Advertisement

அத்தியாயம் 13

அன்புவையும் நேத்ராவையும் நிற்க வைத்து மருத்துவர் அந்த வாங்கு வாங்கிக் கொண்டிருக்க அதற்கெல்லாம் காரணமான சர்வா அங்கிருந்த சுவரில் சாய்ந்து தலை குனிந்து நின்று விட்டான்.. டாக்டரின் வார்த்தைகள் விடாது அவன் செவிப்பறையை அறைந்து கொண்டிருந்தது..

உள்ளே ஆதியை சோதித்து விட்டு மருத்துவர் வரவும் அன்பு நேத்ராவுடன் மற்றவர்கள் வரவும் சரியாக இருந்தது.. வெளியே வந்த மருத்துவருக்கு அன்புவையும் நேத்ராவையுமே தெரியுமென்பதால், அவர்களைப் பிடித்துக் கொண்டார்..

உங்ககிட்ட சொல்லித் தானே அனுப்பினோம்.. அபார்ஷன் ஆனதுல அவங்க ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.. பத்திரமா பார்த்துக்கோங்கன்னு..

இங்க இருந்து கூட்டிப் போய் ரெண்டு மணித்தியாலம் கூட முழுசா ஆகல.. அதுக்குள்ள இப்பிடிக் கூட்டி வந்திருக்கீங்க.. ஏற்கனவே ஸ்டிரஸ்ல இருந்தவங்க, அபார்ஷனான பிளீடிங் எல்லாம் சேர்ந்து  பிபி இப்போ ரொம்ப லோ ஆகி இருக்கு.. அவங்க எழுந்ததும் மறுபடியும் அழுத்தம் எதுவும் கொடுக்காதீங்க.. அவங்களை எவ்ளோ அமைதியா வச்சிருக்கீங்களோ அவ்வளவத்துக்கு அவங்க சீக்கிரம் சரியாகிடுவாங்க..  

அண்ட் முன்னாடியே அவங்க சீக்ல கை விரல் அடையாளம் இருந்துச்சுன்னு கேட்டதுக்கு அம்மா கோபத்துல அடிச்சாங்கன்னு சொன்னாங்க.. இப்போ புதுசா ஒரு மார்க் இருக்கு..

நியாயமா நாங்க அபார்ஷன் ஆன பொண்ணுக்கு இப்படி காயம் இருந்ததுக்கு டொமேஸ்டிக் வயலன்ஸ்ன்னு கேஸ் குடுத்திருக்கணும்.. பட் சீஃப்க்கு தெரிஞ்சவங்கன்ற முறைல நீங்க இன்னும் ரிஸ்க்ல மாட்டாம இருக்கீங்க.. 

அதுக்காக தொடர்ந்து இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கனா எங்களுக்கும் தான் பிரச்சனை.. அப்பறம் நாங்களே ஆக்ஷன் எடுக்கிறது மாதிரி இருக்கும்..

எல்லாத்துக்கும் மேல வீ ஆர் டாக்டர்ஸ்.. அடிச்சது ஆணோட கையா பொண்ணோட கையான்னு தெரியாத அளவுக்கு நாங்க இங்க இல்ல.. அன்னைக்கு உங்க பக்கம் கொஞ்சம் உண்மை இருந்துச்சு ஒரு லேடியும் அடிச்சிருக்காங்க..  பட் இப்போ இருக்கது ஒரு ஆணோட கைத் தடம்.. உங்க பொண்ணு உங்களுக்கு வேணும்ன்னா அவங்க ஹஸ்பண்ட கூப்பிட்டு வச்சுப் பேசுங்க.. இல்ல இப்பிடியே அடி வாங்கியே இந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகிடும் என்றவர் எல்லா வகையிலும் அவர்களை எச்சரித்து விட்டு தன்வேலைகளைக் கவனிக்க சென்று விட்டார்..

உள்ளே ஆதிக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க வெளியே அவள் உறவுகளுக்கிடையில் தரையில் ஊசி விழுந்தால் கூட துல்லியமாய் கேட்கும் அளவு அவ்வளவு அமைதி..

சர்வா முகமே செத்துவிட்டிருந்தது.. கொஞ்சமும் யோசிக்காமல் உண்மையறியாது என்னவெல்லாம் பேசிவிட்டேன்.. அவளைக் கொலைகாரி அளவுக்குப் பேசிவிட்டு தான் நிற்க, டாக்டர் தான் அவளைக் கொன்றுவிடுவேன் என்று சொல்லிச் சென்றது அவ்வளவு வலித்தது உள்ளே..

அருணாச்சலமோ இப்படி விஷயத்தின் உண்மைத் தன்மையை அறியாமல் மாப்பிள்ளையை நம்பி மகனிடம் உளறி அனைத்தையும் பேரும் சிக்கலில் முடித்து விட்டோமே என்று மருகி நின்றார்..

‘அதுவும் இப்போது தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்த பொண்ணை’ என்ற அன்புவின் சொல்லை, அவன் தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணத்தில் கவனிக்காது விட்ட தன் மடத்தனம் குறித்து வெட்கினார்.. பெரிய மனிதர் என்ற சொல்லுக்கு பிழையாகிப் போனோமே என்று வருந்தினார்..

சூழ்நிலையின் கனத்தில் யாரும் ஏதும் பேசாது அமைதியாயிருக்க

சுமியுமே அண்ணனின் இறுகிய தோற்றத்தில் பயந்து போய் அமைதியாக இருந்தாள்..  அவள் தானே தாய் தந்தையை வற்புறுத்தி அங்கே அழைத்து சென்றது நியாயம் கேட்கவென..

இதில் இன்னும் அடங்காதது விசாலம் தான்..

“டாக்டர்கிட்ட காசு கொடுத்து இப்பிடிலாம் சொல்லி உங்க தப்பை மூடி மறைக்கப் பார்கிறீங்களா? அதான் அவங்களே சொல்லிட்டுப் போறாங்களே, தெரிஞ்ச ஆளுங்கன்னு.. அவ தான் ஜாலக்காரின்னா குடும்பமே இல்ல பித்தலாட்டம் பண்ற குடும்பமா இருக்கு..”

இப்போதும் அடங்காது விசைத்து நிற்கும் அவரை அங்கிருந்த ஆதி தரப்பினர் வெறுத்து நோக்க,  மகளின் நிலையில் துவண்டிருந்த ராஜி இவரின் வார்த்தைகளில் பொங்கி எழுந்து பேச வரவும், அதை முந்திக் கொண்டு ஒலித்தது சர்வாவின் வார்த்தைகள்..

“பிரபா! அம்மா, அப்பா, சுமி எல்லாரையும் வீட்டில விட்டுட்டு வா..” அவ்வளவு தான் அவன் பேச்சு..

பிரபாவுக்கு அவனை தனியே விட்டு செல்ல மனமில்லை.. இருந்தும் விசாலம் இங்கு இருந்தால் நிச்சயம் பிரச்சனை தீராது இன்னும் கூடத் தான் செய்யும் என்று புரிந்து அமைதியாக சென்றான்.. 

சர்வாவின் குரலே அவன் கட்டளையை மறுக்க முடியாது என்பது போல் இறுகி வந்ததில் இங்கிருந்து ஊதியே பிரச்சினையைப் பெரிதாக்க நினைத்த அவரின் எண்ணம் நிறைவேறாத ஆதங்கத்தில் கௌசிக முனிவர் என்று தன்னை நினைத்துக் கொண்டவர் போல் அங்கே நின்றிருந்தவர்களை பார்வையால் எரித்து விட்டு கிளம்பினார்..

அருணாச்சலமும் மகனை நோக்கி ஒரு மன்னிப்பு பார்வையை செலுத்தியவர் மனைவி குணம் அறிந்து உடனே கிளம்பி விட்டார்..

அவரின் யாசகம் சர்வாக்கு புரிந்தாலும் அவருக்கு சமாதானம் கூறும் நிலையிலோ, இல்லை வேறு எதையும் பேசும் நிலையிலோ அவன் இல்லை ஆதலால் மௌனமாக நின்றான்..

நேத்ரா தன் மாமனார் மாமியாரையும் அரும்பாடுபட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தாள்.. இங்கே இருந்து இவர்களும் உடம்புக்கு எதுவும் இழுத்து விடப் போகிறார்களென..

இப்போது அங்கு அன்பு, நேத்ரா சர்வா மூவரும் தான் இருந்தனர்.. மூவரும் ஒருத்திக்காக தான் காத்திருந்தனர் என்றாலும் ஒருவரோடு ஒருவர் பேச்சில்லை.. 

அந்த வராண்டாவே இரு மணித்தியாலங்கள் அமைதியாக இருக்க, ஆதியின் அறையில் இருந்து வந்த நர்ஸ் அவள் கண் விழித்து விட்டதாகவும், எந்த டென்ஷனும் தராது போய் பார்த்து வருமாறு சொல்லவே, நேத்ரா சர்வாவைப் பார்த்தாள், அவன் செல்ல விருப்பப்‌ படுவானோ என்று..‌ 

ஆனால் அவன் அசையாதிருக்கவே பெருமூச்சு விட்டவள் கணவனுடன் உள்ளே சென்று அவளுடன் ஆறுதலாக பேசி விட்டு அவளை ஓய்வெடுக்க அனுமதித்து விட்டு வெளியே வந்தார்கள் சர்வாவை உள்ளே அனுப்பி வைக்கவென..

வெளியில் வந்தவர்கள் கண்டது சர்வா இருந்த இருக்கை வெறுமையாக இருந்ததை தான்.. நேத்ரா கணவனைப் பார்க்க, அவன் பெரு மூச்சுடன் இடம் வலமாய் தலையாட்டிக் கொண்டவன் அங்கேயே கண் மூடி அமர்ந்து விட்டான்.. அவனுக்கு இப்போது தங்கை எதிர்காலம் என்னவோ என்று பயம் பிடித்துக் கொண்டது.. அதை எண்ணித் தான் உள்ளே குமுறும் எரிமலையை பாடுபட்டு அடக்கிக் கொண்டு அமைதி காக்கிறான்.. தங்கை அவனை வேண்டாம் என்றால் கூட அவனை விரட்டி விட்டு பிறகு என்ன என்று பார்த்துக் கொள்ளலாம்.. ஆனால் அவள் தான் மயங்கப் போகிறேன் என்ற நிலையிலும் அவனை ஒரு சொல் சொல்ல விடாதவாறு அவனுக்கு குறுக்கே அணையாக நிற்கிறாளே.. அப்படியிருக்க தான் ஒன்று செய்யப் போய் அது நாளை அவள் வாழ்க்கையில் குழி பறிக்க அவன் எப்படி அனுமதிப்பான்? அவன் என்ன பரணியா? எதையும் யோசிக்காமல் தங்கையை பித்துப் பிடித்து அலைய வைக்க? 

நேத்ரா அவனைப் பார்த்துவிட்டு தன் மொபைலுடன் தள்ளி சென்றாள் தாயுடன் பேச.. அவள் மகளையும் கவனிக்க வேண்டுமே..

பிரபா ஆதியைப் பார்க்காமல் பேசாமல் வந்ததற்கு சர்வாவை திட்டிக் கொண்டிருக்க அதை காதில் வாங்கினாலும் எதுவும் பேசாமல் கண் மூடி இருக்கையில் சாய்ந்து விட்டான்.. 

சர்வா குடும்பத்தை இறக்கி விட்டு வந்த பிரபாவுடன், தான் கிளம்பியிருந்தான் சர்வா.. அவனுக்கு அதற்கு மேலும் அங்கிருக்க திடமில்லை..

“அப்பாக்கு யார் தகவல் சொன்னதுன்னு விசாரிச்சியா?” சர்வா..

“ம்ம்.. வேற யாரு உன் தங்கச்சி புருஷன் தான் சொல்லிருக்கான்..” பிரபா குரலிலேயே அவ்வளவு வெறுப்பு.. இப்படியும்  ஒருவன் இருப்பானா என்று..

அதிலே மிகுதி சர்வாவுக்குப் பிரபா சொல்லாமலே புரிந்து போனது.. ஆனால் அவனுக்கு பரணி மேல் என்ன யார் மேலும் கோபமில்லை..

தன் தவறுகளுக்கு அடுத்தவரைக் காரணமாகக்கும் நீசன் இல்லையே அவன்.. ஆனாலும் பரணி இது போல் இன்னொரு முறை செய்ய அஞ்சுவது போல் எதுவும் செய்து விட வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான்..

அது தவிர ஆரம்பத்தில் இருந்து நடந்த அனைத்துக்கும் தன் முன் கோபம் ஒன்றே காரணம் என்பதை இப்போது நன்கு புரிந்து வைத்திருந்தான் அவன்..

“பிரபா! நீ என் கோபத்தை குறைன்னு சொல்றப்போ எல்லாம் எனக்கு அது ஏன்னு புரியிறதே இல்ல.. என்கிட்ட நேர்மை இருக்கு.. ஒழுக்கம் இருக்கு.. அதுனால கோபம் வருதுன்னு தான் எனக்குள்ள ஒரு கர்வம் இருக்கும்.. 

ஆனா அதால தான் இன்னைக்கு என் குழந்தையையும் இல்லாம ஆக்கிட்டு அந்தப் பழியத் தூக்கி அவ மேலயும் போட்டுன்னு.. ப்ச்.. பொண்டாட்டின்னு வேணாம்.. ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம அடிச்சு ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்திருக்கேன்.. இப்போ என் கோபத்துக்கு நான் எதை காரணம் காட்ட முடியும்? எதை வச்சு நான் கர்வப்பட முடியும்?”

அமைதியாக வெற்றுக் குரலில் பிரபாவைக் கேட்டானா? இல்லை தன்னைத் தானே கேட்டுக் கொண்டானா? என்று பிரித்தறிய முடியாத தொனியில் வந்த அவன் குரலில், பிரபா நண்பனின் இதுவரையான செயல்களில் கடுஞ்சினத்தில் இருந்தவன் இப்போது அவனுக்காய் இளகினான்..

நட்பு தான்,

“நகுதற் பொருட்டன்று நட்டல் 

மிகுதிக் கண் மேற்சென்று இடித்தற் பொருட்டாயிற்றே..”

பிரபா அவனிடம் எதுவும் பேசாது அமைதி காத்தவன், சர்வா வீடு வரவே வண்டியை நிறுத்தியவன் ,அவன் இறங்காது இருக்கவே அவனிடம்,

“நீ பண்ணது இது மட்டும் இல்லை சர்வா.. இதுவரை உன்கிட்ட நான் அவதானிச்சு.. ஆனா எப்போ எப்படி  சொல்லன்னு யோசிச்ச விஷயம் நிறைய.. அதை எல்லாம் இப்போவும் என்னால சொல்லாம இருக்க முடியாது.. 

அவன் சொல்லவே என்ன என்பதாய் அவனைப் பார்த்திருந்தான் சர்வா.. 

உங்கம்மா, உன் தங்கச்சின்னு யார் கூட ஆதி பேரு பிரச்சனையில அடிபட்டாலும் நீ யோசிக்காம உங்கம்மா தங்கச்சி பக்கம் தான் நிற்ப.. தப்பு அவங்க பக்கமும்‌ இருக்குமோன்னு யோசிக்கக் கூட மாட்ட.. அப்படின்னா தப்பு எப்போவும் ஆதி பக்கம் தான் இருக்கும்ன்னு நீ நம்புற மாதிரி தானே அர்த்தம்.. அந்த நம்பிக்கை எப்பிடி உனக்குள்ள வந்துச்சுன்னு தெரியல..” (அது அவனுக்கு வி(தி)தைக்கப் பட்டது..)

“ஆனா நீ அப்டி செஞ்சது ஆதிக்கு எவ்ளோ பெரிய அநியாயம் தெரியுமா? ஒரு வேளை உன் இரத்தம்னா தப்பே பண்ணாதுன்ன கர்வமோ உனக்குள்ள இருக்கோ? என்னவோ? எனக்குத் தெரியல..

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் சொல்லுவேன்.. என்ன தான் ஆதிய உன் மனைவியா ஏத்துக்கிட்டு வாழறனாலும் ஆதி மேல தப்பான ஒரு அபிப்பிராயம் உன் ஆழ்மனசுல பதிஞ்சிருக்கு.. பொறுமையா எல்லாத்தையும் யோசிச்சுப் பாரு.. உனக்கே சில விஷயம் புரியும்..

அதுக்கப்புறம் என்ன பண்ணனும்ன்னு யாரும் உனக்கு சொல்லித் தர அளவுக்கு எதுவுமே இருக்காது.. எல்லாத்தையும் சரியானதா நீயே மாத்துவ.. நீ நல்லவன் தான்.. அதுல எனக்கு எந்த சந்தேகம் இல்ல ஆனா ஏனோ ஆதிக்கு மட்டும் நியாயமா இல்ல.. 

தப்பே பண்ணாம வாழ இங்க யாருமே கடவுளில்லை சர்வா.. எல்லாருமே சாதாரண மனுஷங்க தான்.. தப்புன்னு தெரிஞ்சும் அந்த தப்பிலேயே வாழ்ந்தா தான் அவன் மிருகம்.. நீ அந்த ஸ்டேஜ் வரதுக்கு முன்னாடியே முழிச்சுக்கோ..”

அவன் சொன்னவைகளை கசப்பாக விழுங்கிக் கொண்ட சர்வாவும் பேச சதி செய்த தொண்டையை செருமி, “அங்க ஹாஸ்பிடல்ல ஏதும் ஹெல்ப் தேவைனா பார்த்துக்கோ.. எதுவும் எமர்ஜென்சின்னா மட்டும் எனக்குக் கால் பண்ணு..” என்றவன் சொல்லி செல்லவே தலையாட்டி விட்டு சென்று விட்டான்‌ பிரபா.. தனிமையில் அவன் தெளிந்து விடுவான் என்ற நம்பிக்கையில்..

வீட்டின் உள்ளே வந்த சர்வா ஹாலில் இருந்த யாரையும் சட்டை செய்யாமல் நேரே தன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்..

அவன் செயலில் அங்கு விசாலத்துடன் அமர்ந்திருந்த நாயகிக்கு தான் முகம் கறுத்துப் போனது..

அன்று திருமணத்தில் இருந்து ஓடிப் போன அபியை ஃபோன் பண்ணி எங்கே எனக் கேட்கவே பெண்ணுடன் பேசிப் பார்த்தேன்.. ஒத்துவரவில்லை.. என்று அசால்டாக சொல்லி விட்டு கட் பண்ணி விட்டான்.. அதை அப்படியே ஆதியால் தான் அவன் ஓடிப் போய் விட்டான் என்று அவள் தலையில் போட்டு விட்டு ஓடிப் போனவர்கள் தான் விசாலமும் மூர்த்தியும்.. அதன் பின் ஆதியை சர்வா திருமணம் செய்த விசயமறிந்து இவர்களுடன் ஒரு வருடம் மேல் தொடர்பே கொள்ளவில்லை.. பிறகும் படிப்படியாக விசாலத்துடன் உறவை வளர்த்து இருந்தாலும் சர்வா இவர்களைக் கடுகளவும் கண்டு கொள்வதில்லை..

இதோ இரண்டு வருடங்களைக் கடந்து வீட்டுக்கு வந்திருந்தவருக்குத் தக்க மரியாதை செய்து விட்டுப் போய் விட்டான் சர்வா.. அதை எண்ணிக் கருவிக் கொண்டிருந்தார் நாயகி.. இருக்கும் பிரச்சனையில் இது புது வில்லங்கம்..

தொடரும்…..

Advertisement