Advertisement

அத்தியாயம் 12

வைத்தியசாலையில் ஆதியை அனுமதித்து விட்டு உள்ளே அவளுக்கு செக்கப் நடந்து கொண்டிருக்க, வெளியே தன் கணவனிடம் அவள் அங்கு வந்த கோலம் முதல் இப்போதைய அவள் நிலைக்கு காரணமாக இருக்கக் கூடியது என்ற தன் சந்தேகம் முதல் கொண்டு எல்லாவற்றையும் கூறி விட்டாள் நேத்ரா.. 

அன்புவால் தன் தங்கையின் இந்த நிலையை இம்மியும் ஜீரணிக்கவே முடியவில்லை.. வீட்டில் பிரச்சினையென்று வீட்டை விட்டு வெளியேறும் அளவு செல்லுபவள் கிடையாதே ஆதி..

சண்டைகளையும் சச்சரவுககளையும் விரும்பாது, அதில் இருந்து இயன்றவரை ஒதுங்கி வாழ்பவள்.. திருமணத்துக்கு முன் தன் வீட்டிலே இப்படித் தான் அவள் வாழ்ந்திருக்க, புகுந்த வீட்டிலா அவள் பிரச்சனை செய்திருக்கப்ப போகிறாள்? அப்படிப்பட்டவளைக் கை நீட்டி அடிக்கவும் மனம் வந்திருக்கிறதா அவனுக்கு? என்று மனம் கொதித்துப் போனான்..

தங்கள் வீட்டில் ராஜியை தவிர யாரும் அவளை அதட்டியது கூட கிடையாது.. அவள் பால் முகம் பார்த்தால் திட்ட வந்த வார்த்தைகள் கூட மறந்து போகும்.. பரணி கூட மற்றவர்களிடம் வாதாடுபவன் இவளை எதுவும் சொல்வதில்லை.. எதிர்த்து சண்டை போடுபவர்களிடம் தானே வாதாட இயலும்.. நீயே சரி என்று ஒதுங்கிப் போபவளை எப்படிப் பிடித்து வைத்து சண்டை போடுவது? அப்படி ஒரு சாது அவள்? அவளுக்குப்போயா இப்படி? என நினைக்க நினைக்கவே அப்படி ஒரு ஆத்திரம் அன்புவுக்கு..

அவன் முகத்திலே அவன் மனநிலை புரிய, அவனை தன் வார்த்தைகளால் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தாள் நேத்ரா..

அப்போது வெளியே வந்த நர்ஸ் டாக்டர் அவர்களை 

உள்ளே வருமாறு அழைத்ததாக கூறிச் செல்ல இருவரும் நர்ஸின் பின்னே உள் நுழைந்தனர்..

இவர்களைப் பார்த்த டாக்டர் ஆதிராவைக் காட்டி இவங்க கேட்கிற எந்தக் கேள்விக்கும் சரியா ரெஸ்பான்ஸே பண்ண மாட்டேங்கிறாங்க.. கொஞ்சம் நர்வஸா இருக்காங்க போல இருக்கு.. நீங்க கொஞ்சம் கூட இருங்க என்று கூறவே..

நேத்ரா அவள் அருகில் சென்று கையைப் பற்றிக் கொள்ள அவளும் அவள் கையை விடாது இறுகப் பற்றிக் கொண்டாள்..

“இவங்களுக்கு அபார்ஷன் ஆகியிருக்கு.. கருவோட வளர்ச்சி ஐம்பத்திரண்டு நாள் ஆச்சு..” என்று அவர் கூறக் கேட்டதுமே.. ஆதிரா வெடித்து வந்த அழுகையை உதடு கடித்து அடக்கிக் கொண்டாள்..

அவள் வேதனையின் அளவை தன் கையில் அவள் இறுக்கம் போகப் போக அதிகரித்ததிலேயே புரிந்து கொண்டாள் நேத்ரா..

ஏற்கனவே ஊகித்திருந்த விடயமாக இருந்தாலும் அது உண்மையாகிப் போய் மருத்துவர் வாயிலாக கேட்ட போது அவர்களாலும் அதைத் தாங்க முடியவில்லை..

அப்போது இறுகிப் போனவள் தான் ஆதி.. அதன் பின் மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு சமாளிப்பாய் பதில் கூறி அனுப்பி விட்டவள், இது வரை தன் வேதனைகளை வாய் விட்டு சொல்லவுமில்லை..

கண் மூடிப் படுத்திருந்த ஆதியின் செவிகளுக்குள் மருத்துவரின் வார்த்தைகள் தான் கேட்டுக் கொண்டிருந்தது..

“இது மாதிரி நிகழ்வு எல்லாம் இப்போ காமன் தான்.. இன்னொரு பேபிய கேரி பண்றதுக்கு நீங்க பிசிக்கலி பெர்பெக்ட்லி ஆல்ரைட்.. இன்னொரு பேபி பெத்துக்கிற அளவுக்கு வயசும் உடம்புல தெம்பும் தாராளமாவே இருக்கு.. சோ இதை நினைச்சி தேங்கிடாம இதுவும் கடந்து போகும்ன்னு மனசைத் திடப் படுத்திக்கோங்க.. “என்று விட்டுப் போனார்..

இல்லாது அழிந்தது வெறும் கருவென்று இப்போதைக்குச் சாதாரணமாகச் சொல்லி விடலாம்.. ஆனால் அதுவே ஒன்பது மாத காலம் சுமந்து பெற்றிருந்தால் பொக்கிஷ மழலையல்லவா? 

அது தன் ஒவ்வொரு படிகளையும் கடந்து வளர்ந்து வரும் கணங்கள் கண்டு களிப்பது போல் ஒரு வரமுண்டா உலகில்? அப்படிப் பட்ட செல்வத்தை தன் கவனயீனத்தால் இழந்திருக்கிறாள்.. அதைத் தான் எண்ணி எண்ணி தன்னையே வருத்திக் கொண்டிருக்கிறாள் ஆதி..  

யூஜி முடித்து ஒரு வருடத்துக்கும் மேல் வீட்டில் சும்மா இருந்தவள், கணவனிடம் போராடி சம்மதம் வாங்கி பிஜி சேர சம்மதம் பெற்று அதற்கான நுழைவுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தவளுக்கு, மாதவிடாய் நாட்கள் சாதாரணமாக கடப்பது போல் கருவுற்றதுக்கும் எந்த அறிகுறிகளும் இல்லாது போக தன் படிப்பு வேலைகள் பிளஸ் வீட்டு வேலைகளில் மூழ்கியே தன்னைப் பற்றி மறந்து போக அது இப்படி அவளில் உதித்த உயிரை இழக்க காரணமாகிப்போயிற்று..

நேத்ரா எண்ணுவது போல் அவள் அழாமல் எல்லாம் இல்லை.. பெரும்பாலும் விழி மூடியே இருப்பவளின் மூடிய விழிகளை முப்பொழுதும் கண்ணீர் நிறைத்திருக்கும்.. நேத்ரா அசந்து கண்ணுறங்கும் பொழுதுகள் தான் இவள் பகிரங்கமாய் கண்ணீர் சிந்த கிடைத்த பொழுதுகள்.. அந்த நேரங்களில் சத்தம் வராது அப்படி ஒரு அழுகை அழுது தீர்ப்பாள்.. அவளுக்கு அதற்கு ஒன்றும் கடினமாக எல்லாம் இல்லை.. அது அவளின் சிறுவயதுப் பழக்கம்..

பலதையும் யோசித்து யோசித்து களைத்து ஒரு கட்டத்தில் நல்லிரவைத் தாண்டி உறங்கியே விட்டாள்.. 

மறுநாள் காலையே டிஸ்சார்ஜ் என்பதால் அன்பு வேளையாக வந்து விட்டிருந்தான் இருவரையும் அழைத்துப் போக.. 

அன்று வீட்டிலிருந்து மருத்துவமனை அழைத்து வந்ததிலிருந்து இன்று வரை ஆதியைப் பார்க்க வர இருந்த ராஜியை வர விடாது சாமர்த்தியமாக வீட்டிலேயே இருத்திக் கொண்டான் அன்பு..

ஆதிக்கு இப்படி என்று விசயம் சொல்லப் பட, அழுது புலம்பி ஹாஸ்பிடல் வர நின்றவரை தந்தையுடன் சேர்ந்து அடக்கி வைத்தான் அன்பு.. மகள் நிலை கேட்டதிலிருந்து தணிகை வேலுக்கும் அவளைக் கண்ணால் பாராது மிகுந்த மன உளைச்சல் தான்.. இருந்தும் மகளின் காயத்தை மனைவியின் வார்த்தைகள் அதிகரிக்கக்  கூடுமென்றறிந்தவர், தனக்கும் உடம்பு முடியாதது போல் படுத்துக் கொண்டு மகனுடன் சேர்ந்து மனைவியை வீட்டில் நிறுத்த துணை புரிந்தார்..

ஏற்கனவே நேத்ரா கயலையும் இவர் பொறுப்பிலே விட்டிருந்தாள், தன் தாய்க்கு ஜுரம் என்று சொல்லி.. இப்போது அதில் கணவனும் சேர்ந்து கொள்ள ராஜி வேறு வழியின்றி வீட்டைக் கவனித்துக் கொண்டார்..

ஹாஸ்பிடலில் எல்லா ஃபார்மாலிட்டிசும் முடித்து 

விட்டு வீடு வந்து சேர்ந்தவளை நலம் விசாரிக்க வாசலிலே காத்து நின்றது சனி..

அண்ணனின் காரில் இருந்து இறங்கிய ஆதிக்கு வாசலில் மாமனாரின் கார் நிற்பது கண்டு அதுவரை தன் வேதனைகளில் உழன்றவளுக்கு,

அப்போதே இன்னும் கணவனிடம் விவரம் கூறியிருக்கவில்லை என்பதே உரைத்தது..

தமக்குள் என்ன பிரச்சனை என்றாலும் குழந்தை என்பது இருவருக்கும் பொதுவானது தானே.. இருவரின் உதிரம் கலந்த உயிரை அழித்து இப்போது வரை அவனிடம் சொல்லாது இருப்பது எவ்வளவு  பெரும் பாவம் என்று புரிந்தவளுக்கு அது தோன்றிய வேளையே நிச்சயம் அண்ணா சொல்லியிருப்பார் என்று எண்ணி ஆசுவாசமும் தோன்றியது..

ஏனெனில் சிறு சிறு விசயமென்றாலும் சுமியின் தாய் வீடு என்பதைத் தாண்டி ஆதியின் புகுந்த வீடு என்று முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்து  நடப்பவன் அன்பு.. அப்படியிருக்க இதைக் கூறாமல் விட்டிருக்க மாட்டான் என்று நம்பினாள்..

அந்த நம்பிக்கையும் உடைந்தது.. அருகில் நின்ற நேத்ராவின் 

“இவங்க விசயம் தெரிஞ்சு வந்திருக்காங்களா? இல்ல சும்மா வந்திருக்காங்களா?” என்ற கேள்வியில்..

அப்படியெனில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லையா? என்று திகைத்தவளுக்கு அதன் விளைவுகளை எண்ணிப் பார்க்கவே உயிர் நடுங்கியது ஆதிக்கு.. இருந்தும் ஒரு சின்ன நம்பிக்கை கணவன் மேல் இருந்தது.. அவன் புரிந்து கொள்வான் என்று.. மற்றவர்களைத் தான் எப்படி சமாளிக்கவென்று தெரியவில்லை.. அதற்கு அவளிடம் தெம்புமில்லை..

யோசனைகளோடே அண்ணன் அண்ணியுடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் தொடங்கிவிட்டார் விசாலம்..

எங்க வீட்டு வாரிசை முழுசா தூக்கி குடுத்திட்டு என்ன சொகுசா வரா பாருங்களேன்.. ரெண்டு நாளா  மருமக மருமகன்னு வக்காலத்து வாங்குனீங்க இல்ல? இப்போ ஏன் அமைதியா கல்லு மாதிரி நிக்கிறீங்க? அவளைக் கேளுங்க ஏன் இப்படிப் பண்ணான்னு?” என கணவனை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார் விசாலம்..

அவருக்கும் எந்த பேய் பிடித்தாட்டியதோ? தன்னை அறியாமல் வார்த்தையை விட்டு விட்டார்..

நான் தான் உன்கிட்ட சொல்லி அனுப்பினேனேமா.. இது எல்லா வீட்லயும் நடக்கிறது தான்.. சீக்கிரம் எல்லாமே சரியாயிடும்‌ன்னு.. அப்புறம் ஏன்மா இப்பிடி பண்ண? 

என்ன கோபம் இருந்தாலும் இப்படி வயித்துல வந்த முதல் வாரிசைக் கொல்ற அளவுக்குப் போவியா? நிச்சயமா உன்கிட்ட இருந்து இதை நான் எதிர் பார்க்கலம்மா ஆதி…

இதுவரை தங்களுக்கு தகவல் சொல்லவில்லை.. குழந்தை விஷயத்தில் நீ கவனமாக இருக்கவில்லை.. போன்ற அவர்கள் குற்றச்சாட்டையே எதிர்பார்த்து வந்தவளுக்கு, அவரின் ஏன் குழந்தையைக் கொன்று விட்டாய்? என்ற கேள்வி ஆயிரம் தேள் கொட்டிய வலியைத் தந்தது..

ஏற்கனவே தன்னால் தான் என்று உள்ளேயே மருகிக் கொண்டிருப்பவளுக்கு அவரின் கேள்வியும் சேர்ந்து கொள்ள கால்கள் நடுங்கி தள்ளாடியது.. நிற்க கூட தெம்பின்றி சரிந்தாள் அவள்..

அவரின் கேள்வியில் கொதித்துப் போய் இருந்த அன்புவும் அவருக்கு கோபமாய் பதிலளிக்க வந்தவன், தங்கையின் தடுமாற்றம் உணர்ந்து அவளைத் தாங்கிக் கொண்டு, நேத்ராவை அதட்டினான்..

“ஏய் நேத்ரா! ஹாஸ்பிடல இருந்து வீட்டுக்கு வந்த பொண்ணை, ஆசுவாசமா கூட்டிப் போய்  உக்கார கூட வைக்காம இப்பிடி வாசல்ல நிக்க வச்சுருக்க? ஏன் அவ இப்பிடியே நின்னு எல்லாருக்கும் விளக்கம் கொடுத்து முடிஞ்சதும் வேணா அவளை திரும்ப ஹாஸ்பிடல் ஏத்தவா? இதெல்லாம் உனக்கு நான் சொல்லி தரணுமா?” என்று நேத்ராவைக் கடித்து துப்ப அவள் விரைந்து ஆதியைப் பிடித்துக் கொண்டாள்..

“ஏய் நீயென்ன பொம்மை மாதிரி அசையாம நிக்கிற? வந்து உதவி பண்ண மாட்டியா?” என்ற அதட்டலில் ஓரமாக நின்ற சுமி, தன்னைத்தானோ என்று அரண்டு போய் அவனைத் திரும்பிப் பார்க்க , அவன் பார்வை சுமிக்கு எதிரே நின்ற லாவண்யா மேல் இருந்தது..

ஆதியை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வர போகிறார்கள் என்றறிந்து வந்திருந்தவளை, கணவனுக்கு உடம்பு சரியில்லை.. பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு ராஜி, கயலையும் கூட அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றிருந்தார்.. மகளின் நலத்துக்கு வேண்டி..

தணிகை வேலும் அவளும் இவ்வளவு நேரம் விசாலத்திடம் சமாதானம் பேச முயன்று தோற்று விட்டு இப்போதே இவர்கள் வர சற்று ஆசுவாசமாகி நின்று விட்டனர்..

இதில் சுமி வேறு சம்பந்தமேயில்லாது அவளையே முறைத்திருக்க, அவளுக்கு ஐயோவென்றாகி நின்றவள், அன்புவின் அதட்டலில்,  “இதோ மாமா..” என்று நேத்ராவுடன் இணைந்து ஆதியை கைத்தாங்கலாய் அமர வைத்து விட்டு கிச்சனுக்கு ஓடினாள்.. அவளுக்கு குடிக்க ஏதேனும் எடுத்து வர.. இது எல்லாவற்றையும் தன்னுள் பொருமிக் கொண்டே பார்த்திருந்தாள் சுமி.. அந்த வீட்டிற்கு மருமகள் தானா? இல்லை லாவண்யாவா? என்று.. அதை தான் உணர்ந்து கடமைகளைச் செய்திருக்க வேண்டும் என்ற சிந்தை துளியும் இல்லை..

அருணாச்சலத்துக்கு தான் அன்புவின் செயலில் ஒரு மாதிரியானது.. எப்போதும் புன்னகை முகமாக மரியாதையுடன் வரவேற்கும் அவனிடம் இன்று வரவேற்பும் இல்லை.. மரியாதையும் இறங்கியிருந்தது போல் இருந்தது.. நேத்ராவைக் குறித்து அதட்டியதில் இருந்த குற்றச்சாட்டு தனக்கும் பொருந்தியதை அவர் உணர்ந்தார்..

அதில் அவர் மௌனம் காக்க கணவனின் மனம் புரியாத விசாலம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்..

“எங்க வீட்டில தவழ வேண்டிய பிஞ்சுக்கு நஞ்சு வச்சுக் கொன்னுட்டு வந்திருக்கா.. அவளுக்கு ராஜமரியாதை கொடுத்து ரெண்டு பக்கமும் நின்னு சாமரம் வீசி விடுங்க.. கொலைகாரக் கும்பல்ன்னு தெரியாம என் பொண்ணு, பையன் வாழ்க்கையை அடமானம் வச்சிட்டேனே..” என்று அவர் தொடர்ந்து அரற்ற சுமி அவருக்கு பக்கபலமாய் அருகிலே நின்றிருந்தாள், அவரை எதுவும் மறுத்துக் கூறாது..

விசாலத்தின் கொடுக்கு வார்த்தைகள் சரியாக அதன் இலக்கான ஆதியின் மெல்லிய மனத்தைத் தாக்க, அதில் எழுந்த மண்டையைப் பிளக்கும் வலியில், ஒரு கையால் தலையைப் பிடித்து அமர்ந்து விட்டாள்.. கையில் லாவண்யா கொடுத்த ஜுஸ் கிளாஸை என்னவென்றே உணராது, ஒரு பற்றுக்காய் பிடித்து இறுக்கிக் கொண்டாள்..

அவள் நிலை கண்டு விசாலத்தை சூடாக எதுவோ சொல்ல வந்த நேத்ராவை பார்வையால் அடக்கினான் அன்பு.. அவளும் கணவன் ஏதோ தீர்மானத்தில் இருப்பது உணர்ந்து அமைதியாகி விட்டாள்.. அவன் எது செய்தாலும் உடனிருப்பது என்ற முடிவோடு.. எத்தனை நாட்கள் தான் அமைதியாகவே போக முடியும்? என்றைக்கோ ஒரு நாள் இந்த அநியாயங்களுக்கு ஒரு முடிவு கட்டத் தானே வேண்டும்..

நிலமை இவ்வாறு இருக்க ராஜி கயலை நேத்ராவின் தாய் வீட்டில் விட்டு விட்டு வந்தவர் வெளியே மகள் புகுந்த வீட்டின் வாகனம் நிற்கவே விரைந்து வீட்டிற்குள் நுழைந்தார்..

அவரைக் கண்ட விசாலம் அவரையும் பேச வாயெடுக்கவே, காற்றைக் கிழித்து ஒலியெழுப்பிக் கொண்டு அந்த காம்பவுண்டுக்குள் உள் நுழைந்து கிரீச்சிட்டு நின்றது சர்வாவின் வாகனம்..

அதில் மற்றவர் மௌனித்துப் போக, அந்த மரத்த நிலையிலும் கணவனின் ஜீப் ஒலியைக் கிரகித்தவளுக்கு, இவர்களளைப் போல் அவனும் தன்னை நோக்கி வார்த்தையில் அமிலம் வீசிடுவானோ என்றே துடித்தது.. ஏற்கனவே பட்ட காயத்துக்கு மயிலிறகு வருடல் வேண்டி ஏங்கிய மனது அவனின் சுடு சொற்களை தாங்குவேனா என்ற ஐயத்திலேயே துவண்டு போனது..

ஜீப்பில் இருந்து குதித்து இறங்கிய சர்வாவின் வேகமே நிகழப் போவது ஏதோ விபரீதமானது என்று உணர்ந்தான் பிரபா..

தன்னுடன் விவாதித்துக் கொண்டிருந்தவன், திடீரென வந்த ஃபோன் காலில் ரௌத்திரமாகிக் கிளம்பவே, அவனைத் தடுத்தும் முடியாமல் பின்னோடு ஜீப்பில் ஏறி வந்திருந்தான் அவன்..

வந்திருப்பது ஆதி வீடு என்பதையுணர்ந்து என்ன பிரச்சனையென்றறியாது போனாலும் சற்று அமைதியாகி விட்டு பேசலாம் என்ற பிரபாவின் சமாதானங்கள் எதுவும் சர்வாவின் செவியில் விழவில்லை..

உள்ளே நுழைந்த சர்வா கண்டது, தன் தாய் தந்தை நின்றிருக்க, ஷோபாவில் அமர்ந்து தலையைத் தாங்கி கொண்டு கையில் ஜூசுடன் சாவகாசமாய் அமர்ந்திருக்கும் மனைவியைத் தான்..

ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பர்.. இங்கு சர்வாவின் அறிவை மறைத்து எல்லாமே காட்சிப் பிழையாகிப் போனதில், தானும்‌ ஆதியின் மனதில் பிழையாகிப் போனான்..

அரண்டவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய் என்பது போல் அவளே தவறு என்ற கண்ணாடி அணிந்து பார்த்த சர்வாவுக்கு, இயலாமையில் அவள் அமர்ந்திருக்கும் தோற்றம் கூட திமிராகவே தோன்ற, கொதித்துப் போய் இருந்தவனை கண்ட விசாலம் வேறு அவனுக்கு கூட கொஞ்சம்  ஏற்றி விட்டார்..

“சர்வா இங்க நடக்கிற கொடுமையை எல்லாம் பார்க்கவாப்பா வந்த? நம்ம வீட்டு குலவிளக்கையும் கொன்னுட்டு நியாயம் கேட்க வந்தா, பெரிய மனுஷன்னும் பார்க்காம உங்கப்பாவை வேற ஜாடை போட்டு பேசுறாங்க.. இதுக்கு மேல இங்க நின்னு நம்ம மானம் போக வேணாம்.. வாப்பா போலாம்..” என்று கை பிடித்து இழுத்தவரை, தன்னை விட்டுப் பிரித்தவன் தந்தையைப் பார்க்க அவரும் அமைதியாக இருந்தார் நடந்தது அது தான் என்பதால்.. இங்கே விசாலம் ஜாடை பேசியது அன்பு என்பதையும் சொல்லவில்லை.. அருணாச்சலமும் தான் இருந்த நிலையில் எதையும் விளக்கவில்லை..

அதனால் மொத்தத்துக்கும் காரணமாகிப் போனாள் ஆதிரா.. அவள் கழுத்தை நெறிக்கும் வெறியுடன் அவளை நெருங்கிய சர்வா அவள் கையை இழுத்து நிறுத்திய வேகத்தில் ஆதி கையில் வைத்திருந்த ஜுஸ் கிளாஸ் பக்கவாட்டில் விழுந்து நொறுங்கியது..

அவன் திடீர் செயலில் தலை சுற்றிப் போனவள் சுதாரிக்கும் முன்னரே இடியென அவன் கை அவள் கன்னத்தில் ஐந்தாறு முறை இறங்கியிருந்தது.

சொற்ப நேரத்தில் என்னவென்று மற்றவர்கள் உணரும் முன்னே நடந்து விட்ட விபரீதத்தில் சிலையாய் சமைந்திருந்தவர்கள் உணர்வு வந்து சோஃபாவில் சரிந்த ஆதியை நோக்கி ஓடினார்கள்..

பிரபா , “என்னடா பண்ற?” என்று அதட்டியவாறே சர்வாவை பின்னாடி இழுத்துச் சென்றான்..

“பிரபா என்னை விடு.. இவளுக்கு என்ன தைரியம் இருந்தா யாருக்கும் எதுவும் சொல்லாம, என் குழந்தையவே அபார்ஷன் பண்ணிட்டு, ஆத்தாமைல கேட்க வந்த என் அப்பாவையே மதிக்காம இவ்வளவு தெனாவட்டா இருப்பா.. இவ இதெல்லாம் பண்ண நான் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கவா? இவளை இன்னைக்கு..” என்று நாக்கைக் கடித்துக் கொண்டே பிரபாவிடம் இருந்து திமிறிக் கொண்டிருந்தான்.. இதோ வீசி விட்டானே அமிலத்தை விடவும் கொடூரமான திராவகத்தை.. ஆதி மனதில் விரக்தியாக எண்ணிக் கொண்டாள்..

இதற்குள் ஆதியை தாங்கி அமர வைத்திருந்தனர் நேத்ராவும் ராஜியும்.. லாவண்யா அவளுக்கு நீர் எடுத்துப் புகட்டி விட்டாள்..

தணிகைவேல் செய்வதறியாது தவித்திருக்க, அன்பு தான் சர்வாவை நோக்கி ஆத்திரத்தில் அடி எடுத்து வைத்தவன், தன்னை ஆதி கை பிடித்து தடுக்கவே அவள் முகம் பார்த்து அதிலிருந்த தவிப்பில் கடினப்பட்டு தன் கையைக் கட்டி நின்று விட்டான்.. இயலாமையில் அவன் முகம் என்றைக்கும் மாறாக இறுகிப் போய் இருந்தது..

ஆயிரம் இருந்தாலும் தங்கை கணவன் ஆயிற்றே.. சொற்ப நிமிடத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவனுடன் அடிதடி சண்டை நிகழ்த்திவிடலாம் தான்.. ஆனால் அதன் பின்னும் அவள் வாழ்க்கை அவனுடன் என்றான பின் இது மூலம் ஒரு பிளவு ஏற்பட்டு புகுந்த வீட்டிற்கும் பிறந்த வீட்டிற்கும் இடையில் அல்லாடும் நிலை தன் தங்கைக்கு வேண்டாமென அமைதி காத்தான்..

அடிதடி இல்லாமல் போனாலும் சுமி பரணியின் வாழ்க்கை எச்சங்கள் ஆதியை பாதிப்பது குறித்து இம்முறை உறுதியான ஒரு முடிவு தெரியாமல் விடப் போவதில்லை.. இனியொரு அடி தங்கை மீது விழ அனுமதிக்காத வண்ணம் அவள் அருகே அரணாக நின்று கொண்டான் அன்பு.. அங்கே யார் செயலுக்கும் சொல்லுக்கும் அனுமதியில்லை என்பது போல் இருந்தது சர்வாவின் ஆவேசம்..

பிரபாவிடம் இருந்து திமிறி வெளியேறி ஆதி முன் வந்து நின்றவன் ,மீண்டும் அவள் கை பற்றி எழுப்பி நிறுத்தினான்.. அவன் பிடியில் கையே கழன்று விடும் போல் ஆனது ஆதிக்கு..

எங்கே மீண்டும் அடித்து விடுவானோ என்று அனைவரும் பதறி அவளை இழுக்க முயல, ஆதி தான் பலவீனமான நிலையில் கூட அவர்களை வேண்டாமென  தடுத்தவள், அவன் பிடியிலேயே நின்று கொண்டாள்.. இருந்தும் அன்பு அவர்களுக்கு மிக அருகிலே நின்று கொண்டான்.. அவனுக்கு எங்கே மீண்டும் அவளை அறைந்து விடுவானோ என்ற அச்சம்..

உனக்கு கோபம் என் மேல, சுமி மேல, ஏன் என் ஒட்டு மொத்தக் குடும்பம் மேலயுமா கூட இருக்கட்டுமேடி.. அதை எதுக்குடி அந்த உருவமே வராதா உயிர் மேல காட்டி செதச்ச? சொல்லு ஆதிரா ஏன்டி இப்பிடி பண்ண? அபார்ஷன் அளவுக்கு ஏன்டி போன? அது நம்ம கொழந்தை இல்லையா? அதை அழிக்க உனக்கு எப்பிடிடி மனசு வந்திச்சு? அவ்வளவு ராட்சசியாடி நீ? அவளைப் பதிலும் பேச அனுமதிக்காது  போட்டு உலுக்கோ உலுக்கென உலுக்கினான் சர்வா.. 

தன் கேள்விகள் அவளை எந்தளவு காயப்படுத்தும் என கேட்கும் அவனுக்குப் புரியவில்லை.. ஆனால் அந்தக் கடுமையான குரலின் பின் இருக்கும் குழந்தைக்கான வலியும் ஏக்கமும் அவளுக்குப் புரியவே செய்தது.. அதில் அவளுக்கும் வலிக்க, அவனுக்கு உண்மையைப் புரிய வைக்க ஆதி, தன் அடைத்த குரலையும் மீறி மெல்லிய குரலில் “சர்வாத்…” என ஆரம்பிக்கவே,

“ஏய் போதும் நிறுத்துடி இப்பிடி ஒண்ணுமே தெரியாத மாதிரி குரலே வெளில வராத குரல்ல பேசிப் பேசி தானே யார் உன்னைப் பத்தி என்ன சொன்னாலும் நம்ப முடியாம உன்னை இத்தனை நாள் கூடவே வச்சு, இப்போ என் தலைல‌ நானே மண்ணள்ளிப்  போட்டிருக்கேன்.. இப்போதான் புரியுது நீ பண்ணுற எல்லா கிரிமினல் வேலைக்கும் கவசமா தான் இந்த அப்பாவி லுக்கையும் சத்தமே வராத பேச்சையும் வச்சிருந்திருக்க இல்ல?

கூடவே என்னையும் நல்லா யூஸ் பண்ணிருக்க.. இது தெரியாம நானும் பைத்தியக்காரனா இருந்திருக்கேன்.. ஆனா இதுக்கப்புறமும் உன்னை நான் நம்புவேன்னு எப்படிடி நினைக்க முடியுது உன்னால?”

அவனின் அந்த ஒற்றைக் கேள்வியே ஆதியின் ஆவி அவளை விட்டு நீங்கப் போதுமாய் இருந்தது..

அந்த வார்த்தைகளை கேட்டுக் கொண்டே இதற்கு மேல் என்னால் எதையும் தாங்கவியலாது என்பது போல்‌ அவன் கையிலே மயங்கியிருந்தாள் ஆதிரா..

அவ்வளவு தான் சர்வாவின் பேச்சு என்ன மூச்சுக் கூட ஒரு நொடியில் நின்று போனது..

தன் கைகளுக்குள் தொய்ந்து சரிந்தவளைத் தாங்கிக் கொண்ட சர்வா, திகைத்துப் போய் ஒன்றும் புரியாமல் தன் உலகமே செயலற்று போனது போல் நிலையில் அப்படியே ஆதியின் முகம் பார்த்து நின்றிருந்தான்.. அன்பு அவசரமாய் அவனிடம் இருந்து தங்கையை வாங்கிக் கொண்டவன் அவளை ஷோபாவில் படுக்க வைத்தான்..

“ஆதி.. ஆதி..” என்று அவள் கன்னம் தட்டியவன் நேத்ராவை நோக்கி,

“சீக்கிரமா தண்ணி எடுத்துட்டு வா நேத்ரா..” என அவசரமாகக் கத்தினான்..

அவளும் தண்ணீர் தர அன்பு அதை வாங்கித் தெளித்தும் ஆதிரா கண் விழிக்காது போகவே, ஒரளவு நடப்பவற்றை பார்த்திருந்த சர்வா அதன் மேலும் தாமதிக்க விரும்பாது, 

அவளைக் கையில் தூக்கிக் கொண்டு வெளியே ஓடியிருந்தான்.. பிரபாவும் அவசரம் உணர்ந்து வண்டியை உயிர்ப்பித்து காத்திருந்தான்..

சர்வாவின் பின்னோடே குடும்பம் மொத்தமும் ஓடியது.. அவன் யாரையும் பொருட்படுத்தாது வண்டியில் ஏறி அவளை மடியில் கிடத்தியவன் பிரபா வண்டியெடுத்ததும் ஹாஸ்பிடல் செல்லும் வழியெங்கும் அவளுக்கு என்னவோ ஏதோ என்று பதைத்திருந்தான்.. 

அவனுக்கு இப்போது அவள் செய்தது.. தான் பேசியது எதுவும் நினைவில் இல்லை.. அவள் அழிக்க விரும்பினால் இன்னும் எத்தனை குழந்தையைக் கூட அழித்து விட்டுப் போகட்டும்.. ஆனால் அவளுக்கு மட்டும் இப்போது எதுவும் ஆகாது இருந்தாலே போதும் என்று அவன் வேண்டாத தெய்வம் இல்லை..

ஹாஸ்பிடலில் அவளை அட்மிட் பண்ணவுமே, அவளை முதலில் பார்த்த டியூட்டி டாக்டரே வந்தவர், இப்போ கொஞ்சம் முன்னாடி தான டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிப் போனாங்க.. அதுக்குள்ள என்னாச்சு? என்று இவவர்களைக் கேட்ட டாக்டர், இவன் அமைதியில் மேற்கொண்டு ட்ரீட்மென்டைப் பார்க்க உள்ளே சென்று விட்டார்..

இவன் எப்படிப் பதில் சொல்வான்.?இப்போது தான் டிஸ்சார்ஜ் பண்ணிக் கொண்டு போனார்களா? அப்படியெனில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாளா ஆதிரா? ஆனா நேத்தே அபார்சன் பண்ணிட்டு போய்ட்டதா தானே அப்பா ஃபோன்ல சொன்னாரு? என்று தன் கேள்விகளிலேயே உழன்று கொண்டிருந்தான் அவன்..

இதுவும் பரணியின் கைங்கர்யம் தான்..

மதியுடன் பேசாதே என்று பரணியிடம் கூறியும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டு கொண்டவள் , உடனே அவனை அடக்குகிறேன் என்று அவளுக்கே தெரியாது அவனை வெறியேற்றும் செயலைச் செய்தாள்..

“நீ இப்பிடியே பண்ணிட்டு இரு.. நான் போய் எங்க அண்ணாகிட்ட இதை சொன்னேனா அந்த மதி முன்னாடியே உன்னை சாத்துற சாத்துல என்கிட்ட தவிர வேற எந்தப் பொண்ணுகிட்டயும் பேசணும்னு நினைச்சாலே நடுங்கப் போறே பாரேன்..” என்று சொல்லவே எப்போதும் போல் வெறியாகியவன் இப்போது அதை அடக்கி வைக்காமல் வார்த்தைகளை தாறுமாறாக பேசி விட்டான்..

“ஆமாம்.. அவ கூடப் பேசிட்டு தான் இருக்கேன்.. அவ கூடத் தான் டெய்லி சுத்துறேன்.. அவளைப் பிடிச்சுப் போய் தான் இதெல்லாம் பண்றேன்.. தேவைப்பட்டா உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு அவளைக் கல்யாணம் கூட பண்ணிப்பேன்.. அதுக்கு ஹெல்ப் பண்றதே நீ சொல்ற உங்க அண்ணனோட பொண்டாட்டியும் என் தங்கச்சியுமான ஆதி தான்.. உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ.. போடி..” என்று விட்டு கிளம்பிவிட்டான்.. இவளும் அதைத் தூக்கிக்கொண்டு அவனைப் பயங்காட்ட வந்து இங்கே சர்வா ஆதி வாழ்க்கையில்  பிரச்சனையை உண்டு பண்ணியவள் செயலை  அதன் பிறகு தனதாக்கிக் கொண்டான் பரணி..

ஏற்கனவே சுமி தன்னை மதிக்காது சொல்லாமல் கொள்ளாமல் ஊர் சென்றதிலே கோபத்திலிருந்தவன் கோபத்தில், நெய் வார்க்கவென்றே பிரபா ஃபோன் எடுத்தவன், லீவு போட்டு விட்டு   கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும் என்று கட்டளையாக சர்வா கூறியதைக் கூற , தனக்கே ஒருவன் கட்டளையிடுவதா என்ற இறுமாப்பில் “முடியாது..” என்றான்.. அதில் அவன் எதுவும் பேசாது வைத்து விட்டான்..

அதற்கான பதில் அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அவன் மெயில் வடிவில் வந்திருந்தது..

ஆன்சைட் செல்லும் லிஸ்டில் முதல் இடத்தில் இருந்தவன் பெயர் வெயிட்டிங் லிஸ்டில் சேர்க்கப்பட்டிருந்தது..

அதைப் படித்த கையோடே மீண்டும் பிரபா ஃபோன் செய்யவே புரிந்து கொண்டான் இது யார் செயலென..

அழைப்பை ஏற்றவன் அமைதியாய் இருக்க பிரபாவே, “இப்போ ஊருக்கு வரலாம் தானே மாப்பிள்ளை சார்?” என நக்கலாகக் கேட்க, பல்லைக் கடித்து ஆமென்றான்.. வேறு ஏதும் விபரீதமாக செய்து விடுவார்களோ என்றஞ்சி..

இந்தப் புகைச்சல் எல்லாம் மண்டிக் கிடந்தவனுக்கு லட்டுப் போல் செய்தி தாயிடமிருந்து கிடைத்தது..

இவன் விவகாரம் சுமி விவகாரம் எதுவும் தெரியாத ராஜி, அதனால் தான் ஆதி வீட்டை விட்டு வந்தாள் என்றும் அறியாது காலையில் இவனுக்குப் ஃபோன் பண்ணி ஆதிக்கு கரு கலைந்ததை சொல்லிப் புலம்பியிருக்க எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டவன், அவரிடம் வேலை இருக்கு  வையுங்கள் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.. அவரின் அழைப்பு துண்டிக்கப் பட்டதும் அடுத்து அவன் ஃபோன் செய்தது சுமிக்கு தான்..

அந்தப் பக்கம் ஹாலில் இருந்த அருணாச்சலம் மகளின் ஃபோனில் மாப்பிள்ளையின் நம்பர் வரவே பார்த்தவர், 

“ஒருமுறை மாப்பிள்ளையிடம் தானே பேசிப் பார்ப்போமே..” என்று நினைத்துக் காதில் வைக்க, அழைப்பு ஏற்கப்பட்டதே போதும் என்பது போல் எதிரில் பேசுவது யாரென்றும் பாராது பேசியிருந்தான் பரணி..

“ஏன் சுமி இப்பிடி சொல்லாம கொள்ளாம கிளம்பிப் போய் உங்கண்ணன் வாழ்க்கைல குழப்பம் பண்ண? இப்போ உங்க அண்ணன் தன்னை வீட்டை விட்டுப் போகச் சொன்ன கோபத்துல ஆதி அவன் குழந்தை எனக்கு வேணவே வேணாம்னு சொல்லி நேத்து தான் கன்பார்ம் ஆன பேபியை நேத்தே அபார்ஷன் பண்ணிக்கிட்டு வந்திட்டாளாம்.. நீ இங்க இருந்திருந்தா, என்கிட்ட பொறுமையா பேசிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா சுமி?” என்று வருவிக்கப்பட்ட வருத்தக் குரலில் போலி பச்சாதாபத்துடன் கேட்டான்..

தன் மாப்பிள்ளையின் உண்மை குணம் தெரியாத அருணாச்சலமும் அதை உண்மையென்றே நம்பி அவனிடம் மேலும் விசாரிக்க, அவனும் இவரை எதிர் பார்க்காதவன் இருந்தும் அதனைச் சுற்றியே நம்பும் படி அழகாய் கதை புனைந்து அடித்து விட அதை அப்படியே நம்பியவராவது சிறிது நிதானித்திருக்கலாம்.. 

குடும்பத்தில் முதல் குழந்தை உருவாகி அதே வேகத்தில் இல்லாதும் போனதில் உண்டான ஆதங்கம் அறிவை மறைக்க, பரணி கூறியதை அப்படியே சர்வாவிடம் ஒப்பித்திருந்தார்.. அவனுக்கும் விஷயத்தை யார் சொன்னது எனக் கேட்கும் அளவு நிதானத்தை கேட்ட விசயத்தில் மழுங்கிப் போன அறிவு வழங்கவில்லை.. பரணி தான் சொன்னது என தெரிந்திருந்தால் அவன் சற்றே நிதானித்திருப்பான்.. அவன் தான் அவனின் அகராதியையே அறிந்து வைத்திருந்தானே.. 

அதனை அறியாதவன் தந்தை அறிந்த விசயம் என்று அதை அப்படியே நம்பி விட்டான்..

பரணிக்கு எண்ணமெல்லாம் எப்படியும் நடந்த உண்மையான விசயம் தெரிய வரும்.. அதுவரை அன்று தன் பெயர் ஆன்சைட் லிஸ்டில் இல்லாது தான்  துடித்தது போல் சர்வாவும் தன்னால் தான் தன் குழந்தை இல்லாது போனது என்று கொஞ்ச நேரமாவது துடிக்கட்டும் என்பது தான்.. (எவ்வளவு நல்லெண்ணம்)

அவரவர் பழி உணர்ச்சிக்கும் நிதானமில்லா செயலுக்கும் என்றும் போல் சிக்கி பலியாடாகி அனுபவித்துக் கொண்டிருப்பது என்னவோ ஆதி தான்..

தொடரும்…..

Advertisement