுக்கு, பிரபாவின் வார்த்தைகள் நினைவு வர,

“சாப்பிட்டியா?” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாது..

அமைதியாய் இருந்த இடத்தில் திடுமென அவன் குரல் ஒலித்ததில் திடுக்கிட்ட ஆதிரா, கையில் இருந்த உடையைப் போட்டு விட்டு தடுமாறி எழுந்து நின்றாள்..

அவள் முழித்துக் கொண்டிருக்கவே அவள் நிலை கொள்ளும் வரை அவகாசம் தந்தவன், மீண்டும் “சாப்பிட்டியா?” என்றான் கேள்வியாக..

அவன் கேள்விக்கு பதிலாய் இடவலமாய் தலையாட்டினாள் இல்லையென..

அவன் பார்வை கடிகாரத்தில் பதிந்து மீண்டும் அவளிடம் வந்து நின்றது..

நேரம் கடந்தும் ஏன் இன்னும் உண்ணவில்லை? என்ற அவன் கேள்வி புரிந்தும் அமைதியாக நின்றாள் அவள்.. என்ன சொல்லவென்று தெரியாது..

என்ன இருந்தாலும் இது அவளுக்குப் புது இடம் தானே? யாரும் அழைக்காது கீழே செல்லவே ஒரு மாதிரி இருக்க, எவ்வாறு தனியே சென்று உணவுண்ண முடியும் அவளால்?..

இருந்தும் பெரும் முயற்சி எடுத்து கீழே சென்று சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த கோமதியிடம் விசாரித்து கணவனுக்கு உணவு அனுப்பி விட்டாள்.. அதை செய் என்று யாரும் அவளை முடுக்கவில்லை.. கடமை தவறாத தன் அண்ணியைப் பார்த்து வளர்ந்தவள் ஆதலால் தன் கடமையை தவற விடவில்லை அவளும்..

அப்படியே தனியே இருக்க பொழுது போகாமல் கோமதிக்கு சிறு சிறு வேலைகளில் உதவிக் கொண்டு அவரிடம் பேசிக் கொண்டிருக்கவே அது பொறுக்காது விசாலம் வந்து கோமதியை  சாடி விட்டுப் போனார், வேலையில் கவனம் வைக்குமாறு..

அது தன் மேலான கோபத்தில் வந்தது என்பது புரிந்தவள், தன்னால் வீணாக அவர் பேச்சு வாங்க வேண்டாமென்று மேலே வந்து விட்டிருந்தாள்.. பசி என்ற உணர்வு வர கூடவே விசாலத்தின் கோப முகமும் உடன் நினைவு வர அதன் பின் எங்கே அவள் உண்ண?

இப்படி தலை குனிந்து அவள் தன் யோசனையில் இருக்கவே, அவள் முன் சொடக்கிட்டான்..

அதில் அவனை நிமிர்ந்து பார்க்கவே, “உங்க வீட்ல பசிச்சா என்ன பண்ணுவ? என்றிருந்தான்..

“சாப்பிடுவேன்..” என்றாள் ஆசானுக்கு பதிலிறுக்கும் மாணவியாக..

அவள் அறிவான பதிலில் அவனுக்குத் தான் எங்காவது தலையை மோதலாமா என்றிருந்தது.. இருந்தும் பொறுத்துக் கொண்டு, 

“நீயா போய் போட்டு சாப்பிடுவ இல்லையா?” என்ற

அழகாய் மேலும் கீழும் பொம்மையாய் தலையாட்ட இவனுக்கு பார்வையை அவளிடமிருந்து பிரிக்க மனமில்லை..

அவன் மனசாட்சியே அவன் மண்டையில் தட்டி நிகழ்காலம் அழைத்து வர தொண்டையை செருமிக் கொண்டவன், 

“அப்போ இது யார் வீடு?” என்று கேட்டான், பார்வையை அவளை நோக்கி அழுத்தமாய் பதித்து..

அதில் அவன் சொல்ல வருவது புரிந்து உள்ளே அவ்வளவு மகிழ்ந்தவளின் மனதின் பூரிப்பு முகத்திலும் தெரிந்தது..

அதே பூரிப்புடனே சாப்பிட்டு வருவதாக அவனிடம் கூறியவள் கீழே சென்றாள்.. கீழே செல்லப் படிகள் இறங்கியவள் மனதில் சர்வா பலபடி உயர்ந்து நின்றான்..

அன்று தங்கள் மேல் தப்பு என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டு திருமணத்திற்கு சம்மதம் கேட்ட போதே அவள் மனதில் ஒரு படி உயர்ந்து  விட்டான்.. இன்று இது உன் வீடு என்று உணர்த்தி எந்த மெனக்கெடலும் இன்றி மேலும் பல படிகள் தாண்டி அவளுள் தடம் பதித்திருந்தான்..

சாப்பிட்டு முடித்தவள் மீண்டும் மாடியேற போகையிலே மாமியார் சுமி இருவரும் இவளை ஒரு பொருட்டாக கருதாது இவளைத் தாண்டி மாடியேறிச் சென்றார்கள்.

இவளும் அவர்களுக்கு ஏதேனும் கணவனுடன் தனிமையில் பேச வேண்டும் போல் என எண்ணி மீண்டும் திரும்பி வந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்.. சுமி யார் என்பதை நேத்ரா ஏற்கனவே கூறியிருந்தாள்.. கூடவே அவள் கல்யாணத்தில் ஏற்பட்ட குழப்பத்தையும் கூறியிருந்தாள்.. இவள் அறிந்திருக்க வேண்டுமே என்று.. ஆனால் இவள் தான் எதையும் பெரிது படுத்தவில்லை..

மேலே சென்றவர்கள் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் கழித்தே வந்தவர்கள், இவள் ஹாலில் இருப்பதைக் கண்டும் காணாமல் , சுமி தன் அறைக்குள் புக விசாலம் கோமதியை அழைத்துக் கொண்டு சமையலறை சென்று விட்டார்..

அதன் பின்னே மாடியேறிச் சென்றவளை சர்வா எதுவும் கேட்கவில்லை.. இவளும் அவன் ஏதோ சிந்தனையில் இருக்க அவனுக்கு தொந்தரவில்லாதவாறு தன் உடைகளை காலையே சர்வா காட்டிச் சென்ற கபோர்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள்..

உடைகளை அடுக்கி முடித்து திரும்பியவள், கணவன் பார்வை தன்னிடமே இருப்பது கண்டு குழம்பிப் போனவளுக்கு லேசான தடுமாற்றமே.. ஏன் இந்தப் பார்வையென்று புரியாது அதன் தீட்சண்யம் தாங்காது தலை குனிந்தாள்..

“ஆதிரா..”

அவன் அழுத்தமான அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவளை நோக்கி கண்ணசைத்தான் தன்னருகில் பெட்டில் அமருமாறு..

ஒருவாறு நகர்ந்து வந்து அமர்ந்தவளின் மேல் தான் இப்போதும் பார்வை என்றாலும் அவன் சிந்தை தன்னிடமில்லை என்பதை உணர முடிந்தது ஆதிராவால்..

கேட்கவா? வேண்டாமா? என்ற பலமான விவாதங்களை தன்னுள் நடத்தியவன் இறுதியில் கேட்டே விட்டான்..

“சமீபமா நீ உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல அட்மிட் ஆகி இருந்தியா?” என்று..

ஆதிக்குத் தான் அவன் கேள்வியில் தடுமாற்றம்..

எங்கே தாயின் தற்கொலை முயற்சியும் அறிந்து கேட்டு விடுவானோ என்று..  அன்று ஆதி மட்டுமே உடல் நலம் இன்றி மருத்துவமனையில் இருந்ததாகவும் ராஜி மற்றும் நேத்ரா அவளுடன் உடன் இருந்ததாகவும் சொல்லப்பட்டு மற்றவர் கருத்தில் இருந்து ராஜியின் தற்கொலை விஷயம் மறைக்கப்பட்டு விட்டது.. (குடும்பமே சொல்லல சரி.. புரணி பேசும் பரணிய மறந்துபுட்டீங்களே!) இது வெளியில் தெரிந்தால் தங்கள் குடும்ப விவகாரம் வெளியே அலசப்படும் என்பதால் அவர்கள் மறைத்தது ஆதிக்கு தான் பெரும் கேடாக அமைந்து விட்டது.. 

அந்த விஷயம் இவர்களின் நெருங்கிய உறவு லாவண்யா வீட்டினருக்கு கூட தெரியாது மறைத்து விட்டிருக்க இப்போது இவன் கேட்டால் ஆதிரா கணவன் என்று மறைக்காமல் நிச்சயம் சொல்லி விடுவாள் தான்..

ஆனால் அதன் பின் அது சுமிக்கு தெரிந்தால் நாளை அவள் தங்கள் வீட்டுக்கு வாழ வரும் போது அது வீண் மனஸ்தாபங்கள் தோன்ற வழிவகுக்கும் என்றே நினைத்து தடுமாறிக் கொண்டிருந்தாள்..

ஆனால் அவள் தடுமாற்றத்திற்கு வேறு அர்த்தம் எடுத்துக் கொண்ட சர்வா, 

“கேள்வி கேட்டா உடனே பதில் வரணும்..” என்றான் இரும்பை ஒத்த குரலில்..

அவன் குரலில் தொனித்த கடுமையில் திடுக்கிட்டு வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டே அவசரமாக.. ஆமாம் என்று தலையாட்டியவள், அடுத்து என்னவோ என்று பதட்டத்துடன் காத்திருக்க, சர்வா அவளை என்னதென்றே பிரித்தறிய முடியா ஒரு பார்வை பார்த்தவன், இரவுணவுக்கு தாய் கீழிருந்து அழைக்க அமைதியாக இறங்கி சென்று விட்டான்..

இவளுக்கு தான் குழப்பம் கூடியது.. அவன் என்ன கேட்க வந்தான் என்று? இதற்கு அவன் தாயின் தற்கொலை முயற்சி பற்றிக் கேட்டிருந்தால் கூட பரவாயில்லை போல.. இப்படி மௌனமாக சென்றது தான் ஏதோ போல் இருந்தது ஆதிராக்கு..

அதற்குள் இவளை உணவுண்ண வருமாறு அழைக்க கோமதி மேலே வந்து விட்டிருந்தார்..

அதில் தன் சிந்தனைகளைப் பின் தள்ளியவள், அவருடன் இணைந்து கீழே சென்றாள்.

உணவு மேஜையில் இருந்து சர்வா இவளை முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது..

ஏனென்று தான் அவளுக்குத் தெரியவில்லை.. 

“சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டா,  என்னைக் கூப்பிடலயேன்னு இருக்காம உடனேயே வந்திரணும்.. ஒரு தடவை தான் எதுவும் சொல்ல முடியும்.. மிச்சம் எல்லாம் நீ தான் புரிஞ்சு நடந்துக்கணும்.. புரியுதா?”

அவன் சொற்கள் அவ்வளவு கடுமையாக வரவே ,உடல் நடுங்கியவள் தலையாட்டி விட்டு, தன்னை சமாளிக்க சட்டென இருக்கையில் அமர்ந்து கொள்ள கோமதி பரிமாற ஆரம்பித்தார்..

சாப்பிடும் போது சர்வாவும் அருணாச்சலமும் ஏதோ பேசிக் கொள்ள, சுமி தாயுடன் ஏதோ ஜாடையில் பேசிக் கொள்ள, குனிந்த தலை நிமிராமல் உணவை உண்டவளுக்கு, தான்  மட்டும் அந்நியமாகிப் போன உணர்வு.. மனது வெகுவாய் நேத்ராவைத் தான் தேடியது..

அதிலே இறங்க மறுத்த உணவை தண்ணீர் அருந்தி விழுங்கிக் கொண்டாள்..

அனைவரும் உண்டு முடித்து எழும்பி செல்ல, இவள் கோமதியோடு சேர்ந்து கொண்டாள்.. அவர் இனிமேல் தான் எல்லாம் ஒதுக்கி விட்டு பக்கத்து தெருவில் உள்ள தன் வீட்டுக்கு செல்ல வேண்டும்.. எனவே அவர் வேளையாக செல்லட்டுமே என்று அவருக்கு உதவினாள்..

அவரும் வீடு செல்லவே, அவர் அறிவுரைப்படி பின் வாயில் கதவை கவனமாகப் பூட்டியவள் ஹாலில் அமர்ந்திருந்த மாமியாரிடம் சாவியை ஒப்படைத்து விட்டு மேலே சென்றாள்..

சர்வா அதற்குள் தன்னிடத்தில் படுத்துறங்கியிருப்பதை பார்த்தவளுக்கு இன்றைய அவனின் முன்னுக்கு பின் முரணான செய்கைகள் விளைவித்த தாக்கத்தில் முதல் நாளே மூச்சு முட்டிப் போக இரண்டு நாள் தங்கள் வீட்டில் பழகிய பழக்கத்தில் அவன் மறுபக்கம் படுத்தவள் அன்றைய நாளின் உளைச்சல்களில் விரைவில் உறங்கிப் போனாள்..

அந்தப் பக்கம் விழி மூடிப் படுத்திருந்த சர்வாவுக்கோ, உறக்கம் துளியும் அண்டவில்லை..

அவள் தமையனும், தன் தங்கையும் இருவரும் மனமொத்து விரும்பியிருக்க, ஒரு பெண்ணாக இருந்து கொண்டு 

இன்னொரு பெண்ணின் காதல் கை கூடக் கூடாது.. என்று தற்கொலை நாடகம் நடத்தி சதி செய்த ஒருத்தியையா தான் திருமணம் செய்து கொண்டோம்? என ஒரு மனது எண்ண மறு மனமோ இல்லை.. அவளை அப்படி எப்படி உன்னால் எண்ண முடிகிறது என்று அவனை இடித்துரைத்தது.. இப்படியாக சர்வா வெகுவாய் தன் மனதை உழப்பிக் கொண்டான்..

அப்படி ஒருவேளை தன் தமையனுக்கு தன் மாமன் மகளைத் திருமணம் செய்து வைத்திருந்தால், அதன் பின் அவனைக் காதலித்த பெண்ணின் நிலை பற்றி யோசிக்கவில்லையா இவள்?

இதில் விசாலம் வேறு சர்வாவின் கவனத்தை சுமி மீது திருப்பவென்று தான் தற்கொலை செய்து கொள்ளவா? என்று சுமி அன்று கேட்டதை சொன்னதிலிருந்து… தன்னை எவ்வாறு அடக்கிக் கொண்டிருக்கிறானென்று அவனுக்கே தெரியவில்லை..

எங்கே திரும்பி அவளைப் பார்த்தால்  தூங்கிக் கொண்டிருப்பவளிடம் கோபத்தைக் காண்பித்து விடுவோமோ என்று தான் மறு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான்..

இதே நிலை தொடர்ந்தால் தங்கள் வாழ்க்கை என்ன என்ற கேள்வி தான் அவன் முன் விடையின்றி நிற்கிறது..

அவள் தவறு என்று நம்பும் போதே தன் வாழ்க்கை என்று பிரித்துப் பார்க்காது, தங்கள் வாழ்க்கை

என்று அவளையும் தன்னோடு இணைத்து யோசித்த மனதை உணர்ந்து கொள்ள அவன் மனம் ஏனோ இடம் தரவில்லை.. அதனாலே தன்னை மீறி பல அனர்த்தங்களுக்கு காரணம் ஆகி நிற்கும் நிலைக்கு தள்ளப்படப் போகிறான்..

தொடரும்…..

Advertisement